(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“நல்லதம்பி…. நான் உனக்கு அதிகமாச் சொல்ல வேண்டியதில்லை. எனக்கு எல்லாமே என் தங்கச்சி செந்தாமரைதான். தாய், தந்தையில்லாத அவளுக்கு எல்லாமே நான்தான் என்கிறது உனக்குமே நல்லாய்த் தெரியும். அவ எங்க வீட்டு மகாலட்சுமி. தோட்டத்தில சாதாரணத் தொழிலாளியாயிருந்த நான் இன்றைக்கு நுவரெலியாவில ஒரு தோட்டத்துக்கே சொந்தக்காரனாயிருக்கேன் என்றால் அதற்குக் காரணமே என் தங்கச்சி தான். அவளின் அதிர்ஷ்டம்தான் என்னை எங்கேயோ கொண்டு போய் இருக்கு. நான் படிக்காட்டியும் என் தங்கச்சியை நல்லாய்ப் படிக்க வச்சேன். அவளை வசதி வாய்ப்புகளோட ஒரு நல்ல இடத்தில மணம் முடிச்சி வைக்கணும். இது தான் என்னோட ஆசை…”
நல்லதம்பி… சட்டென லொரியின் வேகத்தைக் குறைத்தான். இவ்வளவு தூரம் ஏற்றத்தில் நிறைமாதக் கர்ப்பிணியைப் போல முக்கி முனகி புகையைக் கக்கியவாறு ஓடிய அந்த மாட்டுச் சாணம் ஏற்றப்பட்டிருந்த லொரி நானோயா நகரை அடைந்தவுடன் வேகமாக ஓடத் தொடங்கியது. நல்லதம்பி வழமையாக சூடான வடையுடன் தேநீர் அருந்தும் அந்தச் சைவ உணவகத்தினருகில் லொரியை நிற்பாட்டினான். அவன் தன் உதவியாளன் முத்துவுடன் லொரியை விட்டு இறங்கி உணவகத்தை நோக்கி நடந்தான். உள்ளே சென்று அமர்ந்தான். முத்து பெருமூச்சுடன் நல்லதம்பியைப் பார்த்தான்.
“அண்ணே இன்னைக்கி நுவரேலியாவில உங்களோட நண்பன் லிங்கத்தை பார்க்கிறதாச் சொன்னீங்களே…”
நல்லதம்பி சூடான வடை ஒன்றை எடுத்து அதிலிருந்த எண்ணெய் போவதற்காக கடதாசியில் வைத்து நசுக்கியவாறு முத்துவைப் பார்த்தான்.
“அவன் லிங்கம் என்னோட தோட்டத்தில ஒண்ணாப் புல்லு வெட்டினவன்தான். அவன் சாதிக்காரனொருத்தன் தான் எப்படியோ அதிர்ஷ்டத்தால் தேர்தல்ல வெற்றியடைஞ்சி எம்.பி.யாயிட்டான். இவன் அவனுக்கு உதவியாளனாப் போய் எப்படியோ மத்திய மாகாண உறுப்பினராயிட்டான். ஒழுங்காக் கையெழுத்துக் கூட போடத் தெரியாதவன் தலையெழுத்து நல்லாய் இருந்ததால இன்னைக்கி கார், பங்களா என்று பெரிய ஆளாயிட்டான். நியாயமா எங்களை மாதிரி தோட்டத் தொழிலாளிகளுக்கு சா கிடைக்க வேண்டிய வளங்களையெல்லாம் சுரண்டிக்கிட்டு அவன் வளமாயிருக்கான். இப்போ அவன் சேர்த்த சொத்துக்கு ஆபத்து 10 வந்திடிச்சி…. கணக்குக் கேட்கத் தொடங்கிட்டாங்க. – பிணக்கு வந்ததும்தான் துணைக்கு என்னை மாதிரி ஆளுங்களைத் தேடுறான். எனக்கு ஆனந்தன் மாதிரி மனுஷனை மதிக்கிற நண்பர்கள் தான் தேவை. சந்தர்ப்பவாதிகளான லிங்கம் மாதிரிப் பச்சோந்திகள் தேவையில்லை. எங்களோட மாசச் சந்தாவை இவனுங்க வாங்கிக்கிட்டு சந்தோஷமாய் இருக்கானுங்க. ஆனா உழைச்சி ஓடாய்ப் போன நாங்க மட்டும் இன்னமும் சந்தியில் அநாதைகளா நிக்கிறோம்…”
நல்லதம்பி தேநீரைக் குடித்துவிட்டு முத்துவுடன் மறுபடியும் லொரியில் ஏறினான். லொரி நகரத் தொடங்கியது…
“முத்து உன் அக்காவுக்கு நாளைக்குத்தானே நிச்சயதார்த்த ம்…”
“ஆமாண்ணே … அழகான எங்கக்கா ராஜேஸ்வரிக்கு ஏழெட்டு மாப்பிள்ளை பார்த்து எட்டாவதா இவருதான் அமைஞ்சாரு. செவ்வாய் தோஷம் எங்கள் அக்காவை ஆட்டி வச்சிடுச்சி…”
“இன்னைக்கு உரம் காசு கிடைக்கும். நீ கேட்ட அஞ்சாயிரம் தாரேன். உன் சம்பளத்துல கழிக்க மாட்டேன். உங்க வீட்ல நல்ல விஷயம் நடக்குது, எனக்கும் சந்தோஷம்தான்…”
முத்து கண்கள் இலேசாகக் கலங்க நன்றியுடன் நல்லதம்பியைப் பார்த்தான்.
நல்லதம்பி தலவாக்கலையில் இருக்கும் ஒரு தோட்டத்தைச் சேர்ந்தவன். அவன் தந்தை கந்தையா தோட்டத் தொழிலாளி. தாய் நிரந்தர நோயாளி. அதே தோட்டத்தில் பக்கத்து லயத்தைச் சேர்ந்தவன்தான் ஆனந்தன். ஆனந்தனும் நல்லதம்பியும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். ஏழ்மை நிலையிலிருந்த இருவரும், ஐந்தாம் வகுப்புடன் படிப்புக்கு – முழுக்குப் போட்டுவிட்டார்கள். தோட்டத்தில் பேர் பதிந்து வேலை செய்தார்கள். நல்லதம்பி வேலையில்லாத நாட்களில் லொரி ஓட்டப் பழகினான். சில மாதங்கள் செல்ல வாகன ஓட்டுநர் அனுமதிப் பத்திரமும் பெற்றுக் கொண்டான். அவனுடைய இலட்சியமெல்லாம் ஒரு லொரிக்கு சொந்தக்காரன் ஆகுவது. ஆனால் எடுக்கும் சம்பளம் வாய்க்கும் வயிற்றுக்குமே பற்றாத போது லொரியெல்லாம் வாங்குவதாவது,
ஆனந்தனின் ஒரே தங்கை செந்தாமரை உண்மையிலேயே சேற்றில் மலர்ந்த செந்தாமரைதான். அழகும் அறிவும் நிறைந்த தாய், தந்தையற்ற அவள் மேல் ஆனந்தன் உயிரையே வைத்திருந்தான். அவளைக் கண்ணிமை போலக் காத்தான். நல்லதம்பி அவ்வப்போது ஆனந்தனைத் தேடிப் போகும் போது செந்தாமரை மட்டும் தான் சில வேளைகளில் இருப்பாள். எந்த இளைஞனையும் ஏறெடுத்துப் பார்க்காத செந்தாமரை நல்லதம்பியுடன் மட்டும் சகஜமாகப் பழகுவாள். ஆனந்தன் எப்போதுமே அவர்களைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்க மாட்டான். அவர்களின் நட்பைப் போலவே நல்லதம்பி – செந்தாமரையின் உறவும் இறுக்கமானது.
எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறிவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்த ஆனந்தனுக்கு நுவரெலியாவில் கிழங்குத் தோட்டமொன்றில் வேலை கிடைத்தது. நல்ல சம்பளம், சாப்பாடு தங்குமிட வசதி இலவசம். மாடாக உழைத்து ஓடாகப் போனாலும் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை. எனவே தன் தங்கையையும் அழைத்துக் கொண்டு நுவரெலியா போனான். அவன் போன நேரம் நல்ல நேரமாகவே இருந்தது. அவனுடைய கடுமையான உழைப்பு அவனுக்கு உயர்வைக் கொடுத்தது. சிறிது சிறிதாகப் பணம் சேர்த்து அவனே குத்தகைக்கு நிலம் வாங்கி விவசாயம் செய்தான். அவன் மண்ணை நம்பினான். அது பொன்னாக விளைந்தது. சுமார் ஒரு வருடத்துக்குள் சொந்தக் காணி வாங்கினான். கடுமையாக உழைத்தான். விவசாயக் காணி ஒன்றுக்கு சொந்தக்காரனானான். இந்த ஒரு வருட காலத்தில் அவன் தன் உயிர் நண்பன் நல்ல தம்பியைச் சந்திக்கவேயில்லை.
நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு தீபாவளி தினத்தன்று தன் தங்கையுடன் தலவாக்கலைக்கு வந்த ஆனந்தன் – அங்கே நல்லதம்பியைச் சந்தித்தான். நீண்ட நாட்கள் பிரிந்திருந்த அவர்களால் பேச முடியவில்லை. நல்ல தம்பியைக் கண்ட செந்தாமரையின் கண்களில் ஒரு மலர்ச்சி ஏற்பட்டது. இதயத்தில் ஏதோ சொல்ல முடியாத ஒரு உணர்வு உண்டானது. நல்லதம்பியைக் கட்டாயமாக ஒரு நாள் தன்னுடைய நுவரெலியா வீட்டுக்கு வரும்படி வேண்டிக் கொண்டான் ஆனந்தன்.
இரண்டு வாரத்துக்குப் பின் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் நல்லதம்பி தன் நண்பன் ஆனந்தனைப் பார்க்கச் சென்றான். ஆனந்தனால் நல்லதம்பியைக் கண்ட சந்தோஷத்தை மறைக்க முடியவில்லை. அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். ஆனந்தனின் வற்புறுத்தலினால் நல்லதம்பி அன்றிரவு அங்கேயே தங்கினான். செந்தாமரை சந்தோஷத்துடன் விதவிதமாகச் சமைத்துப் போட்டாள். அன்றிரவு நண்பர்கள் இருவரும் வெகு நேரம் மனம் விட்டுப் பேசினார்கள்.
“நல்லதம்பி, நான் சொல்றதைக் கேளு. இனியும் தோட்டத்து வேலையை நம்பி இருக்காதே. நம்மை மாதிரி ஆளுங்க கிணத்துத் தவளையாத் தோட்டத்துக்குள்ளேயே இருக்கிறதுனாலத்தான் எல்லாரும் நம்பளை சுலபமா ஏமாத்திக்கிட்டிருக்காங்க. முதல்ல அதை விட்டு வெளியே வந்திடனும். உனக்குக் கூட நான் எப்படியாவது உதவணும் என்று முடிவு செஞ்சிருக்கேன். நீ நிச்சயமாகப் பணம் காசு வாங்க மாட்டே. நான் பினான்ஸ்ல ஒரு லொரி வாங்க உதவி செய்யிறேன். மாட்டு உரம் இழுத்தாலே போதும். எனக்கே நிறைய தேவைப்படுது. என்ன சொல்லுறே…”
நல்லதம்பி கண் கலங்க அவனைப் பார்த்தான். “பணம் வந்துட்டா பழசை மறந்துட்டு மனம் போன போக்கில் வாழ நினைக்கிறவங்கள் மத்தியில் நீ நிச்சயமா உயர்ந்தவன்டா…. சொந்தமா ஒரு லொரி வாங்கணும் என்று நான் எப்போதோ சொன்னதை மனசுல வச்சிட்டு இப்போ சரியான நேரத்துல எனக்கு உதவ நினைக்கிற உன் மனசு யாருக்குமே வராது. நட்பைக் கற்பா நினைக்கிற உன்னை நண்பனா அடைய நான் சத்தியமாக் குடுத்து வைத்தவன். பணம் இன்னைக்கு வரும் நாளைக்கிப் போயிடும். ஆனா நாம தேடி வைக்கிற நல்ல மனுசங்க மட்டும் தான் எப்பவுமே நம்மோட இருப்பாங்க. நான் எப்பவுமே உன்னோடதான் இருப்பேன்…”
ஆனந்தன் – முழு உத்தரவாதத்துடன் பினான்ஸில் லொரி வாங்கிக் கொடுத்தான்.
நல்லதம்பி – கடுமையாக உழைத்தான். மாதம் தவறாமல் கட்டணத்தைச் செலுத்தினான். மாட்டுச் சாணத்துக்கு நல்ல கிராக்கி இருந்தமையினால் நல்லதம்பிக்கு ஓரளவு லாபமும் கிடைத்தது. இன்னும் ஒரு வருடத்தில் லொரி அவனுக்கே சொந்தமாகி விடும்.
நல்லதம்பி வாரத்தில் ஆறு நாட்கள் ஆனந்தனின் தோட்டத்துக்கு உரம் கொண்டு போவான். சில நேரங்களில் ஆனந்தன் வீட்டில் இருக்க மாட்டான். செந்தாமரை மட்டுமே இருப்பாள். அவள்தான் அவனுக்குத் தேநீர் கொடுத்து உபசரிப்பாள். அவளுக்கு அவனைக் கண்டாலே உற்சாகம் ஏற்பட்டு விடும். முகம் சிவந்து விடும். மனதில் மத்தாப்புச் சிதறும். நடையில் துள்ளல் ஏற்படும். மெல்லிடையில் நாடகமே நடக்கும். அவளின் நடவடிக்கைகளை அவன் அறியாமலில்லை. ஆனால் அவன் தன்னைச் சுற்றி முள்வேலி அமைத்துக் கொண்டு அதற்குள்ளேயே இருந்து விட்டான். அவளுடன் பேசும்போது பழகும் போது அவன் மிகக் கவனமாக இருந்தான். தன் நண்பனின் தங்கையென்ற ஒரே காரணத்துக்காக அவன் சர்வ ஜாக்கிரதையாக இருந்தான்.
அன்றும் அப்படித் தான் – நல்லதம்பி லொரியுடன் வந்த போது ஆனந்தன் இருக்கவில்லை . அவசரமாக பதுளைக்குப் போய் விட்டிருந்தான். வழமையை விட அன்று செந்தாமரை புத்தம் புது உடைகளையணிந்து தேவதை போலிருந்தாள். அவன் சட்டென மறுபுறம் திரும்பினான்.
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…”
“எ… என்கிட்ட பேச என்ன இருக்கு…?”
“விஷயம் இருக்கு…”
“எனக்கு நிறைய வேலை இருக்கு…”
“எனக்காக உங்க வேலையைக் கொஞ்சம் ஒதுக்கி வைக்க ஏலாதா…”
“சரி சரி… சீக்கிரமாச் சொல்லுங்க…”
“உங்களுக்கு எதுலயுமே அவசரம்தான். இவ்வளவு நாளா என்னோட பழகுறீங்க. என்னைப் புரிஞ்சிக்க மாட்டீங்களா?”
“நீங்க என் நண்பனின் சகோதரி, உங்களோட எதிர்காலம் பற்றி என் நண்பன் நிறையத் திட்டங்கள் வச்சிருக்கான். அவனோட கனவுகளை ஆசைகளை நிறைவேற்றுவது தான் என்னோட வேலை…”
“உங்க நண்பர் மேல உங்களுக்கு இருக்கிற அக்கறையில கொஞ்சம் என் மேல வைக்கக்கூடாதா?”.
“நீ… நீங்க என்ன சொல்ல வாரீங்க…?”
“வெட்கத்தை விட்டுச் சொல்லணுமா… நான் உங்களை மனமார நேசிக்கிறேன். என் மனசுல ஆழமாப் பதிஞ்சி போன உங்க உருவத்துக்குத்தான் நான் தினமும் பூஜை செய்து வாரேன்…”
நல்லதம்பி – எதுவுமே பேச முடியாமல் திக்கு முக்காடிப் போனான். அவன் மனதில் கூட செந்தாமரையின் உருவம் பதிந்துதானிருந்தது. ஆனால் உயிர் நண்பனுக்கு அவன் நம்பிக்கைத் துரோகம் செய்ய விரும்பவில்லை. அவனுக்குக் காதலை விட நட்பே மேலானதாகப் பட்டது. முட்கள் நிறைந்த பலாப்பழத்தினுள்ளே இருக்கும் பழங்களைப் போல கடினமான முரட்டு உடம்புக்குள்ளேயிருந்த மென்மையான இதயத்துக்குள் ஆனந்தனின் நட்பு மட்டுமே நிறைந்திருந்தது. அவன் நீண்டதொரு பெருமூச்சுடன் தீர்க்கமாக அவளை நோக்கினான்….
“செந்தாமரை சின்ன வயசில இருந்தே நாம இரண்டு பேரும் ஒண்ணாப் பழகினோம் தான். ஆனால்… எந்த வேளையிலும் நான் தப்பான கண்ணோட்டத்தில உங்களைப் பார்த்ததில்லை. பழகினதுமில்லை. நீங்கதான் என்னைத் தப்பா நினைச்சிட்டீங்க. தெளிஞ்ச நீரோடை போல இருக்கும் என் மனசுல யாருமே இல்லை. பூவோட சேர்ந்த நாரும் மணக்கிற மாதிரி உங்க அண்ணனோட சேர்ந்து ஏதோ நானும் நல்லா இருக்கேன். – எங்களோட தூய்மையான நட்பைக் காதல் என்கிற கல்லை வீசிக் கலைச்சிடாதீங்க, உங்கமேல உயிரையே வச்சிருக்கிற உங்க அண்ணன் சொல்படி நடக்குறதுதான் உங்களுக்கு நல்லது. காதல் என்கிற வார்த்தை கேட்க வேணும் என்றால் நல்லாயிருக்கும். ஆனால் அது காலைச் சுத்தின பாம்பு மாதிரி. கடிக்காமல் விடாது. அப்புறம் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரத்தினால் யாருக்கும் என்ன பிரயோசனம். அதுனால தயவு செஞ்சு மனசில இப்படியான தவறான எண்ணத்தை வளர்த்துக் கொள்ளாமல் நல்ல பிள்ளையா அண்ணன் சொல்படி கேட்டு நடந்து கொள்ளுங்க… நான் வாரேன்…”
ஓம் நல்லதம்பி சட்டென அந்த இடத்தை விட்டு லொரியை நோக்கி நடந்தான். அவள் கண்ணீருடன் அப்படியே நின்றிருந்தாள். அதே சமயம் – பதுளைக்குப் போவதற்காகப் புறப்பட்ட ஆனந்தன் கொண்டு போக வேண்டிய பணத்தை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டதால் அதை எடுப்பதற்காக வந்தான் – அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு என்ன தான் பேசுகிறார்களென அறிய மறைந்திருந்து அவதானித்தான்.
நல்லதம்பியின் ஒவ்வொரு வார்த்தையும் அவனை மெய்சிலிர்க்க வைத்தது. பணத்துக்காகப் பெண் ஆசையில் எந்தத் துரோகத்தையும் செய்யக் கூடிய இந்த நாளில் இப்படியொருவனா? அவனுக்கு நல்லதம்பியைப் பற்றி நன்றாகத் தெரியும். ஆனால் தூய்மையான நட்புக்காக எதையும் இழக்கத் துணியும் அவனின் நல்ல பண்பு ஆனந்தனை சந்தோஷமடையச் செய்தது. கோடி ரூபா கொடுத்தாலும் இப்படியொரு நட்பு நிச்சயமாகக் கிடைக்காது. மேலும் அவனை விட அவன் தங்கைக்குப் பொருத்தமான ஒருவன் நிச்சயமாகக் கிடைக்க மாட்டான்.
கையிலே வெண்ணெயை வைத்துக் கொண்டு இவ்வளவு நாளும் நெய்யுக்காக அல்லவா அவன் அலைந்திருக்கிறான். எளிய ரோஜாவின் வாசத்தைவிட நாட்டையாளும் ராஜா எந்த விதத்தில் உயர்ந்தவன். ஆனந்தன் தீர்க்கமான முடிவுக்கு வந்துவிட்டான். செந்தாமரைக்கு ஏற்றவன் நல்லதம்பிதான். நல்லதம்பிக்கு திடீர் இன்ப அதிர்ச்சியாக இந்த விஷயத்தை சொல்ல வேண்டும். அவன் சந்தோசத்தில் திக்கு முக்காடுவதை கண்டு ரசிக்க வேண்டும்…
இரண்டு வாரம் சென்றிருக்கும். மூன்று தினங்களாக நல்லதம்பி வரவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. அவனிடம் அந்தச் சந்தோஷமான விஷயத்தைச் சொல்லக் காத்திருந்தான் ஆனந்தன். ஆனால் நல்லதம்பி தொடர்ந்து மூன்று நாட்கள் வராமையினால் அவனுக்காகக் காத்திருந்தான்.
நான்காவது நாள் – நல்லதம்பி வந்தான். அவன் முகத்தில் ஏதோ ஒரு இனம் தெரியாத புன்னகை இருந்தது. ஆனந்தன் – தான் புதிதாக வாங்கியிருந்த அந்த மலைத் தோட்டத்திற்கு அவனை அழைத்துச் சென்றான். இருவரும் நடந்தவாறே பேசிக் கொண்டார்கள்.
“நல்லதம்பி என்ன மூன்று நாளா உன்னைக் காணவில்லை. உன்கிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்…”
“நானும் தான் ஆனந்தா. ஆமா முதல்ல நீ சொல்லு… என்ன விஷயம்…?”
“இல்ல நீயே சொல்லு. அப்புறம் நான் சொல்லுறேன்.”
நல்லதம்பி நீண்டு படர்ந்து வளர்ந்திருந்த அந்த மரத்தினருகில் சென்றான்.
தரையைத் தொட்டவாறு இருந்த அந்தக் கிளையில் அமர்ந்தான். அவன் எதிரே இருந்த மண்மேட்டில் ஆனந்தன் அமர்ந்தான்.
“என்ன நல்லதம்பி சொல்ல வந்ததைச் சொல்லேன்…”
“சொல்றேன் ஆனந்தன்… உனக்கு முத்துவைத் தெரியும் தானே…?”
“ஆமா உன்னோடே உதவியாள்தானே…?”
“அவனோட அக்கா ராஜேஸ்வரிக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. மாப்பிள்ளை குடும்பத்தோட பஸ்ஸில வந்தாரு. – என்ன துரதிஷ்டம் பஸ் பள்ளத்துக்குப் போய் விபத்துக்குள்ளாகி விட்டது. அதில் மாப்பிள்ளையும் இன்னும் கொஞ்சப் பேரும் அடிபட்டு இறந்து போனாங்கள். ஏற்கனவே செவ்வாய்த் தோசம் என்று கல்யாணமே நடக்காமல் இருந்த அந்தப் பொண்ணுக்கு வெண்ணெய் திரண்டு வாற நிலையில் பானை உடைஞ்ச கதையாய்ப் போச்சு. துரதிஷ்டசாலி, அதிர்ஷ்டமில்லாதவள் என்று ஆளுக்கு ஆள் பேச தொடங்கிட்டாங்க. மனமுடைஞ்சு போன அந்தப் பாவப்பட்ட பொண்ணு தற்கொலை செஞ்சிக்கப் போனா. நிச்சயதார்த்ததுக்கு நானும்தான் போயிருந்தேன். நாம மனுஷனாப் பொறந்ததே நாலு பேருக்கு நல்லது செய்யுறதுக்காகத்தான். எனக்கும் நல்லது செய்யக்கூடிய சந்தர்ப்பம் அன்றைக்குக் கிடைச்சுது. கலங்கி நின்ன அந்த பொண்ணுக்கு கைகொடுக்க நினைச்சேன். அங்கேயே அந்த நிமிஷமே நான் அந்தப் பொண்ணு கழுத்தில் மாலையைப் போட்டு என் மனைவியா மனப்பூர்வமா ஏத்துக்கிட்டேன்.
இந்த விஞ்ஞான யுகத்தில் செவ்வாய்த் தோஷம் எல்லாம் பார்த்தால் எதுவுமே நடக்காது. நீயே சொல்லு ஆனந்தன். நான் செஞ்சது தப்பா…”
ஆனந்தனால் எதுவுமே பேசமுடியவில்லை. அவன் நிலை தடுமாறி நின்றான். நல்லதம்பியைப் பொறுத்தவரை அவன் செய்தது நியாயம்தான். ஆனால் – ஆனந்தன் செந்தாமரைக்காக அவனைக் கையால் பிடிக்கப் போய் எல்லாமே பொய்யாக அல்லவா போய்விட்டது…
“என்ன ஆனந்… நீ கூட ஏதோ சொல்லணும் என்று சொன்னீயே என்ன விஷயம்?”
“ஒண்ணுமில்லை. செந்தாமரைக்குக் கூட நல்ல மாப்பிள்ளை பார்த்திருக்கேன். அதைப் பத்தித்தான் பேச நினைச்சேன். நீ சொன்…ன… விஷயமே என்னை மகிழ்ச்சிப் படுத்தி விட்டது. உன்னை என் நண்பனா அடைஞ்சதால நான் உண்மையிலேயே ரொம்பவும் பெருமைப்படுகிறேன்… யார் யாருக்கு எங்கெங்கே எழுதியிருக்கோ அதுப்படிதான் எல்லாமே நடக்கும்… வேறு என்னதான் சொல்ல…?”
நல்லதம்பி நெஞ்சு நிறைஞ்ச சந்தோஷத்துடன் ஈரலிப்பான காற்றினை வேகமாக இழுத்து வெளியேவிட மனதில் ஏற்பட்டிருந்த சோகத்தினை மறைக்க முடியாத ஆனந்தன் தலை குனிந்திருந்தான் – அவன் கண்கள் கலங்கியிருந்ததைப் பாவம் நல்லதம்பி பார்க்கவில்லை.
– ஓர் உன்னதத் தமிழனின் கதை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2006, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.