நகர மோகம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 2, 2024
பார்வையிட்டோர்: 1,011 
 
 

பட்டு விரித்தது போல் பசுமையான புல்வெளி. படுத்ததும் உறக்கம் வசப்படுத்தியது. அலுவலகத்தில் தினமும் மன உளைச்சலுக்கு ஆளாகி சோர்ந்து போயிருந்த உடலுக்கும், மனதுக்கும் உற்சாகம் தரும் வகையில் அமைந்திருந்தது கிராமத்துத்தோட்டம்.

நகர வாழ்வின் நாகரீக மோகம் உடலுக்கு பலவிதமான நோயைக்கொடுக்கும் என்பதையறிந்திருந்தும் திரும்பத்திரும்ப அவ்வாழ்க்கையிலேயே மூழ்கி வாழும் நிலையை தனது குழந்தைகளின் வாழ்வில் மாற்றி விட வேண்டுமென அடிக்கடி தனது மனைவி கயாவிடம் கூறுவான் சாந்தன்‌.

“நாம என்னங்க செய்ய முடியும்…? குழந்தைகளைப்படிக்க அனுப்பாம கிராமத்து தோட்டத்து வீடான இங்கே குடி இருந்துட்டு தோட்டத்து வேலை செய்யச்சொல்லவா முடியும்…? அப்படிச்செஞ்சா சமுதாயத்துல நம்மள பைத்தியகாரங்கன்னு தான் சொல்லுவாங்க நாகரீகத்து மேல பைத்தியமா இருக்கறவங்க. நேத்தைக்கு என்னப்பார்த்த பெரியம்மா பொண்ணு உன் வீட்டுக்காரருக்கு சம்பாதிக்கவே தெரியலை. லஞ்சங்கிஞ்சம் வாங்கியாவது டவுன்ல சொந்தமா ஒரு பிளாட் வாங்கியிருக்கலாம். உத்தமனா இருந்தா கடைசில கிராமத்துல ஆடு மேய்க்கத்தாம்போகோணும்னு பேசறா…. நீங்களும் வேதாந்தம் பேசீட்டு ஆத்துல ஒரு காலு, மேட்டுல ஒரு காலுன்னு வெச்சிட்டிருக்கீங்க….” என மனைவி ஆதங்கத்துடன் சொன்ன போது மாதச்சம்பளம் வாங்கி நகர  வாழ்வில் சேமிக்க முடியாத நிலையை எண்ணி வருந்தினாலும், கை சுத்தம் அவசியம் எனக்கருதுவதில் பிடிவாதமாக இருப்பதால் வேலையில் சேர்ந்து இருபது வருடத்தில் தனக்குக்கீழ் வேலை பார்ப்பவர்களின் வாழ்க்கைத்தரத்தின் அளவுக்கு கூட உயராத தன் நிலை ஒரு வகையில் பெயரை மட்டும் நல்லவன் என உயர்த்தியிருந்தது பெருமை கொள்ள வைத்தது.

“மத்தவங்க என்ன சொல்லுவாங்க…? மத்தவங்க என்ன சொல்லுவாங்க….? ன்னு பேசறியே….? யாரந்த மத்தவங்க….? நம்ம வாழ்க்கை எப்படியிருக்கனம்னு நாம தான் முடிவு பண்ணோணும். நம்மாள எவ்வளவு தூக்க முடியும்னு நமக்குத்தாந்தெரியும். நமக்குப்புடிச்சமாதிரிதான் வாழ முடியும். நீ எப்படி வாழ்ந்தாலும் அதப்பார்த்து குறை சொல்லறவங்க சொல்லத்தான் செய்வாங்க. நம்ம வாழ்க்கைய இன்னொருத்தரால வாழ முடியாது. நம்மால இன்னொருத்தரு வாழ்க்கைய வாழ முடியாது. சில பேரு எத்தன சொத்து வந்தாலும் சந்தோசமில்லாம இருப்பாங்க. பல பேரு இருக்கிறத வெச்சு சந்தோசமா வாழ்ந்திடுவாங்க. வசதி எவ்வளவுங்கிறது முக்கியமில்லை. வாழ்க்கை சந்தோசமா போகுதாங்கிறது தான் முக்கியம். என்னப்பொருத்த வரைக்கும் ஒடம்பு ஆரோக்கியம்தான் முதல் சொத்து. ஆரோக்யத்தக்கெடுக்கிற ஆடம்பரம் வேண்டாங்கிறேன். அதனால தான் கடன் வாங்கி நகரத்துல வீடு வாங்கிறத விட நம்ம முன்னோர்கள் மாதிரி கடன் வாங்காம கிராமத்து தோட்டத்து வீட்ல வாழ்ந்துக்கலாம். வேலைக்குப்போகிற வரைக்கும் வாடகை வீட்ல இருந்துக்கலாம். இருபத்தஞ்சு ரூபாய வெச்சுட்டு எழுபத்தஞ்சு கடன வாங்கினா கடன அடைக்க முடியாது. எழுபத்தஞ்சு இருந்தா இருபத்தஞ்சு வாங்கலாம். என்னால லஞ்சம் வாங்க முடியாது. வாங்கற சம்பளத்துல சிக்கனமா வாழ்ந்துக்கிறேன்….” என சொன்னதை மனைவியின் நகர மோகம் ஏற்காததை அவளது முகத்தை வைத்தே கண்டு பிடித்தான் சாந்தன்.

“நீங்க அரசாங்க வேலைக்கு போறதுனால எப்படியாவது டவுன்ல வீடு வாங்கிடுவீங்கங்கிற நம்பிக்கைலதான் நான் உங்களை கல்யாணம் பண்ணவே சம்மதிச்சேன். இல்லேன்னா கிராமத்துல இருக்கிற வீட்டுக்கு சம்மதிச்சிருக்கவே மாட்டேன்‌. என் கூட படிச்சவங்க ஒரு வீட்டுக்கு நாலு வீடு வாங்கிட்டு கிரக பிரவேசத்துக்கு கூப்பிடற போது என்ற மனசு என்ன பாடு படுதுன்னு உங்களுக்கு எங்கே தெரியப்போகுது…. அதெல்லாம் மனசுன்னு ஒன்னு இருக்கிறவங்களுக்குத்தான் தெரியும். நல்லவரா இருக்கறத விட வல்லவரா இருக்கிறவரைத்தான் எல்லாருக்கும் புடிக்கும். என்னோட பிரண்டு மாயாவோட ஹஸ்பெண்டு கை நிறைய பல வழில சம்பாதிக்கிறாரு. அவளுக்கு தனியா காரு, டிரைவருன்னு போட்டு வைர நகையா போட்டுட்டு பங்ஸனுக்கு வாரதப்பார்த்தா எனக்கு செத்துப்போகலான்னு இருக்குங்க….”

“இப்ப நீ பேசறதக்கேட்டு எனக்குந்தா செத்துப்போகலான்னு இருக்கு….” என பேசிய கணவனை புழுவாகப்பார்த்தாள் மாயா.

“என்னோட அழகுக்கு பல பெரிய பணக்காரங்க வந்து பொண்ணு கேட்டாங்க. சொந்தம் விட்டுப்போகக்கூடாதுன்னு சோம்பேறி உங்களக்கட்டிகிட்டேம்பாருங்க. எதுலயுமே விருப்பமில்லை. ஆர்வமில்லை. குழந்தைங்க பொறந்துட்டா மட்டும் போதுமா…?” இந்த வார்த்தை மனைவியிடமிருந்து வருமென நினைத்தே பார்க்கவில்லை. ‘நீ ஒரு ஆம்பிள்ளை தானா…?’ என நறுக்கெனக்கேட்பதாகப்பட்டது.

காலையில் எழுந்தவுடன் குழந்தைகளைக்குளிப்பாட்டி ,உணவு கொடுத்து பள்ளிக்கு கொண்டு போய் விடும் வேலையைச்சரியாகத்தான் செய்கிறோம். மனைவிக்கு உடல் நிலை சரியில்லாத போது சமைக்கவும் செய்கிறோம். வேலைப்பளு காரணமாக இரவு வந்தவுடன் இருப்பதை உண்டு விட்டு உறங்கி விடுகிறோம். ருசியான, சூடான உணவு வேண்டுமென ஒரு நாளும் கேட்டதில்லை. வேலைக்குச்செல்லாமல், குடித்து விட்டு மனைவியை அடிக்கும் கணவனைக்கூட அனுசரித்து வாழும் பெண்களும் இருக்கிறார்கள். நம் வேலையை நூறு சதவீதம் சரியாகச்செய்ததால் பதவி உயர்வு கிடைத்தது. மேலதிகாரிகளிடத்தில் பாராட்டு கிடைத்தது. அதைப்பற்றிக்கூட ஆர்வமாக கேட்காமல், மகிழ்ச்சிப்படாமல் முகத்தை திருப்பிக்கொள்கிறாளே….’ மனைவியின் செயல் புதிராக இருந்தது.

‘குடும்ப முன்னேற்றத்துக்காகத்தானே ஓடிக்கொண்டே இருக்கிறோம். வாடகை வீடென்றாலும் வசதியான மூன்று படுக்கையறை கொண்ட தனி வீடு. சொந்தக்கார் வாங்கா விட்டாலும் செல்லவேண்டிய இடங்களுக்கு டாக்ஸி, சிறந்த பள்ளியில் இரண்டு குழந்தைகளும் படிக்கும் நிலை, மாமனார் வீட்டினரிடம் இது வரை ஒரு ரூபாய் கூட வரதட்சிணைகேட்காத நற்குணம்… இவ்வளவு நல்லவனுக்கா இவ்வளவு சோதனை….? பெண்களைப்புரிந்து கொள்ள முடியவில்லையே….’ என நினைத்து வருந்தியவன் சோர்வில் உறங்கிப்போனான்.

கிராமத்து வீட்டு வாசலில் படுத்திருந்தவனுக்கு வெயில் சுளீர் என முகத்தில் பட எழுந்தவன் தோட்டத்து வீட்டு கயிற்றுக்கட்டிலுக்கு நன்றி சொன்னான். ஒரு வாரம் விடுமுறைக்கு கிராமத்துக்கு வந்ததில் மனைவியின் பேச்சு தவிர அனைத்துமே திருப்தியளித்தது. சிற்றுண்டிக்கு அம்மா கம்மங்கூலில் வெங்காயம் வெட்டிப்போட்டு மோர் கலந்து கொடுத்ததை வாங்கி திருப்தியாகக்குடித்தான். குழந்தைகளும் மனைவியும் பூரி செய்து சாப்பிட்டனர். டாக்ஸியை அழைத்தான். வந்ததும் புறப்பட்டனர்.

‘மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றாமல் குடும்ப வாழ்வில் நிம்மதி கிடைக்கப்போவதில்லை. நான்கு மாதங்களாக கிடப்பில் போட்டிருக்கும் நான்கு பைல்களை நகர்த்தினால் ஒரு ப்ளாட் வாங்க அட்வான்ஸ் கொடுத்து விடலாம். பாக்கி பணத்துக்கு கடன் கிடைக்கும். மாதம் ஒரு பைல் கடனை அடைத்து விடும்’ எனும் மன ஓட்டத்தில் துணிந்தவன் பைல்களை ஒவ்வொன்றாகப்புரட்டினான். அதில் உள்ள அலை பேசி எண்களை தனது போனில் தட்டும் போது மனைவியிடமிருந்து போன் வந்தது.

“ஏங்க நீங்க லஞ்சம் வாங்க வேண்டாம். நாம வாடகை வீட்லயே இருந்திடலாம். மாயாவோட ஹஸ்பெண்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்காரங்க இன்னைக்கு காலைல அரஸ்ட் பண்ணிட்டாங்க. மாயா நம்ம வீட்ல தான் இருக்கிறா. சூசைடு பண்ணிக்கப்போறதா வேற சொல்லறா. அதப்பார்த்தே எனக்கு நிம்மதி போச்சு. இதுவே நீங்களா இருந்தா…. நெனைக்கவே நடுக்கமா இருக்குது. நீங்க எப்பவும் போல உங்களுக்கு சரின்னு படறத மட்டும் செய்யுங்க. நமக்கு வசதிய விட நிம்மதிதான் வேணும்….” என மனம் மாறிய மனைவி கயா கூறியதைக்கேட்டு பிரச்சினைக்குரிய பைல்களை மகிழ்ச்சியுடன் மூடி வைத்தான் சாந்தன். 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *