என் பெட்ரூமில் யாரோ அல்லது எதுவோ இருக்கிறது என்று என் உள்மனம் சொல்லியது. என் intuitions பெரும்பாலும் சரியாகவே இருக்கும். எழுந்து லைட்டைப் போட்டுப் பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை. மீண்டும் லைட்டை அணைத்துவிட்டு படுத்ததும் அதே உள்ளுணர்வு.
தூக்கம் வரவில்லை. என்னென்னவோ நினைவுகள். இன்றைக்கு என் வீட்டுக்குள் வந்த அந்த பரதேசி முதல் என் பள்ளிக்கால நண்பன் சங்கர் வரை சம்பந்தமில்லாமல் மனம் தறிகெட்டு ஓடியது. சங்கர்! அவனை நினைத்தாலே அவன் சொன்ன அந்த வார்த்தைகள் தானாக நினைவுக்கு வந்துவிடும்.
நீ ஒரு பர்ஃபெக்ஷனிஸ்ட் இல்லை உனக்கு ஓஸீடி என்று பத்தாவது படிக்கும் போது என் கூடப் படித்த சங்கர் சொன்னது என் வாழ்க்கையே புரட்டிப் போடும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை .
சின்ன வயசில் இருந்தே எடுத்தப் பொருளை அதன் இடத்திலேயே வைப்பது, அதை யாரும் நகர்த்தி விட்டார்களா என்று கண்கொத்திப் பாம்பாகப் பார்ப்பது, வாசல் கதவை ராத்திரி சாத்தி விட்டு வந்து படுத்தாலும் ஒரு சந்தேகப் பேய் பிடித்தாட்ட மீண்டும் எழுந்து போய் செக் செய்வது… இவை எல்லாம் ஆரம்பத்தில் என்னை சங்கடப் படுத்தினாலும் நாளடைவில் அதில் ஒரு பெருமை கொள்ள ஆரம்பித்தேன். ஏனோ தானோ வாழ்க்கை இல்லை எனது. மிகவும் கட்டமைப்பானது என்று ஒரு கர்வம்.
இந்த ஓஸீடியால் நான் இழந்தது அதிகம் என்றாலும் அதனால் சில நன்மைகளும் உண்டு. முதல் நன்மை என் படிப்பு. என்னுள் இருந்த ஓஸீடி பேய் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது. அதனால் எல்லா கிளாசிலும் consistent ஆக நல்ல மார்க் எடுக்கும் மாணவனாக இருந்தேன். இரண்டாவது நன்மை சற்று வில்லங்கமானது. பிற்பாடு அதுபற்றி பேசலாம்.
இந்தப் படிப்பு விஷயத்தில் தான் எனக்கும் சங்கருக்கும் ஒரு மனஸ்தாபம். எக்ஸாமில் ஒரு கேள்விக்கான பதில் பற்றி இரண்டுபேருக்குள் ஒரு ஆர்க்யுமென்ட். கடைசியில் புக் எடுத்து refer செய்தபோது நான் சொன்னதே சரி என்று தெரிய வந்தது. “டேய் சங்கரா, சும்மாவடா சொன்னேன்? அட்லீஸ்ட் நாப்பது தடவ படிச்சிருக்கேன்டா” என்றேன்.
அதைக் கேட்டு சங்கர் சிலையானான். அப்புறம் அவன் சொன்னதைத் தான் நீங்கள் ஒன்பதாவது வரியில் படித்தீர்கள். ஆனால் அவன் அப்போது ஓஸீடி என்ற வார்த்தையைச் சொல்லவில்லை. ஒரு வியாதி என்றான். அது ஓஸீடி என்று பல புத்தகங்கள் படித்து, ஆன்லைன் சர்ச் செய்து நானாகத் தெரிந்து கொண்டது. அதைத் தெரிந்து கொள்ளும் வரையிலும் எனக்கு நிம்மதியில்லை என்பது உபரி செய்தி.
அப்புறம் நான் என்னைச் சுய பரிசோதனை செய்து கொள்ள ஆரம்பித்தேன். நிறைய புக்ஸ் படித்தேன். வயதுக் கோளாறு காரணமாக என் ஓஸீடி வேறு வண்ணம் கொண்டது. ஊடுருவும் பாலியல் எண்ணங்களாக உருவெடுத்தது. மனதுக்குள் எந்நேரமும் ஒரு தீ! நிறைய படித்ததன் விளைவு நிறைய எழுதினேன். கதைகள் கட்டுரைகள்… அப்புறம் ஃபேஸ் புக்.
இந்த FB மூலம் நட்பானவள்தான் கபிதா சட்டர்ஜி. என்னுடைய ஆங்கிலம் அவளைக் கவர்ந்தது. எனது OCD பற்றிய கட்டுரைகள் அவளுக்குப் பிடித்து போயின. அவள் அழகும் சரளமாக இயைந்து பேசும் குணமும் எனக்குப் பிடித்துப் போயின.
இந்த மெய்நிகர் தொடர்பு ஒரு நாள் நிஜத்திலும் மலர்ந்தது. வளர்ந்தது. தழைத்தது. ஒரு கட்டத்தில் அவள் இல்லாமல் முடியாது என்றாகி அவர்கள் குடியிருந்த கோடம்பாக்கத்திலேயே அவர்கள் ஏரியாவிலேயே வீடுபார்த்துக் கொண்டு சென்று விட்டேன்.
மீண்டும் அதே உள்ளுணர்வு! ஏதோ இருக்கிறது.
திடீரென்று காலையில் வந்த பரதேசி நினைவுக்கு வந்தான். கிழிந்த ஆடைகள் கையில் ஒரு அலுமினியத் தட்டு.
“ஏதாவது சாப்பிடக் கொடு” என்று வாசலில் நின்று கத்தினான்.
அவனை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு வீட்டினுள் சென்று வைத்திருந்த சில ப்ரெட் slice களையும் ஒரு சிறிய பிஸ்கட் பாக்கெட்டையும் எடுத்துக் கொண்டு திரும்பினால் அவன் கிச்சன் வரையிலேயே வந்துவிட்டான்!
“டேய்! இங்க ஏண்டா வந்த? வெளில போ” என்று இரைந்தேன்.
“போறேன் போறேன்” என்றபடியே அவன் வாசலை நோக்கி நடந்தான். திடீரென்று திரும்பி “வயித்துப் பசிக்கு பிச்சை எடுக்கலாம். உடம்புப் பசிக்கு பிச்சை எடுக்கலாமோ?” என்றான்.
எனக்கு முகம் ஜிவ்வென்று ஆனது. “பரதேசி போ வெளியே..ஒண்ணும் தர மாட்டேன்” என்று உச்சக் குரலில் கத்தினேன்.
“அந்த முருகனப் பாரு! எவ்ளோ கண்ட்ரோல்! பாம்பு காலடிலேயே கிடன்னா கிடக்குது. அது கண்ட்ரோல். விட்ரு” என்று சொல்லி போய்விட்டான்.
இப்ப அவனைப் பற்றிய நினைவு ஏன் வந்தது? அவன் ஒரு பைத்தியம் என்று மனம் சொன்னாலும், அவனுக்கு எப்படி கபிதா பற்றித் தெரிந்தது? என்று ஒரு மூலையில் சந்தேகம் எழுந்தது.
ஒரு சிறிய சப்தம். ஏதோ நகர்ந்தது போல. அப்போதுதான் அது மனதில் flash ஆனது. சற்று முன்னர் எழுந்து லைட் போட்டுப் பார்த்துவிட்டு பாத்ரூம் போய் வந்தபோது என் கண்கள் எதேச்சையாக அந்த பரதேசி சொன்னை முருகன் படத்தைப் பார்த்தது.
என்னுடைய perfect for details மனசும் கண்ணும் சத்தியம் செய்தன. அந்த படத்தில் முருகன் காலடியில் பாம்பு இல்லை.