“டேய் ! கசுமாலம் ! எந்திரிடா ! மவனே இன்னிக்கு எங்கையாலதான் உனக்கு சாவு ! செய்யறதெல்லாம் அக்குறும்பு !”
எட்டி ஒரு உதை விட்டான் முத்து …..
“ஐயோ …. அம்மா .. அம்மா …”
ஐந்து வயது பாலாஜி மிரண்டு போய் எழுந்து நின்றான் ….
“என்னய்யா நினப்பு ?? மப்புல குழந்தை கூட கண்ணுக்கு தெரியலயா ? என்ன அடிக்கிற மாதிரி அதும்மேல கைய வச்ச சோறு திங்க கை இருக்காது சொல்லிப்புட்டேன் !
புள்ளயத்தான் தொடாம இருந்த ! இரண்டு பேரையும் கொன்னு போட்டுடு ….
பாய்ந்து வந்து அவனை அப்படியே தள்ளிவிட்டாள் வள்ளி !!!
“நிறுத்தும்மே…… இவனெல்லாம் ஒரு பிள்ள !! டேய் ! மவனே ! எங்கடா வச்ச காச ??”
பாலாஜி அம்மாவை கட்டிப் பிடித்துக் கொண்டான் ! தூக்க கலக்கத்தில் ஒன்றும் புரியாமல் மிரள மிரள முழித்தான் !!
“ஏய்யா ?? நீயெல்லாம் மனுச சென்மமா? பிள்ளய எட்டி உதக்கிற காலு வெளங்காம போயிரும் ….
என்னய்யா ..என்னமோ காசு கீசுன்னு பினாத்துற ?? …
கொஞ்சம் அடங்கினான் முத்து ….
“வள்ளி ! ஒரு டப்பியில காசு போட்டு வெளயாட குடுத்தேனில்ல ! அதக் காணமா போக்கிட்டானே உம்பிள்ள .!!”
“ஏய்யா ! நீதானே அத வச்சு வெளயாடிக்கோன்னு குடுத்த ! அது வெளிநாட்டு காசு , இங்க செல்லாதுன்னு சொன்னியே !”
“சொன்னேந்தான்! ஆனா காணாமடிப்பான்னு கண்டேனா ! வள்ளி !! நீ நம்ப மாட்ட ! உக்காரு .. உனக்கு விலாவாரியா சொன்னாதான் புரியும் ….”
***
வள்ளியும் முத்துவும் காதலித்து கல்யாணம் பண்ணிக்கொண்டவர்கள்தான் !
வள்ளி பத்தாவது வரை படித்தவள் . நாலு தம்பி தங்கைகளுடன் பிறந்தவள் .முத்து பார்க்க ஆள் வாட்டசாட்டமாய் சினிமா நாயகன் மாதிரி கவர்ச்சியான தோற்றம் ! படிப்பு வாசனை அறியாதவன் !
ஆனால் வாய் சவடால் ! பேசியே ஆளைக் கவுக்கும் கலை கைவந்தவன்! அவனுடைய பேச்சில் மயங்கியவள்தான் !
வள்ளி மேல் உயிரையே வைத்திருக்கிறான்! ஆனால் உள்ளே ஒரு வாய் சரக்கு போனால் அவன் முத்துவாயிருக்கமாட்டான் ……
கல்யாணம் ஆகி சரியாக பத்து மாசத்தில் பாலாஜி பிறந்தான் ! வள்ளி சத்துணவு கூடத்தில் வேலை பார்க்கிறாள் !
பாலாஜியை கூடவே கூட்டிக்கொண்டு போவது சௌகரியமாய் இருந்தது .
முத்துவுக்குத்தான் வேலை என்று நிரந்தரமாய் ஒன்றுமில்லை ! ஆனாலும் வாரம் எப்படியும் அறுநூறு எழுநூறு சம்பாதித்து விடுவான் .
முத்துவும் வள்ளியும் சந்தித்தே ஒரு ருசிகரமான சம்பவம் தான் !!
மகாபலிபுரம் அருகே இருக்கும் கோவளம் சுற்றுலா பயணிகளின் சொர்க்கம்… அங்கே ‘ Fishermen’s Cove…’ வெளிநாட்டு பயணிகள் அதிகமாகத் தங்கும் விடுதி !
அதற்கு பக்கத்தில் பெரியார் குப்பம் !
அங்கே ஆண்டாளம்மாவைத் தெரியாதவர்களே இருக்க முடியாது ! மிளகாபஜ்ஜி ஆண்டாள் என்றாலே நாக்கில் காரம் ஏறும் !
நாலு மணிக்கே வண்டியைத் தள்ளிக் கொண்டு பீச்சருகே நிறுத்தி விட்டுப் போய்விடுவான் மகேசு ! மூத்த மகன் !
பஜ்ஜி மிளகாய் , உப்பு , கடலைமாவு , கத்தி சகிதம் அம்மாவுக்குத் துணையாக வள்ளி ! எல்லோரையும் விட சுருசுருப்பு வள்ளிதான் !
எல்லாம் ரெடி பண்ணி டாண் என்று அஞ்சு மணிக்கு சுடச்சுட மிளகாய் பஜ்ஜி தயார் !
ஆறரை மணிக்கு போனால் ஒரு பஜ்ஜி இருக்காது ! கல்லா பெட்டியை பூட்டி அம்மாவும் பெண்ணும் கையில் காசுடன் திரும்பினதும் வள்ளி புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்து விடுவாள் !
தாஜ் ஹோட்டலுக்கு வரும் அநேக வெளி நாட்டு பயணிகள் ஆண்டாளின் பஜ்ஜிக்கு அடிமை !
ஸ்…ஸ் … என்று நாப்கினால் மூக்கை உறிஞ்சியபடி நாலு பஜ்ஜிக்குக் குறையாமல் தின்று விடுவார்கள் !
ஆண்டாளம்மாள் கடைக்கு வரும் கூட்டத்துக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது !!
ரொம்ப சுத்தம் ……
நல்ல பீங்கான் தட்டுகள்., அதன் மேல் டிஷ்யூ , கை துடைக்க பேப்பர் நாப்கின் , ஒரு பக்கெட்டில் நல்ல தண்ணீர் , என்று கெட்டப்பே அசத்தலாயிருக்கும்!!!……
வள்ளி முத்துவை ஒன்றிரண்டு தடவை அங்கு பார்த்திருக்கிறாள் !
சில வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பின்னால் அலைந்து கொண்டிருப்பான் !
பார்த்தால் ரொம்ப படித்தவன் போல் ஏதோ பேசிக் கொண்டிருப்பான் ………!
ஒரு நாள் இரண்டு வெளிநாட்டு பயணிகளை அவளுடைய கடைக்கு கூட்டி வந்தான் !
“திஸ் சில்லி பஜ்ஜி.. ஹாட்..நைஸ்..
ஒரு மிளகாயை எடுத்து காண்பித்தான்!
“லுக்… லாங் சில்லி..! கட். ! புட் இன் ..யெல்லோ மிக்ஸ்…! புட் இன் எண்ணெய்… அவுட்..! வெரி குட் ஈட்.. !!”
அதற்குள் அவர்கள் ‘ what’s this yellow mixture ?’ என்றதும் முத்து உளற ஆரம்பித்தான்…..!!!
“திஸ்..யெல்லோ பருப்பு. ! கிரைண்ட்…. புட் வாட்டர்…….”
அதற்குள் வள்ளி முந்திக்கொண்டு,
“First take long chilli! Wash! Keep besan flour mix ! Dip it in that , put in oil and fry nicely “என்றாளே பார்க்கலாம்…..
முத்துஅசந்து விட்டான் !
“ஆண்டாளம்மா ! நல்லதா நாலு பஜ்ஜி போட்டுக் கொடு ! காரம் போடாத ! …….”
அடிக்கடி நிறைய பேரைக் கூட்டிக்கொண்டு வர ஆரம்பித்தான் ! வள்ளியும் அவனும் மனதார நெருங்கி் விட்டார்கள் !
வீட்டுக்கும் வர ஆரம்பித்தான் !
மகாபலிபுரத்துக்கு அவர்களை சுற்றுலா கொண்டு போய் கட்டுமரத்திலிருந்து நடுக்கடலில் குதித்து போட்டிங் , ஸ்விம்மிங் , ஸ்னோர்க்ளிங் , என்று அசத்தி விடுவான் ! கையில் காசு புரளும் !
அதைத் தவிர வெளிநாட்டு சென்ட் , t-ஷர்ட் , கடிகாரம் , நாணயங்கள், ஷேவிங் க்ரீம்…
என்னென்னமோ சாதனங்கள் !
ஆண்டாள் தீர்மானம் பண்ணி விட்டாள் ! வள்ளிக்கு இவன்தான் ! முத்துவுக்கு ஒரு பாட்டி மட்டும் தான் !
ஆரம்பத்தில் நன்றாகவே இருந்தார்கள் ! பாலாஜி பிறந்தபின் வருமானம் போதவில்லை !
வள்ளி வேலைக்கு போக ஆரம்பித்ததும் தான் முத்துவுக்குள் இருந்த அரக்கன் எட்டிப் பார்க்கத் தொடங்கினான் !
“பெரிய படிப்பு படிச்சவ ! என்னக் கண்டா ஒனக்கு இளக்காரமா போச்சில்ல …..”
“நீ இல்லாம சோறு பொங்காதுங்கற திமிருதானேடி …….”
“எதுத்தாடி பேசற ! வெளியே போடி …”
இது வாடிக்கையாகிப்போனது!
சுற்றுலா பயணிகள் வரும்போது இவனுக்கும் நிறைய சரக்கு கிடைத்தது ! நிறைய குடிக்க ஆரம்பித்தான் !
ஆனால் பாலாஜி மேல் உயிர்! குழந்தைக்கு எதுவும் வாங்காமல் வரமாட்டான் !
வள்ளிக்கு அவன் குணம் பிடிபட்டு விட்டதால் அனாவசிய சண்டை இருக்காது ! ஆனாலும் திருப்பிக் குடுத்து விடுவாள் !!
நிறைய வெளிநாட்டு நாணயங்கள் முத்துவுக்கு கிடைத்தது !
அதையெல்லாம் பாலாஜிக்கு கொண்டு தருவான் ! பாலாஜி அதை புதையல் காக்கும் பூதம் மாதிரி பாதுகாப்பாய் வைத்திருப்பான் !
மெல்லிய காகிதத்தின் அடியில் வைத்து அச்சாக பென்சிலில் வரைய வள்ளி சொல்லிக் கொடுத்திருந்தாள் ! அதற்கென்றே ஒரு நோட்டுப் புத்தகம் வாங்கிக் கொடுத்திருக்கிறாள் !!
அது முத்துவுக்கு இவ்வளவு பெரிய அதிர்ஷ்டத்தை தேடித் தரப்போகிறது என்று முத்து கனவிலும் நினைக்கவில்லை,…….. !!!!
“வள்ளி ! உக்காரு சொல்றேன் ! நம்ப தம்பி ஸாரு இருக்காரில்ல ! அவரு போனவாரம் ஒரு வேலையிருக்குன்னு வரச் சொன்னாரு !
ஒரு அட்ரஸ் தரேன் ! போய்ப் பாருன்னு சொல்லியிருந்தாரு !
நம்ப பய நோட்டில இருந்து ஒரு பேப்பர கிழிச்சிட்டு போனேன் !
அட்ரஸ் எழுதிட்டு பேப்பரத் திருப்பி பாத்தாரு! ”
“இது யாரு வரஞ்சது ?? வெளி நாட்டு பைசா மாதிரி இருக்குதே !!”
“எம்மவந்தான் ஸார்! நான் குடுக்கிற பைசாவெல்லாம் சேத்து வைப்பான் ! பொழுதன்னிக்கும் அத அச்செடுக்கிற வேலைதான் ஸார் !!”
***
தம்பிதுரை நிறைய படித்தவர் ! உதவி என்று போனால் வெறுங்கையுடன் அனுப்ப மாட்டார் ! முத்து மேல் தனி பிரியம் !
பேப்பரைத் திருப்பி குடுக்கப் போனவர் ஒரு நிமிஷம் அப்படியே நின்று விட்டார் …………!
“முத்து ! இருப்பா ! இதோ வந்துட்டேன் ”
வரும்போது தடிமனான ஒரு புத்தகத்தை கொண்டு வந்தார் …..
“முத்து ! உக்காரு !”
“இருக்கட்டும் ஸார் ! சொல்லுங்க ! ”
“முத்து! உனக்கு அதிர்ஷ்டம் அடிச்சிருக்குப்பா ! இந்த படத்த நல்லா பாரு”
அது பழைய அபூர்வ நாணயங்களைப் பற்றிய புத்தகம் .
அதில் ஒரு குறிப்பிட்ட படத்தைக் காட்டினார் !
“முத்து ! இதைப் பாத்தியா ! இந்த மாதிரி நாணயம் ரொம்பவே அபூர்வம் !
அச்சு சரியா வராம சில சமயம் புழக்கத்தில வந்துடும் ! இது மாதிரியான நாணயங்களுக்கு மதிப்பு அதிகம் ! ஒரு காசுக்கு லட்ச ரூபா கூட சிலசமயம் கிடைக்கும் ! புரியுதா ….??”
“முத்து ! உம்பையன் வரஞ்சது இந்த காசுதான் ! உலகத்திலேயே பத்து அபூர்வ நாணயத்தில இதுவும் ஒண்ணு …….!!!!
நல்லா உத்து பாரு … உனக்கு யாரோ அமெரிக்காவிலிருந்து வந்தவன் தெரியாம குடுத்திருக்கணும் !
இது 1955 வருஷத்து காசு ! எல்லா எழுத்தும் இரட்ட இரட்டயாத் தெரியுது பார் …..! டபிள் டை பென்னி ( Double Die Penny) சொல்லுவாங்க ….! நீ லட்சாதிபதி!!!!!
“ஒண்ணு மட்டும் வெளங்கல ஸார் ! வெளி நாட்டு காசு இங்க செல்லாதுன்னு சொன்னாங்களே? எனக்கு யாரு ஸார் இவ்வளவு ரூபா தருவாங்க ??”
“முத்து ! இத வச்சு நீ இங்க சாமான் ஏதும் வாங்க முடியாது ! ஆனா சிலபேருக்கு இந்த மாதிரி காச சேக்கறது ஒரு பொழுதுபோக்கு !
சிலர் ஸ்டாம்ப் சேப்பாங்க ! சிலர் தீப்பெட்டி லேபிள் சேப்பாங்க……”
“அதுக்கு எனக்கு எதுக்கு காசு கொடுக்கணும் ஸார் ??? ……சேத்து வச்சு………??”
“இதெல்லாம் படித்த பணக்காரர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு தான் !
எக்சிபிஷன் வைப்பாங்க ! நல்ல விலைக்கு விக்கிறவங்களும் உண்டு ! இந்த மாதிரி காச எவ்வளவு பணம் குடுத்து கூட வாங்குவாங்க …..!!!!!
எங்கிட்ட இந்த அபூர்வ காசு இருக்குன்னு சொல்றதே ஒரு பெருமை தானே …….???”
“ஆமா … இது எவ்வளவு பெரும் …??”
“எனக்கு தெரியாது முத்து ! குமாரசாமின்னு ஒருத்தர் இருக்காரு…. இதிலே நிறைய அனுபவம் உள்ளவர்….
வால்மீகி நகரில் தான் வீடு… …….. அட்ரஸ் எழுதித் தரேன் !! நான் அனுப்பிச்சேன்னு சொல்லு !
இனி வெளிநாட்டு காசு கிடைச்சா உடனே எங்கிட்டகாட்டு …பையன்கிட்டேயிருந்து முதல்ல காச வாங்கு !! ….”
***
“வள்ளி ! தம்பி ஸார் சொன்னதும் எனக்கு கையும் ஓடல ! காலும் ஓடல!
எப்படியாச்சும் இந்த காசுல வர பணத்த வச்சு, அடகு வச்ச உன்னோட தாலி செயின மீட்டுடலாம்னு ஓடி வந்தேன் !
உன்னியக் காணம் ! பய மட்டும் ஏதோ கார் பொம்மய நோண்டிகிட்டிருந்தான்”
***
முத்து பாலாஜிக்கு லட்டு , கடலமிட்டாய் , சாக்கலேட்டு , பூந்தின்னு ஏகப்பட்ட தின்பண்டம் வாங்கிக் கொண்டு வந்தான் !
“டேய் ! பாலாஜி ! அதிர்ஷ்டகார பயலே !
நீ பொறந்த வேளைடா வேளை …. இந்தா லட்டு பூந்தி !! சாப்பிடு…… சாக்கலேட்டு பிடி ….
அந்த காசு டப்பிய எடுத்திட்டு வாடா நயினா…..”
“காசு டப்பி……அது வந்து ….. அப்பா..”
“என்னடா கண்ணா ! நீ வச்சு விளையாடுவியே… எடுத்துகிட்டு வாம்மா…”
“அது .. தெரியல…:”
முத்துவுக்கு வந்தே கோபம் !
“என்னடா ! என்ன கிறுக்கன்னு நினைச்சியா …பத்திரமா வச்சுக்க சொல்லித்தானே குடுத்தேன் !
தாராந்துட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி இன்னா நடிப்பு ! ஆத்தா மாதிரி நீயும் என்ன முட்டாள்னு நினைச்சியா ! தேடி கொண்டுவாடா …”
“தெரியலப்பா”
“சனியனே ! வீட்டுக்கு வந்த லச்சுமி தேவிய விரட்டி விட்டுபுட்டயே… வெறும்பயலே ….உன்னை என்ன செய்யறேன் பாரு….”
குழந்தை கன்னத்தில் மாறி மாறி அடித்தான் ! வலி தாங்காமல் சுருண்டு விழுந்தான்! விசும்பிக் கொண்டே தூங்கி விட்டான்!
முத்து போய் இரண்டு குவார்ட்டர் அடித்துவிட்டு குப்புற கவுந்து விட்டான்!
வள்ளி வரும்போது குழந்தையும் முத்துவும் நல்ல உறக்கத்தில் …… பிரிக்கப்படாமல் பூந்தி லட்டு சாக்லேட்……
***
“வள்ளி ! நா உங்கிட்ட கூட சொல்லல ! அந்தக் கோபத்தில் தான் பிள்ளைய எட்டி உதச்சிட்டேன் வள்ளி …..!”
“ஏய்யா… காசுக்காக பிள்ளையையே கொன்னுடுவ போல இருக்கே!
பாவம் பிள்ள! அதான் கன்னமெல்லாம் கன்னிப்போயிருந்திச்சா ……
அது சரி ! இப்போ என்ன அந்த காசுக்கு வந்த மவுசு ???”
வள்ளியிடம் நடந்ததெல்லாம் ஒண்ணு விடாமல் சொன்னான் ! வள்ளிக்கு அவனுடைய ஆதங்கம் புரிந்தது ..
“நிசமாலுமே இந்த காசுக்கு இவ்வளவு மதிப்பா??……
சரி ..நீ வாய வச்சிக்கிட்டு கம்முன்னு இரு …நா பிள்ளய கேக்கறேன் பாரு…..”
தூக்க கலக்கத்தில் இருந்த பாலாஜியை மடியில் இருத்திக் கொண்டாள் வள்ளி !
“செல்லம் ….பயந்திட்டயா ? ஒண்ணுமில்லை ராசா …. நீ விளயாண்டிருப்பல்ல காசு டப்பி …அத எங்க வச்ச?? நல்லா யோசிச்சு பாரு நயினா ….”
பாலாஜி கொஞ்ச நேரம் சும்மாயிருந்தான் …
“ஆங்…. அந்த பாண்டி இல்ல….. விளையாடிட்டு தரேன்னு எடுத்திட்டு போனாம்மா….”
“நம்ப பாண்டியா.. ??”
குழந்தை ஆமாம் என்று தலையாட்டினான்!!
முத்து மறுபடியும் எகிறிக் கொண்டான்!
“கிறுக்குப் பயலே .. கெடுத்தியே..போயும் போயும் பாண்டிகிட்ட …
இந்நேரம் அது குப்பத்தொட்டிக்கில்ல போயிருக்கும் ….
தலையில் அடித்துக் கொண்டான் !!
“ஏய் ..சும்மாயிரு…எப்ப கண்ணு குடுத்த ?”
“அன்னிக்கு இங்க வெளயாட வந்தானே …..”
பாண்டி இரண்டு வீடு தள்ளி தான் இருந்தான் …. பத்து வயது இருக்கும்.ஆனால் ஐந்து வயது குழந்தை மாதிரி தான் இருப்பான் ! பாலாஜி என்றால் உயிர் ….பேச்சு வரவில்லை….
மூன்று பேரும் பாண்டி வீட்டுக்கு கிளம்பினார்கள்…
“என்ன வள்ளி இந்நேரத்தில…. புருஷனும் பெண்டாட்டியும் ஜோடி போட்டுகிட்டு…..”
பாண்டிக்கு அம்மா மட்டும் தான்..
வள்ளி வந்த காரியத்தை சொன்னாள் ! காசு டப்பி காணும் என்று மட்டும் சொன்னாள்!பாண்டி டப்பாவை பத்திரமாகத்தான் வைத்திருந்தான்…”
பாண்டி கன்னத்தில் ஒரு முத்தம் குடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தார்கள்..
“பாரு..அறியா பிள்ளைய திட்டினியே…”
பாண்டிக்கு பரிந்துகொண்டு வந்தாள் வள்ளி ….
“சரி.. சரி.. காசு பத்திரமா இருக்குதா பாரு …”
கீழே கொட்டி தேடினார்கள் !
‘ இதோ! நீ குடுத்த காசு….’
பாலாஜி டக்கென்று எடுத்துக் கொடுத்தான் …’
“வள்ளி .. நீயும் பாத்துடு… எனக்கு இதெல்லாம் புரியாது…..”
சரிதான் மாமா!!
***
அன்றைக்கு ராத்திரி வள்ளியும் முத்துவும் தூங்கவேயில்லை ….
***
“மாமா …நிசமாலுமே நிறைய துட்டு கிடைக்குமா ????….
“ஆமா வள்ளி … இருபதாயிரம் கூட கிடைக்கலாம்னு சொல்றாரு தம்பி ஸார் …”
“நாம முதல்ல மளிக கடை , வாடகை பாக்கி எல்லாத்தையும் குடுத்திடணும்…”
“இரு ! முதல்ல உன் தாலிய
மீட்டு போட்டுத்தான் மறு சோலி…
அப்புறம் நம்ப செல்லத்துக்கு தங்கத்தில ஒரு அண்ணாகயிறு!”
“நீ வவுத்தவலின்னு எத்தன நாளாய் சொல்லிட்டிருக்க. ……
முதல்ல போயி ஸ்கேன் எடுக்கணும்னு டாக்டர் சொன்னாரே ….”
“அதெல்லாம் கிடக்கட்டும் வள்ளி… முதல்ல துட்டு கைக்கு வரட்டும்… பேசாம தூங்கு ….”
***
எப்போது விடியப் போகிறதென்று காத்துக் கிடந்தான் முத்து !!
காலையில் எழுந்து நல்ல சட்டையாய் தேடி எடுத்து போட்டுக்கொண்டு புறப்பட்டான்….
வீட்டை சுலபமாய் கண்டுபிடித்து விட்டான் ..
தனி பங்களா…!!!!!
நாய் , வாட்ச்மேன் யாருமில்லை !
வாசல் வராண்டாவில் சேரில் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தார் ஒரு வயதானவர்
பளபளக்கும் தங்க ஃப்ரேம் கண்ணாடி ! கருப்பும் வெளுப்பும் கலந்த முடியை நன்றாக படிய பின்னால் வாரி விட்டிருந்தார் !!
‘ ஸார் … ‘ கேட்டுக்கு வெளியே நின்று குரல் கொடுத்தான் .
“யாரு?? உள்ள வாப்பா !”
உள்ளே நுழைந்தான்…..
“ஸார் .. எம்பேரு முத்து…… தம்பிதுரை ஸார் அனுப்பிச்சாரு … இங்க குமாரசாமின்னு ஒருத்தர் ….”
“ஓ … முத்து… !!! தம்பிதுரை போன் பண்ணி சொன்னார் … நான்தான் குமாரசாமி !
coin கொண்டுவந்திருக்கியா …???
சீரியஸான ஆசாமி மாதிரி இருந்தார் . சிரிப்பு என்பதே மருந்துக்கு கூட காணோம்…
வெட்டு ஒன்று துண்டு இரண்டு மாதிரி பேசினார் .
குமாரசாமி பற்றி கொஞ்சம் பேக்ரவுண்ட் தேவை ..
பிறக்கும் போதே வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர் . நிறைய படித்தவர் ! குடும்ப சொத்தை கட்டிக் காக்கவே நேரமில்லை!
நிறைய கம்பெனிகளின் போர்ட் ஆஃப் டைரக்டர் லிஸ்டில் இவர் பெயர் கண்டிப்பாய் இருக்கும்.
ஒருமுறை Lion’s club district governor ஆக இருந்தவர்!
Madras club, Boat club, Cosmopolitan club எல்லாவற்றிலும் உறுப்பினர்..!!!!
இரண்டு குழந்தைகளும் வெளிநாட்டில் .. போன வருஷம் தான் விசாலாட்சி அவரை தனியாக விட்டுவிட்டு போய்ச்சேர்ந்தாள்..!
சமையலுக்கு ஒரு ஆள் . மற்றபடி புத்தகம்…… புத்தகம்.. புத்தகம் தான்…
நாணயம் சேகரிப்பதுதான் இவருடைய பொழுது போக்கு!
ANA என்று அழைக்கப்படும் American Numismatic Association member … !!!!
இரண்டு முறை அவர்களுடைய மகாநாட்டில் கலந்து கொண்டு கவுரப்படுத்தப்பட்டிருக்கிறார்.
புத்தகத்தை படித்த அளவு மனிதர்களைப் படித்திருப்பாரா … சந்தேகம்தான் ..
தனக்கென்று ஒரு உலகம்…. நண்பர்கள் என்று யாரும் கிடையாது … ஜானி வாக்கர் ரெட் லேபிளும் , பிளாக் லேபிளும் தான் கூட்டாளிகள்……!!!!
அவனை உட்கார சொல்லவில்லை . அவரும் எழுந்திருக்கவில்லை .இந்த மரியாதை போதும் என்று நினைத்திருக்கலாம் …
“ஸார்! இதுதான் அந்த காசு”
கையில் வாங்கிக் கொண்டு திருப்பி இரண்டு தடவை பார்த்தார் ! அப்படியே திகைத்து நின்று விட்டார்! ஒரு வினாடி தான் !!
சமாளித்துக் கொண்டு ‘ ஒரு நிமிஷம் இருப்பா … செக் பண்ணி சொல்றேன் ‘ என்று உள்ளே போனார் !!
நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது …. இரண்டு பேருக்குமே…
உள்ளே போய் ஃபிரிட்ஜில் இருந்து ஒரு பாட்டில் தண்ணீரை ஒரே மூச்சில் குடித்துவிட்டு உட்கார்ந்து விட்டார் !
திரும்பி முத்து குடுத்த காசைப் பார்த்தார் ! கை நடுங்கியது !
இதுவரை எதற்காக தவமிருந்தாரோ அது அவர் கையில் ….
1955 Double Die Penny ! Collector’s jackpot !! இது மட்டும் கிடைத்துவிட்டால் ANA யில் அவர் மதிப்பு பல மடங்கு உயரும் !
அவருடைய double die கலெக்சன் பூர்த்தியாகும்!
இன்றைய மதிப்புக்கு ஐந்து லட்சத்துக்கு குறையாது !
முத்துவுக்கு இருபதாயிரம் தாராளமாய் கொடுக்கலாம் !!!
ஏன் ..??? மனசிருந்தால் லட்ச ரூபாய் கூட தரலாம்……
குமாரசாமி பூதக்கண்ணாடியை எடுத்து வைத்துக் கொண்டு இண்டு இடுக்கு விடாமல் ஆராய்ந்தார் ! சந்தேகமில்லாமல் அசல் நாணயம் தான் !
செக் புத்தகத்தை எடுத்தவர் அதை திரும்ப வைத்தார் !
இவனுக்கு நிச்சியம் அக்கவுண்ட் இருக்காது…. பணமாக கொடுத்தால் என்ன என்று தோணியது. …..
அப்போதுதான் அவருக்கு புத்தி தடுமாறியிருக்க வேண்டும் ….
இவனுக்கு எதுக்கு இருபதாயிரம் ?? ஏதோ குருட்டாம்போக்கில் வந்த அதிர்ஷ்டம் .. அவனுக்கு இதன் அருமை கூட தெரியாது…
ஏதோ அஞ்சோ பத்தோ குடுத்து அனுப்பிவிட்டால்……??????
ஆனால் சந்தேகம் வந்து காசை திரும்பி வாங்கிக் கொண்டால் …..???
படித்த மூளை வேகமாய் வேலை செய்தது !!!!!
அந்தக் காசை பீரோவில் வைத்து பத்திரப் படுத்தினார் ..
இன்னொரு அலமாரியைத் திறந்தார்..
நிறைய காசுகள்… எல்லாம் வெளிநாட்டு காசுகள் ….அதே மாதிரியான சாதாரணமாய் புழக்கத்தில் இருக்கும் ஒரு காசை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தார்…
முத்து நின்ற இடத்திலேயே அசையாமல் நின்று கொண்டிருந்தான்!
“முத்து …. உனக்கு படிக்கத் தெரியுமா ????”
“நானு ஸ்கோலுக்கு போனதேயில்லை! ஆனா வள்ளி பத்தாவது படிச்சிருக்கா..”
“வள்ளி ….???”
“என் சம்சாரம் ஸார் …”
“Oh ! I see..!”
“முத்து ! நல்லா சோதிச்சு பண்ணிபாத்திட்டேன் … இது சாதாரண காசுதான்… ! ஸார் சொன்ன மாதிரி அபூர்வமான நாணயம் இல்லை..
சந்தேகமிருந்தால் வேற யார்க்கிட்ட வேணாலும் காட்டி செக் பண்ணிக்க …”
முத்துவுக்கு மயக்கம் வரும்போல் இருந்தது ! குழந்தை கையில் சாக்லேட் குடுத்துவிட்டு உடனே பிடுங்கிக் கொண்ட மாதிரி ….
நெஞ்சில் ஒரு வலி ….
“தம்பி ஸார் அடிச்சு சொன்னாரே ….”
“முத்து… இருபது வருஷமா நான் இதில ஆராய்ச்சி பண்றேன்… நான்தான் சொன்னேனே வேறு யார்கிட்ட வேணாலும் காட்டு…”
குமாரசாமி ‘ நீ போகலாம்’ என்பது போல் எழுந்து நின்றார்…..
“மாமா ! அந்தாளு ஒரு ஃப்ராட்…!! உன்ன நல்லா ஏமாத்திபுட்டான் !
இந்த காசையும் பிள்ள வரஞ்ச காசையும் பாரு ! காச மாத்திப்புட்டான் !!பாத்தாலே தெரியலையா ரெண்டும் வேற வேறன்னிட்டு !
இவனெல்லாம் சும்மா விடக்கூடாது ! கிளம்பு உடனெ!! இரண்டுல ஒண்ணு பாக்காம விடமாட்டேன் !!!
மறுபடி போனபோது கதவு பூட்டியிருந்தது ! பெல் அடித்ததும் ஒரு நடுத்தர வயதுக்காரர் கதவைத் திறந்தார்!
“யாரு நீங்க ???..!”
“குமாரசாமி சார் இருக்காரா??????”
“பூஜையில இருக்காரு ! வருவாரு!”
“இன்னாத்துக்க சாமி கும்பிடராராம் ….???”
முணுமுணுத்தாள் வள்ளி …
பதினைந்து நிமிஷம் கழித்து வந்தார் …
முத்து , வள்ளி , கூடவே குழந்தை …எதிர் பார்க்கவேயில்லை! ஆடிப் போய் விட்டார்..
“என்னப்பா…? நீ காலேல வந்தவன் தானே ! புரியும்படி தானே சொன்னேன் …”
“சார் ! நா இவரு பெண்டாட்டி வள்ளி ! இவன் எங்க பையன் பாலாஜி !
இத பாருங்க அந்த காச அச்செடுத்த மாதிரி பேப்பர் அடியில வச்சு வரஞ்சது! நோட்டு புத்தகம் பூரா இருக்குது !
இதத்தான் முத்து உங்க கிட்ட குடுத்தாரு ! நீங்க காச மாத்திப்புட்டீங்க …. பெரிய மனுசன் செய்யற வேலையா ….? சொல்லுங்க சார் …..”
“இரும்மா ….நீ பாட்டுக்கு கூட இருந்தாமாதிரி பேசிகிட்டே போறியே …
அந்த காசுதான் இவன் கொடுத்தாங்கிறதுக்கு என்னம்மா அத்தாட்சி ..?????
சரி..வந்ததுக்கு போனாப்போகுதுன்னு இரண்டாயிரம் ரூபாய் வாங்கிக்க…..”
முத்துவுக்கு வந்ததே கோபம் !!
“என்ன அத்தாட்சி ? மனசாட்சி தான் ! உங்கிட்ட அது இல்லையே !
உன்னய மாதிரி கிரிமினல் மூள எனக்கில்லதான்!
இப்போ விட்டாகூட பத்து ஆளக் கூட்டிகிட்டு வந்து வீட்ட சூறையாடி காச கண்டுபிடிக்க எவ்வளவு நேரம் பிடிக்கும் ??
என்னால அப்படித்தான் யோசிக்க முடியும் ! ஆனா நீ புத்திசாலி ! காதும் காதும் வச்ச மாதிரி கமுக்கமாக காரியத்த முடிச்சிட்ட!
என்ன சொன்ன ?? இரண்டாயிரமா? அதுவும் எம்மேல பரிதாபப்பட்டு ……
வெளிநாட்டு காசோட மதிப்பு தெரிஞ்ச உனக்கு மனுஷன மதிக்கத் தெரியலையே !!
இந்த பய இரண்டாயிரத்துக்கு மேல பெறமாட்டான்னு நீயே முடிவு பண்ணிட்டப்புறமா நாங்க பேச என்ன இருக்கு….. ????
இதுக்கப்புறமும் நாங்க இங்க நின்னா இந்த மதிப்பும் போயிடும் ….வா வள்ளி …..”
அன்றைக்கு ராத்திரி முத்து புலம்பித் தீர்த்து விட்டான் ……
“வள்ளி ! நானென்னமோ ஆசைப் பட்டது நெசந்தான்! ஆனா அது இல்லைனாலும்‘ சரி ! விடு!கழுத! ன்னு விட்டுட்டேன் !
ஆனா பிஞ்சு குழந்தைய கண்ணுமண்ணு தெரியாம அடிச்சுப்புட்டேனே !
அது என்னத்த கண்டிச்சு???. அதுக்கு எல்லா காசும் ஒண்ணாத்தானே தெரிஞ்சிருக்கும் …..
ஏன் வள்ளி பெரிசுங்களுக்கு மட்டும் இந்த பேராச…..
“விடு மாமா …”
இரண்டு பேரும் பாலாஜியைக் கட்டிக்கொண்டு நிம்மதியாய் உறங்கினார்கள்……
குமாரசாமியும் வழக்கத்துக்கு அதிகமாய் இன்னொரு பெக் பிளாக் லேபிள் அடித்து விட்டு நிம்மதியாய் தூங்கினார் !!