நல்ல புள்ள… நல்ல அம்மா…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 10,465 
 

‘‘நல்லா யோசிச்சு தான் சொல்றியா?’’

‘‘ஆமாங்க.’’

‘‘உன்னைவிட்டு அவன் இருந்ததே இல்லையே!’’

‘‘இப்படிச் சொல்லியே எத்தனை நாளைக்கு தான் எங்கே போனாலும் அவனைக் கூட்டிக் கிட்டே போறது? அவனுக்கு ஏழு வயசு ஆகுதுங்க. இதுவே ரொம்ப லேட். இனிமேலாவது பழக்கப் படுத்தணும்.’’

‘‘எனக்கு ஒண்ணுமில்லே. அவனைப் பாத்துக்க நான் ரெடி. ஆனா, அவன் இருப்பானா என்கிட்ட? அம்மா நம்மளை விட்டுட்டு தங்கச்சியை மட்டும் கூட்டிட்டுப் போறாங்கன்னு ‘ஃபீல்’ பண்ணப் போறான்.’’

‘‘அதெல்லாம் ஒண்ணும் ‘ஃபீல்’ பண்ண மாட்டான். நான் பேசறேன் அவன்கிட்ட’’ என்ற ரேணுகா, ‘‘அரவிந்த்!’’ என்று அழைத்தாள்.

தொலைக்காட்சியில் கார்ட்டூன் சேனலைப் பார்த்துக்கொண்டு இருந்த அரவிந்த், இடத்தை விட்டு அசையாமல், ‘‘என்ன மம்மி?’’ என்றான்.

‘‘இங்கே வா!’’

சலிப்புடன் எழுந்து வந்து தன் முன் நின்ற அவனது கையை அன்புடன் பற்றி இழுத்துத் தன்னருகே இருத்திக்கொண்டாள் ரேணுகா.

‘‘என்ன மம்மி?’’

‘‘நீ குட் பாய்தானே?’’

தாயின் திடீர்க் குழைவு அவனது சிறிய மண்டைக்குள் விளக்கெரிய வைத்தது. இதற்கு முன்பு இதே கேள்வி வந்தபோது நடந்த சம்பவங்கள், நொடியில் அவன் நினைவில் ஓடின.

தனக்கும் நதியாவுக்கும் அப்பா ஒரே மாதிரியான ஏரோப்ளேன் பொம்மையை வாங்கித் தந்தபோது, நதியா அவளுடைய பொம்மையை உடைத்துவிட்டு இவனுடையதை எடுக்க வர, இவன் கொடுக்க மறுக்க, அவள் ‘ஓ’வென்று அழுது அமர்க்களம் செய்ய… அப்போதும் இப்படித்தான் அம்மா ஆரம்பித்தாள்…. ‘‘அரவிந்த்! நீ குட் பாய்தானே?’’

‘‘ம்’’ என்றான்.

‘‘நதியா உன்னைவிட சின்னவ. பாப்பா பாரு எப்படி அழறா? உன் பொம்மையைக் கொடு. கொஞ்ச நேரம் விளையாடிட்டுத் தருவா!’’

அவனும் கொடுத்தான். அதன்பிறகு அந்தப் பொம்மை நதியாவுக்கே சொந்தமாகிவிட்டது.

இது ஒரு உதாரணம் தான். இப்படி நிறையச் சொல்லிக்கொண்டே போக லாம். காரணங்கள் வேறு வேறாக இருந்தன. ஆனால், எல்லாவற்றிலும் இருந்த ஒரு ஒற்றுமை நதியாதான். அவள் சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தால்தான் இந்தக் கேள்வி வரும். இருவருக்கும் நான்கு வயது வித்தியாசம்.

‘‘சொல்லு அரவிந்த்… நீ குட் பாய்தானே?’’ & மீண்டும் கேட்டாள் ரேணுகா.

‘‘ஏன் கேட்கறே?’’

‘‘சன்டே அம்மா ஒரு ஃபங்ஷனுக்குப் போகப் போறேன். சன்டே மார்னிங் போயிட்டு மன்டே ஈவ்னிங் வந்துடுவேன். நீ சமர்த்தா டாடிகூட இங்கேயே இருப்பியாம், சரியா? சன்டே அப்பாகூட ஜாலியா பீச்சுக்குப் போ. விளையாடு! மன்டே டாடியே உன்னைக் குளிப் பாட்டி ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போவாரு. நீ ஈவ்னிங் வீட்டுக்கு வர்றதுக் குள்ளே நான் இங்கே இருப்பேன். என்ன?’’

‘‘நதியா?’’

‘‘அவளை நான் கூட்டிட் டுப் போறேன். அவ சின்னவ இல்லியா? விட்டுட்டுப் போனா ‘மம்மி மம்மி’னு அழுவா. ஆனா, நீ பெரிய பையன். குட்பாய்! அழ மாட்டே!’’

அரவிந்த் உடனே பதில் சொல்லவில்லை. தாயையும், தந்தையையும் மாறிப் மாறிப் பார்த்தான். கட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்த நதியாவையும் பார்த்தான்.

‘‘அரவிந்த்! மம்மி நதியாவைக் கூட்டிட்டுப் போகட்டும். நான் உன்னை பீச்சுக்குக் கூட்டிட்டுப் போய் ஐஸ்க்ரீம், சாக்லெட் எல்லாம் வாங்கித் தரேன். அவளுக்கு எதுவும் வேணாம்’’ என்றான் ரமேஷ்.

‘‘நதியா பாவம். அவளுக்கும் ஐஸ்க்ரீம், சாக்லெட் எல்லாம் வாங்கி வந்து ஃபிரிஜ்ல வைங்க’’ என்றாள் ரேணுகா.

‘‘ம்ஹ¨ம்… முடியாது! அரவிந்த்துக்கு மட்டும் தான்’’ என்று ரேணுகாவுக்கு மட்டும் தெரியும்படி யாகக் கண்ணடித்தான் ரமேஷ்.

அரவிந்த் முகத்தில் மெதுவாக மகிழ்ச்சி பூக்க ஆரம்பித்தது.

‘‘அப்படியா? சரி. ஆனா, அவகிட்டே பீச்சுக்குப் போனது, ஐஸ்க்ரீம் சாப்பிட்டதுன்னு எதையும் சொல்லாதே. சொன்னா அழுவா. சரியா?’’ என்றாள் ரேணுகா.

‘‘ம்’’ என்று தலையாட்டினான் அரவிந்த்.

‘‘அப்போ நானும் நதியாவும் ஊருக்குப் போகட்டுமா?’’

‘‘சரி’’ என்றான்.

‘‘அப்புறம் நானும் வரேன்னு அழக் கூடாது!’’

‘‘அழ மாட்டேன்!’’

‘‘மம்மி வேணும்னு அப்பாவைப் படுத்தக்கூடாது!’’

‘‘மாட்டேன்.’’

‘‘குட் பாய்’’ என்ற ரேணுகா, அரவிந்த்தை அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டாள்.

ஞாயிற்றுக் கிழமை காலை.

நதியாவை அம்மா குளிப்பாட்டி, புது டிரெஸ் போட்டுவிடுவதை அரவிந்த் அமைதியாகப் பார்த்துக்கொண்டு இருந்தான். ஆனால், எந்த நொடியிலும், ‘ம…ம்…மி… நானும் வருவேன்’ என்ற வாசகம் அவனது வாயில் இருந்து உதிரும் என்ற எதிர்பார்ப்புடனேயே இருந்தான் ரமேஷ்.

ரேணுகாவும் புதுப் புடவை உடுத்தித் தயாராகி வந்தாள். நாளை காலையில், உறவினர் ஒருவர் வீட்டுச் சீமந்தம். இப்போதே போனால்தான் நாளை விழாவில் பங்குபெற முடியும். ரேணுகாவின் அம்மா வீடும் அதே ஊர்தான் என்பதால், தங்கும் இடம் குறித்துப் பிரச்னை இல்லை. தவிர, தாய் வீட்டில் ஒரு நாள் இருக்கும் உற்சாகம் வேறு!

‘‘போகலாமா?’’ என்று கேட்டவாறு ரமேஷ் ‘பைக்’ சாவியை எடுத்துக்கொண்டான்.

பைக்கில் ரேணுகா பின்னால் அமர்ந்து நதியாவை மடியில் வைத்துக்கொள்ள, அரவிந்த் அப்பாவுக்கு முன்னால் அமர்ந்துகொண்டான். அவனிடம் தொடர்ந்து அமைதி. லக்கேஜ் பக்கவாட்டுக் கொக்கியில் மாட்டப்பட்டது.

‘‘ரேணு… எதுக்கும் இவன் டிரெஸ்ஸையும் எடுத்துவெச்சுக்கிட்டியா?’’ என்று கிசுகிசுப்புடன் கேட்டான் ரமேஷ்.

‘‘ச்சூ… பேசாம வண்டியை விடுங்க’’ என்று அதே கிசுகிசு குரலில் அதட்டினாள் ரேணுகா.

‘‘ம்… ரயில் கிளம்பறப்ப அது கூவப் போகுதா இல்லே, இவன் கூவப் போறானான்னு தெரியலே’’ என்றவாறு வண்டியை விரட்டினான் ரமேஷ்.

ரயில் நிலையம்.

கூட்டத்தில் நீந்திக் கடந்து, பசை காயாமல் அப்போதுதான் ஒட்டப்பட்ட பெயர்ப் பட்டியலில் சரிபார்த்து, உள்ளே ஏறிச் சென்று உரிய இருக்கையில் அமர்ந்தாயிற்று.

எதிரே ஆள் வராத இருக்கையில், ரமேஷ் அமர்ந்தான். அவனது இரு தொடைகளுக்கிடையில் அரவிந்த் நின்றிருந்தான். ரேணுகா அவனைப் பார்த்துப் புன்னகைத்ததும் அவனும் புன்னகைத்தான். அதில் ஒரு ஏக்கம் தெரியவே செய்தது.

‘‘அரவிந்த்! நான் சொன்னது ஞாபகம் இருக் கில்லே… நீயும் டாடியும்…’’ என்று குரலில் உற்சாகம் கூட்டி, அவனது அமைதி யைக் கலைக்க முயன்றாள் ரேணுகா.

‘‘ம்’’ என்று ஒற்றை எழுத்தைதான் வெளிப் படுத்தினான் அரவிந்த்.

நதியா ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள். குழந்தை களுக்கே உரித்தான ஆச்சர்யம் அவளிடம் காணப்பட்டது. அதே ஆச்சர்யம் அரவிந்த் திடமும் இருக்கும். ஆனால், இப்போதோ அவை எல்லாம் பழகிப் போன பெரிய மனிதனைப் போல சலனமின்றிப் பார்த்தான் அவன்.

‘‘எ…ன்…ன…ங்…க’’ என்று தயக்கமாகக் குரல் கொடுத் தாள் ரேணுகா.

‘‘சொல்லு..?’’ என்றான் ரமேஷ்.

‘‘என்னங்க, குழந்தை இவ்வளவு சைலன்ட்டா இருக்கானே?’’

‘‘சைலன்ட்டா இருக் கான்னா சந்தோஷப்பட வேண்டிய விஷயம் தானே!’’

‘‘முகத்தைப் பாருங்க. சுண்டிப்போச்சு!’’

‘‘அதெல்லாம் சரியாயிடு வான். நான் வெளியே கூட்டிட்டுப் போய் சரி பண்ணிடறேன்.’’

‘‘அப்படீங்கறீங்களா?’’

‘‘ஆமா!’’

‘‘என்னைவிட்டு அவன் இருந்ததே இல்லையேங்க!.’’

‘‘இப்படிச் சொல்லியே இன்னும் எத்தனை நாளைக்குதான் இவனை நீ போற இடத்துக்கெல்லாம் கூட்டிக்கிட்டுப் போவே? இப்பவே இவனுக்கு ஏழு வயசு ஆகுது. இரு, இரு… இந்த டயலாக் ஏற்கெனவே வந்த மாதிரி இருக்கே?’’

‘‘விளையாடாதீங்க. நான் சொன்னதையே என்கிட்ட பேசிக் காண்பிக்கிறீங்களா?’’

‘‘சரி, இப்ப என்ன சொல்ல வரே?’’

‘‘இவனையும் கூட்டிட்டுப் போறேங்கிறேன்.’’

‘‘இவனுக்கு டிரெஸ்?’’

‘‘ஒருநாள்தானே… என் அண்ணன் பையன் டிரெஸ்ஸையே போட்டுவிட்டாப்போச்சு! என்ன தான் நீங்க பீச், பார்க்னு கூட்டிப் போனாலும் ராத்திரி நான் இல்லாம குழந்தை ஏங்கிடுவான். அரவிந்த், அம்மாவோட நீயும் வர்றியா?’’

அவ்வளவுதான்… அடுத்த நொடியே ‘குபீர்’ பாய்ச்சலில் சென்று, ரேணுகா மடியில் இடம் பிடித்தான் அரவிந்த். நதியா அவனைப் பிடித்துத் தள்ள முயல, பதிலுக்கு அவன் அவளைத் தள்ள… ‘‘ஏய்… ஏய்… சண்டை போடக் கூடாது. அரவிந்த், நீ குட் பாய்தானே?’’ என்று ரேணுகா சமாதான முயற்சியில் இறங்க… ரயில் மூச்சுவிட்டுப் புறப்பட ஆயத்தமானது.

‘‘அரவிந்த், நதியா… டாடிக்கு டாட்டா சொல்லுங்க’’ என்றாள் ரேணுகா.

புன்னகையோடு, மூன்று குழந்தைகளுக்குமாகக் கையசைத்து விடைபெற்றான் ரமேஷ்.

– ஜூன் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *