‘‘சரி… நடந்தது நடந்து போச்சு! இனிமே நடக்கறது நல்ல தாவே நடக்கும். நம்பிக்கை யோடு இரு. ஒண்ணு சொல்றேன், நல்லாக் கேட்டுக்கோ. எது ஒண்ணும் நிரந்தரமில்லே. வர்றப்ப யார் கூட வந்தே? நினைச்சுப் பார். நம்ம கூடவே யாரும் இருக்கப் போறதில்லே, கடைசி வரைக்கும்! அவங்க அவங்க காரியம் முடிஞ்சதும் புறப்பட்டுப் போயிட்டே இருக் கிறதுதான் உலக நியதி!
கீதையிலே சொன்னாப்ல, ‘இருக்கிறது இல்லாமல் போவது கிடையாது; இல்லாததுக்கு இருப்புக் கிடையாது!’
நீ இருக்கே; நான் இருக் கேன்; இந்த உலகம் இருக்குகாலா காலத்துக்கு அதுபாட்டுக்கு இருந் துட்டே இருக்கும். எல்லாம் நன்மைக்கேன்னு நினைச்சுக்கோ. பாசம், பந்தம் இதெல்லாம் அஞ்ஞானம். பதிமூணு வருஷம், பதிமூணு வருஷம்னு ஏன் வாய் ஓயாம புலம்பறே? நமக்குக் கொடுப் பினைன்னு ஒண்ணு இருக்கு.
‘தீரன்’னா யார்ரான்னு கேட்டதுக்குக் கிருஷ்ணன் சொல்றார்… தீரமான செயலைச் செய்யறவன் இல்லே, தீரன். எந்தச் சோதனையையும் தைரியமா எதிர்கொண்டு தாங்கிக் கிறானே, அவன்தான் தீரன். தாங்கிக்கிறது மட்டுமில்லே… அடுத்து காரியமும் செய்து கொண்டு போகணும்.
சூரியன் உதிக்காம இருக்கா, இல்லே கேக்கறேன்! பசிக்குச் சாப்பிடாம இருந்துடுவோமோ, சொல்லு? சமைக்க முடிய லேன்னா ஓட்டலுக்குப் போறோமா, இல்லையா? எல்லாத்துக்கும் மாற்று வழி ஒண்ணு வெச்சுட்டுத்தான் சோதனையைக் கொடுப்பான் பகவான். இதுக்கும் ஏதாவது வழி வெச்சிருப்பான்.
இன்னொண்ணையும் நாம கவனிக்கணும். பகவானோட ஓரொரு காரியத்துக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். அவன் என்ன நினைக்கிறானோ, நமக்கு அது புரியறதில்லே!
சரி விடு… பாதியிலே வந்தது பாதியிலே போயிட்டது. விடு கழுதையை! மனசைத் தேத்திக்கோ!
நான் எல்லோருக்கும் சொல்லியாச்சு. ஒவ்வொருத்தரா வந்து, ‘போயிட்டாளாமே, போயிட்டாளாமே?’ன்னு விசாரிக்கிறப்ப உனக்குக் கஷ்டமாத்தானிருக்கும். எனக்கும் உன்னைவிட அதிகக் கஷ்டமா இருக்கு. ஆனா என்ன, நான் வெளியே காட்டிக்கிறதில்லை. ஆம்பிளை கண் கலங்கினா அசிங்கமில்லையா!
இந்தத் தீபாவளி வரைக்குமாவது இருந்திருக்கக் கூடாதான்னு உனக்கு மனசு அடிச்சுக்கறது. அதுக்குள்ளே அவ போயிட்டது துரதிர்ஷ்டம்தான். அவளுக்காக வாங்கி வெச்ச புடவையை அம்மனுக்குச் சாத்திட லாம். அதைப் பார்க்கிறப்பெல்லாம் நீ மனசு உடைஞ்சு போறியே!
அவளோட பூர்வ ஜென்ம புண்ணியத் தாலேதான் அவளுக்கு நம்ம வீட்டுச் சம்பந்தம் ஏற்பட்டிருக்கு. அந்தருணம் தீர்ந்ததும், கணக்கு தீர்த்துக்கொண்டு புறப்பட்டுட்டா. சரி, சரி… எழுந்து ஆகற வேலையைப் பார்! இதுக்கு மேல உன்னை எப்படிச் சமாதானம் பண்றதுன்னு எனக்குத் தெரியலே…’’
அதற்கு மேலும் பொறுக்க முடியாதவளாக, சுள்ளென்று குறுக்கிட்டாள் மனைவி… ‘‘போதும் உங்க சமாதானமும் வேதாந்தமும்! வேலைக்காரி நின்னு பத்து நாளாச்சு, நான் இங்கே ஒண்டியா கிடந்து சாகிறேன்… வேறு ஒருத்தியை ஏற்பாடு பண்ணிக்கொடுங்கன்னு நானும் நாலு நாளா கரடியா கத்தறேன். அதுக்கு வக்கில்லே. வேதாந்தம் பேசறார் வேதாந்தம்! அந்த நேரத்திலே எனக்கு நாலு பத்துப் பாத்திரம் தேய்ச்சுக் கொடுத்தாலும் உபயோகமா இருக்கும்!’’
– 18th ஏப்ரல் 2007