கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 1, 2021
பார்வையிட்டோர்: 3,455 
 

“காத்தாயி! அந்தப் பக்கிரிப் பயல் போற ‘மிடுக்’ கைப் பார்த்தியா? மானத்தைப் பார்த்துக்கிட்டு இல்லே அவன் நடக்கிறான்? என்னதான் வாழ்வு வந்தாலும் இப்படியா?” என்று அதிசயித்தவண்ணம், கையிலிருந்த புகையிலையிலிருந்து கொஞ்சம் திருகி எடுத்து வாய்க்குள் திணித்துக்கொண்டான் கண்ணுச்சாமி.

வீட்டுக்குள் ஏதோ வேலையாயிருந்த காத்தாயி வெளியே வந்து பார்த்தாள். பக்கிரி ராணுவ உடையுடன் ‘கவாத்து நடை’ நடந்து சென்று கொண்டிருந்தான். “ஆமாம், சண்டைக்குப் போய் வந்த சூரர் இல்லே; அப்படித்தான் நடப்பாரு!” என்றாள் காத்தாயி.

“ஊம்……இவன் சண்டைக்குப் போய் என்னத்தைக் கிழிச்சிப்பிட்டாள்? அங்கே இந்த வெள்ளைக்கார சோல் ஜருங்க இருக்கானுங்க பாரு, அவனுங்க பூட்ஸைக் கீட்ஸைத் தொடைச்சுக்கிட்டு இருந்திருப்பான்!”

“நல்லாச் சொன்னே! இருட்டிலே ஈச்ச மரத்தைக் கண்டா, ‘ஐயோ, பிசாசு!’ன்னு அவன் அலறிக்கிட்டு ஓடுவானே!”

“அதுக்கில்லை காத்தாயி, நான் சொல்றது! மனிசன் முன்னே பின்னே இருந்ததைக் கொஞ்சமாச்சும் நிக்னச்சுப் பார்க்க வேணும்?—அந்தப் பயல் சண்டைக்குப் போறதுக்கு முந்தி நம்மைத் தேடி நம்ம வீட்டுக்கு வந்து ஒரு நாளாவது பேசிவிட்டுப் போகாமல் இருந்திருப்பானா?—நீயே சொல்லு!

“ஐயோ! அதை ஏன் கேட்கிறே? இவன்தான் இப்படின்னா, இவன் பெண்டாட்டியிருக்காளே பெரியாத்தா, அவளுக்கு எம்மா ‘ராங்கி’ங்கிறே? தீவாளிக்கு ஒரு பட்டுப் புடவை வாங்கிக் கொடுத்துட்டாலும் கொடுத்துட்டான், அவள் என்னமா ஒடிஞ்சி போறாங்கிறே?—அன்னிக்கு எதுக்கோ அவங்க வீட்டுக்குப் போயிருந்தேன்; நம்மபையனும் கூட வந்திருந்தான். அவங்க பெண்ணு திண்ணைமேலே வாங்கி தச்சிருந்த பட்டாசுக் கட்டை எடுத்துப் பார்த்துக்கிட்டு இருந்தது. நம்ம பையன் ஓடிப் போய் அந்தப் பெண்ணு கையிலேயிருந்த பட்டாசுக் கட்டை வாங்கிப் பார்த்தான். அதிலே என்ன தப்பு? அதைப் பார்த்ததும் அந்த ராங்கிக்காரி திடுதிடுன்னு என்னமா ஓடி வந்து ‘வெடுக்’ குன்னு பிடுங்கிக்கிட்டாங்கிறே? — எனக்கு ஆத்திரமா வந்திச்சு. நம்ம பையன் முதுகிலே நாலு அறை அறைஞ்சு உடனே கூட்டியாந்துட்டேன்!”

“அந்த நாய்ங்க வீட்டுக் கெல்லாம் நாம் போகவே படாதுங்கறேன்!—நீ பேசாம இரு: தர்மராஜா கோயில் உற்சவம்தான் நாளையோடு முடிஞ்சுபோவுதே?—இந்தப் பத்து ராத்திரியும் அம்மாம் பெரிய வெளக்கைத் தூக்கிக்கிட்டு நான் ஏன் தர்மராஜா சாமியோடு ஊரையெல்லாம் சுத்திச் சுத்தி வாரேன் தெரியுமா, காத்தாயி?—எல்லாம் உனக்காகத்தான்! தினம் தினம் கூலியைக்கூட வாங்கிக் கொள்ளாம ராவுத்தரை இல்லே சேர்த்து வைக்கச் சொல்லியிருக்கேன்? நாளைத் திருநாள் முடிஞ்சுதுன்னா, நாளன்றைக்குக் காலையிலே இந்தக் கையிலே முழுசா இருவது ரூவா இருக்கும். அப்புறம் நமக்கென்ன குறைவு, காத்தாயி? நம்ம வீட்டிலும் தீபாவளிதான்! அந்தப் பயல் பெண்டாட்டிக்குப் பட்டுப் புடவை எடுத்துக் கொடுத்தாக்கே, நான் உனக்கு ஒரு பருத்திப் புடவையாச்சும் எடுத்துக் கொடுக்கமாட்டேனா?” என்றான் கண்ணுச்சாமி.

அந்த வருஷம் ஆலங்குடியில் தர்மராஜா கோயில் உற்சவம் ஒரே அல்லோல கல்லோலப் பட்டது. காரணம், யாரோ ஒரு இரும்புக் கடைச் செட்டியார் மேற்படி உற்சவத்தை நடத்தி வைப்பதற்கு ஒப்புக் கொண்டதுதான். அவரைப்பற்றி ஊரில் பலர் பலவிதமாகப் பேசிக் கொண்டார்கள். “ஆமாம், அவன் கள்ள மார்க்கெட்டில் கொள்ளையடித்த காசெல்லாம் கரைய வேண்டாமா?” என்றனர் சிலர். பண்ணிய பாவத்துக்கு ஏதாவது பிராயச் சித்தம் செய்ய வேண்டுமோ, இல்லையோ!” என்றனர் சிலர். யார் எப்படிப் பேசிக்கொண்டாலும் கண்ணுச்சாமியைப் பொறுத்தவரையில் செட்டியார் நல்லவராய்த்தான் இருந்தார். திருவிழாவின்போது ‘காஸ் லைட்’ கடை அல்லாப் பிச்சை ராவுத்தரிடமிருந்து அவனுக்குத் தினசரி கிடைத்து வந்த இரண்டு ரூபாயைத் தவிர செட்டியாரும் மேற் கொண்டு ஒரு ரூபாய் கொடுத்து வந்தார். கண்ணுச்சாமி, செட்டியார் கொடுத்து வந்த ஒரு ரூபாயை வீட்டுச் செலவுக்கு வைத்துக்கொண்டு, அல்லாப் பிச்சை ராவுத்தரின் இரண்டு ரூபாயை அவரிடமே சேர்த்து வைத்தான். பத்து நாள் திருவிழாவும் முடிந்தபிறகு, அந்த இருபது ரூபாயை மொத்தமாக வாங்கித் தீபாவளி கொண்டாடலாமென்பது அவனுடைய எண்ணம்.

அன்று பத்தாவதுநாள். வழக்கம்போல் இரவு பத்து மணிக்குப் பிறகு சுவாமியின் திருவீதி உலா ஆரம்பமாயிற்று. கண்ணுச்சாமி கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு ‘காஸ் லேட்’டைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டான். அவனைப் பின்பற்றி அவனுடன் வந்தவர்களும், தங்கள் தங்கள் தலையில் விளக்குகளைத் தூக்கி வைத்துக் கொண்டனர். எல்லா விளக்குகளும் அல்லாப் பிச்சை ராவுத்தரின் கடையைச் சேர்ந்தவைதான். இந்த விளக்குத் தூக்கும் வேலையில் கண்ணுச்சாமியும், அவனுடைய நண்பனான முனிசாமியும் ‘நிபுணர்கள்’ என்று பட்டம் பெற்றவர்கள். ஆகவே, அவர்கள்தான் எல்லோருக்கும் முன்னால் காட்சியளித்தனர்.

வாணவெடிகளும் வாத்திய கோஷங்களும் முழங்க, சுவாமி மாட வீதியைக் கடந்து தேர் வீதிக்குத் திரும்பிற்று.

ஐயோ! இதென்ன? அந்தத் தெரு முனையிலிருந்த எல்லைக் கல்லைக் கண்ணுச்சாமி ஏன் கவனிக்கவில்லை? அவனுடைய கால்கள் ஏன் அந்தக் கல்லுடன் மோதிக் கொண்டன? பாவம், அவன் தொபுகடீரென்று அப்படியா விழ வேண்டும்?

அவன் தலைமேலிருந்த ‘காஸ் லைட்’…?

ஆயிரமாயிரம் சுக்கல்களாக வேண்டியதுதானே?

அப்படியானால் கழுத்து வவிக்க, கைகள் நோக, கால்கள் கடுக்க, கண்கள் எரிய, வியர்வை துளிர்க்க அவன் விடிய விடிய அந்தப் பத்து நாளும் பாடுபட்டதெல்லாம் வீண்தானா?

நாளைக் காலை பொழுது விடிந்ததும் குழந்தையைத் தூக்கித் தோளின் மேல் வைத்துக் கொண்டு, காத்தாயியுடன் கன குஷியாகக் கடைக்குச் செல்லலாம் என்று இருந்தானே!

இப்போது என்ன செய்வது? எப்படிச் சமாளிப்பது? அல்லாப் பிச்சை ராவுத்தர் இதற்கு என்ன செய்வார்?

சொல்வதென்ன?—இந்தப் பத்து நாளும் விளக்குத் தூக்கிய கூலி இருபது ரூபாயும் போக, மீதிக்கு “என்ன வழி?” என்று கேட்பார்.

“அதையும் தங்களிடமே வேலை செய்து தீர்த்து விடுகிறேன்!” என்றுதான் சொல்லித் தொலைக்க வேண்டும்.

அந்தப் பக்கிரிப் பயலின் முன்னால் நம் வீட்டில் தீபாவளி இல்லாமலா இருப்பது? குழந்தை அந்த அற்பப் பயலின் வீட்டுக்குப் போய்த் தூணைக் கட்டிக் கொண்டா நிற்பது?

அட, கடவுளே! உனக்குத்தானே விளக்குத் தூக்கினேன்?—இந்தக் கும்மிருட்டில் உன் திருமுகத்தை எல்லோரும் கண்டு களிக்கட்டும் என்றுதானே விளக்குத் தூக்கினேன்?—அதற்குப் பலன் இதுதானா?

கண் மூடிக் கண் திறக்கும் நேரத்தில் விழுந்து எழுந்த கண்ணுச்சாமியின் மனம் என்னவெல்லாமோ எண்ணி எண்ணி ஏங்கிற்று. அவனுடன் விளக்கைத் தூக்கிக் கொண்டு வந்த யாரும் அவனைக் கவனிக்கவில்லை—முனிசாமி கூடத்தான்!—எப்படிக் கவனிக்க முடியும்? சுவாமி தூக்குபவர்களோ, கஷ்டம் தெரியாமல் இருப்பதற்காக ‘ஓ’வென்று ஆரவாரம் செய்து கொண்டு மேலே மேலே போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னாலல்லவா ‘காஸ் லைட்’ சுமப்பவர்கள் ஓட்டமும் நடையுமாகச் செல்ல வேண்டியிருக்கிறது?

ஆகவே சிறிது நேரத்திற்கெல்லாம் கண்ணுச்சாமி தன்னந்தனியனாகி விட்டான். அந்த நள்ளிரவில் தள்ளாடிய வண்ணம் எழுந்து, அவன் தன் வீட்டை நோக்கி நடந்தான். வாயிலில் கட்டி வைத்திருந்த மூங்கில் தட்டியை அவிழ்த்து அப்பால் வைத்துவிட்டு உள்ளே நுழைந்தான். அரவம் கேட்டு அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்த காத்தாயி, “யார் அது?” என்று அவனை அதட்டிக் கேட்டாள்.

“நான்தான், காத்தாயி!” என்று கண்களில் நீர் மல்கச் சொன்னான் கண்ணுச்சாமி.

“என்ன, இந்த நேரத்திலேயே வந்துட்டே? பொழுது விடிந்தில்லே வருவேன்னு பார்த்தேன்?”

“நானும் அப்படித்தான் நினைச்சுக்கிட்டுப் போனேன், காத்தாயி! அந்தப் பாழும் தெய்வம்…”

“என்ன, என்ன!—ஏன்? என்ன தடந்தது?” என்று படபடப்புடன் கேட்டுக் கொண்டே, கட்டிச் சுருட்டிக் கொண்டு எழுந்து தன் கணவனுடைய தோள்களைப் பற்றினாள் காத்தாயி.

கண்ணுச்சாமி நடந்ததைச் சொன்னான்.

“இதற்கா இப்படி அழறே? ‘அந்தத் தர்ம ராஜா தலையிலே இடி விழ!’ என்று நினைச்சுக்கிட்டுப் பேசாம இருக்காம!” என்று சொல்லிக் காத்தாயி அவனைத் தேற்றினாள்.

*⁠*⁠*

பொழுது விடிந்தது. “தன்னுடைய கஷ்டம் விடிந்ததா?” என்று எண்ணிக் கொண்டே படுக்கையை விட்டு எழுத்தான் கண்ணுச்சாமி. காலைக் கடன்களை யெல்லாம் முடித்துக் கொண்டு, கவலையுடன் அல்லாப் பிச்சை ராவுத்தரின் கடையை நெருங்கினான்.

நடுங்கிக் கொண்டே ஒரு புறமாக ஒதுங்கி நின்ற அவனை நோக்கி, “என்னா பிள்ளை! ஏன் அங்கிட்டு நிக்கறே? —சும்மா இங்கிட்டு வா!” என்றார் அல்லாப்பிச்சை ராவுத்தர்.

கண்ணுச்சாமி தலையைச் சொறிந்து கொண்டே மெள்ள அவரை நெருங்கி, “ராத்திரி…ராத்திரி…… ராத்திரி…” என்று மேலே ஒன்றும் சொல்ல முடியாமல் மென்று விழுங்கினான்.

“எல்லாம் தெரியும், பிள்ளை! அதுக்கா இப்படி நடுங்கிக் கிட்டு நிக்கிறே?—சே! விட்டுத் தள்ளுங்கிறேன்! உன்னைக் கொண்டு இத்தனை வருஷமா நான் எவ்வளவு பணம் சம்பாதிச்சிருப்பேன்? இப்போ நீ தவறி ஒரு விளக்கை உடைச்சி விட்டதுக்காவ அந்த நஷ்டத்தை உன் தலையிலே கட்டறது அநியாய மில்லே! நானே உடைச்சி விட்டிருந்தேன்—அப்போ என்ன பண்ணியிருப்பேன், பிள்ளை?—அதே நியாயந்தான் உனக்கும்!” என்றார் அல்லாப்பிச்சை ராவுத்தர்.

கண்ணுச்சாமிக்குத் தூக்கி வாரிப் போட்டது. “எசமா!…… நிசமாகவா எசமான்…?” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தான்.

“ஆமாம் பிள்ளை, ஆமாம்! இந்தா, உன்னுடைய பத்து நாள் கூலி இருபது ரூபாய்!—எடுத்துக்கிட்டுச் சந்தோஷமாய்ப் போய் வா!” என்று மலர்ந்த முகத்துடன் இருபது ரூபாயை எடுத்து ராவுத்தர் அவனிடம் கொடுத்தார்.

அதைக் கைகூப்பிப் பெற்றுக் கொண்டு கண்ணுச்சாமி வீடு திரும்பினான். அவன் சொன்ன சேதியைக் கேட்ட காத்தாயி, ஏனோ மூர்ச்சை போட்டுக் கீழே விழுந்து விட்டாள். சிறிது நேரத்திற்குப் பிறகு மூர்ச்சை தெளிந்து எழுந்த அவளையும், குழந்தையையும் கூட்டிக் கொண்டு கடை வீதிக்குச் சென்றான் கண்ணுச்சாமி. தீபாவளிக்கு வேண்டியவற்றை யெல்லாம் ஒன்று விடாமல் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினான்.

மறு நாள் அவர்களுடைய வீட்டில் தீபாவளி ஏக அமர்க்களமாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் அன்று கிருஷ்ண பரமாத்மா அவர்களுடைய உள்ளத்தில் குடி கொண்டிருக்கவில்லை; அல்லாப்பிச்சை ராவுத்தர்தான் குடி கொண்டிருந்தார்!

– ஒரே உரிமை, 1950, வெளியீடு எண்:6 – அக்டோபர் 1985, புத்தகப் பூங்கா, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *