நவீனின் உலகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 20, 2013
பார்வையிட்டோர்: 6,445 
 

“பறவைகளின் சப்தத்தில் தன் நித்திரை கலைந்த நவீன், மெதுவாக தன் மேல் படர்ந்திருந்த போர்வையை விலக்கினான். தன் வீட்டு மாடி வரை வந்து தன் கரத்தை நீட்டிக் கொண்டு இருக்கும் வேம்புவில் இருந்து ஜனிக்கும் பறவைகளின் ஒலியை மௌனமாக அவதானித்தான். பின் கண்களை மூடி அவனாக சிரித்தான், தன் டவுசர் பைக்குள் கை விட்டு, ஒரு கைக்குள் அடங்கும் புகைப்படத்தை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டான். அப்போது தனக்குத் தானே நல்லா டான்ஸ் ஆடி.. எல்லோரட கைதட்டலையும் வாங்கணும் எனக் கூறிக் கொண்டான்.

அது நடிகர் பிரபுதேவாவின் படம். பிரபுதேவா தன் உடலை L வடிவில் வளைத்து ஆடும் புகைப்படம். அந்த புகைப்படத்தை நெடு நாட்களாக வைத்திருந்ததால் அது கொஞ்சம் வெளுத்திருந்தது. அந்த படத்தை உற்று பார்த்து கொண்டே இருந்தான் இருப்பை தொலைத்தவனாய். அத்தருணத்தில் மற்றொரு லோகத்தில் ஜனனம் எடுத்திருந்தான். கனவுகள் அவனுள் பூத்து தன் வாசத்தை அவன் மன வெளியில் பரப்பி விட்டிருந்தது. கிருஸ்ணவேணி அக்காவின் நினைவு வந்து மனதெங்கும் வியாபித்து நின்றது.கண்கள் குளமாகி பெருகி வழிந்தது கண்ணீராய்.

நவீனின் மனதில் நடனம் ஆடும் ஆசையை வளத்து விட்டதே கிருஸ்ணவேணி அக்காதான். கிருஸ்ணவேணி நவீனை விட மூன்று வயது மூத்தவள் அப்போது அவள் எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள், கொஞ்சம் கருப்பாய் இருந்தாலும் வட்டமான அழகான முகம், பௌர்ணமி நிலவு போன்ற வெண்மையான பற்கள், சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அழகுயென மொத்தத்தில் அழகு சிலையாய் சுற்றித் திரிந்தால் கிருஷ்ணவேணி.

கிருஸ்ணவேணிக்கு நடனம் ஆட வேண்டும் என்பதே கனவாய் இருக்கும், புதிய பாடல்களை கேட்டு அதற்கேற்றார் போல் நடனம் ஆடுவாள். திருவிழாக்களில் மைக் செட்டில் பாட்டு போட்டு விட்டாள் துள்ளி குதிப்பாள் பட்டாம் பூச்சியாய். அவளை அறியாமலேயே தட்டான்களை போல தெருவெங்கும் பறந்து திரிவாள் எந்த இடம் என்றாலும் வெட்கப் படாமல் ஆடுவாள் ..

பள்ளி ஆண்டுவிழா, உள்ளூர் திருவிழாவில் கண்டிப்பாய் கிருஸ்ணவேணி நடனம் ஆடுவதை வழக்கமாய் கொண்டிருப்பாள். நவீனுக்கும் கிருஸ்ணவேணிக்கும் எந்த ஒரு ரத்த சம்பந்தமும் இல்லை. இருப்பினும் இருவரும் பாசமாய் சுற்றித் திரிவார்கள், வயல் வெளிகள், கோவில் கூடங்கள், கண்மாய் கரை, அய்யனார் சாமி, கருப்ப சாமி ஓடை புளிய மரம், கந்தன் கெணறு (ஒரு சிறு பாலம்) என எல்லா இடத்திற்கும் அழைத்து செல்வாள் கிருஷ்ணவேணி.

நொண்டி, கிளித் தட்டு, கோ கோ, ஸ்கிப்பிங், கம்மாகரயோரம் உள்ள ஆல விழுதுகளில் தூரி விளையாடுவது, முனியாண்டி தாத்தாவின் படப்படிக்கு சென்று (வைக்கோல் வைத்துள்ள இடம்) சரிந்து சரிந்து விளையாடுவது என மகிழ்ச்சியாய் நவீனை கூடவே அழைத்து கொண்டு சுற்றுவாள் கிருஸ்ணவேணி.

கிருஸ்ணவேணி கூடவே சுற்றிதிரிந்ததால் நவீனின் மனதிலும் நடனம் ஆடுவதை பற்றிய எண்ணம் வளர தொடங்கியது. இருவரும் ஆடி மகிழ்ந்து வாழ்வில் கரைந்து பொழுதுகளை தின்று மகிழ்ந்தனர். இந்த கள்ளமில்லா அன்பு உள்ளங்களை பார்த்து கொக்குவார் பட்டி கிராமமே அசந்து நின்றது சந்தோசம் கொண்டது. கொக்குவார் பட்டி கிராம மக்கள் வெள்ளந்தி மனிதர்கள். விவசாயம் ஓன்று மட்டும்தான் அவர்களுக்கு பிரதான தொழில் கலப்பையும் கையுமாகவே சுற்றி திரிவர். மேற்கு மலை தொடரின் மூலையில் உள்ள ஒரு கிராமம். எங்கு பார்த்தாலும் பதுமை சூழ்ந்திருக்கும் .

வெள்ளை காரர்கள் கொக்கு வேட்டைக்காக இங்கு வருவது வழக்கமாம். அப்படி வந்தவர்கள் இந்த இடத்தை Kokku War Patti என அழைத்தனர் (கொக்குவோடு சண்டை போடும் இடம்) காலம் செல்ல செல்ல.. பின் அதுவே பெயராய் மாறி விட்டது. மலையின் மேல் உள்ள கோவக்கார கருப்பசாமிக்கு வருடந்தோறும் நடக்கும் திருவிழா வெகு சிறப்பாக இருக்கும். டேய் நவீனு இந்த வருசத்து திருவிழாவுல நம்ம ரெண்டுபேறும் சேந்து ஆடலாம்டா என்றாள் கிருஸ்ணவேணி.

சரிக்கா எந்த பாட்டுக்கு ..

ராக்கம்மா கையத் தட்டு.. பாட்டுக்கு

ஏய் .. ரஜினிகாந்த் பாட்டு ஏய் ஏய்.. என தன் ஓட்டைப் பல் தெரிய சிரித்து மகிழ்ந்தான் நவீன்.

தொலைதூரத்தில் படைக் குருவிகளை விரட்ட டம் டம் என வேட்டுகள் போட்டு கொண்டிருந்தனர்.. கம்பு விளைந்திருக்கும் சமயத்தில் இந்த படைக் குருவிகள் கூட்டம் கூடமாய் வந்து கதிர்களை நாசம் செய்து விடும்.

வேட்டு வெடி வெடிக்கும் சப்தம் வந்த திசையை நோக்கி வேகமாக ஓடிச் சென்றாள் கிருஷ்ணவேணி..

அவளின் பின்னாலேயே அக்கா மெல்லமா.. அக்கா என கூறிக் கொண்டே ஓடினான் நவீன்.

வாடா, அக்கா வேமா போறேன்.. நீ பின்னாலேயே வா எனக் கூறிக் கொண்டே ஓடினாள்.. சென்ற வாரம் பேய்ந்த மழையில் விழுந்து கிடக்கும் கரண்ட் போஸ்ட் மரம் தெரியாமல்..

கம்மங் கதிர்களுக்குள் விழுந்து விழுந்து ஓடினாள்.. கட கட வென குடு குடு என..

திடீரென ஐயோ தம்பி என கூறி கொண்டே சுருண்டு விழுந்தால் கிருஷ்ணவேணி..

அவள் ஓட்டத்தை கரண்ட் நிறுத்தி விட்டிருந்தது..

வயலில் வேலை செய்தவர்கள் அவள் குரலை கேட்டு ஓடி வந்து பார்க்கும் பொழுது கிருஷ்ணவேணியின் உயிர் பிரிந்திருந்தது. அந்த அழகான உடல் கரிக்கட்டையாய் விறைத்திருந்தது ..

“அடி பாதகத்தி உசுரு போறப்ப கூட தம்பின்னு சொன்னாலே” என ஒரு கிழவி நெஞ்சி அடித்து அழுது கொண்டிருந்தாள்..

டேய் நவீனு டேய் என அம்மா சப்தமிடும் குரல் கேட்டு நிகழ்காலத்திற்கு வந்தான் நவீன். கிருஷ்ணவேணி அக்காவின் நினைவு மனதில் படிந்திருந்தது கல்வெட்டாய். டேய் காலையில ஏழுமணி ஆய்ருச்சு , எந்திரிடா, ஒழுங்கா படி, நாளைக்கு ஒங்க பள்ளி கூடத்துல ஸ்போர்ட்ஸ் டே தானே.. இன்னைக்கு ஓடி பழகுநாதானே நாளைக்கு ஜெய்க்க முடியும். பக்கத்துக்கு வீட்டு காரன ஜெயிக்க விட்டுராதடா, நீ ஜெயிக்க்கிரையோ, இல்லையோ பக்கத்துக்கு வீட்டு காரன மட்டும் ஜெயிக்க விட்டுராதடா.. ஆமா சொல்லிட்டேன்.. என தன் குரோதங்களை அவனுள் விதைத்து கொண்டிருந்தாள் நவீனின் தாய் குணவதி.

எல்லாதிற்கும் தலையாட்டும் தலையாட்டி பொம்மை போல் தலாயாட்டி கொண்டிருந்தான் நவீன். அவன் கனவுகள் எல்லாமே நடனம்தான் .அவன் மனதில் கிருஷ்ணவேணி அக்காவின் ஆசை படிந்திருந்தது. அக்கா, பிரபுதேவா, மைக்கல் ஜாக்சன் என நடனமாடும் அனைவரும் பிரவகித்து மறைந்து கொண்டிருந்தனர்.

டேய் நவீனு போன தடவ பத்தாவது ரேங்குல இருந்த, இந்த தடவ அஞ்சாவது வந்துட்ட, முதல் ரேங் எடுக்கனும்டா அப்பதாண்டா நான் பெருமையா ரோட்டுல நடந்து போக முடியும்.. என்றார் அப்பா மில்லுக்கு வேலைக்கு செல்லும் பதற்றத்தோடு.

ஆனால் நவீனின் மனதில் அடுத்த வாரம் வரும் ஆண்டு விழாவில் நடக்க இருக்கும் நடன போட்டியை பற்றிய எண்ண அலைகளே மனக்கரையில் வந்து சலனத்தை ஏற்படுத்தியவாறு இருந்தது.

பள்ளி ஆண்டுவிழாவும் வந்தது.. நடன நிகழ்ச்சி தொடங்கியது நவீன் ஆடினான். அப்போது கிருஸ்ணவேணி அக்காவின் நினைவுகள் வந்து மனதில் பெருகி வழிந்தது..

நடன நிகழ்ச்சி முடிந்தவுடன். நடனமாடியவர்களுக்கு பரிசாக சிறிய கிண்ணங்களை அளித்தனர். நவீன் அதை ஆசையாக வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்து அம்மாவிடம் காண்பித்தான்.

ஆமா பெரிய இது.. உன்னைய ஓடச் சொன்னா ஆடிட்டு வந்திருக்க, பக்கத்துக்கு வீட்டு காரி தெரு குழாயில தண்ணி புடிக்கிறப்ப பீத்திக்குவா.. என்ன செய்யுறது நான் பெத்தது இப்படி இருக்கு என புலம்பி தள்ளினாள்.

என்னத்த ஆடி.. ம்ம். படிக்க பாருடா என சட்டையை கழட்டி சுவற்றி அறைந்த ஆணியில் மாட்டி கொண்டே கூறினார் அப்பா. மனம் உடைந்து வாங்கிய கிண்ணத்தை வைத்து கொண்டு மொட்டை மாடிக்கு சென்று அழுதான்.

கண்ணீர் உடைந்து வழிந்தது.. சிறிது நேரத்திற்கு பின் கிண்ணத்தை பார்த்தான் அதில் கிருஸ்ணவேணி அக்கா புன்னகை பூத்து கொண்டிருந்தாள். இது தனக்கான உலகம் இல்லை என முடிவு செய்து கண்களை மூடி கனவில் சஞ்சரித்தான் நவீன். அங்கே அவனுக்கான கைதட்டல்களோடு காத்து கொண்டிருந்தாள் கிருஸ்ணவேணி அக்கா.

– ஜனவரி 2012

Print Friendly, PDF & Email

வெள்ளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023

நிழல் பேசுகிறது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

பர்ஸனல் ஸ்பேஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)