கதையாசிரியர்:
தின/வார இதழ்: தென்றல்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 8, 2013
பார்வையிட்டோர்: 12,285 
 
 

அந்த அண்ணனுக்குக் கலியாணம் அது ஒரு தினுசாக நடந்தது. அந்த அக்காள் இந்த அண்ணன் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டாள். அவர்கள் இரண்டு பேருக்கும் பழக்கம் ஒரு இதுவாக இருந்திருக்கிறது. குசு குசுன்னு அவுக இரண்டு பேரைப் பற்றியும் ஊர் பேசும். வாயில வயித்துல என்று சொல்லுவார்களே அப்படி ஆயிப் போச்சு இந்த அக்காளுக்கு. இந்த அண்ணன் வீட்டில் வந்து இந்த அக்காள் பழியே என்று உட்கார்ந்து கொண்டாள்.

காலையில் பெருமாள் கோயில் மணி அடித்தது. இந்த அண்ணனும் இந்த அக்காளும் ஒண்ணாக நிற்கிறார்கள். பூசாரி சாமிக்குத் தீபம் காட்டுகிறார். இந்த அண்ணன் இந்த அக்காள் கழுத்தில் ஒரு மஞ்சள் கயிற்றைக் கட்டுகிறார். ஊர்த் தலைவரும் ஊர்த் தலைவர் பொண்டாட்டியும் வந்திருந்தவர்களுக்கு வெற்றிலை பாக்கு கொடுக்கிறார்கள்.

அண்ணனுக்குத் திருமணம் ஆகி ஏழாவது மாதம். இந்த அக்கா ஒரு ஆம்பளப் புள்ளையப் பெத்தா. அந்தக் குழந்தை முகம் இந்த அண்ணன் மாதிரியே அச்சு அசலாக இருந்தது.

பையன் தவழ ஆரம்பித்த நேரம். ஒரு நாள் இந்த அண்ணனைக் காணோம். இந்த அண்ணன் காணாமல் போன அன்று இந்த ஊரில் கனநாளா குழந்தை இல்லாமல் இருந்த ஒரு பொம்பளயையும் காணோம்.

மாமனாரும் மாமியாளும் இந்த அக்காளைக் காங்கவிடாமல் துரத்துகிறார்கள். அக்கா தனியே ஒரு வீட்டில் இருக்கிறாள். தான் பெத்த தன் குழந்தையை வைத்துக்கொண்டு, கிழடுகளோடு சண்டை போட்டு சண்டை போட்டு புருசன் வீட்டுக் காடுகளில் பாதி இடங்களை வாங்கிக் கொண்டாள்.

ஆடையும் கோடையும் அக்கா காட்டிலேயே கிடந்தாள். பண ஏர் வைத்து உழுதாள். காட்டு வேலைகளை ராவும் பகலும் ஆம்பள மாதிரி இரண்டாளு வேலை செய்தாள்.

இந்த நிலங்கள் அக்கா கைக்கு வந்து இது மூணாவது கோடை. இரண்டு வருசமும் அக்காளுக்கு நல்ல வெள்ளாமை.

அக்கா விதைத்தால் பூமியில் விழுகிற விதைகள் சோடை போகாமல் முளைக்கிறது. ஒரு செடியைப் புடுங்கி நட்டி வைத்தால் அது வாடாமல் துளிர்க்கிறது. அக்கா ராசி….. செடிகளில் பூக்கற பூவெல்லாம் பிஞ்சாக இறங்குகிறது.

ரெட்டை வடத்தில் சங்கிலி செய்து அதை எப்போதும் கழுத்தில் அணிந்திருக்கிறாள்.

அக்கா காடுகளை உழ இந்த ஆண்டு பக்கத்து ஊரில் இருந்து புதுசா ஒரு எளவட்டம் வந்திருக்கிறான்.

அக்கா தன்னுடைய சொந்தக் காடுகள் போதாது என்று ஒத்திக்கும் கட்டுக் குத்தகைக்கும் நிலங்களை வளைத்துப் போட்டிருக்கிறாள்.

புது ஆள் மேழியில் ஏறி உட்காந்திருக்கிறான். சாட்டை வார் வலப் புறமும் இடப் புறமும் மாடுகள் மேல் விழுகிறது. கொழுமுனை பூமியில் இறங்குகிறது ஆழமாய். கட்டிகள் பேந்து உடைகிறது. கோரைக் கிழங்குகள் மிதக்கிறது.

புது ஆள் வேலை அக்காளுக்குப் பிடித்துப் போய்விட்டது. காட்டு வேலைகள் கரைச்சல் இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.

கரம்பலும் குப்பையும் காட்டில் கொண்டு சேர்த்தாச்சு. குப்பை சிதறி எடுப்பு உழவும் போட்டு முடிந்தது.

அக்கா காடுகளில் ஒரு முள்ளு, கல்லு கிடையாது.
புது ஆள் யோசனையின் பேரில் முள் மரங்கள் விலைக்கு வாங்கியிருக்கிறாள். மரம் வெட்டு நடக்கிறது. விறகு ஏற்றிய வண்டிகள் இரவும் பகலும் பட்டணத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறது.

ஒரு மதிய நேரம், பரபரன்னு காற்று அடிக்கிறது. வேப்ப மரத்தில் இருந்து காய்களும் பிஞ்சுகளும் விழுகின்றன.

இந்த அக்கா எங்க அய்யாமைக்குப் பக்கத்தில் உட்காந்திருக்கிறாள். ரவுக்கையை மேலே தூக்கி முந்திச் சேலையை ஒதுக்கி எங்கள் பாட்டிக்கு இந்த அக்கா முதுகைக் காட்டிக்கொண்டு உக்காந்திருக்கிறாள். பாட்டி அக்கா முதுகில் விளக்கெண்ணெய் போட்டுத் தடவுகிறாள். ஒரே சீராக வட்டமாகத் தேய்த்துக் கொண்டிருக்கிறாள். அக்காளுக்குக் கண்ணைத் திறக்க முடியல. கண்ணில் என்ன விழுந்தது என்றும் அக்காளுக்குத் தெரியல. கசக்கிக் கசக்கி ரத்தமாகச் சிவந்திருக்கிறது கண். அக்கா முதுகில் இருந்து ஒரு கொசுவின் ரெக்கையை எடுத்துக் கொடுத்தாள் பாட்டி.

அக்கா முதுகில் இன்னமும் தேய்த்துக் கொண்டிருக்கிறாள் பாட்டி. ஒரே சீராக. வட்டமாக. கொஞ்சம் விளக்கெண்ணை எடுத்துக் கொள்கிறாள் பாட்டி. அக்கா முதுகில் தேய்த்துத் தேய்த்து அக்கா முதுகில் இருந்து கொசுவின் ஒரு தலையை எடுத்துக் கொடுத்தாள் பாட்டி.

அக்காளைத் திருணையில் படுக்கச் சொன்னாள் பாட்டி. அக்கா அசந்து தூங்குகிறாள். அக்கா முழித்தபோது அக்காளுக்குக் கண்ணில் வலி இல்லை. கண்ணில் உறுத்தல் இல்லை. கண் சிவந்திருந்தது மட்டும் மாறாமல் இருக்கிறது.

பாட்டியைப் பார்த்து அக்கா திறந்த மனசோடு சிரித்தாள். பாட்டியை வாய் நிறையப் பாராட்டினாள் அக்கா.

“கண்ணு போச்சீனுதான் நெனச்சேன் பாட்டி. கதறிக்கிட்டுத்தான் வந்தேன். பாட்டி எனக்குக் கண்ணக் கொடுத்திட்டிய….”

பாட்டியிடம் விடைபெற்றுக் கொண்டு அக்கா காட்டுக்குப் போனாள்.

மறுநாள் காலையில் அந்தச் செய்தி தீ மாதிரிப் பரவியது. மக்கள் காடு கரைகளுக்குப் போகிற நேரம் அது. அவர்கள் எல்லாரும் கம்மாய்க்குத் தண்ணீர் வருகிற ஓடைப் பக்கமாக நடந்தார்கள். அந்த ஓடையில் ஒரு பிரேதம் கிடந்தது. ஒரு பெண் பிரேதம். அது அக்கா.

அக்கா செத்து எவ்வளவோ வருடங்கள் ஆகின்றன. ஊரில் இந்த அக்காளைப் பற்றி ஆளு ஆளுக்கு ஒரு கதை சொல்லுகிறார்கள்.

கண்ணில் கொசு விழுந்தால் அதை முதுகு வழியாக எடுக்க முடியுமா. எனக்கும் சிரிப்புதான் வருகிறது. அந்தப் பாட்டி கண்ணில் தூசி விழுந்த எத்தனையோ பேருக்கு இப்படித்தான் அவள் வைத்தியம் செய்தாள். மோசடி செய்யணும் என்கிற எண்ணம் இல்லை அந்தப் பாட்டிக்கு. வழி வழியாக வந்த ஒரு நம்பிக்கை இது.

– டிசம்பர் 2000

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *