தொழுவம் புகுந்த ஆடுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 7,953 
 
 

பிரகாஷ் ஈரோடு எல்.கே.எம்.மருத்துவமனையில் தனியறையில் படுத்திருந்தான். சூரம்பட்டி நான்கு சந்திப்பு சாலைக்கு அருகில் மருத்துவமனை இருந்தது. பிரகாஷின் வலது காலில் மாவுக்கட்டு போட்டிருந்தார்கள். அந்தக்கட்டு பார்ப்பதற்கு பெரிதாக முட்டிங்காலில் இருந்து கீழ்மூட்டு வரை இருந்ததால் நாளையும் பின்னி எழுந்து நடப்பானா? என்ற கேள்விக்குறியை எல்லோர் மனதிலும் தோற்றுவித்துவிடும். தவிர கை முட்டியிலும்,முகத்திலும் சில சின்ன சிராய்ப்புகள் தான். இவனை கொண்டுவந்து சேர்த்தவர் இவனை ஆப்பரேசன் அறைக்குள் கொண்டு போனதுமே கம்பி நீட்டிவிட்டார். அவர் யாரென்றெல்லாம் இவனுக்கு தெரியாது! கொண்டு வந்து சேர்த்தவருக்காவது இவனைத்தெரியுமா? என்றால் அதுவும் இதை எழுதிக்கொண்டிருக்கும் எனக்கே இனிமேல்தான் தெரியவரும்.

பிரகாஷ் இப்படி இங்கு படுத்திருப்பதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் நாம் நேற்று என்ன நடந்தது? அதற்கு முன்பெல்லாம் என்னதான் இவன் வாழ்க்கையில் நடந்தது என்று பார்க்க வேண்டும். பிரகாஷின் சொந்த ஊர் சீனாபுரம். அது பெருந்துறைக்கும் மேற்கே நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது! ஊரின் பேருந்து நிறுத்தம் அருகே சின்ன குன்று ஒன்றிருக்கிறது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் கண்டிப்பாக! ஊரில் மொத்தமாக நூறு வீடுகள் இருக்கும். அருகில் இருக்கும் ஊர்கள் எல்லாம் பக்கம் பக்கமாக இருபதால் ஒரு பேருந்துப்பயணம் செல்லவேண்டும் என்றால் ஊர்க்காரர்கள் சீனாபுரம் வந்து தான் பேருந்து ஏறவேண்டும். கோபி நோக்கி செல்லும் பேருந்துகள் பெருந்துறையிலிருந்து சீனாபுரம் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

பிரகாஷிற்கு பெருந்துறையில் துணிக்கடை ஒன்றும் பெயிண்ட் கடை ஒன்றும் இருக்கிறது! கால காலமாய் துணிக்கடையை கவனித்து வந்த இவனது அப்பாவுக்கு சக்கரை, ஆஸ்துமா என்று உடல்நலக் கோளாறுகள் வந்தமையால் வீட்டிலேயே கடந்த ஒரு வருடமாக இருக்கிறார். அவரை கவனித்துக் கொள்ள அவரை போன்றே உடல்வியாதியை பெற்றிருக்கும் அம்மா! இருவரையும் கவனித்துக்கொள்ள வீட்டு வேலைக்காரி புஷ்பா. அவள் பக்கத்து தெரு தான். அவள் கணவன் ஒரு பிள்ளைப்பூச்சி. ஆயிக்கவுண்டன்பாளையத்தில் தறிக்குடோனுக்கு போய் வந்து கொண்டிருந்தான். இரண்டு குழந்தைகள். இரண்டும் பள்ளி விட்டு வந்ததும் பிரகாஷின் வீட்டில்தான் அம்மாவின் கால்களுக்குள்ளேயே சுற்றிக்கொண்டு இருக்கும்கள். பிரகாஷுக்கு வருவோம்.

பிரகாஷிற்கு திருமணம் முடிந்து ஒருவருடம் கூட ஆகவில்லை! பிரகாஷின் மனைவிக்கு ஈரோடு சூரம்பட்டி தான். கம்ப்யூட்டரில் புலி அவள். அவள் அப்பா ஈரோட்டில் மஞ்சள் மண்டி வைத்திருக்கிறார். தவிர சென்னிமலை ரோட்டில் ஒரு பெட்ரோல் பங்க்கும் உண்டு! இரண்டுக்குமே இவள் பெயரைத்தான் வைத்திருக்கிறார். மகாலட்சுமி! பெயருக்குண்டான மகாலட்சுமி தான். கணவன் தன்னை எங்கும் சந்தோசமாய் வெளியில் கூட்டிச் செல்வதில்லை! எந்த நேரமும் அப்பாவைப்போலவே கடையையே கட்டிக் கொண்டு கிடப்பது அவளுக்குள் வேதனையை கிளப்பி விட்டது! தவிர கணவன் வீட்டில் ஆஸ்துமா தொந்தரவுள்ள மாமனார், அத்தை அவளுக்கு பயமாய்ப் போய் விட்டது! இவள் தூங்கும் நேரத்தில் கடைச் சாவிகளோடு பிரகாஷ் வருவான். காலையில் இவள் எழும் நேரத்தில் குளித்துக் கிளம்பியிருப்பான். மகாலட்சுமி எதிர்பார்த்து வந்த வாழ்க்கை இதுவல்ல! அம்மா என்றொருத்தி இருந்திருந்தாலாவது சில புத்திமதிகளை அவளுக்கு வழங்கியிருப்பாள். மகாலட்சுமியின் அம்மா போய் வருடம் பத்திற்கும் மேலாகி விட்டது! வீட்டுக்கு ஒரே மகள் வேறு. வேண்டியதை உடனே பெற்றுக் கொள்ளும் வாழ்க்கை.

“கடையையே கட்டிட்டு இருக்கிற மனுசனுக்கு மனைவி எதுக்கு? ஒருத்தியை கட்டிக்கப் போறோம்ங்றப்ப இந்த யோசனையெல்லாம் பண்ணவே மாட்டீங்களா? எந்த நேரமும் சம்பாதிக்கிறதுலயே குறியா இருந்தா எப்படி? வீட்டுல நான் என்ன பண்ண ஒருத்தி?” என்று மெதுவாக பிரகாஷிடம் சண்டையிட ஆரம்பித்தவள் இதுவெல்லாம் கதைக்க்காகாது என்று விரைவில் ஈரோடு கிளம்பி விட்டாள். அவளுக்கு என்று சொந்தத்தில் எடுத்துச் சொல்ல யாருமில்லாமலும் போய் விட்டது! அவள் அப்பா குடும்ப விசயத்தில் பூஜ்ஜியம். மகள் என்ன சொல்கிறாளோ அதற்கு தலையாட்டுபவர். ”கிடக்குது விடும்மா! நீ ஏன் சங்கடப்பட்டுட்டு அந்த வீட்டுல கிடக்கணும்? பொண்டாட்டியோட அருமை தெரிஞ்சா மாப்பிள்ளை தன்னப்போல நம்ம வீடு வருவாப்ல! சின்ன வயசு தான.. சம்மந்திக ரெண்டும் புத்தி சொன்னா நேரா வந்துடுவாப்ல! இங்கியே துணிக்கடை ஒன்னு போட்டுக் குடுத்தாப் போச்சு. இல்லீன்னா நம்ம பங்க்கை பார்த்துக்கட்டும்!”

வாழ்க்கையை அவரவர் போக்கிலேயே வாழப்பழகிக் கொள்வதால் வரும் துன்பங்கள் பல நேரங்களில் குடும்பப் பிரச்சனைகளுக்கு காரணங்களாகி விடுகின்றன. நம்பி வந்த பெண் புரிந்து கொள்ளாமல் தாய் வீட்டுக்கு பொட்டி தூக்கிச் சென்றதும் ஆண் ஆடிப்போய் விடுகிறான். அவனுக்கு தன் மீதே எரிச்சலும் பயமும் தோன்றி விடுகிறது! மனைவியை பூ போல வைத்துக் கொள்ளத்தான் எல்லோரும் இங்கு ஆசைப்படுகிறார்கள். சம்பாதிப்பிற்கான அலைக்கழிப்பில் பூ மாதிரிதான் வீட்டில் இருக்கிறாள் என்று நம்பிக் கொள்கிறார்கள். பூ புயலாகும் போது பேச்சு தடித்து சண்டையாகி விடுகிறது சில சமயங்களில். பிரகாஷ் மகாலட்சுமி கிளம்பும் போது ”சாரி செல்லம், நீ போயிட்டா நான் என்ன ஆவேன்? யோசிச்சு பாரேண்டா” என்று நிறுத்தி கொஞ்சவில்லை. தோன்றியது உண்மைதான் என்றாலும் அதைச் செயலில் காட்ட தயக்கம் வந்து விட்டது. ஆனால் அப்படியெல்லாம் சொல்வான் என்று மகாலட்சுமி எதிர்பார்த்தாள். அதற்கான அறிகுறிகளே அவன் முகத்தில் இல்லாதது கண்டு அதிக வருத்தமுடன் கிளம்பி விட்டாள்.

பிரகாஷிற்கு குடிப்பழக்கம் கிடையாது. அது ஏன் மற்ற கெட்ட பழக்கங்களும் கிடையாது. ஆனால் குடியை அவன் சீக்கிரமே தேடிக் கொண்டான். முதலில் வீட்டில் தான் இரவில் ஆரம்பித்தான். ஆரம்பித்த அன்றே மகாலட்சுமியை அலைபேசியில் அழைத்து, “ஏண்டி என்னை விட்டுட்டு போனே?” என்றான். அவள் எதுவும் பேசவில்லை. “சாரிடி! இனிமேல் நீ ஆசைப்படற மாதிரியே நடந்துக்கறேன் காத்தால கிளம்பி வாடி மகா! நீ இல்லீன்னா என்னால எதுலயும் கவனமா இருக்க முடியலடி! மகா! எதுனா பேசுடி!” என்றான்.

“போதையில எல்லாரும் நல்லாத்தான் பேசுவாங்க! எங்கப்பா கூட போதையில தங்கமா பேசுவாரு! காத்தால எல்லாத்தையும் மறந்துடுவாரு! இப்ப குடிக்க வேற ஆரம்பிச்சுட்டீங்களா? அதான் போனை போட்டு வாடி போடின்னு பேசுறீங்களா?”

“உன்னால தாண்டி குடிச்சேன். அதேன் புரியமாட்டீங்குது உனக்கு? நீ போய் ரெண்டு மாசம் ஆச்சு தெரியுமா? ஒரு போன் போட்டு பேசுறதுக்கு என்னடி வந்துச்சு உனக்கு? நான் என்ன உனக்கு எதிரியாடி?’

“ஏன் நீங்க பேசலாம்ல! இப்ப உள்ளுக்குள்ள இன்னொரு ஆள் போனதிம் தோணிடுச்சா பொண்டாட்டி நெனப்பு? அதான் அந்த அம்சவேணி இருக்காள்ல உங்களுக்கு! போயி அவளை கொஞ்ச வேண்டிது தான?”

“மகா!”

“என்ன இவளுக்கு எப்படி தெரியுமுன்னு பாக்கீங்களா?”

“மகா ப்ளீஸ்டி! நீ என் பொண்டாட்டிடி! இப்படி அசிங்கமா பேசாதேடி… நீ எப்படி வேணாலும் ஒரு விசயத்தை தெரிஞ்சிருக்கலாம்டி! யாரோ சொன்னாங்கன்னு நீயே என்னை தப்பா பேசினா என்னடி வாழ்க்கை இது? எதுக்குடி நீ படிச்சே? அதனால என்ன புண்ணியம்? கோபம் வருதுடி உன்மேல நான் போனை வச்சுடறேன்”

“பேசாம என்னை டைவர்ஸ் பண்ணிட்டு அவளை கட்டிக்குங்க” என்ற போது பிரகாஷ் போனை வைத்திருந்தான். அதன்பின் அவள் சொன்ன வார்த்தைகள் இவன் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது!

Ooooooooooooooooooooooooooooooooooooooo

“சார் உங்களுக்கு ஏற்கனவே எச்சா இருக்கும் போல, எதுக்குங்க சார் மறுபடியும் ஒரு கோட்டர் வாங்கறீங்க?” சிறுவலூர் டாஸ்மார்க் கடை சிப்பந்தி முருகன் பிரகாஷிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

‘எச்சல்லாம் ஒன்னுமில்லீங்க! அரை கட்டிங் மட்டும் ஊத்திட்டு வீடு போயிடறேன்.”

“வண்டில வந்தீங்களா? இப்ப நீங்க சீனாபுரம் போறதே சிரம்மாட்ட தெரியுதுங்ளே! பேசாம வாங்கீட்டு வீடு போயி சாப்டுட்டு படுத்துக்கங்க சார்” முருகன் அவர் கேட்ட சரக்கை கொடுத்து விட்டு அடுத்த ஆளை கவனிக்க ஆரம்பித்தார். பிரகாஷ் சாக்னா கடை சாத்தியிருப்பதை கண்டு பாட்டிலை பாக்கெட்டில் திணித்துக் கொண்டே வெளியேறினான். பெட்ரோல் பங்க் அருகே நின்றிருந்த தன் பஜாஜ் டிஸ்கவர் வண்டிக்கு செல்கையில் அருகருகே நீல வர்ணத்தில் இரண்டு வண்டிகள் நின்றிருக்கவே எது தன் வண்டி என்று குழம்பினான். மகா என்று முகப்பு விளக்கருகே டூமில் இருக்கிறதா என்று உற்றுப்பார்த்து உறுதி செய்து விட்டு தன் வண்டியை சாவி போட்டு கிளப்பினான். மதிய வெய்யிலில் போதை இப்போதே கணக்காய் தான் இருந்தது. சீனாபுரம் நோக்கி கிளம்பியவன் அரசாங்க மருத்துவமனை தாண்டியதும் சாலையோரத்தில் வண்டியை நிப்பாட்டி விட்டு யூரின் போக குழிக்குள் இறங்கினான். வெகு நேரமாய் அடக்கி வைத்திருந்து இப்போது வெடித்து விடும் அளவில் அவசரமாய் இருந்தது. பாக்கெட்டிலிருந்து கோட்டர் பாட்டிலை எடுத்து மெட்டு திருகி கொஞ்சம் வாயில் கவிழ்த்துக் கொண்டு மூடி திருகி பாக்கெட்டில் வைத்துக் கொண்டவன் சாலையில் வண்டிச்சப்தமே இல்லை என்ற போது பெண்ட் ஜிப்பில் கைவைத்து இழுத்து இறக்கி விட்டு யூரின் பெய்தான். யூரின் பெய்தவன் ஜிப்பை இழுத்து விட்டு திரும்ப எத்தனிக்கையில் பொத்தென கீழே குழிக்குள் விழுந்து அப்படியே எழ முடியாமல் படுத்துக்கிடந்தான்.

சாலையில் விரைவாக பயணிகளை கோபி சென்று சேர்த்து விடும் அவசரத்தில் ஒரு தனியார் பேருந்து தலைதெறிக்க வந்து கொண்டிருந்த்து. எதிர்க்கே மணல் லோடு ஏற்றிய இரண்டு டிப்பர் லாரிகள் வேறு தலை தெறிக்க வேகமாய் வந்து கொண்டிருந்தது! டிப்பர் லாரிக்காரர்கள் ஒருவரை ஒருவர் முந்த அவசரப்படுகையில் டமால் என்ற சப்தம் சிறுவலூருக்கே கேட்டது! ஜனம் கூடிய போது பிரகாஷின் டிஸ்கவர் பைக்கின் சேதாரம் பைசாவுக்கு பிரயோசனம் இல்லாமலிருந்தது. பேருந்தில் வந்தவர்களுக்கு சின்னச் சின்ன மண்டையடிகள் தான். டிப்பர் லாரிக்கும் சேதாரம் அதிகமில்லை. ஆனால் டிஸ்கவரின் சேதாரம் ஆள் உயிரோடு இருப்பானா என்ற சந்தேகத்தை கொடுத்துவிட்டது ஜனத்திற்கு. ஆனால் ஆளை காணோமே!

லாரி மோதி தூக்கி வீசிய ஆள் எங்கே என்று சிலர் குழிக்குள் இறங்கினார்கள். குழியிலிருந்து எட்டிப்பார்க்கையில் கீழே வேலிமுள்ளின் அருகே ஆள் கிடப்பது தெரிய கீழே இறங்கி உயிர் இருப்பதை கண்டு நான்கு பேர் அவனைத் தூக்கியபடி மேடேறி வந்தார்கள். பிரகாஷின் வலது கால் மட்டும் திரும்பிய நிலையில் தொங்கிக் கொண்டிருந்தது. நெற்றியில் ரத்தம் வடிந்திருந்தது. பக்கத்திலேயே மருத்துவமனை என்பதால் அவனை காப்பாற்ற தூக்கி ஓடினார்கள். அவசர சிகிச்சை என்று அவன் காயங்களுக்கு மருந்து போட்டு ஊசி போடவில்லை. பாக்கெட்டில் இருந்த கோட்டர் பாட்டிலை காட்டினார்கள். கால் உடைந்திருக்கிறது ஈரோடு கொண்டு போயிருங்க! என்றார்கள். காரெடுத்து அவனை எல்.கே.எம். கூட்டி வந்தவர் கொளப்பளூர் முருகேசகவுண்டர். விபத்து என்று வந்து பார்க்கையில் அவனை இன்னாரென அவருக்கு மட்டுமே அடையாளம் தெரிந்திருந்தது. அதும் அடையாளம் மட்டுமே. இவன் வீட்டில் ஒரு நாள் இரவில் சாப்பிட்டிருக்கிறார் ஊர்க்கார்களோடு. அதிக பழக்கமும் இல்லை. அவர் அலைபேசி வசதிகளையும் பயன்படுத்திக் கொள்பவரல்ல! நேராக ஈரோட்டிலிருந்து கிளம்பியவர் கொளப்பலூர் வந்து சேர்ந்த்தும் சுப்பிரமணி வீடு தான் சென்றார்.

0000000000000000000000000000

சுப்பிரமணி கொளப்பலூர்க்காரன். கோபியில் டூவீலர் வொர்க்ஷாப் வைத்திருப்பவனுக்கு ஒரே கவலை என்னவென்றால் தன் அக்காவிற்கு மாப்பிள்ளை சரியாய் அமையவே மாட்டேங்குதே என்பது தான். அப்படி எல்லா பொறுத்தமும் அமைந்த ஜாதகம் கிடைத்து விட்டால் மாப்பிள்ளை வீட்டார் அதிகப்படியான வரதட்சணை கேட்பதால் இவர்களால் முடியாமல் ஒதுக்கி விட வேண்டி இருந்தது. சிலர் பெண்ணுக்கு சிம்மராசி என்று ஒதுக்கினார்கள். இப்படி பல ஜாதகங்கள் அக்காவிற்கு வந்தும் ஒன்றும் கூடாமல் போய்க் கொண்டிருப்பது ஏன் என்பது தான் இவனுக்கு புரியவில்லை. இன்றுகூட அப்பா அவனை சீனாபுரம் அனுப்பி வைத்திருக்கிறார். அவர் வேறொரு ஜாதகம் கிடைத்ததால் அதை தூக்கிக் கொண்டு ஆதியூர் ஜோசியரிடம் பொருத்தம் பார்க்க கிளம்பிவிட்டார் அம்மாவுடன். அக்கா அம்சவேணி கொளப்பலூரில் ஒரு செல்போன் ரீச்சார்ஜ் கடைக்கு வேலைக்கு சென்று கொண்டிருக்கிறாள். கடை வீட்டுக்குப் பக்கம் தான். தெரிந்தவர் கடை என்பதால் மூன்று வருடங்களாக வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல் போய் வந்து கொண்டிருந்தாள்.

சுப்பிரமணி சீனாபுரத்தில் வந்து இறங்கும் போது காலை ஏழரை மணிதான் ஆகியிருந்தது. மாப்பிள்ளை பெருந்துறையில் துணிக்கடை வைத்திருக்கிறார் என்று தான் அப்பா சொல்லி அனுப்பினார். ஒருவேளை சீக்கிரம் வீட்டில் போய் பார்த்து அம்மிணியின் ஜாதகத்தை கொடுத்து விடுவது மரியாதை என்பதால் காலையிலேயே வந்து சேர்ந்து விட்டான். அருகிலிருந்த மளிகை கடைகளில் ஒன்றில் போய் சிகரெட் ஒன்றை வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டவன் மளிகைக் கடைக்காரரிடமே சுப்பிரமணி வீட்டை விசாரித்தான். அவரோ மொட்டைக்கட்டையாய் விசாரித்தால் எப்படி? என்றவர், என்ன வேலை? என்ன சாதி? என்று எல்லாம் கேட்டுத்தான் இவனுக்கு வழியைச் சொன்னார். சுப்பிரமணியின் வீடு ஊரின் வடக்கு கடைசியில் இருந்தது. தோட்ட வீடு என்றார்கள் சுப்பிரமணி வீட்டை. சொன்னது போல் தோட்டத்தினுள் தான் வீடும் இருந்தது. இருபது தென்னை மரங்கள் வீட்டின் முன்புறம் நின்றிருந்தன. அதற்கு சற்று தள்ளி கிழக்கு பக்கத்தில் கிணறு இருந்தது. கிணற்றின் அருகே எதையோ கவனித்து வாலை ஆட்டிக் கொண்டிருந்த நாய் இவனைப் பார்த்ததும் உறுமிக் கொண்டு பாய்ந்து வந்தது. இவன் மிரண்டு அப்படியே ஆணியடித்தது போல நின்றான். கிட்டே குலைத்தபடி வந்த நாய் இவனைச் சுற்றிலும் வந்து முகர்ந்து பார்த்து விட்டு வாலை ஆட்டிக் கொண்டு வீட்டு வாயிலைப் பார்த்து குரைத்தது.

நாயின் குரைப்பொலி கேட்டு பிரகாஷ் தான் வெளியே வந்தான். வந்தவன் இவனை யாரென அடையாளம் தெரியாமல் பார்த்தான். இவனாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கை கொடுத்தான். கெட்டிச் செவியூர் மாமன் கிட்டதான் அந்தப்பக்கம் பொண்ணிருந்தா விசாரிக்கச் சொல்லியிருந்தேன். அவரு நேத்தே யாராச்சிம் கொளப்பலூர்ல இருந்து வருவாங்கன்னு போனு பண்ணியிருந்தார்.. என்று பேசிக்கொண்டே இவனை வீட்டினுள் கூட்டிப் போய் அமர வைத்தான். சுப்பிரமணிக்கு முதலில் வீட்டைப் பார்த்ததுமே இதெல்லாம் தன் அக்காவுக்கு அமைய வாய்ப்பே இல்லை என்று முடிவு தெரிந்து விட்டான். அப்படியே அமைந்தாலும் வழக்கம் போல வரதட்சணையில் போய் முடிந்து விடுமென முடிவே செய்து விட்டான். சுப்பிரமணிக்கு வணக்கம் வைத்தபடி பிரகாஷின் அப்பா வந்தார். இவன் எழுந்து மரியாதையாக வணங்கி நின்றவனை அவரே அமரச் சொன்னபிறகு தான் அமர்ந்தான் ஷோபாவில். அவரின் விசாரிப்புகள் பயங்கரமாய் இருந்தன. ஒவ்வொன்றுக்கும் பொறுமையாய் பதில் சொன்னான். டூவீலர் வொர்க்ஷாப்பில் என்ன வருமானம் வந்துடும் தம்பி? என்று இறுதியாய் ஒரு கேள்வியில் நிறுத்தினார். தன் அக்காவின் ஜாதகத்தை மஞ்சள் பை ஒன்றில் வைத்து எடுத்து வந்திருந்தான் சுப்பிரமணி. வொர்க்ஷாப்பில் மூன்று ஆட்கள் போட்டு வேலை வாங்கி வருவதாகவும், இப்போதெல்லாம் வண்டிகள் பல நிற்க நேரமில்லாமல் வந்து கொண்டே இருப்பதையும் சொன்னான். அக்கா வேலைக்கு சென்று வருவதை மட்டும் மறைத்து விட்டான். வீட்டில் படிப்பு முடித்து இருப்பதாய் சொல்லிவிட்டு அவர் முகம் பார்த்தான். சமயத்தில் சுடிதார் அணிந்த பெண் ஒருத்தி புன்னகையோடு இவனுக்கு தட்டில் காபி கொண்டுவந்து நீட்டினாள். அண்ணா எடுத்துக்க! என்று சொல்லி பிரகாஷிடம் நீட்டுகையில் தான் அவன் தங்கை என்று இவன் உணர்ந்தான்.

“இவள் என் தங்கச்சி கீதா. இப்பத்தான் காலேஜ் போயிட்டு இருக்கா ஈரோடு” என்று சுப்பிரமணி அறிமுகப்படுத்தவும் காபி தம்ளரோடு எழுந்து வணக்கம்ங்க! என்றான் சுப்பிரமணி. அவளோ சிரிக்கத் துவங்கினாள்.

“என்னாண்ணா எனக்கு எந்திரிச்செல்லாம் வணக்கம் வைக்கிறாப்ல!” என்றவள் மறுபடியும் சிரிக்கவே இவன் அசடு வழிந்தான். இருந்தும் அவள் சிரிப்பு அவளது அழகை இவனுக்கு மேலும் தூக்கியே காட்டிற்று. உடனே இவன் அக்காவிற்கு திருமணம் ஆகி விட்டது போலவும், அடுத்து நம்ம கல்யாணம் தான் என்று கீதாவே இவனிடன் காதில் சொல்வது போலவும் நினைத்து மகிழ்ந்தான். பார்த்த முதல் பார்வையிலேயே ஒரு பெண் எப்படி இப்படி மனதில் வந்து ஒட்டிக் கொள்கிறாள்? என்று ஆச்சரியப்பட்டான்.

“அண்ணி போட்டோ கொண்டு வந்திருக்கீங்களா/ நான் தான் முதல்ல பார்க்கணும்.” என்றாள் கீதா இவனிடம். பெண்களிடம் சகஜமாய் பேசியே அறியாத சுப்பிரமணி “கொண்டு வந்திருக்கேங்க” என்று முனகிக் கொண்டே மஞ்சள் பையில் கைவிட்டு ஜாதகத்தை வெளியில் எடுத்தான். அதை விரித்து அக்காவின் புகைப்படத்தை எடுத்தவன் கீதாவிடம் நீட்டினான். பிரகாஷ் இவனிடம் “கண்டுக்காதீங்க.. இவ எப்பவும் இப்படித்தான்” என்றான்.

“அண்ணா உனக்கு ஏத்த மாதிரி புட்டுன்னு முகத்தை வச்சிட்டு இருக்காங்க! நீ எப்பயும் இப்படித்தான இருப்பே!” என்றவள் பிரகாஷின் அருகில் அமர்ந்து அவனுக்கும், பார்த்துக்கோ! என்று காட்டினாள். அண்ணனின் பார்வையிலேயே கண்டு கொண்டவள் இவனிடம், “எங்கண்ணனுக்கும் உங்க அக்காவை பிடிச்சுப் போச்சு!” என்றாள். அவள் கண்ணை இவனைப் பார்த்து ஒருமுறை சிமிட்டிய மாதிரி தெரிந்தது இவனுக்கு.

“சரி போயி ரெண்டு பேரும் நம்ம முத்தாங்கிட்ட ஜாதகத்தை காட்டிட்டு வந்துடுங்க! இன்னிக்கி புதன்கிழமை நல்ல நாள் வேற!” என்றார் பிரகாஷின் அப்பா!

“அண்ணா நானும் வர்றேன்” என்றாள் கீதாவும்.

“நீ எதுக்கும்மா? அவிங்க ரெண்டு பேரும் போயி பார்த்துட்டு வரட்டும்” என்ற அப்பாவை முறைத்தாள் கீதா.

“இவத்திக்கி இருக்கிற முத்தான் வீட்டுக்கு அண்ணன்கூட போனா தப்பா? அம்மாக்கு தான் உடம்புக்கு முடியல. ஜாதகம் பார்க்க கூட ஒரு பொண்ணு போகணும் தெரியுமா” என்று வாயடிக்க ஆரம்பித்தவளை பிரகாஷே கும்பிட்டு இழுத்துக் கொண்டு வந்தான் முத்தான் வீட்டுக்கு. மூன்று பேரும் பக்கம் என்பதால் நடந்தே வந்திருந்தார்கள். முத்தான் இவர்களுக்கு தன் முன்னாம் பாய் விரித்து அமர வைத்து இரண்டு ஜாதகங்களையும் விரித்து விரித்துப் பார்த்து தன் குறிப்பேட்டில் அரைமணி நேரம் வாய் திறக்காமல் குறித்துக் கொண்டிருந்தான். அவ்வளவு நேரம் குறித்து கால்மணி நேரமே முத்தான் பேசினான். இந்த ஜாதகம் சரியா வரும்னு தோணலைங்க! மூவருக்குமே முகம் வாடிப் போயிற்று. சுப்பிரமணி தன் அக்காவுக்காக இப்போது தான் முதன் முதலாக மாப்பிள்ளை பார்க்க ஜாதகத்தோடு கிளம்பியிருந்தான். அது வெற்றியானால் வீட்டில் பந்தா பண்ணலாம் என்றெல்லாம் காலையில் கிளம்பும் போதே நினைத்திருந்தான். தவிர கீதா வேறு உடனடியாக மனதில் வந்து உட்கார்ந்து இம்சிக்கத் துவங்கி விட்டபடியால் ஜோதிடனின் பதில் இவன் முகத்தில் அடித்தாற்போல் ஆகி விட்டது. கீதாவும் தன்னைப்போலவே மனதில் நினைத்திருப்பாளோ என்று எண்ணிக் கொண்டான். அவள் முகமும் ஏனோ சோபை இழந்திருந்த்து. இந்த நேரம் வரை அவள் முகத்தில் இருந்த ஒளி காணாமல் போய் இருட்டடித்திருந்தது.

கீதா அண்ணனிடமும் இவனிடமும் கூட சொல்லிக் கொள்ளாமலே திடீரென எழுந்து கிளம்பி விட்டாள். சரி வாங்க! என்று பிரகாஷ் இவனைக் கூட்டிக் கொண்டு பேருந்து நிறுத்தம் வரை வந்தான். ”ஒன்னும் கவலைப்படாதீங்க சுப்பிரமணி! நான் வேற ரெண்டு ஜோசியக்காரங்க கிட்ட குடுத்து உறுதியா தெரிஞ்சிக்கிறேன். உங்க நெம்பர் குடுத்துட்டு போங்க! நாளைக்கு மாலைக்குள்ள கூப்பிடறேன். ஏனோ உங்க அக்காவை போட்டோல பார்த்த அடுத்த நிமிசமே பிடிச்சுப் போச்சு எனக்கு. என் தங்கச்சிக்கும் பிடிச்சிருந்ததால தான் அவளும் ஜாதகம் பார்க்க கூட வந்தா!” என்றவனிடம் கைகொடுத்து விடைபெற்றான் சுப்பிரமணி.

சுப்பிரமணி வீடு வந்த போது அப்பா இருந்தார். இவனிடம் என்ன ஆச்சு என்று கூட இவன் அம்மாவும் கேட்கவில்லை! இவனும் ஒன்றும் அவர்களிடம் சொல்லிக் கொள்ளாமலே கோபி கிளம்புவதற்கான ஆயத்தத்தில் இருந்தான். கடைசியாக கிளம்புகையில் அப்பாவிடம் வந்து நின்றவன், நீங்க போன காரியம் என்னாச்சு? என்றான்.

“நீ போன இடம் ரொம்ப பெரிய இடமுன்னு ஆதியூர் ஜோசியகாரன் சொன்னான்பா! அவங்க கேக்குற நகையெல்லாம் நம்ம கொடுக்க முடியாதுன்னான். ஆனா அதே ஊர்ல செந்தில் ஜாதகம் நம்ம அம்சாவுக்கு ரொம்ப பொருத்தமா இருக்குது. அவுங்க வீட்டுல பேசிட்டோம். நாளைக்கு காலையில மாப்பிள்ளை வீடு பார்க்க சீனாபுரம் போறோம்” என்றார் அப்பா. மேற்கொண்டு சுப்பிரமணியும் எதுவும் பேசாமல் கிளம்பி விட்டான்.

சீனாபுரத்தில் செந்தில் வீடு கிழக்கு பக்கமாய் இருந்தது. அதுவும் பிரகாஷின் வீட்டைத் தாண்டித்தான் செல்ல வேண்டி இருந்தது. செந்தில் வீடு இவர்கள் வீட்டைப் போன்றே அளவாய் இருந்தது. செந்திலுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். வீட்டில் செந்திலும் அவன் மாமா அத்தை என்று சில உறவினர்கள் மட்டுமே இவர்களை வரவேற்றார்கள். இவர்களும் அப்படியொன்றும் சொந்த பந்தங்களின் கூட்டத்தோடு செல்லவில்லை. இவன் சித்தப்பா சித்தி மட்டுமே கூட வந்திருந்தார்கள். செந்தில் பெருந்துறை பனியன் கம்பெனியில் கட்டிங் மாஸ்டராய் போய் வந்து கொண்டிருப்பதாய் அவன் மாமா சொன்னார். செந்தில் ஒல்லிப்பிச்சானாக இருந்தான். வந்தவர்களுக்கு அவனே பலகாரங்களை தட்டில் வைத்து கொண்டு வந்து டேபிளில் வைத்தான். சுப்பிரமணியைத் தவிர இவன் வீட்டில் செந்திலை அனைவருக்கும் பிடித்துவிட்டது. ஜாதகமும் எட்டு பொருத்தம் கூடி வந்தது அவர்களுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

அப்போது தான் சுப்பிரமணிக்கு அலைப்பேசி அழைப்பு வந்தது. புதிய எண்ணாக இருக்கவே யார் எனத் தெரியாமல் எடுத்து ”சொல்லுங்க சுப்பிரமணி பேசுறேன்!” என்றான்.

“நான் பிரகாஷ் பேசுறேன்ங்க! சீனாபுரத்துல இருந்து”

‘சொல்லுங்க பிரகாஷ். நான் உங்க ஊர்ல தான் இருக்கேன் இப்போ”

“எங்க ஊர்லயா? அதிசயமா இருக்கே! அப்ப வீட்டுக்ல்கு வாங்க பேசிக்கலாம்”

“இங்க உங்க ஊர்ல செந்தில் அவிங்க வீட்டுக்கு தான் நாங்க வீட்டுல இருந்து வந்திருக்கோம்”

“கொஞ்சம் தெளிவா சொல்லுங்க சுப்பிரமணி, எந்த செந்தில் வீடு?”

“வீட்டுல உங்களை பார்க்க என்னை தாட்டி விட்டாரு நேத்து எங்கப்பா. அவரு இன்னம் ரெண்டு மூனு ஜாதகத்தோட ஜோசியக்காரன் வீடு போய் பார்த்ததுல உங்க ஊர்ல கம்பெனிக்கு கட்டிங் வெட்ட போயிட்டு இருக்கிற செந்தில் ஜாதகம் அக்காவுக்கு சூட் ஆகுதுன்னு நேத்தே பேசிட்டாரு. அதான் இன்னிக்கு அவுங்க வீட்டுக்கு வந்திருக்கோம்”

“என்னங்க சுப்பிரமணி நான் தான் நாளைக்கு கண்டிப்பா கூப்பிடறேன்னு உங்ககிட்ட சொன்னேனே! நான் நேத்தே ரெண்டு மூனு இடத்துல ஜாதகத்தை கொடுத்து பார்த்துட்டேன். ஏழு பொருத்தம் இருக்குது கட்டிக்கலாம்னு சொல்லிட்டாங்க! அதனால ரொம்ப சந்தோசமா இருந்தேன். இப்ப செந்தில்ங்கறீங்க! செந்திலைப்பத்தி விசாரிச்சீங்களா? அவன்… சரி வேண்டாம் நீங்க அப்புறம் தனியா பேசுங்க!”

“அது வந்துங்க பிரகாஷ்.. எங்கப்பா நேத்தே முடிவு பண்ணிட்டார் போல. நீங்க பெரிய இடம். கேக்குற நகையெல்லாம் எங்களால போட முடியாதுங்க! நான் விருப்பப்பட்டு என்ன பண்ணுறது? சொல்லுங்க! அதனால அப்பா தகுந்த இடமா இருக்கும்னு நேத்தே முடிவு பண்ணியிருக்கார்.”

“அட என்னங்க சுப்பிரமணி பேசுறீங்க நீங்க? பொண்ணு கிடைக்குறதே இந்தக் காலத்துல பெரிய விசயம் தெரியுமா! அதும் ஜாதகம் பொருத்தமா அமையுறது அதைவிட பெரிய விசயம். இதுல அது வேணும் இது வேணும்னு கேட்டு அமைஞ்ச இடத்தையும் நழுவ விட யாரு தயாரா இருக்காங்க? ஒன்னு தெரியுமா உங்களுக்கு? எனக்கு இருபது ஜாதகம் பார்த்திருக்காங்க வீட்டுல! எனக்கு செவ்வாய் இருக்கிறதால பத்துக்கும் மேல பொருத்தமே இல்லை. அமைஞ்சதும் சிலது வேற விசயங்களால சுத்தப்படலை. ஒரு பொண்ணு தஞ்சாவூர். அது அமைஞ்சிருக்கு ஆனா போக வர சிரமம்! ஒரு பொண்ணு போட்டோவை கீதா தான் பார்த்துட்டு ஒதுக்கிட்டா! நான் பார்த்த்தே உங்க அக்கா போட்டோ ஒன்னு தான். அதும் என் தங்கச்சிக்கும் பிடிச்சிருந்துது. எனக்கும் தான். போக கொளப்பலூர் இங்கிருந்து ஒரே அமுத்து அமுத்தினா நிக்கலாம். பக்கம் வேற! நீங்க சொல்ற செந்திலுக்கு குடி ஜாஸ்த்திங்க சுப்பிரமணி! எனக்கு இல்லாமப் போச்சேங்கறதால சொல்லலை. நான் உங்களை கூப்பிட்டதே சந்தோசத்துல! உங்களால உங்க அக்காவுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்ய சொல்லத்தான். ஆனா.. இருங்க என் தங்கச்சி எதோ பேசணுங்றா!”

“ஹலோ! இப்ப எங்க இருக்கீங்க நீங்க?”

“சொல்லுங்க கீதா! நான் செந்தில் வீட்டுக்கு வெளிய நின்னுட்டு பேசிட்டு இருக்கேன்”

“கிளம்புறப்ப நீங்க எங்க வீட்டுக்கு வந்துட்டு போக முடியுமா?”

“இல்ல.. என் சித்தப்பா சித்தின்னு வந்திருக்கேன்”

“வர இஷ்டமில்லைன்னா விடுங்க” போனை கட் செய்து பிரகாஷிடம் கொடுத்தாள் கீதா.

சுப்பிரமணிக்கு அவள் திடீரென போனை கட் செய்தது முகத்தில் அடித்தது மாதிரியே இருந்தது. கீதாவை பார்க்க வேண்டும் என்று அவன் மனது நினைப்பதெல்லாம் சரிதான். ஆனால் எந்த முகத்தை வைத்துக் கொண்டு மீண்டும் அந்த வீட்டு படி ஏறுவது? செந்தில் வீட்டிலிருந்து இவனை இவன் சித்தப்பா கூப்பிட்டார். இவன் வாசலில் இருந்து வீட்டுக்குள் சென்றான்.

“என்னப்பா போனு உனக்கு வந்த இடத்துலயும்? அதைத்தான் சித்த நேரம் ஆப் பண்ணி போடேன்! இப்ப இருபது நாள்லயே கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு பேசியிருக்கோம். பொண்ணுக்கு நீங்க உங்களால முடிஞ்சதை செய்யுங்கன்னு மாப்பிள்ளையே சொல்லிட்டாரு! நாம என்ன பிள்ளைய அவரு சொன்னாருங்கறதுக்காக சும்மாவா தாட்டி விடப்போறோம்! கல்யாணத்தை சிம்பிளா இங்க மலைக்கோவில்ல வச்சிக்கலாம்னு சொல்றாங்க. நீ என்ன சொல்றே? உங்க அப்பா சரின்னுட்டாரு” என்றார் சித்தப்பா இவனிடம்.

“அது சரியா வருமுங்ளா சித்தப்பா? பொண்ணு ஊர்ல தான் மண்டபம் புடிச்சு வெக்கிறது வழக்கம்”

“அது சரிதான். ஆனா கல்யாணத்தை சிம்ப்பிளா வெச்சிக்கத்தான் இப்படி முடிவு. நீ வேணா ரிசப்சன்னு அக்காவுக்கு பெருசா பண்ணணும்னு நினைச்சா கொளப்பலூர்ல வெச்சிக்க. அதுக்கு யாரு தடை சொல்லப் போறாங்க? ஆனா இங்க கோவில்ல செஞ்சுட்டம்னா இவங்க உள்ளூர் ஆட்களுக்கு சிரமமில்லீன்னு சொல்றாங்க. ஒத்துத்தான் போவமே!” என்று சித்தப்பா பேசுகையில் இவனால் மறுக்க முடியாமல் இருந்தது. தவிர கீதா வேறு அவன் மனதில் புகுந்து வருவீங்ளா? மாட்டீங்ளா? என்று கேட்டுக் கொண்டேயிருந்தாள். தவிர மாப்பிள்ளை ஊரில் கல்யாணம் என்பதே வழக்கமில்லாத வழக்கமாய் இருந்தது. இத்தனை நாள் கிடைக்காத மாப்பிள்ளை அக்காவுக்கு கிடைத்து விட்டார் என்ற சந்தோசத்தில் அம்மாவும் அப்பாவும் எல்லாவற்றுக்கும் தலையாட்டி ஒப்புக்கொண்டது தான் கடைசியாய் புரிந்தது. அவர்கள் வணக்கம் கூறி விடைபெற்று கிளம்பினார்கள்.

சுப்பிரமணி அவர்களை பஸ் ஏற்றி அனுப்பி விட்டு இவன் மட்டும் தனியே பிரகாஷின் வீடு வந்தான். இங்கு எந்த வேலையும் தனக்கு இல்லை என்றாலும் கீதாவின் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவனை இழுத்து வந்து விட்டது. வீட்டு மாடியில் நின்றிருந்தவள் இவன் வருவதை கண்டதும் கீழிறங்கி இவனை வரவேற்க வெளி வாசலுக்கு வந்தாள். நேற்று குரைத்தபடி ஓடி வந்த நாய் இன்று தென்னை மர நிழலில் சும்மா பார்த்தபடி படுத்திருந்தது.

“வராம போயிருந்தீங்கன்னா அப்புறமில்ல தெரிஞ்சிருக்கும்.. வாங்க” என்றவள் வீட்டினுள் அழைத்துப்போய் அமர வைத்தாள். இவன் ஏதோ விஐபி போலவும் அவள் வாசல் வரை வந்து வரவேற்பது போலவும் எண்ணி தன்னையே நொந்து கொண்டான் சுப்பிரமணி. வீட்டினுள் ஆள் அரவமே இல்லாமலிருந்தது. பிரகாஷ் பெருந்துறை போயிருக்கலாம் என நினைத்தான். நேற்று அருகில் அமர்ந்து ஆயிரம் கேள்விகள் கேட்ட இவள் அப்பா என்னவானார்?

“ஏன் திடீருன்னு போனை கட் பண்ணிட்டீங்க கீதா?”

“சங்கடப்பட்டீங்களா? பின்ன வாங்கன்னு சொன்னா சரின்னு சொல்றதை விட்டுட்டு சித்தப்பா சித்தின்னு மழுப்பினா என்ன பண்ணுறது? கோபம் வந்திடுச்சு எனக்கு! ஆனா அதுக்காக சாரி எல்லாம் கேக்க மாட்டேன். என்ன சாப்பிடறீங்க?”

“எனக்கு இப்ப எதும் வேண்டாங்க கீதா”

“அட கோவிச்சுக்காதீங்க! என்னாச்சு உங்க அக்காவை எங்கண்ணனுக்கு கட்டிக்குடுக்க இஷ்டமில்லையா உங்களுக்கு?”

“நானே எதிர்பார்க்காத காரியமெல்லாம் நடந்துட்டு இருக்குங்க கீதா. நல்ல காரியம் நடக்குறப்ப இடைஞ்சலா ஒரு வார்த்தை பேசக்கூடாதுன்னு விட்டுட்டேன்”

‘”அப்ப உங்க தங்கச்சி வாழ்க்கை பெரியவங்க பேசி முடிவு பண்றதால தான் நல்லா இருக்கும்னு நீங்க நினைக்கறீங்க இல்லியா. எங்கண்ணன் செந்திலை குடிகாரன்னு சொன்னதை காதுல வாங்கிட்டு பேசுறீங்க”

“யாருங்க இப்ப குடிக்காம இருக்காங்க? அதெல்லாம் ஒரு தப்புன்னு பார்த்தா இங்க பெண்களுக்கு கல்யாணமுன்னு ஒன்னு நடக்குமாங்கறதே சந்தேகம் தான். குடிக்காம இருக்கிறவங்க வெளிப்பார்வைக்கு நல்லவங்களா தெரிவாங்க. ஆனா வேற தப்பு இருந்தா அது கல்யாணத்துக்கு பின்னால தெரிய வந்தா என்ன செய்யுறது?”

“சரி நீங்க குடிப்பீங்களா?”

“நான் வாரத்துல ஒரு நாள் குடிப்பேன்”

”அதை நான் வேண்டாமுன்னு சொன்னா நிறுத்திடுவீங்களா?”

“கண்டிப்பா!” என்றான் உடனேயே. இல்லை என்று மழுப்பினால் அப்போது போலவே கோபம் வந்து ஏதாவது சொல்லும் பெண்ணாக தெரிந்தாள் கீதா. அவள் நிஜமாகவே இவனைப்பார்த்து புன்னகை ஒன்றை வீசினாள். அது இவனுக்கு எக்காலத்துக்கும் போதுமானதாக இருந்தது. தவிர இதுவெல்லாம் புதிதாகவும் இருந்தது இவனுக்கு.

“ரொம்ப தேங்ஸ். உங்க போன் நெம்பரை எனக்கு குடுங்க” இவன் கொடுத்தான். தன் அலைபேசியில் பதிவு செய்தவள் இவனுக்கு கால் கொடுத்தாள்.

“என் பேரை பதிவு செஞ்சுக்கங்க. எப்போ கூப்பிட்டாலும் எடுக்கணும். நான் பண்ணுறப்ப ஹலோ யாருங்கன்னு ஒரு நாள் நீங்க கேட்டுட்டாலும் எனக்கு மசக் கோபம் வந்துடும். இப்பவே சொல்லிட்டேன்”

“ஏங்க அப்படி?”

“அது அப்படித்தான்” என்றாள் கீதா.

எதிர்பார்த்த திருமண நாளும் சீக்கிரமே வந்து விட்டது. காலையில் முகூர்த்தம் என்கிற போது வழக்கமில்லாத வழக்கமாக பெண்வீட்டார் பெண்ணைக் கூட்டிக்கொண்டு மாப்பிள்ளை ஊர் வந்து சேர்ந்த போது மணி இரவு ஒன்பதை தொட்டிருந்தது. அவர்கள் ஒரு அரசாங்க பேருந்தை வாடகைக்கு எடுத்து வந்திருந்தார்கள். மாப்பிள்ளை வீட்டுக்கு நேராகச் செல்வதை விட அவர்கள் நிறுத்த்த்திலேயே தங்கள் பேருந்தை கோவிலுக்கு அருகாமையில் நிறுத்தி விட்டு இரண்டு பேர் மட்டும் தகவலைச் சொல்ல மாப்பிள்ளை வீட்டுக்கு கிளம்பினார்கள்.

சுப்பிரமணி தன் சித்தப்பனுடன் மாப்பிள்ளை வீட்டுக்குச் சென்றான். அங்கு வாசலில் பாய் போட்டு மாப்பிள்ளையின் உறவுக்காரர்கள் படுத்திருந்தார்கள். இன்னார் என்று சித்தப்பன் தான்விசயத்தை சொன்னார். அவர்கள் தடுமாறினார்கள். எங்கு தங்க வைப்பது என்பது அவர்களுக்கு பிரச்சனை. ஆனால் பேசுகையில் இரவு வந்து விடுவதாகத் தான் பேச்சு. அதற்கும் சம்மதம் சொன்ன ஆள் மட்டும் மிஸ்ஸிங். இனி விடிய விடிய பேருந்தில் வந்தவர்கல் எங்கு இந்த ஊரில் தங்குவது? சித்தப்பன் பெருந்துறையில் அறை எடுத்து தங்கும் யோசனை சொன்னார். சுப்பிரமணி இறுதியாய் கீதாவின் நெம்பரை எடுத்து அழைத்தான்.

“சொல்லுங்க! ஆச்சரியமா இருக்கு! நீங்க என்னை கூப்பிடறது?” என்ரவளிடம் விசயத்தை சொன்னான் சுப்பிரமணி. இதோ அண்ணனிடம் பேசிவிட்டு உடனே கூப்பிடுவதாக கீதா சொன்னதும் தான் நிம்மதியானான். சொன்னது மாதிரி உடனே பிரகாஷ் தான் கூப்பிட்டான்.

“நம்ம வீடு இருக்கப்ப ஏங்க நீங்க தடுமாறோணும்?” என்றவன் சகல ஏற்பாடுகளையும் வீட்டின் மாடியில் செய்தான். ஐம்பது பேருக்கு உண்டான சமையலை உள்ளூர் ஆட்கள் வைத்து சிறப்பாக ஏற்பாடு செய்தான். விடியும் வரை நம்ம வீட்டில் தங்கிக் கொள்ளவேணும் என்ற அன்புக் கட்டளையையும் போட்டு விட்டான். ”இதான் நம்ம அம்சவேணிக்கி மொதல்ல பார்த்த மாப்பிள்ளை.. சாதகம் கூடி வரலைன்னு ஊருக்குள்ளயே இவருதான் ஏற்பாடு செஞ்சவரு” என்று வந்த சனம் பேசிக் கொண்டது! பிரகாஷ் அம்சவேணியை பார்த்ததும் அசந்து தான் போனான். போட்டோவில் பார்த்ததை விட நேரில் விக்கிரகம் மாதிரி ஜொலித்தாள். இரவோடு இரவாக பேசி தாலி கட்டி விட வேண்டும் என்றெல்லாம் யோசித்து விடியும் வரை தவித்தான். இந்த நேரத்தில் கீதா சுப்பிரமணியை ஓரம் கட்டியிருந்தாள்.

“என்னை உங்களுக்கு பிடிக்குமா? பிடிக்காதா?”

“உங்களை பிடிக்கலைன்னு எந்த முட்டாளுங்க சொல்வான்?”

“உங்களை மொதல் வாட்டி பார்த்தப்பவே எனக்கு தோணிடுச்சுங்க!”

“என்னன்னு?”

“கட்டினா உங்களைத்தான் கட்டிக்கணும்னு”

“நான் சாதாரண மோட்டார் மெக்கானிக்குங்க கீதா”

“அப்ப இப்பத்தான என்னை புடிக்கும்னு சொன்னீங்க. இப்ப மாத்தி பேசுறீங்க பார்த்தீங்ளா”

“ஏங்க நீங்க எங்கே நான் எங்கே! ஆசை எல்லோருக்கும் வர்றது சகஜங்க”

“அப்ப நான் தூங்கப் போகவா? இதோட என்னை கூப்பிட மாட்டீங்க! உங்க அக்கா கல்யாணம் முடிஞ்சதும் நீ யாரோன்னு போயிடுவீங்க! அப்படித்தானே! அந்தப்பக்கம் பார்த்துட்டு இருந்தா நான் என்ன முடிவு பண்ணுறது? என்னை பாருங்க! இன்னிக்கி எவ்ளோ சந்தோசமா இருக்கேன்னு உங்களுக்கு தெரியுமா? என்னைத்தான கூப்பிட்டீங்க! அதான் எனக்கு சந்தோசம். பாக்க மாட்டிங்ளா? நான் போகவா?” என்றதும் இவன் முகம் தூக்கி அவளை இருளில் பார்த்தான். கீதாவை அருகில் இழுத்து அணைத்துக் கொள்ள வெண்டுமென்ற ஆசை தோன்றியது! கைகளை நீட்டினான். அவள் ஆச்சரியமாய் இவன் கைகளுக்குள் வந்து நுழைந்து கொண்டாள்.

“எனக்கு முத்தம் வேணும்” கேட்ட அவள் குரல் குழந்தை வடிவெடுத்திருந்தது. இவன் அவள் கன்னத்தில் இதழ் பதித்தான். பத்தாது! என்றாள்.

0000000000000000000

“என்னடி உன் தம்பிகாரன் தோட்ட வீட்டுக்காரன் கூட உன்னை ஜோடி சேர்த்தவே பார்த்தானாமா?” முதலிரவு அன்று செந்தில் அம்சவேணியிடம் பேசிய முதல் பேச்சே அப்படித்தானிருந்தது. செந்தில் முதலிரவு அறைக்குள் பாட்டிலைத் திறந்திருந்தான். அம்சவேணி எதுவும் பேசாமல் குடித்துக் கொண்டிருக்கும் அவனைப் பார்த்தாள்.

“அந்தன்னிக்கி நைட்டே விருந்து தடபுடல் பண்ணினானாமா துணிக்கடைக்காரன். அவன் எதுக்குடி செலவு பண்டி விருந்து போடணும் உங்களுக்கு? போட்டு உன்னை தூக்கிட்டு போய் காரியத்தை முடிச்சுட்டானா? என்னடி ஒன்னும் பேசாம உம்முன்னே இருக்கே? அப்படியே தாலிய கட்டச் சொல்லியிருக்கலாம்ல நீயி! என்னை எதுக்கு வந்து கட்டிக்கிட்டே? நானு ஒரு கட்டிங் மாஸ்டரு. துணிக்கடைக்காரன் செவப்புத் தோலுக்காரன். நீ செந்திலையே கட்டிக்க! அப்பப்ப நான் உன்னை வெச்சிக்கறேன்னுட்டானா? சொல்லுடி!” என்று தள்ளாடி எழுந்தவனை பயத்துடன் பார்த்தாள் அம்சவேணி.

கிட்டே வந்த செந்தில் சுவற்றில் இந்த நேரம் வரை சாய்ந்து நின்று கொண்டிருந்தவள் கன்னத்தில் அறைந்தான். “நான் ஒருத்தன் பேசிட்டே இருக்கன் நீ ஊமச்சியாட்ட ஒன்னும் பேசாம கேட்டுட்டே இருக்கியாடி? கொளப்பலூர்காரிக எல்லாரும் ஊமச்சிகளாடி? ஒன்னு அப்படி எல்லாம் இல்லீன்னு சொல்லணும்! இல்ல ஆமான்னு சொல்லணும்!”

“எனக்கு நீங்க சொல்ற துணிக்கடைக்காரன் யாருன்னு கூட தெரியாதுங்க!” என்றாள்.

“பாத்தியா என்னை கேனையன்னு நெனச்சிட்டு சொல்றே! ஏண்டி அவன் வீட்டுலயே போயி வெடிய வெடிய கிடந்துட்டு இப்ப யாருன்னு தெரியாதுங்றே?”

“உங்க வீட்டுல எடம் இல்லீன்னு பேசிட்டு இருந்தாங்க! எங்க சித்தப்பன் தான் அந்த வீட்டுக்கு கூட்டிட்டு போனாருங்க! அந்த வீடு இந்த ஊர்ல எவத்திக்கி இருக்குன்னு கூட இப்ப எனக்கு தெரியாதுங்க!”

“அட என் வித்தாரகள்ளி! பழமொழி தெரியுமா? வித்தாரகள்ளி வெறவுக்கு போனாளாம் கத்தாழ முள்ளு கொத்தோட ஏறுச்சாம்! எனக்கு சின்ன வயசுலயே காது குத்திட்டாங்கடி! அப்ப அந்த ஊட்டுல துணிக்கடைக்காரனை நீ பாக்கவே இல்லியா? உங்க ஊர்க்காரனுக அவனுக்கே உன்னை கட்டி வெச்சிடலாம்னு பேசினானுகளாமா!”

அம்சவேணி கண்ணீர் சிந்தினாள். இப்படி ஒருத்தனுக்கு வாழ்க்கைப்பட்ட கொடுமைக்கு வீட்டில் சும்மா இருந்திருக்கலாமென நினைத்தாள்! இவன் சொல்லும் துணிக்கடைக்காரனை அந்த வீட்டில் இவள் பார்க்கத்தான் செய்தாள். அவன் இவன் ஊர்க்கார்களோடு ரொம்ப நாள் பழகியவன் போலத்தான் பேசிக் கொண்டிருந்தான். அவன் ஜாதகமும் இவள் ஜாதகத்தோடு சேர்ந்திருந்ததாய் பேசிக்கொண்டு தான் இருந்தார்கள். அவன் தங்கை கீதா இவளிடம் அப்படி அன்பாய் பேசினாள்.

பேசிக்கொண்டிருந்த செந்தில் பாயில் சாய்ந்து முனகிக் கொண்டே கிடந்தான். இவள் கதவு நீக்கி வெளிவந்தாள். இவள் மாமியார் வாசல்படியில் படுத்திருந்தாள். அவள் தூங்கவில்லை போலும்.

“என்னத்த ஒளறிட்டே இருந்தானே? உன்னை அடிச்சு வெச்சிட்டானா? இத்தன நாளு என்னை அடிச்சுட்டு இருந்தான். நீ வந்ததும் எல்லாம் சரியாயுடும்னு நெனச்சேன்.” என்றது.

000000000000000000000000000

ஈரோடு பழனியப்பா மண்டப வாசலில் ப்ளக்ஸில் பிரகாசும் மகாலட்சுமியும் சிரித்தபடி நின்றிருந்தார்கள். வீடு தேடி வந்து பத்திரிக்கை கொடுத்து வந்திருந்தான் பிரகாஷ் சுப்பிரமணிக்கு. அதனாலேயே இரவில் மண்டபத்திற்கு வந்து விட்டான் சுப்பிரமணி. வந்த இட்த்தில் இத்தனை கசமுசாக்கள் நடக்குமென நினைத்திருந்தால் வந்திருப்பானா? முதலில் மண்டபத்தில் நுழைந்த்துமே இவனுக்கு அதிர்ச்சி கொடுத்தவன் பிரகாஷ் தான். அழையா விருந்தாளி வந்துவிட்டது போல முகத்தை திருப்பிக் கொண்டான். சுப்பிரமணிக்கு ஒன்றும் விளங்கவில்லை. இவனாக அவனை நோக்கிச் சென்றாலும் அவன் இவனைத் தவிர்த்து வேறொருவரிடம் பேச்சு கொடுத்து பிசியாய் இருப்பது போல் காட்டிக் கொண்டான். வந்ததிலிருந்து கீதா வேறு இவன் கண்ணில் படவில்லை. என்னதான் இருந்தாலும் அண்ணன் திருமணத்தில் வரவேற்பில் அவள் நிற்க வேண்டுமல்லவா!

தனித்து ஒரு சேரை இழுத்துப்போய் ஓரம்போட்டு அமர்ந்தான். மண்டபத்தில் தெரிந்த முகம் என்று ஒருவரும் கண்ணில் படவில்லை. கண்ணில் பட்ட ஒன்றிரண்டு சீனாபுரம் பெண்களும் தலையைஆட்டிவிட்டு சாப்பாட்டு பந்திக்கே சென்றார்கள். மேடையில் மணமக்கள் சிரித்தபடி வணங்கிக் கொண்டிருந்தார்கள். போன் செய்தாவது கீதாவை கூப்பிடலாமா என்று நினைத்தான். அப்படியே அவள் வந்தாலும் இத்தனை சொந்தபந்தங்கள் உள்ள இடத்தில் தன்னிடம் வந்து எப்படி பேசுவாள்? என்ற நினைப்பு வந்ததும் அவளை கூப்பிடும் எண்ணத்தை விட்டொழித்தான். அந்த நேரத்தில் தான் “மச்சினா டேய்! இங்க ஏண்டா தனியா உக்காந்துட்டே?”என்று கொஞ்சம் தள்ளாட்டமுடன் செந்தில் இவன் அருகில் வந்து நின்றான். இவன் எழுந்து “உக்காருங்க மாமா, நான் இன்னொரு சேரை எடுத்துட்டு வர்றேன்” என்று போய் காலியாய் இருந்த இன்னொரு சேரை எடுத்து வந்து செந்தில் அருகில் போட்டு அமர்ந்தான்.

“மாமா அக்காவை கூட்டிட்டு வந்தீங்களா?” என்றான்.

“எதுக்கு? உங்கொக்கா அதா மேடையில நிக்கானே துணிக்கடைக்காரன் அவனை கூட்டிட்டு ஓடறதுக்கா?”

“மாமா என்ன மாமா இப்படி பேசறீங்க?”

“பின்ன எப்படிடா பேசுறது? கூறுகெட்ட குடும்பமுடா உங்க குடும்பம். எப்படியோ எங்கிட்ட கொண்டாந்து தள்ளி உட்டுட்டீங்க! இந்தக்காலத்துல எவண்டா பத்து பவுனுக்கு செரீன்னு சொல்லி ஒருத்தி கழுத்துல தாலி கட்டுவான்? அவ என்னடான்னா கலியாணத்தன்னிக்கே துணிக்கடைக்காரன் ஊட்டுல படுத்து எந்திரிச்சி வர்றா?.. டேய் மச்சினா! ஏண்டா நீ பாட்டுக்கு போறே? டேய்!” என்று செந்தில் போட்ட சப்தத்தில் மண்டபமே திரும்பி யாரது? என்று பார்த்தது.

சுப்பிரமணிக்கு மாமனை ரெண்டு காட்டு காட்டலாம் என்று கோபம் வந்ததால் தான் கிளம்பி வந்தான் வெளிவாசலுக்கு! என்ன இப்படி பேசுகிறார்? தண்ணி அடித்து விட்டால் என்ன பேசுவது என்று கூட தெரியாமல் பேசுவதா? அக்கா இவரோடு வீட்டில் என்ன பாடு படுகிறதோ? கார்கள், பைக்குகள் நிற்குமிடம் வந்து சிகரெட் ஒன்று பற்ற வைத்து இழுத்தான். அப்போது இவன் அலைபேசி அலறியது! எடுத்து யாரென பார்த்தான். கீதா தான்.

“சொல்லுங்க கீதா! எங்க மண்டபத்துல உங்களை எங்க தேடியும் காணோமே? கீதா அழறீங்களா கீதா? என்னாச்சு?” என்று இவன் கேட்டும் அவள் அழுகை தொடர்ந்து கொண்டே இருந்தது.

“என்னான்னு சொல்லிட்டு அழுங்க கீதா! இப்ப எங்க இருக்கீங்க?”

“மண்டபத்துல அண்ணன் ரூம்ல தான் இருக்கேன்ங்க. அண்ணன் உங்களை எதாச்சும் சொல்லுச்சா?”

“இல்லைங்களே கீதா! ஆனா என் கிட்ட முகம் கொடுத்து பேசலை. நான் கிட்ட போனாலும் ஒதுங்கிப் போயிடுறார்.”

“நீங்க சாப்புட்டீங்களா?”

“இன்னும் இல்லங்க கீதா”

“இங்க நீங்க சாப்பிட வேண்டாம். இங்க இருக்கவும் வேண்டாம். நீங்க போயிடுங்க”

“இப்படி திடீருன்னு சொன்னா எனக்கு ஒன்னும் விளங்கலைங்க கீதா”

“நான் சொன்னா கேப்பீங்ளா மாட்டீங்ளா?”

“கேட்குறேன் சொல்லுங்க கீதா”

“எங்கண்ணன் கிட்ட இன்னிக்கி உங்களை விரும்புறேன்னு சொன்னேன். காச்சு மூச்சுன்னு கத்திட்டார். அடிக்கவே வர்றார். அம்மா தான் தடுத்துச்சு! நான் மறுபடி ரெண்டு நாள்ல உங்களுக்கு போன் பண்ணுறேன்ங்க! ஆனா இதுக்காக நீங்க சங்கடப்பட வேண்டாம். நான் பாத்துக்கறேன். நீங்க புறப்படுங்க! சரியா?”

“சரிங்க கீதா, வெளிய தான் நிக்கேன் அப்படியே கிளம்பிடறேன்”

“சங்கடமில்லீங்களே உங்களுக்கு?”

“இங்க பாருங்க கீதா சும்மா அழுதுட்டே இதை சொன்னீங்கன்னா நான் எப்படி போவேன் இங்க இருந்து? உங்களை பார்க்கணும்னு தான் வந்தேன். உங்களை காணோம். எனக்கு இங்க என்ன வேலை? ஆனா ரொம்ப சண்டை போட்டுட்டு இருக்காதீங்க. நான் கிளம்புறேன்” இவன் போனை அணைத்து விட்டு கிளம்பலாம் என்ற போது செந்திலை தள்ளிக் கொண்டு இருவர் வந்தனர். இவன் அவர்களை நோக்கி ஓடினான்.

“தண்ணியப் போட்டுட்டு வந்து மண்டபத்துல என்ன பேசுறதுன்னு தெரியாம சவுரீத்துக்கு பேசுனா என்னடா அர்த்தம்? வெளிய கொண்டி வீசிட்டு வாங்கடா!” ஏனுங் ஏனுங்! என்ரு இவன் ஓடி அவர்கள் முன் நின்றான்.

“வாடா மச்சினா! என்னை அடிக்கிறானுகடா இவனுக! அப்படி நான் என்னத்த சொல்லிட்டேன். உங்கொக்காளை ஊருக்குள்ள துணிக்கடக்காரன் வெச்சிட்டு இருக்கான். இங்க பெரிய மனுசன் மாதிரி பெட்ரோல் பங்க் ஓனர் புள்ளைய கட்டுறான்னு சொன்னேன் தப்பாடா?” சுப்பிரமணி அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு செந்திலை மண்டபத்தை விட்டு வெளியே கூட்டி வந்தான். வந்த பேருந்திலேயே செந்திலை ஏற்றி சீனாபுரம் வந்திறங்கினான். சாய்ந்து சாய்ந்து விழப் போனவனை தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு வீடு வந்தான் சுப்பிரமணி. அக்காள் தான் கதவு நீக்கி வெளிவந்ததும் அழுதாள். உள்ளே கொண்டு போய் பாயில் படுக்க வைத்து விட்டு வெளிவாசல் திண்ணையில் வந்தமர்ந்தான்.

”மாமன் தண்ணி போடுதுன்னு ஏன் வீட்டுக்கு கூட நீ சொல்லாம விட்டுட்டே அக்கா?”

“அவரு போடாத நாள் தான் இல்லடா. இதை என்னன்னு உனக்கு சொல்ல? வீணா சண்டை தான் வரும். இது கூட பரவால்லடா எந்த நேரமும் துணிக்கடைக்காரனோட நான் தப்பு பண்ண போறதா சொல்லிட்டே இருக்காப்ல”

“அப்படி எல்லாம் இல்லன்னு சொல்ல உனக்கு வாய் இல்லியாக்கா?”

“சொன்னா மட்டும்? தண்ணி போடலின்னா தங்கமா இருக்காப்ல”

“அவரு மாமன் கிட்ட நான் போய் பார்த்து பேசவாக்கா?”

“அதும் வேஸ்டுடா! அவரு இவருக்கும் மேல பேசுவாரு. அன்னிக்கி கடைவீதியில பிரகாஷ் எதேச்சையா பார்த்து பேசினாரு! அதை பார்த்துட்டு யாரோ இவருக்கு சொல்லியிருக்காங்க? எங்க சந்திக்கறீங்க ரெண்டு பேரும்னு அடிக்கிறாப்லடா!”

“பேசாம நம்ம வீட்டுல கொஞ்சம் நாள் வந்து இருந்திடேன் அக்கா”

“அங்க வந்து உக்கார்ந்துட்டா அம்மா அப்பாக்கு சங்கடம்டா! போக ஊர்ல வேற தப்பா பேசுவாங்க. நான் இங்கியே இருக்கேண்டா”

“இந்த வீட்டுக்கு நான் முதல்ல வந்தப்பவே கொஞ்சம் வாய் திறந்து பேசியிருந்தன்னா இப்ப இவ்ளோ துன்பம் இருந்திருக்காதுக்கா! ஆனா என்னமோ எனக்கு மனசுல ஒப்பலைதான் அப்பவே”

“இனிப்பேசி என்ன பண்ணமுடியும்டா! வீட்டுல மட்டும் சொல்லிடாதடா சுப்பு. அவங்களா பேசி பண்ணி வச்சாங்க. நானும் போகப் போக சரியாயுடும்னு நம்பிட்டு இருக்கேண்டா. சாப்டுட்டு போறியாடா?”

“இல்லக்கா மண்டபத்துலயே சாப்டுட்டு தான் வந்தேன். நான் கிளம்புறேன்க்கா” என்றவன் எழுந்து அக்காவின் வாழ்வை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டே நிறுத்தம் வந்தான். அதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் அவனால்! நாலு பெரிய மனிதர்களை வைத்து பஞ்சாயத்தா பேசமுடியும் சந்தேகப்படுவதற்கெல்லாம்?

00000000000000000000000000000

கொடுவேரி நீர்வீழ்ச்சியில் தலை கொடுத்து சின்னப்பிள்ளை போல விளையாடிக் கொண்டிருந்தாள் கீதா. கூடவே நின்றிருந்த சுப்பிரமணியின் வெற்றுடம்பின் மீது தண்ணீரை வேறி அடித்துக் கொண்டிருந்தாள். ”போலாம்டி நடுங்குது ஒன்னரை மணிநேரமா தண்ணிலயே இருக்கோம்டி” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான் அவளிடம் சுப்பிரமணி. அவளோ ”இன்னம் பத்தே நிமிசத்துல கரை ஏறிடலாம்டா!” என்று பல தடவை சொல்லி விட்டாள். இருந்தும் அவள் முகத்தில் இருக்கும் சந்தோச களைக்காவே இவனும் ஒன்றும் கடுமையாகவும் கூப்பிடவில்லை.

“குளுருதுன்னா என்னை கட்டிக்கோங்க கிட்ட வந்து”

“இங்க நீயும் நானும் மட்டும் தான் தண்ணீல இருக்கோம்னா நீ இதை சொல்லணுமாடி?”

“யாரோ இருந்துட்டு போறாங்க நமக்கு என்ன? அவங்க என்ன நம்மையவா பார்த்துட்டு இருக்காங்க? இங்க பாருங்க உங்க லைசென்ஸ் இருக்கு” என்று இரண்டு நாள் முன்பு மருத மலையில் இவன் கட்டிய தாலியைக் காட்டினாள். அருவி நீரில் குளித்துக் கொண்டிருந்த அனைவருமே அவரவர் பாட்டுக்குத் தான் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

“நீங்க இதுக்கும் முன்ன இங்க வந்திருக்கீங்ளா?”

“பலதடவை வந்திருக்கேன் கீதா நண்பர்களோட. என்ன வர்றப்ப சரக்கை அடிச்சுட்டு போதையில தான் தண்ணியில இறங்கியிருக்கேன். இன்னிக்கி உன்கூட வந்ததால கம்முன்னு வந்துட்டேன்.”

“அதான் போலாம் போலாம்னு சொல்லிட்டே இருக்கீங்ளா? என் கிட்ட சொல்ல வேண்டிது தான. நானும் உங்களுக்கு கம்பெனி குடுத்து ஒரு டம்ளராவது அடிச்சுட்டு வந்து இறங்கி இருப்பேனே”

“வாயிலயே அடிப்பேண்டி”

“எங்கே அடிங்க பார்க்கலாம்” என்றவள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு இவனை நெருங்கி வர கையெடுத்து கும்பிட்டு பின்வாங்கினான் சுப்பிரமணி. “பேடி” என்றாள் தலை சாய்த்து.

“சரி போலாம்” என்றாள்.

“பார்த்து கால் வச்சி வா கீதா சின்னச் சின்ன மொட்டுப் பாறைகள் எல்லாம் வழுக்கும்”” என்றவன் அவள் கைப்பிடித்து தண்ணீரில் கரை நோக்கி முன் நகர்ந்தான். ஆனால் இவனே ஒரு சிறு பாறை வழுக்கி தண்ணீரில் தலைநனைய விழுந்தான்.

“என்னை சொல்லிட்டு பல்ட்டி போடறது யாரு? நாங்க காலேஜ் ப்ரண்ட்ஸ் எல்லாம் ரெண்டு முறை இங்க வந்திருக்கோம். ஆனா பசங்க ரொம்ப கிண்டல் பண்ணதால சீக்கிரம் கிளம்பிட்டோம்.”

“மீன் சாப்பிடறியா கீதா?”

“எனக்கு வேண்டாம் இன்னிக்கி. அதும் வெள்ளிக் கிழமை. நீங்க வேணா சாப்பிடுங்க”

“எனக்கு கிழமையெல்லாம் ஒரு கணக்கில்ல கீதா. நீ வேண்டாம்னு சொன்னதால எனக்கும் வேண்டாம்”

“எனக்கு இன்னிக்கி பர்ஸ்ட் நைட் வேண்டாம். அத்த்தை சொல்லிட்டு இருந்திச்சு காலையில. உங்களுக்கு?”

“அது மட்டும் முடியாது. எனக்கு வேணும்”

“எனக்கு பயமா இருக்குப்பா அதை நெனச்சா!”

“பயக்குற பிள்ளையா வீட்டுல அண்ணன் சொன்னதை கேக்காம என்னைத் தேடி என் வீடு வரும்?”

“நான் வந்த்து பிடிக்கலையா உங்களுக்கு?”

“பிடிக்குது. ஆனா இப்படி உன் வீட்டார் யாரும் இல்லாம என் அப்பா அம்மாவை மட்டும் கூட்டிட்டு மருதமலை போய் கல்யாணம் செஞ்சது தான் சங்கடம்”

“எங்க அப்பா அம்மா தான் சந்தோசம்னு சொல்லிட்டாங்களே! அப்புறம் என்ன?”

“என்ன இருந்தாலும் அவங்களும் வந்திருந்தா எனக்கு சந்தோசம்”

“அவங்களுக்கு ஒடம்புக்கு முடியாதுங்க. ஆனா என் விருப்பப்படி சந்தோசமா அனுப்பி விட்டாங்க. ஏன் உங்களுக்கு சிரமம்? இன்னிக்கி நேரா எங்க வீடு போகலாம்”

“ஐய்யோ உங்க அண்ணனை நினைச்சா எனக்கு பயம். நேக்கா வந்து பேசிட்டு உன்னோட காரியத்தை சாதிச்சுட்டே பார்த்தியாடான்னு கேட்டா என்ன பதில் சொல்வேன்? ஏன் அப்படியே நின்னுட்டே கீதா?”

“இப்படி பேசினீங்கன்னா எனக்கு கோபம் வரும். நான் எங்க அண்ணனுக்கு பதில் சொல்லிக்கிறேன் போதுமா! அப்படி கேட்கிறவரை நான் சும்மா இருப்பனா?”

“வேணாம்டி, என்னால உங்க அண்ணன் கூட ஏன் சண்டை உனக்கு?”

“இதென்ன வம்பு. எனக்கு உங்களை பிடிச்சிருந்துச்சு கட்டிக்கிட்டேன். அவனுக்கு என்ன இதுல சங்கடம்? எங்க அண்ணியே எங்கண்ணனை மிஷினா நீங்கன்னு சத்தம் போடுது. எங்கண்ணன் பார்த்து எனக்கு கட்டி வெச்சா அவனை மாதிரி ஒரு மிஷினைத்தான் கட்டி வைப்பான். அவன் நாலஞ்சு கடை கண்ணி டவுன்ல வச்சிருப்பான். அவனை இழுத்துட்டு கொடுவேரி வரமுடியுமா நான்? இல்ல எங்கண்ணன் தான் வாதங்கச்சி ஊட்டி போய் ப்ளவர் ஷோ பார்த்துட்டு வரலாம்னு கூட்டிட்டு போயிருக்கானா? எந்த நேரமும் கடை கடை கடை! பாருங்க எங்க அண்ணி சீக்கிரம் டாட்டா சொல்லிட்டு ஈரோடு போயிடும்”

“நல்ல வார்த்தை பேசு கீதா! அதனால உங்க அப்பா அம்மாக்கும் அண்ணனுக்கும் சிரமம்”

“சிரமம் தான். அன்னியை கட்டிட்டு வந்த்துல இருந்து ஒரு நாள் ஜாலியா எங்காவது கூட்டிட்டு போனானா எங்கண்ணன்? பாவம் எங்கண்ணி சரி அதை விடுங்க இன்னிக்கி எங்க அம்மாவை பார்க்கணும்னு இருக்கு எனக்கு. நாம போலாம்”

“ சரி போலாம். அந்த எங்கம்மா சொன்ன பர்ஸ்ட் நைட் என்னாவுறது?”

“அதான் பயமா இருக்குன்னு சொல்லிட்டனே”

“அப்ப நான்..”

“அப்ப நீங்க?”

“இல்ல விடு நீ முறைப்பே”

“இப்ப சொல்ல வந்ததை சொல்லலைன்னாலும் முறைப்பேன்”

“அப்ப நான் உங்க வீடு வர்றதை யோசிக்கணும்”

“லூசு அதுக்கும் இதுக்கும் என்ன இருக்கு?”

“ரெண்டு நாள்ல ஏகப்பட்ட தடவை லூசுன்னு சொல்லிட்டே கீதா”

“ப்ரண்ஸ் கூட பேசிப் பேசி பழக்கமாயிடுச்சுங்க.. அதான் வந்துடுது சாரி! நேரா எங்க வீடு போலாம் ப்ளீஸ்டா”

“இந்த ப்ளீஸ்டாவுக்காகா எங்க வேணாலும் வருவேன். இன்னொருக்கா சொல்லு”

“ப்ளீஸ்டா! இன்னிக்கி பர்ஸ்ட் நைட் வேணாம்”

“அதுக்கு மட்டும் அது வேலை செய்யாது”

இவர்கள் சென்ற போது அண்ணன் வீட்டில் இல்லை. அண்ணியும் இல்லை. அப்பா அம்மாவும் வேலைக்காரியும் மட்டுமே இருந்தார்கள். கீதாவின் அப்பா கேள்விகள் எதுவும் கேட்காமல் மரியாதையாகவே பேசினார். கீதா அம்மாவோடே இருந்தாள். அப்பா ப்ரகாஷுக்கு போன் போட்டு இவன் வந்திருக்கும் விசயத்தை சொன்னார். அவன் வீட்டுக்கு வருவதாக கூட சொல்லவில்லை. கடையில கூட்டம்பா! என்றான். விடைபெற்று வரும்போது கையில் ஒரு பெரிய சூட்கேஸ் கீதா கையில் முளைத்திருந்தது. கழுத்தில் நகைகள் சில முளைத்திருந்தது. இவன் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. கீதா தான் அந்த தகவலை சொன்னாள். அண்ணி காலையில் தான் வீட்டுக்கு அண்ணனிடம் சண்டை போட்டு விட்டு போய் விட்டதாக!

“நீ சொல்லி ஒரு மூனுமணி நேரம் இருக்குமா கீதா உங்க அண்ணியைப் பத்தி. அதுக்குள்ள நடந்திடுச்சு. எதுக்கும் என்னைப்பத்தி எதாச்சும் சொல்லிடாதப்பா” என்றவன் இடுப்பில் கிள்ளி வைத்தாள் கீதா. டூவீலர் சாலையில் சாய்ந்து இவளை மிரட்டியது.

“வண்டில இருந்து விழுந்திடுவனோன்னு பகீர்னு ஆயிடுச்சு”

“அதெல்லாம் கிழ விழமாட்டோம். ஆனா அடுத்தமுறை வண்டியில போறப்ப கிள்ளிடாதே! ஒன்னுகிடக்க ஒன்னு ஆயிடும்”

“இனி உங்கண்ணன் ஈரோடு போய் கெஞ்சி கூட்டிட்டு வருவாப்லையா உங்க அண்ணியை?”

“எங்கண்ணன் போகாது அப்படியெல்லாம். போனவங்களுக்கு வழி திரும்பி வர தெரியும்னு விட்டுடும்”

“நீ என்கிட்ட கோபிச்சுட்டா என்ன பண்ணுவே? பொட்டி தூக்கிடுவியா?”

“நான் எதுக்கு பொட்டி தூக்குறேன்? நீங்க தான் பொட்டி தூக்கணும்” என்றவள் இன்னொரு கிள்ளல் போட்டாள்.

இறப்பு எந்த ஊரில் யார் வீட்டில் நிகழ்ந்தாலும் சாவின் மீதான பயம் அந்த ஊருக்கே வந்து சேர்ந்து விடுகிறது. இறந்தவரை சுடுகாடு தூக்கிப்போய் புதைத்து விட்டு வரும் வரையில் ஊரே சோக முகத்துடன் தான் காட்சியளிக்கிறது. இறந்தவர் நல்லவரோ கெட்டவரோ, வேண்டப்பட்டவரோ சண்டைக்காரரோ யாராக இருந்தாலும் சுடுகாடு வரை பாடையுடன் போய் விட்டு பின் இறந்தவர் வீடு திரும்பி விளக்கை கும்பிட்டு விட்டு வீடு போய் குளித்தபின் தான் சாப்பிடவே அமருகிறார்கள்.

– மார்ச் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *