தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 9, 2021
பார்வையிட்டோர்: 10,275 
 

மனைவியில்லாமல் கைக்குழந்தையை மட்டும் எடுத்துக் கொண்டு சாயங்காலத்தில் மாமா வீட்டுக்குப் போவதில் மனதுக்குள் இவ்வளவு சந்தோஷம் புரளும் என்று சுந்தரத்துக்குத் தெரியாது.

குழந்தையைத் தூக்கிக்கொண்டு புறப்படுவதற்கு முன்னால்கூட ஓரளவு இந்தச் சந்தோஷத்தின் ஆரம்பம் அவனுக்குள் இருந்தது. ‘ஒத்தையில தூக்கிக்கிட்டு போனால் அழாதா?’ என்று மனைவி ஒரு மாற்றுகவுனைக் குழந்தைக்கு மாட்டிவிட்டுக் கொண்டே அவனைக் கேட்டபோது, ‘அதெல்லாம் அழாது. நீதான் புள்ளையைத் தேடி அழப்போறே’ என்று சொன்னான். ‘ஆமா, அழுதாங்க’ என்று மனைவி செல்லமாகச் சிரித்தாள். இந்தச் செல்லமான பிரியமான சிரிப்பு குழந்தை வந்த பிறகு அவளுக்கு நிறைய வருகிறது. கிட்டத்தட்ட இதே பிரியமும் சந்தோஷமுமான முகம் அவளுக்கு அம்மா வீடு போகும் போதெல்லாம் வரும்.

பஸ்ஸில் உட்கார்ந்து கண்டக்டரிடம் ஒரு இருபது காசு டிக்கட் கேட்கும்போதும் கேட்ட பிறகும் எல்லாம், அவனுடைய குழந்தைக்கு முதல் டிக்கட் தரப்போகிற கண்டக்டர் யாராக இருக்கும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. இன்னும் இரண்டு வருடத்தில் எடுக்கப்போகிற அந்த மூன்றாவது பஸ் டிக்கட்டின் நிறத்தைக்கூட அவன் தீர்மானித்துக் கொண்டிருந்தான். அவனுடைய பெண்ணிற்கு முதல் டிக்கெட்டைக் கிழித்துக் கொடுக்கப் போகிற கண்டக்டருடைய பெயரைத் தெரிந்து அவருக்கு இனிப்புக் கொடுக்க வேண்டும். இப்படியெல்லாம் நினைப்பதுகூடச் சந்தோஷமாக இருந்தது. மடியில் உட்கார்ந்து கொண்டு முன்பக்கத்து சீட்டில் இருப்பவரின் சட்டைக்காலரை, காதை எல்லாம் விரலால் தொட முயன்று கொண்டிருந்த குழந்தையின் கையை எடுத்து முத்திக் கொண்டான்.

ஸ்டாப்பில் இறங்கி மாமா வீட்டைப் பார்க்க நடக்க நடக்க -ஓர் ஆச்சரியமான சந்தோஷத்தில், தான் மட்டும் குழந்தையுடன் போய் அந்தக் குடும்பத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தப் போவது போல் அவனுக்குத் தோன்றிக்கொண்டிருந்தது. குழந்தையும் சிரித்துச் சிரித்துக் குதூகலமாகச் சத்தம் போட்டுக்கொண்டு வந்தது.

வாசலில் நுழையும்போதே அவனுடைய பெரிய கொழுந்தியாள் ‘சின்னக்குட்டீ’ என்று ஓடி வருவாள், சின்னக்குட்டி என்ற வார்த்தையில் அப்படி என்ன மந்திரம் இருக்கும் என்று தெரியவில்லை. அவள் அதைச்சொல்லும் போதெல்லாம் இது ‘கெக் கெக்கெ’ என்று சிரிக்கும். இதை அழவைக்கிறது மாதிரி ‘சித்தி டாட்டாபோரேன். இந்தாபோ…ரே….ன்’ என்று கதவுக்குப் பின்னால் போய்விட்டு, படக்கென்று வெளியே வந்து, ‘புடிச்சக்கள்ளாளி’ என்று சத்தம் போடுவாள். சின்னக்குட்டி மாதிரி இதுவும் இன்னொரு மந்திரம். இதுக்கும் குழந்தை ‘ஓ’ என்று சிரிக்கும்.

இதற்குள் அடுத்த கொழுந்தியாள் சத்தம் கேட்டு வந்துவிடுவாள். ”எங்கிட்டே கொடு (அ)க்கா, எங்கிட்டே கொடு (அ)க்கா’ என்று பிடுங்கிக்கொள்ளப் பார்ப்பாள். கொடுக்க முடியாதது போல் பெரியவள் குழந்தையுடன் கையை உயர்த்திக் கொள்ள, குழந்தை உயரத்திலிருந்து சிரித்துக் கொண்டிருக்கும். குனிவாக. எல்லாவற்றையும் நின்று பார்த்துக் கொண்டிருக்கும்போது சுந்தரத்துக்கு இடையில் அவனுடைய மனைவி ஞாபகம் வரும், சிரிக்கிற இன்னொரு முகமாக.

சித்திரம் சித்திரமாக யோசித்து நடந்தபொழுது மாமா வீடு சமீபத்தில் வந்து விட்டிருந்தது. தோள் வழியே தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டு புறங்கை முழுவதும் எச்சிலாகும்படி வாயில் கை வைத்துக்கொண்டிருந்த குழந்தையைக் கைக்கு இறக்கித் துடைத்து, ‘முதலில் யார் கண்ணில் பட்டுச் சிரிக்கப் போகிறார்கள்’ என்ற எதிர்பார்ப்புடன் நுழைந்தான். சாயங்காலம் போட்ட கோலமும் அதையொட்டின படிகளும் பளிச்சென்று கிடந்தன. இங்கே சுந்தரத்துக்குப் பிடித்தமானவைகளில், விதம் விதமாக எழுதப்படுகிற கோலங்களும் ஒன்று. இன்று எதுதான் பிடிக்காமல் போகும்? இந்தக் கோலம், கோலத்தின்மேல் உதிர்ந்திருக்கிற பழுத்த வேப்பிலைகள், ஒதுங்கி நிற்கிற வாதா மரத்தின் லேசாக இலை சுருண்ட சிவப்பு நிறம், கையும் நெஞ்சுமாகப் புதைந்திருக்கிற இந்தக் குழந்தையின் பால்கொச்சை, அதன் கையில் கீழே போடாமல் கசக்கிப் பிடித்திருக்கிற, எச்சில் பட்டதால் நனைந்திருக்கிற பச்சை பஸ் டிக்கெட் எல்லாமே பிடித்துத் தானிருக்கிறது.

வீட்டுக்குள்ளிலிருந்து இரண்டாவது கொழுந்தியாள் வந்தாள். ”நான்தான் ஃபஸ்ட் இன்றைக்கு’ என்கிறது மாதிரிச் சிரித்துக் கொண்டே வந்தாள். பக்கத்தில் வந்ததும் இவன் குழந்தையைக் கொடுக்கப் போவது போல் லேசாகச் சரியும்போது கேட்டான்

அக்கா வரலையா?’ சுந்தரத்துக்கு இப்போதுகூடச் சந்தோஷம் குறைந்துவிடவில்லை. ‘மடியிலே வச்சிருக்கேன். கொஞ்சம் இரு, அவுத்துக் கொடுக்கேன்’ என்றான்.

‘ஆமா, போங்க- வாசல்லே நிப்பா’ – ஏதோ அவன் மனைவி ஒளிந்து கொண்டு நிற்பது போலவும், இவனும் குழந்தையுமாக வந்து விளையாட்டு காட்டுகிறது போலவும் அவள் வாசலுக்குத் தேடிப் போனாள். குழந்தை இவனிடம் தான் இருந்தது.

‘சின்னக் குட்டீய்’ என்ற குரல் எழுப்பினபடி பெரியவள் உள்ளேயிருந்துவர அவன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். ஒயர் பையைப் பாதி பின்னிய கையோடு அவள் சிரித்துக்கொண்டே வந்து – ‘அக்காளைக் காணோம்?’ என்றாள். ‘நிஜம்மாவே அக்கா வரலையா?’ என்று வாசலுக்குப் போனவளும் திரும்பி வந்தாள். இப்போதுதான் குழந்தையின் ஞாபகம் வந்தது போல ‘அம்மா எங்க – லே’ என்று மறுபடி அக்காவின் சம்பந்தமாகவே கேட்டாள்.

முதல் முறையாக அவனுடைய சந்தோஷம் அறுந்தது. ‘நான் வந்திருக்கிறேன், குழந்தையைக் கொண்டு வந்திருக்கிறேன். இதற்குக் கொஞ்சமும் சந்தோஷம் கிடையாதா? அக்கா வந்தால்தான் குதூகலமா? அக்கா எங்கே, அக்கா எங்கே? என்ன திருப்பித்திருப்பிக் கேள்வி? அக்காவைத் தொழுவில் கட்டிப்போட்டு விட்டா வந்திருக்கிறேன். நான் எல்லாம் கண்ணுக்கு மனுஷனாகத் தெரியவில்லையா?’. சடசடவென்று சாயங்காலத்தின் வானமும் நீலமும் எல்லாம் போய் தலையில் இறங்கினது போல இருந்தது. குழந்தையைக் கொடுக்கக்கூடாது என்ற வீம்பு வந்தது. உடனே திரும்பிப் போய்விட வேண்டும் என்று தோன்றியது சுந்தரத்துக்கு.

‘என்ன? செருப்பை மாட்டியாச்சு?’-சட்டென்று பயந்ததுபோல், இந்த வழக்கமற்ற செய்கையால் கலவரமடைந்தது போல், பெரியவள் சிரித்தாள். |

(இவ்வளவு நுட்பமான இந்த முகத்திற்கு, நான் எவ்வளவு சந்தோஷத்துடன் வந்தேன் என்பதும், எவ்வளவு சந்தோஷங்களுக்காக வந்தேன் என்பதும் மாத்திரம் எப்படித் தெரியாது போயிற்று)

‘இல்லை, போக வேண்டியதுதான்’ குழந்தையுடன் அவன் திரும்பி வெளியே வருகையில், அவள் தெரு வரை வேகமாக ஓடிவந்து’இப்பதானே வந்தீங்க’ என்றாள். அவள் தெரு வரைக்கும் இதுவரை வந்ததில்லை .

‘புள்ளை அழும், நாளைக்கு அக்காகூட வாரேன்’- என்று மாத்திரம், நடந்து கொண்டே அவன் சொன்னான்.

பஸ்ஸிற்குள் ஏறிக் கடைசிசீட்டில் உட்காரும்போது மனம் தலைகீழாகப் புரண்டுகிடந்தது. சாயங்காலத்துக்கும் இப்பொழுதுக்கும் நேர் எதிரான ஒரு வலியில், ஒரு சோகத்தில் மனம் அலைந்தது. துயரம் நிறைந்த வாழ்க்கை ஒன்று அவனுக்கு விதிக்கப்பட்டுவிட்டது போலவும், தாயை இழந்த இந்தச் சின்னஞ்சிறு குழந்தையைத் தோளில் போட்டுக்கொண்டு, ஆற்றமுடியாமல் இப்படித் திசைகள் அற்று அவன் போய்க்கொண்டிருப்பது போலவும் எல்லாம் கற்பித்துக் கொள்வது சுந்தரத்துக்கு இதமாக இருந்தது. இதற்குப் பொருந்துகிறது போல, புறப்படாமல் உறுமிக் கொண்டேயிருந்த பஸ்ஸின் வெக்கை தாங்காமல், குழந்தை சிணுங்க ஆரம்பித்திருந்தது.

அநேகமாக ஓடுகிற பஸ்ஸில் எந்தக் குழந்தையும் தூங்கி விடுவதையே அவன் கண்டிருக்கிறான். சுந்தரத்துக்குத் தெரியும், குழந்தைக்குத் தூக்கம் வருகிறதென்று. தூக்கத்துக்கு அழுகிற அழுகை, பாலுக்கு அழுகிற அழுகை, அம்மா முகத்துக்காக அழுகிற அழுகை என்று இந்த ஒரு வருஷத்துக்குக் கொஞ்சம் கூடுதல் காலத்தில் அவன் எல்லாவற்றையுமே ஒரு குழந்தையைப் பொறுத்த அளவில் புரிந்து கொண்டான். குழந்தை சிணுங்கி லேசாக அழுவது முதலில் அவனுக்குச் சம்மதமாகக்கூட இருந்தது. இவனுடைய சன்னமான காயத்தின் வலித்த குரல் அது என்று.

குழந்தையின் அழுகை பெரிதாகப் பெரிதாகப் பக்கத்திலுள்ளவர்கள் அனுதாபம் கொள்ள ஆரம்பித்தார்கள். இவன் அந்த அனுதாபம் முழுவதுக்கும் பாத்திரமாவதுபோல், மனைவியை இழந்து குழந்தையுடன் தவிக்கிற முகத்தை மறுபடி அணிந்து கொண்டான். இதனாலும், ஒரு குழந்தையின் அழுகையை நிறுத்துகிற வகை பஸ்ஸிற்குள் என்ன என்பதை அவனுக்கு யோசிக்க முடியாது போயிற்று.

வீட்டில் என்றால் தோளில் குப்புறப் போட்டுக்கொண்டு தட்டிக் கொடுத்தபடியே லாந்தலாம், ‘ரோ ரோ ரோ’ என்று சப்தம் போட்டுக்கொண்டு. வெட்கமற்ற குரலில் ஒரு பெண்பிள்ளை போல ‘வேண்டாம்மா, வேண்டாம்மா’ என்று சமாதானப்படுத்தலாம். பால் கலக்கிக் கொண்டு வரும்வரை, டம்ளரில் கரண்டியால் தட்டிக் கொண்டிருக்கலாம். பஸ்ஸிற்குள் அதில் எதுவும் முடியாது. ‘ பக்கத்தில் இருந்தவர் ‘நீங்க மட்டும்தான் வந்தீங்களா ஸார்?* என்றார். கேட்டுக்கொண்டே கையைக் குழந்தை முகத்துக்கு முன் சொடக்கு போட்டார். தன்னுடைய குழந்தைக்கு வாங்கிப் போகிற ஏ, பி, சி புத்தகத்தின் அழகான வண்ணப் படங்களை

‘இதோ பார் பூனை. இதோ பார் தோத்தோ’ – என்று பக்கம் கசங்கக் கசங்கக் குரல் கொடுத்துக்கொண்டிருந்தார். அந்தக் குரல் ரொம்பவும் பிரியமாக மடியில் உட்கார்த்தித் தட்டிக் கொடுப்பது மாதிரிக் கடைசிப் பக்கம் வரை திருப்பிக் கொண்டே போனது. பஸ்ஸின் ஓட்டத்தில் புழுக்கம் கலைந்தும்கூட குழந்தையின் அழுகை நிற்கவில்லை. சுந்தரத்துக்கு நிஜமாகவே இப்போது குழந்தையின் அழுகையை நிறுத்த வேண்டியதாகப் பட்டது. அந்தப் புத்தகம் புதிய ஏ, பி, சி புத்தகத்தை இதனிடம் காட்டின குரலின் அபிமானம் மறுபடியும் சிறுபூவைப் போல ஒரு நெகிழ்ச்சியைக் கொடுத்தது.

இரண்டு மூன்று சீட்டிற்கு முன்னாலிருந்த அந்தப் புதிய மனிதர் எழுந்து, ஒரு கண்டக்டரைப் போல நிதானமாக ஓடுகிற பஸ்ஸில் நடந்து, சுந்தரத்தின் பக்கம் வந்தார். இடது கையில் பித்தளைத் தூக்குச் கட்டி இருந்தது. சட்டையில்லாத உடம்பில் ஒரு துண்டு மாத்திரம் வல்லாட்டு மாதிரி இரண்டு மார்பிலும் கழுத்தைச் சுற்றித் தொங்கிக் கொண்டிருந்தது. மீசையும் சிரிப்பும் சிகப்புக்கல் கடுக்கனுமாக இருந்த அந்த முகம் ஞாபகத்திற்கு வந்துவிட்டது. ஏட்டையா! ரிட்டையரான பிறகும். அவரைச் சுற்றி ஒரு போலீஸ்காரரின் தன்மைகளிருந்தன. “எங்க அம்மைான்ன அழுதுகிட்டே இருக்கா?”அவர் சுந்தரத்துக்கும் ஏ, பி, சி புத்தகக்காரருக்கும் இடையில் உட்கார்ந்தார். காலுக்கிடையில் தூக்குச்சட்டியை வைத்துக்கொண்டு, குழந்தையை வாங்கினார். குழந்தை அவர் கைக்குப் போகும் போது அவருடைய மீசையையும் காலிப்பற்களையும் பார்த்து முள்னை விடவும் உடம்பை முறுக்கிக் கொண்டு உதைத்து அழுதது. அவர் அதையெல்லாம் ‘சரிதான் – இதில் எள்ன’ என்பது போல் பொறுத்துக் கொண்டார்.

“எங்க அம்மை அழக்கூடாது”

“எங்கம்மை சிரிப்பா”

“எங்கம்மை சோறு பொங்குவா”

“எங்கம்மை ‘ஆ’க் கொடுப்பா”

“எங்க அம்ழையில்லா”

“எங்க அம்மையில்லா”

ஒவ்வொரு சொல்லுக்கும் அந்த முதிர்ந்த மனிதரின் முகமே கனிந்து கனிந்து கொஞ்சிக் கொண்டிருந்தது. முதுகில் கை தானாகத் தட்டிக் கொடுத்தது. மீசை மயிர் எல்லாம் படும்படியாக லேசாக உதடு குவிந்து தொப்புளில் முத்தம் கொடுத்து, மடி கொள்ளாமல் கிடத்திக் கொண்டு ஒரு தொடையை உதடு உயர்த்தித் தொட்டில் ஆட்டினது. கால் ஆடும் போது பித்தளைத் தூக்குச்சட்டியின் மூடி திறந்து பஸ்ஸின் சீட்டுக்குள் நகர்ந்தது.

அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அவனையும் பாராமல் “எங்க அம்மை உறங்கியாச்சு’ என்று அவர் குழந்தையையே தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். சுந்தரம் இறங்கவேண்டிய ஸ்டாப் வரும்வரை குழந்தை அவர் மடியிலேயே தூங்கிக் கொண்டிருந்தது. ஒன்றுமே சொல்ல ஓடாமல் அவன் குழந்தையுடன் இறங்கும்போது, ‘பார்த்துய்யா பார்த்து’ என்று மிருதுவாகத் தோளைத் தட்டினார்.

வீட்டுக்கு நடக்க ஆரம்பிக்கையில், சிறிது சிறிதாக மறுபடியும் சாயங்காலத்தின் சந்தோவும் வந்து மளதில் நிரம்பிக் கொண்டிருந்தது. குழந்தைக்காக மனைவி ரொம்ப காத்துக் கொண்டிருப்பாள் என்ற ஞாபகத்துடன், ‘சின்னக் குட்டி’ என்று அவனுடைய பெரிய கொழுந்தியாள் கூப்பிடும் குரலும் ஒரு புள்ளியில் கலந்தது.

முன்னிலும் சந்தோஷம் அடைந்தவனாக, தோளில் கிடந்த குழந்தையின் சிகையை, முதுகை எல்லாம் பிரியமாகத் தடவிக் கொண்டபொழுது, அவளையும் அறியாமல் ‘எங்க அம்மையில்லா’ என்ற சத்தம் அவனிடமிருந்து சற்று உரக்கவே கேட்டது.

– கணையாழி – மார்ச் 1978

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *