நதியைத் தேடி வந்த அலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 13, 2024
பார்வையிட்டோர்: 519 
 
 

(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கையில் பெட்டியுடனும் கண்ணில் நீருடனும் வாசலில் வந்து நின்ற மகளைக் கண்டதும் எனக்குப் பகீர் என்று ஆனது. “மஞ்சு, என்னம்மா விஷயம்?” எனப் பதற்றத்துடன் கேட்டேன். “அம்மா…” எனக் கூறியவள் தொடர்ந்துபேச முடியாதவளாய் அப்படியே என் மார்பில் தொப்பெனச் சாய்ந்து, ‘ஓ’ வென அழத் தொடங்கினாள். அவளை அப்படியே சாய்ந்து அணைத்தபடி மெல்ல சோபாவில் அமரச் செய்தேன். அவளின் கண்ணீர் நின்றபாடில்லை. மகள் கண்ணீர் வடிக்க வடிக்கப் பெற்ற மனம் அதைத் தாளாமல் உடன் சேர்ந்து அழுதது. “மஞ்சு என்னம்மா நடந்தது… சொல்லும்மா சொல்லு…” என அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்த வண்ணம் வாஞ்சையுடன் கேட்டேன் நான்.

“அம்மா… அம்மா… அவர் எனக்கு துரோகம் செய்துட்டாரம்மா…” என விக்கியபடி கூறினாள் மஞ்சு. “மாப்பிள்ளை, நீங்களுமா என என் மனத்தின் ஒரு மூலையில் ஏதோ ஒன்று பிழிவது போல இரத்தக் கண்ணீர் வடியத் தொடங்கியது. வாய் பேசச் சக்தியற்றவளாய் மகளையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் என் கண்களோ கசியத் தொடங்கியது. ஒருவாறாய் அதைச் சமாளித்தவாறு “மாப்பிள்ளை வேற ஏதாவது சின்ன வீடு அது இதுது வைச்சிருக்காராம்மா மஞ்சு’ எனத் துணிந்து கேட்டேன். அந்த வார்த்தை வெளி வருவதற்குள் என் நாடி நரம்பெல்லாம் நின்றுவிடுவது போல் எனக்கு இருந்தது. ஆனால் என் மகள் மஞ்சுவோ சற்றே சுதாரித்துக் கொண்டு “போம்மா. அதெல்லாம் ஒன்னுமில்லை. தனிக்குடித்தனம் போகலாம்னு இதுவரை சொன்னவரு இப்போ அதைப் பற்றி எல்லாம் பேசாதே. என் அம்மாவை விட்டுப் பிரியறதா எனக்கு உத்தேசம் இல்லைனு அடிச்சிச் சொல்லுறாரு. அவருடைய பொய்யான வாக்குறுதியை நம்பி நான் ஏமாந்தது போதும். அதனால கோவிச்சுக்கிட்டு வந்துட்டேன்” என மஞ்சு சொன்னதுதான் தாமதம் என் வயிற்றில பாலை வார்த்தது போல் அவளுடைய ஒவ்வொரு சொல்லுமே அமைந்தது.

“ப்பூ இதற்குத்தான் இப்படிப் பீடிகை போட்டுப் பேசினாயா? நல்ல பொண்ணும்மா நீ….” எனச் செல்லமாக மகளின் கண்ணீரைத் துடைத்தபடி அவளை வாஞ்சையுடன் பார்த்தேன்.வட்ட வடிவமான முகம்: அழகிய பெரிய கண்கள்; குழந்தைத்தனமான பார்வை; மொத்தத்தில் அவள் அப்பாவைப் போல காண்போரை மயக்கும் வசீகரத் தோற்றம். அவளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது. “என்னம்மா ஏன் என்னை அப்படிப் பார்க்கிறீங்க?” எனக் கொஞ்சலுடன் கேட்டாள். புன்னகைத்தபடி “மஞ்சு… மஞ்சு… உனக்கு வயசுதான் இருப்பத்தாறு ஆகுதே தவிர, நீ இன்னும் சின்ன பிள்ளை மாதிரி நடந்துக்கிறியேம்மா. இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கா இவ்வளவு தூரம் பெட்டி படுக்கையோட ஓடி வந்திருக்கே” எனக் கேலியாகக் கேட்டேன். “எதும்மா சின்ன விஷயம். தனிக்குடித்தனம் போகலாம்னு ஆசை காட்டி மோசம் செய்றதா சின்ன விஷயம். யூனிவர்சிட்டியில் ஒன்னா படிக்கிற போதும் சரி கல்யாணத்திற்குப் பிறகும் சரி நான் எதைச் சொன்னாலும் தட்டாதவரு. இப்போ கொஞ்ச நாளா மாறிட்டு வர்றார். ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் மாதிரி இப்போ நான் வேண்டாத மனைவியாயிட்டேன். நானும் அவரைப் போல நல்லா படிச்சியிருக்கேன். கை நிறைய சம்பாதிக்கிறேன். அதனால தனிக்குடித்தனம் போகனும்னு நினைச்சீங்கன்னா என்னைத் தேடி வாங்க. இல்லை அம்மா பிள்ளையா இங்கேயே இருங்கன்னு சொல்லி நான் வீட்டை விட்டு வந்துட்டேன்ம்மா” எனப் பொறிந்து தள்ளினாள் மஞ்சு.

மகளின் வார்த்தையைக் கேட்டு அழுவதா சிரிப்பதா என்று எனக்கே புரியவில்லை. வாழ்க்கையில் கண்ணீர் வடிக்கக்கூடிய விஷயங்கள் பல இருக்க இந்த அற்ப விஷயத்திற்கே மனம் தாங்காதவளாய்ப் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்ட நிலையை எண்ணித் துணுக்குற்றேன். “இங்கே பாரும்மா மஞ்சு மேடு பள்ளம் நிறைஞ்சதுதான் வாழ்க்கை. மாப்பிள்ளையோட அம்மாவுக்கு அவரு ஒரே பிள்ளை. அம்மாவை விட்டுப் பையன் எப்படியம்மா வர முடியும்?’ என நான் கூறி முடிப்பதற்குள் “ஏன் அவங்க மகள் வீட்டுல போய் இருக்க முடியாதா?” என இடைமறித்துக் கேட்டாள். “பொண்ணுங்க வீட்டுல பெத்தவங்க இருக்கிறது நம்ம வழக்குல சாத்தியம் இல்லைம்மா” என அமைதியுடன் கூறினேன். “அதெல்லாம் அந்தக் காலம் அம்மா. இப்போ எல்லோமே மாறிப்போயிட்டு, நான் என்ன நிரந்தரமாவா அங்கே இருக்கச் சொல்றேன்? ஒரு மாசம் அங்கே. ஒரு மாசம் இங்கே. இப்படி மாறி மாறி இருக்கலாம் இல்லையா?” எனப் பெரிய மனுஷியைப்போல் பேசினாள் என் மகள்.

அவளுடைய வாதம் ஒரு வேளை அதிகம் படித்தால் இப்படித்தான் புதுமையான புரட்சிகரமான எண்ணங்கள் எல்லாம் தோன்றுமோ என்னவோ எனக்குத் தெரியவில்லை. இரண்டாம் கிளாஸ் கூட படிக்காத எனக்கு இதெல்லாம் எங்கே புரியப் போகிறது. ”இருந்தாலும் மஞ்சு பெண்களான நாம தான் பொறுத்துப் போகனும்மா. நீ கொஞ்சம் அனுசரிச்சிப் போனா… நான் சொல்லி முடிக்கவில்லை. அதற்குள் அவள் பொங்கி எழுந்தாள். “இல்லைம்மா உன்னைப்போல பொறுத்துப் போக என்னால முடியாது. அவங்களோட தொண தொணப்பை என்னால தாங்க முடியலை. மருமகள்னா மாமியாருக்கு அடங்கிப் போகனும்னு எந்தச் சட்டத்திலும் இடம் இல்லை. இதை எல்லாவற்றையும் விட நம்பிக்கைத் துரோகம் செய்றவங்களைக் கண்டா எனக்கு அரவே பிடிக்காது. கல்யாணத்துக்கு முன்னால தனிக்குடித்தனம் போக சம்மதித்தவரு இப்போ சாக்குப்போக்கு சொல்லுறாரு. இந்த மாதிரி வாக்குறுதி தவறுரவங்களுக்குச் சரியான பாடம் புகட்டனும்” எனக் கோபத்துடன் கூறினாள்.

மகளின் கோபம் – ஆவேசம் – வேகம் அத்தனையும் நன்கு உணர்ந்த நான் இப்படித் தான் எனக்கும் ஒரு காலத்தில் வேகம் கோபம் – ஆவேசம் – ஆத்திரம் அத்தனையும் பொங்கி எழுந்தது. ஆனால்… ஆனால் அது வேறுவிதமான சூழ்நிலை. ஆனால் இது….? என் வாய்க்குப் பூட்டு போட்டது போன்றதோர் உணர்வு. மெல்ல அதிலிருந்து விடுபட்டவளாய் “மஞ்சு கண்ணா, அம்மா சொல்றதைக் கேளும்மா. நான் என்ன சொல்ல வரேன்னா…” என நான் சொல்லி முடிப்பதற்குள் “இல்லையம்மா என் நிலை உனக்குப் புரியாது. அப்பா எங்கே? நான் அப்பாகிட்டேயே பேசிக்கிறேன். ஏன்னா நான் அப்பா பிள்ளை” எனக் கூறி என் வாயை அடைத்தாள். அத்துடன் அவளாகவே சோபாவை விட்டு எழுந்து எங்கள் படுக்கை அறைப் பக்கமாகச் சென்று “அப்பா… அப்பா…” எனக் குரல் எழுப்பினாள். “மஞ்சு அப்பா பிசினஸ் விஷயமா ஊருக்குப் போய் இருக்காரும்மா. அடுத்த வாரம் தான் வருவாரு” எனக் கூறினேன். “என்ன? போன மாதம் போன அப்பா இன்னுமா ஊர் திரும்பலை? அம்மா நீங்க இங்கே தனியாவா இருக்கீங்க. ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, நான் உங்களுக்குத் துணையா இங்கே வந்து தங்கி இருப்பேனே” எனப் பரிவுடன் கேட்டாள் மஞ்சு. அவள் வார்த்தையில் இழைந்தோடிய அன்பை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த அன்பாலே அவளைத் தாக்க எண்ணி “பெத்தவ தனியா இருக்கிறாள்னு சொன்னதும் உன்’ மனசு கேட்கலை பார்த்தியா? அப்படித்தான்ம்மா மாப்பிள்ளையும் அவங்க அம்மா மேல உயிரை வைச்சியிருக்கிறது தப்பா” எனச் சாட்டையடி கொடுத்தேன். என் அடி அவள் இதயத்தினுள் வடுவாக விழுந்தது போலும். அவள் எதுவும் பேசவில்லை. மௌனமானாள். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக அவளை நம்வழிக்கு இழுக்க வேண்டும் என்று எண்ணியவாள் “சரிம்மா, போய் குளிச்சிட்டு வா. சாப்பிட்ட பிறகு நானே சம்மந்தியம்மாகிட்ட பேசி உன்னை அங்கே விட்டிடுறேன்” என்று சொன்னதுதான் தாமதம் மஞ்சு குறுக்கிட்டு, “அம்மா நான் என் அறைக்குப் போறேன் எனத் தன் அறைக்குள் புகுந்து தாழ்பாள் போட்டுக் கொண்டாள். இதற்குப் பிறகு மஞ்சுவிடம் பேசுவதில் எவ்வித பயனும் தற்போது ஏற்படாது என்பதை உணர்ந்து நானும் அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டேன். இரண்டு முறை கதவைத் தட்டி அவளைச் சாப்பிட அழைத்தேன். ‘பசி இல்லை’ என்று கூறி உறங்கிவிட்டாள். நானும் அவளுக்குத் தொந்தரவு அளிக்கக்கூடாது என்ற நோக்கில் அவளைத் தனியே விட்டேன். அன்றைய இரவை நானும் பட்டினியில் கழித்தேன்.

மஞ்சுளா என்ற மஞ்சு எங்களுக்கென இறைவனால் சிஷ்டிக்கப்பட்ட அன்புச் செல்வம் – வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். ஆம்! பல நாள் தவமிருந்து – விரதமிருந்து பல கோவில்களில் ஏறி இறங்கி – பல புண்ணியதளங்களைச் சுற்றி வந்த பிறகே பிறந்தவள் மஞ்சு. ஆம்! மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் தாம்பத்திய வாழ்வில் உதித்த நல் முத்து மஞ்சு. ஒருவிதத்தில் என் கணவருக்குக் கொஞ்சம் மனவருத்தம் தான். ஆண் சிங்கத்தை எதிர்பார்த்த அவருக்குப் புள்ளிமானே பிறந்தது. இருப்பினும் மஞ்சுவின் அழகிய தோற்றம் கண்டோரை மயக்கச் செய்யும் வசீகரத் தோற்றம் அவருக்கு ஆறுதல் அளித்தது. மொத்தத்தில் ஆண் பிள்ளை இல்லாத குறையை அவள் தீர்த்து வைத்தாள். அந்த அளவுக்கு மஞ்சுவிடம் வேகம் இருந்தது; துடிப்பு மிளர்ந்தது; விவேகம் துளிர் விட்டது.

மஞ்சுவை நாங்கள் ராணி போல வளர்த்து வந்தோம். எந்த ஒரு குறையும் இல்லாமல் – கவலையும் தெரியாமல் நாங்கள் அவளைப் பொத்திப் பொத்தி வளர்த்தோம். மஞ்சுவும் எங்கள் மனத்தை புரிந்து கொண்டு, படிப்பில் சுட்டியாக விளங்கினாள். பல்கலைக் கழகம் வரை அவளைப் படிக்க வைத்தோம். அதுவும் மேல்நாடு வரை சென்று அவளைப் படிக்க வைத்ததைக் கண்டு உற்றார் உறவினர்கள் பலரும் “பெண் பிள்ளையை இவ்வளவு தூரம் படிக்க வைக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏன்னா அவ வேற ஒரு வீட்டுக்கு வாழப் போறவ” எனக் கூறி அவள் படிப்புக்கு முட்டுக்கட்டை போட நினைத்தனர். ஆனால் அவர் அதையெல்லாம் அலட்சியம் செய்து மேலை நாட்டுக்கு மஞ்சுவை அனுப்பி வைத்தார்.

படிக்கச் சென்றவள் அங்கேயே ஒரு பையனைக் காதலிப்பதாகவும் படிப்பு முடிந்ததும் அவனைத் திருமணம் செய்யப் போவதாகவும் கடிதம் மூலம் எங்களுக்குத் தெரிவித்ததும் நாங்கள் ஆடியே போய்விட்டோம். “பெற்றவளின் வளர்ப்பு முறை சரியில்லை; வெள்ளைக்காரனைக் காதலிக்கிறாள்” எனச் சொல்லிச் சொந்தக்காரர்கள் அனைவரும் என் காதுபடவே பேசியதைக் கேட்கக் கேட்க, என் இதயத்தில் இரத்தம் வடிந்தது. நல்லவேளை! மஞ்சு காதலித்த பையன் நம்நாட்டைச் சேர்ந்தவன். அவனும் மேற்படிப்புக்காக மேலை நாடு சென்றவன் என மஞ்சுவிடம் டிரங்கால் மூலம் பேசியதும் தான் எனக்கு உயிரே வந்தது.

படிப்பு முடித்து வந்ததும் முதல் வேளையாகத் திருமணத்தை இனிதே நடத்தி முடித்தோம் நாங்கள். மஞ்சுவின் கணவர் அரவிந்தன் நாங்கள் எதிர்பார்த்ததைப்போல மஞ்சுவுக்கு எல்லா விதத்திலும் ஏற்றவராக அமைந்திருந்தார். உருவப் பொருத்தத்திலும் சரி உள்ளப் பொருத்தத்திலும் சரி இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர் என்பது போல சம கச்சிதமாக இருந்தனர். பெற்றோர் பார்த்துச் செய்து வைத்த “எங்கள் திருமணத்தை” விடக் காதல் திருமணம் கூட நல்லவிதமாக அமையக்கூடும் என்பதற்குச் சான்றாக இருவரின் மண வாழ்வும் சீரும் சிறப்புமாகவே அமைந்தது. யாரின் கொள்ளிக் கண் பட்டதோ தெரியவில்லை. மஞ்சுவின் ஆறுமாத மண வாழ்க்கையில் இப்படியொரு விரிசல் வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இதை எப்படியும் சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கை என்னுள் இருந்தது. காலையில் எழுந்தவுடன் முதல் வேளையாக மாப்பிள்ளை அரவிந்தனுடனோ அல்லது சம்மந்தியம்மாவுடனோ பேசி இதற்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும் என்ற உறுதியுடன் மனப் போராட்டத்தின் உந்துதலில் என்னை அறியாமலேயே கண்ணயர்ந்தேன்.

பகலவன் யாருக்கும் காத்திராமல் தன் கடனைத் செவ்வனே ஆற்றத் தொடங்கினான். பொழுதும் புலர்ந்தது. அன்றைய பொழுது நல்லதொரு பொழுதாக அமைய வேண்டும் என இறைவனைத் துதித்தபடி படுக்கையிலிருந்து எழுந்தேன். நேரே மஞ்சு அறையை நோக்கிச் சென்றேன். அது பூட்டியே இருந்தது.. அவளை இப்போதைக்கு எழுப்ப வேண்டாம் என எண்ணியவாளாய் எனது கடமையைச் செய்யத் தொடங்கினேன். வழக்கம் போல் காலைக்கடனை முடித்து நீராடிய ஈரத் துணியுடன் பூசை அறைக்குச் சென்றேன். சுவாமியின் விளக்கை ஏற்றி, ஊதுபத்தியை கொழுத்தி வைத்து மனமுருகி அம்மனை வழிபட்டேன். என்னை அறியாமல் என் கண்கள் குளமாயின. மனபாரத்தை அந்த அம்பாளின் காலடியில் இறக்கி வைத்ததில் எனக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

மஞ்சுவுக்குப் பிடித்த ரவாத் தோசையைக் காலையுணவாகச் சுட்டேன். நேற்று சமைத்த கருவாட்டுக் குழம்பைச் சுண்ட வைத்தேன். மைலோ கலக்கினேன். இப்படி எல்லாமே மஞ்சுவுக்குப்

பிடித்த ஐடம்தான். காலையுணவு தயாரானது. அன்றைக்கு ‘பல காரியங்கள்’ செய்ய வேண்டி இருப்பதால் சமையலையும் சீக்கிரமே செய்து முடித்தேன். அதற்குள் மணி பத்தாகியது. நேரே மஞ்சுவின் அறைக் கதவைத் தட்டினேன். அவள் வெள்ளனே எழுத்திருக்க வேண்டும் போலும். அதனால் நான் தட்டியவுடனேயே கதவைத் தாமதிக்காமல் திறந்தாள். அவள் முகத்தைப் பார்த்ததும் எனக்கே தூக்கி வாரிப் போட்து. இரவு முழுவதும் அழுதிருப்பாள் போலும். அதனால் கண்கள் சிவந்து கன்னம் வீங்கிக் காணப்பட்டாள். பட்டப்படிப்பு படித்து நாகரிக மோகத்தில் திளைத்திருந்தாலும் கணவரை விட்டுப் பிரிந்திருப்பது பாமரப் பெண்ணை மட்டுமல்ல, படித்த பெண்ணுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். நம் பண்பினைக் கண்டு என் உள்ளம் பூரித்தது. மஞ்சுவின் விஷயத்திலும் இது பாதிப்பை உண்டு பண்ணியுள்ளது என்பதை அவள் முகமே தெள்ளத் தெளிவாகக் காட்டியது. இது என்னுள் நம்பிக்கையூட்டும் நட்சத்திரமாகப் பிரகாசித்தது.

மஞ்சு குளித்துவிட்டு வந்தாள். இயந்திரம் மயம் போல் தன்னை அலங்கரித்துக் கொண்டு நேரே ஹாலுக்குச் சென்று அன்றைய செய்தித்தாளைப் புரட்டினாள். நான் பசியாறக் கூறினேன். ஒப்புக்கு வந்து சாப்பிட்டாள். மற்றச் சமயமாக இருந்திருந்தால் “அம்மா உன் கையால ரவாத் தோசை சாப்பிடறதுக்கே நான் இங்கே அடிக்கடி வரலாம் போல இருக்குது. உன் தோசை ஏ ஒன்” எனக் கூறி அந்த வீட்டைக் கலகலப்பில் ஆழ்த்துவாள். இன்று எல்லாமே அமைதி. மயான அமைதி. அந்த அமைதியைக் கலைத்தது டெலிபோன் மணி. “ஹலோ…” என்றபடி டெலிபோனை எடுத்துப் பேசினேன் நான். “ஹலோ அத்தையா? நான் அரவிந்த் பேசுறேன். மஞ்சுவைக் கூப்பிடுறீங்களா?” என மறுமுனையில் மாப்பிள்ளையின் குரலைக் கேட்டதுதான் தாமதம் நான் குதூகலத்துடன் “மஞ்சு… மஞ்சு… மாப்பிள்ளை பேசறாரும்மா. இந்தா போன்” என்று உற்சாகத்துடன் டெலிபோனை மஞ்சுவிடம் கொடுத்தேன். அவர்கள் இருவரும் மனம்விட்டுப் பேசி ஒரு தீர்மானத்திற்கு வரட்டும் என எண்ணி அங்கிருந்து நகர்ந்தேன்.

நான் அங்கிருந்து நகர்ந்து ஒரு பத்து நிமிடம் கூட ஆகி இருக்காது. மறுபடியும் ஹாலுக்கு வந்தபோது மஞ்சு செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தாள். எனக்குப் பகீர் என்றது. “என்னம்மா மஞ்சு மாப்பிள்ளை என்ன சொன்னார்?” எனக் கேட்டேன். “ஆபிசுல இருக்காரம்மா. அதனால அதிகம் பேச முடியாதாம். வேலை முடிந்து வீட்டுக்கு வரதா சொன்னாரு” என்றாள். “அப்படியா? மாப்பிள்ளையே உன்னை வந்து வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறதாவா சொன்னாரு. அது போதும்மா. அம்பாள் தான் அவர் மனசுல புகுந்து அவரை இப்படியெல்லாம் பேச வைச்சிருக்காங்க” என அன்னையின் புகழைத் துதி பாடினேன். “வந்தும்மா வந்து… தனிக்குடித்தனம் போற எண்ணம் இருந்தா இங்கே வாங்க. இல்லைனா அதைப் பற்றிப் பேசாதீங்கன்னு நான் அடிச்சிச் சொல்லிட்டேன்ம்மா” என்று மஞ்சு கூறியதுதான் தாமதம் “அடப்பாவி மகளே! வாழாவெட்டியா வாழனும்கிற முடிவுக்கே வந்துட்டியா? உனக்கு இவ்வளவு திமிர் இருந்தா ஆம்பிள்ளைக்கு எவ்வளவு இருக்கும் தெரியுமா? நீயே உன் தலையில மண்ணை வாரி இறைக்கிறீயே…” என ஏதேதோ என் புலம்பலைக் கொட்டித் தீர்த்தேன். இதை மஞ்சு சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவள் அப்படியே சிலையானாள்.

வாசல் மணி ஒலித்தது. நான் கதவைத் திறந்தேன். அங்கே மஞ்சுவின் அப்பா நின்றிருந்தார். “என்ன ஜானகி ஏன் ஒரு மாதிரியா இருக்கே? அடி மஞ்சு கண்ணா நீயும் இங்கே தான் இருக்கியா? எப்படிம்மா இருக்கே?” என விசாரித்த தந்தையைக் கண்டதும் மஞ்சு ஓவென அழுது அவரிடம் தஞ்சம் புகுந்தாள். புகுந்த வீட்டில் நடந்த கொடுமையை அளந்தாள். நான் இடையிடையே குறுக்கிட்டு அவளுக்குப் புத்தி கூறினேன். என் பேச்சு எங்கே அம்பலம் ஏறும்? மகள் கூறியது தந்தைக்கு வேதவாக்காக அமைந்தது. ”இதோ அப்பா வந்துட்டேன் இல்லைம்மா. நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்” என மகளுக்குச் சாதகமாகவே அவர் பேசினார். எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது. தந்தை தன் தனவலிமையைப் பறைசாற்றினார்.

மகள் தன் அறிவாற்றலைக் காட்டினாள். மொத்தத்தில் இருவரும் மாப்பிள்ளையை விலைக்கு வாங்கியதாகவே பேசினர். என்னால் இந்தக் கொடுமையைத் தாள முடியவில்லை. மனபாரத்துடன் அவர் கொண்டு வந்த பெட்டியிலிருந்த அழுக்குத் துணிகளை வெளுக்கக் கழிவறைக்குச் சென்றேன்.

அப்பாவும் மகளும் பேசி ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர். அதை எதிர்த்து நான் குரல், எழுப்பிய போதெல்லாம் என்னைப் பாத்தாம்பசலி என மட்டந்தட்டி என் வாயை அடைத்தனர். தந்தையும் மகளும் தங்கள் வாதத்தை நிலை நாட்ட மாப்பிள்ளை வீட்டார் பக்கத்தில் குற்றச்சாட்டைக் குவித்தனர். எனக்குத் தலையே சுற்றுவது போல் இருந்தது. மகளைத் தன் கணவரோடு சேர்த்து வைப்பாள் என அம்பாள் மீது நான் வைத்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் கரையத் தொடங்கியது. மனச்சுமையின் காரணமாய் மூவரும் அன்றைய பகல் உணவை ஒழுங்காகக் சாப்பிடவில்லை. ஒப்புக்காகச் சாப்பிட்டோம். பிரயாணக் களைப்பு என்று சொல்லி அவர் தூங்கச் சென்றார். மஞ்சுவும் நேற்றிரவு முழுவதும் தூங்காமல் அழுததால் அன்றைய மதிய வேளை அவளையும் தூக்கத்தில் ஆழ்த்தியது. நான் மட்டும் தூக்கம் வராமல் நிலைகுலைந்து நின்றேன்.

ஹாலிலிருந்து காரசாரமான சண்டை சத்தத்தைக் கேட்டு மஞ்சு எழுந்தாள். வழக்கத்திற்கு மாறாக என் குரல் மேலோங்கி இருந்ததைக் கேட்டு அவள் காதுகளையே அவளால் நம்ப முடியவில்லை போலும். மணியைப் பார்த்தாள் இரவு மணி எட்டு. இவ்வளவு நேரம் தான் தூங்கியிருப்பது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. அதைவிட என் குரல் என்றும் இல்லாத திருநாளாக உயர்ந்த தோணியில் ஒலித்தது விசேஷத்திலும் விசேஷம் அல்லவா?

‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பார்களே! அதுபோல தான் நான் பத்ரகாளியானேன். யார் கொடுத்த தைரியம் என்று

எனக்கே தெரியவில்லை. இவ்வளவு காலமும் என் மனத்தில் பூட்டியிருந்த ஆவேசத்தைக் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தேன். என் குரல் கணீர் என ஒலித்தது. மஞ்சு கதவருகே நின்றபடி ஹாலில் நடப்பதை உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தாள். நான் சீறிப் பாயும் சிங்கம் போல் முழங்கினேன். “என் வாழ்க்கையைப் பாழாக்கினது போதாதா இப்போ என் மகளோட வாழ்க்கையையும் பாழாக்க முடிவு செய்துவிட்டீங்களா? மத்தவங்களால ஒரு பெண்ணோட வாழ்க்கை வீணாகலாம்ங்க. ஆனால் பெத்த தந்தையே பெண்ணோட வாழ்க்கையைச் சீரழிக்கிறதைப் பார்க்க என்னால நீங்க என்ன சொன்னாலும் முடியாது. சரி நானே மாப்பிள்ளையோட கையையோ காலையோ பிடித்தாவத மஞ்சுவை அவரோட வாழ வைப்பேன்” என ஆவேசத்துடன் கத்தினேன். “ஓ உனக்கு அவ்வளவு துணிச்சலா? கட்டின கணவனோட கௌரவத்தைத் தரைமட்டமாக்க நீ துணிஞ்சிட்டே அப்படித் தானே ஜானகி?” என அவர் கூச்சலிட்டார்.

“கௌரவம் எதுங்க கௌரவம்?” என ஏளனத்துடன் அவரைப் பார்த்தேன். “இந்தக் கௌரவத்தைக் காட்டித் தானே நீங்க இவ்வளவு நாளும் ஆட்டம் போட்டீங்க” என்றபடி ஏதோ ஒன்று ஆட்கொள்ள அவர் சட்டைக் காலரைப் பிடித்துக் குலுக்கிறேன். “சொல்லுங்க. நான் உங்களுக்கு எந்த விதத்துல குறை வைச்சேன்? எனக்கு ஏன் இப்படி ஒரு துரோகத்தைச் செய்தீங்க. மூனு வருஷமா நமக்குக் குழந்தை பிறக்கலையே. அப்போ நீங்க இப்படி செய்திருந்தா. மலடியாச்சேனு சொல்லி நான் ஆறுதல் அடைஞ்சிருப்பேன். ஆனால் மஞ்சுவுக்கு ஏழு வயசு இருக்கும் போது இப்படி ஒரு தப்பைச் செய்து வந்தீங்களே அதற்கு என்னங்க அர்த்தம்?’ என அழுது கொண்டே கேட்டேன்.

“ஜானகி உனக்கு என்ன ஆயிட்டு: ஏன் இப்படிப் பைத்தியம் போல நடந்துக்கறே?” என்றவரை இடைமறித்து, “ஆமாங்க நான் பைத்தியம் தான். மகள் மேல உள்ள பைத்தியம் தான். அது பைத்தியம் இல்லைங்க. பாசம். தாய்ப்பாசம். உங்களுக்கு ஊருல ஒரு சின்ன வீடு இருக்கிறது தெரிஞ்சும் வீட்டை விட்டுப் போகாம யாருகிட்டேயும் இதைப் பற்றி மூச்சு விடாம மூடி மறைச்சேனே அதுக்குக் காரணம் என்னோட தாய்ப்பாசம். நாம பிரியிறதால நம்ம மகள் பாதிச்சிடுவாளே. அவளுடைய எதிர்காலம் வீணாயிடுமேனு நான் உங்களோட வாழ ஒத்துக்கிட்டேன். உங்க கௌரவம் அழியாம இருக்க உங்க தவற்றை மூடி மறைச்சேன். இவ்வளவு வயசாகியும் இதுவரை நம்ம மகளுக்குக் கூட இந்த விஷயம் தெரியாது. எப்ப நீங்க ஊருக்குப் போனாலும் பிசினஸ் பிசினஸ்னு சொல்லி அதை மறைச்சேன். இதெல்லாம் எதுக்குச் செய்தேன்? அவ உங்க மேல வைச்சிருக்கிற மதிப்பைக் கட்டிக் காக்கனும். அவளோட எதிர்காலம் நல்லா அமையனும்கிறதுக்காகத் தான். ஆனா நீங்க அதைக் கூண்டோட அழிக்கப் பார்க்கிறீங்க? வீடு தேடி வந்த மாப்பிள்ளையையும் மஞ்சுவைப் பார்க்க விடாம விரட்டி அடிச்சிட்டீங்க. விவாகரத்து நோட்டீஸ் அனுப்புறேன்னு வீராப்பா சொல்றீங்க. தகப்பன் ஒரு மகளுக்குச் செய்ற காரியமா இது? இவ்வளவுக்கும் மாப்பிள்ளை அப்படி என்ன செய்துட்டாரு? குடிக்கிறாரா? சூதாடுறாரா இல்லை. உங்களை மாதிரி சின்ன வீடு தான் வைச்சியிருக்காரா? வயசான தாயைத் தன் பராமரிப்புல வைச்சிக்கனும்னு ஆசைப்படுறாரு. அது ஒரு குற்றமா? அதுக்கே விவாகரத்து நோட்டீஸ்னா. நீங்க செய்த காரியத்துக்கு நான் உங்களை என்ன செய்திருக்க வேணும்?

நாம வாழ்ந்து அனுபவிச்சிட்டோம். அவங்க வாழ வேண்டியவங்க. உங்க பண வலிமையையும், அவளோட படிப்பறிவையும் காட்டி அவ வாழ்க்கையைப் பாழாக்கிடாதீங்க. நான் படிக்காதவதான். உங்க அளவுக்கோ மஞ்சுவோட அளவுக்கோ என்னால பேசத் தெரியாதுதான்ங்க. ஆனாலும் நானும் ஒரு பெண். எந்தப் பெண்ணும் தன் வாழ்க்கையை இன்னொருத்திக்குப் பங்கு போடவே மாட்டாள். எனக்கு அப்படி ஒரு துரதிஷ்ட நிலை ஏற்பட்டுட்டு. உங்க செயலால மாப்பிள்ளை ஆத்திரப்பட்டு மறுமணம் அப்படி இப்படினு போயிட்டாருனா அப்புறம்….அப்புறம் நான் உங்களை மன்னிக்கவே மாட்டேன் இது சத்தியம்” என அவர் காலில் விழுந்து நான் மன்றாடினேன்.

என் உள்ளத்தில் இருந்து எழுந்த பூகம்பத்தை அவர் எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய ஒவ்வொரு வார்த்தையும் அவரைச் சாட்டையடிபோல் தாக்கியிருக்க வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும். அவர் அப்படியே பட்ட மரம் போல் தரையில் சாய்ந்தார். அவர் செய்கை எனக்குப் பயத்தை ஏற்படுத்தியது. “என்னங்க ஏன் இப்படி இடிஞ்சி போய் உட்கார்ந்துட்டீங்க. நீங்க தைரியமா இருந்தா தான் நாங்க தைரியமா இருக்க முடியும். ம் பேசுங்க. ஏதாவது சொல்லுங்க?’ என என் கணவரின் தாடையைப் பற்றிக் கெஞ்சலுடன் கேட்டேன். “இல்லை ஜானகி, உன் உள்ளத்தில் எவ்வளவு சோகம் இருந்தா இப்படிச் பேசியிருப்பே. என் தவறு இதுவரைக்கும் எனக்குப் புரியாம போயிட்டுப் பார்த்தீயா? வாலிப முறுக்கு. கை நிறைய பணம். உனக்குத் துரோகம் செய்துட்டேன். ஆனா இப்போ அதே தலைகனத்தில் மறுபடியும் தவறு செய்ய இருந்தேன். என் கண்ணைத் திறந்துட்டே. என்னை மன்னிச்சிடு ஜானகி” என அவர் முதன் முறையாக என் மடியில் சாய்ந்து கண்ணீர் விட்டு அழுதது என்னைத் திக்கு முக்காடச் செய்தது. “இல்லைங்க. நான் தான் ஏதேதோ சொல்லி உங்க மனசைப் புண்படுத்திட்டேன்” என நானும் சேர்ந்து அவருடன் அழுதேன். நாங்கள் இருவரும் கண்ணீரால் எங்கள் மனச்சுமையை இறக்கினோம்.

இந்தக் காட்சியைக் கண்ட மஞ்சுவின் கண்கள் குளமாயின. அம்மா எனக்காக – உன் மகளுக்காக நீங்க ரொம்ப பொறுமையா போயிட்டீங்கம்மா. அப்பாவோட இந்தப் பெரிய தவற்றையே மன்னிச்சு ஏத்துக்கிற மனசு கொண்ட உங்களுக்கு பிறந்த நான் என் கணவரை ஏத்துக்க மாட்டேனாம்மா? நிச்சயம் அவர் காலடியில் சரணடைவேன்ம்மா. இது உறுதி’ என மனத்தில் உறுதி பூண்டாள்.

மேல்நாடு சென்று தான் படித்த பட்டக் கல்வி எங்கே? படிப்பு வாசனை இல்லாத என் தாயின் பண்பாட்டுக் கல்வி எங்கே? என நினைக்கும்போது மஞ்சுவுக்கே அவமானமா இருந்தது. “அம்மா” என்ற குரல் எழுப்பிய வண்ணம் அவளுடைய மனமாற்றம் – அவள் பார்வையில் இருந்த தெளிவு அந்த அம்பாளே அவள் மனத்தில் புகுந்து அவள் மனத்தை மாற்றிப்போன்றதோர் உணர்வு எனக்கு ஏற்பட்டது. என்றுமில்லாத மன நிம்மதி பெற்றவளாய் என்னை நாடி வந்த என் மகளை ஆரத்தழுவி ஆனந்தக் கடலில் மூழ்கினேன் நான். நதியைத் தேடி வந்த அலை தாயின் அரவணைப்பில் சங்கமமான நிறைவு மஞ்சுவின் உள்ளத்தில் ஏற்பட்டது.

– தேடிய சொர்க்கம், முதற்பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *