நந்தகுமாரின் வீட்டுக்காரர்

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 8,343 
 
 

நந்தகுமாரின் வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் கிளம்புவதற்காக ராமமூர்த்தி காத்திருந்தார். அவர் மிக கோபமாக இருந்தார். இரண்டு நாளாய் அடக்கி வைத்திருந்த கோபம். ஒரு சின்ன வயதுக்காரன் அவரது ஈகோவை கிளறிவிட்ட கோபம். இதுதவிர அலுவலக பிரச்சனை வேறு அவரை அழுத்திக் கொண்டிருந்தது. அவருக்கு மதுரைக்கு வேலை மாற்றலாகி இருந்தது. அங்கே போய் வீடு பார்க்க வேண்டும். குடும்பத்தோடு குடிபோக வேண்டும். அவருக்கு நிறைய வேலைகள் இருந்தன. அதற்குள் நந்தகுமார் பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டவேண்டுமென உறுதியாய் நினைத்துக் கொண்டார்.

“”அவங்க வீட்டுல எல்லாரும் போயிட்டாங்களா?” என்று தன் மனைவியிடம் நான்காவது முறையாகக் கேட்டார். அவளுக்கும் கோபம் இருந்தது. சலிக்காமல் அவளும், “”அதுக்குதானே நானும் காத்திட்டிருக்கேன்..” என்றாள் நான்காவது முறையாக.

நந்தகுமாரின் வீட்டுக்காரர்பக்கத்து அறையில் அவரது பசங்கள் விக்ரமும் ரம்யாவும் இருந்தார்கள். கல்லூரி வரை வந்துவிட்ட பசங்கள். அவர்கள் அப்பா அம்மாவை பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒன்றும் நடந்து விடக்கூடாது என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். காரணம் அவர்கள் இருவருக்கும் நந்தகுமாரை ரொம்பவும் பிடிக்கும்.

அவர்கள் இருவருக்கும் பிடித்த நந்தகுமாருக்கு இருபத்தாறு வயது ஆகிறது. அசோக் நகரில் ஒரு மெடிக்கல் எக்யூப்மெண்ட் கம்பெனியில் சர்வீஸ் எஞ்ஜினியராக வேலையில் இருக்கிறான். அதுதவிர அவனுக்கு இருக்கிற இலக்கிய பரிச்சயம். அவன் வாங்கி அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் அவனுக்கே படிக்க வேண்டியது நிறைய இருந்தது. ராமமூர்த்தியின் பையனுக்கு படிக்க இரண்டு புத்தகங்கள் தந்திருக்கிறான். நந்தகுமாருக்கு திருமணமாகி ஆறு மாதங்கள்தான் ஆகின்றன. அவனது குறும்புகள். சின்ன சின்ன நகைச்சுவைகள். எல்லாம் புரிந்து கொள்ளும்விதமாய் அமைந்த மனைவி. அவர்கள் இந்த வீட்டிற்கு குடிவந்து வெற்றிகரமாய் நான்கு மாதங்கள் ஆகின்றன. கொஞ்சம் நேரம் பேசினாலும் எல்லாருக்கும் ஒட்டிக் கொள்ளும் நந்தகுமாரின் உற்சாகம். வயது பார்க்காமல் பழகும் அவனது குணம். அனைத்தும் காம்பௌண்டில் அனைவரையும் ஈர்த்திருந்தது.

“”என்ன சொல்லி குடிவந்தான்.. என்ன பண்றான் பார்த்தயா.. நீதான பார்க்க நல்ல பையன் மாதிரி இருக்கான் வாடகைக்கு விடலாம்னு சொன்னே.. என்ன ஆச்சு பார்த்தயா..?” என்று குறுக்கும் நெடுக்குமாய் நடந்தபடி பேசிக் கொண்டிருந்த ராமமூர்த்திக்கு வயது ஐம்பத்திரண்டு. சென்னை தி.நகரில் அவருக்கென சொந்தமாய் வீடுகள் இருந்தன. கீழ்த்தளத்தில் மூன்று வீடுகளும், முதல் தளத்தில் மூன்று வீடுகளும் இருந்தன. ஒன்றில் அவர் குடும்பமும் ஐந்தில் குடித்தனக்காரர்களும் இருந்தார்கள். அதன் வாடகையே முப்பதாயிரத்துக்கும் மேல் வருகிறது. அடுத்த தெருவில் இன்னொரு வீடும் கட்டிக் கொண்டிருக்கிறார். அதுதவிர, பொழுது போக அவர் ஒரு வங்கியில் கேசியராகவும் இருக்கிறார்.

ராமமூர்த்தியின் வீடு இருக்கும் இந்த இடம் ஒரு காலத்தில் மக்கள் உள்ளே வர பயப்படுகிற அடர்ந்த காடாய் இருந்ததாம். பக்கத்திலேயே சுடுகாடு வேறு. ராமமூர்த்தி பயப்படவில்லை. கிடைத்த இந்த பொறம்போக்கு இடத்தில் வீட்டைக் கட்டிக் கொண்டார். பேயெல்லாம் வருமே என்று அவரது மனைவி கொஞ்சம் பயந்த போது, “”நான் ரொம்ப வருசமா அதோடதான் வாழ்றேன்” என்றாராம்.

மேலும் அருகில் வேகமாய் வளர்ந்த வீடுகள். ராமமூர்த்தி தெளிவாய் பணத்தைத் தள்ளி இருந்த இடத்திற்கு பட்டா வாங்கிக் கொண்டார். ஓட்டு வீட்டை காங்ரீட் வீடாக மாற்றி மேலும் மாடிகளாய் வளர்த்திக் கொண்டார். பிறகு மிக வேகமான நகர வளர்ச்சியில் ராமமூர்த்தியின் காட்டில் பேய் மழை அடித்தது. அது அவரை இந்த பத்து வருடத்திற்குள் அவரே எதிர்பார்க்காத பணக்காரனாக்கியிருந்தது. பேச்சின் தொனியும், பார்வைகளும் மாறிப் போயின. அவர் அந்த வீடுகளின் ராஜா மாதிரி உலா வந்தார். அவருக்கென தனியாய் சட்டதிட்டங்கள் வகுத்துக் கொண்டார். அந்த சட்டத்தில் ஒன்றை நந்தகுமார் மீறியதன் விளைவுதான் இன்று நடக்கப் போகிற பஞ்சாயத்து.

நந்தகுமார் விருந்தாளிகளை சென்ட்ரலில் ரயிலேற்றி விட்டு திரும்பி வந்தான். ராமமூர்த்தி அவனை வாசலிலேயே நிறுத்தினார். அவரது கோபம் குறையாமல் அப்படியே இருந்தது. குரல் எடுத்தவுடன் உச்சத்தை தொட்டது. நந்தகுமார் மிக நிதானமாக இருந்தான். முன்பே எதிர்பார்த்தமாதிரி பதட்டமில்லாமல் அவரைப் பார்த்தான். அதுவே அவரை இன்னும் எரிச்சலூட்டியது.

“”நான் என்ன சொல்லி உனக்கு வாடகைக்கு வீடு விட்டேன். இப்ப என்ன பண்ணிட்டு இருக்கே..?” என்று ஆரம்பித்தார்.

“”என்ன சார் இது.. வந்தவங்கள வழியனுப்பிட்டு வர்றது தப்பா..?” என்றான் அவன்.

நந்தகுமார் ஆரம்பிச்சுட்டான் என்கிறமாதிரி பசங்கள் ஒரு ஆர்வமாய் பார்க்க ஆரம்பித்தன. ராமமூர்த்தியின் கோபம் மேலும் ஒரு படி ஏறியது. அதை உணர்ந்த விதமாய் சுமதி பேச்சை தொடங்கினாள்.

“”ஏம்ப்பா இங்க குடி வரும்போது நாங்க சொன்ன கண்டிஷன்ஸ மறந்துட்டயா? விருந்தாளிகள் ரொம்ப பேரு வரக்கூடாதுன்னு சொன்னது ஞாபகமில்ல..” என்றாள்.

“”ஆமாங்க எல்லாம் ஞாபகமிருக்கு.. விருந்தாளிகளே வரக்கூடாதுன்னு நீங்க சொல்லல.. இவ்வளவு பேர்தான் வரணும்னு ஒரு லிமிட்டும் சொல்லல.. அப்படியே வந்துட்டாலும் பாதி பேர ரோட்டிலேயே நிறுத்தி வைக்க முடியுமா? சொல்லுங்க.. சரிங்க.. அவங்க வந்ததில என்ன தப்பு இருக்கு.. எங்க வீட்டுக்கு வர்ற விருந்தாளிக உங்க வீட்டில வந்து சாப்பிட்டாதாங்க தப்பு..”

ராமமூர்த்தியின் வாரிசுகள் இரண்டும் உள்ளே சிரிக்க ஆரம்பித்திருந்தார்கள். காம்பௌண்டில் இருந்த மீதி குடித்தனக்காரர்கள் எட்டி பார்த்தார்கள். சத்தம் கேட்டு நந்தகுமாரின் மனைவி ஆனந்தி வேகமாய் வந்தாள்.

“”எதுவும் பேசாதீங்க” என்று அவனை மெல்ல இழுத்தாள்.

“”நான் பேசல ஆனந்தி.. அவர்தான் என்னை பேசறதுக்கு நிறுத்தியிருக்காரு.. நீ போ நான் பேசிட்டு வர்றேன்..”

“”இந்த ஏரியாவில தண்ணி பிரச்சனை.. நிறைய பேரு வந்தா குடியிருக்கற எல்லாத்துக்கும் பிரச்சனை வரும்னு சொல்லல..” ராமமூர்த்தி மீண்டும் ஆரம்பித்தார்.

“”சொன்னீங்க நான் இல்லைன்னு சொல்லல.. அதுக்காக ஊரிலிருந்து வர்றவங்கள மூணு நாளுக்கு சேர்த்து அங்கயே குளிச்சிட்டு வாங்கன்னு சொல்ல முடியுமா.. என்ன பேசறீங்க சார்?..”

“”என்ன நக்கலா..?”

“”இல்ல சார் யதார்த்தம்..”

“”என்ன யதார்த்தம்.. ராத்திரி பனிரெண்டு மணிக்கு மேல வந்து காம்பௌண்ட் சுவரத் தாண்டறதுதான் உன்னோட யதார்த்தமா..”

“”பத்து மணிக்கே காம்பௌண்டுக்கு பூட்டு போடறது உங்க தப்பு சார்..”

“”அதுக்கு நீ பனிரெண்டு மணிக்கு வருவியா..?”

“”இதுக்காக என் பொண்டாட்டியே வருத்தப்படல.. கேள்வி கேட்கல.. நீங்க ஏன் சார் பீல் பண்றீங்க..”

ஆனந்தி குபீரெனச் சிரித்தாள். ராமமூர்த்தியின் மனைவிக்கும் சிரிப்பு வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். அவருக்குதான் முகம் மேலும் சிவந்து போனது. அவரிடம் இவ்வளவு நக்கலாய் யாரும் பேசினதில்லை.

“”என்ன பேசறான் பாரு.. நந்தகுமார் பீ சீரியஸ்..” அவருக்கு வார்த்தைகள் தடுமாறியது.

நந்தகுமாருக்கு இப்போது லேசாய் கோபம் வந்தது. அவர் சொன்னதைவிட சீரியஸôனான்.

“”சார்.. கொஞ்சம் மரியாதையா பேசுங்க.. நீங்க உங்க மனைவிக்கு மட்டுந்தான் வீட்டுக்காரர். இந்த காம்பௌண்டில இருக்கிற எல்லாத்துக்குமில்ல.. எங்க சுதந்திரத்தில தலையிட உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? வாடகை தர்றது உங்களுக்கு அடிமையா இருக்கறதுக்கல்ல.. சுதந்திரமா இருக்கிறதுக்கு பேருதான் வீடு. அன்னைக்கு பனிரெண்டு மணிக்கு வந்தேன். இல்லைன்னு சொல்லல.. அன்னைக்கு என் பிரண்டுக்கு ராத்திரி பத்து மணிக்கு மேல ஆப்ரேசன். அதெல்லாம் முடிஞ்சு சாப்பிடாம அழுதுட்டே இருந்த அவங்கம்மாவுக்கு டிபன் வாங்கி சாப்பிட வச்சுட்டு ஆறுதலா கொஞ்ச நேரம் பேசிட்டு வர்றதுக்கு அவ்வளவு நேரம் ஆயிடுச்சு.. அன்னைக்கு அப்படி சொல்லி குடிவந்துட்டு இன்னைக்கு இப்படி பேசறானேன்னு நீங்க கேட்கறது நியாயம்தான்.. என்னை பொறுத்தவரைக்கும் என் மனசுக்குள்ள நான் எந்த மாநாடோ, தீர்மானமோ வைச்சுக்கறதில்ல.. நான் இந்த நிமிசத்தில வாழ்றவன் சார்.. இந்த நொடி என்ன சொல்லுதோ.. என்ன நடக்குதோ அதுதான் என் வாழ்க்கை..”

“”என்ன தத்துவமா..”

“”இல்ல சார் என்னோட நியாயம்.. அடுத்தவங்க நியாயத்த புரிஞ்சுகிட்டாதான் பிரச்சனையே வராதே..”

“”என் பிரச்சனையை மட்டும் நீ புரிஞ்சுகிட்டயா..”

“”என்ன சார் புரிஞ்சுக்கணும்.. உங்க வீட்டுக்கு விருந்தாளிகள் யாரும் வர்றதேயில்லையா? உங்க வீட்டில யாரும் ஒரு பக்கெட் தண்ணிக்கு மேல குளிக்கறதேயில்லயா? வெளியில போனா.. வாழ்க்கையில ஒருநாள்கூட உங்களுக்கு லேட்டானதே இல்லயா.. என்ன சார் புரிச்சுக்கணும். கரண்ட்டுக்கு கவர்மெண்ட் வச்சிருக்கறது ஒரு ரேட்.. நீங்க வசூல் பண்றது ஒரு ரேட்.. மெயின்டனன்ஸ் சார்ஜுன்னு வாங்கறீங்க. கிணத்துத் தண்ணியில புழு விழுந்தா நானே காசு போட்டுதான் பிளீச்சிங் பவுடர் வாங்கிப் போடறேன்.. என் வண்டிய நிறுத்த காம்பௌண்ட்டுக்குள்ள இடமிருக்கான்னு பாருங்க சந்து விடாம வீடு கட்டியிருக்கீங்க.. வண்டி வெய்யில்ல மழையில காஞ்சுட்டு நிக்குது.. தினம் நான் காலையில எழுந்ததும் வண்டி இருக்குதா இல்ல.. யாராவது எடுத்துட்டு போயிட்டாங்களான்னு பதட்டதோடவே பார்த்துட்டிருக்கேன்.. என்ன சார் உங்க நியாயம்..?”

நந்தகுமார் பேசி முடித்தான். சுமதி வாயடைத்து நின்றிருந்தாள். ராமமூர்த்திக்கு வியர்த்துப் போய் பதட்டம் கூடியிருந்தது.

“”எனக்கு உன்னோட விளக்கமெல்லாம் தேவையில்ல..” என்றார் வேகமாய்.

நந்தகுமார் மறுபடியும் நிதானத்துக்கு வந்திருந்தான். மீண்டும் அமைதியாய் பேசத் தயாரானான்.

“”சார் உங்ககிட்ட பதிலில்லைன்னு சொல்லுங்க..” என்றான்

“”உங்கிட்ட பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லைன்னு சொல்றேன்.. இங்க நான் வச்சதுதான் சட்டம்..”

சட்டம்.. கேட்டதும் அவனுக்கு சிரிப்புதான் வந்தது. பிறகு சொன்னான்.

“”போதும் சார்.. நிறுத்திடுங்க.. ரொம்ப ஆடாதீங்க.. இந்த பூமி சின்னதா ஆடுச்சுன்னா.. எல்லாத்தோட ஆட்டமும் அடங்கிபோயிடும்.. ”

“”நீ ரொம்ப ஓவரா பேசற.. நீ இங்க இருக்க வேண்டிய அவசியமில்ல.. வீட்டை காலி பண்ணிட்டு போகலாம்..” என்று அவர் கத்திச் சொன்ன போது அனைவரும் அமைதியானார்கள். விக்ரமும் ரம்யாவும் அதிர்ச்சியோடு பார்த்தார்கள். அவர்களுக்கு அழுகை வந்தது. நந்தகுமார் அதே அமைதியோடு ராமமூர்த்தியை பார்த்தான்.

“”உங்களால இதுக்கு மேல என்ன சார் சொல்ல முடியும்? இதை எதிர்பார்த்துதான் சார் நான் இவ்வளவும் பேசினேன். உங்களுக்கு இந்த வீடுதான் உலகம். எனக்கு இந்த உலகமே வீடுதான் சார்.. நான் காலி பண்ணிக்கறேன்..” என்றபோது ஆனந்தி அவனது கையை அழுத்திப் பிடித்தாள்.

“”மூணு மாசம் டைம் தர்றேன்.. அதுக்குள்ள வீட்டை காலி பண்ணிடுங்க..” என்று சொல்லிவிட்டு நடந்தவர், நந்தகுமார் ஏதோ சொல்வது கேட்டு மீண்டும் நின்றார்.

“”மூணு மாசம்.. கணக்கென்ன சார் கணக்கு.. வீடு கிடச்சா போயிட்டேயிருக்கேன்.. எனக்கு எந்த வருத்தமும் இல்ல சார். சில முடிவுகள அந்தந்த சூழ்நிலைதான் தீர்மானிக்குது. இந்த சூழ்நிலை இதச் சொல்லுது அத கேட்டுட்டு போயிட்டே இருப்பேன் சார்..

“”புரியல..”

“”என்னைக்காவது புரிஞ்சுக்குவீங்க..”

“”எனக்கு புரியவேண்டாம்.. நீ கிளம்பலாம்..” என்று நடக்க } நந்தகுமார் மீண்டும் நிறுத்தினான்.

“”சார்.. எனக்கு ஒரேவொரு ஆசை மட்டும் இருக்கு..”

“”ம்.. சொல்லு..”

“”அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா.. நான் ஒரு வீட்டோட ஓனராகணும்.. அந்த வீட்டுக்கு நீங்க வாடகைக்கு குடி வரணும் சார்.”

“”வந்தா..?”

“”நிச்சயமா உங்கள மாதிரி ஒரு மோசமான வீட்டுக்காரனா இருக்கமாட்டேன்..சார்..” என்றபடி நந்தகுமார் நடக்க அவன் போவதையே ராமமூர்த்தி அதே கோபத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

ராமமூர்த்தி பிரச்சனைகளின் தாக்கம் அப்படியே பின்தொடர மதுரைக்கு வந்தார். பரபரப்பான மதுரை. வெறுப்பாகவே காலை வைத்தார். நிறைய மாற்றல்கள் அவருக்கு வந்திருக்கிறது. அதை எப்படியோ சமாளித்து சென்னையில் மற்றும் வந்து போகிற தொலைதூர ஊர்களிலேயே காலம் தள்ளிவிட்டார். இந்தமுறை அது நடக்கவில்லை. மதுரையில் அவரது மாமா வீட்டில் தங்கினார். அப்படியே வீடு பார்த்தார். சென்னையில் அத்தனை வீடுகள் வைத்துக் கொண்டு இங்கே வீடு தேடுவது அவருக்கு எரிச்சலாய் இருந்தது. அவரது மாமா பையன் காட்டின ஒன்றிரண்டு வீடுகள் அவருக்கு திருப்தியாய் இல்லை. புரோக்கர் வைத்துக் கொண்டார். அவரது அலுவலகம் பக்கத்தில் அவன் வீடுகள் காட்டினான். அதில் ஒன்று ராமமூர்த்திக்கு பிடித்திருக்க அவர் சந்தோசமானார். அந்த வீட்டின் ஓனரை சந்தித்தார். வாடகை விஷயங்கள் பேசி முடித்தார். பிறகு அந்த வீட்டுக்காரர் சொன்னார்.

“”உங்கள பார்த்தா நல்ல குடும்பமா தெரியுது.. ஆனா எங்க வீட்டுக்குன்னு சில கண்டிஷன்ஸ் இருக்கு.. அதுக்கு ஒத்து வந்தா அட்வான்ஸ் கொடுங்க.. ஓகே.. டெய்லி ஒரு மணி நேரந்தான் மோட்டார் போடுவோம். பத்து மணிக்கு மேல காம்பௌண்ட் கேட்டை பூட்டிருவோம்.. விருந்தாளி நிறைய வந்தா வீட்டை அன்னைக்கே காலி பண்ணிடனும்..” என்று அவர் சொல்லிக் கொண்டு போக ராமமூர்த்திக்கு தலை சுற்றியது. அவர் உடனே பதில் எதுவும் சொல்லவில்லை. அப்புறம் வந்து பேசறேன் என்றார். வெளியே வந்து யோசித்தபடி நடக்க ஆரம்பித்தார். மாலையின் இதமான காற்று அவர் முகத்தில் அடித்தது. கொஞ்சம் ஆசுவாசமான போது ராமமூர்த்திக்கு போன் பண்ணி நந்தகுமாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென தோன்றியது.

– சரசுராம் (ஆகஸ்ட் 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *