நாட்காட்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 11, 2016
பார்வையிட்டோர்: 9,557 
 
 

காவ்யா, என்ன ஒரே ஹேப்பியா இருக்க போல தெரீது, ம்… எஞ்சாய் எஞ்சாய் என்று ஊக்கப்படுத்தினாள் தோழி ஜான்சி.

கண்டிப்பா, மெடிக்கல் காலேஜ்ல படிக்கப் போறா, சந்தோசப்படாம… என்று இன்னொரு தோழி மீராவும் ஊக்கப்படுத்தினாள்.

தேங்க் யு ஆல், வாங்க எல்லாம் காஃபி சாப்ட்டுட்டே பேசலாம் என்று காவ்யா இருவரையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.

வாம்மா ஜானு, மீரா@ அம்மா எப்டிடா இருக்காங்க மீரா என்று காவ்யாவின் தாய் சந்தியா கேட்டாள்.

ம்… அப்டியேதா இருக்காங்க ஆன்ட்டி, சாப்பாடு கொடுத்தாலும் சாப்டுறதே இல்லங்க ஆன்ட்டி, வெறும் ஆப்பிள் ஜூஸ் மட்டுந்தா கொடுக்றோம் என்று மீரா தாழ்ந்த குரலில் கூறினாள்.

சந்தியாவை வீட்டுக்குள் இழுத்துச் சென்ற காவ்யா,

ஏம்மா, அவள சந்தோசப்படுத்தத்தா நாங்க அவள வெளிய கூட்டிட்டு வர்றோம், நீ என்னன்னா இங்கயும் அவ அம்மா பத்தி கேட்டு ஃபீல் பன்ன வெக்கிற என்று அதட்டினாள் காவ்யா.

எப்டி இருந்தாலும் அவளுக்கு தெரியப் போகுது தான காவ்யா, என்று சந்தியா கேட்க,

உனக்கு அறிவுங்குறதே கெடயாதும்மா, தெரியுறப்போ தெரியட்டும், அவ இப்போ ஏ ஃப்ரண்டா வந்திருக்கா, அவள ஏதாச்சும் கேட்டு மூட்அவுட் பன்னணு தெரிஞ்சது, அவ்ளோதா என்று மிரட்டி விட்டு காஃபி எடுத்து சென்றாள் காவ்யா.

ஆமடி காவ்யா, அப்பா எங்க போயிருக்காங்க, வந்ததில இருந்தே கேக்கலாம்ணு இருந்தே என்று ஜான்சி கேட்டாள்.

அப்பா எங்கயோ வெளிய கிளம்பி போயிருக்காங்க, சரி, டி.வி போட்றே பாருங்க என்று கூறிவிட்டு உலர்ந்த துணிகளை எடுக்க மொட்டைமாடிக்கு சென்றாள் காவ்யா.

காற்று பலமாக வீசயது. சில துணிகள் அடுத்த வீட்டு பால்கனியில் விழுந்து கிடந்தன. அதனையும் எப்படியாவது எடுத்தாக வேண்டும். அவர்கள் காவ்யாவின் தாயாருடன் கருத்து வேறுபாட்டில் உள்ளனர். ஆனால் காவ்யா யாருடனும் தேவையில்லாமல் சண்டையிட்டுக் கொள்வது கிடையாது. காவ்யாவைப் பொறுத்தவரை தன்னோடு கருத்து வேறுபாடு கொள்பவர்களைக் கூட நட்புறவோடு நடத்துவதே வழக்கம் என்பதால் அவளது தெருவில் உள்ளவர்கள் பலருக்கும் காவ்யா என்றால் செல்லம் தான். கடைக்குச் சென்ற காவ்யா ஸ்னாக்ஸ் வாங்கி வந்து தோழிகளிடம் கொடுத்து விட்டு தன் தாயை சந்தித்தாள்.

ஏம்மா நேத்து சாயங்காலம் நீதான துணி காய வெச்ச, கிளிப் போட்டு காயப்போட மாட்டியா, ஒனக்கு ஆயிரம் மொற சொல்லியாச்சு, அனிதா ஆன்ட்டி கூட தேவயில்லாம சண்ட போட்டுக்குவ, அப்றம் நா போய் அவங்கள சமாதானப்படுத்த வேண்டியிருக்கு என்று சத்தமிட்டாள் காவ்யா.

ஆமான்டி, நான்தா அப்பாவுக்கு மகளுக்கு பிரச்னயா இருக்கே, இப்போ அனிதாவ பேச்சுக்கு எதுக்கு இழுக்குற என்று சந்தியா கேட்டாள்.

நீ செய்யுற தப்புக்கு அப்பாவும் சேந்துதா பேச்சு வாங்குறாரு, அதுக்குதா உன்ன சத்தம் போடுறேன் என்று காவ்யா கூறினாள்.

ஆமா, எல்லாமே நான்தான செய்றே, அனிதா மட்டும் ஒங்களுக்கு தப்பே செய்யாத பச்சக் கொழந்த பாரு என்று ஆணவத்தோடு பதிலளித்தாள் சந்தியா.

எதுக்கு காவ்யா எப்பவும் அம்மா கூட சண்ட போட்டுட்டே இருக்க என்று மீரா அமைதிப்படுத்தினாள்.

ஒரு மொறதா மீரா அட்வைஸ் பன்னுவாங்க, அடுத்த மொற நாமதா சேஞ்ச் ஆகிக்கணும் என்று காவ்யா கூறினாள்.

சும்மா இரு காவ்யா, அம்மா அன்னெஜ்கேட்டடு, அவங்க அப்டி இப்டித்தா இருப்பாங்க, அதுக்காக நீ அட்வைஸ் பன்னிட்டே இருந்தன்னா உன்ன எல்லாரும் திமிருப்பிடிச்சவ, அப்டி இப்டின்னு தப்பா சொல்லுவாங்கடா என்று ஜான்சி அறிவுறுத்தினாள்.

ஐயோ அட்வைஸ்னு சொன்னது அனிதா ஆன்ட்டி சொன்னத, அவங்க ரொம்ப சுத்தபத்தமா இருக்கவங்க, ரொம்ப ஆச்சாரம் பாக்றாங்க, வீட்டுக்கு பொதுவான சுவரு இருந்தாலும் அதுல நாம போய் வறுவலுக்கான மீன் காய வெக்கிறது எல்லாம் அவங்க சொல்லுவாங்களா மாட்டாங்களா ஜானு, அப்றம் அவங்க சத்தம் போடுறாங்களேனு சண்ட போட்டுக்றாங்க, அவங்க எவ்வளவோ சொல்லிட்டாங்க, நாம தானே மாறிக்கணும், டிரஸ் காயப்போட கிளிப் யூஸ் பன்றதுக்காக அப்பா ஒரு பாக்கெட்டே வாங்கி தந்திருக்காங்க, அப்றம் யூஸ் பன்னலன்னா கேக்க மாட்டேனா, இப்போ நா போய் அவங்கட்ட சாரி கேட்டு எடுத்து வரணும் என்று அமைதியாக கூறினாள் காவ்யா.

சரி காவ்யா, அதுக்காக அம்மாவ ஏ கோவிச்சுக்குற என்று மீரா கேட்டாள்.

அப்பாவுக்கும் அனிதா ஆன்ட்டி ஹஸ்பன்ட் சுதாகர் அங்க்கிளுக்கும் ஏற்கனவே வியாபாரப் போட்டி இருக்குடா, அப்பாவ ஏதாவது சொல்லி அவரு டிஸ்ட்டப் பன்னிட்டே இருக்காங்க, நாம இப்டி அவங்க சொல்ற மாதிரி நடந்துட்டா அவங்க ஒன்னுக்கு நூறா சொல்ல மாட்டாங்களாடா, அனிதா ஆன்ட்டி கூட சண்ட போட்டுட்டாலும் நா போய் அவங்கட்ட பேசினதும் மறந்துட்டு நல்லா பேசிடுவாங்க, ஆனா சுதாகர் அங்க்கினள் பொறாமைலே ஊறுனவருடா, அவரே ஆன்ட்டிய டென்சன் பன்னி பேச வைப்பாங்கடா… ஓக்கே ஓக்கே, பேசிட்டே இருந்தா நீங்க ஸ்னாக்ச அப்டியே வெச்சிடுவீங்க, டைம் வேஸ்ட், நா போய் டிரசல்லா எடுத்துட்டு வந்துட்றேன் என்று காவ்யா கூறினாள்.

காவ்யா பக்கத்து வீட்டின் மின்னழைப்புமணியின் சுவிட்சை அழுத்தினாள். உள்ளே இருந்து அனிதா ஜன்னலைத் திறந்து யாரென்று எட்டிப் பார்த்தாள்.

ஓ… காவ்யா… கதவு தெறந்துதாம்மா இருக்கு, உள்ள சும்மா வாம்மா என்று அழைத்தாள் அனிதா.

பரவாயில்லங்க ஆன்ட்டி, உங்கட்ட ஒரு சாரி கேக்கத்தா வந்தேன் ஆன்ட்டி என்று காவ்யா தொடங்கினாள்.

எதுன்னாலும் உள்ளயே வந்து சொல்லும்மா, உன்ன எனக்கு தெரியும், நீ டீசன்ட்டான பொண்ணு, மெடிக்கல் காலேஜ்லாம் செலக்ட் ஆகிட்ட, ரொம்ப சந்தோசம், மொதல்ல உள்ளார வா என்று அவளது கைகளைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள் அனிதா.

ஆன்ட்டி, அம்மா எப்பவும் போல தப்பு செஞ்சுட்டாங்க ஆன்ட்டி, அதா சாரி கேட்டுட்டு…

அதா தெரியுமேடா, அங்க்கிள் இப்போ வெளியிலதா போயிருக்காங்க, ஒடனே சொல்ல வந்தத சொல்லிட்டு போம்மா, என்று அனிதா கூறினாள்.

ஆன்ட்டி என்னோட ரெண்டு சுடி உங்க பால்கனில விழுந்துடுச்சு, அம்மா கிளிப் போடாம விட்டாங்க போல ஆன்ட்டி, அதா உங்கட்ட சாரி கேட்டுட்டு எடுத்து போக வந்தேன் என்றாள் காவ்யா.

என்ன காவ்யா, சுடிதார் தானே விழுந்துச்சு, அப்றம் பொடவ கேக்குற என்று அனிதா கேட்டாள்.

காவ்யா திடுக்கிட்டாள்…

ஐ மீன், சாரி கேக்குற… என்று புண்ணகைத்தாள் அனிதா.

காவ்யா அமைதியாக இருந்தாள்.

போய் எடுத்துக்க காவ்யா, சாரி எல்லாம் கேக்க வேணாம், காத்துக்கு விழுந்துடுச்சு அவ்ளோதானே என்று கூறிவிட்டு பால்கனிக்கு செல்லுவதற்காக கதவைத் திறந்து விட்டாள் அனிதா.

மேலே சென்ற காவ்யாவுக்கு தொலைவில் இருந்து பெரும் புகைப்படலம் தெரிந்தது. ஏதோ தீ விபத்து ஏற்பட்டது போல் தெரிந்தது. தனது ஆடைகளை எடுத்துக் கொண்டு சாதாரணமாகவே கீழே இறங்கி வந்தாள் காவ்யா. அனிதாவுக்கு நன்றி தெரிவித்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள். ஆனால் தெருவெங்கும் ஒரே பரபரப்பு தெரிந்தது. பெரியவர்கள் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்தனர். ஒன்றும் புரியாமல் வீட்டுக்குச் சென்றாள் காவ்யா. அங்கே யாரும் இல்லை. தன் தாயையும் தோழிகளையும் தேடி மொட்டை மாடிக்கு சென்றாள் காவ்யா. அங்கும் காணவில்லை. தெருவில் பலர் வெகு வேகமாக மந்தை நோக்கி ஓடிச் செல்வதை மட்டும் அவளால் காண முடிந்தது. கீழே வந்த போது தன் கைபேசி அழைப்பொலி கேட்டது. உடனே சென்று பார்த்த போது அதில் ஐந்து தவறிய அழைப்புகள் தெரிந்தன. உடனே அந்த எண்ணை அழைக்க முயன்றாள். அதற்குள் அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

ஹலோ, நா கடைல இருந்து சங்கர் பேசுறேங்கம்மா, அண்ணே வந்த பஸ் கேஸ் சிலிண்டர் ஏத்தி வந்த வண்டில மோதி தீப்பிடிச்சுடுச்சாம்மா என்று கூற…

என்னங்க அங்க்கிள் சொல்றீங்க, அப்பா கடைக்கு வந்தாங்களா… என்று காவ்யா கேட்டாள்.

ஆமம்மா நீ காவ்யா பேசுறியா, நா அம்மா பேசுறதா நெனச்சுட்டம்மா, ஒனக்கு பணம் கட்ட பேங்க்குல இருந்து பணம் எடுக்க போயிருந்தாரும்மா, போயிட்டு கடைக்கி வந்துட்டு அங்க வீட்டுக்கு போகுறதா சொல்லிட்டு போனரும்மா, என்று சங்கர் கூற…

உடனே கைபேசியை அங்கேயே வைத்து விட்டு பேருந்து வந்து நிற்கும் மந்தையை நோக்கி ஓடிச் சென்றாள். அங்கே பலர் காவ்யாவை அமைதிப்படுத்தினர். தன் தாயார் எரிந்து போன பேருந்தைக் காணச் சென்றிருப்பதைத் தெரிந்து கொண்டு தானும் அங்கே செல்ல முயன்றாள். ஆனால் காவ்யாவை அவளது தோழிகள் தடுத்தனர். அவர்கள் கூட்டத்தின் ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர். காவ்யா சற்றுப் பதட்டத்துடன் மீண்டும் வீட்டுக்கு சென்றாள். தனது கைபேசியை எடுத்து தனது தந்தையின் எண்ணை அழைத்தாள். அதிலிருந்து அழைப்பு போகவில்லை. தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாகவே ஒலித்தது. அவளுக்கு எதுவும் புரியவில்லை. அப்படியே அதை எடுத்துக் கொண்டு வந்தாள். தன் தாயிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை என்பதால் மீண்டும் சம்பவ இடத்திற்கு செல்ல முயன்றாள். அப்போது அவளது தந்தையின் அழைப்பு எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

ஹலோ, நாங்க ஜி3 போலிஸ் ஸ்டேசன்ல இருந்து பேசுறோம், நீங்க மிஸ்டர் கந்தனோட டாட்டராங்க மேடம் என்று குரல் கேட்டது.

எஸ் சார், எங்க அப்பாவுக்கு என்னங்க சார், அவரு… என்று பதற்றத்தோடு அலறினாள் காவ்யா.

பொறுங்க மேடம், உங்க அப்பா எந்த தப்பும் செய்யலங்க மேடம், என்று பேச…

தெரியும் சார், ஆனா அவரு உயிருக்கு எதுவும் இல்லயே சார் என்று கண்ணீர் சிந்தக் கேட்டாள் காவ்யா.

நோ மேடம், எதுவும் இல்லங்க மேடம், வெறும் மயக்க மருந்துதா மேடம், அவரு நார்மலாத்தா இருக்காரு மேடம் என்று கூறினர்.

காவ்யாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. தலைமுடியைக் கோதியவாறு மேலும் கீழும் பார்த்தாள். அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

மேடம், உங்க அப்பா எந்த தப்பும் செய்யலங்க மேடம், ரிப்ளை பன்னுங்க மேடம், அவர மயக்க மருந்து காட்டி அவரோட பணத்த அபகரிச்சுட்டாங்க மேடம், அதா நாங்க கால் பன்னிருக்கோம், வேற ஒன்னும் இல்லங்க மேடம், பயப்படாதீங்க என்று அதிகாரி கூறினார்.

பெருமூச்சு விட்டாள் காவ்யா. சார் அப்பாவ என்னோட பேச சொல்லுங்க சார் என்று காவ்யா கேட்டாள்.

சாரி மேடம், உங்க அப்பா வீட்டுக்கு பணம் இல்லாம போனா நீங்க ஏத்துக்க மாட்டீங்கன்னு சொல்லி தற்கொலைக்கு ட்ரைப் பன்னாரு மேடம், இப்போ அவர நாங்க கூல் பன்னிட்டு நாங்க வீட்டுக்கு இன்ஃபாம் பன்ன கூப்பிட்டோம் மேடம் என்று அதிகாரி கூறினார்.

ஓக்கே சார், நீங்க அவர அங்கயே பாத்துக்கோங்க, தேட்டி மினிட்சுல நா வந்து அழச்சுட்டுப் போறே சார், நா சொன்னா கண்டிப்பா அப்பா கேப்பாங்க சார் என்று கூறி விட்டு உடனே அங்கிருந்து கிளம்பினாள்.

தோழிகள் அவளைத் தடுத்தனர். காவ்யா நடந்தவற்றைக் கூறினாள். தாங்களும் அவளோடு வருவதாகக் கூறி உடன் சென்றனர். எரிந்து போன பேருந்துக்குள் அரைகுறையாக எரிந்து கிடந்த காவ்யாவின் தந்தையின் பையைக் கண்டு அவளது தாய் கதறி அழுது கொண்டிருந்தனர். ஆனால் எந்தவொரு பதட்டமும் இல்லாமல் வந்த காவ்யாவைப் பார்த்த சந்தியாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் பையைப் பார்த்து மீண்டும் அழுதாள் சந்தியா. அப்போது காவ்யாவுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. அந்தப்பையை வைத்திருந்தவர் திருடனாக இருப்பார் என்றும் அவரே தன் தந்தையிடம் பணப்பையை அபகரித்திருக்கலாம் என்றும் புரிந்தது. எதுவும் கூறாமல் தன் தாயை வீட்டுக்கு அனுப்பி விட்டு தோழிகளோடு சென்று தந்தையை வீட்டுக்கு அழைத்து வந்தாள் காவ்யா.

மாமா… என்று ஓடோடி வந்தாள் சந்தியா. தன் கணவன் உயிரோடு இருப்பது தெரிந்ததும் தன் உயிர் மீண்டும் கிடைத்தது போல் உணர்ந்தாள். ஆனால் கந்தனுக்கு எந்த உடன்பாடும் இல்லை.

அப்பா, ஏம்ப்பா இப்டி செஞ்சீங்க, பணம் போனா என்னப்பா என்று காவ்யா அமைதிப்படுத்தினாள்.

எப்டி காவ்யா, நீ மெடிக்கல் காலேஜ்ல சீட் வாங்கணுங்குறதுக்காக பத்து வருசமா நா சேத்து வச்ச காசும்மா, உன்ன டாக்டரா பாக்க நெனச்சனேம்மா என்று கண்ணீர் விட்டுக் கூறினார் கந்தன்.

வெளியில நடக்குறத பாருங்கப்பா, நெறயப்பேரு பஸ் ஆக்சிடன்ட்ல உயிரயே எழந்துட்டாங்க, ஆனா நீங்க தப்பிச்சுட்டீங்க, இருந்தும் அப்டி தப்பு செய்ய ஏம்ப்பா நெனச்சீங்க, பணத்தால நா டாக்டரா மட்டுந்தா இருந்துருப்பே அப்பா, அதுவும் இந்த பஸ்சுல… வேணாம்ப்பா, என்னப் பொறுத்தவர நீங்க உயிர் தப்புச்சதே பெரிய கிஃப்ட்டா நெனைக்றேம்ப்பா, என்னப் பொறுத்தவர நா டாக்டரா இல்லன்னாலும் பரவாயில்லப்பா, உங்களுக்கு நல்ல டாட்டரா இருக்கேனே, அதுவே போதும்ப்பா என்று கூறினாள் காவ்யா.

அங்க்கிள், வேணாம் அங்க்கிள், ஏ அம்மாவுக்கு ஸ்டமக் கேன்சர் இருக்கது எனக்கு தெரியாதுன்னு எல்லாரும் நெனச்சுட்டு இருக்காங்க, ஆனா எனக்கு தெரியும் அங்க்கிள், இருந்தாலும் நா தைரியமா இருக்கேனே அங்க்கிள், நீங்க எல்லாம் இருக்கதாலதா அங்க்கிள், பணம் போனா எஜுக்கேசனல் லோன் போட்டு படிச்சுக்கலாம் அங்க்கிள், நீங்க… நோ அங்க்கிள், இனிமே அப்டி செய்யாதீங்க அங்க்கிள் என்று மீரா அமைதிப்படுத்தினாள்.

மீராவை அனைவரும் கவனித்தனர். அவளது கண்களில் கண்ணீர் வந்தது. துடைத்துக் கொண்டாள்.

அதோ பாருங்க காலண்டர், அது தெனமும் ஒரு தேதிய இழந்துட்டு இருக்கு, ஆனா அது கவலப்படுறது இல்லயே, கடைசில எல்லா தேதியும் எழந்துட்டு காட்சிப்பொருளா மாறிடுது, உயிரே இல்லாத அதுவே இழப்ப நெனச்சுக் கவலப்படல, நாம மட்டும் ஏ கவலப்படணும், காலத்த வெல்ல முடியாதுதா, ஆனா வருசம் ஆனா புது காலண்டர் வாங்குற மாதிரி நாமதா நமக்கு ஏத்த மாதிரி புது திட்டங்கள போட்டு மாத்திக்கணும், போனத நெனச்சு கவலப்படக் கூடாது என்று மீரா கண்ணீரைத் துடைத்துக் கொண்டே கூறினாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *