நாணயத்தின் மறுபக்கம்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 17, 2022
பார்வையிட்டோர்: 2,996 
 
 

“ஏட்டையா..? உங்களத்தானே! பிள்ளை பசில உசிரு போவுறமாதிரி கத்துதே….பாலோ , பன்னோ வாங்கித்தாங்கன்னு எத்தனி தபா கூவறேன்..காதுல விழாதமாதிரி இருக்கீங்களே…உங்களுக்கும் பிள்ள குட்டி இருக்காங்க இல்ல…!…”

தமிழும் கன்னடமும் கலந்து அவள் பேசியதை எப்படியோ புரிந்து கொண்டார் ஏட்டு ஏகாம்பரம்…….

“ஆமா.. ஒண்ணுக்கு மூணு இருக்குதுங்க..ஆனா நாங்க பெத்தது..நீ பெத்த பிள்ளதானே… உம் பாலக்குடுக்க வேண்டியதுதானே…!!”

“இருந்தா நான் ஏன் ஏட்டய்யா உங்கள கெஞ்சப்போறேன்…?? குழந்த வவுத்துக்கே நாதியத்து போய் கெடக்கேன்..நானு சாப்பிட்டு மூணு நாளாச்சு…”

“நீ பெத்திருந்தாத்தானே இருக்கும்…??”

“என்ன…?? என்ன சொன்ன ஏகாம்பரம்..?? பொம்பள கைதிங்ககிட்ட இளக்காரமா பேசாதீங்கன்னு எவ்வளவு தடவை சொல்லியிருக்கேன்..! பொம்பளைங்கன்னா அவ்வளவு கேவலமா போச்சா…. ??இன்னொரு முற ரிப்பீட் பண்ணிணீங்க… அப்புறம் மெமோ…ஸஸ்பென்ஷன்தான்….பீ கேர்புல்…”

தீடீரென்று இன்ஸ்பெக்டர் இளவரசி உள்ளே நுழைவாளென்று ஏகாம்பரம் எதிர்பார்த்தாரா….?

“சாரி மேடம்..”

பவ்யமாய் எழுந்து சல்யூட் அடித்தார்…

“கடைக்கு போய் ஒரு கிளாஸ் பாலும், பன்னும் வாங்கிட்டு வாங்க..உங்க வயசுக்கு ஏத்தமாதிரி நடந்துக்குங்க…!”

“யெஸ் மாடம்…”

இன்ஸ்பெக்டர் இளவரசி லாக்கப்பின் அருகே போய் நின்றாள்…

“ரொம்ப தேங்க்ஸ் மேடம்…பளீஸ் மேடம்… நான் சொல்றத நம்புங்க…!! சத்தியமா இது எங்குழந்ததான்….பிள்ளை தலைல அடிச்சு சொல்றேன்…..”

இளவரசி ஒன்றுமே பேசாமல் அந்தப் பெண்ணையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள்…

உண்மையிலேயே அழகிதான்…

மாநிறத்துக்கும் சற்றே குறைந்த கருத்த நிறமும் , அடர்த்தியான சுருட்டை முடியும் , நீளமான , அடர்ந்த இமைகளுக்கு நடுவே பளபளத்த கண்களும் , குவிந்த கருத்த உதடுகளும் , நீண்ட முகவாயும்… அவள் அழகி என்ற முத்திரை குத்தின..

சுலபமாக அழகிப் பட்டத்தை தட்டிச் செல்லும் உடல்…கையில் அணைத்திருந்த குழந்தை பசியால் விசும்பியது…

இப்போது இளவரசியின் கவனம் முழுதும் குழந்தைமேல்….

இவளுக்கு இப்படி ஒரு குழந்தையா?

கொழுகொழு உடல்…குங்கும வர்ணம்…கம்பிபோல் நீண்ட முடி.. சாம்பல் நிற உருண்டையான கண்கள்..பெரிய குழந்தைதான்..

எவருக்கும் சந்தேகம் வராமல் இருந்தால் அதிசயம்தான்….

‘இன்ஸ்பெக்டர் அம்மா…. தயவுசெஞ்சு நீங்களாச்சும் நான் சொல்றத காது குடுத்து கேளுங்கம்மா….புண்ணியமா போகும்….’

என்ன சொல்ல வருகிறாள்…….?

***

“அம்மா…இங்க வா.. சீக்கிரம்…! இந்த படத்த பாரு…!”

கையிலிருந்த மொபைலில் இருந்த ஒரு முகநூலில் வந்த படத்தை அம்மாவிடம் காண்பிக்கிறாள் சித்ரா..

“யாரு இது. ? உனக்கு தெரிஞ்ச பொண்ணா..??”

“இல்லம்மா..யாருன்னே தெரியாது..இந்த பொண்ணு கையில இருக்கிற குழந்தைய பாத்தீங்களா..??”

“என்ன குழந்தைக்கு…??”

“அம்மா..அம்மா..! இவளையும் குழந்தையும் பாத்தா யாருக்காவது சந்தேகம் வராம இருக்குமா…? இது ஒரு கடத்தல் கேஸ்..குழந்தைய கடத்திட்டு போய் பிச்சையெடுத்தோ, இல்ல வித்தோ சம்பாதிக்கிற கும்பல்..இந்த குழந்தைய யாராவது காணம்னு தேடினா இந்த நம்பருக்கு கூப்பிட விளம்பரம் பண்ணியிருக்காங்க…”

அம்மாவுக்கு கண் கலங்கிவிட்டது…

அருந்ததிக்கு ரொம்பவே இளகின மனசு…

“ஐய்யோ பாவம்… அவுங்க அம்மா குழந்தையக் காணாம எவ்வளவு துடிப்பாங்க…இதுங்கள பிடிச்சு உடன்னே ஜெயில்ல போடணும்….”

அருந்ததி அன்றைக்கெல்லாம் அந்த குழந்தை நினைவாகவே இருந்தாள்.

அன்றிலிருந்து எப்போது வெளியில் போனாலும் எல்லோரையும் சந்தேகக் கண்ணுடனே பார்க்க ஆரம்பித்தாள்..

“ஏங்க..அந்த பிச்சைக்காரி கைல இருக்கற குழந்தைய பாருங்க… நிச்சயம் அவளுதில்ல..கடத்திட்டு வந்திருப்பா…!!”

“அருந்ததி..வாயமூடிட்டு வா…போற வர எல்லாரையும் ஸ்கேன் பண்ணிட்டு…இது என்ன புது பழக்கம்…? அப்படியே இருந்தாலும் நாம என்ன செய்ய முடியும்..?? உலகத்துல இதுமாதிரி அநீதி ஆயிரம் நடந்துட்டுதான் இருக்கு..அதுக்குத்தான் போலீஸ் டிபார்ட்மெண்ட் இருக்கு..நல்லா உள்ள தள்ளி நாலு போடு போட்டா உண்மைய கக்கிடுவாங்க…!”

“அதுவரைக்கும் அந்த குழந்தையோட கதி…?”

அவள் கேள்வியில் இருந்த நியாயம் அவன் வாயை கட்டிப் போட்டது.

ஹரிக்கு அவளை சமாதானப்படுத்த முடியவில்லை…

****

அருந்ததிக்கு பயணம் செல்வது மிகவும் பிடித்த ஒன்று..ஹரிக்கு நேரம் கிடைப்பதே அபூர்வம்.சித்ராவுக்கோ தனது கல்லூரி நண்பர்களுடன் போவதில்தான் விருப்பம்..

மாதம் ஒரு முறையாவதே அருந்ததியும் அவளது தோழி பிருந்தாவும் ஏதாவது ஒரு சுற்றுலா கிளம்பி விடுவார்கள்…

உடுப்பி கிருஷ்ணனை பார்த்துவிட்டு , கொல்லூர் மூகாம்பிகா , மைசூர் சாமுண்டி என்று ஒரு பெரிய லிஸ்ட்டே வைத்திருந்தார்கள்…

பிருந்தா அருந்ததியின் நீண்ட நாள் தோழி… கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள்… திருமணம் வேண்டாம் என்று தனது வயதான தாயாரைப் பார்த்துக்கொண்டு, ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி ஆற்றி ஓய்வு பெற்றவள்….

கர்நாடகா ஸ்ட்டேட் டிரான்ஸ்போர்ட்டில் உடுப்பி , கொல்லூர் பஸ்ஸில் ஏறி அமர்ந்ததும் தான் கொஞ்சம் நிம்மதியானது…

உடுப்பியில் நிறைய சுற்றிப்பார்த்ததில் இருவருக்குமே பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தால் போதுமென்று ஆகிவிட்டது…

பஸ் கிளம்ப இன்னும் கால்மணி நேரம் இருக்கும்போது அவசரமாய் ஒரு பெண் தனது கைக்குழந்தையுடன் ஏறி இவர்களுக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்…

முகத்தில் முத்துமுத்தாய் அரும்பியிருந்த வியர்வையை தனது முந்தானையால் அழுந்த துடைத்தபடி இவர்களைப் பார்த்து ஒரு புன்சிரிப்பை வீசிவிட்டு குழந்தையை அணைத்தபடி உட்கார்ந்தாள்….

நல்ல அடர்த்தியான சுருண்ட முடியைப் பின்னி ரிப்பன் வைத்து கட்டியிருந்தாள்..சிறிதே கருத்த நிறமும் குவிந்த உதடுகளும், நீண்ட மோவாயும்.. அவள் ஒரு முறைக்கு இரு முறை பார்க்கத் தூண்டும் அழகிதான்….

கையிலிருந்த குழந்தையின் முகம் தெரியாதபடி துணியால் போர்த்தியிருந்தது. அவளுக்கு பக்கத்தில் ஒரு வயதான அம்மா ஏறி அமர்ந்ததும் பஸ் கிளம்பி விட்டது.

அந்தப்பெண் சன்னலோரம் அமர்ந்திருந்ததால் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள்…

பார்த்தால் கன்னடப் பெண் போல தெரிந்தது..

அருந்ததியால் ஐந்து நிமிடத்துக்கு மேல் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்க முடியாது…

“பிருந்தா…அந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கா இல்ல…பாத்தா படிச்ச பொண்ணு மாதிரி தெரியுது…”

“ஆமா…ஆனா முகத்தில ஒரு வாட்டம் இருக்கு இல்ல…!!”

“கையில குழந்த..வயச பாத்தா சின்னவளாத்தான் இருப்பா போல இருக்கு….”

இவளைப் பற்றிதான் ஏதோ பேசுகிறார்கள் என்று அந்தப் பெண்ணுக்கு தோன்றியிருக்க வேண்டும்..

இவர்களைப் பார்த்து மீண்டும் புன்னகைத்தாள்..

சிரிக்கும்போது இன்னும் அழகாகத் தெரிந்தாள்…

“உன் பேர் என்னம்மா…?”

சிறிய மௌனத்திற்குப் பின் ,

“காயத்ரி “என்று மிக மெல்லிய குரலில் சொன்னாள்…

“தமிழா….??”

“இல்ல.. கன்னடம்… தமிழ் சொல்ப்ப..சொல்ப்ப…”

“குழந்தைக்கு எத்தன வயசு…??”

ஒன்று என்று விரலைக் காண்பித்தாள்..

“ஒரு மாசமா….?”

இல்லை என்பதுபோல தலையசைத்தாள்..

“ஒரு வயசா…!”

அவள் பதில் சொல்வதற்குள் குழந்தை வளைந்து, நெளிந்து நெட்டி முறித்தது…

‘ம்ம்மா…”என்று முழித்துக் கொண்டு போர்வையை நீக்கி, தலையை நீட்டி அவர்களைப் பார்த்து சிரித்தது…

அருந்ததியும் பிருந்தாவும் ஒருவர் முகத்தை ஒருவர் முழித்துப் பார்த்து, ஆச்சரியத்தில் புருவத்தை உயர்த்தினார்கள்….

அப்படி என்ன அதிசயம் அந்த குழந்தையிடம் இருந்தது….?

***

போர்த்தியிருந்த பச்சை நிற போர்வையிலிருந்து எட்டிப்பார்த்தது அந்த குழந்தை. புல்லுக்கு நடுவில் முளைத்த புத்தம்புது ரோஜாமலரைப் போல மனதை கொள்ளை கொண்டது.

காம்பசால் வட்டம் போட்டதுபோன்ற உருண்டை முகம்..மொட்டை தலை..உதட்டுச்சாயம் போடாமலேயே சிவந்த உதடுகள்.. இரண்டு மூன்று பச்சரிசி பல் தெரிய சிரித்த குழந்தையை அப்படியே அள்ளிக் கொள்ளலாம்போல இருந்தது…

அவர்கள் குழந்தையை வைத்த கண் வாங்காமல் பார்த்த விதம் அவளுக்கு எரிச்சல் மூட்டியிருக்க வேண்டும்..

மீண்டும் குழந்தையைத் தலைவரை இழுத்து போர்த்திவிட்டு, சட்டையைத் தளர்த்தி விட்டு பால்குடுக்க ஆரம்பித்தாள்…

அதற்கு ஒன்றும் பசியில்லை போலிருக்கிறது..

போர்வையை நீக்கி மறுபடியும் முகத்தைத் திருப்பி அவர்களைப் பார்த்து சிரித்தது..

வேறுவழியில்லாமல் அவள் குழந்தையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள்..

நல்ல வளர்த்தி..கொழுகொழு வென்று இருந்தது.. கழுத்தில் ஒரு கருகமணி மாலை… அவள் கழுத்திலும் தான்….

“பேர் என்ன….?”

முதலில் காதில் விழாதவள்போல முகத்தைத் திருப்பிக் கொண்டவள், என்ன நினைத்தாளோ,
“கிஷன் ‘ என்று கூறிவிட்டு,

“நன்ன ப்ரிதியா…நன்ன மகு…”‘

குழந்தையை அணைத்தபடி இரண்டு கன்னத்திலும் மாறி மாறி முத்தமழை பொழிந்து மார்போடு அணைத்துக் கொண்டாள்….

அதுவரை அவளது செய்கைகளை ரசித்தபடி வந்த அருந்ததிக்குள் திடீரென சந்தேகப்பேய் புகுந்து விட்டது…

மெல்ல பிருந்தாவின் காதில் கிசுகிசுத்தாள்…..

“ஏய்..அந்த குழந்தையப் பாரு… இவளுக்கும் அதுக்கும் கொஞ்சமும் பொருத்தமாவேயில்லையே..‌! உனக்கு என்ன தோணுது….?”

“அப்படித்தான் தோணுது.. ஆனா அவ கொஞ்சறதப்பாத்தா அவ குழந்தையாத்தான் இருக்கணும்..”

அருந்ததி சித்ரா ஒரு நாள் காட்டிய செய்தியைப் பற்றி கூறினாள்…

“ஆமா.. அருந்ததி..இப்ப இந்த மாதிரி நிறைய நடக்குது.. பாவம்..குழந்தைய பறிகொடுத்தவங்க நெலம எப்படியிருக்கும்?”

அந்தப் பெண் ஏதோ நினைத்துக் கொண்டவளாய் ,

“நிலிசு…நிந்து கண்டு இருத்திவியா… ஸ்டாப்.. ஸ்டாப்…”

என்று தனது பையையும் குழந்தையையும் தூக்கிக் கொண்டு எழுந்து நின்றாள்..

“என்னம்மா.. ஒடற பஸ்ல சர்க்கஸ் பண்ற..நீ நெனச்ச எடத்ல பஸ்ஸ நிறுத்த இது என்ன உம்பாட்டனார் வண்டியா?? விழுந்து கிழுந்து வைக்கப்போற..!! குன்று…!”

அவள் கேட்பதாயில்லை…

அதற்குள் அருந்ததி!

மற்ற பயணிகள் என்ன நடக்கிறது என்று பார்க்கும் ஆர்வத்தில் எழுந்து நின்றார்கள்..

அருந்ததி செய்த காரியம் அந்தப் பெண்ணால் வாழ்நாளில் மறக்கக் கூடியதா…?

***

“அம்மா..நீ செஞ்சது ரொம்ப தப்பு..நீயா முடிவு பண்ணி அந்த பொண்ணு குழந்தைய கடத்திட்டு வந்திருப்பான்னு எல்லாரையும் சந்தேகப்பட வச்சு…ச்சே..இப்பபாரு அவள போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போகவச்சிட்ட…”

“ஆமா..சித்ரா.. நான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்… பாவம் அந்த பஸ் டிரைவரும், கண்டக்டரும் அவள பக்கத்துல இருக்கிற போலீஸ் ஸ்டேஷன்ல எறக்கி விட்டுட்டு வண்டிய எடுத்துட்டாங்க…உண்மையிலேயே அவ குழந்தையா இருக்குமா…??”

“இட்ஸ் டூ லேட்…”

“அம்மா…அவள போலீஸ் இந்நேரம் பெண்டு கழட்டிருப்பாங்க…!!”

***

“சலபதி ராவ்…இந்த பொண்ணு கடப்பாரைய முழுங்கின மாதிரி என்ன கேட்டாலும் பதில் சொல்லமாட்டா…இவ குழந்தையோட சென்னையிலிருந்துதான் பஸ் ஏறியிருக்கா..சிந்தாதிரிபேட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு இவள அனுப்பி வச்சாத்தான் முழு விவரமும் தெரியும்…அங்க தானே குடியிருக்கேன்னு சொல்லுது….”

***

இன்ஸ்பெக்டர் இளவரசி இன்றைக்கு நல்ல மூடில் இருந்தாள்…அந்தப் பெண் என்னதான் சொல்ல வருகிறாள்…?

“ஏகாம்பரம் லாக்கப்ப தொறந்து அந்தப் பொண்ண வெளிய வரச்சொல்லு…!

காயத்ரி எழுந்து நின்றாள்..வாரப்படாமல் முடியெல்லாம் சுருண்டு முகத்தில் விழுந்ததே ஒரு அழகாய்த்தான் இருந்தது…விளம்பர மாடல்போல் இருந்தாள்.

ஒரு கைதியை இத்தனை தூரம் இங்க ரசித்துப் பார்ப்பது இளவரசிக்கே புது அனுபவம்..

“வாம்மா..இந்த பெஞ்சில உக்காரு…குழந்த பால் குடிச்சானா….?”

“ஹவுது….”

“நீ என்னவோ பேசணும்னு சொன்னியே…இப்ப பேசலாம்..நீ எப்படி பேசினாலும் எனக்கு புரியும்..நீ தமிழ் நல்லாவே பேசற…ஆனா..காயத்ரி…உண்மைய மட்டும் சொல்றதான நான் கேக்க தயார்.. என்ன ஏமாத்தணும்னு நெனச்சு கட்டுகத சொன்னன்னு வை…இளவரசியோட உண்மையான முகத்தை பாக்கவேண்டியிருக்கும்….என்ன?? புரியுதா…?”

தலையாட்டினாள் காயத்ரி….

***

“மேடம்… !! இந்த குழந்த என்னுதான்னு எனக்கே நம்ப முடியல…இது பொறந்த உடனே நான் ரொம்ப பயந்துட்டேன்… இப்படி ஒரு குழந்த…ஐய்யோ.. இவ்வளவு தூரம் யோசிக்கிற புத்தி எனக்கு ஏன் இல்லாம போச்சு…?

அவன்… பீட்டர்…அவன மாதிரி ஒரு குழந்தை பிறக்கும்னு கனவுல கூட நெனச்சு பார்க்கல….

மேடம்… நான் சிந்ததாரிப்பேட்டைல ஒரு குப்பத்துல பொறந்து வளந்தவ..ஆனா பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கேன்..

எங்கம்மா நல்ல கைவேல செய்வாங்க..

அவுங்க செஞ்சு குடுக்கிற மாலைங்க , பொம்மைங்களெல்லாம் மகாபலிபுரத்தில கொண்டு வித்துட்டு வருவேன்..

பீட்டர அங்கதான் பாத்தேன்… வெள்ளக்காரன்….எம்மேல ஆசப்பட்டு கல்யாணம் செஞ்சுக்கறேன்னு சொன்னத நம்பி வீட்ட விட்டு ஓடிப் போய்ட்டேன்…

எல்லா ஊரும் சுத்திக் காமிச்சான்..கோவால ஒரு வீடு எடுத்து குடித்தனம் பண்ண ஆரம்பிச்சோம்..

எனக்கு குடிக்க, சிகரெட் பிடிக்க எல்லாமே கத்துக் கொடுத்தான்…போதமருந்து கூட வாங்கித் தந்தான்….

என் வாழ்க்கையில அந்த மாதிரி சந்தோஷத்த அனுபவிச்சதே இல்ல…

இரண்டு வருஷம்..!

நடுவுல அவன் ஊருக்கு போயிட்டு வந்தான்… ஃபிரான்சுன்னு நினைக்கிறேன்….ஒரு வாரம்தான்…

அவன முழுசா நம்பினேன்..

கிஷன் வயித்துல நாலு மாசம்..

இந்த தடவ ஊருக்குப் போனவன் வரவேயில்ல…கைல இருந்த காசெல்லாம் தீந்து போனதும் பயம் பிடிச்சுகிட்டது…

தனியா ஒரு பொண்ணு கோவாவுல இருந்தா அவளுக்கு என்ன பிரச்சனையெல்லாம் வருமோ அது எனக்கும் வந்தது.

வயித்த தூக்கிட்டு வீட்டுக்கு வந்தா அம்மா வாயில வந்தபடி பேசிச்சு..

எல்லாத்தையும் பொறுத்துகிட்டேன்.

கிஷன் பொறந்தான்…

அப்படியே அப்பாவ உரிச்சுகிட்டு…

***

அதற்குமேல் அவள் சொல்லாமலேயே அவள் வாழ்க்கை எப்படி தடம் புரண்டிருக்கும் என்று யூகிக்க முடியாதவளா இளவரசி ?

“குழந்தையத் தூக்கிட்டு ஒரு எடம் போக முடியாது…எத்தன ஏச்சு, பேச்சு?

“எவனோ வெள்ளைக்காரன் கிட்ட ஏமாந்து பெத்துகிட்டு வந்து நிக்கிறா பாரு…”

“ஓடுகாலி…. இன்னும் எவங்கிட்ட போறாளோ??”

தெரிந்தவர்கள் காது கூசும் படி கூறுவது இருக்கட்டும்..

எத்தனை முறை போலீஸ் கையில் மாட்டியிருக்கிறாள்..??

“ஏம்மா..நில்லு.நில்லு…! எங்க தப்பிக்க பாக்குற…? இது யாரு பிள்ளை..? எங்க கடத்தின…?நட போலீஸ் ஸ்டேஷனுக்கு…”

அலுத்து விட்டது அவளுக்கு…

“குழந்த என்னுது. …நன்னே மகு…”

“சும்மா கத விடாத.தினம் ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்து போடணும்.குழந்த போட்டோவ எல்லா ஸ்டேஷன்லயும் ஒட்டியிருக்கோம்..யாராவது குழந்த காணலன்னு வந்தாங்க அன்னக்கி இருக்கு உனக்கு….”

இதே ஊர்ல எவனையோ நம்பி பிள்ளைய பெத்திருந்தாகூட, புருஷன் விட்டுட்டு போய்ட்டான்கிற பொல்லாப்போட போயிருக்கும்.

இப்படி குழந்தைய கடத்திட்டு போறேன்னு ஸ்டேஷன் ஸ்டேஷனா அலைய வேண்டியிருக்குமா…..?

“மேடம் … சத்தியமா இது என் குழந்த.நீங்க சொல்லுங்க… நான் எப்படி இத நம்ப வைக்கிறது..? “

நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்து ஒரு தீர்மானத்துக்கு வரும் மனித மனம் மறுபக்கத்தை பார்க்க எப்போது கற்றுக் கொள்ளப் போகிறது??

‘அடி அசட்டுப் பெண்ணே…விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறது..ஒரு டி.என் ஏ..டெஸ்ட் போதும். நீதான் குழந்தையின் அம்மா என்று தீர்மானிப்பதற்கு…! உனக்கு அது புரியுமா..?’

ஆனால் அந்த ரிப்போர்ட்டை கையிலேயே வைத்துக்கொண்டு அலைய முடியுமா..?

இந்த சமூகம் அதை ஏற்றுக் கொண்டு அவளை சும்மா விடுமா..?

இவளை ஒரு நல்ல மகளிர் மறுவாழ்வு மையத்தில் சேர்க்க வேண்டும்..

கிஷன் பெரியவனாகும்வரை, அவனுக்கு புத்தி தெரியும் வரை, அவன் பாதுகாப்பாக, காயத்ரியின் மகனாக இந்த சமூகம் அங்கீகரிக்கும் வரை, ஆம் அதுதான் காயத்ரிக்கு நான் செய்யப் போகும் பெரிய உதவி…!’

“மேடம்..! என்ன யோசிக்கிறீங்க…? நீங்களும் நான் சொன்னத நம்பலையா??”

“பூரணமா நம்பறேன் காயத்ரி…பயப்படாத….!!”

இளவரசி அவள் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறாள்…

குழந்தை அவளைப் பார்த்து எல்லாம் புரிந்த மாதிரி புன்னகைக்கிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *