நட்சத்திர பங்களா

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 12, 2023
பார்வையிட்டோர்: 9,259 
 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4

வெந்த இந்த உருளைக் கிழங்கைத் தோலுரித்து மசித்தவளுக்கு உள்ளே நூறு கேள்விக் கொக்கிகள்.

‘வந்திருப்பது யாராய் இருக்கும்?’

நிச்சயம் திருடனில்லை!

கதவு சாவியிட்டு முறையாகத்தான் திறக்கப்பட்டிருந்தது. தவிர, வந்திருப்பவர்கள் அந்தஸ்து உள்ளவர்கள்தாம்.

சாட்சிக்கு வாசலில் நிற்கிறதே பல லட்சம் பெறுமானமுள்ள வாகனம்!

விவரம் கேட்கலாம் என்றால், தோட்டக்கார தாத்தாவைக் காணவில்லை.

எங்கே போனார்?

மணி ஏற்கெனவே நாலு.

பதினைந்து நிமிடங்களில் அனு வீடு திரும்பிவிடும்- ‘மசாலா தோசை’க் கனவுகளுடன்!

எனவே, சமையலில் மும்முரமானாள்.

வேண்டியளவு தோசை மாவைக் கரைத்து தனியே வைத்தவள், மசாலாவைத் தாளித்துவிட்டு முகம் கழுவ ஓடினாள்.

உடம்பைக் கழுவித் துடைத்தால் சுகமாயிருக்கும். தூசும். வியர்வையுமான நசநசப்பு.

ஆனால், அனு வரும் நேரம்… சமையல்கார ராணிகூட ஆச்சரியப்படுவாள்.

“அம்மாக்காரி கூட இத்தினி கரிசனம் காட்டமாட்டாப்பா. சித்திக்காரி ஏன் இப்படி உயிர விடறே? இது அனுவுக்கு…. அதுவும் அனுவுக்குன்னு…? உனக்குன்னும் ஒரு வாழ்க்கை அமையணும்… நினைப்பு வையி..”

“அனு குட்டி நல்லாயிருந்தா அது போதும் ராணி. எனக்காவது விவரம் தெரிஞ்சப்போ அம்மா இருந்தாங்க. பாசமாய் ஒரு அக்கா… அனுவுக்கு நான் மட்டுந்தானே ?”

“பாசங்காட்டு சரி. தியாகம் செய்றேன்னுராத, உனக்கும் புருஷன், புள்ள குட்டி வேணும்”

சமையல்கார ராணியின் வயதைக் கணிக்க முடியாது. இருபத்தி ஐந்திலிருந்து நாற்பதுக்குள் எதுவாகவும் இருக்கலாம்.

கல்யாணம் ஆகவில்லை என்றாலும்.. தங்கை, தம்பிகள் என்று பெருங்குடும்பம்.

தன்னைப் போல மற்றொருத்தியும் வெளிச்சம் தந்துவிட்டு மெழுகாய் கரையக்கூடாதே என்ற கரிசனை உள்ளவள்.

“எனக்கு வர்றவர் அனு மேல இத்தனை பாசங் காட்டுவாரா?”

“ஏங்காட்டணும்? கட்டினவ மேலயே ரெண்டு வருஷம் போனா பாசங்காட்டுற ஆம்பிளைகளைப் பாக்கறது ரேரு! இதுல ‘இது நொச்சு’ங்கற நினைப்புதான வரும் அவனுக்கு’

“வரும்ல? அதான் கல்யாணத்தைப் பத்தியே நான் யோசிக்கறதில்ல ராணி. இது தியாகமில்ல யதார்த்தம் – நடப்பு – அவ்வளவுதான்.”

“ஒண்ணு சொல்வேன். இத்தினி அழகிருக்கே. புருஷன் ரசிச்சு… உன்னைப் போல ரெண்டு பிறக்கட்டும்…. அழகை வீண்பண்ணுவானேன்?”

“சரி… அடிக்கடி நான் என்னைக் கண்ணாடியில் பாத்துக்கறேன்” -சிரிப்பாள் பரணி!

என்ன பெரிய அழகு?

அம்மாவின் அழகு அவளுக்கு உபத்திரவம்தான். அப்பாவிற்குப் பிறகு பலரை ஈர்த்த அழகு அம்மாவைப் பதற வைத்த அழகு. இப்படி நல்லவர்களின் ஆதரவு கிடைக்காவிடில் தங்களது நிலைமை…? பரிதாபமாயும், பயங்கரமாயும் போயிருக்குமே?

அவள் கண்கள் தன்னிச்சையாய் கடிகாரத்திடம் போயின. மணி 4.25. இன்னும் ஏன் அனுவைக் காணவில்லை?

குட்டி ‘பிரிஜ்’லிருந்த சாம்பாரை எடுத்து சூடு பண்ணினாள். இன்று பள்ளியில் ஏதேனும் விசேஷமா? விளையாட்டா?

முன் ‘கேட்’ வரை அரவமே இல்லை. குளித்துவிடுவது. பிறகு பள்ளி வரை ஒருநடை போய் பார்த்து வரலாம் . இல்லையெனில் தாங்காது.

‘விடுவிடு’ என ஆடைகளைக் களைந்தவள், மேலுக்கு நீர் விட்டாள். கடலை மாவு தேய்த்து அலசினாள். மாற்று உடுத்தி முடியைச் சிக்கு பிரித்து, அவசரத்திற்குக் கொண்டையாய் சுழட்டியபோது முன்புறம் பேச்சும், சிரிப்பும் கேட்டன.

முகம் மலர்ந்தது… இது அனுவின் மழலை ஒலி.

ஆனால்… கூடவே சேர்ந்து சிரிக்கும் ஆண் குரல்?

அவள் விரைந்து வீட்டின் கதவைத் திறக்க, ஓடிவந்து கட்டிக்கொண்டது அனு.

“சித்தி… ம்… வாசமா இருக்கீங்க…!’

வெகுபரிச்சயமான அந்த ஆண் முகத்தை அழுந்தப் பார்க்க முடியாமல் கூச்சத்துடன் குனிந்தாள்.

“என்ன பரணி? ‘இதுதான் உன் பாஸ்கர் சித்தப்பா’ன்னு அனுவிற்கு அறிமுகம் செஞ்சு வைக்க வேண்டிய நீயே… இது யாருன்னா எப்படி?”

முறுவலித்தபடி கேட்டவனைப் பார்த்தாள்.

“ஓ…? அந்த முரட்டுப் போக்கிரி பாஸ்கரா…? சரிதான்! ஆனால், அதென்ன சித்தப்பா முறை?”

குழப்பம் தீர்ந்த முகத்தில் சிடுசிடுப்பு ஏறியது.

மவுனமாய் நிற்க முடியாது என்பதால்,

“நீங்கதான் அந்தப் பச்சை காரிலே வந்தீங்களா?” என்று கேட்டு வைத்தாள்.

“நானேதான். பெரியப்பா இறந்த சமயம் நான் சிங்கப்பூரிலே இருந்தேன். வேலை விஷயமான பயணம். ஆக, தகவல் எட்டலை. போன வாரந்தான் சென்னை வந்தேன். விவரம் தெரிஞ்சதும் பமீலாவுக்கு ‘போன்’ போட்டேன்.”

“பெரியம்மா, அக்கா எல்லாரும் பத்திரமாய் போய்ச் சேர்ந்தார்களாமா?”- ஆர்வமாய் கேட்டாள்.

“ஆமா- நல்லபடி ஊர் வந்தோமங்கற விவரத்தை நட்சத்திரா சித்தி உன்கிட்ட சொல்லச் சொன்னாங்க.’

“பெரியம்மா பேசினாங்களா?”

“பேச்சு முழுக்க நீதான். அப்புறம் இந்த அனு குட்டியைப் பத்தின நீள்…ள விசாரணை. பங்களா சாவியை என் ஆபீசிலே விட்டுட்டுப் போயிருந்தாங்க..”

பேச்சோடு அனுவைத் தூக்கிக்கொண்டான். அந்த அகன்ற தோள்களில் சிறுமியைப் பார்த்தது பாந்தமான காட்சி. மனதை நெகிழச் செய்தது.

அத்தான் இருந்திருந்தால் அனுவிற்கு இப்படி அடிக்கடி ஆண் தோளின் சவாரி கிடைத்திருக்கும்.

“எப்படி இருக்காம் அமெரிக்கா?”

“முழு மாற்றம். பெரியம்மாவுக்கும் தேவைதான். உற்சாகமாய் பேசினாங்க. விதவிதமாய் சமைக்கறாங்களாம் – தேங்காய்ப்பால் கூட டின்னிலே வர்றதால நிமிஷமாய் மீன் சொதி தயாரிச்சேன்னு குஷியாய் சொன்னாங்க”

“ஆஹா..”

“எல்லா விவரமும் உனக்கு லெட்டரில் வரும். கம்ப்யூட்டர் இமெயில் எல்லாம் அவங்களுக்குப் பிடிக்கலை. ஆனா, கடிதம் வந்து சேர ரெண்டு வாரமாயிடுதே. அதான் இந்த விவரமெல்லாம் போய்ச் சொல்லுன்னு என்னை முதல்ல துரத்திவிட்டாங்க.’

“என்…என்ன, இதுக்காக வந்தீங்களா?”

கேட்ட பிறகுதான்அசட்டுத்தனம் புரிந்தது.

யாரோ ஒருத்திக்கு சேதி சொல்ல யார் ஐநூறு கிலோ மீட்டர் ஓடிவருவார்கள்?

பேச்சை மாற்றினாள்.

“அனு இன்னும் கை, கால் கழுவிக்கலை.”

குழந்தையைப் பூப்போல இறக்கிவிட்டான். இவனை நிற்க வைத்துவிட்டு, தாங்கள் மட்டும் எப்படி உள்ளே போவது என்ற குழப்பத்தில் பரணி தயங்க – அவன் தயக்கமே இன்றி வீட்டினுள் வந்தான்.

சுவரோரம் கிடந்த பிரம்பு நாற்காலியில் சரிந்து அமர்ந்தான். அச்சிறு இருக்கையில் அவன் ஆறடி நீள உடம்பைப் பார்ப்பது விநோதமாக இருந்தது.

நீள கால்களில் இளநீல ஜீன்ஸும், உயர்தர காலணிகளுமாய். இங்கு வரும் அனைவரும் பெண்கள். தையல் வேலைகளில் உதவ, துணிகளை வாங்கிப்போக என்று.

பெரியம்மா இருந்தவரை மொத்த வியாபாரிகளை பங்களாவிலேயே வைத்துப் பேசி முடித்துவிடுவார். இவள் வீட்டு வாசலில் வைக்கும் ‘பார்சல்’களை எடுத்துக்கொள்ள ஆண்கள் வருவதோடு சரி. உள்ளே யாரும் நுழைவதில்லை.

இத்தனை உரிமையாய் கால் நீட்டி அமர்ந்து தினசரியைப் புரட்டுவதில்லை.

ஆனால், தற்சமயம் இவனைக் கிளப்பவும் வழியில்லையே!

அனுவைச் சுத்தப்படுத்தி, உடை மாற்றி அழைத்து வந்தாள். அவன் அதே இடத்தில்தான் இருந்தான். இவளுக்குள் சங்கட உணர்வு.

அச்சிறு வீட்டை நிறைத்து, மறித்து நந்தி தோரணையில் உட்கார்ந்திருந்தான்.

“எப்.எம். ரேடியோவில் நல்ல பாட்டு வருமே…?” என்றான் இயல்பாய்.

“ம்…”

“போடேன்.”

இதென்ன ஒட்டகக் கதை!

சிறிது இடந்தர அது கூடாரத்துக்குள்ளே முழுசுமாய் நுழைந்து அடைத்தது போல…?

ஆனாலும், பெரியம்மாவின் பிரிய உறவினன் – துரத்த முடியாது.

ரேடியோ குமிழை திருக, பாடல்கள் கிளம்பின. வெகு இனிமைதான். ஆனால், அத்தனையும் காதல் பாடல்கள். அச்சிறு அறையில் அவனோடு இத்தகு பாடல்களைக் கேட்பது அவஸ்தைதான்!

“நா…நான் தோசை போடணும். அனு… டிபனுக்கு.”

“ஓ…யெஸ். நானும் உன் மசால் தோசைக்காகத்தானே காத்திருக்கேன்.”

அடுத்த குண்டைத் தலையில் இறக்கினான் அவன்.

“அ… சரி …”

சமையலறை மிகவும் சிறியது.

அம்மா இங்கு குடியேறியபோது இவ்வீட்டில் ஒரே அறையும், கழிப்பறையும் மட்டும்தானாம்.

‘கூட ரெண்டு சிறு அறை போட்டுத் தந்திடுங்க…. ஒண்ணு சமைக்க, அடுத்தது படுக்கன்னு. இல்லைன்னா சுப்பு எங்கே தையல் மெஷினை போடுவா… உக்காந்து தைப்பா?” என்று பெரியம்மா கட்டித் தந்திருந்த வீடு சவுகர்யம்தான் என்றாலும், அது பெண்கள் புழங்கக்கூடிய அளவில்தான் இருந்தது. இவன் இதைப் பரமாத்மா போல் வியாபித்து நிரப்புகிறானே!

இல்லை… அது தன் பிரமையோ?

“என்ன அனு..? உங்க சித்தி மனசேயில்லாம ‘சரி’ சொல்றாங்க? நீ சாப்பிடக் கூப்பிட்டியேன்னு வந்தேன். பரவாயில்ல. நாங்கொண்டு வந்த வறண்ட ரொட்டியே போதும்.”

சோகமாய் வைத்துக்கொண்டான் முகத்தை.

“ஆமா சித்தி. அங்கிளை நாந்தா கூப்பிட்டேன். ராணிக்கா நாளைக்குதான் வருமாம். தோட்டத் தாத்தா சொன்னாங்க…”

“ஓ… ராணியும் வர்றாளா?”

“பின்ன, தினம் மசாலா தோசைநீ தர முடியுமா? அதான் சமைக்க ராணியை வரச் சொன்னேன். சித்தியும் அப்படித்தான் சொல்லிவிட்டாங்க…”

அப்படியானால் இவன் தங்கல் இங்குதானா?

மூச்சை அடைத்தது.

அவள் அமர்ந்து தைக்கும் தையல்மெஷின் முக்காலியை சமையல் அறைக்குள் இழுத்துப் போட்டுக்கொண்டவன், இரு குவளைகளில் நீர் ஊற்றி வைத்து தயாராய் தட்டைக் கையில் எடுத்துக்கொண்டான்.

‘யாருமில்லாத இந்த அவாந்திரத்தில் ஒட்டகமாய் ஒட்டும் இவனோடு இன்னும் எத்தனை நாட்கள்?’

பெருமூச்செறிந்தபடி தோசைகளை வார்த்தாள் பரணி.

– தொடரும்…

– ராணிமுத்து மார்ச் 1, 2009

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *