கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 28, 2019
பார்வையிட்டோர்: 6,160 
 
 

நட்பில் நட்பைப் பார்த்திருக்கலாம். ஏன்…நம்பிக்கை, நயவஞ்சகம், துரோகம்., உதவி, ஒத்தாசை, அன்பு, அரவணைப்புகள்… என்று அனைத்தையும் பார்த்திருக்கலாம். இதையெல்லாம் மீறி… ஒரு உச்சம், உன்னதம், ஒளி, ஒலி, என்று அனைத்துக்கும் மேலாகிய ஒரு தெய்வீகத்தைப் பார்க்க முடியுமா…..?

கதிவரன் என்னுடைய ஆத்மார்;த்தமான நண்பன். பால்ய சினேகிதன், கல்லூரித் தோழன். உயர் குலத்திற்கே உரிய சுண்டினால் ரத்தம் வரும் சிவந்த நிறம். கொஞ்சமாய்ப் பல்லெடுப்பு. சுருட்டை முடி. அறிவு விளங்கும் அழகான முகம். இவன் என் வகுப்புத் தோழனென்றாலும் நான்கு வயது மூத்தவன்.

அவன் அரசு அதிகாரியாய் இருந்து பத்தாண்டுகளுக்கு முன் ஓய்வு. நான் சாதாரண அரசு சிப்பந்தி எழுத்தராய் ஓய்வு.

இருவரும் தோழர்களென்பதால் திருமணம் முடித்தும் நாங்கள் குடும்பமாய் நெருக்கம். ஒருவர் வீட்டிற்கு ஒருவர் போய் வந்து கூடிக் குலாவி அறிமுகம். அவனுக்கு வேலைக்கார மனைவி. ஒரு ஆண் பிள்ளை. எனக்கு வீட்டு மனைவி. இரண்டும் பிள்ளைகள்.

ஒரு நாள் காலை பத்து மணி. சுர்Pரென்ற கோடை வெயில். திடு திப்பென்று கதிரவன் வந்து என் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தினான்.

இவன் இப்படி திடுதி;ப்பென்று வருவது பெரும்பாலும் வழக்கமில்லை. வருவதாய் இருந்தால் என்னைக் கைபேசியில் தொடர்பு கொண்டு எங்கிருக்கிறாய், என்ன செய்கிறாய்… வீட்டிலிருக்கிறாயா என்று விசாரித்து வீட்டில் இருந்தால் மட்டுமே வருவான். இல்லையென்றால் வரமாட்டான். மேலும்…. வயோதிகம், உடல் கோளாறு காரணமாகவும் வரத்துக் குறைவு. எனக்கு இந்த அக்கு தொக்கெல்லாம் கிடையாது. அதனால் நான் அவன் வீட்டிற்குச் சென்று நண்பனை அடிக்கடிப் பார்த்து வருவேன். என் வீட்டிற்கும் அவன் வீட்டிற்கும் பத்து கிலோ மீட்டர் தொலைவு. நான் கிராமம். அவன் நகரம். அப்படிப் பட்டவன் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வருவதென்றால்…..? எனக்குக் கொஞ்சமாய்த் திகைப்பு, திணறல்.

வண்டியை நிறுத்தி உள்ளே வந்தவனை, ” வாடா…” – வரவேற்றேன்.

” வாங்க…” என்று விளித்து என் மனைவி மரியாதை சாவித்திரி நிமித்தம் எழுந்தாள்.

” உட்காருங்க… உட்காருங்க. நான் இவனைச் சும்மா பார்க்க வந்தேன்.” என்று சொல்லி நாங்கள் வழக்கமாக அமரும் அறைக்குள் நுழைந்தான்.

நானும் உள்ளே நுழைந்து என் மனைவிக்குச் சங்கடமில்லாமல் கதவைச் சாத்தி அமர்ந்த அடுத்த விநாடி…கதிரவன் சட்டென்று கண்கலங்கினான். உடனே தவிர்க்க முடியாமல் தாரை தாரையாக கண்ணீர். முகம் கோவைப் பழமாக சிவந்தது.

அவன் இப்படி கலங்கி நான் பார்த்ததே இல்லை. எவ்வளவு கஷ்டநஷ்டமாய் இருந்தாலும் அதிகாரியானவன் எதற்கும் அஞ்சக் கூடாது என்கிற பக்குவத்தில் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் கெத்தாக இருப்பானேத் தவிர இப்படி கலங்கியது கிடையாது. எனவே…..

” என்னடா! என்ன…? ” பதறினேன்.

” ஒ….ஒன்னுமில்லே….” சொன்னானேத் தவிர அவன் வாயிலிருந்து வார்த்தைகள் சரியாக வரவில்லை.

‘ சொல்லு…? ‘ என்று நான் இன்னும் வற்புருத்தினால்…..வார்த்தையின் ஆறுதல் , வலியின் தாக்கம் இன்னும் அதிகரித்து வார்த்தைகள் வராமல் அழுகை பெருகுமேத் தவிர….உள்ளிருப்பது வெளிவராது. மாறாக…எடுத்த அழுகையில் வலியை அதில் கரையவிட்டு ஆசுவாசப்படுத்தினாலொழிய அது அழியாது உள்ளிருப்பது வெளியில் வராது என்கிற அடிப்படை எண்ணத்தில் அமைதியாய் இருந்து ஆளை உற்றுப்பார்த்தேன்.

கதிரவனும் இரண்டு நிமிட அழுகைக்குப் பின் அவனே கைகுட்டை எடுத்து கண்ணீர் துடைத்து மூக்கு சிந்தி…..தலை கவிழ்ந்தான்.

” என்ன விசயம் ? ”

” ஒ…..ன்னுமில்லே…..” சொல்லக் கூச்சப்பட்டு தயக்கம். மறுபடியும் கண்கள் ஓரம் மெலிதாய்க் கசிவு.

” என்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப் போறே. சொல்லு ?! ” இப்போது நான் கொஞ்சம் திடமாகவும் ஆறுதலாகவும் வினவினேன்.

” பை…பையன்….” இழுத்தான்.

” அவனுக்கென்ன…? ”

” கலியாணம் வேண்டாம்ங்குறான்..! ”

” ஏன் ? ”

” எனக்கொன்னும் வயசாகலை. 24 வயசுல என்ன கலியாணம் அடுத்து குழந்தை ? சொல்றான்.”

” நியாயம் தானே ? ”

”அது இல்லேடா. எனக்கு இப்போ வயசு 64. என் மனைவியும் போன வருசம் ஓய்வாகி வீட்ல இருக்காள். ரெண்டு பேருக்குமே இதயக்கோளாறு, சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்புன்னு ஏகப்பட்ட தொந்தரவுகள். மாத்திரை மருந்து எடுத்து என்னதான் வைத்தியம் எடுத்துக்கிட்டாலும் உடலாலும் மனசாலும் நாங்க ரொம்ப தளர்ச்சி. யாராவது ஒருத்தர் கண் மூடுறதுக்குள்ளே….காலதாமாகி கடவுளை வேண்டி வரம் பத்து வருசம் கழிச்சுப் பொறந்த ஒரே பிள்ளைக்கு நல்லது கெட்டது செய்து பார்த்துட்டுப் போகனும்ன்னு ஆசை. ” சொன்னான்.

இதுவும் நியாயம்தான் ! – ”அவன்கிட்ட விவரத்தைச் சொன்னியா ? ”

” சொன்னேன். அப்பா! நீங்க நெனைக்கிறாப்போல சீக்கிரம் சாகமாட்டீங்க. நாலு வருசம் கழிச்சு நான் நன்னா கலியாணம் பண்றேன். சொல்றான். நாலு வருசம்வரை நானோ, உன் அம்மாவே இருக்க சாத்தியமில்லேடான்னு சொல்றதுக்கு…அதுக்கு நான் என்னப்பா செய்ய முடியும். யார் உயிரும் யார் கையிலும் இல்லே. நாளைக்கே நான் போற வழியில விபத்திலோ எதிலோ சாகலாம். இதெல்லாம் உத்தேசித்து உடனே எனக்குத் திருமணம் முடிங்கன்னு சம்மதித்தால் என்னைவிட பைத்தியக்காரன் உலகத்தில் வேற இல்லே. ”

” திருமணம் முடிக்கிறதுக்கும் ஒரு வயசு வேணும்ப்பா. படிச்சு முடிச்சு, சூட்டோட வேலைக்குப் போனதும் தன் கடமையை முடிக்கனும்ன்னு வயோதிகம், நோயைக் காரணம் காட்டி ஒரு பொண்ணைப் பிடிச்சு திருமணத்தை முடித்தால் எனக்கு என்னப்பா தெரியும் ? கண்ணை விட்டு காட்டில் விட்ட கதை. வாழ்க்கை, வேலை எல்லாத்திலும் இருக்கும் நெளிவு சுளிவுகளை ஓரளவுக்குக் கத்துக்கிட்டாதானே அதை வெற்றிகரமா நடத்த முடியும். அதுக்கு எனக்கு கால அவகாசம் வேணாமா ? வேலைக்குப் போறானோ இல்லியோ…இதெல்லாம் பிடிபட ஒரு ஆணுக்கு இருபத்து எட்டு வயசாகும். அதுதான் அவனுக்குத் திருமணம் முடிக்கிற சரியான வயசு. நான் இப்போ சுயசம்பாத்தியம் சம்பாதிக்கிறவன். வாழ்க்கை, வேலையில் எடுத்தடி வைக்கிறவன். இப்போ போய் எனக்கு திருமணம் முடிக்கிறதுன்னா….ரெண்டிலும் கஷ்டப்படுவேன். தயவு செய்து ஒத்திப் போடுங்கன்னு சொல்றான்.” சொல்லி மூச்சு விட்டான்.

” நியாயம்தானே….! ”

” என்னடா நியாயம் நியாயம்ன்னு நீயும் அவனுக்கு வக்காலத்து வாங்குறே ? ”

” நியாயத்தை நியாயம்ன்னுதானே சொல்ல முடியும் ? உனக்காக அதை மாத்தி சொல்றது தப்பில்லையா ? ”

” சரி விடு. அவன் சொல்லை மீறி…. இப்போதான் பொண்ணு கிடைக்கிறது ரொம்ப கஷ்டமாச்சே. நீயே உன் ரெண்டாவது பையனுக்கு ஒன்றரை வருசமாத் தேடி முடிச்சி வெளிநாட்டுக்கு அனுப்புனீயே….. நம்ம குலத்துல அந்தக் கஷ்டம் இன்னும் அதிகம். பெண் தேடி கிடைக்க முடிக்க ரெண்டு வருசம் ஆகும். அதுக்கு இடையில் சீக்கிரமா கிடைச்சாலும் பையனைச் சமாதானம் செய்து திருமணம் முடிக்கலாம் என்கிற எண்ணத்தில் இணைய தளத்தில் ஆறாயிரம் பணத்தைக் கட்டி வரன்; தேடினேன். நம்ம தகுதி தராதரத்துக்கு ஒருத்தி கிடைச்சா. பொண்ணும் புகைப்படத்தில் ரொம்ப அழகாய் இருந்தாள். பையனைச் சமாளிச்சு சம்மதிக்க வைச்சு பொண்ணையும் பார்க்க நான், மனைவி, மகன் போனோம். அங்கேயும் சம்மதம். பேசி முடிச்சு கடைசியில்…. பெண்ணோட அம்மா, திருமணம் முடிச்சதும்… நீங்க ரெண்டு பேரும் எங்கே இருப்பீங்க ? ன்னு என்னையும் என் மனைவியையும் பார்த்துக் கேட்டாள்.

நானும் என் ஆத்துக்காரியும் ஒன்னும் புரியாமல் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து திரு திருன்னு விழிச்சோம்.

விபரம் புரியலையா ? என் பொண்ணுக்கு அக்குத் தொக்கில்லாமல் வாழ ஆசை. ஒத்த பொண்ணு….. சீரும் சிறப்புமாய் எந்தக் குறையுமில்லாமல் செல்லமாய் வளர்த்துட்டோம். இவுங்களைத் தனிக்குடித்தனம் வைச்சு நீங்க ரெண்டு பேரும் வீட்டை விட்டு வெளியில போறதாய் இருந்தால் நாம நாளைக்கே நாள் வைச்சுக்கலாம்.ன்னு அவள் அப்பா சொன்னார்.

கேட்ட நானும் என் மனைவியும் அதிர்வில் தலை கிறுகிறுத்துத் துடிச்சிப் போனோம்.

பெத்தவங்களைத் தூக்கி கடல்ல கடாசிட்டு உங்க பொண்ணை எந்தப் பையனுக்காவது கட்டிவைச்சி சந்தோசமாய் வாழ வைங்க. எங்களுக்குத் தேவையில்லேன்னு வெடுக்குன்னு சொல்லி எழுந்து வெளியே வந்தோம்.

என் பையன் கிருபாவுக்கு அங்கேயே தலைக்கு மேல கோபம். வீட்டுக்கு வந்த அடுத்த விநாடி… இந்த அவமானம் தேவையா?. எனக்கு இப்போ திருமணம் முடிங்கன்னு உங்களைக் கெஞ்சி, கட்டாயப் படுத்தினேனா.? இப்படி அவசரப்பட்டு நீங்க அவமானப்பட்டதுமில்லாமல் என்னையும் அவமானப்பட வைச்சுட்டீங்க! அவனே இவனேன்னு என்னை ஏக வசனத்தில் திட்டிட்டான். ஒத்தப் புள்ள. அப்பா என்கிற வார்த்தை கோணமாட்டான். என்னதான் கோபதாபமாய் இருந்தாலும் பிள்ளைங்க பெத்தவனை இப்படி அடாவடியாய்ப் பேசலாமா.?!. மனசு நொறுங்கிப் போச்சுடா! ” நிறுத்தி விம்மி கலங்கி விழியோரம் வழியும் நீரைத் துடைத்தான்.

பார்க்க எனக்கேப் பாவமாக இருந்தது.

” சரி. விடு ஆத்திரத்தில் அப்படி ஏடாகூடமாய்ப் பேசிட்டான். மனசுல வைச்சுக்காதே!” ஆறுதல் சொன்னேன்.

” முடியாது ஆறுமுகம். உடைஞ்ச என் மனசு ஒட்டாது. இனி ஒருதரம் நானா அவனுக்குப் பெண் பார்க்கிறதா இல்லே. தேவைன்னா அவனா தேடிக்கிடட்டும். இல்லேன்னா கேட்கட்டும். கிருபா பேச்சுக்கு இது தண்டனை! ” என்றான் திடமாய்.

நீர் அடித்து நீர் விலகாது. கோழி மிதித்து குஞ்சு முடமாகாது. கதிரவன் கோபம் கால சக்கரத்தில் மாறும் ! நினைத்து மௌனமாய் நான் இருக்க…..

அன்றைக்கு அழுது சென்ற நண்பன்… இரண்டு வருடங்களில் இறந்த போன மனைவிக்குச் கூட அழவில்லை.

அடுத்த இரண்டு வருடத்தில் மகன் கிருபா திருமணத்தை வெற்றிகரமாய் முடித்து சந்தோசமாக இருந்த கதிரவன்…..அடுத்த இரண்டு நாட்களில்….

”ஆறுமுகம்! வீட்டுக்கு உடனே வர்றீயர் ? ” – கைபேசியில் அழைத்தான்.

” ஏன் ? ”

” வா சொல்றேன். ”

அரை மணியில் சென்றேன்.

அவனைத் தவிர வீட்டில் யாருமில்லை. மாப்பிள்ளை பெண் மறுவீடு பயணம்.

” என்ன சேதி. சொல்? ” அமர்ந்திருந்தவன் அருகில் அமர்ந்தேன்.

”இனி நீ என்னைப் பார்க்கிறதா இருந்தா சுபிக்ஷா முதியோர் இல்லத்துக்கு வந்துடு.” அமைதியாய்ச் சொல்லி அதிர்வெடி வெடித்தான்.

” ஏன்டா ! என்ன சொல்றே ? ” துணுக்குற்றேன்.

” சின்னஞ்சிறுசு ரெண்டும் இந்த வீட்ல எந்தவித சங்கோஜம், சங்கடமில்லாமல் இருக்கனும்ங்குறதுக்காக இந்த ஏற்பாடு, முடிவு.! ” – எதிரிலிருக்கும் என்னை நிமிர்ந்து பார்க்கத் திராணி இல்லாமல் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சொன்னான்.

அதிலேயே விசயம் பொய் புரிந்தது.

” இது தப்பான முடிவு கதிர்! வீட்ல வேற எதுவோ நடந்திருக்கு. உண்மையைச் சொல்லு ? ” கூர்ந்து பார்த்தேன்.

”……..க்கி……..கிருபா காதலிச்சு கலியாணம் முடிச்ச பெண் இந்த கட்டாயத்துக்குத்தான் ஒத்துக்கிட்டாளாம்…..! ”

” என்னடா சொல்றே…?! ”

”………………………”

” அவுங்களைத் தனிக்குடித்தனம் போகச் சொல்ல வேண்டியதுதானே! அதெப்படி உன்னை வீட்டை விட்டுத் துரத்துறது….? ”

” அப்படி போனாலும் நான் தனி. அதுக்கு நானே தணிஞ்சு தனியாப் போறது நல்லதில்லையா ? ! ” குரல் தடித்து வந்தது.

” கதிர்! இது நீயும், உன் மனைவியும் உழைச்ச சம்பாத்தியத்துல கட்டி புள்ளையோட ஒன்னா வாழ்ந்த வீடு. உனக்குச் சொந்தம். முடிவு தப்பு.”

” கிருபா கலியாணத்துக்கு முன்னாடி ஏடாகூடாமா பேசுன ஒன்னே போதும். இனியும் பேச்சு வாங்கி உடையக்கூடாதுன்னுதான் ஒதுங்கறேன். இந்த வீடு, வங்கியில் லட்சம் லட்சமாய் இருக்கிற சம்பாத்தியப் பணம், எங்க ஓய்வூதியத் தொகை எல்லாம் எனக்குப் பிறகு மகனுக்குத்தானே! அதை இப்பவே சந்தோசமாய்க் கொடுத்துட்டுப் போறேன். ஒண்டிக்கட்டையான எனக்கு ஒதுங்கக் கொஞ்சம் இடமும் கையில் கிடைக்கும் ஓய்வூதியமும் போதும்டா.” கதிவரன் தழுதழுத்த குரலில் சொன்னாலும் தெளிவாய்ச் சொன்னான்.

என் மனசுக்கு ரொம்ப கஷ்டம், சங்கடமாய் இருந்தது.

” கதிரவா! ஏதாவது மாத்தி யோசிடா ? ” மெல்ல சொன்னேன்.

” இல்லே ஆறுமுகம். எப்படி புரண்டு புரண்டு யோசிச்சாலும் இதுதான் என் முடிவு. வாழத்தான்டா புள்ளைங்க பெத்தோம். அதுங்க வாழட்டும். நாம வாழ்ந்துட்டோம்.” பெருமூச்சு விட்டான்.

அவன் வலி எனக்குள்ளும் தாக்கம் ! – என்னால் எதுவும் பேச முடியவில்லை.

இதயத்தில் பிசைவு ! வீட்டிற்குச் சென்ற பின்பும் நான் சாதாரணமாகவில்லை.

” வெளியே போய் வந்ததிலிருந்து ஏன் ஒரு மாதிரியாய் இருக்கீங்க.? ” ; மனைவி சாவித்திரி.

சொல்ல முடியவில்லை.

” ஒ…..ஒன்னுமில்லே. அப்புறம் சொல்றேன். ”

இரவு படுத்தும் உறக்கமில்லை. புரண்டு புரண்டு உருளல்.

” நான் என்ன அந்நியமா. மனசுல இருக்கிறதைக் கொட்டுங்க. அப்போதான் தூக்கம் வரும்.”

விசயத்தை உடைத்தேன்.

” பெத்தப்புள்ளைங்களெல்லாமா அப்படி இருக்கும் ?! ” அங்கலாய்த்தாள்.

” அவன் புள்ளை அப்படி சாவித்திரி.”

” நல்லவேளை நம்ம புள்ளைங்க நம்மோடு இல்லே. நாம நல்லா வளர்த்தக் காரணமோ என்னவோ….அதுங்க நல்லவிதமாய் குடும்பம் குடித்தனமாய் வெளிநாட்டுல இன்னைக்கும் நம்மோடு இணக்கமாய் இருக்கு.”

”………………………….”

” அவர் விதி அப்படின்னு விடுங்க. ” என்று சாவித்திரி என்னைச் சமாதானப் படுத்தினாள்.

” இல்லேம்மா. விதியை மாத்தனும். மாத்தி யோசிக்கனும் !….” என்று சொன்ன எனக்குள் பளிச்சென்று திடீர் வெளிச்சம்.

” சாவித்திரி…ஈ…! ” உற்சாகமாய்க் கூவி விறுக்கென்று எழுந்தமர்ந்தேன்.

” என்ன…? ” – அவளும் எழுந்தமர்ந்தாள்.

” என் நண்பன் கதிரவனைக் கடைசிவரை நாம வைச்சி காப்பாத்தினால் என்ன ? ”

ஒரு வினாடி திகைத்து யோசித்த அவள், ”எப்படிங்க…? ”

”அவன் முதியோர் இல்லம் போய் தனியாத்தானே நாதியத்து வாழப்போறான். வேண்டாம்,! நம்மோடு ஒன்னா குடும்பமா இருந்துட்டுப் போறான்.! என்ன குறைச்சல் ? ” ஏறிட்டேன்.
” நல்ல யோசனைதான். சரி வருமா ? ” அவள் முகத்தில்; சிந்தனைக் கசுவுகள்.

” எதை வைச்சு சொல்றே..? ”

” அவர் குலம், ஆச்சாரம், வீட்டுப் பழக்கவழக்கமெல்லாம் வேற. கவுச்சி சாப்பிடாதவர். நம்மோடெல்லாம் வந்து தங்க சம்மதிப்பாரா ? ”

” குலம் கோத்திரம், ஆச்சாரமெல்லாம் பார்த்து காதல், நட்புகள் வர்றதில்லே சாவித்திரி. அப்படி வந்திருந்தால் நாங்கள் ஐம்பது, அறுபது வருடங்களுக்கு மேலாய் நண்பர்களாய் இருந்திருக்க முடியாது. அதுமட்டுமில்லாமல்…நானும் கதிரவனும் உணவகங்களுக்குச் சென்றால் நான் அசைவம் சாப்பிட்டாலும் அவன் முகம் சுளிக்காமல் என் எதிரில் உட்கார்ந்து சைவம் சாப்பிடுவான். முன்னே மாதிரி எனக்கு அசைவம் சாப்பிடும் ஆர்வமே இல்லே. நாமும் சைவத்துக்கு மாறிடலாம்ன்னு நீயும் பலமுறை சொல்லி இருக்கே. எனக்கும் விருப்பம். ஆனாலும் மாறலை. இப்போ மாறிக்கலாம். அதுவும் பிரச்சனை இல்லே. ” என்றேன்.

” சரிதான்.! ” என்று தெளிந்தவள், ” எதுக்கும் நம்ம புள்ளைங்க காதிலும் விசயத்தைப் போடுங்க. ” யோசனை சொன்னாள்.

” ஏன்….எதுக்கு…? ”

” நம்ம நிர்மல், விமல்…. குடும்பமாய் ஒரு வருசத்துக்கு ஒரு முறையோ ரெண்டு வருசத்துக்கு ஒரு முறையோ இங்கே வந்து ஆசையா தங்கிப் போவாங்க. அப்போ இது அவுங்களுக்கு அசவுகரியமாய் இருந்தாலோ இவருக்கு அசவுகரியமா இருந்தாலோ கஷ்டம்தானே…! ”

” அவர்கள்…. வெளிநாட்டு வாழ்க்கை. காலம் முழுக்க இங்கேயே இருக்கப் போறதில்லே. அசவுகரியமெல்லாம் படாது. அப்படியே சவுக்கிய குறைச்சல் பட்டால்…புள்ளைங்க தங்கும் கொஞ்ச காலத்திற்கு மட்டும் கதிரவனை வேற இடத்துக்கு அப்புறப்படுத்தி வைத்து சமாளிக்கலாம். அதிலும் ஒன்னும் கஷ்டமில்லே. புள்ளைங்க நம்ம வார்த்தையையும் தட்டமாட்டாங்க. இருந்தாலும் உன் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து அவர்களையும் ஒரு வார்த்தைக் கேட்போம். தோளுக்கு மேல் வளர்ந்த புள்ளைங்க. தோழர்கள். அது மட்டுமில்லே. நமக்குப் பிற்பாடும் கதிரவனுக்கு அவர்கள் ஆதரவாய் இருக்கனும். மேலும்…குடும்பத்தில் எது நடந்தாலும் புள்ளைங்களைக் கேட்டு முடிவெடுக்கிறது பெத்தவங்களுக்கு நல்லது. கேட்கலாம்.! ” சொல்லி……உடன் கணணி முன் அமர்ந்து இணைய தளத்ததை உயிர்ப்பித்தேன்.

இருவரும் வெவ்வேறு நாடு, திசைகளிலிருந்து குடும்பங்களாக வந்தார்கள்.

நிர்மல், விமல் என்று நான் விசயத்தைச் சொல்ல…..

” உங்க முடிவுல எங்களுக்கு ரொம்ப சந்தோசம்ப்பா. நீங்க இப்படி ஒரு முடிவெடுத்ததுக்காகப் பெருமைப்படுறோம். அம்மாவுக்குச் சங்கடம், ஆட்சேபனை இல்லேன்னா கதிரவன் மாமாவை நம்ம குடும்பத்துல ஒருத்தராய்ச் சேர்த்துக்கிறதுக்கு எங்களுக்குச் சந்தோசத்துக்கு மேல சந்தோசம் !. ” இருவருமே சொல்லி வைத்தது போல் உற்சாகமாய்ச் சொன்னார்கள்.
அதே வேளை சாவித்திரியும் இணையத்தில் புகுந்து, ” எனக்கும் இதுல சங்கடம், ஆட்சேபணைமில்லேப்பா.” பிள்ளளைகளிடம் மலர்ச்சியாகத் தெரிவித்தாள்.

‘ பளீர் பச்சைக் கொடி ! ‘ எனக்குள் மனசு கொண்டாட்டமானது.

பொழுது எப்போது விடியுமென்று காத்திருந்து…விடிந்ததும் ஓடிப்போய் விசயத்தை கதிரவனிடம் சொன்னேன்.

” அப்படியா சொல்றே…?! ” என்று அவன் ஒரு கணம் அசந்து முகத்தில் சிந்தனை ரேகைகளைப் படரவிட்டான்.

நான், அவன் அதிக யோசித்தலுக்கு அவகாசமளிக்காமல்..இடையில் புகுந்து பேசி, கொஞ்சமாய் வற்புருத்தி சம்மதிக்க வைத்தேன்.

கதிரவன் குடும்பத்தில் ஒருவனான். சந்தோசம்.

இந்த சந்தோசம் எங்களுக்கு இரண்டாண்டுகள் முழுதாக நீடிக்கவில்லை. காரணம்….. என் மனைவி திடீரென்று படுத்தப் படுக்கை. எதிர்பாராதவிதமாய்….வாய் கோணி, கைகால் இழுத்து செயலற்று பக்கவாதம். நான் சாவித்திரி பணிவிடைகளுக்கு உதவியாய் இருக்க…..சமையலும் மருத்துவமனையுமாய் கதிரவனுக்கு ரொம்ப கஷ்டம். ஆனாலும் மாறி மாறி இருவரும் உழன்று…ஒரு வழியாக அவளை வீட்டில் கொண்டு வந்து சேர்த்த மறுநாள்….

கதிரவன் அடுப்பில் காபி போட்டுக்கொண்டிருக்க…..

கட்டிலில் தனக்கு உடைமாற்றி சவரட்சனை செய்து கொண்டிருந்த என்னிடம்….

” ஏங்க… ! என் பணிவிடை, சமையல் வேலைக்கெல்லாம் ஒரு ஆளை வைச்சுக்கோங்க. இப்படி ரெண்டு பேரும் கஷ்டப்படுறதைப் பார்க்க எனக்குக் கஷ்டமாய் இருக்கு.” சாவித்திரி சொன்னாள்.

” நான் இப்படி ஆனா….நீ ஆள் வைச்சுப்பியா ? ” திருப்பிக் கேட்டேன்.

” நல்ல கேள்வி ! ” கதிரவன் காபி ஆற்றிக் கொண்டே வந்து விளித்தான்.

” மாட்டேன்.! ” – சாவித்திரி.

” நல்ல பதில்.” எங்கள் அருகில் வந்தான்.

” நீ வைச்சுக்காத போது நான் ஏன் வைச்சுக்கனும்…? ” – மடக்கினேன்.

” நியாயம். ”

”அண்ணா…! ” கேட்ட சாவித்திரி மெல்ல அலறினாள்.

”அவன் சொல்றது நியாயம்தானேம்மா. கடைசிவரை ஒருத்தருக்கொருத்தர் உறுதுணையாய் இருக்கிறதுக்காகத்தான் கலியாணம், காட்சி, தாலிகட்டல் எல்லாம். இடையில் ஒருத்தருக்கு இப்படி ஆனால்….சமாளிச்சுத் தாங்காமல்… தப்பிக்கிறதுக்காக ஆள் வைச்சு சமாளிக்கிறதெல்லாம் தப்பு. குடும்பம் எத்தனை வசதி படைத்ததாய் இருந்தாலும் இப்படி செய்தால் கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்னியோன்யம் விட்டுப் போய் கல்யாணம் தாலி கட்டலுக்கெல்லாம் ஒரு அர்த்தம் இல்லாமல் போகும். இன்றையக் காலமாற்றம்…..இப்படி உதவிக்கு ஆள் வைச்சுக்கிற கலாச்சாரம்….., குழந்தைங்களைப் பெத்தவங்க கவனிக்க முடியாமல் பிரிக்கிறது, பிரியிறதுனாதான் இன்னைக்கு அதுங்களுக்குப் பெத்தங்க சுமை. இவர்களை அவர்கள் முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விடுற கலாச்சார சீரழிவு, கொடுமை. உதாரணத்துக்கு என் பையன்.! நிறுத்தினான்.

” ஆமாம் சாவித்திரி கதிவரன் சொல்றது ரொம்ப சரி. உனக்கு நடக்க வேண்டிய எல்லா சவரட்சனைகளும் எங்களால் குறைவில்லாமல் நடக்கும். நீதான் சங்கோஜம், சங்கடப்படாமல் ;எங்களுக்கு ஒத்துழைக்கனும்.” என்று சொல்லி நண்பனைப் பார்த்தேன்.

அவன், ” ரொம்ப சரி! ” சொல்லி….என் கையில் சாவித்திரிக்குத் தர வேண்டிய காபி டம்ளரைக் கொடுத்தான்.

அவள் அடுத்துப் பேசவில்லை.

அன்றிலிருந்து….. நான் மனைவிக்கு தினம் மல ஜலமெடுத்து, உடல் துடைத்து, உடை மாற்றுவது, சாப்பாடு ஊட்டுவது என்று அனைத்து வேலைகளையும் கர்மமாய் செய்யும் பணியைத் தொடர்ந்தேன்.

கதிரவன் மொத்தக் குத்தகையாய்ச் சமையல் வேலையை பறித்துக் கொண்டு…..என்னை காய் வாங்க, நறுக்க உதவி ஒத்தாசைகளுக்கு வைத்துக் கொண்டு வெளி வேலைகளுக்கும் ஒதுக்கினான்.

இன்றைக்கு மின் இணைப்பு, தொலைபேசிக் கட்டணமெல்லாம் கட்டி ; பன்னிரண்டு மணிக்குத் திரும்பி வீட்டிற்குள் நுழைந்த எனக்கு அதிர்ச்சி.

எதிரில் என் மனைவியின் மலஜல பாத்திரத்தை ஏந்தியபடி கதிரவன்!

” ஏய்ய்ய்….! ” என்னுள் ஏகப்பட்ட அதிர்வுகள். அடுத்த அடி எடுத்து வைக்க முடியாத அசைவு.

” என்ன ஏய்! படுக்கையில் சங்கடமாய் சாவித்திரி, என்னங்க…? ன்னு முணகி உன்னை அழைச்சாள். நான் போய், அவன் இல்லேம்மா. வெளியில போயிருக்கான். என்ன வேணும் சொல் ? கேட்டேன். அவள், ஒ….. ஒன்னுமில்லே அவர் வரட்டும் ! ன்னு சங்கடமாய்ச் சொன்னாள். அவள் சங்கடத்தை உணர்ந்த நான்…..பரவாயில்லே. எதுவாய் இருந்தாலும் என்கிட்ட சொல்லு. செய்யிறேன்! சொன்னேன். அதுக்கு அவள், வயித்தை வலிக்குது அவசரமாய் வெளிக்கு வர்றமாதிரி இருக்கு. மலச்சட்டி வேணும், வைக்கனும் ! சொன்னாள். இவ்வளவுதானே. நான் செய்யிறேன். நீ சங்கடப்படாதே சொல்லி செய்ஞ்சு அவளைச் சுத்தம் செய்து முடித்து எடுத்து வர்றேன்.! ” அவன் ரொம்ப சாதாரணமாகச் சொல்லி நிற்க….

மேலும் நான் சிலையாக அப்படியே நின்றேன்.

” ஆறுமுகம் ! சாவித்திரிக்கு நான் செய்யிறதுல தப்பே இல்லே. அவளுக்கும் உனக்கும் நான் இன்னும் செய்யனும். இதுக்கு மேலும் செய்யனும். அநாதையான என்னை என்னைக்கு நீங்க அழைச்சி வந்து ஆதரவளிச்சீங்களோ… அன்னைக்கே புருசன் பொண்டாட்டி ரெண்டு பேரும் நட்பை மீறி எனக்கு அப்பா அம்மாவாகி…. தெய்வமா உயர்ந்துட்டீங்க. இரு கொட்டிட்டு வர்றேன்!” சொல்லி…. கதிரவன் கொல்லையிலிருக்கும் கழிவறை நோக்கிச் செல்ல….

நான் இன்னும் அப்படியே அதிர்ந்து உதிர்ந்து உடைந்து…..உருக….

இப்போது சொல்லுங்கள்.

நட்பில் நட்பு, நயவஞ்சகம், துரோகம், உதவி, ஒத்தாசை, அன்பு, அரவணைப்புகள், உச்சம், உன்னதம், ஒலி, ஒளி…. என்கிற அனைத்தையும் மீறி தெய்வம், தெய்வீகம் என்ற ஒன்றும் தூக்கலாக இருக்கிறது என்று எனக்குத் தெரிகிறது. உங்களுக்கு…?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *