நண்டு வளைகளும் சிங்கக் குகைகளும்

0
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 5,023 
 

ராகுல் ‘தான் ஜுனில் வரட்டுமா?’ என்று அம்மா மீனாக்ஷ¢யிடம் பலமுறை கேட்டுப் பார்த்துவிட்டான். ‘அதெல்லாம் வேண்டாம். சம்பாதிக்கிறதையெல்லாம் ஏர் இந்தியாவுக்கேக் கொடுத்திண்டிருந்தால் எப்படி?’ என்று சலித்தபடி தடுத்துவிட்டாள்.

இந்த முறை அமெரிக்காவுக்குத் திரும்பியதில் இருந்து தொலைபேசும் போதெல்லாம் ஒரே புலம்பல்தான். ‘ராகுல், எனக்கு ஹர்ஷிதாவைப் பார்க்கணும் போலிருக்கு’!

‘இப்படியே நிறைவேறாத ஆசையோட நான் மேலோகம் போய் சேர்ந்துடுவேனா’?

‘வாழ்க்கையே சலிச்சுடுத்து. எதுக்காக சாப்பிட்டு உயிர் வாழணும்? ஒரு வாரமாவே ராத்திரி தூக்கம் வரமாட்டேங்குது. நேத்திக்கு ரொம்ப நெஞ்சு வலி. நீ இல்லாமலேயே சாகணும்னு என் தலையிலே எழுதியிருந்தா அதை யாராலே மாத்தமுடியும்? பிள்ளைன்னதும் ஆனந்தப்படறோம்! இப்படி பதினெட்டு வயசுல பிரியறதுக்குக் குழந்தையே பெத்துக்க வேண்டாம். இந்த ஊரிலே நிறைய சம்பளம் வாங்கி அம்மா, பொண்டாட்டின்னு சந்தோஷமா இருக்கறவா இல்லேங்கறியா? ஒரு வேளை ‘வருஷத்துகொரு முறை வருமானவரி கட்டுவது போல்தான் மாமியாரை தரிசனம் செய்கிறோமே? தினம் அந்த பிடுங்கலோடு குடித்தனமா?’ங்கறது உனதருமை சகதர்மிணி ஷாலினியோட அபிப்ராயமோ’?

அமெரிக்காவிடம் ஈராக்காக துளைக்கப்பட்ட ராகுல் மனம் கலகலத்தது.

ஷாலினியும் “பார்த்தீங்களா! எனக்கெதற்கு கெட்ட பேர்? எனக்கு மட்டும் எங்க அம்மா, அப்பாவோடு குலாவ ஆசையில்லையா? ‘அமெரிக்கா ரிடர்ண்ட்’ ன உங்களுக்கா வேலை கிடைக்காது? உங்க திறமை என்ன! ஒண்ணுமில்லாதவனெல்லாம் வாரிக் கொட்டறான்” எனத் தூண்டினாள்.

ராகுலின் அமெரிக்க கம்பெனி, டி.ர்.பி. எகிறும் டி.வி. சீரியலாய் கலக்கும் நிலை.
இருந்தாலும், வேலையைத் துறந்து ராகுல் இந்தியா கிளம்பினான்.

மீனாக்ஷ¢யின் சந்தோஷம் சொல்லிமுடியாது. ஷாலினி விதவிதமாய் சமைத்துப் போட, ஹர்ஷிதா பாட்டியோடு ஒட்டிக் கொண்டு விளையாட காலம் பறந்தது.

அண்ணன் கோவிந்த் பலமுறை அழைத்தும் மீனாக்ஷ¢ போக மறுத்தாள். அண்ணாவுக்குக் குழந்தை இல்லாதது முக்கிய காரணம். “உன்னோட ஒரு மாமாங்கமா இருந்துட்டேனே! நீதான் வாரா வாரம் வந்துண்டிருக்கியே” என்று மீனாக்ஷ¢ சால்ஜாப்பு சொல்லி மறுத்தாள்.

வங்கி இருப்பு குழந்தை பொம்மைகளின் பேட்டரியாய் கரைந்து கொண்டு வந்ததால், ஷாலினி கிடைத்த வேலையை சட்டென்று ஒப்புக் கொண்டாள். ராகுலும் சென்னையின் நேர்முகத் தேர்வுகளில், தனக்கு டாலரில் கிடைத்த சம்பளத்தை நாற்பத்தெட்டே முக்காலால் பெருக்கி, விகிதாசாரம் பண்ணி கேட்டுக் கொண்டிருந்தான்.

“ராகுல்! பொண்டாட்டி சம்பாத்தியத்தில் சாப்பிடுகிறது உனக்கு வேணா சரியாப்
படலாம்! அவ சொந்தக்காரா தூற்றமாட்டாளா? ‘மாமியாருக்கும் சேர்த்து
சம்பாதிக்கறா’ன்னு அவா சொந்தக்காரா புரளி பேசமாட்டாளா?”, ஷாலினி வேலைக்குப் போனதும் ஒரு நாள் ராகுலிடம் புலம்பினாள் மீனாக்ஷ¢.

“அம்மா… நடக்காததையெல்லாம் நினைச்சு கற்பனை பண்ணிண்டு வருத்தப்பட்டா எப்படி? நான் என்ன வேலை கிடைச்சா போக மாட்டேங்கறேன்! எட்டாயிரம் தரேங்கறான். அமெரிக்காவில் அவ்வளவு வாங்கிட்டு! பதினைஞ்சு, பதினேழு தந்தாக் கூட பரவாயில்லே”, ராகுல் புழுக்கத்தோடுதான் சொன்னான்.

“உங்கம்மாவாலே முடியலே! வயசாச்சில்லையோ? நீங்கதான் ஸ்கூல் விட்டு வந்ததும் ஹர்ஷிதாவுக்கு பிரட் டோஸ்ட் பண்ணி, ஹோம் ஒர்க் பண்ண வைச்சு, யுனிபர்ம் மாத்தி, எல்லாம் செய்யணும். நான் வர எட்டு மணியாகுது. அம்மாவுக்குக் கூட தோசை ஊத்திக் கொடுத்திடுங்க!”, ஷாலினி ராகுலிடம் சொல்லிக் கொண்டிருந்ததை மீனாக்ஷ¢ கேட்டாள்.

“போ பாட்டி! பல்லாங்குழியும், கேரமும் அலுத்துப் போச்சு. நான் ப்ரெண்ட்சோட
டென்னிஸ் ஆடப் போறேன்”. ஒன்பது வயது ஹர்ஷிதாவுக்கு அமெரிக்க
சௌகரியங்களை துறக்க வைத்த கோபம் பாதி; நட்புகள் சுகமாயிருக்கும் வயது
பாதி; இப்போதெல்லாம் பாட்டி பதவி இழந்த எம்.எல்.ஏ கிப் போனாள்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ராகுலின் அண்ணி கர்ப்பமாகி இருந்தாள். உதவிக்கு
அவள் பெற்றோர் வந்திருந்தனர். ராகுலின் அண்ணன் கோவிந்த் வீட்டுக்குத்
திரும்பினால் சரிப்படுமா என்று மீனாக்ஷ¢ யோசித்தாள். வயிற்றுப் பிள்ளைக்காரி.

‘பெட் ரெஸ்ட்’ எடுக்க சொல்லியிருந்தார் மருத்துவர். கால தாமதமான கர்ப்பம்.
சம்பந்தி அம்மாள் சமைத்துப் போட சாப்பிடுவதா என்று மனம் கூசியது.
இப்போதெல்லாம் கோவிந்த் கூப்பிடுவதை நிறுத்திவிட்டான்.

“ராகுல்! பம்பாய், டில்லி, கல்கத்தான்னு எல்லா ஊருக்கும் அப்ளை பண்றியோ?
உனக்கு சாமர்த்தியம் போதலே! நான் ஒரு அவசரக்குடுக்கை! உன்கிட்டே புலம்பி
இருக்கக் கூடாது. முட்டிக்கிட்ட பாறை நொறுங்கிப் போன மாதிரி வந்து நிக்கறே!
சொந்தக்காராளெல்லாம் என்ன பேசிக்கறா தெரியுமா? அமெரிக்காவில பலபேர்
வேலையில்லாம திரும்பி வரா! எனக்கு ஜம்பம்! எனக்காக என் பிள்ளை வேலையை விட்டுட்டு வந்துட்டானுன்னு பீத்திக்கறேங்கிறா. எட்டாயிரம் கிடைச்சாலும் போறும். சும்மா இருக்கறதுக்கு அது தேவலையில்லையா?” என்று கணை தொடுக்க ஆரம்பித்து விட்டாள்.

“ஷாலினி பதினேழாயிரம் வாங்கறா! நான் பதினைஞ்சாவது வாங்கலேன்னா
கேவலமில்லையா? அதுவுந்தவிர இரண்டு பேருமே ராத்திரி லேட்டா வந்தா, அது குழந்தை மனசை பாதிக்காதா? நீ வேலைக்குப் போனா, நான் வேலையை
விட்டுடுவேன்னு ஷாலினி பயமுறுத்தறா! நான் குறைச்ச சம்பளத்துக்கு வேலைக்குப் போனா, அடுத்தபடி இண்டர்வ்யூக்குப் போகும் போது என்னை குடைஞ்செடுத்துடுவான்” என்று தாயாருக்குப் பொறுமையாய் விளக்கினான் ராகுல்.

“அழகாயிருக்கே! புருஷன், பொண்டாட்டி ரெண்டு பேரும் வேலைக்குப் போயி ரெண்டு குழந்தைகளை சமாளிக்கிறவா எத்தனை பேர் வேணும்? ஷாலினி பேச்சு சரியில்லே! நாளைக்கு மாமியாரை கவனிக்க வேலையை விட்டேம்பா! இரண்டு வருஷம் வேலையில்லாம இருந்தாச்சு. நீ கனடா, சிங்கப்பூர் என்று வெளிநாட்டு வேலைக்கே போயிடு” என்றாள் மீனாக்ஷ¢.

ராகுலுக்கு அம்மாவின் பேச்சு கசப்பாயிருந்தது.

“மறுபடி நாலு வருஷம் ஆனதும் புலம்புவே! வெளிநாட்டு ஆளுங்களும், ஏன் உன் தகுதிக்கு, ரெண்டு வருஷம் வேலை கிடைக்கலேன்னு குடைவா. ஹர்ஷிதாவுக்கு கால் பரிட்சை வரப்போறது. இப்ப போய்…”

மீனாக்ஷ¢ இடைமறித்தாள்.

“சும்மா சாக்கு போக்கு சொல்லாதே! வேணாம்டா சாமீ! இனிமே உங்கிட்ட புலம்ப
மாட்டேன். உளுத்துப் போன தூணிலே முட்டிண்டா வீடுதான் இடியும்னு புரிஞ்சுடுத்து.
இன்னும் நாளானா வேலை இல்லாம இருக்கிறது என்னாலேயேன்னு மனசாட்சி
என்னை உறுத்தும். இந்த வருஷம் முடிஞ்சதும் பொண்டாட்டி குழந்தைகளை
கூட்டிக்கோ! நான் உன் அண்ணன்கிட்டயேப் போயிடறேன்”.

மீனாக்ஷ¢ தீர்மானமாக சொன்னதோடு தினமும் புலம்பத் தொடங்கிவிட்டாள். அவளுக்கு எதுவுமே அவசரம்தான்.

ராகுலின் முயற்சி நான்கு மாதத்தில் கனிந்தது. ஆஸ்திரேலியாவில் வேலை. புறப்பட்டான். மீனாக்ஷ¢ நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

“அம்மா! எனக்குப் பிரமோஷன் கிடைத்திருக்கிறது. இருபத்தஞ்சாயிரம் சம்பளம். முன்னே பின்னே தெரியாத இடத்தில பிரசவம் வைச்சுக்கறதான்னு அம்மா, அப்பா கவலைப்படறா. அவருக்கோ கம்பெனி கெஸ்ட் ஹவுஸ் இருக்கு. அதனாலே ராகுல்கிட்டே இப்ப வரலேன்னு சொல்லிட்டேன்!” என்றாள் ஷாலினி, இரண்டாவது குழந்தை¨யின் அறிவிப்போடு.

கோவிந்த் குழந்தைக்கு ஐந்து மாதம் ஆகியிருந்தது. அங்கே புறபட்டுப் போனாள்
மீனாக்ஷ¢.

“அம்மா! மாமனாருக்கு ஆஸ்துமா! கட்டில் வேணும். உனக்கு தரைதானே
சௌகரியப்படும்” என்றான் கோவிந்த்.

பேரன் காஷ், பாட்டியைக் கண்டு அழுதான். சம்பந்தி பர்வதத்துடன் ஒட்டிக்
கொண்டான். நனைந்த மெழுகுவர்த்தியாய்த்தான் மீனாக்ஷ¢ அந்தக் குடும்பத்தில் இருந்தாள். ஊரில் இருந்த நிலத்தையும், வீட்டையும் விற்று மகள் பேரில் வீட்டை வாங்கிக் கொடுத்திருந்த மாமியார், மாமனார், மரியாதையையும், சேவையையும் வாரி வழங்கியதால், மீனாக்ஷ¢ மூன்றாவது மனுஷியாகி இருந்தாள்.

ராகுல் வாழ வேண்டிய வயதில், குடும்பத்தைப் பிரிந்ததற்கும், ஷாலினியின் பதவி மோகத்துக்கும், மீனாக்ஷ¢யின் சுயநல விதை ஊன்றப்பட்டது. இன்று அது முள்மரமாகி அவளைக் குத்துகிறது. பிரிவே நெருக்கமாய் இருந்தது போய், நெருக்கமே பிரிவுக்கு வழிவகுத்தது. கோவிந்த் பாசத்தை அவள் விலக்க, அந்தக் குடும்பத்தில் அவள் தேவையற்றவளானாள்.

– பாஸ்டன் பாலாஜி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *