நாக மாணிக்கம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2024
பார்வையிட்டோர்: 1,342 
 
 

காடு, மலை, மேடுகளில் தனது பால்ய நண்பனைத்துணைக்கு அழைத்துக்கொண்டு ஒரு வருட காலம் கிழங்குகளையும், பழங்களையும் பசிக்கு உண்டு, பறவைகளைப்போல் வெயிலுக்கு மரத்தடியிலும், மழைக்கு பாறை இடுக்குகளிலும் தங்கி, உறங்கம் தொலைத்து, சிறுவனாக இருக்கும் போது தன் தாத்தா சொன்ன நாக மாணிக்கத்தை தேடி அழைந்தான் விருமன்.

“அந்தக்காலத்துல காட்டுக்குள்ள ஒரு வேடன் அவனோட பொண்டாட்டி, கொழந்தைகளோட வாழ்ந்தான். அவன் காட்டுக்குள்ள மிருகங்கள வேட்டையாடி, அந்த மிருகங்களோட கறிய காட்டு வெறகுல தீப்போட்டு சுட்டு தின்னு வாழ்ந்தான். மிருகங்கள் கெடைக்காத போது பழங்கள, கெழங்குகள சாப்புட்டு வாழ்ந்தான். ஒரு நாளு ராத்திரி நேரத்துல அவன் வேட்டைக்கு போன போது ரொம்பம்மே பிரகாசமான ஒரு வெளிச்சத்தப்பார்த்தான். அதுக்கு பக்கத்துல போகப்போக அந்த வெளிச்சம் அது வரைக்கும் அவன் கண்ணுல பாக்காத மாதர இருந்துச்சாம். ஆனா வெளிச்சம் வந்த எடத்துல கிட்டக்க நெருக்கமா போயி பாக்கற போது தான் அது  வெறும் கல்லு இல்லே, மாணிக்கக்கல்லுனு தெரிஞ்சதும் பயந்து போனவன், உசுரு பயத்துல திரும்பி தலை தெரிக்க தப்புச்சோம், பொழைச்சோம்னு காட்டுக்குள்ள இருக்கற பாறச்சந்துல ஓடி பதுங்கிட்டான்…”

“வெளிச்சம் கொடுக்கிற கல்லப்பார்த்து ஆராவது பயந்துக்குவாங்களா…? நானா இருந்தேன்னா உடனே எடுத்து பாக்கெட்ல போட்டுட்டு வந்து ஊட்டுக்குள்ள வெளிச்சத்துக்கு வெளக்குக்கு பதுலா அத வெச்சிருப்பேன்….”

“அது சாதாரண மாணிக்கக்கல்லா இருந்திருந்தா அவனும் நீ சொன்னமாதர எடுத்து டவுசரு சோப்புல போட்டுட்டு வந்திருப்பான். ஆனா, அது நாக மாணிக்கமாச்சே…..!”

“நாக மாணிக்கமா….? அப்படின்னா  என்ன தாத்தா….?!” ஆச்சர்யம் தாங்காமல்  தன் தாத்தா வையாபுரியைப் பார்த்துக் கேட்டான் சிறுவன் விருமன்.

“அதாவது விசமுள்ள நாக பாம்பு ஆயரம் வருசம் உசுரோட இருந்துச்சுன்னா, பத்தடி நீளமான பாம்பு ஒரு அடியா வளத்தி கொறைஞ்சு, றெக்கை மொளைச்சு பறக்க ஆரம்பிச்சுறும். ஆனா ரெக்கை மொளைச்சதும் அந்தப்பாம்புக்கு கண்ணு தெரியாமப்போயிறும். அந்தப்பாம்போட வெசம் தான் மாணிக்கமா மாறியிருக்கும். ராத்திரில அத ஒரு பாற மேல கக்கி வெச்சுட்டு அந்த மாணிக்கத்தோட வெளிச்சத்துல மட்டும் கண்ணு தெரியறதுனால,  எறை தேடி தெனமும் சாப்புட்டுப்போட்டு, மறுபடியும் மாணிக்கத்த முழுங்கிட்டு பொதருக்குள்ள போய் பாம்பு படுத்துக்கும். அது எறை முழுங்கற சமயம் பாத்து அந்த மாணிக்கக்கல்ல ஆராச்சும் மனுசங்க எடுக்க வந்துட்டா பாம்பு பறந்து வந்து எடுத்தவங்களோட கண்ணப்புடுங்கிப்போடும். அதக்கேள்விப்பட்டதுனால  தான் பயத்துல ஓடிப்போனான் அந்த வேடன்….”

“அப்பறம்…..?”

“அந்தக்கல்ல மட்டும் எடுத்துட்டு வந்து ஊட்டுல ஒரு மண்டலம் வெச்சுட்டா, அந்த நாட்டுக்கே அரசனாயிடுவானாம். வேடனுக்கு ஆரோ மொதல்லியே இந்த சமாச்சாரத்த சொல்லித்தெரிஞ்சதுனால அந்த நாக மாணிக்கக்கல்ல பாம்பு கிட்ட சிக்காம எடுக்கறதுக்கு ஒரு வழி கண்டுபிடிச்சிருக்கான்….”

“என்ன வழி…?”

“நாக மாணிக்கத்த ஒரு நாழிகை மறைச்சு வெச்சுட்டாப்போதும், அந்தப்பாம்பு உசுரு வாழ முடியாம செத்துப்போகும். அதுக்காக எலை, தளைகளை ஒடம்புல மூடிக்கட்டீட்டு, பாங்காட்ல ஆனை போட்ட சாணிய எடுத்துட்டு போயி அது மேல போட்டுட்டு, அங்கயே மரம் மாதரயே உக்காந்ததுனால  மாணிக்கத்தோட வெளிச்சம் போனதும் கண்ணுத்தெரியாமப்போனாலும் மனுசங்கண்ணுக மட்டும் பாம்புக்குத் தெரியும்ங்கிறதுனால எடுத்தவங்களத்தேடி அலைஞ்ச பாம்பு, ஆரும் இல்லாததுனால ஒரு நாழிகையானதும் செத்துப்போச்சாமா. ஒடனே வேடன் ஓடிப்போயி சந்தோசத்துல நாகமாணிக்ககல்ல எடுத்துட்டு வந்து ஊட்டுல வெச்சு, ஒரு மண்டலம் முடிஞ்ச பின்னால ஊருக்குள்ள அரசாங்கம் மூலமா தண்டோரா போட்டிருக்கறாங்க. நாட்டு மன்னனுக்கு வாரிசு இல்லாததுனால இந்த ஊருல ஒருத்தர ஆனைய வெச்சு மாலை போட வைப்பாங்கன்னும், ஆனை ஆருக்கு மாலை போடுதோ அவங்கள மன்னரா நெயமிச்சுப்போடுவாங்கன்னும் சொல்லியிருக்காங்க. ஏற்கனவே எதிர்பாத்துட்டிருந்த வேடனும் போயி அந்தக்கூட்டத்துல நிக்கப்போக, ஆனை வேடனத்தேடி வந்து அவங்கழுத்துல மாலையப் போட்டங்காட்டிக்கு அவன் மன்னனாவும், அவனோட பொண்டாட்டி மகாராணியாவும், அவனோட பையன் இளவரசனாவும், அவனோட பொண்ணு இளவரசியாவும் ஆயிட்டாங்க…” 

“அப்ப எங்கிட்ட நாக மாணிக்கம் இருந்தாலும் நானும் மன்னன் ஆகலாமா தாத்தா….?” என வெகுளியாக விருமன் கேட்டான்.

“ஓ…. ஆகலாமே….” என தாத்தா சொன்னதை வேத வாக்காக நம்பி ஆசையை வளர்த்து வந்தவன், தனது இருபத்தைந்தாவது வயதில் நாக மாணிக்கத்தைத்தேடி காட்டிற்குள் இரவு, பகலாக வெறித்தனமாக அலைந்தான்.

“விருமன் பரதேசம் போயிட்டான்னு ஊரே பேசிக்குது. உங்கொப்பாரு நீயி சின்ன வயசா இருக்கற போது சொன்ன பேச்ச நம்பீட்டு இப்புடி ஊதாரியாத்திரிஞ்சீன்னா ஆடு, மாடு மேச்சுட்டு ரெண்டு பணம் சம்பாதிச்சி பொண்டு புள்ளைய மத்தவங்க காப்பாத்தர மாதர இவனெங்க நம்ம பொண்ணக் காப்பாத்தப்போறானு ஊர்ல, ஒறவுல ஒருத்தரும் பொண்ணுக்குடுக்க மாட்டாங்க..‌. உன்ற அத்தையே அவ புள்ள அருக்காணியக் குடுக்க மாட்டான்னு வெச்சுக்குவே… நீ பொறந்து எந்திருச்சு நடக்கறதுக்குள்ளே பெத்த அப்பன முழுங்குன பாவின்னு பேர் வாங்கிப்போட்டே…. இப்ப எனக்கு வராத நோயி வந்திருக்கறதுக்கு எப்பப்போவன்னு தெரியாம உசுரக்கையில புடிச்சுட்டு இருக்கறேன். காலாகாலத்துல உனக்கொரு கண்ணாலத்தப்பண்ணி வெச்சுப்போட்டன்னா நிம்மதியா கண்ண மூடிக்குவேன். ஒன்னியாவது என்ற பேச்சக்கேட்டு ஆடு, மாட்ட கல்லாங்காட்டுக்குள்ள ஓட்டீட்டு போயி மேயறதுக்கு உடு. அதுகல வித்தாவது கண்ணாலத்தப்பண்ணிப்போடுலாம்.

“ஒனக்கு பள்ளிக்கொடம் போகாததுனால அறிவே சுத்தமா இருக்க மாட்டீங்குது. அவ ஆத்தா கெடக்கறா ஒருபக்கம். என்னக்கட்டிக்க அத்த புள்ள அருக்காணி ஒத்தக்கால்ல நிக்கறது உனக்குத்தெரியுமா…? அவதான் என்னைய மாணிக்கக்கல்ல எடுக்கறதுக்கு போறதுக்கு அவ மேய்க்கிற ஒரு ஆட்ட வித்து காசு கொடுத்து போகச்சொன்னா…. அப்பறம் ஒன்னொரு விசயமும் நஞ்சொன்னா நீ கோபப்படப்படாது.  மாமம்புள்ள மரிக்கொழுந்தையும் கட்டிக்கறேன்னு சித்த முன்னால தான்‌ வாக்கு குடுத்துட்டு நேரா இங்க வாரேன்.

“என்னடா இது கேவலமா இருக்குது. ரெண்டு பொண்டாட்டிய உங்கொப்பாராட்டக்கட்டிக்கப்போறயா…? சின்ன வயசுல உன்னைய அந்த ஆளுகுட்ட படுக்கறதுக்கு உட்ருக்கப்படாது. கண்ட கதையெல்லாஞ்சொல்லி உன்ற மூளைவே கெடுத்து வெச்சிருக்காம்பாரு உங்கொப்பாரு….”

“ஆரப்பேசுனாலும் என்ற அப்பனப்பெத்த அப்பன மட்டும் பேசீராத. எனக்கு என்ற அப்பாருதாந்தெய்வம். காட்டுக்குள்ள போறபோது நம்ம காட்டுக்குள்ள இருக்கற அவரப்பொதச்ச எடத்த கும்புட்டு போட்டு, அந்த மண்ண எடுத்து நெத்தீல பூசீட்டுத்தாம்போவன்னாப்பாத்துக்கவே…”

“நானு உசுரோட இருக்கற வெரைக்கும் நீ ரெண்டு கண்ணாலம் பண்ண உட மாட்டேன். அப்படிப்பண்ணுனீன்னா நாஞ்செத்தாலும் என்ற மூஞ்சீல வந்து நீ முழிச்சறாத…” கண்ணீர் விட்டு விசும்பினாள் விருமனின் தாய் ராசாத்தி.

அப்போது அங்கே ஓடி வந்த சிநேகிதன் கருமன் ஒரு செய்தியை காதில்‌ சொல்ல, மேல் சட்டை அணியாமல் கூட அவசரமாக ஓடினான் விருமன்.

மரிக்கொழுந்து வீட்டில் கூட்டம் கூடியிருந்தது. பலர் தலைவிரிகோலமாக அழுத முகத்துடன் வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்தனர். விருமன் செய்தி கேட்டு செய்வதறியாது வேதனையுடன் கண்ணீர் வடித்தபடி மரிக்கொழுந்தின் உயிரற்ற உடல் படுக்க வைத்திருக்கும் இடத்தினருகே கைகட்டியபடி நின்றான்.

” பரதேசி நாயி…. என்ற புள்ளைய இப்படிப்பண்ணிப்போட்டையேடா….கசுமாலா….

எனக்கு புள்ள போச்சேடா…. அரளி வெதைய அரச்சுக்குடிச்சுட்டு செத்துப்போயிட்டாளேடா…. ” மொறையா வந்து பொண்ணுக்கேட்டிருந்தாங்கூட குடுத்திருப்பமே…. இப்படி வெகுளிப்புள்ளைய ஏமாத்தி, கண்ணாலமாகாமயே கொழந்தைய அவ வகுத்துல குடுத்து எங்க குடும்பத்தையே கேவலப்படுத்திப்போட்டு, அவ சாகறதுக்கும் காரணமாயிட்டியேடா பாவி…. இப்ப ரெண்டு உசுரு வீணாப்போச்சே…. ” கத்திக்கதறிய படி மரிக்கொழுந்துவின் தாய் நெஞ்சில் கைகளால் அடித்தபடி குமுறி, குமுறி அழுதாள். 

“நீ நாசாமாத்தாம்போவே…. நீ நல்லாவே இருக்க மாட்டே…. ” என சாபமிட்டாள். விருமனை வீட்டிலிருந்த சில ஆண்கள் அடிக்க முற்பட, கூட்டத்தில் புகுந்து வெளியே சென்றவன் அங்கிருந்து காட்டிற்குள் சென்று விட்டான்.

“அருக்காணியைக்காதலிக்கும் விருமன் உண்மையிலேயே மரிக்கொழுந்துவைக்காதலிக்கவில்லை. அவனுக்கு காதல், கல்யாணம் பற்றிய கவலையேதுமில்லை. அவனுடைய ஆசையெல்லாம், அவன் காதலிப்பதெல்லாம் நாக மாணிக்கத்தை மட்டும் தான். சிறு வயதிலிருந்து அருக்காணி மீது காதல் இருந்ததாலும், அருக்காணிக்கும் விருமனைப்பிடித்திருந்ததாலும், இரண்டு வீட்டினரும் ஏற்றுக்கொண்டதாலும் நாக மாணிக்கம் கிடைத்த பின்பு தான் திருமணம் என்பதையும் அவள் ஏற்றுக்கொண்டு பண உதவியும் செய்ததாலேயும் மற்ற பெண்களை ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்தான். இப்படியிருக்க ஒரு நாள் மரிக்கொழுந்துவின் காட்டு வழியே சென்ற போது தனியாக இருந்தவள் வீட்டிற்கு அழைத்தாள். காபி போட்டுக்கொடுத்தவள், தேம்பித்தேம்பி அழுதாள்.

மாமன் மகள் தன் மனதில் இருக்கும் வேதனையை அத்தை மகனிடம் கொட்டினாள். மரிக்கொழுந்துவின் நிலையறிந்து விருமனும் அழுதான்.

திருமணமாகாமலேயே அவள் மூன்று மாத கற்பமாக இருப்பதாகவும், அதற்கு காரணமானவன் பாம்பு கடித்து ஒரு வாரத்துக்கு முன் இறந்த சோமன் என்றும், வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு தந்தை செத்துப்போனவன் என்று வீட்டில் சொன்னால் தனக்கு கணவனை இழந்தவள் என வெள்ளைப்புடவை கட்டி இனிமேல் திருமணமே ஆகாத நிலையை உருவாக்கி விடுவார்கள், புருசனை இழந்த முண்டச்சி எனக்கூறி விசேசங்களுக்கு யாரும் கூப்பிடவும் மாட்டார்கள் எனக்கூறி கண்ணீர் சிந்தி அழுத போது, அந்த மூன்று மாதக்கருவுக்கு தானே காரணம் என வீட்டில் சொல்லி விடுமாறும், கூடிய சீக்கிரம் திருமணம் செய்து கொள்வதாகவும் விருமன் கூறிய போது  அவனைத்தெய்வமாக நினைத்து அவனது தோள் மீது உடனே சாய்ந்தவாறு தனது மனதிலிருந்த துக்கத்தைத்தீர்த்த போது, திடீரென வீட்டிற்குள் மரிக்கொழுந்துவின் தாய் வர, அணைத்தவளை விலக்கி விட்டு விருமன் விருட்டென வெளியேறினான்.

“தெரியுண்டி…ஒரு மாசமா ஓய்….ஓய்….னு நீ வாந்தி எடுக்கறப்பவே இதுக்கு அந்தத்தெல்வாரிப்பையன் விருமந்தான் காரணமா இருப்பான்னு நெனைச்சேன். இப்ப நெனைச்சது செரியாப்போச்சு. கண்ணுலயே நேரா அவன் உன்னை கட்டிப்புடிக்கிறதையே காட்டிப்போட்டாரு நாங்கும்புடுற கடவுளு….” என தன் தாய் உண்மை நிலை புரியாமல் விருமனைப்பேசியது மரிக்கொழுந்துவிற்கு துக்கத்தை அதிரிக்கச்செய்தது.

‘என்னதான் விருமன் உணர்ச்சிவசப்பட்டு தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகச்சொன்னாலும், அடுத்தவனுடைய குழந்தைக்கு தந்தையாக சம்மதித்தாலும், அருக்காணியை அவன் சிறு வயதிலிருந்து காதலிப்பது தெரியுமென்பதால் இன்னொரு பெண்ணின் வாழ்வைக்கெடுக்கக்கூடாது, நாம் செய்த தவறுக்கு இன்னொருவரை பலிகடா ஆக்கக்கூடாது….’ என நினைத்தவள் வீட்டின் பின் பக்கம் இருந்த அரளிச்செடியில் இருந்த விதைகளைப்பறித்துத்தின்றதும் சற்று நேரத்தில் மயங்கி சரிய, வாயில் நுரை பொங்கி வர இறந்து போனாள். 

இதனால் விருமன் மீது மரிக்கொழுந்து குடும்பத்துக்கு ஆத்திரம் வரக்காரணமாகி விட்டதோடு, இதைக்கேள்விப்பட்ட அருக்காணியும் அவளது தோட்டத்துக்கிணற்றில் மனம் உடைந்து குதித்து விட, அப்போது அவளைச்சந்தித்து உண்மை நிலையை அவளிடம் சொல்ல வந்த விருமன் நிலமையறிந்து ஓடிச்சென்று தயங்காமல் கிணற்றில் குதித்து அருக்காணியை மேலே தூக்கி வந்தான்.

நினைவு வந்தவுடன் தன்னைக்காப்பாற்றி விட்டு அருகில் நின்று அழுது கொண்டிருந்த விருமனை ஓங்கி கன்னத்தில் கோபத்துடன் அறைந்தாள். அவனைப்பேசவே விடாமல் பேசினாள். அவள் மரிக்கொழுந்துவுடன் தன்னை இணைத்துப்பேசி, கெட்ட வார்த்தைகளில் திட்டி ஓய்ந்து, சோர்ந்த பின் அவளருகில் சென்று ஒரு குழந்தையைப்போல் மீண்டும் தேம்பித்தேம்பி அழுதான்.

சிறு வயதிலிருந்து ஒன்றாக இருந்து பார்த்தவள். ஒரு நாள் கூட இது வரை அழாதவன் தற்போது அழுவது சந்தேகத்தை வரவழைத்ததால் அவனருகில் சென்று “என்னாச்சு….?” என அவனைத்தொட்டு தாயன்போடு கேட்டதும், அவன் நடந்ததைக்கூறியதைக்கேட்டு நிம்மதியானாள். 

ஆனால் ஊரும், உறவும் விருமனைச்சபித்தது. கெட்டவனாகப்பார்த்தது. இச்சம்பவத்தால் ஊருக்குள் போனாலே பெண்கள் வீட்டிற்குள் ஓடிச்சென்று கதவைச்சாத்தி தாழிட்டனர். ஊருக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாகக்கூறி அரசமரத்தடி பஞ்சாயத்து நிரந்தரமாக ஊரை விட்டுப்போகும் படி விருமனுக்கு தண்டனை கொடுத்ததைக்கேட்டு தாய் ராசாத்தி கவலைப்பட்டு, உண்டு, உறங்காமல், உடல் நலிந்து உயிரிழக்க, அருக்காணி மட்டும் விருமனுடன் வர சம்மதிக்க, காட்டிற்குள் சென்று குடிசை போட்டு, திருமணம் செய்து வாழத்துவங்கி, மனைவியை காட்டில் விவசாய வேலை செய்யச்சொல்லிவிட்டு, துணைக்கு அவளது பெற்றோரை கூட்டி வந்து விட்டு விட்டு நாக மாணிக்கத்தைத்தேடி மறுபடியும் காட்டிற்குள் ஓடினான்.

ஆறு மாதம் பின் திரும்பி வந்து பார்த்த போது மனைவி அருக்காணி நிறை மாத கற்பிணியாக இருப்பதைக்கண்டு அவளருகிலேயே இருந்து அவளைக்காதலோடு கவனித்துக்கொண்டான்.

குழந்தை பிறந்தது. பிரசவம் பார்த்த மருத்துவர் “இந்தக்குழந்தையைப்போல் நான் இதுவரை எனது அனுபவத்தில் எந்தக்குழந்தையையும் பார்த்ததில்லை. மாணிக்கம் போல உடல் மின்னுது…!” எனச்சொன்ன போது விருமனுக்கு உடல் சிலிர்த்தது. 

‘தான் தேடிய நாக மாணிக்கத்தை குழந்தை வடிவில் இறைவன் தனக்குக்கொடுத்து விட்டார். உண்மையில் நாக மாணிக்கம் என்று எதுவுமே உலகில் இல்லை என்பது தான் உண்மை. அப்பாரு சொன்னது வெறும் கட்டுக்கதைதான்…’ என தற்போது நம்பிய விருமன், குழந்தைக்கு ‘நாக மாணிக்கம்’ எனப்பெயர் வைத்து தனது மாணிக்க ஆசையை முடிவுக்குக்கொண்டு வந்தவனாய் அன்று முதல் மனைவிக்கு உதவியாக காட்டு வேலைகளையும், வீட்டு வேலைகளையும் செய்து நிம்மதியாக வாழத்துவங்கினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *