நத்தைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 26, 2023
பார்வையிட்டோர்: 813 
 
 

(1973 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தொழிலாளியின் மனப் போராட்டங்களை அந்தக் கதாசிரியர் நன்கு சித்திரித்திருந்தார். ஓரி டத்தில் அவர், “அந்தத் தொழிலாளி நத்தையைப் போல் தன் சிந்தனைகளை உள்ளிழுத்துக்கொண்டு தனது காரியாலயத்திற்குள் சென்றான்.” என்று வருணித்திருந்தார். இது என் சிந்தனையைக் கிளறிவிட்டது.

ஆம். நத்தை ஒன்று ஊர்ந்து போகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது அது தன் கூட்டுக் குள்ளிலிருந்த தனது தலையையும் கழுத்தையும் வெளியே நீட்டிக்கொண்டு, அக்கம் பக்கம் பார்த்து எச்சரிக்கையுடன் செல்கிறது. அச்சமயத்தில் அதன் முகத்தில் ஒரு சிறு குச்சியால் மெதுவாக தட்டினால் போதும். திடீரென்று அது தன் தலையையும் கழுத்தையும் சுருக்கி உள்ளிழுத்துக் கொள்ளும். பிறகு, சிறிது நேரங்கழித்து மெதுவாகத் தன் தலையை நீட்டும். அபாயம் என்று கண்டதும், திரும்பவும் தன் தலையை உள்ளிழுத்துக் கொள்ளும். இது நத்தையின் இயல்பு.

இதுபோல்தான் அண்டை அயலாரிடம் பழகும் விஷயந்தெரிந்த மனிதர்களும் நடந்துகொள்கிறார்கள்!

ஏன், இல்லையா ? நல்லது. என் நண்பர் வேணுகோபால் தம்பதிகளின் மனப்போக்கைச் சொல்கிறேன். அதன் பிறகு உங்கள் முடிவைக் கூறுங்கள்.

உயர்திரு வேணுகோபால் இந்நகரத்தில் பெரிய செல்வர். ஆனால் அட்டக்கருமி. ஒரு காசு செலவழிப்ப தென்றால் ஒன்பது முறை சிந்திப்பார். இதுபற்றி பிறர் குறை கூறுவதை ஒரு சிறிதும் பொருட்படுத்துபவரல்லர். தமது கருமித்தனத்தை விட்டுக் கொடுப்பவரல்லர்.

இதற்கு நேர்மாற்றம் அவருடைய இல்லக்கிழத்தி யார் தர்மாம்பாள். பெயருக்கேற்ப அவர் தர்ம சிந்தனை யுள்ளவராகவும், பரோபகாரியாகவும், சிறிது தாராள மாகச் செலவு செய்பவராகவும் இருந்தார். இதில் வியப் பதற்கு ஒன்றுமில்லை பெரும்பாலான குடும்பங்கள் இப் படித்தானே இருக்கின்றன! ஆனால், இந்த வேணுகோ பால் – தர்மாம்பாள் தம்பதிகள் ஒரு தனி ரகம்.

அன்று, தர்மாம்பாள் தம் கணவர்மீது ஒன்றன் பின் னொன்றாகக் குறைகளை அடுக்கிக்கொண்டிருந்தார். வேணுகோபால் “கல்லுப் பிள்ளையார்” போல் வாய் திறவாமல் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் அவ்வாறு இருந்தே தம் வெற்றியை நிலை நாட்டிக்கொள்வது வழக் கம். உணர்ச்சியின்றி மரக்கட்டைபோல் இருக்கும் ஒரு மனிதரிடம் எவ்வளவு நேரம்தான் குறைகளைச்சொல்லிக் கொண்டிருக்க முடியும்? எதிரி தாமாகவே வாபஸாகி விட வேண்டியதுதான். ஆனால், இந்தக் கருத்துவேற்று மைகள் எதுவரை?

அம்மாள் தம் கணவரைக் கேட்டுக்கொண்டிருந்தது இதுதான். வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் தமது தம்பி குடும்பத்திற்குச் சிறிது பொருளுதவி செய்யும்படி மன்றாடிக் கொண்டிருந்தார்.

மௌன தந்திரம் பலியாததைக் கண்ட வேணுகோ பால் வெகுண்டு, “ஏண்டி? தம்பி, தம்பின்னு உசுரை விடுறே? உன் தம்பி மாதா மாதம் எடுக்கிற சம்பளத்தை என்ன செய்கிறானாம்? மிச்சம் பிடிக்க புத்தியில்லாம, செலவுக்குப் போதலே. செலவுக்குப் போதலேன்னு பல்லவி பாடிக்கிட்டு இருக்கான். ஊதாரிச் செலவு செய்யற உன் தம்பிக்கு நான் ஒரு காசு கொடுக்கமாட்டேன்.” என்று வெடுக்கென்று கூறி, முகத்தைத் திருப்பிக்கொண்டார்.

“ஆமாம். பிரமாத சம்பளம்! மாதம் அறுபது வெள்ளியிலே அவன் எப்படி மிச்சம் பிடிக்கிறதாம்? நல்ல செல்வாக்குடன் இருக்கும் நீங்கள்தான் அவனுக்கு ஓர் உயர்ந்த உத்தியோகத்தைத் தேடித் தந்தீர்களா? இப்படி அவன் கஷ்டப்பட வேண்டியிருக்குமா ?”

“இக்..கும். அவன் படிச்சிருக்கிற படிப்புக்கு ஜட்ஜ் உத்தியோகந்தான் பார்த்துக் கொடுக்குணும் ? இங்கிலீ சுலே ரெண்டு வார்த்தை சரியா எழுதப் படிக்கத் தெரியாது. மாதம் 500 வெள்ளி சம்பாதிக்கணும்னு பேராசை.”

“இதைப் பாருங்கோ. முடியும்னா, முடியும்னு சொல் லுங்கோ இல்லாட்டி வாயை மூடிக்கிட்டு “கம்”முன்னு இருங்கோ, என் தம்பி படிப்பில்லாதவன்தான். அறிவிலிதான். அப்படியே அவன் இருந்துட்டுப் போகட்டும். ஆனால், அவன் உங்களைப்போல அறுந்த விரலுக்கு கண்ணாம்பு கொடுக்காத அட்டக் கருமி அல்ல.” – இடையே ஒரு சொல்லம்பைப் பிரயோகித்தாள் தர்மாம்பாள்.

“ஏ! அடக்கு. அதிகமா பேசாதே. இடத்தைக் கொடுத்தா மடத்தைப் பிடுங்கிற கதையாயிருக்கே?” இரைந்து கத்தினார் வேணுகோபால்.

இந்தச் சமயத்தில் திடுதிப்பென்று அவருடைய ஆப்த நண்பர் அண்ணாமலை அங்கு வந்து சேர்ந்தார்.

“என்ன, வேணுகோபால்? இரைஞ்சு கத்திக்கிட்டு இருக்கிறீங்க?”

“ஒண்ணுமில்லை அண்ணாமலை! நேத்து ஒரு கடுதாசி வந்தது. அதிலே பாருங்க, எவனோ என்னைப்பத்தி அவதூறா எழுதியிருந்தான். அந்தக் கடுதாசியை இப்பக் காணோம் அதுதான் இவளைக் கேட்டுக்கிட்டு இருந்தேன்…ம். ஒரு விதத்திலே அது தொலைஞ்சு போனதும் நல்லதுதான். இருந்தா, அதைச் சும்மா படிச்சுப் படிச்சு மனந்தான் புண்ணாயிடும். இல்லிங்களா ?…அண்ணாமலை அண்ணன் வந்திருக்கார்னு தெரிஞ்சதும் தர்மாம்பா காபி கொண்டார உள்ளே ஓடிட்டா… தர்மாம்பா! கொண்டா. கொண்டா. சீக்கிரமா கொண்டா.” என்று நீட்டி முழக்கினார் வேணுகோபால்.

“யார் உங்க மேலே மொட்டைக் கடிதம் எழுதுவா? எதுக்காக எழுதப் போறாங்க? எனக்கு ஒண்ணும் புரியலையே?” என்று குழம்பினார் அண்ணாமலை.

“சனியனை விட்டுத்தள்ளுங்கள் அண்ணாமலை. எவனோ அன்னக்காவடி. நான் தர்மம் செய்யவில்லையாம். நரகத்துக்குப் போவேனாம். இப்படி ஒரு பிதற்றல். இவனைப் போல எத்தனை பேரை இந்த வேணுகோபால் பார்த்திருப்பான்? தர்மாம்பா! இன்னுமா காபி கலக்கிறே?”

“வேணுகோபால்! இப்ப எனக்கு ஒண்ணும் வேணாம். அவசரமா கடைத் தெருவுக்குப் போகணும். திரும்ப நாம் சந்திப்போம்.” என்று வெகு வேகமாக வெளியேறினார் அண்ணாமலை.

அவர் தலை மறைந்ததுதான் தாமதம். இதுகாறும் கதவு மறைவில் நின்றிருந்த தர்மாம்பாள் மீண்டும் தம் கணவர் முன் தோன்றினார்.

அம்மாளைக் கண்டதும் வேணுகோபாலரின் வெளித் தோற்றத்தில் மறைந்திருந்த சினம் மீண்டும் வெளிப்பட்டது.

“திரும்ப வந்துவிட்டாயா? உன் தம்பிக்கு வக்காலத்துப் பேச. அவனுக்கு ஒரு காசு கூட நான் கொடுக்கப் போவது இல்லை இந்த வருஷம் எனக்குப் பணத் தட்டு. வரவேண்டிய இடங்களிலெல்லாம் ஏப்பம் விட்டுட்டான்க.” என்று ஓலமிட்டார் வேணுகோபால்.

“இதைப் பாருங்க. நீங்க இந்த மாதிரி தயவு தாட்சண்யமில்லாமப் பேசினா எனக்கு கெட்ட கோபம் வரும். என் தம்பி எப்போதுமா உங்களைப் பணம் பணமுன்னு நச்சரிக்கிறான்? ஏதோ ஒரு முடைக்குன்னு கேட்ட…”

“சீ! கழுதை! பெரியமகராஜன் வீட்டு மகள் போலப் பேசுறியே? இங்கே என்ன பணம் காய்க்கும் மரமா முளைச்சிருக்கு? போ. போ. என்னால் அரைக் காசும் கொடுக்கமுடியாது.” என்று எரிந்து விழுந்தார் வேணுகோபால்.

“இஹூம். அவ்வளவு தூரம் பேசும்படி ஆச்சா? உங்க பணத்தை நீங்களே கட்டிகிட்டு அழுங்க. நான் என் அம்மா வீட்டுக்குப் போறேன்.” என்று கிளம்பினார் தர்மாம்பாள்.

இந்தச் சமயத்தில் வேணுகோபால் காரியஸ்தர் கணபதி தலையை நீட்டினார். உடனே அம்மாள் சாந்த சொரூபிணியாகி, “காரியஸ்தர்! கடை சாமான்களுக் கெல்லாம் ஆள் அனுப்பினீரா? நான் எவ்வளவு நாழி உமக்காகக் காத்துக் கொண்டிருப்பது?” என்றார்.

“ஆமாம் அம்மா! அந்த முனியன் தன் பெண் ஜாதிக்கு தீபாவளிப்புடவை வாங்க கடைக்குப் போயிட்டானாம். அவனைத் தேடிப் பிடிக்கிறதுக்குள்ளே போதும் போதுமுன்னு ஆயிட்டுது.”

“சரி. நீர் போய் அந்த வீராசாமிப் பிள்ளையைக் கண்டு, பாக்கியை வசூல் பண்ணிகிட்டு வாரும்.” என்றார் வேணுகோபால்.

“சரிங்க.” என்று காரியஸ்தர் நழுவினார்.

இதற்குள் தர்மாம்பாள் தமது கைப்பெட்டி சகிதம் பிரயாணத்திற்கு வேண்டிய ஆயத்தங்களுடன் தம் கணவர் எதிரில் காட்சியளித்தார்.

“அட! அவ்வளவு துணிச்சல் வந்துட்டுதா? போடி. போ. நல்லா போ. இனி இந்த வீட்டை மறந்தும் எட்டிப் பார்க்காதே, இந்த நிமிடத்திலிருந்து உனக்கும் எனக் கம் ஒரு உறவுமில்லை.”

உள்ளுக்குள் தமது மனைவி போய்விட்டால் தம்மால் சமாளிக்கமுடியாத தமது பெரிய குடும்ப பாரத்தை யார் தாங்கி நடத்துவது என்று கவலைப்பட்டார். ஆனால், தர்மாம்பாளோ அவருடைய மிரட்டலைப் பொருட்படுத்தாமல் கைப்பெட்டியுடன் வீட்டைவிட்டு வேகமாக வெளியேறினார்.

இதை எதிர்பாராத வேணுகோபால் கல்லாய்ச் சமைந்துவிட்டார். மரண அமைதியுடன் சிறிது நேரம் கழிந்தது. காரியஸ்தர் அவர் முன் தோன்றினார்.

“ஏன்? என்னாச்சு?”

“அவரு வூட்டிலே இல்லீங்க…ஐயா! வர்ற வழியிலே அம்மா பெட்டியைத் தூக்கிகிட்டு எங்கோ வேகமா போறதைப் பார்த்தேன். எங்கே போறாங்க? நம்ப காரை எடுத்துக்கிட்டுப் போகாம ஏன் நடந்து போறாங்க?”

“ஓய்! காசின் அருமை தெரியாதவரய்யா நீர்! எதற்காக கார்? அப்படி என்ன அவசர ஜோலி? பெட்ரோல் என்ன இனாமா கிடைக்கிற தண்ணியா? நான் அவளைக் காரிலேதான் போகச் சொன்னேன். எதுக்காக வீண் செலவுன்னு நடந்து போறாப் போலிருக்கு. சரி. நீரும் அவளுக்குத் துணையா போயிட்டுவாரும்.” என்று அவரை அனுப்பி வைத்தார் வேணுகோபால்.

காரியஸ்தர் தமது வழுக்கைத் தலையைத் தடவிக் கொண்டு ஒரே ஓட்டமாய் ஓடி, தர்மாம்பாளைச் சந்தித்தார்.

அந்த அம்மாள் என்ன சொன்னாரென்று நினைக்கிறீர்கள்?

“காரியஸ்தர்! காரியஸ்தர்! எங்கே நமது டிரைவர்? மோட்டாரில்லாமல் நான் கால் கடுக்க நடக்க வேண்டுமா? நல்லா இருக்கு! இனி என்னால் ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியாது. சீக்கிரமா ஒரு டாக்ஸி பிடியும்.”

நேயர்களே! பார்த்தீர்களா? வேணுகோபால் தம்பதிகள் எப்படித் தங்கள் குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றுகிறார்கள் என்பதை! நத்தைகள்.

– 1973, காதற் கிளியும் தியாகக் குயிலும் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1977, மறைமலை பதிப்பகம் வெளியீடு, சிங்கப்பூர்.

– கவிஞர் ந.பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம் (தொகுதி 2), முதற் பதிப்பு: பெப்ரவரி 1999, ப.பாலகிருட்டிணன், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *