(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஆனந்த் – சுகந்தி. அழகான தம்பதிகள். அவர்கள் கையை நீட்டினால் நிற்கக் கூடாத இடத்தில் கூட பேருந்து நின்று அவர்களை ஏற்றிக் கொள்ள ஆசைப்படும். நட்பு கோலமிடும் முகங்கள். தேக்காவில்தான் வாசம். ஒரே மகன் அர்ஜுன். பாலெஸ்டர் ஹில்ஸ் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலை இரண்டு படிக்கிறான். மல்லிக்கீரை அவன். எந்தக் கறியோடும் இயல்பாகச் சேர்ந்துவிடுவான். மணப்பான்.
ஆனந்த் சுகந்திக்கிடையே ஆறு நாட்களாக பனிப்போர். ஊடல் என்று சொன்னாலும் சரிதான். எந்தப் பிரச்சினையும் ஓரிரு நாளில் தீர்வு கண்டுவிடும். முதல் முறையாக இந்தப் பிரச்சினை ஆறு நாட்களாகத் தொடர்கிறது. இன்று ஒரு முடிவு கண்டே ஆகவேண்டும். அப்படி என்னதான் பிரச்சினை?
சுகந்தியின் பழைய தோழி பத்மா. சிங்கையே வேண்டாமென்று கணவன் வரதனுடன் ஊருக்குப் போய்விட்டாள். ஒரு விரலில் புண் வரும்போதுதான் அந்த விரல் எப்படியெல்லாம் நமக்கு வேலை செய்கிறது என்பது புரியும். ஊரிலிருக்கும்போதுதான் சிங்கை எப்படியெல்லாம் நம்மை வளர்த்தது என்பது அவர்களுக்கு விளங்குகிறது. சிங்கை அவர்களை மீண்டும் ஈர்த்தது. ஒரு மாத விடுமுறையில் அவர்கள் வருகிறார்கள். அவர்கள் தங்க ஒரு அறை வேண்டுமாம். எழுநூறு வெள்ளி தருவார்களாம். சுகந்தியே ஒரு அறை கொடுத்தால் ரொம்பச் சந்தோசப்படுவார்களாம். இதுதான் பிரச்சினை.
கொடுக்கவேண்டும் என்கிறாள் சுகந்தி. வேண்டவே வேண்டாம் என்கிறான் ஆனந்த். தெரியாத குடும்பமாய் இருந்தால் பரவாயில்லை. நன்றாக அறிமுகமானவர்கள். தன் சுதந்திரத்துக்கு சுத்தியடி விழும் என்று ஆனந்த் உணர்ந்தான். வரதன் ஒரு கணினிப் பொறியாளர். ஆனந்திடமே ஒரு தடவை 150 வெள்ளி ஏமாற்றப் பார்த்தாராம். இந்த அனுபவங்கள் போதாதா அவன் விரும்பாததற்குக் காரணம்?
சுகந்தி பிடிவாதமாக இருந்தாள். அவள் சொன்னாள்,
‘ஓர் அறையை நிரந்தரமாய் வாடகைக்கு விட பல தடவை நாம் எண்ணியதுண்டு. வாடகைக்கு விட்டால் வீட்டுக்குக் கட்டவேண்டிய காசை மறந்து நிம்மதியாக இருக்கலாம். பகல் முழுதும் இருக்கப்போவது நான். எனக்குத்தான் பிரச்சினை. இதில் உங்களுக்கென்ன வந்தது? நிரந்தரமா? ஒரு மாதம்தானே. இதில் உங்களுக்கு ஏன் இந்த உடும்புக் குணம்?
கொஞ்சம் கொஞ்சமாக இளகினான் ஆனந்த். ஆறு நாள் இடுப்புவலிக்குப் பின் ‘சரி’ என்ற அந்த இரண்டு எழுத்துச் சொல்லைப் பிரசவித்தான்.
அடுத்த நாள் பத்மா வரதன் வந்து சேர்ந்தார்கள். எந்தப் பிரச்சினையும் அவர்களைக் கிள்ளவில்லை.அவர்கள் போக்கில் அவர்கள். இவர்கள் போக்கில் இவர்கள். மகிழ்ச்சியாகவே நாட்கள் ஓடின.
ஒவ்வொரு மாதமும் கடைசி வியாழனில் ஆனந்த் அலுவலகத்தில் ஒரு முக்கியக் கூட்டம். மாலை 2 முதல் 6 மணிவரை நடக்கும். ஆனந்த்துதான் அதை நடத்த வேண்டும். அந்த சமயம் தொலைபேசிகளை ஊமையாக்க வேண்டும். வேறு எந்த ஒரு பிரச்சினையும் அங்கே பேசக்கூடாது. அந்த மாதத்தின் தவறுகள் திருத்தங்கள் எல்லால் ஆராயப்படும். இடைச்செருகலாக இன்னொரு செய்தி.
சுகந்தியின் தம்பி மனைவி பிடோக்கில் இருக்கிறாள். நிறை மாத கர்ப்பிணி. எப்போது வேண்டுமானாலும் தகவல் வரலாம். அன்று வியாழக்கிழமை. சுகந்தியின் தம்பி தொலைபேசியில். பனிக்குடம் வீட்டிலேயே உடைந்து விட்டதாம். உடனை கே கே மருத்துவ மனைக்கு வந்து விட்டார்களாம். இப்போது கே கே யில்தான் எல்லாரும் இருக்கிறார்களாம். வார்டு எண் 46. படுக்கை 13.
கேட்ட மாத்திரத்தில் விரல்களாலேயே தலைமுடி ஒதுக்கி அள்ளி முடித்துக் கொண்டு பள்ளம் நோக்கும் வெள்ளமாக சுகந்தி ஓடினாள். தன் தொலைபேசியை வீட்டிலேயே விட்டுவிட்டாள். பத்மா வரதன் காலையிலேயே வெளியே சென்றுவிட்டார்கள். ஆனந்த் அலுவலகத்தின் மாதாந்திரக் கூட்டத்தில்.
மதியம் 2 மணி. பள்ளிக்கூடத்தில் அர்ஜுனுக்கு திடீரென்று உடல் வெடவெடத்தது. மதிய உணவில் ஏதோ கோளாறு. உடல்வெப்பம் 39 தாண்டி ஓடுகிறது. பள்ளி அலுவலகத்திலேயே தனி அறையில் படுக்க வைக்கப்பட்டான். பள்ளி அலுவலகம் ஆனந்தை தொலைபேசியில் விடாமல் துரத்தியது. எல்லாம் எடுக்கப்படாத அழைப்புகள். சுகந்தியின் தொலைபேசி அனாதையாக வீட்டில் அழுது கொண்டிருக்கிறது. வீட்டுத் தொலைபேசியும் கூட அழுகிறது.
ஏதோ வேலையாக வரதன் வீட்டுக்கு வந்தார். இரண்டு பேசிகளும் விடாமல் கொக்கரிக்கின்றன. எடுத்தார்.
‘ஹலோ’
பள்ளியிலிருந்து அழைக்கிறோம். எங்கே போனீர்கள்? அர்ஜுனுக்கு கடுமையான காய்ச்சல். உடனே வாருங்கள். ஆனந்த் தொலைபேசி ஊமையாகவே தொடர்கிறது. சுகந்தி எங்கே என்றே தெரியாது.
வரதன் உடனே பள்ளிக்கு விரைந்தார். அர்ஜுனை அள்ளிக் கொண்டு டன்டாக்செங் வந்தார். அவசரப் பிரிவு. பனிக்கட்டியால் குளிப்பாட்டினார்கள். வெப்பம் கொஞ்சம் கொஞ்மாக இறங்கியது. பாக்டீரியா கொல்லிகளை ஊசியில் ஏற்றினார்கள். இப்போது அர்ஜுன் கிட்டத்தட்ட சமநிலைக்கு வந்துவிட்டான். நன்றாக தூங்குகிறான்.
மணி 6. ஆனந்து தொலைபேசியைத் திறந்தான். 40 எடுக்கப்படாத அழைப்புகள். அத்தனையும் பள்ளியிலிருந்து. பத்தாவது மாடியிலிருந்து குதிப்பதுபோல் உணர்ந்தான். உடனே பள்ளியின் எண்ணைப் பிதுக்கினான். விபரம் வெப்பமாக இறங்கியது. உடனே வரதனை அழைத்தான். வரதன் எடுத்தார்.
‘ஆசுவாசப் படுத்திக் கொள். இப்போது அர்ஜுன் நன்றாக தூங்குகிறான். டென்டாக்செங்கில் அவசரப் பிரிவில் தான் இருக்கிறான். பதறாமல் வரவும்.’
சூரைக் காற்றாய்ப் பறந்தான் ஆனந்த். ஆனந்த் சுகந்தியைத் தொடர்பு கொண்டான். என்ன காரியம் செய்து விட்டாய் என்று தொடங்கி ஒரே நிமிடத்தில் மொத்த நடப்பையும் சொல்ல நினைத்து தோற்றுப் போய் அழுதான். சுகந்தி உடனே விரைந்தாள்.
அர்ஜுன் இப்போதுதான் கண் விழிக்கிறான். கண்ணீர் பக்கவாட்டில் நழுவி தலையணையை நனைத்தது. வரதன் கையைப் பிடித்து ஆனந்த் குலுங்கினான். தோளைத் தட்டியபடி ஆறுதல் சொன்னார் வரதன். பத்மாவும் வந்து சேர்ந்து கொண்டாள்.
எல்லாக் காரியமும் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படுவ தில்லை. சிலர் விரும்பலாம். சிலர் வெறுக்கலாம். நடக்கவேண்டியது நடந்தே தீரும். அது நன்மையாகத்தான் இருக்கும். மனிதன் எதிர்பார்ப்பது நன்மையாக இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் இறைவன் நடத்துவது நன்மையாகத்தான் இருக்கும்.
பத்மா வரதன் ஏன் சிங்கை வரவேண்டும்? அவர்கள் ஏன் சுகந்தி வீட்டில் தங்கவேண்டும்? வரதனையே பிடிக்காத ஆனந்த் பிறகு ஏன் ஒப்புக் கொள்ள வேண்டும்? வரதன் அந்த நேரம் ஏன் வீட்டுக்கு வரவேண்டும்? அது ஏன் வியாழக்கிழமையாக இருக்க வேண்டும்? அன்றுதானா தம்பி மனவிக்கு பனிக்குடம் உடைய வேண்டும்? இத்தனைக்கும் ஒரே பதில்.
நடப்பதெல்லாம் நன்மைக்கே.
– கட்டை விரல் ஆகட்டும் கல்வி, முதற் பதிப்பு: 2012, தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், சிங்கப்பூர்.