நம்பிக்கைத் துரோகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 5, 2024
பார்வையிட்டோர்: 49 
 
 

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பதினேழு சொச்சத்து நிமிடங்களில் நாடாவில் ஒலித்த குரலில் கண்ணீர் இருந்தது. 

ஒரு பக்கத்தில் அரை மணிநேரம் ஒலிப்பதிவு செய்யக் கூடிய ஒலிப்பதிவு நாடா அது. வலீத் அப்துல்லாஹ் யாஸீன் இந்த ஒலிப்பதிவு நாடாவை ஒப்படைத்திருந்தார். இந்த நாடாவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருப்பது என்ன என்று கேட்டு நாளை அவரிடம் சொல்ல வேண் டும். இது ஒரு நம்பிக்கையானதும் இரகசிய மானதுமான விடயமாக இருக்க வேண்டும் என்பதை இனாயத்துல்லாஹ் உணர்ந்து கொண்டார். 

ஒலிப்பதிவு நாடாவைக் கேட்டு முடித்த கும் போது இனாயத்துல்லாஹ்வின் கண்களில் நீர் கோர்த்திருந்தது. 

இனாயத்துல்லாஹ் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஆறு வருடங்களாக சவூதி அரேபி யாவில் ஒரு விசாலமான சுப்பர் மார்க்கட்டில் மேற்பார்வையாளராகக் கடமை புரிந்து வருகிறார். இனாயத்துல்லாஹ்வின் நேர்மையான உழைப்பு அங்காடிகளின் உரிமையாளரான வலீத் அப்துல்லாஹ் யாஸீனைக் கவர்ந் திருந்தது. இரண்டு வருடங்களுக்கொரு முறை இனாயத்துல்லாஹ்வுக்கு இரண்டு மாத லீவு வழங்கிச் சொந்த நாட்டுக்கு அனுப்பித் திருப்பி அழைத்துக் கொள்ளுவார். சவூதி அரேபியாவின் நான்கு நகரங்களில் இயங்கும் பிரம்மாண்ட பல்பொருளங்காடிகளுக்குச் சொந்தக்காரர் யாஸீன். அவ்வப்போது திடீர் மேற்பார்வையாளராக தனக்குப் பதிலாக இனாயத் துல்லாஹ்வை அனுப்புவார் யாஸீன். அந்த அளவு இனாயத்துல்லாஹ்வில் பெரும் நம்பிக்கை வைத்திருந்தார் யாஸீன். 

வலீத் அப்துல்லாஹ் யாஸீனுக்கு நாற்பதைத் தாண்டிய வயது. சாமான்ய அறபிகளைப்போல் அல்லாமல் நுணுக்கமான பார்வையும் கொஞ்சம் நுண்ணறிவும் உடையவர். தனக்கு ஒரு மனிதனைப் பிடித்து விட்டதென்றால் அம்மனிதனை நம்பி எதையும் ஒப்படைத்து விடுவார். வட்டமான முகத்தில் இருக்கும் ஆட்டுத் தாடியை ஓர் அங்குலத்துக்கு மேல் வளர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளுவார். கன்னங்களில் ரோமம் வளராமல் எண்ணெய் படிந்து கிடப்பது போல் இருக்கும். முகத்திலும் பார்வையிலும் மட்டுமன்றி இயல்பாகவே குறும்பு மிக்கவர். மிகவும் விகட மாகவும் அவ்வப்போது தந்திரமாகவும் கதைக்கும் காரியவாதி. 

நான்கு பல்பொருளங்காடிகளிலும் தினமும் லட்சக் கணக்கில் வியாபாரம் நடந்து கொண்டிருக்கும். வரும் பொருட்களின் தரத்தைக் கணிப்பது, குறைப் பொருள் நிரப்புவது, பணத்தை வங்கிகளுக்கு அனுப்பு வது என அங்காடிகளின் நிர்வாகத்தை இலகுவான செயல் முறைகளி னூடாக நடைபெறும் வகையில் அமைத்து வைத்திருந்தார் யாஸீன். 

தொழில் தருனர் என்பதற்கு அப்பால் அறாபிய மேன்மை பாராட் டாத மனிதர் என்ற வகையில் அங்கு தொழில் புரியும் அனைவருக்கும் யாஸீனைப் பிடித்திருந்தது/ ஒரே ஒரு நபர் தவிர! அந்த நபர் அங்கு தொழில் புரிந்த ஒரே ஒரு அறபியான ஹம்ஸா பின் வபா. அந்த அங்காடி யில் இந்தியர். இலங்கையர், பங்களாதேஷியர், பாக்கிஸ்தானியர் என்று அனேகர் தொழில் புரிந்து வந்தார்கள். இனாயத்துல்லாஹ்வுக்கு கொடுக்கப் பட்ட மேற்பார்வையாளர் பதவி தனக்குத் தரப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிற நபர் ஹம்ஸா. அதற்காக இனாயத்துல்லாஹ்வுடன் ஹம்ஸா விரோதம் பாராட்டிக் கொண்டிருக்கவில்லை. தனக்கு உரிய இடம் வழங்காத உரிமையாளர் மீது அவனுக்குக் கோபம் இருந்தது. ஆனால் உரிமை யாளரின் மேல் வெளிப்படையாக விரோதம் பாராட்டினால் சீட்டுக் கிழிந்து விடுமென்பதால் அவன் பொறுமை காக்கவேண்டியிருந்தது. இனாயத் துல்லாஹ்வுக்குக் கீழ் வேலை செய்யும் நபராக ஹம்ஸா இருந்த போதும் இனாயத்துல்லாஹ்வுக்குச் சமமாகவே தன்னைக் கருதினான். அவ்வப் போது இனாயத்துல்லாஹ்வின் பணிகளைத் தானே செய்தபடி மற்றவர் களுக்குக் கட்டளை இட்டுத் திருப்திப் பட்டுக் கொள்வான். இதை யாஸீனும் இனாயத்துல்லாஹ்வும் கண்டுகொள்வதில்லை. 

அவ்வப்போது வலீத் அப்துல்லாஹ் யாஸீன் பற்றிச் சுவையான கதைகளை ஹம்ஸா இனாயத்துல்லாஹ்விடம் சொல்லுவான். இந்தத் தகவல்களையெல்லாம் ஹம்ஸா எங்கிருந்து, எப்படிப் பெற்றுக் கொள் கிறான் என்று இனாயத்துல்லாஹ்வுக்குச் சில வேளைகளில் ஆச்சரிய மாகவும் இருக்கும். இந்தக் கதைகளெல்லாம் தனக்கு அவசியமற்ற வையென்ற போதும் ஹம்ஸாவின் முகம் கோணாதிருப்பதற்காகக் காது கொடுத்துக் கேட்டுக் கொள்வது வழக்கமாக இருந்தது. 

யாஸீன் சிறுவயதிலேயே எகிப்துக்குப் படிக்கச் சென்றவர். அங்கு படிப்பு ஏறாத காரணத்தால் ஒரு கடையில் வேலை செய்ததாக ஒரு முறை ஹம்ஸா யாஸீனைப் பற்றிச் சொன்னான். நீண்ட காலமாக அந்தக் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த யாஸீன் மீது கடை உரிமையாளர் மிகவும் நம்பிக்கை கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அந்தக் கடையின் முழுப் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்தக் கடை உரிமையாளராகிய எகிப்தியரின் மூத்த மகளைத் தள்ளிக் கொண்டு யாஸீன் சவூதிக்கு வந்ததுவிட்டார். அப் பெண் கொண்டு வந்த செல்வத்தைக் கொண்டே வாழ்வில் அவர் முன்னேறியதாக ஹம்ஸா சொன்னான்.

சவூதியில் யாஸீனுக்கு எவரும் பெண் கொடுக்க மாட்டார்கள் என்று மற்றொரு முறை சொன்னான் ஹம்ஸா. தனது இரண்டாவது மனைவியை யாஸீன் ஜோர்தானிலிருந்து தெரிவு செய்தததற்கு அதுவே காரணம் என்றான். 

இந்தத் தகவல்களுக்குக் காது கொடுத்துக் கேட்பதைத் தவிர வேறு எந்தப் பிரதிபலிப்பையும் இனாயத்துல்லாஹ் வெளிக்காட்டுவதில்லை. அதை இன்னொருவரிடம் சொல்வதுவுமில்லை. அதை இன்னொருவரிடம் கதைக்க, அத்தகவல் கை, கால் முளைத்துப் பரவி யாஸீனின் காதுகளுக் குச் சென்றால் அது அவ்வளவு நன்றாக இருக்காது என்பது ஒரு காரணம். இயல்பாகவே மற்றவரின் இரகசியங்கள், தனிப்பட்ட விடயங்கள் தனக்கு அவசியமற்றவை என்று கருதும் அவரது இயல்பான சுபாவம் மற்றொரு காரணம். 

அண்மையில் யாஸீன் பற்றிய புதிய தகவலொன்றை ஹம்ஸா சொன்னான். கடந்த மாதம் தனது தேவையொன்றுக்காக சூடான் சென்று வந்திருந்தார் யாஸீன். அவர் திரும்பியதிலிருந்து சூடான் எயர்லைன்ஸில் விமானப் பணிப் பெண்ணாகக் கடமை புரியும் ஒருத்திக்கு யாஸீன் நூல் விட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்னான். ‘இருந்து பார்! அவரது மூன்றா வது மனைவி அந்தக் கறுப்புப் பெண்ணாகத்தான் இருப்பாள்’ என்று அவரது கையை இறுகப் பற்றிச் சத்தியம் பண்ணினான் ஹம்ஸா. 

தனது அறையில் தங்கும் அப்துல் கரீமோடு கூட இனாயத்துல்லாஹ் பகிர்ந்து கொள்வதில்லை. 

ஹம்ஸா யாஸீனைப் பற்றி எதைச் சொன்னாலும் யாஸீன் மீதுள்ள மரியாதையை இனாயத்துல்லாஹ் ஒரு போதும் குறைத்துக் கொண்டதில்லை. 

அங்கு தொழில் புரியும் அனைவருக்கும் இலவச தங்குமிடத்தை அமைத்துக் கொடுத்திருந்தார் யாஸீன். கீழ் மட்ட ஊழியர்கள் தலா ஐவர் சகிதம் தங்கும் வகையில் அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. இனாயத் துல்லாஹ்வைப் போல் சற்று மேல் நிலை ஊழியர்கள் இருவர் தங்குவ தற்கான அறைகள் இருந்தன. இனாயத்துல்லாஹ் தன்னுடன் ஓர் இலங்கை யரான அப்துல் கரீமைத் தன்னுடைய அறையில் தங்க வைத்துக் கொண்டார். 

அப்துல் கரீம் கீழ் நிலை ஊழியனாக இருந்த போதும் மிகவும் சாதுரியமான இளைஞனாகவும் வயதுக்கு மூத்தவர்களை மதித்து நடப்பவனாகவும் இருந்தான். எனவே இனாயத்துல்லாஹ் தனது செல்வாக் கைப் பயன்படுத்தித் அவனைத் தங்கச் செய்தார். இனாயத்துல் லாஹ்வுக்கும் அப்துல் கரீமுக்குமிடையில் கிட்டத்தட்ட 15 வயது வித்தியாசமிருந்தது. தனது சொந்தச் சகோதரனோடு பழகுவது போல் இருவரும் பழகினார்கள். தங்களது குடும்ப இன்ப, துன்பங்களை – கடந்த கால வாழ்வை எதிர்காலத் திட்டமிடல்களையெல்லாம் பகிர்ந்து கொள்வார்கள். தாங்கள் மேற்கொள்ளும் எல்லா நடவடிக்கைகளுக்கும் ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்து கொள்வது வழக்கமாக இருந்தது. 

இனாயத்துல்லாஹ்வின் பணிகள் இரவு ஒன்பதரை மணிக்கே முடிவுக்கு வரும். அதன் பிறகு இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள தங்கும் அறைக்குச் சென்று விடுவது வழக்கம். அப்துல் கரீம் பண்டகசாலையில் தொழில் புரிவதால் அடுத்த நாளைக்குத் தேவையான பொருட்களை ஒப்படைத்து விட்டுத் தங்கும் அறைக்கு வந்து சேரப் பத்தரை மணியாகும். பகலுணவும் இரவுணவும் வேலைத் தலத்திலேயே வழங்கப் பட்டது. தங்குமிடத்துக்கு வந்து உடல் கழுவி, ஆசுவாசமாக அமர்ந்து தொலைக் காட்சி அலைவரிசைகளைப் பார்ப்பது, பலகதை பேசி மகிழ்வது, சொந்த நாட்டுக்குத் தொடர்பு கொண்டு பேசுவது என்று காலங்கழியும். இனாயத்துல்லாஹ் ஒரு மணி அல்லது முக்கால் மணி முன்பாக வந்து விடுவதால் தனது சொந்த விடயங்களை முடித்து விட்டு அப்துல் கரீமுக்காகக் காத்திருப்பார். பல வேளைகளில் இருவரும் ஒன்றாகவே திரும்புவதும் உண்டு. 

யாஸீன் கொடுத்த ஒலிநாடாவை கரீம் வருவதற்குள் கேட்டு விட வேண்டும் என்பதால் இன்று சற்று முன்னராகவே வந்து விட்டார். 

அந்த ஒலிநாடாவில் பதிந்திருக்கும் குரல் வலீத் அப்துல்லாஹ் யாஸீனின் வீட்டில் வேலை செய்யும் இலங்கைப் பெண்ணுடையது. அந்த ஏழைப் பெண்ணின் அபயக் குரல்தான் அவரது உள்ளத்தை அப்படியே உலுக்கி எடுத்திருந்தது. 

மூன்று மாடிகளைக் கொண்ட வீட்டில் மூன்றாம் மாடியில் மூன்று யாஸீனின் இரண்டாவது மனைவியும் ஒரு பெண் குழந்தையும் வாழ்ந் தார்கள். இரண்டாம் மாடியில் முதல் மனைவியும் இரண்டு ஆண், ஒரு பெண்பிள்ளையும் இருக்கிறார்கள். இதை அந்தப் பெண்ணின் குரல் பதிவில்தான் அறிந்து கொண்டார். இந்த இரண்டு வீட்டுக்கும் பொதுவான வேலைக்காரி சபீனா என்ற இலங்கைப் பெண். சபீனா தனது பெற்றோ ருடன் பேசியுள்ள அந்த ஒலிநாடாவைத் தனது நாட்டுக்குத் தபாலிடு வதற்காக யாஸீனிடம் கொடுத்திருந்தாள். தபாலிடுவதற்கு முன்னர் அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காகத்தான் இனாயத்துல்லாஹ்விடம் அதை ஒப்படைத்திருந்தார் யாஸீன். 

இருபத்து இரண்டு வயதுடைய அந்தப் பெண்தான் தினமும் இரண்டு வீட்டு அழுக்கு ஆடைகளையும் கழுவ வேண்டும். இரண்டு உணவு வேளைகள் முடிந்த பிறகு அத்தனைப் பாத்திரங்களையும் கழுவிச் சுத்தப்படுத்தி அடுக்க வேண்டும். வார இறுதி நாட்களில் வீடுகள் இரண்டின் வராந்தாவிலும் 10 விரிக்கப்பட்டுள்ள விரிப்புக்களைக் கழுவ வேண்டும். விரிப்புகள் பெரிய னவாகவும் பாரமையானவையாகவும் இருப்பதால் கழுவும் இயந்திரத்தில் அவற்றைக் கழுவ முடியாது. கைகளாலேயே கழுவ வேண்டும். இரண்டு வீடுகளிலும் செய்ய வேண்டிய வேலைகள் நேரங் குறிப்பிட்டு அவளுக் குச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒரு வீட்டில் வேலை முடிந்து அடுத்த வீடுகளையும் சுத்தம் செய்ய வேண்டும். 

வீட்டுக்கு செல்வதற்குச் சற்றுத் தாமதம் ஏற்பட்டால் அவள் தொலைந்தாள். அவளை அந்த வீட்டுப் பெண்கள் வறுத்து எடுத்து விடுவார்கள். 

“உம்மா…வீடுகளின் விரிப்புக்களைக் கழுவிக் காயப் போடும் போது நான் அப்படியே செத்துப் போய் விடுகிறேன்… சரியான பாரமான விரிப்புக்கள் அவை… நீரில் நனைந்தால் பொணப் பாரம்… உயிர் போய் விடுகிறது….” 

நல்ல வேளையாக அந்த வீட்டில் வயது’ வந்த இளைஞர்கள் யாரும் இருக்கவில்லை. வழமையாக தென்னாசியப் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் அங்கு இடம் பெற்றிருக்கவில்லை. யாஸீனைப் பற்றி மிக உயர்வாக அவள் சொல்லியிருந்தாள். ஆனால் இரண்டு வீடுக ளிலும் பம்பரமாகச் சுழன்று ஓய்வே இல்லாமல் வேலை செய்வதில் அவள் களைப்பும் வருத்தமும் வெறுப்பும் அடைந்திருந்தாள். 

“இந்த வீட்டுக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகி விட்டன. நாட்டுக்கு வருவதற்கும் உங்கள் அனைவரையும் பார்ப்பதற்கும் எனக்குச் சோட்டையாக இருக்கிறது… என்னை அனுப்பும் எண்ணமே இவர்களுக்கு இல்லை போலத் தெரிகிறது.. ஏழையாகப் பிறந்து விட்டால் இதையெல்லாம் அனுபவித்துத்தான் ஆக வேண்டுமா?… எனது உடம்பில் சீவனே இல்லை உம்மா..” 

அந்தப் பெண்ணின் ஆதங்கம் இனாயத்துல்லாஹ்வுக்குத் தெளிவாகப் புரிந்தது. நோயில் கிடக்கும் தந்தை, அந்தக் குடும்பத்தை நடத்தும் தாய், இரண்டு இளைய சகோதரிகள், ஒரு சகோதரன் கொண்ட குடும்பத்தில் மூத்த பெண் அவள். குடும்பத்தின் பாரத்தைச் சுமந்து கொண்டு நம்பிக்கையோடு விமானமேறிய பெண் அவள். இங்கே வந்து தனது சக்திக்கு அப்பாற்பட்ட கஷ்டத்தில் அவள் மாட்டிக் கொண்டாள். தனது இரத்த உறவுகளை விளித்து அவள் பேசும் போது கண்ணீர் விட்டு அழுதிருந்தாள். 

அந்தக் கண்ணீர் இனாயத்துல்லாஹ்வையும் கரைத்து விட்டது. அவருக்கு தனது ஊரிலுள்ள தனது தங்கைகள் ஞாபகம் வந்தார்கள். இந்த வலையிலிருந்து விடுபட்டுச் சொந்த நாட்டுக்குத் தப்பிச் செல்வதற்கு அவள் துடித்துக் கொண்டிருந்தாள். அதற்காக அவள் அந்த ஒலி நாடாவில் சொல்லியிருந்த மார்க்கம் அவளின் துன்பத்தின் பாரத்தை உணர்த்தியது. இனாயத்துல்லாஹ்வை அதிர்ச்சியுறவும் செய்தது. 

“உம்மா… என்னால் இனிமேல் இந்தக் கஷ்டத்தைத் தாங்க முடியாது… உங்களையெல்லாம் பார்க்காமலேயே மௌத்தாகி விடு வேனோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது… என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்… ஒரே ஒரு வழிதான் உம்மா இருக்கிறது… மாமாவிடம் சொல்லி வாப்பா மௌத்தாகி விட்டதாக ஒரு அவசரத் தந்தி அடியுங்கள்…!” 

இனாயத்துல்லாஹ் தனது கண்களைத் துடைத்துக் கொண்டார். என்ன செய்வது என்று புரியாத குழப்ப மனோ நிலையுடன் எழுந்து உடற் சுத்தத்துக்காக குளியலறைக்குள் நுழைந்தார். அவரது அங்கங்கள் யாவும் இயந்திரத் தனமாக இயங்கிக் கொண்டிருக்க சிந்தனை முழுவதும் சபீனாவைச் சுற்றியே இருந்தது. அவர் வேறு உலகத்தில் இருப்பவர் போல் உணர்ந்தார். சபீனா இன்ன இன்ன விடயங்களைத்தான் பேசியிருக்கிறாள் என்று யாஸீனிடம் சொன்னால் துன்பப்படும் சபீனா மீண்டும் துன்பத்தில் மாட்டிக் கொள்வாள் என்ற கவலை அவரைக் கலங்க வைத்தது. அதே வேளை யாஸீனிடம் பொய்யுரைப்பதன் மூலம் தான் நம்பிக்கைத் துரோகம் செய்ததாக ஆகிவிடும் என்ற கவலையும் அவரை அலைக்கழித்தது. 

‘நல்லவர்களை அல்லாஹ் சோதிக்கிறான்’ என்று அவர் படித்திருக்கிறார்…யார் நல்லவர் என்ற மனக் குழப்பம் அவருக்கு ஏற்பட்டது. ‘அப்படியென்றால் துன்பம் அனுபவிக்கும் சபீனா நல்லவள்… இருதலைக் கொள்ளி எறும்பாகத் துன்பம் அனுபவிக்கும் நான் நல்லவன்… அப்படியானால் இதுவரை எனக்கு நல்லவராக இருந்த யாஸீன் கெட்டவரா… துன்பத்தை அனுபவிப்பவர் நல்லவர் என்ற அடிப்படையில் நல்லவனான நான் துன்பப்படும் சபீனாவைப் பாதுகாக்கா விட்டால் எப்படி நல்லவனாக முடியும்?… சபீனாவைப் பாதுகாக்கத் தன்மீது நம்பிக்கை வைத்திருக்கும் யாஸீனிடம் பொய்யுரைத்தால் எப்படி நல்லவனாக முடியும்?’ 

படீரெனக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்த அப்துல் கரீமைக் கண்டதும் அவரது சிந்தனை அறுபட்டது. கரீம் அவரது முகத்தைப் பார்த்து நெற்றியைச் சுருக்கினான். 

“முகம் நல்லா இல்லயே நானா…?” 

இனாயத்துல்லாஹ் புன்னகைக்க முயன்றார். அந்த முயற்சியில் தனது முகம் இயல்புக்கு மாறான ஒரு தோற்றத்துக்குள் நுழைவதை அவராகவே உணர்ந்தார். 

அப்துல் கரீம் அதற்கு மேல் எதுவும் பேசாமல் குளியலறைக்குள் நுழைந்தான். 

அப்துல் கரீமிடம் ஆலோசிப்பதை விட வேறு வழியில்லை யென்று பட்டது இனாயத்துல்லாஹ்வுக்கு. முடிவுக்கு வர முடியாத எந்த இரகசியமானாலும் முடிவு ஒன்றை நோக்கி நகர்ந்தேயாக வேண்டும். நம்பிக்கைக்குரியவரிடம் ஆலேசனை கேட்பது பகிரங்கப்படுத்துவதாகாது என்று தனக்குள் சமாதானம் செய்து கொண்டார் இனாயத்துல்லாஹ். குளியலறையிலிருந்து திரும்பிய அப்துல் கரீமை இருத்தி விடயத்தைச் சொல்லி முடித்தார். 

அப்துல் கரீம் அவரைப் பார்த்து மெதுவாகப் புன்னகைத்து விட்டுச் சொன்னான்: – 

“உங்களைத் தாண்டி இன்னொருவரிடம் இந்த ஒலி நாடாவை யாஸீன் கொடுக்கப் போவதில்லை. நீங்கள் சபீனா வுக்கு உதவி செய்ய வேண்டும். அதைச் செய்தேயாக வேண்டுமென்றால் ஒரு பொய்யைச் சொல்லியே ஆக வேண்டும்.” 

“ஆனால் இதுவரை காலமும் என்னை நம்பிய யாஸீ னுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வதாக மனச் சாட்சி உறுத்திக் கொண்டேயிருக்கப் போகிறது அப்துல் கரீம்….” 

“நியாயத்துக்கு மாறாகச் செயல்படும் போதுதான் மனச் சாட்சி பேசத் தொடங்கும். நியாயத்துக்கு மாறான இரண்டு காரியங் களில் ஒன்றை நாம் தெரிவு செய்தே ஆகவேண்டி வரும் போது அதில் எது நல்லதோ அதைத் தேர்வதுதான் சரியானது. நீங்கள் யாஸீனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யக் கூடாது என்கிறீர்கள். அந்தப் பெண் தனது வீட்டுக்கு அனுப்பத் தந்த ஒலிப்பதிவு நாடாவை ஒற்றுக் கேட்பது யாஸீன் சபீனாவுக்குச் செய்த நம்பிக்கைத் துரோகம் இல்லையா? 

உண்மையை அவரிடம் சொன்னீர்களானால் அந்த ஏழை சபீனாவுக்கு நீங்கள் துரோகம் செய்து விட்டதாக உங்களது மனச் சாட்சி உங்களை உறுத்தாதா? ஒரு பொய்யினால் ஓர் ஏழைப் பெண் தன் கஷ்டங்களிலிருந்து விடுதலை பெற்று விடுவாள். அந்தப் பொய்யினால் யாசீனுக்கோ உங்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஒரு நல்ல நோக்கத் துக்காகப் பொய் சொல்ல இஸ்லாம் கூட அனுமதித்திருக்கிறது. நம்பிக்கை பற்றி மட்டும் சிந்தித்தீர்களானால் அந்தப் பெண் இங்கேயே இறந்து விடவும் கூடும். எது நல்லது என்று காலை யில் முடிவுக்கு வாருங்கள்” என்று விட்டுப் படுக்கையை உதறினான் அப்துல் கரீம். 

“இப்பொழுதே சென்று அதைத் தபாலில் சேர்த்து விடுங்கள்” என்ற யாஸீனின் பதிலுக்காக அவருடன் பேசவேண்டிய வார்த்தைகளை யோசித்தபடி படுக்கையில் விழுந்தார் இனாயத்துல்லாஹ். 

– 08.09.09

– விரல்களற்றவனின் பிரார்த்தனை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜனவரி 2013, யாத்ரா வெளியீட்டகம், வத்தளை.

நூலாசிரியரின் பிற நூல்கள் கவிதை காணாமல் போனவர்கள் - 1999 உன்னை வாசிக்கும் எழுத்து - 2007 (மொழிபெயர்ப்பு) என்னைத் தீயில் எறிந்தவள் - 2008 (அரச சாஹித்திய தேசிய விருது பெற்றது) சிறுவர் இலக்கியம் புள்ளி - 2007 கறுக்கு மொறுக்கு - முறுக்கு - 2009 புல்லுக்கு அலைந்த மில்லா - 2009 ஏனையவை தீர்க்க வர்ணம் - 2009 (பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *