நான்காம்முறைப் பயணம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 13,794 
 

ஐந்து லிட்டர் வண்ண டப்பாக்கள் அத்தனையும் இறக்கி முடித்துவிட்டு அடுக்குகளைச் சீர்செய்வதுபோல் ஆசுவாசமாகிக்கொண்டிருந்தேன். பெயின்ட் வாசனை, அனிதா பயன்படுத்தும் பவுடர் வாசனையை நினைவூட்டியது.

வண்டியுடன் வந்த சுமை இறக்குவோர், பைகளை இரண்டு, மூன்றாகத் தலையில் தூக்கிக்கொண்டு மெல்லோட்டம் போட்டுவந்து, மளமளவென்று இறக்கிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இயங்கும் வேகமும் லாகவமும் நாட்டிய பாவம்போல் இருந்தன. அவர்களது மீசை, தலைமுடி, புருவம், கை-கால் முடி… என உடல் எங்கும் சீராக வெள்ளைப் பனித்துகள்கள்போல தூசி படிந்து இருந்தது. உடலில் எங்கு தொட்டாலும் பவுடர். அவர்கள் மீது படிந்திருக்கும் வெள்ளைப்படலத்தைப் பார்க்கையில், ஒரு சின்னப் பையனைப்போல தொட்டு விளையாடத் தோன்றியது. ஒன்று நான் ‘மீரா டிரேடர்ஸ்’ நிர்வாகியாக இருக்கலாம் அல்லது விருப்பப்படி நடந்துகொள்ளும் ஒரு ரசிகனாக இருக்கலாம். ஒரே நேரத்தில் இரண்டுமாக இருப்பது முடியாது!

இந்தக் கடையின் பேரில் ஏன் இன்னும் மீராவை அப்படியே வைத்திருக்கிறேன் என்று அவ்வப்போது தோன்றி, பல முறை ஆடிட்டரிடம் பேசி, அப்புறம் அதைவிட பல முறை மறந்தும்விட்டேன். ஒருவேளை விவாகரத்து பெற்ற மனைவியின் பெயரை கடைக்கு வைத்திருப்பது 40 வயதை எட்டும் வயதில் நெருடலாகத் தோன்றக் கூடாது இல்லையா! அதைப் பொருட்படுத்தாமல் இருந்துவிட வேண்டும்.

நான்காம்முறைப் பயணம்1நான் மட்டும் ஏன் அப்படி இருக்க வேண்டும்? அவர்கள் வீட்டுக்கூடத்தில் உறவுகள் சூழப் பேசி முடிவை நெருங்கும் கட்டத்தில், எங்கள் திருமண போட்டோவின் நடுவில் ஸ்கேல் வைத்து கட்டரைக்கொண்டு ஆழமாகக் கீறி சட்டென்று முறித்து, பிசுறுகள் சிம்புச் சிம்பாகக் குத்திட்டு நிற்க, என் படத்தை மட்டும் தனியாகக் கையில் திணித்த பின்னர், மூன்று வருடங்களுக்குப் பிறகும் என் வியாபாரத்தில் அவள் பெயர் ஏன் நாயகம் செலுத்த வேண்டும்?

இதை மாற்றாமல் இருப்பது என் அசிரத்தையா… சோம்பலா… பெருந்தன்மையா? அல்லது சினிமாவில் சொல்வதுபோல என் நினைவுகளின் எங்கோ ஒரு மூலையில், அவள் இன்னும் அழுத்தமாக ஒட்டிக்கொண்டு இருக்கிறாளா?

அம்மாவுக்கு போன் அடிக்கலாம் என்று தூசி படிந்த போனை எடுத்துத் துடைத்துக்கொண்டு வெளியில் வர, அம்மா பெரிய ஃப்ளாஸ்க்கையும், இன்னொரு கையில் புடைத்த துணிப்பையும் பிடித்தபடி வந்துகொண்டிருந்தாள். அம்மாவின் நடையில் சீர்மை குறைந்துவிட்டது. எவ்வளவு நல்ல செருப்பு வாங்கிக் கொடுத்தாலும் அது சீக்கிரமாகவே வளைந்து, நெளிந்து விசித்திரமாகக் கோணிக்கொள்கிறது. நான் தனிக்கட்டையாக இருப்பதை, அம்மாவால் சகித்துக்கொள்ளவும் முடியவில்லை. அதே சமயத்தில் நிலைமையை எப்படிச் சீராக்குவது என்பதும் தெரியாமல் திணறிக்கொண்டிருந்தார். எதையும் பேசிப் புரிந்துகொள்வதற்கான கூடுதுறையை நாங்கள் இருவரும் கடந்துவிட்டோம். இப்போது அம்மாவிடம் ஏதாவது சொல்ல வேண்டுமே என்று வார்த்தையைத் தேடிக்கொண்டிருக்கும்போது, போன் கிணுகிணுத்தது.

”சார் நீங்க கோ… கோவிந்த்…” என்ற குரலில் 20 வயது நிரம்பாத பையனின் தடுமாற்றமும் தயக்கமும் தெரிந்தன.

”சார் ஒரு நிமிஷம்” போன் கைமாற, ”என்னப்பா கோ” – குரலைக் கேட்டதும் அடர்ந்த ஒரு புதருக்குள் பதுங்கியது போன்ற குளுமையும் கதகதப்பும் ஒரு சேர எழுந்தன. திறந்த புத்தகத்தின் காகிதங்களைக் காற்று விசிறியடிப்பதுபோல, நினைவுகள் ஏற்ற-இறக்கமாகச் சடசடத்துக்கொண்டிருந்தன. என் குரல் எழுவதற்குள் மறுமுனையே தொடர்ந்து பேசியது.

”கோ… ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களோட பேசறேன்ல. என் செல்லுல உங்க நம்பர் வேற இல்லையா… எப்பிடி இருக்கீங்க?”

கனமான ஒரு மூடியைத் திறப்பதுபோல நாக்கைச் சிரமப்பட்டுப் புரட்டிக்கொண்டிருந்தேன்.

மீண்டும் எதிர்முனையே, ”கோ… அப்பா இறந்துட்டாரு. உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட்” – அந்தக் குரலில் சோகம், துக்கம், படபடப்பு எதுவும் இல்லை. பச்சை மூங்கில் பிரம்புபோல திண்ணென்று ஒலிக்கும் குரல். அனிதாவின் குரல் எப்போதும் ஒரே மாதிரியாகவே ஒலிக்கும். இப்போது சொன்ன செய்தியில் அதிர்ச்சியடைவதற்குப் பதிலாக அந்தக் குரலையே ரசித்து அசைபோட்டுக்கொண்டே இருந்துவிட்டேன் சில விநாடிகள்.

”ஹலோ… கோ. என்னப்பா..? சார்… நீங்க கோவிந்த்தானே? நான் பேசுறது கேட்குதா?”

”ஹலோ… ஹலோ… சொல்லுங்க. நான் கோவிந்த் பேசுறேன்!”

”ஹ்ம்ம்… ரெண்டரை மாசமா அப்பா தருமபுரி ஜி.ஹெச்ல இருந்தாரு. நீகூட வந்து பார்த்துட்டுப் போனியாமே… நேத்து சாயந்தரம் இறந்துட்டாரு!”

”என்னப்பா இது? தேறிடுவார்னுல்ல நினைச்சேன்!”

”ப்ச்… நாம நெனச்சி என்ன பண்றது? அவ்வளவுதான். சரி… கோ, நீங்க வர்றீங்களா? நான் கேட்கிறது சரியா, தப்பானு தெரியாது. இருந்தாலும் நீங்க வந்தா நல்லாருக்கும்!”

”ஏன் அப்பிடிப் பேசுற அனீ. கண்டிப்பா வர்றேன்!”

”இல்ல கோ. என் மேல நீ ஊமைக்கோவம் வெச்சிருக்கலாம். அது சரிதான். ஆனா, இப்போ என் பக்கத்துல நீங்க இருக்கணும்போல தோணுது… ப்ளீஸ்! மெதுவாத்தான் எடுப்போம்னு நினைச்சி, லேட் பண்ணிடப்போறீங்க. பாடி காலையிலயே தருமபுரியில இருந்து பாப்பாம்பாடிக்கு வந்துடுச்சி. வெளியில இருந்து யாரும் வரவேண்டியது இல்லை. நீங்க வந்ததும் எடுக்கச் சொல்லிடலாம்னு இருக்கேன். பெரியப்பா, மாமா எல்லாம் அவசரப்படுறாங்க. என்னால உங்களைக் காட்டி லேட் பண்ண முடியாது. ஆனா, நீங்க பார்க்காம எடுக்க வேணாம்னு தோணுது. ப்ளீஸ்ப்பா… சீக்கிரம் வர்றீங்களா? அப்பாவுக்காக இல்லைனாலும் எனக்காக…” – மாற்றம் காண முடியாத குரல் லேசாகக் கம்மியது. அதற்குக் காரணம் துக்கமா?

”உடனே வர்றேன். ஊர் முன்னாடியே இருக்கிற சர்ச்சுக்குத்தானே?”

”இல்ல, நேரா வீட்டுக்கே வந்துடுப்பா… ப்ளீஸ். என்னைச் சுத்தி நிறையப் பேரு இருக்காங்க. ஆனா, இந்த நேரத்துல நீங்க என்கூட இருக்கணும்போல தோணுது!”

இன்றும் நாளையும் கடையில் விற்பனை கொஞ்சம் நன்றாகவே இருக்கும். பணம் வசூல் ஆகவேண்டி இருக்கிறது. ஆனால், ஈர மண்ணை மிதிப்பதுபோல, ஒருவிதமாக ‘ப்ளீஸ்’ என்று அனிதா அழுத்துகிறாளே. ஓர் உயிரை இழந்து வெறுமையாக நிற்பது முக்கியமான ஒரு தருணம்தான். என் முகத்தில் அம்மா ஏதாவது கண்டுபிடித்திருப்பார் போலும்.

”என்னப்பா?”

விவரம் சொன்னேன். அம்மாவிடம் எந்தச் சலனமும் இல்லை. இப்போதெல்லாம் எனக்கு ஆதரவாக அம்மாவிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது என்றாகிவிட்டது. எனக்கு விருப்பமான உணவைக்கூட செய்து தருமாறு நான் அவரிடம் கேட்பது இல்லை.

சாப்பிடாமலே வண்டி ஓட்டுவது ஏதோ பறக்கிற உல்லாசத்தைத் தருகிறது. பிற்பகல் வெயிலும் உரத்து அடிக்கவில்லை. நான் தேன்கனிக்கோட்டையை நெருங்கிக்கொண்டி ருந்தபோது போன் அடித்தது. அது அனிதாவாகத்தான் இருக்கும் என்று நம்பரைப் பார்க்காமலே, ”இதோ இன்னும் ஒரு 35, 40 நிமிஷத்துல அங்க வந்துடுவேன்” என்றேன்.

”அதுக்கு இல்லை… மெதுவா வாங்க. ஒரு மாலை வாங்கிக்கங்க. அதுக்காகத்தான். ஏன்னா…” குரலின் ஸ்ருதி இறங்கியது.

”இல்லைல்ல… கண்டிப்பா வாங்கிடுறேன். நல்லவேளை சொன்ன. இங்க தேன்கனிக் கோட்டையிலேயே வாங்கிடுறேன்!”

”தெரியும். அதுக்காகத்தான் சொன்னேன்!”- அனிதாவால்தான் இப்படித் துல்லியமாகக் கணக்கிட முடியும். அவள் வழக்கமாகச் சிரிக்கும் சிரிப்பை அழுத்தாமல் சிரித்தாள். அப்போது இருக்கும் சோகச் சூழலையும் மீறி அவளிடம் இருந்து அந்தச் சிரிப்புக்கு ஏங்கினேன். நேரிலும் சரி, போனிலும் சரி நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் 10 முறையேனும் அப்படிச் சிரிப்பதற்கு அவளுக்குக் காரணம் கிடைத்துக்கொண்டே இருக்கும். இப்படிச் சிரிக்கத் தெரிந்த ஒருத்திக்கு மண வாழ்க்கை எப்படித் தோற்றுப்போனது? அல்லது தோல்வி கற்றுக்கொடுத்த பாடமா அந்தச் சிரிப்பு?

அனிதா நிறையப் பேருடன் பழகினாலும், மற்றவர்களிடம் அவள் அப்படிச் சிரிக்க மாட்டாள் என்பது என் நம்பிக்கை. அல்லது அப்படிச் சிரிக்கக் கூடாது என்று எனக்கு ஒரு முரட்டு ஆசை.

நான்காம்முறைப் பயணம்2அனிதா சார்ந்த எல்லாமே நேர்த்தியாக இருந்தன. அவள் நடவடிக்கை, பேச்சு, தோரணை, உடை, உடல்மொழி, சமயோசிதம், அவள் ஓசூரில் தனித்துத் தங்கியிருந்த அறை எல்லாமே. ஆனாலும், அம்மாவுக்கு அனிதாவைப் பிடிக்காமல் போய்விட்டது. அதற்கு தெளிவான எந்தக் காரணமும் இல்லை. எனக்கும் அனிதாவுக்கும் அம்மாவை மீறுகிற துணிச்சல் ஏன் இல்லாமல்போனது?

தன்னை அம்மாவுக்குப் பிடித்தமானவளாகக் காட்ட அனிதாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அம்மா முதுகு வலியால் மருத்துவமனையில் இருந்தபோது அதைச் சாக்கிட்டு அம்மாவின் மனதை இளக்கிவிட வேண்டும் என்று அனிதா விடுப்பு எடுத்துக்கொண்டு கூடவே இருந்து கவனித்தாள். என் குடும்பத்தைச் சேர்ந்த எல்லோருக்குள்ளும் அனிதாவுக்கான இடம் உருவாகிவிட்டது. ஆனால், அம்மாவிடம் மட்டும் எதிர்பார்த்த மாற்றம் இல்லை. அதற்காக நான் வருந்திப் பேசிக்கொண்டிருக்கும்போது, அவள் மீண்டும் மீண்டும் பேச்சை வேறு பக்கம் திருப்பிக்கொண்டே இருந்தாள். உரிமையோடு என் ஒரு கையைப் பிடித்து கீழ்நோக்கி இழுத்து இரண்டு, மூன்று நாட்கள் முடி குத்திட்டு நிற்கும் என் முகத்தை ஒரு கேமராக்காரனைப் போல திருப்பி, ‘இங்க பாருப்பா… இந்தப் புல்லுலதானே வந்தவாசி, பத்தமடையில எல்லாம் பாய் பின்றாங்க’ என்று மருத்துவமனைச் சுவற்றை ஒட்டி ஜிவுஜிவென்று நான்கடி உயரத்துக்கு வளர்ந்து நிற்கும் புற்களைக் காட்டிக் கேட்டாள்.

தான் அடைந்த ஏமாற்றம் எனக்குத் தெரிந்துவிடக் கூடாது என்று நினைக்கிறாளா? அல்லது நான் வருந்த வேண்டாம் என்று நினைக்கிறாளா? இது தந்திரமா… அன்புடன்கூடிய அக்கறையா? என்னால் தீர்மானிக்க முடியவில்லை. என்னிலும் 12 வயது குறைவான அவள் இதையெல்லாம் எப்படிச் சீக்கிரமாகவே கற்றுக்கொண்டாள்.

என்னைத் தொட்டதுபோலவே இயல்பாக அவளது நாடியைத் தொட்டுத் திருப்ப முயன்றேன். விரல்களின் நடுக்கம் என்னுடைய தொடுதல் ஆசையைக் காட்டிக்கொடுத்துவிட்டது போலும். பழைய எல்.பி பிளேயரில் ரிக்கார்டில் இருந்து முள் கொண்டையை அவசரமாகவும் லாகவமாகவும் எடுத்து ஸ்டாண்டில் வைப்பதுபோல, அவள் நாடியைப் பிடித்த என் விரல்களை நீக்கினாள்.

நாங்கள் அடிக்கடி, கிட்டத்தட்ட தினமும் சந்தித்துக்கொண்ட எட்டு மாதங்களில் அவள்தான் தனக்குத் தோன்றும்போது என்னைத் தொடுவாளே தவிர, எந்தச் சந்தர்ப்பத்திலும் அவளைத் தீண்ட எனக்கு வாய்ப்பு அளித்ததே இல்லை. அவளுக்கு ஆண் தொடுகையின் கூச்சம் என்று சொல்ல முடியாது. எந்தத் தனிமையிலும் நான் தொடுவதற்கு வாய்க்கவில்லை. இறுதியில் என்னுடைய ஏமாற்றம்தான், கம்பீரம் போன்ற வீறாப்பாக மிஞ்சியது.

சாவு வீட்டில் முன்னாள் காதலியும், இந்நாள் ‘வெறும் தோழி’யுமான அனிதாவை எப்படி எதிர்கொள்வது என்ற சிந்தனையிலேயே, பைக்கை பழகிய பாதையில், பழக்கிய வீட்டு மிருகம்போல செலுத்திக்கொண்டிருந் தேன்.

அவர்களது வீட்டார்களில் அனிதாவின் அப்பாவுக்கு என்னை மிகவும் பிடித்திருந்தது. அவருக்கு எங்களைப் பிடித்திருந்ததால், நாங்கள் இருவரும் பார்த்துக்கொள்ளும்போது எல்லாம் குவார்ட்டருக்குக் காசு கொடுத்தேனா அல்லது நான் காசு கொடுத்துவிடக்கூடியவன் என்று அறிந்து என்னைப் பிடித்தவராக மாற்றிக்கொண்டாரோ தெரியவில்லை. நான் அவருக்குக் காசு கொடுத்தது தெரியவரும்போது எல்லாம், மெய்யான ஆத்திரத்தில் என்னைக் கடிந்து பேசுவாள் அனிதா.

தன் கணவனாகிய தாய்மாமனிடம் இருந்து அனிதா பிரிந்துவிட்ட பின்னர், அவளுடன் பழகிய ஓரிரு ஆட்கள் திருமணத்துக்கு உடன்படாததில் அவர் விரக்தியுற்றதாகச் சொல்லித் தொடர்ந்து குடித்துக்கொண்டிருந்தார்.

‘என்னோட எதிர்காலத்தைப் பத்தி எனக்கு இல்லாத அக்கறை இவருக்கு என்னப்பா?’ என்று வெள்ளைப் பற்கள் தெரிய சிரிப்பாள் அனீ. ‘எனக்கு எது சரினுபடுதோ, அதைத்தான் செய்ய முடியும். அவங்களுக்காக ஒரு முறை நான் ஏமாந்தது போதும். எனக்காக இன்னொரு முறை ஏமாந்து பார்க்கணுமா என்ன?’ என்று என்னிடம் கேட்டாள்.

அனிதாவின் பெரியப்பா, அத்தை என பலருக்கும் என்னைப் பிடிக்கவில்லை. தட்டிக்கழிப்பதற்காகவோ என்னவோ ஏதேதோ காரணம் சொல்லி, அவள் பெயருக்கு ஐந்து லட்சம் டெபாசிட் செய்யச் சொன்னார்கள். என் கடையின் பெயரில் ‘மீரா’ என்று இருந்ததை திருமணப் பேச்சுவார்த்தையில் முக்கியமான விவகாரம் ஆக்கினார்கள்.

இத்தனைக்கும் அவர்கள் அனைவரையும் கார் வைத்து அழைத்துச் சென்று பெங்களூரில் ‘ஆப்த மித்ரா’ பார்க்கவைத்தேன். அப்படியெல்லாம் செலவு செய்யக்கூடியவனே அல்ல நான். ஆனால், எதுவுமே பலன் அளிக்கவில்லை. அவர்கள் வீட்டு ஆட்களுக்கு என்னைப் பிடிக்காமல் போனதுதான், நாங்கள் இருவரும் இணையாததற்கான காரணமா? என்னுடன் பேசுவது பழகுவதே போதும் என்று, என்னுடன் சேர்ந்து வாழ்கிற அக்கறை இல்லாமல் இருந்துவிட்டாளோ என்றுகூடத் தோன்றும் எனக்கு.

பாப்பாம்பாடிக்கு நான் வருவது இது நான்காவது முறை. மலைகளின் நீண்ட நிழல்கள், அந்த ஊருக்கு நீட்டிய ஆதரவுக்கரம்போல இருக்கும். ஊருக்குள் இருந்து பலவீனமான பறை, ஒத்தைக்கொட்டு, சங்கு… என அனைத்தும் கலந்த ஓசை எந்த முனைப்பும் இல்லாமல் ஊர்ந்து வந்தது. நான் அறியாமலே வண்டி வேகம் பிடித்தது. பால் சொசைட்டி வளைவில் மனிதத் தலைகள் தெரிந்தன.

வண்டியை நிறுத்தி மாலை பண்டலைப் பிரித்துக்கொண்டே சவ ஊர்வலக் கூட்டத்தில் கலந்தேன். நான் அந்நியன் என்ற பார்வை என் மீது விழவில்லை. நான் அணிந்துகொண்டிருந்த துக்கம் அவசியமற்று இருந்தது. யார் முகத்திலும் துக்கம், பரபரப்பு எதுவும் இல்லாமல் இருந்தது. அனிதாவின் பெரியப்பா பையன் பாஸ்கரன், எல்லாருக்கும் முன் கழுத்தில் மாலையோடும் மார்பில் பூணூலோடும் சென்றுகொண் டிருந்தான். சட்டை இல்லாத அவன் மார்பும் தோளும் அவனுடைய நிறமாக இல்லாமல் தனி வெளுப்பில் இருந்தன. அவனுடைய அப்பா என்னை வரவேற்பதுபோல் லேசாகத் தலை அசைத்தார். ‘நீ இன்னும் எங்களோட உறவில்தான் இருக்கியா?’ என்ற கேள்வி அவர் பார்வையில் நின்றது. நான் அவருடன் இணைவதுபோல இணைந்து பின்னால் வரும் பெண்கள் கூட்டத்தில் அனிதாவைத் தேடினேன்.

சவ முகத்தை எட்டிக்கூடப் பார்க்கும் முனைப்பு இல்லாமல் நிதானமாக பெண்கள் கூட்டம் இருக்கும் பகுதிக்குப் பின்னடைந்தேன். ஆண்கள் சிலர் அதில் இருந்ததில் ஓர் ஆறுதல். மிக மெல்லிய திரைபோல வெயில் இறங்கியது. அனிதா, ஒரு பையனின் தோளில் தட்டி ஒற்றை விரலைக் காட்டி அவள் வழக்கமாகச் சொல்லும், ‘கொன்னுருவேன்’ என்பதைச் சத்தம் வராமல் சொன்னாள். அவளுக்குப் பக்கத்தில் அவளுடைய அம்மாவும் வந்துகொண்டிருந்தார். சோகமற்ற முகத்தில் என்னை வரவேற்கும் விதமாக லேசாகத் தலையைக் குலுக்கினாள்.

அனிதா என்னை நெருங்கி வந்து, ”வாங்கப்பா… இப்போதான் வர்றீங்களா? இருட்டுறதுக்குள்ள எல்லா சடங்கையும் முடிச்சிடணுமாம். அதான் கொஞ்சம் முன்னாடியே எடுத்திட்டோம்” என்றாள்.

நான் அமைதியாகத் தலை குனிந்து நடந்தேன். இப்போது ஊர்வலம் சாலையைவிட்டு இறங்கி புழுதித் தரையில் சென்றது. சிறிது தூரத்திலேயே சுடுகாடு வந்துவிட்டது. அடர்ந்த மாந்தோப்பு, இருட்டிவிட்டதுபோல இருந்தது. பாடையை இறக்கியதும் அவசரமாகச் சென்று மாலையைப் போட்டேன்.

தோண்டிவைத்திருந்த குழி ஆழமாகவும் பயமூட்டும்படி கறுப்பாகவும் இருந்தது. பாடையை வைத்துவிட்டுச் செய்யவேண்டிய சடங்குகளைச் செய்துகொண்டிருந்தார்கள். அனிதாவின் பெரியப்பா அநாவசியத்துக்கு சவுண்டு விட்டுக்கொண்டிருந்தார். கன்னம், பல், பேச்சு, தோரணை, நிறம்… இப்படி தன் பெரியப்பாவை நிறையவே பிரதிபலித்தாள் அனிதா.

சில நிமிடங்களுக்குப் பிறகு, பாடையை நெருங்கி வந்தாள் அனிதா. அப்பாவின் முகத்தைப் பார்க்கும் தீவிரத்தில் கீழே கவனிக்காததால் மண் கட்டியில் கால் வைத்துச் சரிந்து விழ இருந்தவள், என் தோளைப் பிடித்துக்கொண்டாள். ஒரு பறவை தன் இரையைப் பார்ப்பதுபோல அப்பாவின் முகத்தையே கூர்ந்து பார்க்க, அவளது முகம் ஒரு ஜடப்பொருளைப்போல மாறியது. இந்த முகம் இப்படியும் ஆகுமா என்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. என் தோளைப் பிடித்திருந்த விரல்கள் சூடேறியதுபோல தோன்றியது. அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

நரைத்த லேசான தாடியோடு மேல் சட்டை இல்லாத ஒரு பெரியவர், தலையில் கட்டிய துண்டோடு மூச்சிரைத்தபடி அனைவரையும் வேலை ஏவிக்கொண்டிருந்தார். ”ஏய்… வெலாவுல வெடிச்சதுகளே தூரமாப் போங்கடா. ஏம்பா பெரியாளுங்க… மண்ணுல போட்டுட்டு அதுக்கு மேல உப்புப் போட்டு நெரவுங்க. எங்கடா அவன்… ராஜகுமாரி பேரன்? வாடா இங்க. மண்ணும் உப்பும் போட்ட பின்னாடி குழிக்குள்ள எறங்கி நெரவிவிடுறா. அந்த மோளச் சத்தத்தை நிறுத்துங்கடா. அடிக்கணுங்கிறப்ப அடிக்க மாட்டானுங்க. கூடாதுங்கிறப்ப அடிச்சுக் கௌப்புறானுங்க. ஹ்ம்ம்… நாம் போனதுக்கு அப்புறம் எவன் இருக்கானோ இந்த ஊர்ல. இதெல்லாம் செய்யுறதுக்கு..?” என்று வாயைக் குவித்து நெருப்புக்குப் புகை ஊதுவதுபோல ஊதினார்.

அந்தப் பெரியவர் பாடைக்குப் பக்கமாக வந்து நின்று, ”மாலை எல்லாம் எடுங்கப்பா… இருட்டிட்டு வருது. எவனாவது சுருக்குனு இருக்கிங்களா? மொகத்தைப் பார்க்கிறவங்க சீக்கிரமாப் பார்த்துக்கங்க” என்றபடி, பிணத்தின் மணிக்கட்டையும் விரல்களையும் தடவிப் பார்த்தார். என் அருகில் நின்ற அனிதாவிடம் ”எங்கம்மா அம்மா? அப்பன் அர்ணாக்கொடி கட்டியிருக்கானா?” என்றபடி பிணத்தின் வேட்டிக்குள்ளே கையை விட்டுத் துழாவினார்.

அனிதா கண்களை அகல விரித்து ”இல்லே” என்றாள். அவள் முகத்தில் இருந்த இறுக்கம் சற்று இளகி இருந்தது. பிணத்தின் தலையில் ஆதரவாகக் கைகளைக் குவித்துவைத்துக்கொண்டு, ”இப்போ எறக்கி மண்ணு போட்டுடுவாங்கல?” என்றாள். அவள் கேட்ட பின்னர் அங்கே கனத்த மௌனம் உருவானது. குழிக்குள் மண் கட்டிகளை மண்வெட்டிக் கணையால் தட்டுகிற சத்தம் மட்டும் கேட்டது. தூரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மேளக்காரர்கள்கூட சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டு குழிப் பக்கமாகப் பார்த்தனர்.

அனிதாவின் பெரியம்மா வந்து அனிதாவை ஆதரவாகப் பிடித்துக்கொண்டார்கள். ”பார்த்தியா கோ… ஒரே மகளை நினைச்சு வருத்தப்பட்டுட்டே இருந்த ஆளு, நிம்மதியா கண்ணை மூடிட்டாரு” என்றாள். எல்லோரும் என்னையே பார்த்தார்கள். அவள் முகம் விகாரம் ஆனது.

”அம்மா… இந்தப் பிள்ளையப் பிடிங்க. டேய் வயசுப் பசங்க நாலு பேரு உடம்பைப் பதமாப் பிடிச்சு குழிக்குள்ள எறக்குங்க” என்று குரல் கொடுத்தார் பெரியவர்.

பாடையில் இருந்த வெள்ளைத் துணியோடு உடலை ஐந்தாறு பேர் தூக்கி உள்ளே இறக்க, ஓர் ஆள் குழிக்குள் கால் பக்கம் இறங்கினான். பிணத்தை வானம் பார்க்கக் கிடத்திவைத்தனர்.

”மண்ணத் தள்ளுங்கப்பா” என்றதும் ஐந்தாறு மண்வெட்டிகள் சரசரவென்று மண்ணை இழுத்து உள்ளே தள்ளின.

”அய்யோ மெதுவாத் தள்ளுங்க. அய்யோ… அப்பா பாவம். மெதுவாத் தள்ளுங்க” என்று உரத்துக் குரல் கொடுத்தபடி, தன்னைப் பிடித்திருந்த கைகளை விலக்கிவிட்டு குழியை நோக்கி ஓட முயன்றாள் அனிதா.

”அம்மா பொம்பளங்க என்ன பண்றீங்க? கூட்டிட்டுப் போங்கம்மா வீட்டுக்கு. டேய் நின்னுட்டு வேடிக்கை பார்க்குறானுக பாரு. தள்றா மண்ண…” என்றதும் மீண்டும் அனிதா, ”அய்யோ வேண்டாம். உடம்பு எல்லாம் வலிக்குதே. மண்ணை என் மேல போடுற மாதிரி இருக்கே… வலிக்குதே!” என்று சீர் இல்லாமல் குரல்கொடுத்து உடலை முறுக்கிக்கொண்டு திரும்ப, உறவுக்காரப் பெண்கள் அவளைப் பின்னுக்கு இழுத்தனர்.

”கோ… நீங்க வாங்கி மெதுவாத் தள்ளுங்க ப்ளீஸ். அவங்க முரட்டு ஆளுங்க சொன்னாக் கேக்க மாட்டாங்க” என்று என்னைப் பார்த்துக் கூவினாள். மொத்தக் கூட்டமும் என்னைப் பார்த்தது. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் குழிப் பக்கம் திரும்பிப் பார்த்தேன். அனிதாவின் பெரியப்பா, ”கோயிந்து வாங்க போகலாம். இதை வெச்சிட்டு அர்ச்சனையா பண்ண முடியும்” என்றபடி என் கையைப் பிடித்து நடந்தார்.

அவரது விரல்கள் மெத்தென்று இருந்தாலும் பிடி இறுக்கமாக இருந்தது. அனிதாவின் முதுகில் இரண்டு கைகள் ஆதரவாகப் பிடித்திருக்க, அவளது கால்கள் நகர மறுப்பதாக எனக்குத் தோன்றியது. என்னைப் பிடித்திருந்த பிடியை விடுவிக்க முயன்றேன். அனிதாவுக்குத் தட்டிக்கொடுத்து ஆறுதல் சொல்ல வேண்டும்போல் இருந்தது!

– ஆகஸ்ட் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *