கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 28, 2017
பார்வையிட்டோர்: 12,955 
 

“நேற்று ஏண்டி நீ நடைப் பயிற்சிக்கு வரலே?….” பூங்காவுக்குள் நுழைந்ததும் தோழிகள் மாற்றி மாற்றி சித்ராவைக் கேள்வி கேட்டார்கள்!

“ அதை ஏண்டி கேட்கிறே?…எல்லாக் கடைகளிலும் ஆடி தள்ளுபடி போட்டிருங்காங்க! முதலிலேயே போனா நல்ல புடவைகளா ‘செலக்ட்’ பண்ணலாம்!…அதுதான் கடைவீதிக்குப் போயிட்டேன்!”

“ அப்ப நீ எத்தனை புடவை எடுத்தே?……அதைச் சொல்லு முதலிலே!….” என்றார்கள் தோழிகள் எல்லோரும் ஆர்வத்துடன்.

“…….மூணு புடவைகள் எடுத்திட்டேன்… அற்புதமா அமைச்சிட்டது!…நீங்க எல்லாம் போகும் பொழுது எங்க வீட்டிற்கு வந்து பார்த்திட்டுப் போங்க!..”

நடைப் பயிற்சியை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு, தோழிகள் ரம்யா, மேனகா, கோகிலா எல்லோரும் ஆர்வத்தோடு, பக்கத்துத் தெருவில் இருக்கும் சித்ரா வீட்டிற்கு, அவளோடு புறப்பட்டுச் சென்றார்கள்.

தோழிகளை உட்கார வைத்து, சித்ரா ஆர்வமாக அவள் விரும்பி எடுத்த பச்சையில் மயிலிறகு போட்ட பட்டுப் புடவை, சிவப்புக் கலரில் தாமரை மொட்டுப் போட்ட சில்க் காட்டன் புடவை, மற்றும் அவள் ஆசை ஆசையாக பல கடைகள் ஏறி கண்டுப் பிடித்த எம்.எஸ்.புளுவில் அன்னப் பட்சி போட்ட காஞ்சிப் பட்டுப் புடவை எல்லாவற்றையும் எடுத்து தோழிகளிடம் காட்டினாள்.

“ ஆகா!…..நீல நிறத்தில் அன்னப் பட்சி அற்புதம்!….” என்று வியந்து முதலில் பாராட்டியவள் ரம்யா.

“ இங்கே பாருங்கடி!…இந்த .பச்சை நிறத்தில் மயிலறகு பார்டரில் கொடுத்திருக்கும் ஜரிகை மின்னுவதை!….”.என்று ரசித்துச் சொன்னாள் மேனகா.

“ அதையெல்லாம் விடுங்கடி!….. இந்த சிவப்புக் கலர் புடவை தான் சூப்பர்!….தாமரை மொட்டு எவ்வளவு அழகாக இருக்கு பாரு!.. “ என்று மற்றவர்களுக்கு அந்தப் புடவையை விரித்துக் காட்டினாள் கோகிலா!

அதற்குள் ஒரு தட்டில் இனிப்பு, ஒரு தட்டில் காரம், இன்னொரு தட்டில் சுடச் சுட பில்டர் காப்பி என்று கொண்டு வந்து தோழிகளை உபசரித்தாள் சித்ரா.

டிபனை முடித்து விட்டு அடுத்த தெருவில் இருக்கும் அவரவர் வீட்டிற்கு கிளம்பினார்கள் தோழிகள்.

போகும் வழியில் முதலில் ஆரம்பித்தவள் ரம்யா தான்! “ இந்தக் காலத்தில் போய் நீல நிறத்தில் அன்னப் பட்சி!…சுத்தப் பட்டிக்காட்டுத் தனம்!….” என்று தன் கருத்தைச் சொன்னாள்.

“ ஆமாண்டி!…சித்ராவுக்கு கொஞ்சம் கூட ரசனையை இல்லை!…சிவப்புக் கலரில் போய் யாராவது புடவை எடுப்பார்களா?…ஒரு வேளை மேல் மருவத்தூர் போக எடுத்தாளோ என்னவோ?…” என்று சொல்லி விட்டுச் சிரித்தாள் கோகிலா!

“ அதை விட கொடுமை இந்தப் பச்சைநிறம்!..இந்த பச்சை நிறமே பொதுவாக மங்கிப் போய் விடுகிறது!..இந்த லட்சணத்தில் கூத்தாடிகளைப் போல் ஜரிகை வேறு மின்னுகிறது!…சகிக்கலை!…” என்றாள் மேனகா.

பெண்களின் புடவைகள் விமர்சனமே நேரில் ஒரு மாதிரி, வெளியில் போய் ஒரு மாதிரி தான் இருக்குமோ?

– 11-11-16

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *