கூண்டில் அடைபட்ட கிளிபோல அவளுடைய மனம் தவித்தது. அவளுக்கு ஒரு இடத்தில் இருக்கை கொள்ளவில்லை. அடிக்கடி வாசலில் வந்து வெளியே எட்டிப் பார்ப்பதும், உள்ளே போய்க் கயிற்றுக் கட்டிலில் உட்காருவதுமாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தாள். “அவர் இன்றைக்கு நல்லாய் வருவாரோ, அல்லது கள்ளுத் தண்ணியைப் போட்டுக்கொண்டு.” என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள்.
சூரியன் அஸ்தமித்து இரண்டு நாழிகைக்கு மேலாகிவிட்டது. தன் ஒளி நாயகனைத் தின்றுவிட்ட துர்த்தையை எதிர்த்துப் பஸ்பமாக்கிவிடுவது போல், ஆகாயம் நெருப்புக்கும் கோடி நட்சத்திரக் கண்களோடு நெருங்கிப் படர்ந்துவரும் இருளின் மேல் கவிந்து கொண்டிருந்தது. வடகீழ்த் திசையிலிருந்து வீசிய குளிர்காற்றில் பனைமரங்களின் தலைகள் பேய் அலறு வது போல் அலறிக் கொண்டிருந்தன.
நாகம்மாவின் ஐயம் நீங்கி நிச்சயம் ஏற்பட்டது; “ஓம் ஓம், இன்று எங்கோ கள்ளுக்கடைதான் – இல்லாவிட்டால் பொழுது கருகி இவ்வளவு நேரமாகியும்..” என்று வேதனையோடு நிச்சயம் செய்து கொண்டாள். வரப்போகும் ஒரு தவிர்க்க முடியாத ஆபத்தை முன்னதாக அறிந்து கலங்கும் ஒரு மனப்பான்மையோடு நாகம்மா வெளிக்கதவைச் சாத்தி விட்டு உள்ளே போய்க் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
மூலையில் முக்காலியின்மேல் வைக்கப்பட்டிருந்த குத்து விளக்கின் சுடர் போல் அவளுடைய மனமும் அலைந்து கொண்டிருந்தது. அந்தச் சுடர் நான்கு திசைகளிலும் அசைந்து கொடுத்ததே அன்றி, அவிந்து போய் விடவில்லை.
சோமசுந்தரனையும் அவளையும் இப்படி ஒன்றாகச் சேர்த்து முடிபோட்டு வைத்த விதியின் கருத்தை அவள் ஆய்ந்து உணர்ந்து கொள்ளமுடியாது தவித்தாள். அவர்கள் இருவருக்கும் கலியாணம் கூட ஆகவில்லை . ஆனால் அதற்காக அவள் வருந்தவில்லை . உண்மையில் அவன் அவளுடைய இருதயக் கமலத்தில் ஒரு தெய்வம் மாதிரி. கலியாணத்தில்தான் – கலியாணச் சடங்கில்தான் என்ன இருக்கிறது? ஒரு பிராமணன் யாருக்கும் தெரியாத சில சமஸ் கிருத ஸ்லோகங்களை உச்சரிப்பதினாலும், எரியும் நெருப்புக்கு முன்னால் இருந்து ஒரு தாலியை ஆண்மகன் பெண்ணின் கழுத்தில் கட்டுவதினாலும் ஏதோ ஆகிவிடப்போகிறதா, என்ன? இயற்கை யிலே இல்லாத அன்பும் தாம்பத்திய ஒற்றுமையும் இந்த அர்த்தமற்ற சடங்கினால்தானா உண்டாகிவிடப் போகிறது? இல்லை, இல்லை. அவன் தங்கள் இருவருக்கும் கலியாணச் சடங்கு நடக்கவில்லை என்பதற்காக வருந்தவில்லை.
உலகம் அவளை ‘வைப்பாட்டி’ என்று கூறிக் கொள்கிறது. அதனால் என்ன? உலகம் அவளுக்கு அல்லது அவனுக்கு என்ன நன்மையைச் செய்துவிட்டது? மூட உலகம்…
அவர்கள் இருவரையும் பிடித்திருக்கும் வறுமைப் பிணியை நினைந்தும் அவள் வருந்தவில்லை. இவளிடமிருந்த வயல் போதும் உணவளிப்பதற்கு. ஆனால் அவனுடைய கலை இப்படி எவ்வளவு காலத்திற்கு மங்கிக் கிடக்கப்போகிறது? இப்பொழுது இல்லா விட்டால் இன்னும் சில ஆண்டுகள் கழித்தாவது உலகம் வந்து அவனுடைய கால்களில் விழப்போகிறது. அப்பொழுது செல்வமும் தானாகவே வந்து சேரும்.
அல்லது அவன் – அவளுடைய நாதன் – இப்படி ஒரு நாடோடியாக – வாழ்க்கையில் ஒரு இலட்சியமுமில்லாமல் திரி கிறான் என்பதுதான் அவளுக்குக் கவலையா? அதுவும் இல்லை. அவன் ஒரு நாடோடியாக இல்லாமல் வேறு எப்படி இருக்க முடியும்? அவனுக்கு ஊருமில்லை பேருமில்லை. அவன் பிறந்ததே ஒரு பனஞ்சோலையில்தானே! உலகத்தின் சம்மதமின்றித் தன் இளமையின் ஓலத்திற்குச் செவிசாய்த்துவிட்ட யாரோ ஒரு கன்னி, பிறகு அந்த ஓலத்திற்குச் செவிசாய்த்ததில் விளைவைக் கண்ட வுடன் நடுங்கிவிட்டாள். உலகம் இனி அவளை ஏற்றுக் கொள்ளாது. அவள் ஒரு நச்சுக்கொடி. அவளுக்கு உலகத்தின் தண்டனையை எதிர்த்து நிற்கத் தைரியம் உண்டாகவில்லை. அதனால் யாரும் அறியாமல் ஊர்க்கோடியில் உள்ள ஒரு பனஞ்சோலையில்..அப்படிப் பிறந்த பிள்ளை நாடோடியாகாமல் வேறு எப்படி ஆகும்? தாயின் மேல் விதிக்கவேண்டிய தண்டனையை உலகம் மகன்மேல் விதித்து விட்டது. அவன் ஒரு நாடோடி, அமானி, அங்கிடுதத்தி….
வடநூற்கடலையும் தென்மொழிக் கடலையும் நிலை கண்டுணர்ந்தவராகிய சோமசுந்தர சாஸ்திரியார் என்னும் கருணை வள்ளல், பனஞ்சோலையிலே கிடந்த சிசுவை எடுத்து வளர்த்து, அதற்குத் தன் பெயரையும் கொடுத்து, அதன் உள்ளத்திலே அறிவுக் கனலையும் மூட்டியிராவிட்டால் சோமசுந்தரம் தெருநாயாகி விட்டிருப்பானே.
அவனுக்குப் பன்னிரண்டு வயதாவதற்கு முன் சோமசுந்தர சாஸ்திரியார் இறந்துபோய் விட்டார். உலகம் அவன் மேல் ஏறி மிதித்தது…. ஆனால் அவன் உள்ளத்திலே மூண்டிருந்த கனல் மட்டும் அவிந்து போய் விடவில்லை. நாளடைவில் அது வளர்ந்து, இப்பொழுது சுவாலையாக மாறியிருந்தது.
இந்தச் சமயத்தில்தான் சோமசுந்தரம் கள்ளரக்கனிடம் சரண் புகுந்தது. அதுதான் நாகம்மாவிற்கும் பெரும் வேதனையாக இருந்தது. “அவருடைய கலை அழிந்துபோய் விடப்போகிறதே…” என்று ஏங்கினாள்.
நாகம்மா உயிர் வாழ்ந்ததே அந்தக் கலைக்காகத்தான்.
அவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை. சங்கிலிப் பின்னல் போல் ஒன்றன் பின் ஒன்றாக வரும் எண்ணங்களில் தன்னை மறந்து இருந்துவிட்டாள்….
யாரோ வாசற்கதவை வேகமாகத் திறப்பதுபோலக் கேட்டது. மறுகணம் சோமசுந்தரம் உள்ளே நுழைந்தான். அவனுடைய தலைமயிர் பறந்து கிடந்தது. கண்கள் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. முகம் எல்லாம் வியர்வை.
நாகம்மாவுக்கு ஒரே கிலி. இன்னும் வெறி! “ஐயோ-” என்று ஏதோ சொல்ல வாயெடுத்தாள். ஆனால் அவன் விடவில்லை.
“நாகு, போய் அந்த ஏட்டுக்கட்டையும் எழுத்தாணியையும் எடுத்துக்கொண்டுவா- சீககிரம்!” என்றான் சோமசுந்தரம்.
நாகம்மாவுக்குப் ‘பட்’ டென்று எல்லாம் விளங்கிவிட்டது. இன்று கள்ளுவெறி இல்லை! கவிதை வெறி!
அவளுக்கும் வெறி. அவளுடைய கண்களும் உதடுகளும் சிரித்தன. முகம் மலர்ந்தது. உள்ளம் பரவசத்தால் பொங்கியது. அவள் உயிர் வாழ்ந்ததே இந்த ‘கவிதைக்’ கணத்திற்காகத்தானே!
விரைவாக உள்ளே ஓடிப்போய் ஒரு புது ஏட்டுக் கட்டையும் எழுத்தாணியையும் எடுத்துக்கொண்டு வந்து எழுதுவதற்குத் தயாராகக் குத்துவிளக்கருகில் உட்கார்ந்து கொண்டாள்.
சோமசுந்தரம் அப்படியே நின்றுகொண்டிருந்தான். அவனுடைய கண்களில் ஒரு உன்மத்த வெறி. இமைகொட்டாமல் வெளியே தெரியும் கும்மிருட்டைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
நாகம்மா எழுத்தாணியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். அவளுடைய கை சிறிது நடுங்கியது.
சோமசுந்தரனுடைய உதடுகள் அசைந்தன. அவனுடைய வாயில் இருந்து சொற்களும் சொற்றொடர்களும் வெளிவர ஆரம் பித்தன. முதலில் ஒழுங்கில்லாமல் சிதைந்தும் சிதறியும் வெளி வந்த வார்த்தைகள் வர வரச் சமபூமியில் பாயும் ஆறுபோல் நிற்சலனமாகவும் தொடர்பாகவும் வெளிவந்தன. நாகம்மா ஏட்டைப் பார்த்தபடி கை ஓயாமல் எழுதிக் கொண்டிருந்தாள்.
ஆம், ஆம், அவன் ஒரு கவி.
அவனுடைய கவிதை மிக அற்புதமானது; காட்டையும் கடலையும், மலரையும் மலையையும் சேர்த்து அவைகளின் ஒவ்வொரு அம்சத்தையும், ஒவ்வொரு சொல்லோவியமாக வகுத்துச் சிந்தையை மேல் எழுப்புவது. அவனுடைய கவிதையின் மேதை வர்ணிக்கும் தரத்தன்று. மனித உள்ளத்திலே புயல்களையும் சண்ட மாருதங்களையும் தோற்றுவிக்கவல்லன அவனுடைய சொற் சித்திரங்கள்.
அவன் இதயத்திலிருந்து கவி பாடுகிறான். வெறும் நூலறிவில் இருந்து பாடவில்லை. அதனால் அவனுடைய கவிதை யாப்பிலக் கணத்தின் வரம்புகளையும் தகர்த்து எறிந்து கொண்டு காட்டாற்று வெள்ளம் போலப் புரண்டு சென்றது. வாயிலிருந்து வெளிவரும் வெறும் வார்த்தைகளுக்கு இலக்கண வரம்பு செய்யலாம்; இருதயத்தின் ஆழத்திலிருந்து உற்பத்தியாகும் உணர்ச்சிக்கு இலக்கணம் செய்யமுடியுமா?
நாகம்மா எழுத்தாணியைக் கீழே வைத்துவிட்டு விரல்களை மடக்கி நெட்டி முறித்துக்கொண்டாள் பாட்டு முடிந்துவிட்டது. ஆனால் அவளுடைய மனம் அந்தப் பாட்டைத் தோற்றுவித்த மாய உலகத்திலேதான் இன்னும் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. கற்பனை என்னும் படகிலே ஏறிக்கொண்டு வாழ்க்கைச் சமுத்தி ரத்தின் எல்லையைக் காண்பதற்கு முயல்கின்றானா அவன்! ஆனால் பிரயாணம் நீண்டுகொண்டு செல்வதுபோலும் – எதிர்த்து அடிக்கும் புயலின் வேகம் படகைத் தடுக்கிறதா? இந்த வாழ்க்கையின் அர்த்தம் மனிதனுக்கு என்றுமே புரியப்போவ தில்லையா? வாழ்க்கை எண்ணமாய், இலட்சியமாய், கற்பனையாய், கனவாய்ப் போகும்! இந்தப் புதிர்-!
திடீரென்று நாகம்மா தன் சுய உணர்விற்கு வந்தாள்.
“ஐயோ, உங்களுக்குப் பசிக்கவில்லையா? நான் பைத்தியக்காரி-”
“ஐயோடி அம்மா, அது இன்றுதானா உனக்குத் தெரியும்? பைத்தியக்காரனோடு சேர்ந்தவளும் பைத்தியக்காரிதானே! இல்லா விட்டால் உன்னுடைய ஆள் விழுங்கிக் கண்களுக்கும், கொஞ்சும் வாய்க்கும், ஒசியும் இடைக்கும் எத்தனையோ தனவந்தர்களெல் லாம் ஏங்கிக்கிடக்க அவர்கள் எல்லோரையும் புறக்கணித்துவிட்டு இரண்டு காசு சம்பாதிக்கமாட்டாத இந்தப் பைத்தியக்காரனைக் கட்டிக்கொண்டு அழுவாயா? நீ அரசனுடைய பத்தினியாகிச் சுகிக்கவேண்டியவள் -”
“ஐயையோ, இதெல்லாம் இப்ப யார் கேட்டது? உங்களிலும் பார்க்கச் சிறந்த அரசன் எனக்கு வேறு எங்கே கிடைக்கப் போகிறான்! நான் திறந்த கண்களோடுதானே உங்களிடம் வந்தேன்? நீங்கள் என்னை ஏமாற்றவில்லையே. உங்களுடைய வறுமையையே சுவர்க்க போகமாக நான் ஏற்றுக் கொள்ளவில்லையா? காசு காசு என்கிறீர்களே, காசைத் தேடினால்தானே காசு வரும். உங்களுடைய பாட்டு ஒவ்வொன்றும் லட்சம் பொன் பெறுமே. பரராசசேகர மகாராசாவிடம் எத்தனை புலவர்கள் வந்து பரிசில் பெற்றுப் போகிறார்கள். நீங்கள் மட்டும் போக மறுக்கிறீர்களே! இனி நானாவது-”
“வேண்டாம், நீ போகவேண்டாம். நான் என்ன பரிசு பெறவா பாட்டுப் பாடுகிறேன்? பாட்டு என் உயிரிலும் ஊறிக் கிடக்கிறது. என் உணர்ச்சிகள் என் இருதயத்தைக் கௌவிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. அது எனக்கு வேதனையைக் கொடுக்கிறது. உலகத்திலே நடக்கும் ஆபாசங்களையும், துரோகங்களையும், மனிதர்களைப் பீடித்திருக்கும் அர்த்தமற்ற நம்பிக்கைகளையும், கோட்பாடுகளையும் காணும் பொழுது என் உள்ளம் குமுறுகிறது; அதனால் பாடுகிறேன். பாட்டு எனக்குச் சாந்தி அளிக்கிறது.”
“என் துரையே, என் முகத்தைக் கொஞ்சம் பாருங்கள். நீங்கள் பெருமையை விரும்பவில்லை. பொருளை விரும்பவும் இல்லை. ஆனால் நான் அவைகளை விரும்புகின்றேன். நீங்கள் மனிதருக்குள்ளே ஒரு மணி. உங்களை ஒரு அரசனாக – ஒரு வீரனாக – ஒரு வித்வானாகக் காண்பதற்கு என் உள்ளம் துடிக்கிறது. உலகம் உங்களுக்கு மரியாதை செய்வதைப் பார்ப்பதற்கு என் கண்கள் ஆசைப்படுகின்றன. அந்த ஆசைக்குத் தடையாக நீங்கள் நிற்கக்கூடாது. நான் பெண் – நாளைக் காலையில் நானே இந்தப் பாட்டைக் கொண்டு போய்ப் பூபால முதலியாரிடம் கொடுத்து அவர் மூலம் அரசனுக்குத் தெரியப்படுத்துகிறேன்-”
நாகம்மாவுடைய வேண்டுகோளை அவனால் மறுக்க முடிய வில்லை. பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள். மனிதன், அதுவும் காதலன் இரங்காமல் முடியுமா?
பூபால முதலியார் தம் பேரப்பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்தார். அவருடைய மகளின் கட்டளை அது. “அப்பு, இந்தப் பிள்ளைகளைக் கொஞ்சம் உன்னோடு கூப்பிட்டு வைத்திரு; இங்கே ஒன்றும் செய்ய என்னை விடுகுதுகளில்லை” என்று அவள் கூறியிருந்தாள். அதோடு முதுமைக்கும் பாலியத்துக்கும் உறவு அதிகம். கரும்பு தின்னக் கைக்கூலியா….
வெளியே உக்கிரமான வெய்யில் நிலத்தையும் தாவரங் களையும் காய்ச்சி வறட்டிக் கொண்டிருந்தது. மாடுகள்கூட பனை மரங்கள் கொடுக்கும் அற்ப நிழலில் படுத்திருந்து அசைபோட்டுக் கொண்டிருந்தன. தென்னோலைக் கூரையானபடியால் வீட்டி னுள்ளே வெப்பம் அவ்வளவாகத் தெரியவில்லை. முதலியாருடைய மகள் பாடுபட்டுப் பெண்களுக்கு இயற்கையாகவே உள்ள புனித உணர்ச்சியோடு அழகாக மெழுகியிருந்த திண்ணை குளிர்மையாக இருந்தது.
பூபால முதலியார் ஒரு குணக் குன்று. அவருடைய உள்ளம் குழந்தையினது போலக் கள்ளங் கபடமற்றிருந்தது. மிக விசாலமான பரந்த மனப்பான்மையுடையவர். ஒரு யாழ்ப்பாணத் தமிழரைப் பற்றி அவ்வளவு சொல்வது பெரிய காரியமல்லவா?
ஆனால் அவருக்குப் புகழைக் கொடுத்தது அவருடைய தமிழ் அறிவுதான். இலக்கியத் துறையிலும் சமயத்துறையிலும் அவருடைய கருத்துக்கள் மிக அகன்றவையாக இருந்தன. மனித இயற்கைக்கும் பொது அறிவிற்கும் ஏற்ற முறையில் அவர் நூல்களுக்குப் பொருள் கூறுவதில் நிபுணர். சங்க இலக்கியங்களும், ஏனைப் பிற்கால இலக்கியங்களும் அவர் மூலமாகக் கேட்போருக்கு மிக இலகுவாக வந்தன. தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்கள், சைவத் திருமுறைகள்…. எல்லாம்.
அதனால் அவருக்குப் பரராசசேகர மன்னனுடைய சபை யிலே மதிப்பு இருந்தது. அவர் சொல் அம்பலம் ஏறும்.
அவர் தம் பேரப்பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில்தான் நாகம்மா அங்கு வந்து சேர்ந்தாள். அவளுடைய கையிலே ஒரு ஏட்டுக்கட்டு இருந்தது.
பூபால முதலியார் அவளை “வா பிள்ளை , இப்படி இரு. ஏது இந்தக் கொதிக்கிற வெய்யிலிலே -?” என்று கூறி வரவேற்றார். நாகம்மா தலையில் போட்டிருந்த தன் முந்தானையை எடுத்து இடுப்பிற் செருகிக் கொண்டு திண்ணையில் உட்கார்ந்தாள்.
பூபால முதலியாருக்கு நாகம்மாவுடைய சரித்திரம் எல்லாம் தெரியும். ஆனால் அவர் அவளைப் பற்றித் தாழ்மையாக எண்ண வில்லை. சமூகத்தின் அபிப்பிராயங்களைப் பொருட்படுத்தாத அவளுடைய வீரத்தை மெச்சினார்.
“பிள்ளை , உன்னுடைய அவர் பாடு எப்படி? ஏதாவது செய்கிறானா அல்லது சும்மாதான்….?” என்று கேட்டார்.
“அப்பா, அதை ஏன் கேட்கிறீர்கள்? மிக உன்னதமான பாட்டெல்லாம் சதா ஆக்கிக்கொண்டேயிருக்கிறார். ஆனால் அவை களைக் கொண்டு போய் அரசனிடம் காட்டிப் பரிசில் ஏதாவது பெறுவதற்கு மறுக்கிறார். இராத்திரிகூட “சிற்றுயிரின் தனிமை” என்று ஒரு பாட்டு இயற்றி இருக்கிறார். அதன் மோகன சக்தி என்னை அப்படியே ஒரு அமுக்கு அமுக்கி எடுத்துவிட்டது. அந்தப் பாட்டுத்தான் இந்த ஏட்டில் இருப்பது. நான் அவரிடம் பெரிய சண்டை போட்டு எடுத்து வந்திருக்கிறேன். அதை நீங்களாவது தயவுசெய்து அரசசபையில் அரங்கேற்றி உதவவேண்டும்.”
“எங்கே அதை இப்படிக் கொடு பார்க்கலாம்.” பூபால முதலியாருக்கும் சோமசுந்தரனுடைய பாட்டுக்கள் மேல் அபார மான பிரியம் இருந்தது. முன்பும் பல தடவை அவைகளைப் படித்து அனுபவித்திருக்கிறார்.
பூபாவ முதலியார் ஏடுகளைப் புரட்டிப் பார்த்தார். அவர் சொன்னார், “பாட்டின் தொனியும் பொருளும் மிக நல்லாக இருக்கின்றன. அரசன் இதைக் கண்டு புளகாங்கிதம் அடைவா னென்பதற்கு ஐயமில்லை. ஆனால் அரசனிடம் போகுமுன் வித்துவ சபையார் இதை ஏற்றுக்கொள்ள வேண்டுமே… அதுதான் எனக்குக் கவலையாக இருக்கின்றது. இந்தச் சுதந்திரமான பாட்டு நடையை அவர்கள் அனுமதிப்பார்களோ, என்னவோ? வித்துவசபையின் தலைவரான அரசகேசரி பழமை மோகம் கொண்டவர். அதுவும் இப்பொழுது, தன் இரகுவம்சத்தை அரங்கேற்றிய கர்வத்தோடு இருப்பவர்… ஆயினும் பாதகம் இல்லை . நான் என்னால் கூடிய வரை தெண்டித்துப் பார்க்கிறேன். நீ போ பிள்ளை, கவலைப் படாதே. நானும் தமிழ்ப்பித்துக் கொண்டவன்தான்…”
பரராசசேகர மன்னனுடைய வித்துவ சபையிலே, புலவர்கள் சோமசுந்தரனுடைய “சிற்றுயிரின் தனிமை” என்ற பாட்டை அடி அடியாகவும் சீர் சீராகவும் அசை அசையாகவும் பிய்த்துப் பிடுங்கி ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்.
வித்துவ சபையார் முதலில் அந்த ஏட்டைக் கண்ணெடுத்தும் பார்ப்பதற்குக்கூட மறுத்து விட்டார்கள். “யார் இவன்? இவன் குலம் யாது?. பா இயற்றும் திறன் யாண்டுப் பெற்றனன்? யாங்கள் இதுகாறும் இவன் பெயரைக் கேள்விப்பட்டிலமே! இவனது அட்டிலில் துஞ்சும் அகப்பைத் தண்டும் பாநவிலும் கொல்?” என்றெல்லாம் கேட்டார்கள். முதலிலே அவர்களுக்குச் சோம சுந்தரனிடம் வெறுப்பு ஏற்பட்டு விட்டது; பொறாமையும் கூட.
கடைசியாகப் பூபால முதலியார் வேண்டுகோளுக்கிணங்கி அதைப் படிப்பதற்கு ஒருவாறு ஒப்புக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுடைய மனம் குற்றம் காண்பதிலேயே முனைந்து நின்றது.
அரசகேசரி இளவரசர் தலைமை வகித்தார். ஆனால் அவர் இந்த ஆராய்ச்சியில் மட்டும் தலையிடவில்லை. இரகுவம்சம் இயற்றிய ராசப்புலவன் நேற்று முளைத்த – யாரென்றறியத்தகாத – சின்னப் புலவனுடைய அற்பப் பிதற்றலை ஆராய்வதென்றால்-! அந்த வேலையை அவர் மற்ற புலவர்களிடம் விட்டுவிட்டார்.
பூபால முதலியார் தன்னால் ஆனமட்டும் முயன்று பார்த்தார். இலகுவான இயற்கையான தமிழ் நடையைத்தான் யாரும் விரும்பு வார்கள். யாவருக்கும் புரியும்படி எழுதுவதே ஒரு தனிக்கலை. யாப்பிலக்கண விதிகளெல்லாம் பா இயற்றுவதற்கு முயலும் குழந்தைப் புலவனுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்தனவேயன்றி, கைதேர்ந்த புலவனின் சொற்பெருக்கையும் கற்பனா வேகத்தையும் தடை செய்யும் முட்டுக்கட்டைகளல்ல. அதோடு, விஷயத்தின் உயர்விற்கும், அதை வரிசைப்படுத்திக் கூறும் நயத்திற்குமே முதல் ஸ்தானம் கொடுக்கவேண்டும் என்றெல்லாம் சொன்னார். ஆனால் இவை ஒன்றும் புலவர்களுடைய செவிகளில் ஏறவில்லை.
சோமசுந்தரனுடைய பாட்டை எந்தப் பாவில் அல்லது பாவினத்தில் சேர்ப்பதென்றே அவர்களுக்குத் தெரியவில்லை. வெண்பா, அகவற்பா, வஞ்சிப்பா, கலிப்பா இந்த நான்கு பாவிலும் அது சேரவில்லை. அல்லது பாவினங்கள் ஏதாவதொன்றில் சேரு கிறதென்றால் அதுவும் இல்லை. இவை ஒன்றிலும் சேராதது எப்படி ஒரு பாட்டாகும் என்பது அவர்களுடைய முதற் பிரச்சனை.
எதுகை இல்லை, மோனை இல்லை, தளை சீர் சரியில்லை, துறை பொருத்தமில்லை – இப்படி ஆயிரம் பிழைகள்.
ஆகவே “சிற்றுயிரின் தனிமை” பரிசில் பெறுவதற்கு உரிய தல்ல என்பது மட்டும் இல்லை, அது ஒரு நூலாக வெளி வருவதற்கே தகுதியற்றது என்று அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள். “பாட்டு இயற்றுவான் புகும் ஒருவன் அப்பாட்டின் இலக்கணங்களைச் செவ்விதிற் பேணி இயற்றாக்கால், அவன் பேதை எனப்படுவ னன்றோ; பிழைபடுமன்றோ. தளை பூணும் கையறியாய் பேதை வினை மேற்கொளின்” என்றார் பொய்யாமொழியாரும். அங்ஙனம் துணிந்த பேதையின் பாட்டு சான்றோர் குழாத்தில் நகை விளைவிக்கும்…” என்று அப்புலவர்கள் தீர்ப்புக் கூறினார்கள். அத்தீர்ப்பை அரசகேசரியும் ஆமோதித்தார்.
பூபால முதலியார் வாடிப் பதைக்கும் உள்ளத்தோடு அந்த ஏட்டுக்கட்டை எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார். இருட்டி விட்டபடியால் மறுநாட்காலை நாகம்மாவுக்குத் தகவல் தெரிவிக்கலாம் என்று நினைத்தார்.
யாரோ ஒருவன் சோகத்தின் கரியமையினைக் கொண்டு வர்ணம் தீட்டியதுபோல் வானம் இருண்டு கிடந்தது. அவன் ஏன் அப்படிச் செய்கிறான்? அவன் உன்மத்தனா…..? பொழுது அஸ்தமித்து இன்னும் அதிக நேரம் ஆகவில்லை. அதற்குள் இவ்வளவு இருள்; மழை இருள். இடை இடையே தோன்றிய மின்னல் ஒளி அந்த அந்தகாரத்தை இன்னும் ஆழமாக்கியதே ஒழியக் குறைக்க வில்லை .
நாகம்மாவுக்குப் பிரகிருதியே தன்மேல் கோபங்கொண்டு தன்னைப் பயமுறுத்தியது போலத் தோன்றியது. யாது காரணத் தாலோ, அவளுடைய மனம் மரணத்தைக் குறித்துச் சிந்தித்தது.
அது எங்கே, இந்தக் கோரமான இருளில் ஒளித்துக் கொண்டி ருக்கிறதா? குளிர் காற்று சோகத்தையும் ஏக்கத்தையும் அள்ளி வீசி எறிந்தது. நாகம்மா நடுங்கினாள்.
அன்று மாலையிலும் நாகம்மா வீட்டில் தனியே இருந்தாள். சோமசுந்தரம் வெளியே போயிருந்தான். இன்னும் வரவில்லை… வழக்கம் போல அவளுடைய மனம் அங்கலாய்த்தது. “இன்றும் கள்ளு…” என்று தொடங்கிய ஒரு எண்ணம் ஒரு விதமான குழைவும் இரக்கமும் கலந்த வாஞ்சை உணர்ச்சியினால் தடைபட்டு நின்று விட்டது.
எங்கோ ஒரு புளிய மரத்தில் இருந்துகொண்டு ஒரு ஆந்தை கத்திற்று. இன்னும் ஒரு ஆந்தை அதற்கு விடை அளித்தது. நாகம்மா தன் கைகளில் மோவாயைத் தாங்கிய வண்ணம் கயிற்றுக் கட்டிலின் மேல் சுருண்டு உட்கார்ந்திருந்தாள். அவளுக்குப் பயம்….
திடீரென்று அந்த ஓசையற்ற மையிருளைப் பிளந்து கொண்டு “அம்மா…..!” என்று ஒரு அலறல். நாகம்மா திடுக்கிட்டு விட்டாள். அவளுடைய உதிரம் அப்படியே உறைந்து நின்றுவிட்டது போல்….பதறிக்கொண்டு எழுந்து அவள் வாசலை நோக்கி ஓடினாள்.
மறுகணம் சோமசுந்தரம் ஓடிவந்து அவளுடைய காலடிகளில் வீழ்ந்தான். “நாகு, பாம்பு தீண்டிவிட்டது” என்று முனகினான்.
நாகம்மாவின் தலை சுழன்றது; என்ன செய்வதென்றே தோன்றவில்லை. அவளுடைய அந்தக் கரணங்களெல்லாம் அடைபட்டு விட்டதுபோல்…. ஒரு இருள்.
அயலவர்கள் பலர் வந்து வாசலில் கூடிவிட்டனர். அவர் களில் சிலர் சேர்ந்து சோமசுந்தரனைப் பிடித்தணைத்துக் கொண்டு போய்க் கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்தார்கள். அவர்களில் ஒருவன் தன் சால்வையைக் கிழித்து நோயாளியின் இடது முழங் காலுக்குக்கீழ் வரிந்து கட்டினான்… வீட்டில் பெரிய கும்பல் கூடியது. ஒவ்வொருவனும் தனக்குத் தெரிந்தவாறு பேசினான். என்ன பாம்பு? புடையனா? புடையனென்றால் நாய் புடுங்குவதுபோல் பிடுங்கியிருக்குமே! அல்லது ஒருவேளை பூச்சி புழுவாய் இருக்குமோ…?
யார் யாரோ விஷ வைத்தியர்கள் எல்லாம் வந்தார்கள். மருந்து கொடுத்தார்கள், மாந்திரீகம் செய்தார்கள். ஒன்றும் பிரயோசனப்படவில்லை. நோயாளியின் உடலில் நீலம் பாய்ந்து விட்டது. பிரக்ஞை அற்றுவிட்டான்.
நாகம்மா அவனருகே விறைத்துப்போய் உட்கார்ந்திருந்தாள். மூலையில் இருந்த குத்துவிளக்கு மங்கி எரிந்தது. இரவு நீண்டு கொண்டு சென்றது….
வைகறைச் சமயம்தான் சோமசுந்தரனுக்கு மறுபடியும் பிரக்ஞை வந்தது. பூபாலமுதலியாரும் நாகம்மாவுந்தான் வீட்டில் இருந்தனர். மற்றவர்களெல்லாரும் போய்விட்டார்கள். சோம சுந்தரனுடைய முகத்தில் ஒரு பிரகாசம். அவிந்து விடுமுன் பொங்கும் ஒளிப் பிழம்பு! அவனுடைய பேச்சிலே ஒரு தொனி.
“நாகு ஏன் அழுகிறாய்? கண்களைத் துடைத்துக்கொள். நீ அழுவதைப் பார்க்க எனக்குச் சகிக்கவில்லை ….. ஐயா, நீங்களா? ஏன் நின்று கொண்டிருக்கிறீர்கள்? இப்படி வந்து கட்டிலில் உட்கார்ந்து கொள்ளுங்கள். நாங்கள் எல்லாரும் ஒன்றுதான்…”
பூபாலமுதலியார் கட்டிலில் உட்கார்ந்துகொண்டார். அவருக்கு அவனுடைய பேச்சைக் கேட்டதும் நம்பிக்கை பிறந்தது. இவ்வளவு உறுதியாகப் பேசுபவனுக்கு ஏது மரணம். அவன் பிழைத்துவிடுவான்..
“ஐயா, என்னுடைய பாட்டைப் பற்றி வித்துவ சபையார் என்ன தீர்ப்புக் கூறினார்கள்? நான் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லவும் கேளாமல் இவள்தானே உங்களிடம் கொண்டு வந்து கொடுத்தாள். இவளுக்கு….”
“தீர்ப்பு என்ன, தெரிந்ததுதான். பாட்டில் பிழைகள் பல இருக்கின்றனவாம். நடை சரியில்லையாம். விஷயம் கூட அசாத்திய மானதாக இருக்கிறதாம். அது பாட்டே அல்ல என்று கூறி அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள்.”
“அது எனக்கும் தெரிந்ததுதான். அதற்காக நான் வருந்தவும் இல்லை. காளிதாசனுடைய ஒப்புயர்வற்ற தெய்வக் காவியமாகிய இரகுவம்சத்தைச் சுவை நைந்த உயிரற்ற வெறும் சொற் குவியலாகத் தமிழில் மொழிபெயர்த்த அரசகேசரியின் சகாக்களிடமிருந்து நான் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? பழமை பழமை என்று பிதற்றிக் கண்களை மூடிக்கொண்டு தம் அற்பத் திறமையில் இறுமாந்து உட்கார்ந்திருக்கும் இவர்களுக்குப் புதுமையும் முற்போக்கும் எங்கே பிடிக்கப் போகிறது? திருக்கோவையாரைப் படித்துவிட்டு அதில் வெட்ட வெளிச்சமாயிக்கும் அழகையும் ஜீவனையும் ஓசையையும் தேனையும் அமுதத்தையும் சுவைத்து உணர அறியாது, அதற்குள் வேறு ஏதோ சித்தாந்தக் கருத்து மறைந்துகிடக்கிறது என்று பாசாங்கு செய்யும் இந்தப் பழமைப் புலிகளா..?” சோமசுந்தரனுடைய தொண்டை விக்கியது. மூச்சு வேகமாக வரத் தொடங்கியது. முகம் வெளிறியது.
நாகம்மா அவனுடைய மார்பை வருடினாள். நெஞ்சில் கபம் கரகரத்தது. அவன் கண்களை மூடிக்கொண்டான்.
சிறிது நேரத்தில் மறுபடி அவன் மனம் தெளிவடைந்தது. “நாகு நான் இன்னும் அதிக நேரம் உயிரோடிருக்கப் போவதில்லை. நீ அழாதே, எல்லாம் நன்மைக்குத்தான் என்று நினைத்துக்கொள்…”
நாகம்மாவுக்கு அவன் முன்னொருநாட் பேசிய வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தன. “மரணம் மனித வாழ்வின் சாஸ்வதமான சம்பத்து. மரணம் என்னும் மாற்றம் இல்லாவிட்டால் வாழ்வு சகிக்கமுடியுமா? எல்லையற்ற கொதிக்கும் பாலைவனம் போல் ஆகிவிடுமே! ஐயையோ, மரணமற்ற வாழ்வு வேண்டவே வேண்டாம். இறந்தவனுக்காக அழுவதைப்போல் மடமை வேறொன்றுமில்லை. அவன் விடுதலையடைந்து விட்டான் என்று நினைத்துக் கொண்டாட வேண்டும்…” நாகம்மாவின் இருதயத்தில் தைரியம் பொங்கியது. அவனுடைய தலைப்புறத்தில் உட்கார்ந்து கொண்டு அவனுடைய தலையை எடுத்துத் தன் மடிமீது வைத்துக் கொண்டாள்.
சோமசுந்தரன் நாகம்மாவின் முகத்தைப் பார்த்தான். அவனுக்காக – உற்றார் உறவினர் வீடு வாசல் ஒன்றும் இல்லாத நாடோடியாகிய அவனுக்காக – தன் வாழ்வையும் பந்துக்களையும் புறக்கணித்து விட்டதுமல்லாமல், அவனுக்காகத் தன் உயிரையும் தியாகம் செய்துவிடுவதற்குத் தயாராகி நின்ற அவளிடத்தில், அவன் அந்தக் கணத்தில், தன் தாயையும், சகோதரியையும், மனைவி யையும் ஒருங்கு கண்டான். எல்லாம் அவள்தான். அவனுடைய கலை, சுதந்திரம், புதுமை எல்லாம்! அவன் சொன்னான், “நாகு ஒரு தெய்வம்” என்று.
அவனுடைய கண்கள் இமைகளுக்குள் மறைந்து கொண்டன. மறுபடியும் விக்கல்…
“நாகம்மா, அந்த விபூதியில் கொஞ்சம் எடுத்து நெற்றியில் பூசிவிடு” என்றார் பூபால முதலியார்.
“ஐயோ, வேண்டாம், எனக்கு நம்பிக்கை இல்லை.” சோம சுந்தரனுடைய குரல் மிக மெல்லியதாக இருந்தது. வார்த்தைகள் உடைந்து தொடர்பின்றி வெளிவந்தன. “நான் இதுகாறும் ஒரு தெய்வத்தையும் நம்பவில்லை. இந்தக் கடைசித் தருணத்தில் – வேண்டாம்! கம்பனும் காளிதாசனும், இளங்கோவனும், திருத்தக்க தேவனும், சாத்தனும், மணிவாசகனும் – இவர்கள்தான் என்னுடைய தெய்வங்கள்; தமிழ்மொழியின் கன்னித்தன்மையிலும், தமிழ்ச் சொல்லின் இசையிலும், தமிழ்ப்பாட்டின் மோகனத்திலும் நான் நம்புகிறேன். இனி வரப்போகும் தமிழின் மறுமலர்ச்சிக்கு வந்தனை செய்கிறேன்…!”
அவனுடைய குரல் ஓய்ந்துவிட்டது. தலை சாய்ந்துவிட்டது..
நாகம்மா அழவில்லை. தன் நாதனுடைய தலையை எடுத்துத் தலையணையில் பக்தி சிரத்தையோ வைத்தாள். பிறகு பூபால முதலியாரைப் பார்த்துச் சொன்னாள், “உலகம் அவருடைய பெருமையை அறியவில்லை. அவர் மனிதர்களுக்குள்ளே ஒரு மன்னவன். அவர் செய்த பிழை ஒன்றுதான். தான் பிறக்க வேண்டிய காலத்துக்கு மூன்று நூற்றாண்டுகள் முந்திப் பிறந்துவிட்டார். அவ்வளவுதான்.”
– வெள்ளிப் பாதசரம், முதற் பதிப்பு: ஜனவரி 2008, மித்ரா ஆர்ட்ஸ் அண்ட் கிரியேஷன்ஸ், சென்னை.