(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘அல்லாஹு அக்பர்…அல்லாஹு அக்பர்…அல்லாஹு அக்பர்’ வானொலிப்பெட்டிகளிலிருந்து தக்பீர் முழங்கிக் கொண்டிருக்கின்றது.
‘பட… பட. பட் படார்.. பட பட… பட் படார்… பட… பட பட்… படார்…’ பட்டாசுகள் தொலைவிலே அதிர்ந்து கொண்டிருக்கின்றன.
இன்று நோன்புப் பெருநாள். அதிகாலை நேரம்.
கல்முனையிலிருந்து புறப்பட்டு, சாய்ந்தமருதை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்ற பஸ்வண்டி ஒன்றிலே மக்கள்கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றது. நல்ல நெரிசல். அந்த பஸ்வண்டியிலே.. சாளரத்தின் அருகேயுள்ள முன்ஆசனம் ஒன்றிலே எப்படியோ இடம்பிடித்துக்கொண்ட நஸீர் ஒன்றரை மாதத்தின்பின் தன் மனைவி வஸீரா வைச் சந்திக்கப்போகிறோமே என்ற பூரிப்பில் ஆழ்ந்திருக்கின்றான்.
இருபத்தெட்டு இருபத்தொன்பது வயது மதிக்கத் தக்க அவன் நல்ல உடற்கட்டு, அளவான உயரம்,மானிற மேனி ஆகியன உடையவன். வகிடெடுத்து வாரிவிட்ட சுருள் முடி, அரும்பு மீசை என்பன அவனது அழகை மிகைப்படுத்தி நின்றன. ஜீ.ஸி.ஈ. சித்தியடைந்திருந்த அவன் கொழும்பிலே உள்ள ஹோட்டல் ஒன்றிலே மாதந் தோறும் உணவோடு நானூறு ரூபா சம்பளத்துக்குத் தொழில் செய்து வந்தான். அவன் அந்த ஹோட்டலிலே சேர்ந்து இன்றோடு சரியாக நாற்பத்தாறு தினங்கள். இன்று அவன் நோன்புப்பெருநாளுக்காகத் தனது ஊருக்கு மீண்டு கொண்டிருக்கிறான். அவன் மடியிலே ஒரு பொட் டலம். அது ஒரு சேலையையும், பாவாடைக்கும், ரவிக் கைக்குமான துணிகளையும் தன் வயிற்றிலே புதைத்து வைத்திருக்கின்றது. அவன் அவற்றைத் தனது மனைவிக் காகவே கொண்டுவருகின்றான். தன் துணைவியை விரைவிலே காணவேண்டுமென்ற ஆவல் கணத்துக்குக் கணம் அவன் அகத்திலே பரவிக்கொண்டே வருகின்றது. அவனின் மன நிலையை பஸ்சாரதி அறிவானா? அவன் வழமைபோல பஸ்வண்டியைச் செலுத்திக் கொண்டிருக்கின்றான்.
பஸ்வண்டியோ பருத்த ஒரு பெண்ணைப்போல ஆடி அசைந்து விரைந்து கொண்டிருக்கின்றது. பஸ்ஸினுள் பேச்சின் சப்தமும், சிரிப்பின் ஒலியும் கலந்து கேட்டுக் கொண்டேயிருக்கின்றன. இருந்தும் அவனின் நெஞ்சமோ அவற்றிலே நிலை கொள்ளவில்லை.
நஸீர் பஸ்வண்டிச் சாளர வழியாக வெளியே ஒரு முறை பார்த்துவிட்டு மீண்டும் வசதியாகச் சாய்ந்து கொள் கிறான். சிறிது நேரத்தின் பின் திடீரென்று அவனின் மனத் திரையிலே கடந்த வருடம் நிகழ்ந்த சம்பவமொன்று நிழலாடுகின்றது.
அன்று… புனித ரமழான் மாதத்தின் இறுதிப்பகுதி யிலே ஒரு தினம். சாய்வு நாற்காலியிலே சரிந்திருந்த நஸீர் மெல்ல நிமிர்ந்து உட்கார்ந்துகொள்கிறான். எதிரே கதவு நிலையோடு ஒட்டி நின்ற அவன் மனைவி வஸீரா தாழ்ந்திருந்த தனது தலையை நிமிர்த்தித் தன் கணவனான நஸீரை நோக்கி மெல்லிய முறுவலொன்றை உதிர்த்துவிட்டு அடக்கிவைத்திருந்த வார்த்தைகளை மிகவும் அவதானமாக அவிழ்த்து விடுகின்றாள்.
“இஞ்சப்பாருங்க புனிதமான இந்த ரமழான் மாதத்தில் நோன்பு பிடிப்பது எல்லா ஆண்கள் பெண்களின் தும் கடமையாகும். நீங்க இத மறந்து இந்த மாதத்தில் மிக வும் அலட்சியமாக நடந்துகொண்டு வருவது எனக்கு மிக வும் மனவருத்தமாகவிருக்கிறது. ஒருவன் அல்லது ஒருத்தி ஒரு முஸ்லிமுக்கு பிறந்துவிட்டதாலோ அல்லது முஸ்லிமுக் குரிய பெயரைப் பெற்றிருப்பதாலோ முஸ்லிமாகிவிடமுடி யாது. இஸ்லாத்தின் சகல கடமைகளையும் எடுத்து நடக்க வேண்டும். அப்பதான் அவர்களை முஸ்லிம்களென்று நாம் சொல்ல முடியும். நான் இவ்வளவு நாளும் நீங்க திருந் துவிங்க திருந்துவிங்க என்று எதிர்பார்த்தன். அது நடக் கல்ல. அதனாலதான் நான் இப்படிக் கதைக்கவேண்டிய நிலைக்குள்ளானேன். இதற்காக என்னைக் கோபிக்கவேண் டாம்” என்றுவிட்டு மார்பிலிருந்து சற்று நீங்கிக்கிடந்த சேலையைச் சரிசெய்து கொண்ட வஸீரா தன் எழிலான இருவிழிகள் படபடக்க நின்றிருக்கின்றாள்.
“புள்ள…நீங்க சொல்றது சரிதான். ஆனால், நோன்பு பிடித்தா எனக்கு வாய்வுவாற… உங்களக் கலியாணம் முடிக்கிறத்துக்கு முதல்ல இப்படித்தான் ஒரு முறை நோன்பு பிடித்து வாய்வு வந்து என்ன ஆஸ்பத்தி ரிக்குக் கொண்டு போன.. அதில நான் மிகவும் கஷ்டப் பட்டுப்போனன். அதனாலதான் நான் இப்படி நோன்பு பிடிக்கப் பயப்பர்ரன்” இவ்வாறு வெகு அமைதியாகக் கூறிவிட்டு நெற்றித்திடலிலே வந்து கவிந்து கிடந்த தலை மயிரை ஒதுக்கிவிட்டுக் கொள்கிறான் நஸீர்.
“நோன்பு பிடித்தாத்தான் வாய்வு வருமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது நோன்பில்லாதபோதும் வரலாம். அல்லது எந்த வேளையிலும் வராமலும் விடலாம். ஒருவருக்கு வாய்வு வருகிறதிண்டா அது அவர்ர உடம்பிலுள்ள நோயின் காரணமாகவிருக்கலாம். அல்லது அவர் உண்ட உணவின் தன்மை காரணமாகவிருக்கலாம். உங்க ளுக்கு நடந்தது காகம் குந்த பனம் பழம் விழுந்த மாதிரி. உண்மையைத் திறந்து சொன்னா. இதெல்லாம் நோன்பு பிடிக்காம விர்ரத்துக்குரிய காரணங்களில்ல. இத வெளியில் சொன்னாலும் வெட்கம்”
“புள்ள…நீங்க என்னதான் சொன்னாலும் எனக்குப் பயமாத்தானிருக்கு. எப்படியோ என்ன இந்த முற மன்னி யுங்க. இன்னும் நோன்பு முடியிறத்துக்கும் மூன்று நான்கு நாட்கள் தானே இருக்கு. என்ட சீவன் கிடந்தா எனக்கு என்ன வருத்தம் வந்தாலும் சரி, வாற வருசம் ரமழான் மாதம் முழுவதுமே நான் நோன்பு பிடிப்பன். இது சத்தி யம்.” உறுதியும், வேகமும் விரவிய வார்த்தைகள் நஸீரின் வாயிலிருந்து தெறித்தன. ஆனால் அதனைச் செவிமடுத்த அவளோ, எதுவுமே உரைக்காது புன்னகை ஒன்றை மட் டுமே மலர விடுகிறாள்.
இவ்வாறு நீண்டு கொண்டே வந்த நஸீரின் நினை வோட்டம், ‘சாய்ந்தமருது டிக்கெட்டெல்லாம் இறங் குங்க” என்ற பஸ் கண்டக்டரின் சப்தத்தினால் துண்டிக்கப்பட்டு சுய நிலைக்குள் தள்ளப்படுகின்றான். அவன் மறுகணம் அவன் நிமிர்ந்து பரபரவென நோக்குகிறான். பள்ளிவாயிலின் எதிரேயுள்ள பஸ் தரிப்பு நிலையமொன் றிலே பஸ்ஸைவிட்டுப் பிரயாணிகள் இறங்கிக் கொண்டி ருக்கிறார்கள். அவனும் தன் பொட்டலத்தோடு இறங்கிக் கொள்கிறான்.
‘அல்லாஹு அக்பர்…அல்லாஹ அக்பர்…அல்லாஹு அக்பர்……’ பள்ளிவாயிலில் பொருத்தப்பட் டிருந்த ஒலிபெருக்கிக் குழல்களிலிருந்து தக்பீர் முழங்கிக் கொண்டிருக்கின்றது.
‘பட… பட… பட்… படார்…. பட… படார்…. பட… பட படார்…’ பட்டாசுகள் அதிர்ந்து கொண்டிருக்கின்றன.
அந்த இளங் காலைப் பொழுதிலேயே பல சிறுவர்கள் புத்தாடை புனைந்து வந்து அங்குமிங்கும் கூடிநின்று சந்தோஷ ஆரவாரம் செய்ய ஆரம்பித்தனர்.
பஸ் வண்டியை விட்டு இறங்கிய நஸீரின் உடலோ உவகையினால் சிலிர்த்துக்கொள்கிறது. இருந்தும் அவன் அவ்விடத்திலே சற்றுமே தாமதியாது வீட்டை நோக்கி விரைகின்றான்.
ல்லத்தையடைந்த அவன் திண்ணைக்குள் நுழைந்து நின்று நிமிர்ந்தபோது அவன் மனைவி வஸீரா விரைந்து அவனருகே வந்து புன்னகை தூவி வரவேற்கின்றாள்.
இருபத்தைந்து இருபத்தாறு வயது மதிக்கத்தக்க அவள் மானிற மேனியும் மெல்லிய தோற்றமும் உடை யவள். அவளின் அந்தப் புன்னகை அவளது அழகுக்கு மேலும் மெருகூட்டவே, அவன் அந்த அழகிலே சற்று நிலை குலைந்து போகிறான். இருந்தாலும் அவன் சில வினாடிகளில் தன்னைச் சுதாரித்துக் கொண்டு தலை நிமிர்கிறான். அவ்வேளை வஸீரா தன் கணவனை நோக்கி பின்வருமாறு பகர்கிறாள்:
“இன்னும் பிடிக்கவேண்டிய இரண்டு மூன்று நோன்பு களைத் தவிர மற்றெல்லா நோன்புகளையும் நோற்று விட்டதாகவும் மிச்சத்தையும் தான் நோற்க விருப்பதா கவும் நீங்க எழுதியிருந்த கடிதம் எனக்குக் கிடைத்தது. நான் அதைப் படித்தபோது மிகவும் மகிழ்ந்து போனேன்” என்ற வஸீரா தன் கன்னத்தை வருடிவிட்டுக் கொள்கிறாள்.
அவளின் இந்தக் கனிவான உரையைச் செவிமடுத்த நஸீர், ஒரு புன்முறுவலைப் பரவ விடுகிறான். ஓரிரு வினாடிகளின் பின் அவனே தன் உரையைத் தொடர்கிறான்.
“நான் இந்த முறை ரமழான் மாதம் முழுவதும் நோன்பு பிடிச்சன். இவ்வளவு நாளும் எனக்கு எவ்வளவோ சந்தோஷமாக விருந்திச்சி. நோன்பு பிடிச்சா வாய்வு வருமென்பது தவறுதலான எண்ணம் என்பதையும் நான், உணர்ந்து கொண்டேன். இந்த முறை ரமழான் மாதத் தில் நான் ஒழுங்காக நோன்பு நோற்று வந்தது போல தொழுகையையும் எடுத்து நடந்து வந்தேன். இனிமேல் நான் எப்படியான நிலை வந்தாலும் சரி, நானும் உங் களைப் போல அல்லாட பாதையில் செல்றத்துக்குத் தீர்மானிச்சிட்டன். அறியாமையில் மூழ்கியிருந்த என்னை இவ்வளவு தூரம் திருத்திவிட்ட தங்களுக்கு இந்தப் பெரு நாளைக்கு ஒரு விசேஷமான உடுப்புச்சாமான்கள் எடுத் துத்தர வேண்டுமென்று எண்ணினேன். அதன் விளைவாகவே இந்தப் பார்சலுக்க இருக்கின்ற ஒரு சாரி, பாவாடைக்கும் ரவிக்கைக்குமான துணிகள் ஆகியவற்றை உங்களுக்காக வாங்கி வந்தேன். இன்னாங்க” என்ற நஸீர், அகமும் முகமும் மலர தனது கரத்திலேயிருந்த பொட்டலத்தைத் தன் மனைவியிடம் வழங்குகிறான்.
தன் கணவனிடமிருந்து அந்தப் பொட்டலத்தை மிக்க மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் பெற்றுக் கொண்ட வஸீரா, ” அது சரி…உங்களுக்கொண்டும் வாங்க வில்லையா?” என்கிறாள்.
“இல்ல… முதலாளி அறுநூறு ரூபாக் காசிதான் தந்தாரு. அதில, இவ்வளவு சாமான்களுக்கும் ஐநூற்று ஐம்பது ரூபாய் செலவழிஞ்சி போச்சி. எனக்கென்னத்துக்கு வஸீரா, எனக்கிட்ட இருக்கிற உடுப்புகளைக் கொண்டே நான் ஒரு மாதிரியாச் சமாளிச்சுக்குவன்.”
நஸீர் சேர்ட்டை இழுத்து விட்டுக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறான்.
“சே…இந்தக் காசுக்க நாம ரெண்டு பேருக்குமே உடுப்பெடுத்திருக்கலாம். நீங்க ஒண்டு” என்று அங்க லாய்த்துக் கொள்கிறாள் வஸீரா.
“ம்… அத விடுங்க.” இது அவன்.
“சரி… இஞ்சப்பாருங்க முன்பு எப்படியோ இருந்த நீங்க இப்ப எவ்வளவோ மாறிட்டீங்க… இவ்வளவுக்குத் திருந்திவிட்ட உங்களுக்கு நானும் ஏதாவது பரிசு தரவேண் டாமா? இதைத் தவிர உங்களுக்குத் தருவதற்கு என்னிடம் வேறு என்ன பரிசிருக்கு.” என்ற வஸீரா தன் கணவனை மிக்க கனிவோடு நோக்குகின்றாள். அவளின் சுரத்திலி ருந்த அந்தப் பொட்டலம் பக்கத்திலிருந்த ஸ்ரூலில் மெல்ல நழுவி விழுகிறது. அவள் வதனமோ, அன்றலர்ந்த செந் தாமரை மலராக, இதழ்களோ துடிக்கின்றன. மறுகணம் அவள், அசையாது அப்படியே நின்ற தன் கணவனை ஆரத் தழுவிக் கொள்கிறாள்.
– தினகரன் வாரமஞ்சரி 1981 ஆகஸ்ட் 02.
– காணிக்கை (சிறுகதைகள்), முதற் பதிப்பு : ஜனவரி 1997, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம் வெளியீடு, இலங்கை.