கதையாசிரியர்:
தின/வார இதழ்: தமிழ் முரசு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2024
பார்வையிட்டோர்: 212 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரண்டு வாரமாக வீட்டுப் பக்கம் வராமல் இருந்து விட்டு இன்று வீட்டிற்கு வந்த மகனைப் பார்த்து மீனாட்சி அம்மாள் ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.

“ஏனப்பா இப்படி எங்களைத் தவிக்க விட்டுட்டுப் போயிட்ட… உனக்குப் பிடிக்கலைன்னா எதுவாயிருந்தாலும் நேருக்கு நேரா சொல்லி இருக்கலாமேய்யா… இப்படி ஓடிப் போயிட்டா வயசான காலத்துல எங்களுக்கு யாருய்யா இருக்காங்க…உன்ன பார்க்காம உன் தங்கச்சி சீக்குல வுளுந்து கிடக்கு பாரு”

அழுகையும் ஆனந்தமும் சேர்ந்து அவனைக் குளிப் பாட்ட அவன் அதில் தெப்பமாய் நனைந்து போய் உள்ளே ஓடினான். அங்கே, அவன் ஒரே தங்கை படுக்கையில் சுருண்டு கிடப்பதைப் பார்த்துத் துடித்துப் போனான். தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்பார்களே அது அங்கே நடந்தது.

தன் பெற்றோர்மேல் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியவன் திரும்பி வந்ததே இந்தத் தங்கை கலைவாணிக்காகத்தான். அந்த அளவிற்குத் தங்கையின் மேல் அவன் ஆசையும், பாசமும் வைத்திருந்தான். அதனால்தான் ரோஷத்தை மறந்து வீட்டிற்கு வந்தான். வந்த இடத்தில் தங்கை இப்படி இருப்பதைப் பார்த்து அவனால் சும்மா இருக்க முடியவில்லை. அப்படியே வாரியெடுத்துத் தன் காரில் போட்டுக் கொண்டு தன் நண்பரின் கிளினிக் இருக்கும் சாலையில் வேகமாய்ப் பறந்தான்.

டாக்டர் அவனைத்தான் கோபித்துக் கொண்டார்.

“நீங்கல்லாம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். இந்தப் பெண்ணின் உடம்பே பலகீனமாய் இருக்கிறதே… இவள் சாப்பிடாமல் என்ன செய்தாள்… என்ன நடந்தது இவளுக்கு என்று துருவித் துருவிக் கேள்வியைக் கேட்டார். வீடு வந்து சேர்வதற்குள் அவனுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது. தங்கை நல்ல நிலைக்குத் திரும்பியதும் அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதாள்.

“எங்கேண்ணா போன… நீ இல்லாம எனக்குப் பசியெடுக்க… தூக்கம் வரல… எங்கிட்ட கூடச் சொல்லாம் நீ எங்கே போன இத்தனை நாளும்”

என்று தேம்பினாள். தன்மேல் தங்கை கொண்டுள்ள பிரியத்தையும், பாசத்தையும் எண்ணி வியந்தாலும், வேதனையும் வெட்கமும் அவனைக் கொல்லாமல் கொல் கின்றன. தன் தங்கையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். குளித்து முடித்துவிட்டுக் காரை எடுத்துக் கொண்டு வெளியே புறப்பட்ட போது கடையில் இருந்து அப்பா வந்தார். அவரது தோரணையிலிருந்து கடையைச் சாத்திவிட்டு வந்திருப்பது தெளிவானது.

மகனைப் பார்த்ததும் மகிழ்ச்சி ரேகைகள் முகத்தில் பரவின. ஒரு நிம்மதிப் பெருமூச்சும் வெளிவந்தது. வாயைத் திறந்து எதையோ கேட்க நினைத்தவர் அவன் பக்கத்து இருக்கையில் கலைவாணி அமர்ந்திருப்பதைப் பார்த்து மௌனமாகிப் போனார். அவனும் எதுவும் பேசாமல் வெளியேறினான்.

அண்ணனும் தங்கையும் கோயிலுக்குப் போனார்கள். இறைவனை வணங்கிவிட்டுக் கடைத்தெருவில் நுழைந்து சில பொருள்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார்கள். அப்பா அவர்கள் வரும்வரை முன் வாசலிலேயே ஈசி சேரில் அமர்ந்து நாளிதழ் படித்துக் கொண்டிருந்தார்.

உள்ளே வந்ததும் பாண்டியன் நேராக அப்பாவிடம் சென்று சற்றும் அவர் எதிர்பாராமல் அவரது கால்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டான்.

“என்னை மன்னிச்சிடுங்கப்பா, உங்க முடிவ என்னாலே ஏத்துக்க முடியலே… எதிர்த்துப் பேசவும் முடியலே… அதனாலேதான் பேசாம வெளியே போயிட்டேன். ஆனால் உங்களையெல்லாம் பிரிஞ்சுபோய் என்னால இருக்க முடியலேப்பா.”

தலைகுனிந்தவாறே பேசும் மகனைப் பார்த்து மனத் திற்குள் பெருமிதப்பட்டுக் கொண்டார். தன் பிள்ளை தறுதலையாகப் போய்விடவில்லை என்று மனநிறைவு கொண்டார்.

“போப்பா…உங்கம்மா உங்க ரெண்டு பேருக்காகவும் காத்துக்கிட்டு உட்கார்ந்திருக்காங்க… போய்ச் சாப்பிடுங்க.. போம்மா… உன் அண்ணன்தான் வந்துட்டான்ல… போய் நல்லா சாப்பிடு”

மகனையும் மகளையும் சேர்த்து உள்ளே போகச் சொல்லிவிட்டுத் தானும் அவர்கள் பின்னாலேயே உள்ளே வந்தார். பிள்ளைகளோடு உட்கார்ந்தார். மீனாட்சி மூவருக்கும் சாப்பாட்டை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

“நீயும் உட்காரு மீனாட்சி. பதினைஞ்சு நாளைக்கப்புறம் இப்பத்தான் வீடு வெளிச்சமாயிருக்கு.. இந்தச் சந்தோஷம் ஆயிசு வரைக்கும் நீடிக்கணும்னு வேண்டிக்கிட்டு உட்காரு, வா.’

தந்தையின் வார்த்தையில் புதைந்து கிடந்த பொருள் பாண்டியனுக்கு நன்றாகவே புரிந்தது. தான் வீட்டை விட்டு வெளியேறிப் போனதால் வீடு சோகத்தில் மூழ்கிக் கிடந்ததையே அவர் அப்படிக் குறிப்பிடுகிறார் என்பதை உணர்ந்து கொண்டவனாய் –

“என்னை மன்னிச்சிடுங்கப்பா… இனிமே இப்படி யெல்லாம் நான் நடக்கமாட்டேன். நீங்களும் அம்மாவும் உங்க முடிவை மாத்தி எனக்கு இங்கேயே ஒரு பெண்ணைப் பாருங்க….என்றான். பிள்ளையின் பேச்சைக் கேட்ட தாயும், தகப்பனும் ஒருவரையொருவர் மாறி மாறிப் பார்த்துக் கொண்டனர். சில நிமிடங்கள் அங்கே மௌனம் நிலவியது. கலைவாணி அந்த மௌனத்தைக் கலைத்தாள்.

“அண்ணன்தான் வேணாம், வேணாம்னு சொல்றாங்களே அப்பா…மறுபடியும் மறுபடியும் ஏன் அவங்கள தொந்தரவு பண்றீங்க. மனசுக்குப் பிடிக்கலைன்னா துணி யைக்கூட கட்டிக்க முடியாது. அண்ணனுக்கு ஊர் பொண்ணு வேண்டாம்னா ஏன் பிடிவாதம் பிடிக்கிறீங்க… அவங்களுக்குப் பிடிக்காதப்ப ஏன் தொந்தரவு பண்றீங்க…” என்றாள். பாண்டியன் அதிசயமாய்த் தங்கையைப் பார்த்தான்.

தனக்காகப் பேச ஒரு ஆள் கிடைத்த சந்தோஷம் மனத்தில் பொங்கியது. இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் மௌனமாய்ச் சாப்பிட ஆரம்பித்தான். அப்பா ஒரு முறை நாலாபுறமும் பார்த்துவிட்டுப் பேசுகிறார்.

“கல்யாணம்கிறது ஆயிரம் காலத்துப் பயிர்மா… பிடிக்குது, பிடிக்கலே என்பதற்காக உங்கள் விருப்பத்திற்கு விட்டுட்டா வரப்போற பிரச்சினைகளைத் தாங்கறது யா…! ஊர்ல உள்ள என் தங்கச்சிப் பிள்ளையைத்தானே கட்டி வைக்கிறேன்னு சொல்றேன். அந்நியத்திலேயா பிள்ளையைப் பார்க்கப் போறோம். நம்ம பிள்ளைங்க தான் நம்மோட அனுசரிச்சுப் போகும்னு தெரியாதா இவனுக்கு… இங்கு உள்ளதெல்லாம் பொண்ணாவா இருக்கு… எல்லாம் “ஷோக்கேஸ்” பொம்மையாட்டம்ல இருக்கு.”

அப்பா உணவை முடித்துக் கொண்டு எழுந்து விட்டார். அம்மாவும், கலைவாணியும் ஒருவரையொருவர் பார்த்தனர். பாண்டியன் கையைக் கழுவிக் கொண்டு அப்பா முன்னால் வந்து நின்றான். “இந்த ஊர் பொண்ணெல்லாம் கல்யாணம் பண்றதுக்கும் குடும்பம் பண்றதுக்கும் லாயிக்கில்லைன்னு சொல்ல வரீங்களாப்பா?”

அமைதியாய்க் கேட்டான். அவர் ஆமாம் என்பதற்கு அடையாளமாய்த் தலையை ஆட்டினார். அப்புறம் கொஞ்சம் பேசினார்.

“இங்கே பாரு பாண்டி… உங்க அம்மா என்னோட இந்த மண்ணில வாழவந்து நாற்பது வருஷமாயிற்று… எத்தனையோ கஷ்ட நஷ்டத்தைக் கடந்து நான் இந்த நிலைமைக்கு உயர்ந்திருக்கேன். அத்தனை காலமும் உங்க அம்மா என் கூட இருந்து வாழ்க்கையை நடத்தியிருக்கா… எவ்வளவோ மேடு பள்ளத்தைத் தாண்டி நான் இந்த உயரத்தில் இருக்கேன்னா காரணம் யாரு தெரியுமா..? இப்ப உள்ள இந்தப் பொண்ணுங்க இப்படியிருக்குமா? அஞ்சு வருஷம் வாழறதுக்குள்ளே விவாகரத்து கேட்கிற காலமாச்சே இது.. கஷ்ட நஷ்டத்தில் கை கொடுக்கிற பொண்ணா வேணும்னா அதுக்கு அந்த மண்ணுல பொறந்ததா இருக்கணும்பா”

தனது மீசையைக் கொஞ்சம் பெருமையோடு முறுக்கிக் கொண்டார் அப்பா. பாண்டியன் கொஞ்சம் தடுமாறினான். தங்கையை ஒரு முறை பார்த்தான். மனத்தில் ஏதோ குறுகுறுத்தது. அப்பாவைப் பார்த்தான்.

“நீங்க சொல்றதைப் பார்த்தா இந்த ஊர்ல பிறந்த எந்தப் பொண்ணுமே மணவாழ்வுக்கு ஒத்து வராதுங்கற மாதிரியில்ல இருக்கு.”

“ஆமா, அதுல என்ன சந்தேகம்?” குரலில் உறுதி தெறித்தது.

“அப்ப நம்ம கலைவாணி…” சட்டென்று கேட்டான் பாண்டியன். அம்மா கையிலிருந்த கரண்டி விழுந்து, “ணங்”கென்று ஒலி எழுப்பியது. கலைவாணி அமைதி யாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அப்பா அவனையே வெறித்து நோக்கினார். முகத்தில் பலவித உணர்ச்சி ரேகைகள்..!

“கோபப்படாதீங்கப்பா…. கலைவாணியும் இந்த மண்ணுல பிறந்த பொண்ணுதானே? இங்க பிறந்த பொண்ணுங்க குடும்பத்துக்குப் பொருத்தமில்லேன்னா நம்ம வீட்டுப் பொண்ணும் குடும்பத்துக்குப் பொருத்தமில்லாதது தானே! இவளை எவன் கட்டிக்குவான்னு யோசனை பண்ணி பேசினீங்களா நீங்க?”

பாண்டியன் ஆவேசமாய்ப் பேச, அம்மா அவனை அடக்கினாள். அப்பா கொஞ்சம் தடுமாறினார்.

“நான் என்ன சொல்ல வந்தேன்னா”

“எனக்குத் தெரியும்பா… நீங்க என்ன சொல்ல வந்தீங்கன்னா எனக்கு நல்லா தெரியும்பா! இரத்தச் சொந்தம் விட்டுப் போகக்கூடாது, ஒன்றுக்குள்ளே இருக்கும்னுதானே சொல்ல வர்றீங்க.’

அப்பாவை வார்த்தையால் திணற வைத்தான் பாண்டியன்.

“ஆமாம்பா… அதான் உண்மை… அதுமட்டுமில்லே… இந்த ஊர் பொண்ணுங்க போக்கு நமக்கு ஒத்துவரும்மான்னு தான்…” அப்பா தடுமாறினார். வார்த்தைகள் தொண்டைக் குழியிலேயே சிக்கிக் கொண்டன.

அப்பாவின் மேல் கோபம் வந்தாலும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான் பாண்டியன்.

“அப்பா… கல்யாணம் பண்ணிக்கப் போறது நான், சேர்ந்து வாழப் போறதும் நான்தான். இந்த மண்ணுல பிறந்து வளர்ந்த படிச்சு வேலைபார்க்கிற எனக்கு இந்த மண்ணுல பிறந்து வளர்ந்த பொண்ணே ஒத்து வரலைன்னா எங்கேயோ பிறந்து வளர்ந்த பொண்ணு மட்டும் எப்படிப்பா ஒத்துப் போகும்? முப்பது வருஷமாயிடுச்சு நம்ம நாட்டுக்குச் சுதந்திரம் கிடைச்சு. ஆனா எனக்கு மட்டும் சுயமா செயல்படுகிற சுதந்திரம் இன்னும் கிடைக்கல… எனக்கு வாழ்க்கைத் துணையா இவதான் வேணும்னு யாரையாச்சும் இழுத்துக்கிட்டா வந்து நிக்கறேன்..”

பாண்டியன் குரல் கம்மியது. கண்களில் நீர் நிரம்பியது. அதுவரை அவன் முகத்தைப் பார்த்துப் பேசாமல் எங்கேயோ பார்த்துப் பேசிக் கொண்டிருந்த அப்பா அவன் முகத்தைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போனார்.

“பாண்டியா… ஐயா நான் என்ன சொல்லிட்டேன்னு..! ஏதோ வயசான காலத்துல மனசுல பட்டதைச் சொன்னேன். அதுக்குப்போய்.”

சமாதானம் செய்யும் குரலில் பேசுகிறார்.

“மண்ணும் பொண்ணும் அவுங்கவுங்க மதிக்கிற வகை யிலதான் அமையும். நீங்க நெனைச்சிருந்தா இந்த முப்பது வருஷத்துல சம்பாதிச்சத எல்லாம் இங்கேயே போட்டுப் பெரிய முதலாளியா உட்கார்ந்திருக்கலாம். ஆனா நாலு காசு சேர்ந்ததும் அத அள்ளிக்கிட்டு அங்கே ஓடிப்போய் விடுவீங்க…இப்ப நாம ஒண்டிக் குடித்தனம் நடத்தறோம். இந்த மண்ணைத்தான் நீங்க மதிக்கல… இந்த மண்ணுல பொறந்த பொண்ணையாச்சும் மதிக்கப் பாருங்கப்பா?’

அப்பா பாண்டியனை ஏற இறங்கப் பார்க்கிறார். அவனது வார்த்தைகள் மளமளவென்று அவருக்குள் ஓடி உடம்பெங்கும் ஓர் உணர்ச்சிப் பிரவாகத்தை உண்டு பண்ண, எழுந்துவந்து அவனை மார்போடு தழுவிக் கொள்கிறார்.

காலம் கடந்து போகலப்பா… இன்னும் எனக்கு வயசிருக்கு..கையில பலமிருக்கு… மனசுல தெம்பிருக்கு… இந்த மண்ணுல பொறந்த பொண்ண மட்டுமில்ல… இந்த மண்ணையும் மதிக்க ஆரம்பிச்சிட்டேன் நான்… உன்னோட எல்லா ஆசையும் நிறைவேற்ற வேண்டியது என் கடமை.”

ஆறுதலும் ஆர்வமுமாய் மகனைக் கட்டிக் கொள் கிறார். அவன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெறுகிறது.

– தமிழ் முரசு 6-8-95.

– கவரிமான் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.

நூலாசிரியர் பற்றி... - மனங்கவர் மலர்கள், முதற் பதிப்பு: ஜூன் 2005 இலக்கிய வடிவங்களில் சிறுகதை. புதினம், கட்டுரை, உரைவீச்சு போன்ற அனைத்து நிலைகளிலும் சிந்தனையை வெளிப்படுத்துகின்ற ஆற்றல் மிக்கவராக மதிக்கப்படுகின்ற சிங்கை. தமிழ்ச்செல்வம் அவர்களை 1995-ம் ஆண்டு முதல் நான் நன்கு அறிந்து வைத்து உள்ளேன். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் உறுப்பியம் பெற்றுத் தொண்டாற்றினார். துணைச் செயலாளர் பொறுப்பேற்றுத் துணை நின்றார். கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராய்த் தொடர்ந்து…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *