கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 28, 2023
பார்வையிட்டோர்: 5,619 
 
 

இடி இடித்து பார்த்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம். மேலே விழுந்த அனுபவம் யாருக்காவது உண்டா?

சம்பத் அப்படி ஒரு அனுபவத்துக்கு ஆளாகியிருந்தான். வானத்து இடி உடம்பைக் கரியாக்கும். இடிச் செய்திகளோ ஸ்தம்பிக்க வைக்கும். சம்பத்தும் ஸ்தம்பித்திருந்தான்! மாலை முடிந்து இருட்டத் தொடங்கியிருந்தது. செய்தி செல்போன் வழிதான் வந்திருந்தது. அருகில் இருந்த அவன் அம்மா பூரணி வேகமாய் எடுத்து அதற்கு காதைக் கொடுத்தாள்.

‘‘ஹலோ யாரு ?’’

‘‘நீங்க யாரு… சம்பத்துங்கறவருக்கு என்னாச்சு?’’

‘‘சம்பத் என் பிள்ளை… அவன் அதிர்ச்சியில் இருக்கான். நீங்க சொல்லுங்க. எங்க இருந்து பேசறீங்க… என்ன விஷயம்?’’

‘‘நாங்க ஹாஸ்பிடல்ல இருந்து பேசறோம். வெரி சாரி… உங்க கணவர் ராமசுந்தரம் இறந்துட்டார்…’’

இம்முறை பூரணி மயங்கியே விட்டாள்.

மயக்கம் தெளிந்ததும், ஸ்தம்பிப்பு நீங்கியதும் ஒரு பைக்கில் ஏறிக்கொண்டு இருவரும் புறப்பட்டபோது தெருவில் லாக்டவுன் வெறிச்சோட்டம். எல்லோரும் சீரியலில் மூழ்கியிருப்பது வீட்டுக்கு வீடு காதில் விழுந்த டைட்டில் சாங்கில் ருசுவாயிற்று.

கால்வாய்ப் பாலம் ஒன்றை ஏறிக்கடக்கையில் ஓரமாய் டாஸ்மாக் பார் கண்ணில் பட்டதில் அங்கு மட்டும் நல்ல கூட்டம்.

சற்று தள்ளி சாலை ஓரமாய் ஒரு ஜீப்பும் அதன் முன் இரு போலீஸ்காரர்களும் நின்றிருந்தனர். கையை நீட்டி பைக்கில் வந்த பூரணியையும், சம்பத்தையும் மறித்தனர். ‘‘ஜோடியா எங்க கிளம்பிட்டீங்க?’’ – ஒரு போலீஸ்காரரின் ஆரம்பமே சற்று தப்பாக இருந்தது.

‘‘சார் இது என் அம்மா சார்…’’ – சம்பத்திடம் ஒரு சன்னப் பதற்றம்.

‘‘அம்மாவா…?’’  அலட்சியக் கேள்வியோடு பூரணியை பூரணமாகப் பார்ப்பது போல் ஒரு பார்வை பார்த்தார் இன்னொரு போலீஸ்காரர். அதற்குள் அடுத்தவரிடம் கடமை உணர்வு கொப்பளிக்க ஆரம்பித்தது. ‘‘ஆமா… இப்ப ஊரடங்குன்னு தெரியாதா?’’

அவரின் அக்கேள்விக்கு சம்பத் திரும்பி டாஸ்மாக் பாரை பார்த்தான். அது இவர்களுக்குக் கிடையாதா என்பது போல்…

‘‘என்ன அங்க பாக்கறே..?’’

‘‘இல்ல… அவசரமா ஆஸ்பத்திரிக்குப் போய்க்கிட்டிருக்கோம். ரொம்ப மோசமான சிச்சுவேஷன் சார்…’’ – வம்பெதற்கு என்று சம்பத் உள்ளதைச் சொன்னான்.

‘‘இதே கதையை எத்தன பேர் சொல்வீங்க…? ஆமா மாஸ்க் எங்க?’’ – கேட்ட போலீஸ்காரரின் முகத்துக்கான மாஸ்க் அவர் தாடையில் இருந்தது.

‘‘கிளம்பற அவசரத்தில் மறந்துட்டேன் சார்…”

“ஹெல்மெட்டுக்கும் அதே பதில்தானா?’’

சம்பத் சற்று திணற, பூரணி கைகூப்பியபடியே இடையிடலானாள். ‘‘சார்… என் வீட்டுக்காரர் இறந்துட்டார். இப்பதான் தகவல் வந்தது. கொரோனா பயத்துல யாரையும் துணைக்கு நாங்க கூப்பிடலை. யாரும் வரவும் தயாரா இல்லை. உங்களுக்கே தெரியும். ஒரு ஆட்டோ, டாக்சி கிடையாது. அதனாலதான் என் மகனோட டூவீலர்ல வந்தேன். தயவுசெய்து எங்கள போக விடுங்க சார்… உங்களுக்குப் புண்ணியமா போகும்…’’
பூரணியின் பேச்சு வேலை செய்தது. அந்த இரு போலீஸ்காரர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து ஏதோ சமிக்ஞை செய்து கொண்டனர். “சரி சரி… ஒரு ஐநூறு ரூபாயை ஃபைன் கட்டிட்டுப் புறப்படுங்க…’’ என்று ஜீப் பானட் மேல் இருந்த ரசீதுக்கான இன்ஸ்ட்ருமென்ட்டை எடுத்துக்கொண்டே டூவீலரின் வண்டி நம்பரை ஒரு பார்வை பார்த்தார் ஒரு போலீஸ்காரர். அடுத்த நொடி சம்பத்திடம் ஒரு ஆவேசம்.

‘‘அதுக்கென்ன சார். கட்டிட்டா போச்சு! கட்டிட்டு நான் போகப் போறதில்ல சார். இந்த டாஸ்மாக் பார்ல இருந்து குடிச்சிட்டு மாஸ்க், ஹெல்மெட்டுன்னு என்னைப் போல எதுவுமே இல்லாம வர்ற இவங்களுக்கெல்லாம் நீங்க ஃபைன் போடுறத பார்க்காம நான் போகப் போறதில்ல சார்…’’ என்றான். ஒரு அம்பு குத்தினாற் போல் இருந்தது அந்த போலீஸ்காரருக்கு.

பூரணியோ, ‘‘சம்பத்… வில்லங்கம் பண்ண இதுவா நேரம்? பணத்த கொடுத்துட்டு புறப்படுடா…’’ என்றாள் சற்றே பலமான குரலில்.

ஐநூறும் கைமாறியது! ரசீது தந்தபோது அதை கசக்கிப் போட்டுவிட்டு கண்கள் கனக்க பார்த்தபடியே புறப்பட்டான்!

ஹாஸ்பிட்டலைச் சுற்றி ஏராளமாய் பேரிகாட்ஸ்.சந்திர மண்டலத்தில் திரிபவர்கள் போல் கொரோனா தொற்ற இயலாத ஒருவித நீல நிற PPE உடையில் பலர்.

கண்ணில்பட்ட எல்லோருமே முகக் கவசத்துடன்தான் இருந்தனர். யாருக்கும் யாரையும் தெரியவில்லை. வழியிலேயே ஒரு மெடிக்கல் ஷாப் மட்டும் திறந்திருக்க அதில் இரண்டு மாஸ்க்கை அதன் அடக்க விலைக்கும் மேலான விலையில் வாங்கி மாட்டிக்கொண்டு வந்ததால், இங்கே கேள்விகளுக்கு இடமில்லாது போயிற்று.

சிலர் தாடைக்கு மாஸ்க் அணிந்து துணிவாய் நடந்தபடி இருந்தனர். இளநீர் கடைக்காரன் ஓர் அழுக்குத் துண்டையே மாஸ்க் காக்கி கட்டிக்  கொண்டிருந்தான்.ஒரு கண்ணுக்குத் தெரியாத கிருமி மொத்த மனிதக் கூட்டத்தையும் வெச்சு வெச்சு செய்யும் என்பதை ஆங்கிலப் படச் சினிமாக்காரர்கள் கூட கற்பனை செய்திருக்கவில்லையே..! விதவிதமான ராட்சஸ மிருகங்களோடு அல்லவா அவர்கள் நின்றுவிட்டனர்!

பெரும் ஆயாசமுடன் ஹாஸ்பிடல் ரிசப்ஷனுக்கு போய் நின்று அப்பா ராமசுந்தரம் பேரைச் சொன்ன மாத்திரத்தில் ஒரு கவச உடை மனிதர் முன்னால் வந்தார். கைகளை நீட்டச் சொல்லி சேனிடைசர் தெளித்தார். பின் மொத்த உடம்பின் மேலும் ஒரு வாசமூட்டிய கிருமிநாசினிப் புகையை ஒரு டியூப் வழியாக படச் செய்து ‘வாங்க என் பின்னாலே’ என்பது போல முன்னால் நடந்தார்.

பலமுறை இதே ஆஸ்பத்திரிக்கு சம்பத் வந்திருக்கிறான். எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். மருந்து நெடி, ஸ்ட்ரெச்சர் குறுக்கீடுகள், பலர் மேல் உரசல் என்று நெருக்கடி மிகுந்திருக்கும்.இப்போதோ எல்லாமே உதிர்ந்து போய் அந்த இடம் புது உலகின் ஒரு மர்ம பாகம் போல தோன்றிற்று. அந்த கவச மனிதர் உள்ளே இருந்த கேஷ் கவுண்ட்டர் செக்‌ஷனின் கம்பிக் கூண்டு ஒன்றின் முன் சம்பத்தையும், பூரணியையும் நிறுத்தினார்.

அந்தக் கூண்டுக்கு முன் ஒரு மீட்டர் இடைவெளியில் கயிறு கட்டப்பட்டு அது கவுண்ட்டரை நெருங்காதபடி தடுத்துக் கொண்டிருந்தது. கொரோனா  எஃபெக்ட். கூண்டுக்கு உள்ளேயும் ஒரு கவச மனிதன், ஆணா பெண்ணா என்பதே தெரியாதபடி.

‘‘இங்க பணத்தை கட்டிடுங்க… பாடியை உங்ககிட்ட நேரா தரமாட்டாங்க. கிரிமிடோரியத்துக்குப் போயிடுங்க… அங்கயும் யாரும் பார்க்க அனுமதி கிடையாது. நீங்க அம்மா பிள்ளைங்கறதால PPE டிரெஸ் போட்டுக்கிட்டு கிட்ட போய் முகத்தை மட்டும் பார்க்கலாம். கிரிமிடோரிய சார்ஜையும் இங்க பில்லுல சேர்த்திட்டோம். இருந்தாலும் அங்க ஆஷசை (சாம்பல்) தரும்போது தலையை சொறிவாங்க. அவங்களுக்கு ஒரு ஆயிரமோ ஐநூறோ தர்றது உங்க விருப்பம்…’’

கூண்டின் முன், அந்த கவச மனிதர் கொடுத்த விளக்கத்தில் பூரணிக்குள் ஒரு சிறு பூகம்பமும், சம்பத்தின் அடிவயிற்றில் அமிலமும் பீறிட்டு அடங்கியது.

கம்ப்யூட்டரின் கட்டளைக்கேற்ப ஒரு முழு நீள தாளை ஏராளமான அச்செழுத்துகளுடன் பிரிண்டரும் வெளியே துப்பியது.

சர்ர்ர்ர்ர்ர்… என்று கிழித்து மடக்கி ஆஸ்பத்திரி பெயரும் சிம்பலும் பொறித்த கவரில் போட்டபடியே அதைத் தராமல் ‘‘டோட்டலா ஆறு லட்சத்தி அறுபத்தி நாலாயிரத்து எழு நூத்தி நாற்பது ரூபா, அறுபத்தி நாலு பைசா.

நீங்க ரௌண்டா கொடுங்க. அது போதும்! கேஷா? கார்டா?’’ என்று அந்த கூண்டுக் கவச மனிதன் கேட்டபோது சம்பத்துக்கு, தான் நின்ற இடம் இரண்டாகப்  பிளந்து அதில் விழுந்ந்ந்தபடியே இருப்பது போல் உணர்வு தட்டியது.

பூரணி துவண்டு அருகாமை நாற்காலியில் சாய்ந்து விட்டாள். அதில் சற்று கவசம் விலகவும் ‘‘மாஸ்க்கை நல்லா போடுங்க… கமான். அப்புறம் நீங்களும் கொரோனா பாடியாயிடுவீங்க…’’ என்று அழைத்து வந்த கவச மனிதர், துவண்ட அவள் மனதில் ஒரு கிலியை மூட்டினார்.‘‘இவ்வளவு பணம் இப்ப என்கிட்ட இல்லையே… இவ்வளவு பெரிய பில் வரும்னும் நான் எதிர்பார்க்கல…’’ என்று சுதாரித்தபடியே பேசினான் சம்பத்.

‘‘நீங்க லக்கி சார்… ஏழு நாள் ஐசியூவுல, ஆக்சிஜன் மாஸ்க்கோட, இன்வெர்ட்டர்ல ஸ்பெஷலா ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கு. இந்த நாலு நாளைக்கு நீங்க ஹாஸ்பிட்டல் மார்ஸுக்கு போயிருந்தா, பத்து லட்சம் தாண்டியிருக்கும். நர்மதாவுல இன்னும் கூட… ’’‘‘இதெல்லாம் நீங்க காப்பாத்தி கொடுத்திருந்தா சொல்ல வேண்டிய வசனம். உயிரோட வந்தவரை பிணமால்ல தர்றீங்க? அதுலயும் கைல தராம நேரா சுடுகாட்டுக்கே போன்னு சொல்றீங்க. சொந்த பந்தங்க பாக்க வேண்டாமா? சடங்கு சம்பிரதாயம் பண்ண வேண்டாமா?’’

‘‘கொரோனா பாடிக்கு இது எதுவும் கிடையாதுன்னு உங்களுக்குத் தெரியாதா சார்? நீங்க நியூஸ் பாக்கறதில்லையா? அமெரிக்காவுல கொத்தா அள்ளிக் கிட்டு போய் பெரிய குழியைத் தோண்டி குப்பையைக் கொட்டி மூடற மாதிரி மூடுறாங்க. ஆனா, நாம எவ்வளவோ பரவால்ல… முகத்தை பாக்க விடுறோம். அஸ்தியையும் கலெக்ட் பண்ணி தர்றோம். கொஞ்சம் புரிஞ்சிக்குங்க சார்…’’

அதற்குமேல் அவருடன் பேச சம்பத்திடம் தெம்பில்லை. அந்த நிலையில் பூரணி தன் பத்து பவுன் சங்கிலியைக் கழற்றிக் கொடுத்த விதமே, முதலில் இதை அடகு வைத்து காரியத்தை முடி என்று கட்டளை இடுவதுபோல்தான் இருந்தது.

சம்பத்துக்கு அந்த கூண்டு மனிதர் ஒரு சம்பல் கொள்ளைக்காரன் போல்தான் தெரிந்தார்.கிரிமிடோரியத்தில் PPE உடையை ஒரு பொது உடையாக வைத்திருந்தனர். யாரோ இருவர் தங்களுக்குரிய பிணத்தைப் பார்த்துவிட்டு வந்து கழற்றித் தந்தனர். பூரணி வாங்க மறுத்ததோடு, ‘‘அவரை நான் பிணமா பாக்க விரும்பல… நீ போய் பாத்துட்டுவா…’’ என்று முகக் கவசம் நனைய அழுத நிலையில் ஒதுங்கிக் கொண்டாள். உடன் அவள் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி வந்திருந்து தாங்கிப் பிடித்துக்கொண்டார்.

சம்பத் மட்டும் அந்த PPE ஆடை அணிந்து அப்பா ராமசுந்தரம் முகத்தை பார்க்க சென்றான். 65 வயதுதான் ஆகிறது அப்பாவுக்கு. சிகரெட் நிறைய பிடிப்பார். அதுவே கொரோனா அவர் நுரையீரலில் கூடாரம் போட்டு தங்க வசதியாகிவிட்டது.சம்பத்தும் அவ்வப்போது தம் அடிப்பான். அப்பாவின் உயிர்ப்பில்லாத முகத்தை பார்த்த போது அதன் நிமித்தம் ஒரு குற்ற உணர்வு ஏற்பட்டு அடங்கிற்று. இனி சிகரெட்டை தொடவே கூடாது என்றும் ஒரு எண்ணம்! துக்கமும் பீறிட்டது.

‘‘அப்ப்ப்ப்பாாா…’’ என்று வெடித்ததில் வார்த்தைகள் விபத்தில் சிக்கிய ரயில்பெட்டிகள் போல் ஒன்றின் மேல் ஒன்று ஏறிக்கொண்டன. நெஞ்சை அடைத்து என்னவெல்லாமோ செய்தது. மொத்த உடல் உறுப்புகளும் நசிந்து ஒரு வலியுணர்வு உருவாகி அதை விவரிக்க அகராதியில் மட்டுமின்றி வழக்கத்திலும் சொற்கள் இல்லாதது போல் உணர்ந்து அப்படியே துவண்டு விழப்போனான்.

இப்படி ஆகக்கூடும் என்று தெரிந்தது போல யாரோ ஒரு கவச உடைக்காரர் வந்து தாங்கிக் கொள்ள அடுத்த நொடி அந்த உடம்பு அரைவட்ட துவாரம் ஒன்றினுள் தள்ளப்பட்டு தொபேலென்று ஒரு இரும்புக்கதவு மேலிருந்து கீழ் விழுந்து மூடியது,இவ்வளவுதானா மனித வாழ்வு?மிகச் சரியாக 14 நாட்கள் சென்ற நிலையில் சுயமான குவாரன்டைன் என்னும் தனிமைப்படுத்தல் முடிந்து மெல்ல வீட்டுக்கு வெளியே வந்தான் சம்பத். கன்னத்தில் கேச வயல்.

அக்கம் பக்கத்தவர் ஜன்னல் வழியாகவே பார்த்து துக்கம் கேட்கத் தொடங்கினர். இந்தப் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு பரம வைரி. இருமல் தும்மலுக்கெல்லாம் எட்டிப் பார்ப்பவர்.குவாரன்டைனை அரசு நியமித்த ஒரு போலீசைப் போல தன்னை எண்ணிக்கொண்டு கண்காணித்திருந்தார். சம்பத் அவர் புகாரளிக்க இடமில்லாதபடி வீட்டோடு கிடந்ததில் அவர் முகத்தில் மட்டும் ஒரு ஏமாற்றம். அதன் ரேகையோட்டம் பளிச்செனவே அவர் பார்த்த விதத்தில் தெரிந்தது.

கொரோனா இவர்முன் ஒன்றுமேயில்லை என்று எண்ணிக்கொண்டான் சம்பத். இந்த பதினான்கு நாட்கள் மட்டுமல்ல, அதற்கு முந்தைய ஒருவார காலம் என்னும் ஏறத்தாழ 21 நாட்கள் அவர் வாழ்வின் மறக்க முடியாத நாட்களாகிவிட்டன.பணம் பணம் பணம் என்று உலகமே குறுக்கும் நெடுக்கும் அலைவது போல் பிரமை தட்டி அதிலிருந்து இன்னமும் கூட விடுபட முடியாதபடி ஒரு ஆற்றாமை.

எதோ கொஞ்சம் சேமிப்பிருந்தது. அம்மாவின் தங்க சங்கிலியும் கை கொடுத்ததில் இந்த 21 நாட்களில் அவ்வளவு பணமும் போய், அப்பாவும் போனதே மிச்சம். அவ்வளவுக்கும் கொரோனா என்கிற அந்த ஒற்றைக் கிருமிதான் காரணம்.அந்தக் கிருமியை நினைக்க நினைக்க நெஞ்சு குமுறியது. அது மட்டும் கையில் கிடைத்தால் சப்பாத்தி மாவை பிசைவது போல பிசைந்து காலடியில் போட்டு மிதித்து, பின் தை தை தை என குதித்து அதை நசித்துச் சிதைத்து தரையோடு தரையாகத் தேய்த்து பெரும் குரலெடுத்துக் கத்தி அந்த தரைமேல் ஆவேசம் தீர உருண்டு புரள வேண்டும் என்றெல்லாமும் தோன்றிற்று.

எந்த சடங்குகளையும் செய்ய முடியவில்லை. நெற்றியில் ஒரு ரூபாய் பொட்டு, சூரண நாமம், அதுவுமில்லை. பட்டை, பாடை என்று எதற்கும் இடமில்லை. வீட்டில் தொடங்கி சுடுகாடு முழுக்க பிணத்துக்கு போட்ட மாலைகளை தெருவில் பிய்த்துப் பிய்த்து போட்டு சாலைகளை நாஸ்தியாக்கும் கொடூரத்தில் இருந்து, கட்டிப்பிடித்து அழுவது புரள்வது என்று சகலத்தையும் கொரோனா விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது.

பாரதி மட்டும் இப்போது இருக்க நேரிட்டால் ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதை ‘ஒன்றுபட்டால் உண்டு சாவு’ என்று மாற்றியும் எழுதியிருப்பான்.சம்பத் இப்படி அலைமோதும் எண்ணங்களோடு மளிகைக்கடைக்குப் போனபோது அங்கே சிலர் சாக்பீஸால் போடப்பட்ட வட்டங்களுக்குள் நின்றுகொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தனர். அவனுக்குத் தெரிந்து கடைக்காரர் ஈ ஓட்டிக் கொண்டிருந்தவர். கொரோனாவால் வந்த லாக்டவுன் அவருக்கு பெரும் லாபமாகிவிட்டது!

சாமான்களை சம்பத் வாங்கியபோது கணிசமாக 30 சதவிகிதம் விலை கூடியிருந்தது. ‘‘என்னண்ணே இப்படி ஏறிக்கிடக்கு?’’ ‘‘சரக்க எடுத்து வர்றதுக்குள்ள எம்புட்டு பேரை கவனிக்க வேண்டியிருக்கு தெரியுமா? உசுரை பணயம் வெச்சுல்ல கடை நடத்தறோம்…’’ என்று சலித்தபடியேதான் மீதிச்சில்லரையைத் தந்தார்.வீடு திரும்பி மளிகை சாமானை வைத்துவிட்டு சோபாவில் விழுந்தவனுக்கு விண்ணகத்தில் இருப்பதாக கருதப்படும் பிளாக்ஹோல் எனப்படும் கருந்துளைதான் ஞாபகம் வந்தது. அதில் பூமியோடு சேர்ந்து எல்லோருமே விழுந்து கொண்டிருப்பது போல் ஒரு கற்பனை உருவாகி, எதிர்காலம் என்ற ஒன்றே இல்லாமல் போவது போல் தோன்றியது. பொட்டில்லாத அம்மா பூரணி எதிரில் வந்து நின்றாள். கூடவே மாமா.

‘‘என்னப்பா பண்ணுது..?’’

‘‘ரொம்ப சோர்வா இருக்கும்மா. நாம மட்டும் எதுக்காக உயிரோட இருக்கோம்னும் தோணுது…’’

‘‘கோடி கோடியா வெச்சிருக்கறவங்களே கூட இப்ப உன்னையும் என்னையும் மாதிரிதாம்பா இருக்காங்க…’’

‘‘எப்பம்மா எல்லாம் சரியாகும், நாம திரும்ப நல்லபடி வாழ்வோமாம்மா..?’’

‘‘நம்புவோம்பா. நம்பிக்கைதானே வாழ்க்கை…’’

‘‘ஒரு நல்லவன் இருந்தாகூட போதும் சம்பத். நல்ல மழை பெய்யும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. அது இதுக்கும் பொருந்தும்ப்பா..’’ மாமா அவ்வையைத் தொட்டுப் பேசினார்.

‘‘அப்ப நாம நல்லவங்க இல்லையா மாமா..?’’

‘‘அதில் என்னடா சந்தேகம். யாருக்கு என்ன கெடுதல் செய்தோம் நாம..? நான் நம்பறேன். நீயும் நம்பு. இப்ப தேவை நம்பிக்கைதான்…’’ பூரணி தங்கச் சங்கலியோ தாலிச்சரடோ இல்லாத வெறும் கழுத்தோடுதான் பேசினாள். தொனியில் ஒரு உறுதி தெரிந்தது.

அதை விரக்தியாகக் கேட்டபடியே எழுந்தவன் ‘‘ஒரு மாதிரி இருக்கு. கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன்…’’ என்று எழுந்தான். ‘‘ரொம்பவே முடங்கிட்டேம்மா… இதுக்கு மேல போனா செத்துடுவேன்… ஒரு அரை மணி நேரம். அப்படியே நடந்துட்டு வரேன்…’’ தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினான்.

பெரும் வெறிச்சோட்டம். எதிர்ப்படும் சிலரையும் முகக் கவசம் அடையாளம் காட்டவில்லை. ‘இப்படிக் கூடவா ஒரு முகமூடி தேசமாய் இந்த தேசம் மாறும்?’ தனக்குள் துளிர்த்த கேள்வியோடு விரக்தியாக சிறிது தூரம் நடந்தவனின் கால்களில் ஏதோ இடறிற்று.குனிந்து பார்த்தான். நல்ல பருமனில் தங்கச் சங்கிலி! குனிந்து எடுக்கும் போதே அதன் கனம் பத்து பதினைந்து பவுன் இருக்கும் என்று அவனுக்குள் உணர்த்திற்று.

சுற்றிப் பார்த்தான்.அப்போது பார்த்து யாரும் இல்லை… யார் கழுத்திலிருந்தோ நழுவி விழுந்துள்ளது. விரிந்திருந்த இணைப்பு வளையம் அதைச் சொன்னது. மனதாரப் புலம்பியதற்கு கடவுள் இப்படிப் படியளக்கிறாரா?

கேள்வி கேட்டபடியே நடந்தான். அவனறிந்த தர்ம நியாயம் போலீசுக்குப் போய் ஒப்படைக்கச் சொன்னது. கால நியாயமோ அவர்கள் வாங்கும் லஞ்சத்தை உத்தேசித்து பின்வாங்கியது. இந்த தடுமாற்றமெல்லாம் சில நிமிடங்கள்தான்.

எதிரில், அழுதபடி ஓர் இளம் பெண்ணும், உடன் அவள் தந்தை, சகோதரன் என்று மூவரும் தெருவை சலிப்பது போல பார்த்தபடி வந்தனர்.

சம்பத்துக்கு புரிந்து விட்டது. ‘‘எதைத் தேடறீங்க?’’

‘‘அது… அது…’’

‘‘சும்மா சொல்லுங்க…’’

‘‘ஒரு தங்கச்சங்கிலி அறுந்து விழுந்து தொலைஞ்சு போச்சு. இந்த வழியா வரும்போது தான் காணோம். அதைத்தான் தேடிக்கிட்டு வரோம். 16 பவுன் சார்…’’அவர் சொன்ன மறுநொடி கையை விரித்து ‘‘இதுவா பாருங்க…’’ என்றான்.அவர்கள் அவ்வளவு பேர் கண்களும் அகன்று விரிந்து ‘ஆமாம் ஆமாம்’ என்று படபடத்தன.

சங்கிலியைத் தந்தான்.அவர்கள் பிரமித்தனர். இந்த கொடிய கொரோனா காலத்தில் இப்படியும் ஒரு மனிதனா என்பது போல் பார்த்தனர். எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் அவன் கையைப் பிடித்து தன் கண்களில் ஒத்திக்கொண்டார் அந்தப் பெண்ணின் தந்தை. ‘‘நீங்க நல்லாயிருப்பீங்க தம்பி…’’ என்றார் நெகிழ்ச்சியுடன். பின்னர் பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பின் பிரிந்துசென்றனர்.

சம்பத்துக்கும் வீடு திரும்பத் தோன்றிற்று. அதுவரை நிலவிய மனச்சோர்வு, அவநம்பிக்கை என்று எல்லாம் விலகி எதிர்காலம் மிகவேகமாக பழையபடி நலமாகி எல்லாம் சரியாகிவிடும் என்றும் தோன்றிற்று. தன்னில் இருந்து தானே எல்லாம் தோன்றுகின்றன?

வீடு திரும்பியவன் முகத்தில் ஒரு புது வௌிச்சம். மாமாவிடம் நடந்ததைச் சொன்னான்.

‘‘நல்ல வேளை நான் வெளியே போனேன்… அப்படி போயிருக்கலேன்னா…’’ என்று கேட்டவன் வாயை மூடிய அவன் அம்மா பூரணி, ‘‘அதான் நல்ல வேளைன்னு சொல்லிட்டியேடா… மேல பேச என்ன இருக்கு?’’ என்று தடுத்தாள்.நம்பிக்கைகள் இப்படித்தான் பிறக்கின்றன. பிறக்கவும் வேண்டும்!

– அக்டோபர் 2020

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *