நரகம் சொர்க்கம் மோட்சம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 15, 2018
பார்வையிட்டோர்: 5,016 
 
 

நோர்வே சொற்காபுரியாக இருந்தாலும் தரனின் வாழ்க்கை இந்தச் சொற்காபுரியில் ஒரு நரகமாகவே தொடங்கியது. அது அவர்கள் தப்பு அல்ல எங்கள் இயலாமை என்பது தரனுக்குத் தெரியும். அதன் காரணம் தெரிவதால் நரகம் ஒன்றும் சொர்க்கமாகி விடுவதில்லை.

அடர்ந்த பனைக் காட்டில் கூட்டமாக உறவுகளோடு இருந்தவனை அரசியல், பொருளாதாரக் காரணங்கள் வலுவில் பிடுங்கி வந்து பனிக் காட்டில் விட்ட தனிமை உணர். அந்தத் தனிமை என்பது தனிமை மட்டும் அல்ல. அது அதைவிடக் கொடுமையானது. அது எதுவும் அற்ற எல்லாம் அன்னியமான தனிமை. உடல், உள்ளம் அனைத்தும் ஒருங்கே வதங்கும் தணியாத வேதனை.

உண்பதற்கு அப்போது உணவு தந்தார்கள். விலை மதிப்பான, தரமான உணவே தந்தார்கள். பீசா, ஸ்பகதி, லஸ்சன்யா, இறைச்சி கேக், கொட் டொக், பொரித்த அவித்த இறைச்சி வகைகள் என அது நீண்டு கொண்டு செல்லும். அதைவிடச் சாப்பிட்டு முடித்ததும் இனிப்பாக ஐஸ்கிறீம் அல்லது அது போன்ற இனிப்பான குறையில்லாத உணவுகள். இருந்தும் அவனால் அதை அப்போது சுவைத்து உண்ண முடியாமல் இருந்தது. அதன் மணம், அதன் தோற்றம், அதன் சுவை அணைத்தும் பனைக் காட்டின் பக்கம் தலை வைக்காத அன்னியமானவை.

உறைப்பு, உப்பு, புளிப்பு என்று எங்கள் சுவை எதிலும் தூக்கலாக நிற்கும் உணவைச் சுவைத்த நாக்கு. கைக்குத்தரிசியும், உடன் மீனில் வைத்த மீன்குழம்பும், அதற்குத் துணையான முறுகிய பொரியலும், தேங்காய்ப் பாலில் வைத்த சொதியும் என்கின்ற எண்ணமே அவனை இங்கேயும் கனவுலகில் வாழ வைத்தது. அது எப்போதும் விருந்துதான். அதைவிட பிட்டு, இடியப்பம், தோசை என்று எல்லாவற்றையும் அந்தத் தேங்காய் சம்பலோடு சுவைத்துச் சாப்பிடலாம். அவை இனி மீண்டும் எப்போது என்பது அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் அவை எல்லாம் இப்போது அவன் கனவில் மட்டும் வந்து போயின.

இப்படித்தான் அவனது வாழ்க்கையின் தொடக்கம் நோர்வேயில் இருந்தது. உணவு மட்டும் அல்ல மொழி? எதுவும் விளங்குவதில்லை. காட்டு வாசிகள் கதைப்பது போன்று இருக்கும். அவன் பார்த்த காட்டு வாசிகள் வாயைத் திறந்து ஆவாவென்று கதைப்பார்கள். இவர்கள் வாயைத் திறக்காது ஸ்…ஸ்… என்று கதைத்தார்கள். நாங்கள் கதைப்பதும் அவர்களுக்கு மிகவும் மோசமாகத்தான் கேட்கும் என்று அவனுக்கு எண்ணத் தோன்றியது. அறியாத மொழி எதிராளிக்குக் காட்டு வாசிகளின் மொழிதான்.

அறிந்த ஒவ்வொரு மொழியிற்குள்ளும் ஒளிந்திருக்கும் வளம் மலைக்க வைக்கும். ஒவ்வொரு மொழியும் ஏதோ ஒருவகையில் தனித்துவமானவை. அந்த மொழியை நன்கு அறியும் போது அதன் வளம் விளங்கும்.

ஊரில் எந்த நேரத்திலும் ஒரு மேற்சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே செல்லலாம். இங்கே அது தலை கீழாக இருந்தது. அது ஒரு சிறை போல அமைந்து இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. சந்திரமண்டலத்திற்குப் போவது போல ஒரு கணம் வெளியே போக வேண்டும் என்றாலும் தயார் செய்ய வேண்டிய கொடுமை. இவை எல்லாவற்றையும் காலப்போக்கில் ஒருவகையில் சமாளிக்கலாம் என்று நினைத்தாலும் ஒன்றை மாத்திரம் அவனால் சமாளிக்க முடியாது என்பது விளங்கியது.

இளமையில் வறுமை கொடியது என்றாள் அவ்வை. இருக்கலாம்… தரனிற்கோ இளமையில் தனிமை அதைவிடக் கொடியதாகத் தோன்றியது. தோன்றியது அல்ல அதுவே நிஜம் என்பது அவன் முடிவு. கொடுமை, இனிமை என்பதும் சார்பு நிலை கொண்டதே என்பதில் அவனுக்கு ஐயம் இல்லை. அவ்வை ஐரோப்பா வந்திருந்தால் அவ்வையின் சார்பு நிலையும் மாறி இருக்கலாம். அதனால் தரன் கொடுமை, இனிமை என்பது அவரவரைப் பொறுத்தது என்று எண்ணினான்.

நரகமும் பழகப் பழகச் சொற்கம் ஆகாவிட்டாலும் அதன் கொடுமை பழகிப் போய்விடும் என்பது உண்மையே. காலப் போக்கில் மொழி, வேலை என்பன அவனுக்குக் கைவசப்பட்டன. அத்தோடு பனிக்காட்டில் இருப்பது கடும் குளிரென்றாலும் பெருநகருக்குக் குடிபெயர்ந்து வந்தது மிகவும் ஆறுதலைத் தந்தது. நோர்வே உணவும் இப்போது பழகிப்போய்விட்டது என்று சொல்லலாம். அதில் ஒளிந்திருந்த சுவையை கண்டறிந்து சுவைப்பது புது அனுபவம். அதுவும் வர வரப் பிடித்துக் கொண்டது. அதைவிடப் பெருநகரங்களில் மிளகாய்த்தூள், குத்தரிசி, மரக்கறி, உடன் மீன் இல்லை என்றாலும் உறைந்த மீன் என்று வாழ்க்கை ஓரளவு சுமுகமாக ஓடத் தொடங்கியது. இருந்தும் இளமையும் அதில் கிடைத்த தனிமையும் தீர்ந்தபாடில்லை. அது தீரும் வரைக்கும் இரவில் விரகம் நரகமாய் நீண்டதாய் தொடர்ந்தது.

அந்த நரகம் பற்றித் தரன் ஊரிற்குக் கதைக்கும் போது சாடைமாடையாகச் சொல்லிப் பார்த்துவிட்டான். யுத்தம், அதைவிடப் பரம்பரை பரம்பரையாகப் பார்க்க வேண்டிய பல நூதனங்கள். அவற்றைச் சரி செய்து ஒருத்தியைக் கண்டு பிடிப்பதற்கு அவர்களுக்குப் பல வருடங்கள் தேவைப்பட்டன.

இப்படியாக நரகம் தாண்டிச் சுவர்க்கத்திற்குள் காலடி எடுத்து வைக்கிறேன் என்கின்ற பிரமையில் அவன் மிகவும் அகம் மகிழ்ந்து போனான். சுமதி வந்த பின்பு வாழ்க்கை சுவர்க்கமாக மாறியதாக அவன் உணர்ந்தான். பெண் இன்பம் மாத்திரம் சுகம் இல்லை. அவளோடு இருப்பதால் உண்டான சொகுசான வாழ்க்கை, அன்பு, அரவணைப்பு, நெஞ்சம் நெகிழக் கதைக்கும் பண்பு, அவன் மனசைப் படித்து அதற்கு ஏற்ப ஒழுகும் அவள் அக்கறை என்பன அவனைச் சொற்கத்தில் இருத்தியது என்பதில் அவனுக்குச் சந்தேகமே கிடையாது. அந்த முடிவு பற்றிய எந்த ஆய்வையும் அவன் மேற்கொள்ள விரும்பவில்லை.

அன்பின் பெருக்கத்தில் அவதாரங்கள் அத்தாட்சியாக உதித்தன. ஒன்றல்ல இரண்டு அவதாரம். அதனால் வீட்டில் பெருகிய இன்பம். சொர்க்கம். இதுவே நிரந்தரம் என்கின்ற நினைப்பில் தன்னை மறந்தான் தரன். வாழ்க்கை ஒரு நிலையில் நிற்பதல்ல. நின்றால் அதில் எந்த அபிவிருத்தியோ சுவாரசியமோ இருக்காது. இயக்கமும், மாற்றமும் ஒவ்வொரு உயிரினத்தையும், இந்த உலகத்தையும், அதைத் தாங்கிய பிரபஞ்சத்தையும் விட்டுவைக்காத ஒன்று.

வயது அண்டத்தில் பிரயாணிக்கும் கோள் போலப் படுவேகமாக இருப்பதை எல்லாம் இடறித்தள்ளி எங்கோ சென்றுவிடுகிறது. பிள்ளைகள் பெரியவர் ஆகினர். இறக்கை முளைத்ததும் அவர்கள் கூடுவிட்டுப் பறக்கலாகினர். நரை, திரை, மூப்பு சொல்லாமல் வந்து சொந்தம் கொண்டாடின.

ஐரோப்பிய நாடுகளில் அனைத்துத் தயாரிப்புகளிலும் பின்விளைவு தெரியாது பாவிக்கும் இரசாயனங்களால் உண்டாகும் எண்ணுக் கணக்கற்ற வருத்தங்கள். அதில் மிகவும் கொடுமையானது புற்றுநோய். அதிலும் இரத்தப் புற்றுநோய் அவளுக்கு வந்த போது தரன் நினைத்திருந்த சொற்கம் மீண்டும் நரகமாகியது. சுமதி சிறிது நாட்களில் போய் சேர்ந்துவிட்டாள். தரனுக்குத் தனது வாழ்க்கை மீண்டும் நரகமாகிவிட்டது என்கின்ற பிரமை.

தரன் மனதை ஒரு நிலைப்படுத்தினான். தான் மீண்டும் சுவர்க்கத்தில் இருந்து நரகத்திற்குப் போவதில்லை என்று முடிவு செய்தான். அதனால் அவன் எல்லாவற்றையும் துறந்து அதைத் தேடி அலைந்தான். அவனுக்கு அதனால் ஒரு குரு கிடைத்தார். குரு வழிகாட்டினார். தரன் முதிர்ச்சி அடைந்தான். பிரமை எது என்பது விளங்கியது. அந்த விளக்கம் அவனுக்கு அவனுள் இருந்து கிடைத்தது.

அந்தக் குரு சில காலத்தின் பின்பு ஒரு நாள் தரனைப் பார்த்து. ‘நீ இனி உன் வழியில் செல். உனக்கு இனி சுவர்க்கம் நரகம் என்கின்ற மாயை தேவை இல்லை. நீ நிரந்தரமாக அடைய வேண்டியதைத் தேடிச் செல்.’ என்றார். தரன் புறப்பட்டான்.

அதன்பின்பு அவனை யாரும் நோர்வேயில் பார்த்ததே கிடையாது.

– நவம்பர் 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *