நட்சத்திர பங்களா

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 20, 2023
பார்வையிட்டோர்: 6,369 
 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8

அவள் தோள்களைப் பற்றி யார் இத்தனை முரட்டுத்தனமாய் உலுக்குவது?

இவள் மாத்திரம் ஒரு புளியமரமாய் இருந்திருப்பின் ஒரு பழம் கிளைகளில் தங்கியிராது.

“ஐயோ… வலிக்குது…” முனகினாள்.

முகத்தில் ‘சில்’லென்று தண்ணீர்த் துளிகள்.

விழிகளைத் திறந்தாள்.

எதிரே அவன்.

இவன் ஏதோ சொல்லவும்தான் மயங்கி விழுந்தோம் என்பது நினைவிற்கு வந்தது.

ஏறக்குறைய எட்டு, பத்து ஆண்டுகளுக்கு முன் இதேபோலொரு அனுபவம் நேர்ந்ததோ…? நினைவு தெளிவாயில்லை.

ஆனால், பாஸ்கர் இந்த ரீதியில் ஏதோ பேச இதேபோல வியர்த்து பதறி நிலவறையின் படிகளேறி ஓடினாளே…

உதடுகளில் கிஸ்மிஸ் பழம் போன்ற உலர்வு…

பேச்சே வரவில்லை.

“இதைக் குடி…” அவளது உதட்டில் தம்ளரின் விளிம்பை பொருத்தினான்.

சில்லென்ற எலுமிச்சம் பழச்சாறு உள்ளிறங்கியது. தலையில் சற்றே தெளிவு.

அனுக்குட்டி விழியெங்கும் பயமாய் நின்றது. இங்கிருந்து முதலில் கிளம்பவேண்டும்.

“சித்தி…”

“ஒண்ணுமில்லை அனு… லேசாய் தலை சுத்துச்சு, அவ்வளவுதான்.”

“அங்கிள் அப்படி உலுக்கலைன்னா நீயும் செத்துப் போயிருப்பியா… சித்தி?”

“சேச்சே… வா, போகலாம். எனக்கு ஒண்ணுமில்லை.”

“கொஞ்ச நேரம் உக்காரு பரணி. நானே கொண்டு போய் விடறேன்” -என்றான் கரிசனமாய்.

இவனிடம் இனியென்ன பேச்சு?

காலை முழுதும் ஒருத்தியோடு சல்லாபித்துவிட்டு, மாலையில் மற்றொருத்தியுடன் சாகசம் பேசும் கயவன்!

அவள் பார்வை இகழ்ந்தது.

“தோ பார் பரணி. நாந்தான் அவசரப்பட்டுட்டேன். யார் என்ன சொன்னா? உனக்கு நான் இந்த வீட்டை வாங்கின விவரம் எப்படி தெரிய வந்துச்சு? பெரியம்மாவின் கடிதம் வந்திருக்கும்னு நினைச்சேன்.”

“இல்லை… ராணி சொன்னா…”

“ஆஹா… அரைகுறை அறிவு ஆபத்தாச்சே! முதல்லே நீ எனக்கு வாடகை தரவேண்டிய நிலையில் இல்லை. ஏன்னா, அந்த ‘அவுட்-ஹவுஸ்’ உன்னது. அதைச் சுற்றியுள்ள 25 சென்ட் நிலம் உன் சொத்து….”

போகும் முன் நிர்மலாக்கா அப்படி ஏதோ சொன்னாள்தான். ஆனால், பரணி அதை உபசார வார்த்தைகளாய்த்தான் எடுத்துக்கொண்டாள்.

“அப்படி ஏதும் பெரியம்மா எங்கிட்ட சொல்லலை.”

“பெரியப்பாவின் உயில் அப்படித்தான் சொல்லுது. இப்ப உடனே உனக்கிந்த விவரங்கள் அவசியமில்லைன்னு யாரும் சொல்லலை. நீயும் அவங்களுக்கு ஒரு மகள் போலத்தான். நான் இங்கே வர்றதை நம்பித்தான் உன்னை இங்கே விட்டுப் போயிருக்காங்க.”

ஏனோ இவளுக்கு அழுகையாய் வந்தது.

“இப்ப ‘ரியல் எஸ்டேட்’டில் அதிகப் பணப்புழக்கம் இல்லை. அப்படியே இருந்தாலும் எனக்கு அந்தப் பட்டண வாழ்க்கையும், அவசர ஓடல், சாடல் எல்லாம் அலுத்திருச்சு.”

தரையிலேயே பார்வை பதித்து விறைப்பாய் அமர்ந்திருந்தாள்.

“இங்கே ஒரு ‘ஐஸ்கிரீம் யூனிட்’ ஆரம்பிக்க திட்டம். இங்கே உற்பத்தி செய்தால் மதுரை தவிர தெற்கு பகுதிகளுக்கு விநியோகம் செய்றது சுலபம். இப்போ டிரை-ஐஸில் பாக்கிங் செய்து ரெயிலில்தான் ஐஸ்கிரீம் கொண்டு வரப்படுது. சிங்கப்பூருக்கு நான் போனது சில மெஷின்களைப் பார்த்து வாங்கத்தான். ராட்தச இயந்திரங்கள். இத்தனை லிட்டர் பாலுக்கு இந்த அளவில் சீனி, முட்டை, எசென்ஸ்னு நாம கணக்காய் சேர்த்தால் போதும். பத்து நிமிடம் உறுமிட்டு சமர்த்தாய் ஐஸ்கிரீமைக் கக்கிடும்…”

“இங்கியா அங்கிள் ஐஸ்கிரீம் செய்யப்போறம்?”

அனுவிற்கு இப்போது பயம் போய் ஆச்சரியம்தான்.

“ஆமா குட்டி. அந்த கிரீமை அகல அலுமினியத் தட்டுகள்ல நிரப்பி, ஐஸ் பெட்டிகள்ல வச்சா ஐஸ்கிரீம் தயார்!”

மறுபடி அவன் பார்வை தன் மீது பதிவதை பரணியால் உணர முடிந்தது.

“தவிர, ‘கோன்’ தயாரிக்கும் சின்ன ‘யூனிட்’ ஒன்றும் போட திட்டம் பரணி. ஐஸ்கிரீமை நிரப்பி சாப்பிட வேபர் கோன். அந்த மெஷின் விலை ஓரிரண்டு லட்சம்தான். இரண்டு வாங்கிப் போட்டா சிறுதொழில் போல சுத்து வட்டாரத்தில இருக்கிற சில குடும்பங்கள் பிழைக்கும்.”

“ம்ம்…”

அவளை ஒரு பொருட்டாய் மதித்து அவன் இத்தனை சொல்ல, கல்லுளித்தனமாய் இருக்க முடியாமல் முனங்கிவைத்தாள்.

“இந்த வீடு பெரியப்பா கட்டினதுன்னாலும், நிலம் என் தாத்தா வாங்கினது. ஆக, பரம்பரைச் சொத்து வேற்றாளுக்குப் போக வேண்டாங்கற எண்ணம் குடும்பத்தில் உண்டு. எனக்கும் இது போல ஆர்வம்… திட்டம் இருந்ததால் என்னால் முடிஞ்ச தொகையை அக்காமாருக்குக் கொடுத்தேன். பெரியப்பா இருக்கும் போதே இந்த முடிவுக்கு வந்தாச்சு…”

விட்டால் வெண்டைக்காயாய் வளவளப்பான் என்று தோன்ற,

“நான் இதையெல்லாம் கேட்கலியே! இந்த வீட்டுக்கு நான் வர்றதைப் பற்றித்தான் குழப்பம். என்ன சொன்னீங்க?” குரலில் காரம் கலந்து கேட்டாள்.

“கொஞ்சம் இரு.”

உள்ளே போனான்.

திரும்பியவன் கையில் ஒரு காகிதம் – முகத்திலும்கூட சற்றே காகித வெளுப்பு.

“இதை வாசி.”

கடிதத்தை இவள் வாசிக்க வாகாய் மடித்து நீட்டினான அது நிச்சயம் பெரியப்பாவின் கையெழுத்துதான்.

சிலந்தி வலை போன்ற ஆங்கில எழுத்துகள். வாசித்தாள்….

“உன்னை நிராதரவாய் தவிக்க விட்டுட்டுப் போக அவங்களுக்கு மனமில்லை. அதனால் இந்த ஏற்பாடு….” விளக்கினான்.

கடைசி காலம்வரை இவளுக்கு ஒரு கூரை இருக்கட்டுமென பெரியவர்கள் ‘அவுட்ஹவுசை’த் தந்தது புரிந்தது.

ஆனால் புருஷன்…? அதுவும் இத்தனை மேல்தட்டு வர்க்கத்தில் ஒருவன்?

ஏழைக்கேற்ற எள் உருண்டை அல்லவா?

அதுவும் அனுவின் மீது பாசம்கொண்ட எளியவன்… கிடைப்பது அரிதுதான்.

ஆக, திருமண எண்ணமே அற்ற தனக்கு… ஏனிந்தச் சோதனை?

அவள் சிந்தனைகள் முகத்தில் பிரதிபலித்தன போலும்…

“நாம இருவரும் ஒத்துப் போவோம்னு அவங்களுக்குத் தோணியிருக்கணும். என் அம்மா – அப்பா இப்ப இல்லை.. அதான் நாம் சேர்ந்து இங்கே வாழறது தங்களுக்கு சந்தோஷம்னு பெரியப்பா எழுதியிருக்காங்க”

சந்தோஷம் இணையும் தம்பதிகளுக்கு அல்லவா வேண்டும்?

பார்க்கும் பெண்ணுடன் எல்லாம் உல்லாச. சல்லாபமாய்ப் பழகும் இவனுடன் இணையும் பெண்ணிற்கு வாழ்வில் சஞ்சலம்தான் மிஞ்சும்.

“நான் வீட்டிற்குப் போறேன்.. மனசு சரியில்லை.” எழுந்து நின்றாள்.

“காரிலே கொண்டு விடறேன்”.

“பிளீஸ் வேணாம் அம்பது அடி வச்சா வீடு “

விலகி வழிவிட்டான்.

வீடு வந்த பிறகுதான் தன் உடம்பின் அயர்ச்சி புரிந்தது.

துணிபோல கால்கள் தொய்ந்தன.

இருந்ததை அனுவிற்குச் சாப்பிட தந்துவிட்டு, சுருண்டு படுத்தாள்.

இரும்பாய் கனத்தது உடம்பு… மனசும்கூட! உள்ளே நூறு வித உணர்வின் கலவைகள். எங்கோ ஒருபுறம் மகிழ்வாய் கூட இருந்தது!

நட்சத்திர பங்களாவில் – பாஸ்கரனின் மனைவியாய்.. வெல்ல நினைப்பு தித்தித்தது…!

ஏன்? புரியவில்லை – இதயத்தில் இன்ப படபடப்பு, ஆனால், மறுகணம் மனசு பல்டி அடித்து, வேறு பலவற்றை இழுத்துக் கிளறியது.

இன்று காற்று பலம்தான்… மழை வரும் போல.

புரண்டு புரண்டு படுத்தாள். கர்வி அர்ச்சனாவையே வீழ்த்தும் பாஸ்கர் தனக்கா?

ஐயாவின் சொச்ச கடிதம் என்னதான் சொன்னது?

திடீரென பெரியவர்கள் இவர்கள் இருவருக்குமாய் ஏன் முடிச்சிடவேணும்?

பல பெரிய இடத்துப் பெண்களே மயங்கி மணமுடிக்க விரும்பக்கூடும் பாஸ்கரன் – பெரியவர்கள் திட்டத்திற்கு ஏன், எப்படி ஒப்புக்கொண்டான்?

ஒருவேளை… ‘பரணியைத் திருமணம் செய்துகொண்டால்தான் பையா உனக்கு நட்சத்திர பங்களா!’ என்று பெரியவர்கள் ஒரு நிபந்தனை போட்டுவிட்டார்களோ?

சொத்தின் மீதுள்ள ஆசையால் அவனும் சம்மதித்திருப்பானோ…?

‘அப்படித்தான் இருக்க வேண்டும்’.

நினைப்பில் உடம்பு கூசியது.

இல்லையென்றால் தனக்கும், அவனுக்கும் இடையே உள்ளது ஏணி – தோணியால் நிரம்பும் சாதாரண இடைவெளியா என்ன?

காற்றில் சன்னல் கதவு படபடத்தது.

காற்று அதிகம் வீசியதில் கொக்கிகள் கழண்டிருந்தன போலும்.

சன்னல்கள் விரியத் பரணிக்கு உறக்கத்தின்போது திறந்திருக்கணும். ஆனால், இப்போது மூடுவதைத் தவிர வேறு வழியில்லை.

எழுந்து சன்னலை நெருங்கியவள், விக்கித்துப் போனாள்.

மொட்டை மரத்தில் ஆடுவது என்ன?

காற்றில் படபடப்பது வெள்ளையாய்… அது என்ன சேலையா.. உருவமா? அல்லது இங்கு இருப்பதாய் தோட்டக்கார தாத்தா அறிவித்த முனியா?

கண்களை இடுக்கினாள்.

மங்கிய நிலவொளியில் எதுவும் தெளிவாக தெரியவில்லை.

வெண்படலம். அருவியாக பொங்கி அடங்கும் கடல் அலையைப் போல… அதைப் பார்த்தபடியே நின்றவளுக்குப் பார்வை மங்கியது.

– தொடரும்…

– ராணிமுத்து மார்ச் 1, 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *