நான் அழுத இரவுகளில்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 10,203 
 
 

நீ என்ரை தம்பியில்லையடா…! என்ரை பிள்ளையாத்தான் பாக்கிறன். நானுன்னை நம்புறன். நீ மாறீட்டாய்….! ஓ….நீ மனிசனாயீட்டாயடா…..எனச்சொல்லி அழுதாள் பெரியக்கா. அக்கா அம்மாவே என்னை இன்னும் நம்பேல்ல….அன்ரி நம்பேல்ல…..மாமா நம்பேல்ல….சித்தப்பா நம்பேல்ல….நானேன் இப்பிடியிருக்கிறனெண்டு எனக்கே தெரியேல்லயக்கா….. என்னாலை நித்திரை கொள்ள முடியேல்லையக்கா…. ஏதோவெல்லாம் வந்து செய்யிறமாதிரியிருக்கு….. இரவிலை கனவிலை என்னை யாரோவெல்லாம் துரத்துறமாதிரியும், வெட்டுறமாதிரியும் இருக்குது….என்னாலை நிம்மதியா இருக்கேலாமக்கிடக்கு….கரையாத இரும்பான எனது கண்ணிலிருந்தும் கண்ணீர் வழிந்தோட என்னை நம்பி எனக்கு ஆறுதல் சொன்ன அக்காவிற்கு ஏன் நான் வன்முறையாளனானேன்? ஏன் இப்படி இன்று எல்லோரும் என்னை ஒரு கொலைகாரனாய் பார்க்கிறார்கள் என்றும் சொன்னேன்.

சரி இதெல்லாத்தையும் மறந்திடு….எல்லாம் ஒரு கனவாயிருக்கட்டும்…. வளமையான சினிமா வசனங்கள் போலவே அக்கா சொன்ன வார்த்தைகள் எனக்குள்; இன்று இருக்கவில்லை. அக்காவின் ஒவ்வொரு வார்த்தையும் என்னை நிமிர்வித்துக் கொண்டிருந்தது, என்னை மனிதத்தை, மனிதரை, நேசிக்கச் சொல்லித்தந்து கொண்டிருக்கிறது.

நித்திரை வராத நேரங்களிலை நல்ல புத்தகங்கள் வாசி அது உனக்கு உலகத்தைத் தெரியவைக்கும். தியானம் செய் அது மனதை நிம்மதிப்படுத்தும். உன்னிலை நம்பிக்கையை உனக்குள்ள ஏற்படுத்து அது உன்னை நெறிப்படுத்தும். உன்னுடைய அனுபவங்களை எழுத்தாக்கு அது மற்றவருக்குப் படிப்புனையாயிருக்கும், இன்னொரு வன்முறையாளன் உருவாகிறதைக்கூடத் தடுத்து நிறுத்தும், நல்லதொரு சமூக இலக்கியம் கூடப்பிறக்கும். பொழுது போகுதில்லையெண்டே நினைக்காதை கிடைக்கிற ஒவ்வொரு மணித்துளியையும் பலனுள்ளதாக்கு. இதுகளையெல்லாம் செய்து பார் உன்னை இண்டைக்கு தூற்றித்திரியிற எல்லாருமே ஒருநாளைக்கு உன்னைப் போற்றுவினம்.

அப்ப என்னை எதிரியா என்னையே சுத்திச்சுத்தி என்ரை தலையை எடுப்பமெண்டு வாற எதிரியளை என்னக்கா செய்யிறது. என்னைக் கொன்றுவிட்டே தூங்குவோம் என வெறிகொண்டு என்னை இப்போ கத்திகொண்டு துரத்தும் என் முன்னைய எதிரிகள் பற்றியதான என் கவலையையும் சொல்கிறேன். அமைதியாய் இரு கத்தியெடுக்காதை, போத்தலெடுக்காதை, சண்டைக்கே போகாதை, நாளைக்கு உன்னை மாதிரி அவையளும் திருந்துவினம், அவையளுக்கும் உன்னை நம்பின என்னைப்போல ஒரு அக்கா, இல்லது அண்ணா வருவினம் அப்ப அவையளும் திருந்துவினம். நான் கேட்ட ஒவ்வோர் வினாவிற்கும் அக்கா அமைதியாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். 5 வருடத்துக்கு முன்னம் அக்கா என்னுடன் இருந்திருந்தால் நான் இன்று நல்லவனாய் வாழ்ந்திருப்பேனோ ? எனக்குள் எழுந்த கேள்வியை அக்காவிடம் கேட்டேன். அவள் அழுதாள். அர்த்தம் புரியாது நின்ற என் தலைதடவிச் சொன்னாள். நீ இப்பவும் நல்லவன்தானே…..ஆர் சொன்னது நீ கெட்டவனெண்டு… நான் அழுதேன் என்பதைவிடவும்
ஆண்டவனே வந்து நின்று சொல்வது போன்ற அந்த வார்த்தைகளில் கரைந்தேவிட்டேன்.

எனது 12வது வயதில் தாய்மண்ணின் விடிவுக்காகப் போராடும் எண்ணம் கொண்டிருந்ததை அம்மாவுக்குச் சொன்னேன். பத்துவரிசத்தவமிருந்து பெத்தபிள்ளையடா நீ….! எப்பிடியடா அம்மாவை விட்டுட்டு இயக்கத்துக்குப் போப்போறனெண்டு கேக்க மனம் வந்தது….. சின்னக்கா, இளையக்கா, அப்பா எல்லோருக்கும் அம்மா சொல்லியழுது….சுற்றியிருந்த பெரியம்மா, சின்னம்மா, பெரியம்மா சின்னம்மாவின் பிள்ளைகள் என்று எல்லோருக்கும் கதைபோய் அந்த ஒரு பொழுது 1996இல் என்னைச் சுற்றி…..ஒவ்வொருவரும் என்னை மூளைச்சலவைசெய்து தங்கள் உறவின் இளையே நான்தான் என்பதுபோல் அழுதபோது…. அக்காவுக்கும் அன்ரிக்கும் வெளிநாட்டுக்கும் கடிதம் போய் அன்ரி என்னை உடனடியாகக் கொழும்பிற்குக் கூட்டிவரச் சொன்னதும்….. பெரியக்காமட்டும்தான் எனது வெளிநாட்டுப் பயணத்தை வெறுத்தவள்.

வெளிநாட்டுக்கு அவன் வேண்டாம், ஊரிலையிருக்கட்டும் , அப்பிடி அவன் இயக்கத்துக்குப் போனாலும் பறவாயில்லை. வீட்டிலையிருந்து ஒருபிள்ளை நாட்டுக்குப் போனதேயெண்டு பெருமைப்படுவம். அம்மாவோடை இருக்கிற வயசிலை அவன் இஞ்சை வந்து பாசத்துக்காக அழவேண்டாம். எங்களைப்போலை அகதிவாழ்க்கை அவனுக்கும் வேண்டாம். தீர்க்கமான அக்காவின் முடிவு வெளிநாட்டிலிருக்கும் உறவுகள் ஊடாக ஊருக்கு வந்து சேர்ந்ததும் ஊரில் இருந்தவர்களெல்லாம் அக்காமீது கொதித்த கொதிப்பும், கோபமும் இன்று என்னை நினைக்க வைக்கிறது. அக்காவிடமிருக்கும் நாட்டுப்பற்று இன்றும் எல்லோராலும் விமர்சனத்துக்கு உரியதாகவே உள்ளது.

பெரிய நாடெண்டு கதைக்கிறவ ஏனாம் ஊரிலையிருக்காம வந்தவ….அங்கையிருந்து போராடியிருக்கலாமே…. இஞ்சையேன் மற்றவைக்கு உபதேசிக்கிறாவாம்….இந்த
விமர்சனங்களுக்கெல்லாம் அமைதியாய் இருந்து அக்கா நாங்கள் பிறந்த நாட்டையே நினைத்துக் கொண்டிருக்கிறாள். நாட்டுக்கு ஏதாவது செய்யவேணும். தன்ரை பிள்ளையளையும் நாட்டுக்கு உரியபிள்ளைகளாக உருவாக்க வேண்டுமென்ற வைரக்கியத்தோடு இருக்கிறாள். அன்று அக்காவின் வார்த்தைகளை நான் கவனத்தில் எடுத்து நாட்டை விட்டு வந்திருக்காமல் இருந்து போராடப்போயிருந்து சாவையணைத்திருந்தாலும் பெருமையான சாவாயிருந்திருக்கும். அந்த மண்ணில் பிறந்ததற்கான கடமையாவது செய்யப்பட்டிருக்கும். ஆனால் 12வயதிலேயே தாயகம் காக்க வேண்டாம், கடல் கடந்து அகதியாகு என்று அம்மா அனுப்பிவைத்த வெளிநாடு என்னை ஒரு வன்முறையாளனாக்கியிருக்கிறதென்று எப்படி விளங்கும்.

புலத்தில் தமிழ் இளம் சமூகத்தினர் பலர் வன்முறையாளர்களாக இருப்பதற்கு இந்த சமூகம், அதாவது ஒவ்வொரு பெற்றோரும், ஒவ்வொரு வீடுமே காரணமாகிறது. பாசத்தைக்கூட வெளிப்படுத்தாத சமூக அமைப்பு எங்களுடையது. பாசத்தைப் பிள்ளைக்குக் காட்டினால் பிள்ளை கெட்டுப்போய்விடும் என்ற மெத்தப்படித்த முட்டாள்த்தனம் கொண்ட சமூகம் எங்களுடையது. அப்பன் குடிகாரனாயிருந்தால் மகனும் அப்படியே ஆவான் என்ற வேதம் சொல்லியே பிள்ளையை குடிகாரனாக்கும் சமூகம் எங்களுடையது. வார்த்தை வதைசெய்து கொன்று தீர்க்கும் சமூகம் எங்களுடையது. தவறுசெய்யும் பிள்ளைமீது பாய்வதை விட அத்தவறு எப்படி நடந்தது என்று ஆராயமறுக்கும் சமூகம் எங்களுடையது. கருவிலிருந்தே யாரும் வன்முறையாளனாகுவதில்லை, அவன் வளர்கின்ற, வாழ்கின்ற சூழல்தான் அவனை அத்தனையும் ஆக்கிவிடுகிறது. வன்முறையாளன் எங்கிருந்து வருகிறான் என்பது பற்றி அக்கா எழுதிய ஒரு கட்டுரையின் வாசகங்கள் இவை.இந்தக் கட்டுரைக்கு அக்காவிற்கு வந்த விமர்சனம்….இன்றும் என்நெஞ்சில் குற்றுகிறது.

தம்பியின்ரை தவறை மறைக்க அவ எழுதுறதுதான் உந்த எழுத்தெல்லாம். உதெல்லாம் சும்மா நடிப்பு….. செய்யிற குற்றங்களுக்காகச் சொல்லிற சாட்டு… உங்கை எத்தினை பிள்ளையள் இருக்குதுகள். எல்லாமென்ன சண்டைபிடிச்சுக்கொண்டே திரியுதுகள்…..? இது தலையாலை அழியிறனெண்டு நிக்குது. மற்றவை என்னேயிறது.

பெற்றோருடன் இருந்து கொண்டே இங்கு பாசத்துக்காகவும், நல்ல உறவின் நேசத்துக்காகவும் ஏங்கும் எத்தனையோ இளையவர்கள்தான் என்னுடன் கத்தியெடுத்து நிற்கிறார்கள். ரத்தவெறி பிடித்து அலைகிறார்கள் என்பதையெல்லாம் அப்படியெல்லாம் ஆகிப்போன இளைஞர்களைக் கூட்டிவந்து காட்டினால்தான் இவர்கள் நம்புவார்களோ….!

சீட்டு சீட்டு என்று ஓடும் பெற்றோருக்குப் பிறந்தபாவத்துக்காக தனக்குப்பிடித்த ஒரு சேட் வாங்க வழியின்றிக் களவெடுத்து சேட்போடும் இளைஞர்களைத் தெரியுமா இவர்களுக்கு ? அடியாத மாடுபடியாது என்று வேதாந்தம் பேசிப்பேசி பிள்ளையின் சிறு தவறுகளுக்கே பெரும் தண்டனை வழங்கி பிள்ளையை மனநோயாக்கியிருக்கும் பெற்றோரைத் தெரியுமா இவர்களுக்கு ? எத்தனையோ இளைஞர்களின் பாதை மாறிப்போக சொந்த மாமன், சொந்தத்தகப்பன் காரணமாயிருக்கிறார்களே இது தெரியுமா இவர்களுக்கு ? என்ன தெரியும் இவர்களுக்கு ? வடிகட்டிய பிற்போக்குத்தனம் மிகுந்த தங்களது அறியாமையை அறியாது எங்கள் மீதே பழிபோடும் அயோக்கியச் சமூகம்தானே இவர்கள்.

தங்களது தவறுகளை திருத்த மறுத்து அக்காமீது கோபத்தில் எங்களது தமிழர்பலர் கொட்டிய வார்த்தைகள் என்னைத் திருந்தாதே கத்தியெடு, கொலைசெய், பழிவாங்கு என்று
உபதேசித்ததே தவிர நீ திருந்துவாய், உனக்குள் மனிதம் இருக்கிறது, நீ மனிதன் என்று யாரும் சொல்லவேயில்லை. ஏன் சொல்லாது போனார்கள் ? ஓ…. என்னைப்போல் பலர் கொலைகாரர்களாயிருப்பது இவர்களது வாய்மெல்ல நல்ல அவலோ…? அக்கா எழுதியது போல் வீட்டுக்குள்ளிருந்தே வன்முறையாளன் உருவாகிறான் என்பதே நிசம்.

என்னைக்குறை சொல்லியே அன்ரிக்கும் எனக்குமிடையில் பெரிதொரு இடைவெளியையே உருவாக்கிவிட்டு இந்த நிலைக்கு நான் வரக்காரணமாயிருந்த தமிழர்களின் பிள்ளைகள் பலர் இன்று என்னைவிட மோசமாக ஆகியிருக்கிறார்கள். இதுகூட எனது வழிகாட்டல்தான் என்கிறார்கள். இவர்களெல்லாம் தமிழ் அம்மாவாக அதாவது எனது அம்மம்மாகாலத்து அம்மாவாகவும், அப்பாவாகவும் இருப்பதே இத்தனைக்கும் காரணம். கேட்டால் பெரும் தத்துவம் பேச ஆரம்பித்துவிடுவார்கள்.

எனது வாழ்வில் பன்னிரண்டு வயதுவரையுமான எனது நாட்களிலிருந்து இன்றுவரையுமான எனது வாழ்வு இனி….

எப்போதுமே எனக்கு அம்மாவின் மடிக்குள்தான் இருக்கப்பிடிக்கும். அதுதானோ என்னவோ 5 வயது வரையும் நான் அம்மாவில் பால்குடித்தேன். பள்ளிக்கூடம் முடிந்தால் முதலில் ஓடிவந்து அம்மாவைப் பார்த்துவிட்டுத்தான் அடுத்துவேலை தொடங்குவேன். அப்படி அம்மாவென்றால் எனக்கு உயிர். அக்காமார் என்னில் உயிராய் இருந்தார்கள். என்னைத் தூக்கிவைத்திருக்க போட்டிபோட்டு என் அக்காக்கள் மூவரும் அம்மாவிடம் அடிவாங்கிய நாட்கள் கூட உண்டு. அந்த இனிய நாட்கள் ஒவ்வொன்றாக இதழ்கள் பிரிந்து தூரமாகத் தொடங்க முதலில் எங்களது குடும்பக்கூட்டிலிருந்து பெரியக்கா வெளிநாடு அனுப்பப்பட்டதுடன் ஆரம்பமாகிறது. அழுதழுது பெரியக்கா தாயகம் விட்டுப்போனதுடன் எங்கள் இடப்பெயர்வும் ஆரம்பமாகிறது. அப்படியான ஒருநாள்தான் அப்போ எனது 12ஆவது பிறந்தநாள் முடியமுன்னம் நான் அவசரஅவசரமாய் ஐரோப்பா அனுப்பப்பட கொழும்புக்கு அழைத்து வரப்பட்டேன். பெரிய கடையெல்லாம் என்னையும் ஏற்றியிறக்கி அம்மா உடுப்புகள் வாங்கினா. நான் கேட்ட எல்லாமே வாங்கித்தந்தா. அம்மாவுக்குள் அப்போது ஏதோ ஒரு சுமை இறங்கியதான நிறைவு இருந்ததை அன்று அம்மாவின் முகம் காட்டியதை இப்போது என் மனம் உணர்கிறது.

அந்தக்கடைசிநாள்….நான் என் அன்புக்கினிய அம்மாவையும், அப்பாவையும், சின்னக்கா , இளையக்காவையும் பிரிந்து புலம்பெயரும் நாளது…..அம்மாவுக்கு எனது புலப்பெயர்வு விருப்பமில்லையென்பது எனக்குத்தெரிந்தது. எனினும் அம்மா வெளிநாடு அனுப்பியே ஆவது என்ற நினைப்பிலிருந்து மாறாது இருந்தா. இரவுகளில் எனது தலையைக்கோதிக் கொண்டிருப்பதும், ஏதோ அழுது விம்முவதுமாக இருந்தது அம்மாவின் அந்த இரவுகள். எனக்கு இரவுகளில் ஏதோ சூனியத்துள் விழுவதுபோலவும், என்னை ஏதோ பெரும் பாறைகள் தம்முள் இழுத்து சூஎடுப்பதாகவும், அம்மாவுக்கு எட்டாது எனது கைகளை அந்தப்பாறைகள் விழுங்குவதாயுமான அந்த இரவுகளில் நான்
அழுத பொழுதுகள் அம்மாவுக்கும் தெரியாது.

அந்த மாலையில் அம்மா என்னை கட்டுநாயக்கா விமானநிலையம் கூட்டிவந்து என்னைக் கூட்டிக்கொண்டு நெதர்லாண்ட் போகவிருந்த மனிதனிடம் ஒப்படைத்துவிட்டு அமைதியாய் நின்றா. அம்மா…..எப்பவம்மா இனி உங்களைப்பாப்பன்….அம்மா…..! என்னைவிட்டிட்டு எப்பிடியம்மா இனி நித்திரை கொள்ளுவீங்கள்….உங்கடை மடியுக்கை படுத்தாத்தானேயம்மா எனக்கு நித்திரையே வரும்….எப்பிடியம்மா இனி நான் நித்திரை கொள்ளப்போறன்…..உங்களோடையே இருந்திடுறனம்மா……அம்மா…..அம்மா…..அம்மா…. என் ஆன்மாவின் அழுகையை அம்மா கேட்கவேயில்லை. அந்த மனிதனோடு அனுப்பிவிட்டு அழுதபடி போனது இப்போதும் என் மனசில் ஈட்டியாய் குற்றுகிறது. அம்மாவின் உருவம் என்கண்களை விட்டு மறையுமட்டும் அம்மாவையே பார்த்துக்கொண்டு நின்றேன். எனக்குத் தெரியும் அம்மா அழுதுகொண்டுதான் போயிருப்பா. ஏனென்றால் அம்மாவுக்கு நான்தான் செல்லப்பிள்ளை. அக்காவைகூட அதைஅடிக்கடி சொல்வார்கள்.

நானொரு அனாதைபோல அந்த மனிதனுடன் போய் நெதர்லாந் மண்ணின் அம்சரடாம் விமானநிலையத்தில் இறங்குகிறேன். என்னை அழைத்துப்போக ஒருவர் வந்திருந்தார். எனக்கு அவரைத்தெரியாது. ஆனால் அவர்தான் தன்னை எனக்கு அடையாளப்படுத்தினார். கங்காமாமா. என் அம்மாவின் கடைசித்தம்பியவர். கடிதங்களிலும், தொலைபேசியிலும் கேட்டகுரல் மட்டுமே எனக்கு கங்காமாவைப்பற்றித் தெரியும். அதைவிட எனக்கு அவரை நினைவில்லை. தலையில் பாதிக்குமேல் தலைமயிரைக்காணவில்லை…அருமையான இனிமையான சிரிப்பு மட்டும் கங்காமாமாவின் குரலை எனக்கு ஞாபகப்படுத்தியது. அரைக்காற்சட்டை போட்டுத்திரிந்த நான் இன்று முழுக்காற்சட்டைபோட்டு இந்த நெதர்லாந்து மண்ணில்….அந்தக்கார்த்திகை மாதத்துக்குளிர் எனக்குப் புதியது. நான் குளிருக்கான ஓவர்கோட், சப்பாத்து என்று எல்லாமே அணிந்திருந்தும் எனக்குச் சரியான குளிராயிருந்தது. ஊரில் மாசிகாலப்பனிக்கு அம்மமாவுக்கு மேல் கால்போட்டுக்கொண்டு உறங்கிய நினைவெல்லாம் அந்தநிமிடம் வந்து ஓடியது.

நல்லா வளந்திட்டாயடா…..படத்திலை பாத்ததைவிட பெரியமனிசனாயிட்டாய்…..கங்காமாமா என்னைப்பார்த்து வியந்தார். நான் சிரித்தேன். எனக்கு 2 வயதில் கங்காமாமா புலம்பெயர்ந்தாராம் அம்மா சொல்லியறிந்த நினைவு. இப்போ பத்துவருடம் கழித்து நிச்சயமாய் நான் வளர்ந்துதானே இருப்பேன். அந்தக்கார்த்திகை மாதக்குளிரோடு நான் சொந்தமாகி மாமாவீட்டுக்குப் போயாகிற்று. அம்மம்மா ஓடிவந்து என்னைக்கட்டிப்பிடித்து அழுதா. 5 வருடத்துக்குமுன் அம்மம்மா மாமாவிடம் வந்தவர். அம்மாவின் மூத்த ஆண்பேரன் நான். அம்மம்மா ஊரிலும் எனக்கு கொஞ்சம் அதிகமான கவனிப்புத்தான். அந்தக்கவனிப்பும், நேசமும் இன்னும் அம்மம்மாவிடம் இருந்தது. மாமி மாமாவின் திருமணத்தன்றும், அதன்பின் சில நாளும் பார்த்தது. மாமியும் என்னில் அன்பாயே நடந்து கொண்டா. ஆனால் அம்மம்மாதான் எனக்கான உணவிலிருந்து தூங்குவது வரையும்
கவனித்துக்கொண்டா.

என்னால் என் அம்மாவின் ஞாபகங்களைத் தூக்கியெறிய முடியவில்லை. அடிக்கடி என் அம்மா என் கண்களுக்குள் வந்து வந்து அழுது கொண்டுபோனா. எனக்கு வெளிநாடு வேண்டாம்….அம்மா உங்களோடை கூப்பிடுங்கோ…..என் ஆன்மாவின் அழுகை யாருக்கும் கேட்கவில்லை.

அம்மம்மா தன் அறைக்கு என்னை அழைத்துக் கொண்டுபோய் தன் கட்டிலில் இருத்தினா. கொம்மா, கொப்பா, கொக்காவை எப்பிடியிருக்கினம், சின்னம்மா, சின்னமாமா, அன்ரியவை, பிள்ளையள் எப்பிடியிருக்கினம்….? அம்மம்மா ஊரிருக்கும் அத்தனை பேரையும் விசாரித்து விழிகள் நனைந்தா. எல்லாரையும் பாத்து 5 வருசமாகீட்டுது. உன்னைத்தானப்பு அடிக்கடி நினைக்கிறனான். ஞாபகமிருக்கேயப்பு முந்தியெனக்குச் சொல்லுவாய் அன்ரியம்மாவை மோட்டச்சயிக்கிளிலை ஏத்திக்கொண்டு போவனெண்டு…. ஞாபகமிருக்கே….கேட்டுத் தன்கண்களின் நீரைத்துடைத்துக் கொண்டா.

அம்மம்மா முட்டு வருத்தக்காறி. மூச்சுத்திணறி அல்லற்படுவதை நானும் சிறுவனாகப் பார்த்திருக்கிறேன். அப்போதுதான் ஒரு நாள் அம்மம்மாவுக்கு முட்டுக்கூடி ஆசுப்பத்திரிக்குக் கொண்டுபோக வாகனம் ஒன்றும் கிடைக்காமல் அப்பா சயிக்கிளில் கொண்டுபோய் மருந்தெடுத்து வந்தவர். அதற்கடுத்த நாள்தான் நான் சொன்னேன். நான் பெரிசா வளந்து மோட்டச்சயிக்கிள் வாங்கி ஏத்திக்கொண்டு ஆசுப்பத்திரிக்குப் போவனெண்டு. அதைத்தான் மறக்காமல் இன்று நினைவு கூருகிறா. பாவம் அம்மம்மா முட்டுவருத்தத்தால் எவ்வளவு வேதனைப்படுவா. இப்போ இந்தக்குளிர் நாட்டுச்சுவாத்தியம் முட்டுவருத்தத்தைக் குறைத்திருக்கிறதாம்.

சாப்பிடுமேன…..குளித்துவிட்டு வந்திருந்த என்னிடம் அம்மம்மா சாப்பாட்டுக் கோப்பையைத் தந்தா. நேற்றுவரையும் அம்மாதான் சாப்பாட்டின் முதல்வாய் தீத்திவிடுவது. அதன்பின்தான் எனக்கு சாப்பாடே இறங்கும். இன்று நான் தனியே சாப்பிடவேண்டும். இன்றுமட்டுமல்ல இனிமேல் இப்படித்தான் நான் சாப்பிடவேண்டும். என்னப்பு யோசிக்கிறா சாப்பிடு மேன…..குளிருக்கை வந்தனீ பசிக்கும் சாப்பிடு….அம்மம்மாவின் அன்பினிய வார்த்தைகள் கூட என் நினைவிலிருந்து அம்மாவின் ஞாபகத்தைத் தூக்கிவைத்துவிட்டுச் சாப்பிடக்கூட முடியவில்லை. சோற்றுக்கோப்பை என்கையில் இருக்க நான் அழுகிறேன். அம்மா…. அம்மா…. அம்மா….என்னால் முடியவில்லை. என் அம்மாவும் என்னை நினைத்து அங்கு அழுதுகொண்டிருப்பா, நிம்மதியாகச் சாப்பிடமாட்டா, இரவுகளில் நித்திரை கொள்ளாமல் என்னுடைய படுக்கையைப் பாத்துக்கொண்டிருப்பா, அப்பாவும், சின்னக்காவும், ஆசையக்காவும்தான் அழுவார்கள். அவர்களிடம் ஓடிவிட வேண்டும் போல், அவர்களையெல்லாம் பாக்கவேணும் போல் நெஞ்சு முட்டின நினைவுகள் அவர்களாகவே இருந்தது.

என்னேயிறதப்பு….எல்லாம் அனுபவிக்க வேணும். கொம்மாக்கும் கவலையாத்தானே இருக்கும். அவளும் உன்னை நினைச்சு அழுதுகொண்டிருப்பாள். நீ நல்லாயிருந்து அவளையும் கூப்பிட்டு வைச்சிருக்கலாம். கொஞ்சக்காலம் பல்லைக்கடிச்சுக் கொண்டு இரப்பு. காலம்போக எல்லாம் நடக்கும். என்னைத் தன்மடியில் படுக்கவைத்து அம்மம்மா சொன்ன அந்த வார்த்தைகள் அப்போதைக்கு ஆறுதலாகவிருந்தாலும் என் நினைவெல்லாம் அம்மாதான்…..

அடுத்த நாள் மாமா அம்மாவிடம் கதைக்க ரெலிபோன் எடுத்துத்தந்தார். ஆனந்தமாக அம்மாவிடம் கதைக்கும் ஆவலோடு ரெலிபோனை வாங்கினேன் மாமாவிடமிருந்து. ஆனால் அம்மாவிடம் கதைக்க முடியாமல் அழுகைதான் முன்னுக்கு ஓடிவந்தது. அம்மா என்றதற்குப் பின்னால் என்னால் வேறு எந்த வார்த்தையையும் உச்சரிக்க முடியவில்லை. அம்மாவின் உடைந்த குரல் அம்மாவும் அழுகிறா என்பதை எனக்குச் சொன்னது. குழப்படியொண்டும் செய்யாம நல்லபிள்ளயா இருதம்பி….ஒழுங்காச் சாப்பிடு….நேரத்துக்கு நேரம் நித்திரைகொள்….அம்மா சுகமாயிருப்பன்….என்னைப்பற்றியொண்டுக்கும் யோசிக்காதை தம்பி. எனக்கு அம்மாவால் தரப்பட்ட அந்த நேரத்து ஆறுதல் வார்த்தைகள் அவை. நேரம் ரெலிபோனின் நிமிடங்களை விழுங்க அம்மாவிடமிருந்து விடைபெற மனமின்றி விடைபெறுகிறேன்.

அந்த இரவு அம்மம்மாவுக்குப் பக்கத்தில் எனக்கெனத் தந்திருந்த அந்த ஒற்றைக் கட்டிலிலில் சாய்கிறேன். அம்மா பகல் கதைத்தவைதான் மாறிமாறி என் காதுகளில் வந்து விழுந்து கொண்டிருந்தது. யாரிடமும் பேசவோ, யரையும் பார்க்கவோ பிடிக்கவில்லை. அம்மாவிடம் போவென்றே மனசு சொல்லிக் கொண்டிருந்தது. அம்மாவின் நினைவுகளோடு தூங்கிவிடுகிறேன். கனவிலெல்லாம் அம்மா அழுதபடி வந்து வந்து போகத்தான் தூங்கினேன். அம்மம்மாவிற்கு பேப்பர் படித்துக்காட்டுவது , ரீவி பார்ப்பது என்று என் பொழுதுகள் கழிந்த ஒரு மதியம் ஜேர்மனிக்கு பெரியக்காவிடம் அனுப்பி, ஜேர்மனி ஊடாக டென்மார்க்குக்கு பெரியன்ரியிடம் போவதென்று முடிவாகியது.

நான் ஜேர்மனி போயாயிற்று. பெரியக்கா என்னை அதிசயமாய்ப் பார்த்தாள். ஊர், உறவு, சொந்தங்கள் பற்றியெல்லாம் விசாரித்தாள். என்னைச் சின்ன வயதில் தான் தூக்கித் திரிந்ததை, நித்திரையாக்கியதை, சோறுதீத்தியதையெல்லாம் நினைவு கூர்ந்தாள். என் எட்டுவயதில் என்னையும் எங்கள் குடும்பத்தையும் பிரிந்த பெரியக்கா ஒரு பிள்ளைக்குத் தாயாகி என்னாலும் அக்காவை நம்பமுடியாது அக்கா பெரிய மனிசியாட்டமிருந்தாள்.

என்அக்காவின் 5மாதமகன் என் மருமகன். அவனது பிஞ்சுக்கைகளைத் தொட்டுப் பார்த்தேன். நீயும் சின்னனிலை உப்பிடித்தான் இருந்தனீ….உப்பிடித்தான் பிஞ்சுக்கையும் காலுமா ஒரு பொம்மைக்குட்டி மாதிரியிருந்தனீ….சொல்லிச் சிரித்தாள் அக்கா. அக்கா தன்பிஞ்சு மகனைத் தூக்கிச் சாப்பாடு தீத்தும்போது, நித்திரையாக்கும் போது நான் அவனுக்கு விளையாட்டுக் காட்டுவேன். அக்காவுக்கு என்னைக் கண்டது பெரும் மகிழ்ச்சி. ஒரே ஓயாது என்னுடன் கதைத்துக் கொண்டிருந்தாள். என் வருகையின் பின் அத்தான் விறாந்தையில் படுத்துக் கொண்டார். நானும் அக்காவும் இரவிரவாய் ஒரே கதையும் சிரிப்பும்தான். ஆனால் அம்மாவின் ஞாபகங்கள் என்னைக் குழப்பக்கூடாது என்று எல்லாம் செய்து பார்த்தும் அம்மாவின் ஞாபகங்கள் எதுவும் என்னிலிருந்து போகவில்லை.

இரவுகளில் நான் அழுவதாகவும், எழுந்திருப்பதாகவும் அக்கா காலையில் சொல்லுவாள். பாரன் நானும் தனியத்தானே இருக்கிறன். அம்மாவை, ஊரை நினைச்சா சாகவேணும் போலைக்கூட மனம் வாறது. பார் இந்தப் பிள்ளைக்கு ஊரிலையெண்டா எத்தினைபேர் இருக்கினம் ஆனா இஞ்சை என்னையும் தகப்பனையும் விட்டா வேறை சொந்தமில்லை. எனக்கொரு தலையிடி வந்தாக்கூட நான்தான் எழும்பி தண்ணியூத்திக் குடிக்க வேணும். இதுதூன் வெளிநாடு. அங்கையிருக்கிறவைக்கு இதெல்லாம் விளங்காது. நாங்கள் பாசத்துக்காக, சொந்தங்களுக்காக ஏங்கிறது எதுகும் தெரியாது. வெளிநாடெண்டா ஏதோ பெரிசா நினைக்கினம். என்னேயிறது வந்திட்டம் இருக்கத்தான வேணும் அக்கா எனக்கு ஆறுதல் சொல்லுவாள்.

அக்காவுக்கு என்னைத் தன்னுடன் வைத்திருக்க விருப்பம். ஆனா எனக்குப் பெரிசா விருப்பமில்லை. டென்மார்க்கிலை பெரியமாமாவின் பெடியனும், சின்னமாமாவின் பெடியனும் இருக்கிறாங்கள் அவங்களும் என்னைவிட ஒவ்வொரு வயது வித்தியாசம் அவங்களோடை இருக்கவே எனக்கு விரும்பம். அதை அக்காவுக்கும் சொன்னேன். அவங்களோடையெண்டா உனக்கும் ஆறுதலா இருக்கும், அவங்களோடை விளையாட, திரிய உனக்கும் அடிக்கடி அம்மாவின்ரை ஞாபகமும் குறையும். என்றாள் அக்கா. அம்மாவின் ஞாபகங்களை என்னால் தூக்கியெறிய முடியவில்லை. அது முடியாது என்னால். குறிப்பிட்ட சில மணிநேரங்களுக்கு மாமாவின் பெடியளுடன் கழியும்போதாவது அம்மாவின் நினைப்புகள் கொஞ்சம் தெரியாது போகும் என்றே நானும் நம்பினேன்.

அந்த நம்பிக்கையோடே அக்காவின் கண்ணிருடனான வழியனுப்பலுடன் நான் டென்மார்க் மண்ணை மிதிக்கிறேன். அன்ரியும், சித்தப்பாவும், மாமாவின் பெடியளும், அன்ரியின் பெடியனும் எனக்கு உறவாகினர். அகதிவிண்ணப்பம் கொடுத்து என்னை டென்மார்க்கில் வாழ்வதற்கான உரிமையும் வழங்கப்பட்டு நான் பாடசாலைக்கும் போகத்தொடங்குகிறேன்.

அன்ரிதான் எங்களை தனது செலவில் இந்த வெளிநாட்டுக்குக் கூப்பிட்டவா. அந்தக்கர்வம் அன்ரியிடமிருந்து அவ்வப்போது தலைதூக்கவே செய்தது. அந்த நேரங்களிலெல்லாம் அம்மாவின் நினைப்புகள் உயிரை வதைத்தெடுக்கும், அம்மாவின் மடியில் விழுந்து அழவேண்டும் போலிருக்கும். யாருக்கும் அந்த நிலை வரவே கூடாது. அம்மாவின் கைக்குள் இருந்துவிட்டு திடீரெனப்பறித்தெடுப்பது எந்தப்பிள்ளைக்கும் வரகு;கூடாது. அப்போது இப்படித்தான் என் மனம் குழுறியழும். ஆனால் கோபம்மாறியவுடன் என்னை அன்ரி கூப்பிடும் போது எல்லாம் மறந்துவிடும். அன்ரி பாவம். எங்களது குடும்பத்துக்காக கனக்கச் செய்தவ.

பாடசாலை செல்ல ஆரம்பித்த எனக்கு அந்த நேரங்கள் கொஞ்சம் அம்மாவின் ஞாபகங்களைத் தள்ளி வைத்தன. புதிய நண்பர்களுடனான பழக்கம், புதிய மனிதர்களுடனான தொடர்புகள் வரத்தொடங்க அந்த நேரங்களை நான் நீட்டத் தொடங்குகிறேன். இதில் அன்ரிக்கு உடன்பாடு இருக்கவில்லை. என்மீது அன்ரிக்குச் சந்தேகம் எழுகிறது. அது எனது நடத்தையில் ஏற்படுகிறது. சத்தியமாய் நான் நல்லவனாகவே இருந்தேன். அன்ரி என்னை நம்பத்தயாரில்லை. என்ன செய்வேன் ? அம்மாவைத்தான் நொந்து கொள்வேன். ஏனம்மா என்னை வெளிநாடு அனுப்பினனீங்கள்….? இரவுகளில் அழுவேன். யாருக்கும் தெரியாமல் நான் அழுவேன். கனவுகளில் திடுக்கிட்டு விழிப்பேன். அம்மா, அப்பா, அக்காமார், ஊர், உறவு எல்லாமே என்னை வந்து சுற்றி நிற்பார்கள். அந்தக்கனவுகளுக்காக நான் அதிகம் இரவுகளை நேசித்தேன். கண்களை மூடிக்கனவு காண்பதில் பெரும்விருப்பம் எனக்கு. திடீரென அன்ரியின் காட்டுக்கத்தல் என்னை திடுக்கிட்டு எழ வைக்கும். அன்ரியின் பெரியதொண்டை எனக்குப் பயமாகவிருக்கும். அன்ரியின் வாயிலிருந்து அனேகமாக நான் கேட்கும் வார்த்தைகள் இவைதான்….சனியன், மூதேசி, நாய், பிரமசத்தி…..இந்த வார்த்தைகள் என்னையும் வந்து அவ்வப்போது தாக்கின. அந்த நொடிகளிலெல்லாம் நான் துடிக்கின்ற துடிப்பு இருக்கிறதே அதை வார்த்தைகளால் சொல்லிவிடவோ, எழுதிவிடவோ முடியாது.

எனக்குக்கைச் செலவுக்காகத் தரும் பணம் எங்கே போகிறது என அன்ரி மிரட்டிக்கேட்பா. எனது வாயை வந்து மணந்து பாப்பா. ஏனென்றால் நான் குடித்திருப்பேனோ என்ற சந்தேகம் அன்ரிக்கு. எனது அப்பா குடிகாரன் என்பதால் நானும் அப்படி வந்துவிடுவேனோ என்று அன்ரிக்குப் பயம். மற்றப்பிள்ளைகளைவிட அன்ரிக்கு என்மீது ஏனோஅதிகம் சந்தேகம் எழுந்திருந்தது. தன்னுடன் மட்டும் அந்தசந்தேகத்தை வைத்திருக்காது அன்ரி தனது சினேகிதர்களுக்கும் சொல்லத் தொடங்க என் மானமே கப்பலேறுவதாக உணர்கிறேன். அந்த நணபர்களெல்லாம் என்னில் ஒரு கண்ணை வைத்திருந்தனர். எங்காவது என்னைக்கண்டால் ஒரு பார்வை, அத்தோடு நிற்காது என்ன செய்யிறா உங்கை நிண்டு எனும் கேள்வீயும் எழும். அது மதுக்கடைகளின் அருகாகவும் சிலசமயம் இருந்தது. என் தாய்சத்தியமாய் நான் அப்போது குடிக்கவில்லை. அந்த மதுக்கடைகளின் உள்ளே கூடச்சென்றறியவில்லை. வரும் போகும் வழியில் இந்த நாடுகளில் இந்த மதுச்சாலைகள் இருக்கின்றனதானே. அது புதுமையில்லையே எனக்குள் நினைத்துக் கொள்வேன்.

அந்த இடங்களில் யாரும் என்னைக் கண்டுவிட்டால் உடனடியாக அன்ரியின் காதுக்குள் அதை ஓதிவிட்டுத்தான் அன்ரியின் தமிழ் நண்பர்கள் மறுவேலை செய்தார்கள். அன்ரியின் காட்டுக்கத்தல் என் செவிப்பறைகளை அதிர்க்கும். எனக்குத் தெரியும் நீ கொப்பன்ரை இடத்துக்குக் கட்டாயமா வருவாய். உன்னிலை சிகரெட் மணக்குது, பியர் மணக்குது என்றெல்லாம் அன்ரி கத்துவா. அப்போதெல்லாம் நான் காற்சட்டைக்குள்ளேயே சிறுநீர் கழித்திருக்கிறேன். பஸ்சுக்காக காத்திருக்கும் தரிப்பிடங்களில் டெனிஸ்காரர்கள் புகைப்பிடிப்பார்கள். அந்த மணம் என் உடுப்பிலும் தொற்றிக் கொள்ளும். மற்றப்படி நான் அந்தப்பழக்கம் எதையும் செய்யவேயில்லை. சுவிங்கத்தை எப்போதும் வாயில் சப்பித்திரியும் பழக்கம் என்னில் இருந்தது. அது நான் குடித்திருப்பதை மறைக்கவே செய்வதாக அன்ரி குற்றம் சாட்டினா. என்னை அன்ரி நம்பவில்லை. என்னைப்பற்றி நான் சொல்வதை நம்பாது ஊரவர் சொன்னதையே நம்பினா. என்னை நல்லவன் எனக்காட்டிக் கொள்ள நான் செய்த பிரயத்தனங்களெல்லாம் வீணற்றுப்போனது. அன்ரியோ 13வயதான என்னை ஒரு குடிகாரனாகவும், புகைப்பிடிப்பவனாகவுமே பார்க்கத் தொடங்கினா. ஏனோ எனது பார்வையும் நடையும் முரடனைப்போலிருப்பதாக பலதமிழர்கள் சொன்னார்கள். அன்ரியும்தான். கண்ணாடி முன்னின்று பார்த்தேன். அப்படித்தான் எனக்கும் தெரிந்தது. இயல்பாய் என் முகம் அப்படியிருப்பின் நான் என்ன செய்வேன்….? புரியாது துடிக்கிறேன். என் இரவுகள் தூக்கமிழந்து துடிக்கத் தொடங்குகிறது.

அம்மா….! என்னை ஏன் வெளிநாடு அனுப்பினீங்கள் ? பாருங்கோம்மா நான் ஒண்டும் செய்யிறேல்ல….ஆனா என்னைக் குடிகாறனெண்டு சொல்லுகினம்….கூடாதவனெண்டு சொல்லுகினம்….நான் கூடாதவனா அம்மா….அம்மா நான் கூடாதவனா…..எனமன ஓலம் எனக்கு மட்டுமே கேட்க நானழுது இரவுகளில் வெதும்புவது யாருக்கும் தெரியாது. நான் ஒரு அனாதைபோல் ஆகிவிட்டேன். மாமாவின் மகன்களுக்குக்கூட என்னுடன் கவனமாகப்பழகும்படி அன்ரி சொல்லியிருக்க. அவர்களும் என்னுடன் கதைக்கவே அஞ்சுவதாய்த் தெரிந்தது.

அந்தவொரு நாள் பாடசாலையில் தனிமையாய் நான் அழுதுகொண்டிருக்க அவன் வந்து கேட்டான். ஏனழுகிறாயடா….? அவன் கேட்டதைக்கூட காதில் போட்டுக்கொள்ளாமல் நான் அழுதேன். அம்மா….அம்மா….அம்மா….என்னையுங்கை கூப்பிடுங்கோ…..எனக்கு இந்த வெளிநாடு வேண்டாமம்மா…..அம்மா…. எனது உள்மன விசும்பல் அவனுக்குக் கேட்கும்படி அன்று நான் அழுதுவிட்டேன். ஆதரவாய் என்னை அணைத்து அழாதை உனக்கென்ன பிரச்சனை….? சொல்லு. கவலையை மறக்க வேணுமா…? அம்மான்ரை ஞாபகம் வராம இருக்க வேணுமா….? நான் அதுக்கெல்லாம் வழிசெய்யிறன் அழாதை. அந்த வார்த்தைகள் எனக்குள் ஏதோ புதிதான நம்பிக்கையைத் தந்தது. நான் அவனை நம்பினேன். ஆம் ! என்வாழ்வின் ஒளியாய் அவனை நம்பினேன். இண்டைக்குப் பின்னேரம் என்ரை வீட்டை வா சரியா…..எனிமே நீ கவலைப்படவே தேவையில்லை.

அவன் சொன்ன அந்த வார்த்தைகள் தந்த துணிவில் அன்று மாலை அவனது வீட்டு அழைப்புமணியை எனது கைகள் அவனது வீட்டு அழைப்பு மணியை அழுத்துகிறது. மனமெங்கும் ஒரே படபடப்பு, நாவறண்டு உதடுகள் காய்ந்தன, அந்தக்குளிரிலும் எனக்கு வியர்த்தது. என்ன பயமாக்கிடக்கா பயப்பிடாதை. உன்னைப்போல பெடியள்தான் இவங்களும். உள்ளை வா. வாசலில் நின்று தயங்கிய என்னைத் தோழில் தட்டி அவன் உள்ளே அழைத்தான். என்வயதொத்த இளையவர்கள் அவர்கள். கைகளில் மதுப்போத்தல்கள், சிகரெட் என அட்டகாசமாய்….நான் போறன் சொல்லிவிட்டுத் திரும்பிய என்னை அங்கிருந்த ஒருவனின் வார்த்தைகள் தடுத்து நிறுத்தத் திரும்புகிறேன்.

உம்மைப்போலத்தான் நானும் மாமாவோடை இருக்கிறன். அம்மா என்னைத் தனிய வெளிநாட்டுக்கு அனுப்பினவ. ஆனா மாமாவுக்கு என்னைச் சரியா வழிநடத்தத் தெரியேல்ல அதுதான் அந்தக் கவலையளை மறக்க இவனிட்டை வந்தன். இப்ப எல்லாம் மறந்திட்டன். நானிப்ப சுதந்திர மனிசன், அம்மான்ரை ஞாபகமும் இல்லை, அப்பான்ரை ஞாபகமும் இல்லை, சந்தோசமா இருக்கிறன். போதையில் அவன் தடுமாறிச் சொன்ன வார்த்தைகளுக்கு முன்னால் அம்மாவின் அந்த முகம் என்னால் மறக்கவும் முடியாமல் இந்தச்சூழலுடன் ஒட்டவும் முடியாமல்த் தவிக்கும் தவிப்பும் முன்வந்து நின்று கொண்டது. எல்லாவற்றிற்கும் அப்பால் அன்ரியின் காட்டுக்கத்தல் காதுக்குள் இடித்துக் கொண்டிருந்தது. ஒரு கணம் என் மனம் துடித்துப்பின் நிமிர்ந்தெழுகிறது. நான் அவனுக்கருகில் போய் இருந்தேன்.

இந்தா இதைக்குடி…..இந்த ஊசியைக் கையில போடு….பயமெல்லாம் பறந்து போயிடும்…. அம்மான்ரை ஞாபகம் வரவே வராது. அன்ரியைக்கண்டா இனியுனக்குத் துணிவு வரும்… என்முன் அந்த ஊசியை எடுத்துக் கொண்டு வந்தான். ஊசியென்றால் உயிரே போய்விடுவது போல் அஞ்சிய என்னைப் பார்த்து மற்றவர்கள் கேலிபண்ணிச் சிரித்;தார்கள். வெட்கமாகவிருந்தது. நான் தலையைக் குனிந்து கையை அவனிடம் நீட்டிக்கொண்டு தலையைக் குனிந்து கொண்டேன். ஆ….அம்மா…..அந்த ஊசி என் கைகளில் ஏறியதும் மெல்லத் துடித்தேன். அவ்வளவுதான் நான் கொஞ்சம் கொஞ்சமாக எங்கோ போய்க்கொண்டிருந்தேன். முன்னிருக்கும் அவர்களெல்லாம் தேவதைகளாக எனக்குக் காட்சிதந்தார்கள். எனக்கான புது உலகு திறக்கப்பட்ட முதல்நாளது. அவன் தந்த பியரை சத்தமின்றிக் குடித்து முடித்துவிட்டேன். அதன்பின்னர் அடுத்தவன் தந்த ஒரு கலவைமதுவையும் உறிஞ்சி முடிக்கிறேன். அவன் சொன்னது போல் என்னுலகம் வேறாகியிருந்தது. யாரின் நினைவும் எனக்குத் தெரியவில்லை. திடீரென வாந்தி வருவதுபோலிருக்க அவனுக்குச் சொன்னேன். பயப்பிடாதை முதல் அப்பிடித்தான் இருக்கும்….அதுதான் எனக்குத் தெரியும்.

மறுநாள் நான் அன்ரியின் வீட்டில் கட்டிலில் படுத்திருக்கிறேன். தலையிடித்தது. கைகால் எல்லாம் அடித்துப்போட்டது போல் நோவாக இருந்தது. எனக்கு நேற்றைய நினைவு தெரிகிறது. வெளியில் அன்ரியும், சித்தப்பாவும், மாமாவும், மாமாவின் மகன்மாரும் வெளியில் கதைத்துக் கொண்டிருப்பது கேட்க நித்திரைபோல் படுத்துக் கொள்கிறேன். வெளியில் பெரியதொரு ஆலோசனைக் கூட்டம் நடப்பதை அவர்களது பேச்சு விளக்கியது. யாரோ கதவு திறந்து என்னருகில் வருவது தெரிய பேசாமல் படுத்திருந்தேன். டேய் ! எழும்படா….டேய்….அன்ரியின் குரலது. கண்களை விழிக்கிறேன். மங்கள வாத்தியங்களுடன் விழுந்த வார்த்தைகள் சனியன்….மூதேவி…..பரதேசி….பண்ணாடை….என நீண்டது. உனக்கென்ன குறைவிட்டனானடா ? ஏனடா இப்பிடிச் செய்தனி ? கொப்பான்ரை இடத்துக்கு வரப்போறியேடா ? ம்….என்ன ஏதன் கதையனடா ? எருமைமாதிரி இருக்கிறாய்….அழுதா அன்ரி.

எல்லாத்துக்கும் நீங்கள்தான் காரணம் நான் இப்பிடிச் செய்யிறதுக்கு நீங்கள் தான் உங்கடை வாய்தான் காரணம்….உந்தச் சத்தம்தான்… பெலத்துக் கத்திச் சொல்லவேண்டும் போலிருந்தது. நான் அமைதியாயிருந்து கேட்டுக்கொண்டிருந்தேன். என் விழிகளில் நீர்கோர்த்து என் விழிகளிலும் கண்ணீரின் கோடுகள். நடிக்கிறான்….எங்களைப் பேக்காட்ட நடிக்கிறான். அன்ரி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தா. நான் செய்தது தவறுதான் ஆனால் என்கண்ணீர் நடிப்பு இல்லை. என் அழுகை நடிப்பில்லை. நம்பமாட்டீங்களா ? கேட்கத்துடித்த வாயை அடக்கிக்கொள்கிறேன். இவையள் நம்பாகினை இவையள் ஒருநாளும் என்னை நம்பாகினை….என் அடிமனம் அழுது கொண்டிருந்தது. பொறு இப்ப கொம்மாக்கு ரெலிபோனெடுத்துச் சொல்லிறன். அவ என்னண்டாலும் செய்யட்டும். சொன்ன அன்ரி சற்று நேரத்தில் வவுனியாவுக்கு ரெலிபோன் எடுத்துவிட்டா. அம்மாவுக்கு பெரியதொரு ஒப்பாரிப்பாட்டுப்பாடினா. எதிர்முனையிலிருந்தும் அழும் குரல் கேட்டுக்கொண்டிருந்தது. அவனிட்டைக்குடு கதைக்க…என்றா அம்மா. ரெலிபோன் என்கைக்கு மாறுகிறது. அம்மா ! அதற்குமேல் என்னால் ஒரு வார்த்தை கதைக்க முடியவில்லை. அவன் நல்லா உனக்கும் நடிச்சுக்காட்டுறான்….உவன்ரை நடிப்பை நம்பிப்போடாதையக்கா….அருகில் நின்ற அன்ரி அம்மாவுக்குக் கேட்கும்படி சொல்லிக்கொண்டா.

ஏனப்பு உந்தப்பழக்கமெல்லாம் ? எப்பிடிராசா வந்தது ? நீ உயிரோடையிருக்க வேணுமெண்டுதானே உன்னை அனுப்பினனான்; ! அம்மா அம்மாவெண்டு என்னையே சுத்தித்திரிஞ்ச பிள்ளை எப்பிடியய்யா மாறிப்போனனீ ! அம்மாவின் விசும்பல் அழுகையாகி என்னைக் கேட்டுக்கொண்டிருந்தது. அம்மா ! நான் உங்கை வரப்போறன். என்னைக் கூப்பிடுங்கோம்மா ! எனக்கு இந்த வெளிநாடு வேண்டாம். உங்கை வந்து நான் உங்களோடை இருக்கிறனம்மா. ஒரு குழப்படியும் செய்யமாட்டனம்மா. என்னை உங்கை கூப்பிடுங்கோம்மா….அம்மாவைக் கெஞ்சியழுகிறேன். இஞ்சையிருந்து எல்லாரும் உங்கைவர நிக்க நீயேனப்பு இஞ்சைவர நிக்கிறாய். ஊரிலையும் இருக்கேலாது. அங்கையெல்லாம் ஆமி. இதோடை 17 வது வீடுமாறியாச்சு. நாங்களே ஆற்றயேன் கோடியுக்கை குந்தியிருக்கிறம். சூரியக்கதிர் சண்டையுக்காலை நாங்கள் கிளாலிகடக்கப்பட்டபாடு தெரியும்தானேயப்பு ! அந்தக்கரைச்சலையெல்லாம் அனுபவிச்சனியெல்லே ! நடந்தது நடந்ததா இருக்கட்டும். இனிமேல் நல்லபிள்ளையா இருமேன ! என்ன ! அம்மா என்னை ஊருக்குக்கூப்பிட விரும்பவில்லை. வெளிநாட்டு நரகத்துள்ளேயே என்னை திணறடிக்கச் சொன்னா. அம்மாவிற்கு பதில் சொல்லாமலேயே அன்ரியிடம் தொலைபேசியைக் கொடுத்துவிட்டுப் போய்ப்படுத்துவிடுகிறேன். என்னால் முடியாது ! எனக்கு வேண்டாத வெளிநாடு என்னை மீண்டும் குழிபுதைத்தே தீரும். அம்மாவின் நினைவுகளும், அம்மாவின் அழுகையும் மாறிமாறிவந்து நின்று என்னை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. வீட்டில் எல்லோரதும் கதை எனதாகவிருந்தது. எனது சிந்தனை முழுவதும் அம்மாதான். அம்மாவிடம்; ஓடிவிடு என்றிருந்தது.

சூரியக்கதிர் படையெடுத்தபோது ஊர்விட்டு வெளியேறி நீர்வேலியில் இருந்த நாங்கள் தென்மராட்சிக்கு இடம்பெயர்ந்த போது அம்மா என்னைச் சின்னக்காவோடுதான் அனுப்பி வைத்தா. நான் புத்தூர்வரையும் போய்விட்டு அம்மாவிடம் திரும்பிவிட்டேன். எது வந்தாலும் எனக்கு அம்மாவின் அருகாய் இருக்கட்டும் என்று திரும்பினேன். அந்த இரவு நாங்கள் படுத்திருந்த அறை செல்விழுந்து கற்களுக்குள்ளிருந்து மீள என்னைத்தான் அம்மா அப்போது தேடினா….தம்பி….எங்கையிருக்கிறாய்….தம்பி….அம்மாவின் கை என்னைத்தேடி அந்தரப்பட்டது. வெளியில் படுத்திருந்த மாமி கொழுத்திய விளக்கு வெளிச்சத்தில் நான் அம்மாவின் பக்கத்தில் போயிருந்த பின்னால்தான் அம்மா அமைதியானா. அப்படி என்னில் தன்னுயிரே இருப்பதாக இருந்த அம்மா ஏன் இப்படி என்னை அனாதையாக்கிவிட்டா…..? நம்பமுடியாது துடிக்கிறேன். அம்மா…எனக்கு நீங்கள் வேணும்….உங்கடை அன்பு வேணும்… உங்கடை அருகாமை வேணும்….எனது புழுங்கல் யாரின் காதிலும் ஏறவில்லை. நான் ஒரு விசரன்போல அழுவதும், அம்மாவின் நேசத்துக்காக ஏங்குவதுமாக….

நான் வாழும் நகரில் அன்று கலைநிகழ்வொன்று நிகழ்ந்து கொண்டிருந்தது. என்னைக்கூட்டிப்போகாது எல்லோரும் போய்விட அன்றும் அவர்களது வீட்டுக்குப்போனேன். போனவுடன் இருந்த பயம் கொஞ்சத்தில் மாறிவிட்டது. போதைவஸ்த்து, குடிபானம், சிகரெட் எல்லாம் எனது உலகிலிருந்து என்னை விடுவித்து தங்கள் உலகோடு இணைத்துவிட்டது. அந்தக்கலைநிகழ்வில் யாரையோ அடிக்க வேண்டும் அதை நான்தான் செய்யவேண்டுமென்று கேட்டான் அவன். என்னை இன்னொரு உலகில் மிதக்க வைத்து அம்மாவின் ஞாபகங்களை, அம்மாவின் பிரிவின்வலியை மறக்கவைத்தவனுக்காய் நான் அந்த விழாமண்டபத்துக்குப் போனேன். அடியென்றவனுக்கு நான் மரணஅடி அடித்து விட்டேன். என்னிடம் அடிவாங்கியவனின் அணியும் என்னை அங்கு அழைத்திருந்தவனின் கூட்டமும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ள ரத்தம் வழிய வழிய என்னிடம் அடிவாங்கியவனும் அவனது அணியும். என்னிலும் ரத்தம் வழிகிறது. ஆனால் வலிக்கவில்லை. சிரித்துக்கொள்கிறேன். நான் பார்த்த பல சினிமாப்படங்களில் வரும் கதாநாயகன் போல் நான் அசையாது நிற்கிறேன். வீட்டை போடா….போடா….அக்காவின் கத்தல் அது. டேய் உன்னைக் கொல்லாமல் விடமாட்டன்ரா…உன்னைக் கொல்லாம விடமாட்டன்ரா….என்னிடம் அடிவாங்கிய கூட்டத்திலிருந்து ஒருவன் கத்தக்கொண்டு போனான். அந்த மண்டபத்திலிருந்து எனது உறவுகளால் வெளியேற்றப்படுகிறேன். அதுவரைதான் என்நினைவில் தெரியும்.

அடுத்தநாள் விடிகிறது. வளமைபோல் அன்ரியும், மாமாவும் கத்தினார்கள். தொலைந்து விடு என்றார்கள். சனியனொண்டு வந்து எங்களை உலைக்கிறான். நாயாலை பெரியதலையிடி வீட்டில் என்னை திட்டிக்கொண்டிருந்த எந்தக்குரலும் என்னை அணைக்கத் தயாராயில்லை. எனக்கும் அதிலிருந்து மீளும் நினைவும் வரவில்லை. அடிதடி, மது, சிகரெட், போதைவஸ்த்து அதுவே எனக்குப்பிடித்த உலகமாயும் இருந்தது. அம்மாவின் நினைவு எனதுலகத்தால் கொஞ்சம் மறந்துபோனது.

அன்றுமுழுவதும் அறைக்குள்ளேயே நான். மாலையானது யாருக்கும் தெரியாமல் மீண்டும் வெளியில் போனேன். போனபின் வீட்டில் என்னைத் தேடியிருப்பார்கள். நான் எதையும் அக்கறைப்படுத்தாது போய்விட்டேன். அவனது வீட்டில் வழமைபோல் கொண்டாட்டம். வாடா வா….. எங்கடை மானத்தை நீதான் நேற்றுக்காப்பற்றினனீ….இனிமே உனக்காக நான் என்ன வேணுமானாலும் செய்வன்….. அவன் எனது தோழ்களில் கைபோட்டுச் சொன்னான். வீட்டில் என்னை எல்லோரும் திட்டினார்கள். ஆனால் இவனோ என்னை தன்னவனாக நினைத்து…. அத்தோடு எனக்குள்ளிருந்த குழப்பம் எல்லாம் தொலைந்து போனது. மறுபடியும் மதுவில் நனைந்து என்னுலகிலிருந்து விடுபட்டு நான் அடுத்த உலகிற்குப் போய்விடுகிறேன்.

வானுக்கும் பூமிக்குமிடையில் நான்…இன்பவுலகில் சஞ்சரிப்பதாக உணர்வு மண்டலம்….எங்கே போகிறேன்….எனது எதிர்காலம் என்ன….? எனக்கு எதுவும் நினைவிலின்றி நான் மதுவுக்கும், புகைக்கும், போதைவஸ்த்துக்கும் அடிமையாய்….என்னுலகு வேறாக…அடிதடி சண்டை, கத்தி,குத்து, வெட்டு, ரத்தம் இதுவே இப்போ எனக்கு சொந்தமாய்….

இப்போ என்னைக்காணும் தமிழரெல்லாம் ஓடியொழிகிறார்கள். நான் கொலைகாரனாம், உதவாக்கரையாம், ஊதாரியாம், என்முன் சொல்லப் பயந்தார்கள். ஆனால் வெளியில் கதைத்தது எனக்கும் கேட்டது. என் நண்பர்கள் வளியாக…வீட்டார் வழியாக ஆனால் எல்லாம் எருமையின் மேல் பெய்த மழையாய் எனக்கு எந்த அதிர்வையும் தரவில்லை. நான் அவர்கள் சொல்லும் அத்தனையுமாய்….

என் உடலெல்லாம் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது…சின்னக்கா என்னைக் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்தாள்… அவர்கள் என்னை கத்தியால் குத்தி கோடாரியால் என் கைகளைத் தறிக்கிறார்கள்…சின்னக்காவிற்கும் முதுகிலிருந்து ரத்தம் வழிகிறது…அவர்களிடமிருந்து என்னை மீட்க ஒருவரும் வரவில்லை….தூரமாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள்…. விழிக்க முடியாத என் விழிகளைப் பிரித்து விழித்து விட்டேன். உடலெல்லாம் வியர்த்து…கைகள் நடுங்கியது. நெஞ்சு படபடத்துக் கொண்டிருந்தது. எழுந்து மின்விளக்கைப் போட்டேன்.

அடுத்த கட்டிலில் படுத்திருந்த மச்சான் எழுந்து கேட்டான். என்ன ஏதும் கனவு கண்டனியே…? ம். சரி படு. சொல்லிவிட்டு அவன் மீண்டும் படுத்துக் கொண்டான். நேரத்தைப் பார்த்தேன். விடிவதற்கு இன்னும் சில மணித்தியாலங்கள் எஞ்சியிருந்தது. தூங்குவதற்கு முயற்சித்த என் கண்களில் சற்று முன் நான் கண்ட கனவின் காட்சிகளையே விழிகளுக்குள் திரையிட்டிருந்தது. உடனே சின்னக்காவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. இப்போ சின்னக்காதான் எனக்காக என்னருகில் இருந்து அழும் ஜீவன். அவளை நினைக்க ஏதோ என் கண்கள் கலங்கியது. நான் ஏன் இப்படியிருக்கிறேன்…? இப்படி நான் எப்படியானேன்….? விடைகள் தெரியாத வினாக்கள் என் எண்ணம் முழுவதும்…..தம்பி உதொண்டும் வேண்டாமடா….பிரச்சனையில்லாம இரடா….அம்மா பாவமடா…சின்னக்கா அடிக்கடி எனக்குச் சொல்லும் அந்த வார்த்தைகள் ஏதோ அந்தக்கணங்களில் எனக்குள் ஒலித்தது. என் மீதே எனக்கு வெறுப்பாயிருந்தது. தலைக்குள் ஏதோ வந்து நின்று உருள்வது போலிருந்தது. சிந்தனைகளில் ஆழ்ந்திருந்த என் ஆன்மாவை அமைதிப்படுத்த முடியவில்லை. மின்விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கிறேன்.

அன்று மதியம் சின்னக்கா வீட்டுக்குப் போனேன். காலமை பெரியக்கா ரெலிபோனெடுத்தவ…? என்னவாம்…..? உன்னை ஒரு இடமும் போகவேண்டாமாம்…! ஏனாம்…? ஏதோ உனக்கு நடக்கக் கனவு கண்டவவாம்…! நானும் கனவு கண்டனான். உனக்கும் எனக்கும் ஆரோ வெட்டுறதா….என்னவோ நடக்கப்போகுது…எனக்குப் பயமா இருக்கடா….. சின்னக்கா அழுதாள். மனம் ஏதோபோலிருந்தது.

அன்று நகரில் நடந்த இசைவிழாவுக்கு நான் போவதில்லை என்ற முடிவோடு வீட்டிலேயே இருந்தேன். வீட்டில் தொலைக்காட்சியுடன் பொழுது போக மறுக்க வெளிக்கிட்டு இசைவிழாவுக்குப் போனேன். வந்திட்டான்…ஆரோடை இண்டைக்குப் பிரச்சனையோ தெரியாது….சிலர் முணுமுணுத்தது மட்டுமல்ல. என்னுடன் எதிர்க்கும் அந்தக் குழுவிற்கும் அறிவிக்கப்பட்டது. சத்தியமாக நான் அன்று சண்டைக்கென்று போகவில்லை. இரவு கண்ட கனவு அடிக்கடி என்னை எச்சரித்துக் கொண்டிருந்தது.

எப்படி அது நடந்தது…? எனக்கே தெரியவில்லை. உணவகத்தில் நான் எனக்குப்பிடித்த றோள்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். முதுகில் யாரோ வந்து தாக்கியது தெரிந்தது. தனியே நானிருக்க என்னை அவர்கள் தாக்கினார்கள். அவனிடமிருந்த கோடரி என் முதுகில் காயம் தந்தது. சுற்றிவர 15 பேர்வரை நின்றார்கள். இண்டைக்குச் செத்தாயடா…! எங்களோடையா மோதினனி…! கோலப்போத்தல் என்னை நோக்கி வந்து விழுந்தன. என்னைக் காத்துக்கொள்ள நான் உயிருடன் மீள அந்த நேரத்தில் எனக்கு வேறுவழியில்லை. என்னைக் கொத்திய கோடரியால் என்னைக் கொத்தியவனை, என்னைத் தாக்கியவர்களை எதிர்த்துத் தாக்கினேன். நான் என் கட்டுப்பாட்டிலில்லை. அந்தக் காட்டிசைக் கண்ட எனது நண்பர்களும் அவர்களைத் தாக்கி….அது எப்படி நடந்தது…? ஏன்…….? தெரியாது….? அந்தச் சண்டை முடிந்தது. காவற்துறை வந்து காயக்காறர்களை மருத்துவமனையனுப்பி வழக்குப் பதிந்து நானும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு….முதுகில் காயத்துடன்….

மறுநாள்தான் தெரிந்தது என்னைத்தாக்கியவர்களை நான் கடுமையாகத் தாக்கிவிட்டேனென்று…….மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்குப் போக எனக்கு முடியவில்லை. இத்தனையும் நடந்த பின் வீட்டார் முன் போய் நிற்கும் தைரியமும் எனக்கில்லை. நான் எனது கூட்டத்துடன் போய் இருந்து விட்டேன்.

தம்பி….எங்களோடை வந்திரடா…! அம்மா பாவமடா….பெரியக்காவும் நெடுகலும் ரெலிபோனெடுத்து அழுகிறாவடா….! இஞ்சை எல்லாரும் என்னைத்தான் பேசுகினை நான்தான் உனக்குச் செல்லம் தந்து கெடுத்துப் போட்டனாம்….தம்பி வாடா வீட்டை….சின்னக்கா நானிருந்த இடம் வந்து அழுதாள். திரும்பத் திரும்ப நான் பிரச்சனைக்குரியவனாக…., சண்டைக் காரனாக…,எந்த முகத்துடன் போவேன்….? இல்ல நான் வரேல்லை நீ போ சின்னக்கா…., அம்மாக்கு ஆறுதல் சொல்லு…..திருப்பியனுப்பினேன் சின்னக்காவை. தம்பி ஏனடா இப்பிடிச் செய்யிறா…? உனக்கென்னடா குறை வைச்சனான்…? நீங்களும் நல்லாயிருக்க வேணுமெண்டுதானே கூப்பிட்டனான்….? எனக்கிதே தம்பி நீ செய்யிற கடமை……அன்ரியும் வந்து அழுதா….கோபத்தில் வாயில் வருவதை அப்படியே கொட்டிவிடும் அன்ரி. கோபம் மாறியதும் எல்லாம் மறந்து வருவது வளமைதான். ஆனால் அன்ரிக்குத் தன்மகனைவிடவும் என்னில் பாசம். ஏனோ அவவின் அந்தச் சத்தமான குரல் மட்டும் இன்னும் மாறவேயில்லை. அதுதான் எனக்குப் பிடிக்கவில்லை. சித்தப்பாவும் நல்லவர் ஆனால் நாங்கள் செய்யும் எல்லாவற்றுக்கும் அன்ரியுடன்தான் பிரச்சனைப்படுவார், கோபப்பட்டுக் கொதிப்பார். நான் போனால் சிலவேளை என்னால் அவர்களுக்கிடையில் இன்னும் பிரச்சனை வளரலாம் என்பதால்….நான் வரமாட்டன் போங்கோ…! முடிவாகச் சொல்லிவிட்டுப் போனேன். அழுதழுது அன்ரி போனது எனக்கும் அழுகை வந்தது. ஆனால் என்னால் மீளமுடியவில்லை. எனதுலகு வேறாக….எனது பாதை வேறாக…..நான் கொடியவனாக….பார்ப்போர் பயந்து ஓடுமளவிற்கு… நான் பயங்கரமானவனாக….நான் தேடியிருந்த உலகு என்னைத் தன்னிலிருந்து பிரியவிடாமல்…..

இப்போது என்னைச் சுற்றியொரு கூட்டம், எனக்கு எதிராக ஒரு கூட்டம் அது என்னைக் கொன்று விட்டே மறுவேலையென்று அலைகிறது. முதுகில் விழுந்த கொத்து இப்போ என்னால் அதிகம் ஒரேயிடத்தில் இருக்க முடியாது வேதனையாக இருக்கிறது. சண்டை வேண்டாம், எதிராளிகளுடன் சமாதானமாகப் போவோம் சிந்தனையில் மனம் அதிக நேரம் செலவாகும். ஆனால் என்னை எதிர்ப்பவர்களோ என்னைக் கொல்லவே அலைகிறார்கள்.

கோடாலிக் கொத்தில் நான் காயமான அந்தச் சண்டைக்கு எனக்கு ஆறுமாதகாலம் சிறைத்தண்டனையாம். சட்டம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. எனக்கு உதவிக்கு வந்து என்னை உயிருடன் காத்தவர்கள் 4 பேருக்கு 1வருட சிறைதண்டனை.
————————————————————————————————————————————————————-
எனது சிறைக்காலம். இருட்டறையில் 3வாரம்……அந்த நாட்கள் எனது பொழுதுகள் இருளாகவே…. 3வாரம் கழித்து நான் தனியறையில் விடப்படுகிறேன். அங்கிருப்போர் அனைவரும் எனது வயதையொத்தவர்கள். அவர்களும் குற்றம் செய்தவர்கள். ஆனால் வெள்ளையர்களுடன் என்போல் கறுப்புத் தலைகளுகளும் இருந்தன. போதைவஸ்த்திலிருந்து மீளாது பலர் அங்கும் அதனைத் தொடர்ந்து பாவித்துக் கொண்டிருந்தார்கள். இடைக்கிடை சத்தமிட்டுக் கத்துவார்கள், வில்லங்கமாக சீண்டுவார்கள்……எத்தனை நெருப்பாயிருந்த நான் இத்தனை விரைவாய் அமைதியாய்…. ஆச்சரியமாய்த்தானிருந்தது. ஆனால் நான் அமைதியாயே……

சிறைவாழ்வு முடிந்து நான் இப்போ வெளியில்…….இப்போ இரவுகள் எனக்குப் பயங்கரம் மிக்கவையாக…..என் கனவுகள் குருதிவெள்ளத்தில் மிதக்கின்றன….நான் அடித்தவர்கள்,என்னிடம் அடிவாங்கியவர்கள், எல்லோரும் இரவில் என்னைத் தூங்கவிடாமல் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல என்னைக் கொன்று விடுவதாகவும் ஒரு கூட்டம் என்னைச் சுற்றுகிறது. அவர்கள் என்னை விடுவதாயில்லை. ஆனால் நான் அவர்களை நோக்கி இனிக் கத்தியெடுக்கமாட்டேன், போத்தலெடுக்கமாட்டேன், சண்டைக்குப் போகமாட்டேன். என்வரையில் எடுத்துவிட்டேன் முடிவு.

நண்பர்களே…! வாருங்கள் கைகுலுக்கிக் கொள்வோம்,கத்தியும் வேண்டாம்,போத்தலும் வேண்டாம்,அடிதடி வேண்டாம்,ஆயுதம் வேண்டாம்,வன்முறை வேண்டாம்,வாழுவோம் மனிதராக…!வாருங்கள் நண்பர்களே…! இந்த இழிந்த வாழ்விலிருந்து விடுபடுவோம்,எங்களது வாழ்வை சோலைகளாக்குவோம்,சொந்தங்களுக்கு நல்ல உறவுகளாவோம்,நாங்களும் வாழுவோம்……

5வருடங்களின் பின் இன்று நல்லவனாய், மனிதனாய், மனிதத்தை நேசிக்கும் அனைத்து நேசத்துக்காகவும் என்னையே இழக்கத் தயாராக மீண்டுள்ளேன். ஆனால் இந்த மனிதர்கள் யாருக்குமே என்னில் நம்பிக்கையில்லை. நான் மீண்டும் கத்தியெடுப்பேனாம், குடிகாரனாவேனாம் என்கிறார்கள்.

நான் திருந்திவிட்டேன். நான் திருந்திவிட்டேன். ஓ…என் சமூகமே என்னை ஏற்றுக்கொள், நான் உங்களுடன், உங்களின் பிரதிநிதியாக உங்களுடன் வாழவிரும்புகிறேன். இன்று என்னை மனிதனென ஏற்றுக்கொண்ட அக்காவைப்போல் என்னுறவுகளே என்னை நேசியுங்கள். நான் திருந்திவிட்டேன். என்னை மறந்து கத்துகிறேன். அழாதை….நீ….திருந்தீட்டாய்…நான் நம்புறன்…. என் அழுதவிழி துடைத்துச் சொன்ன பெரியக்காவின் வார்த்தைகள் என்னைப் புதியவனாக்கி இவ்வுலகோடு இணைக்கிறது.

எனது நாளேட்டின் பக்கங்கள் என் கடந்த நாட்களின் கண்ணீரால் நிறைகிறது. அந்த நாட்களை எழுதிய என் பேனாவை மூடுகிறேன். நானும் உறங்கப் போகிறேன். எனக்குத் தூக்கம்வருகிறது. இந்த நாளேடு நாளை இன்னொரு இளைஞனை நிச்சயம் மீட்டெடுக்கும் என்ற எனது நம்பிக்கைகளோடு நான் அழுத இரவுகளிலிருந்து மீண்டு உறங்கப் போகிறேன்.

இன்றும் கனவுகள் வரும், கத்திகள் வரும், ரத்தத்தின் நடுவே நான் துடித்துக் கொண்டிருப்பேன், எனது அன்பு அம்மாவும், அப்பாவும்,அக்காமாரும், அன்ரியும் எனக்காக கடவுளிடம் வேண்டுவார்கள். அவனை வாழவிடு கடவுளே….! ஆம் நான் வாழ விரும்புகிறேன். ஓ…சமூகமே என்னையும் ஏற்றுக்கொள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *