(2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“டிங்… டாங்…”
குறுஞ்செய்தி வந்ததை அறிவித்தது ரிங் டோன். நண்பர் கருணாமூர்த்தியின் செல்லில் இருந்து வந்திருந்தது குறுஞ்செய்தி.
எடுத்துப் பார்த்தார்.
நடராஜனுக்கு ஒரு லட்சம்.
அம்பலவாணனுக்கு எண்பது ஆயிரம்.
ஸ்ரீனிவாசனுக்கு இருபத்தைந்தாயிரம்.
மணவாளனுக்குப் பதினைந்தாயிரம்.
மொத்தம் இரண்டு லட்சத்து இருபதினாயிரம் பிடித்துக் கொண்டு மிச்சத்தைச் செட்டில் செய்தால் போதும்.
‘ஏன் காலங்கார்த்தால இப்படி ஒரு மெசேஜ் அனுப்பியிருக்காரு? ஆபீஸ்ல பாத்துச் சொல்லியிருக்கலாமே? காரணமில்லாம அனுப்ப மாட்டாரு. ஃபோன் போட்டுக் கேட்போம்…’
“ஹலோ, நான் கருணாமூர்த்தி சார் சம்சாரம் பேசறேன்…”
“சார்… இ…ல்லீங்களா?”
“மெசேஜ் பாத்தீங்களா? கணக்கெல்லாம் சரியா இருக்குதானே?”
“கரெக்டா இருக்கும்மா… சார் எங்கே போயி…”
“சார் காலமாயிட்டாரு மிஸ்டர் நடராஜன். அவரை அடக்கம் பண்ண உங்க உதவி தேவை. கொடுத்த கடன் வருமோ வராதோனு மன சஞ்சலம் இல்லாம உதவி செய்ய வசதியா இருக்குமேனு நான்தான் கடன் வாங்கின நாலுபேருக்கும் மெசேஜ் அனுப்பிட்டுப் பிறகு உதவி கேட்டேன்”.
‘இப்படியும் மனிதர்களா?’
ஃபோன் பேசிவிட்டு எதிர் முனை தொடர்பைத் துண்டித்த பிறகும், நடராஜன் சிலையாய் நின்றார்.
– கதிர்’ஸ் ஜூலை, 2023
Super Story