நசிகேதன் யமதர்மனிடம் கேட்டது

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 10, 2024
பார்வையிட்டோர்: 781 
 
 

எத்தனையோ முறை உனக்குத் தெரிவிக்க நான் முயன்றேன்! ஆனால் நீ அனுமதிக்கவில்லை. என்னுடைய எல்லா ஆரம்பங்களும் தப்பாக இருந்தன. மனப்பூர்வமென்று காட்டிக்கொள்ளாமல் மிகவும் சுலபமாக உன்னால் விஷயத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முடிந்தது. நீ விளையாட்டுப் பிள்ளையைப்போல நடந்துகொண்டாய்.

நான் துளசி மாலை அணிந்தபோதும் நீ சந்தேகிக்கவில்லை. வேண்டிய உதவிகள் செய்து தந்தாய். நீதான் துளசி மணிகளைத் தேர்ந்தெடுத்தாய். கோவிலில் கொடுத்துப் பூஜையில் வைக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தினாய். இரகசியமாக நீ மற்றவர்களிடம் சொன்னாய்!

அவருக்குக் கொஞ்சம் பக்தி வந்திருக்கிறது.!

பக்தி! எத்தனை சுலபமாக நீ முடிவு செய்துவிட்டாய்; எனக்கு இப் போதாவது பக்தியின் வாடை அடித்ததில் நீ பெருமை யடைந்ததாகப் பட்டது. அது நாலுபேருக்குத் தெரியவேண்டும். அதற்குமேல் உனக்கு எதுவுமில்லை அதில். எனது அடிமனத்தில் கூடம் அமைத்திருந்தது என்னவென்று எனக்கே தெரிந்திருக்கவில்லை. அடுத்த ஆசிரமத்தைத் தேடுகின்ற பயணத்தில் ஒரு பார்வையாளராகவாவது உன்னைக் காண நான் ஆசையுற்றேன். நான் தாடி விட்டதையும் முடி வளர்த்தியதையும், எப்போதாவது கஞ்சா அடிப்பதும் மயக்க மருந்து சாப்பிடுவதும் போல இளைய தலைமுறையைப் பின்பற்றும் பைத்தியக்காரச் செயல்களாக நீ கருதினாய். துளசி மாலை அதனுடைய ஒரு பகுதியே என்று நீ நம்பினாய். இளமைக்கும் பிரம்மச்சரியத்திற்கும் திரும்பிப் போக நான் வேட்கையுடனிருந்திருப்பேன். ஆனாலும் எத்தனை குரூரமாயிருந்தது உன்னுடைய தப்பெண்ணம்!

இப்போதும் உன்னுடன் கோவிலுக்குப் போனால் நான் ஆளில்லாத மூலையில் பார்வையாளனைப்போல நிற்பதைத்தானே நீ பார்த்திருக்கிறாய்? நீ மறைந்திருந்து பார்ப்பதுண்டு. இவர் என்ன எடுக்கிறார்? கைகூப்பி வணங்குகிறாரோ? கடவுளை வணங்குவதும் பிரசாதம் வாங்குவதும் எப்போதும் நீயேதான் அல்லவா? ஆனால், இப்போது உன்னோடு கோவிலுக்கு வர நான் சோம்பல் அடைவதில்லை. என் நெற்றியில் சந்தனமிட இன்று உனக்குத் தைரியமுண்டு. நான் தடுக்கமாட்டேன் என்று உனக்குத் தெரியும். இம் மாற்றம் எப்படி வந்ததென்று நீ விசாரிக்கவில்லை. என்று முதல் ஆரம்பித்ததென்றும் உனக்குத் தெரியாது. அதை நீ அறிந்திருந்தால் நமக்கு ஒருவரையொருவர் புரிந்திருக்கும். பார்க்கலாம் கொஞ்சநாள் போகட்டும்.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு, நமக்குத் திருமணம் ஆன மூன்றாம் நாள் உன்னோடு ஆலயத்திற்கு வர நான் தயங்கியபோது உன்னுடைய தமக்கை கூறியது இன்று என் நினைவிற்கு வருகிறது. நாம் நமக்குள் மிகவும் நெருங்கியதும், சேர்ந்தே இறக்கச் சபதம் செய்ததும் அப் போதுதானே? ஆனாலும் உன்னுடைய கடவுளைக் கும்பிட நான் உடன் வரவில்லை. நீ அதற்காக வேதனையுற்றுக் கண்ணீர்விட்டாய். நான் பணியவில்லை. காலம் கழியட்டும் – வழிக்கு வருவேனென்று நீ எதிர் பார்த்தாய். உன் புத்திசாலியான தமக்கை அதை ஆமோதித்தாள்.

காலம் நீண்டது. உனக்குக் குழந்தை பிறந்தது. வளர்ந்தது. நீ அவளுக்கு சந்தியா கீர்த்தனைகள் பாராயணஞ் செய்யக் கற்றுக் கொடுத்தாய். அவள் அவற்றை உரக்க ராகம் போட்டுச் சொன்னாள். நான் தடுக்கவில்லை. ஆனாலும் நமக்குள் பிணக்குண்டாயிற்றல்லவா? நீ மறுக்க வேண்டாம்.

முதலிலெல்லாம் நான் கடவுளைப் பரிகாசம் செய்யும்போது நீ முகத்தைத் தூக்கிக் கொள்வாய். வெளிப்படையான வேதனையுடன் நீ சொல்வாய்:

கடவுளைக் கும்பிடவேண்டாம். ஆனால் நிந்திக்காமலிருங்கள்!

என்னையறியாமலேயே அது என்னைத் தூண்டிவிடும். நான் உணர்ச்சி பொங்க இளம்பருவத்து அனுபவங்களைச் சொல்லிக்கொண்டிருப்பேன்.

தேவியை ஜானி வசை பொழிந்தான். பிறகென்ன ஆயிற்று?

யார் அந்த வீர புருஷன் ஜானி? நீ நிந்தை கலந்த என் முறையிலேயே திருப்பிக் கேட்டாய்.

இளம்பருவத் தோழன். சட்டைக்காரப் பையன்.

நான்கதை சொன்னேன்:

அம்மாவுடன் எல்லாச் சனிக்கிழமைகளிலும் அம்மன் கோவிலுக்குக் கும்பிடப்-போவதுண்டு. துர்க்கை கோபக்காரி. போய் வணங்கவில்லையானால் தொற்றுநோய் வருத்திவிடுவாள். ஆனால், ஒரு நாள் ஜானி கோவில் பிரகாரத்தில் நிக்கரை அவிழ்த்தான்.

எனக்குக் கேட்க வேண்டியதில்லை.

ஆனாலும் நான் தொடர்ந்தேன்.

நானும் ஜானியும் கோவில் மைதானத்தில் போட்டி போட்டுக் கொண்டு புறாக்களைப் பறக்கவிட்டுக்கொண்டிருந்தோம். என்னுடைய புறா எழும்பி வெண்மேகத்திற்கு மேலே மறைந்தபோது ஜானியின் ஆண் புள்ளிப்புறா கரணமடித்து அம்மன் கோவிலின் மொட்டை மாடியில் இறங்கியது. அவனுக்குக் கோபம் தாங்க முடியவிலலை. அவனுடைய கையில் கவண் இருந்தது. அவன் கல்லைத் தொடுத்து அடித்தது துர்க்கையின் கருங்கல் சிலையை நோக்கி.

ஜானி அன்று சொன்ன கெட்ட வார்த்தைகளை நான் உனக்குத் தெரிவிக்கவில்லை. அவை நீ கேட்க லாயக்கற்றவை. தேவி கேட்டிருப்பாள். நிச்சயம். ஏனென்றால் வைசூரி போட்டது எனக்குத்தான். இருபத்தெட்டாம் நாள் என்னைக் குளிப்பாட்டி சலவை செய்த உடையுடுத்தி செண்டை மேளங்களுடன் அம்மன் கோவிலைச் சுற்றி நடக்க வைத்தபோது ஜானிக்கு அது பெரிய தமாஷாகத் தோன்றியது.

சமீப காலமாக நான் அதிக நேரம் வாசிப்பதோ அறையில் ஏகாந்தமாக தாடி மயிரைத் தடவிக்கொண்டு மேலே பார்த்துக் கொண்டிருப்பதோ உன்னைத் கோபத்திற்குள்ளாக்குகிறது. நீ புத்தகத்தை பலமாகப் பறித்து வாங்கி ஒளித்து வைத்திருக்கிறாய். அதற்கு நான் எதிர்ப்புத் தெரிவித்ததில்லை. ஏனென்றால், எனக்குத் தெரியும்; வாசிக்கும் கட்டம் கடந்தாயிற்று. இனி, வாசிப்பினால் மனத்தை மலர்த்திக்கொள்ள முடியுமென நான் நம்பவில்லை. ஆத்மாவிற்கு விமோசனம் வேண்டும். இனிமேல் பிறக்கக்கூடாது. நான் நீண்ட மௌனத்தில் இருக்கும்போது நீ என்னை அதிருப்தியுடன் பார்த்துக் கேட்டாய்.

என்ன?

நான் சாதாரணமாகப் பதில் சொல்வதில்லை. அது உன்னை இன்னும் அதிகம் எரிச்சலூட்டும். என் மௌனமும், உனக்குத் தெரியாமல் உன்னை நான் பார்ப்பதுவும் பொறுக்காமல் போகும்போது நீ உரக்க ரேடியோ வைப்பாய். பாத்திரங்களைக் கீழே போட்டு உடைப்பாய். ஆனால், எப்போதாவது உன் செய்கையால் நான் கோபமடைவதை நீ பார்த்திருக்கிறாயா?

மதிற்சுவருக்குள்ளிருந்த பங்களாவில் ஜானி வசித்துவந்தான். தரையில் வெண்கற்கள் பாவியிருந்தன. சுவரில் கிறிஸ்துதேவன் சுந்தர ரூபனாக இருந்தான். முள் கிரீடம்கூடப் பார்க்க அழகாக இருந்தது. எல்லா ஞாயிற்றுக்கிழமையும் ஜானி மாதா கோவிலுக்குப் போகும் போது பான்டும் கோட்டும் அணிந்திருப்பான். அவனுக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது. அவனுடைய மூத்த சகோதரி டயானாவும் கூட இருப்பாள். அவர்கள் டாடி சிங்கப்பூரிலிருந்து அனுப்பியிருந்த விலையுயர்ந்த உடைகளைத்தான் டயானா உடுத்துவது வழக்கம். அவ்வளவு நல்ல துணியை நான் கண்டதில்லை.

நான் ஜானியைத் தேடி பங்களாவுக்குப் போகும்போது டயானா என்னை உள்ளே அழைத்துச் சென்று தட்டு நிறையக் கேக் வெட்டித் தருவாள். பெரும்பாலும் அவள் கண்ணாடி முன் அமர்ந்திருப்பாள். மேஜையில் நிறைய அலங்காரப் பொருட்கள் நிறைந்திருக்கும். அறையில் குட்டிக்கூரா பவுடர் , வாஸலின் இவற்றின் வாசனைஇருக்கும். சில சமயம் டயானா என்னைக் கூப்பிட்டு நகங்களில் பாலீஷும் கன்னத்தில் யூடிகோலனும் தடவி விடுவாள். ஜானியை அங்கெங்கும் பார்க்க முடியாது. அவளோடு சேர்ந்திருக்க நான் ஆசையுடனிருந்தேன். டயானா தலைமயிருக்கு எண்ணெய் தேய்ப்பதில்லை. தோள் வரையிலும் மட்டுமே எட்டும் மயிரை பிரஷ்ஷால் நீவிக் கொண்டே அவள் என்னிடம் சொல்வாள்:

அந்த ரிப்பனைக் கொஞ்சம் எடு.

உள்ளறையிலிருந்து நிற்காத பேச்சு கேட்டுக்கொண்டேயிருக்கும். அது ஜானியின் மம்மியென்று எனக்குத் தெரிந்தது. அவளுடைய அறை அடைத்திருக்கும். யாரோடு அவள் பேசிக்கொண்டிருக்கிறாள்? வேறு எவருடைய சப்தமும் கேட்பதில்லை. ஆனாலும் ஒரு தடவை கூட அவள் பேச்சை நிறுத்தவில்லை. அவள் மாதா கோவிலுக்குப் போவதை நான் பார்த்ததில்லை. சிலசமயம் மாதா கோவில் பாதிரி பங்களாவுக்கு வருவதுண்டு. ஜானியின் மம்மியை ஒரு முறை பார்க்க நான் விரும்பினேன்.

ஒரு நாள் வெளியே யாரையும்; காணவில்லை. நான் உரக்க ஜானியைக் கூப்பிட்டேன். திடீரென்று டயானா ஓடி வருவதைப் பார்த்தேன். நான் சொல்ல முடியாத குழப்பமடைந்தேன். பக்கத்தில் வந்ததும்தான் அது டயானா அல்லவென்று தெரிந்தது. அவர்களுக்குள் அத்தனை ஒற்றுமையிருந்தது. அவள் என்னுடைய தாடையைப் பிடித்துத் தாங்கி என்னவோ கேட்டாள். எனக்குப் புரியவில்லை. அவள் சிரித்தவாறே என் கன்னத்தில் கிள்ளினாள். அப்படி நிற்கையில் அவளுடைய கண்களில் பயத்தையும், திடீரென அவள் பின் வாங்குவதையும் நான் கண்டேன். நான் திரும்பிப் பார்த்தபோது டயானா கனத்த துடைப்பத்தை ஓங்கிக்கொண்டு என் பின்னால் நிற்பதைக் கண்டேன். அம்மா பணிவான சிறுமியைப்போல திறந்த வாயிலுக்குள் நகர்ந்தாள். டயானா அவளை அறையினுள் தள்ளிக் கதவையடைத்துக்கொண்டு திரும்பிவந்து என்னிடம் சொன்னாள்:

பையா, யாரிடமும் சொல்லக்கூடாது, என்ன?

அடுத்த மூன்றாம் நாள் மஞ்சள் உடுத்துத் தலையை மொட்டையடித்த பிக்ஷு என்னைக் காண வந்தபோது நீ கவனித்தாய். இரவு முழுவதும் நீ உறக்கம் கலைந்திருந்தாய். காலையில் பிக்ஷு போனபோது நீ கேட்டாய்:

யார் அது?

பிக்ஷு.

அது எனக்குத் தெரியும்.

அவ்வளவு சட்டென்று கோபம் வந்துவிடுகிறது உனக்கு இப்போதில்லாம்! ஒருகால் எல்லாம் திறந்து சொல்லவேண்டிய தகுந்த சந்தர்ப்பமாயிருந்தது அது. ஆனால் விஷயத்தைப் புரிந்து கொள்ளும் பொறுமை உன் முகத்தில் காணப்படவில்லை. ஏன் நான் கிரந்த பாராயணத்தை நிறுத்திவிட்டு குருவைத் தேடுகிறேன்? எது மோட்சம் தரும் மூர்த்தி?

ஒரு தடவை திட்டமிட்டு உன்னிடம் எல்லாம் திறந்து சொல்வதற்காக நான் தயாரானேன். நீ அன்று வழக்கத்தைவிட உற்சாகமாக இருந்தாய். சரியான சந்தர்ப்பமென்று நான் எதிர்பார்த்தேன். சொல்ல வேண்டிய வாக்கியங்களையும் தொடக்கத்தையும் நான் தயாராக்கி வைத்திருந்தேன்.

ரிஷிகேசம். நான் ஆரம்பித்தேன்.

ரிஷிகேசத்திலென்ன? நீ உடனேயே என் ஆரம்பத்திற்குக் கடிவாள மிட்டாய்.

நான் தவறு செய்துவிட்டேன். உன் எதிர்ச்செயல் என்னவாக இருக்குமென்று அறியாமலேயே நான் சம்பாஷணையைத் தொடங்கினேன். ஓட்டம் தடைப்பட்டதால் நான் குழந்தையைப் போல உரக்கப் பிடிவாதம் செய்தேன்!

எனக்கு சன்யாசியாக வேண்டும்.

நீ வெடித்துச் சிரித்தாய்.

ஓஹோ, அதற்கென்ன? நானும் வருகிறேன். நீ அதில் பெரும் வேடிக்கை கண்டிருக்க வேண்டும். ஊறிப்பொங்கும் சிரிப்பில் நீ என்னை முட்டாளாக்கினாய்.

ஆனால் நான் நம்முடைய படுக்கையறைக்குக் காவி நிறம் அடித்தபோது உனக்கு அது மிகவும் பிடித்திருந்தது.

அழகான நிறம்! நீ சொன்னாய்.

நீ உன் சிநேகிதிகளை அழைத்து வந்து அதன் அழகைக் காட்டினாய். அவர்கள் அந் நிறத்தை ஒத்துக்கொண்டனர். படுக்கையறைக்கு ஏற்ற நிறம். நீ பெருமையடைந்தாய்.

அவர் தன்னந்தனியாகத் தேர்ந்தெடுத்தது. நீ அவர்களுக்குத்தெரிவித்தாய்.

ஆனால் உன் படுக்கையை அறையிலிருந்து எடுத்து நீக்க நான் விரும்பியபோது நீ என்ன சொன்னாய்?

இந்த ஆச்ரமத்தை நான் துறக்கிறேன். நீண்ட யாத்திரை, வெளியே கிளம்புகையில் நீ தடுக்காதே. வேதத்தில் இரு பாகங்களுண்டு. கர்மமும் அறிவும். கர்மம் முழுதும் நிர்வகித்துவிட்டேன் என்று நான் சொல்லிக்கொள்ளவில்லை. நம்முடைய மகளுக்கு இப்போதுதான் வயதாகிக்கொண்டிருக்கிறது. நான் விடைபெற வேண்டிய காரியமில்லை. அறிவைத் தேடவேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் இறங்கித் திரும்பப் போகிறேன். நசிகேதன் யமனிடம் கேட்டதைத்தான் எனக்கும் கேட்கவும் படிக்கவும் வேண்டும்.

தவற்றுக்கும் சரிக்கும் அப்பால் என்ன? குறிக்கோளுக்கும் பலனுக்கும் பிறகு? கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் அப்புறம் என்ன?

– பட்டத்து விள கருணாகரன்

– சமீபத்திய மலையாளச் சிறுகதைகள், முதற் பதிப்பு: 1980, தொகுப்பு: எம்.முகுந்தன், மொழிபெயர்ப்பு: ம.இராஜாராம், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.

நன்றி: https://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *