தொழிலாளி வீட்டு தீபாவளி.!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 25, 2017
பார்வையிட்டோர்: 9,153 
 
 

அன்று செவ்வாய்க்கிழமை மாலை நாலுமணி இருக்கும்!

ரங்கன், அவசரமாய் டவுனுக்கு புறப்பட சொக்காயை எடுத்து மாட்டிக்கொண்டு, தன் பழைய ஓட்டு வில்லை வீட்டில் வெளித் திண்ணையில் கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்ட கண்ணாடியை பார்த்து தலையை சீவினான்.

“ஏங்க, ரேசன் கடையில அரிசி போடராங்கலாம், வாங்கிட்டு அப்படியே இந்த கோதுமையை கொஞ்சம் அரைச்சுட்டு வந்தரலாமே.!”

“நாளைக்கு தீபாவளி பசங்களுக்கு அரிசி ஊரவெச்சு ஆட்டி இட்லி தோசை இல்லைனா பூரிகீது சுட்டுக்கொடுக்கலாம்.!”
என்று..

திண்ணைமேல் அமர்ந்து ஊசியில் துணிப்பூ கோர்த்துக்கொண்டு இருந்த ரங்கனின் மனைவி ராமாயி அவன் பயணத்தை திட்டத்தை திசை திருப்பினாள்.

தன் கிராமத்தில் நடந்த “நூறுநாள் வேலை” நின்று போயியுள்ளதால், சும்மா இருப்பதற்கு பதிலாக சிறு குழந்தைகளின் ரெடிமேடு ஆடைகளில் அழகுக்காக வைத்து தைக்கும் துணிப்பூக்களை ராமாயி கோர்த்து வருகிறாள். ஒரு துணிப்பூ கோர்க்க அதிகபட்ச கூலி 35 பைசா கிடைக்கும்.

கட்டிடத் தொழிலாளியான ரங்கன் மணல் தட்டுப்பாட்டால் கட்டுமான வேலையில்லாமல் இரண்டுவாரமாக வீட்டில் சும்மாதான் இருக்கிறான்.

மனைவியின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் “சரி நீ சீக்கிரம் கிளம்பு.. நான் அதற்குள் ரேசன் கடைக்கு போய்ட்டு வந்தர்ரேன்.!” என ஸ்மார்ட் கார்டை எடுத்துக் கொண்டு பக்கத்து ஊர் ரேசன் கடைக்கு போய் ஐந்துகிலோ பச்சரிசியும், பத்துக்கிலோ புழுங்கல் அரிசியும் இரண்டு சாக்குப்பையில் வாங்கி கட்டினான்.

“ரங்கா வூட்டுக்கா?” என ரேசன் கடையில் ஏற்கனவே அரிசி வாங்கி மூட்டைகட்டி யாராவது வருவார்களா என்று காத்திருந்த கண்பார்வை குறைந்த குருசாமி ரங்கனை கேட்க ” ஆமாண்ணா வாங்க போகலாம்” ன்னு தன்னுடைய அரிசி மூட்டையை முன்னாடி வச்சுட்டு குருசாமியை பின்னால் அவர் அரிசி மூட்டையுடன் உட்காரவைத்து தன் பழைய மொபட்டை கிளப்பி ஊர் வந்து குருசாமியை அவர் வீட்டில் விட்டுவிட்டு வீடு வந்தான் ரங்கன்.

அரிசி மூட்டையை தின்னைமேல் கிடத்திவிட்டு “ராமாயி போலாமா? ரெடியா?” என்றான். கோதுமை பையுடன் தயாராக ஒரு சிறு ஒயர் பையும் எடுத்துக்கொண்ட ராமாயி “நான் ரோட்டுக்கு வர்ரேன், நீங்க கீழே வாங்க.!” என்றாள். மெயின் ரோட்டுக்கு சற்று மேலே குறுக்குச்சந்தில் அவர்களின் வீடு உள்ளது. பைக்கில் வந்தால் கொஞ்ச தூரம் சுற்றி ரோட்டுக்கு வரவேண்டும். கால்நடையில் நேராக ரோட்டுக்கு வரலாம்.

கோதுமை அரைக்குமிடம் சென்று அந்தம்மாவிடம் ராமாயி கோதுமையை அரைக்க கொடுத்தாள். “எத்தனை கிலோங்க..” என்று அந்தம்மா கேட்க இரண்டு கிலோ என்று ராமாயி சொன்னாள்.

“எங்கம்மா, இப்ப ஒன்னும் சரியில்ல.! மொதல்ல ரேசன் கார்டோட ஓட்டு அட்டை வேனும்னாங்க.! அப்புறம் பாஸ்புக்னாங்க.! இப்போ ஆதார் நெம்பர் வேனுங்கறாங்க.!! எல்லாங் குடுத்தாலும் ஒருகிலோதான் கோதுமைங்கிறாங்க.!” என்று முன்னாடி வந்த பெரியவர் புலம்ப..

“ஓட்டுப்போடும்போது நல்லவங்கல விட்டிர்ரீங்க! இப்ப புலம்புரீங்க! நல்லவிங்க சொல்ரத யார்? கேட்கராங்க..!” என்று இடைப்பட்ட அந்த ஐந்து நிமிடத்துல அந்த பெரியவருக்கு ராமாயி சுருக்கமன அரசியலை விளக்கினாள்.

கோதுமை அரைத்த காசை கொடுத்துவிட்டு மாவை எடுத்துக் கொண்டு வெளியே வந்து கணவன் மனைவி இருவரும் ஒரு பலகாரகடைக்குச்சென்று அரைக்கிலோ லட்டும், அரைக்கிலோ பாதுசாவும், கால்கிலோ முறுக்கும் வாங்கிக்கொண்டு..

ராமாயி இரண்டுவாரமாக துணிப்பூ போட்ட கூலி ரூபாய் 225 ம் வாங்கிட்டு, மளிகை கடையில் பஜ்ஜிமாவு, குளோப்ஜாம் மாவு, தக்காளி, வெங்காயம் இன்னும் சில பொருள் வாங்கி ரூபாய் 230 கொடுத்து விட்டு “கூலி 225 செலவு 230 சமாளிக்க முடியல!” என்ற புலம்பலுடன் இருவரும் இரவு வீடுவந்தனர்.

பண்டிகை நேரத்தில வேலை இல்லாததால் கடன் வாங்கிய ஐந்தாயிரத்தில் மகன்களுக்கு துணியெடுத்த இரண்டாயிரத்து ஐநூறும், மனைவிக்கு முன்னூறு ரூபாய் புடவையும் போக மீதியில் தான் பட்டாசு, மேற்சொன்ன பலகாரம், அடுத்த நாள் கறியெடுப்பதும் அடங்கும்.

முதல் நாள் வாங்கிய பட்டாசு பெட்டியை திறப்பதும் மூடுவதுமக இருந்த இரு மகன்களை பார்த்து ” ஏண்டா.. விடியரத்துக்குள்ள என்ன அவசரம், காலைல வெடிங்க, இப்ப மூடிவையுங்க நவுத்துப் போயிரும்.! சொன்னா கேளுங்க.! வாங்க சாப்பிடலாம்.!” என்று காலையில் செய்த புளிசாதத்தை நால்வருக்கும் ராமாயி பரிமாற அன்று இரவு உணவு முடிந்தது.

அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு எழுந்த ரங்கன் “சாமி எந்திரிங்கடா, தண்ணிகாயவெச்சு ஊத்திட்டு புது துணிய போட்டுக்கிட்டு பட்டாசு வெடிப்பீங்க.!” என்று மெதுவாகத்தான் கூறினான்.

அப்பாவின் சத்தம் கேட்டு “வெடிஞ்சிருச்சாப்பா?” என்ற சின்னவன் “டேய் கார்த்தி எந்திரிடா.! வெடிஞ்சிருச்சு பட்டாசு வெடிக்கலாம்..” என பெரியவனை எழுப்பினான்.

மகன்கள் இருவரும் பட்டாசு வெடிக்கும் மகிழ்ச்சியில் தண்ணியடுப்பை பற்றவைத்து தங்கள் பணிக்கு தயாராகினர்.

இடையில் ரங்கன் தன் மகன்களுக்கு வாங்கிய பட்டாசின் ஒரு பகுதியை தன் நண்பன் மகளுக்கு கொண்டு போய் கொடுத்திட்டு வந்தான்.

“ஏங்க காலைல முக்காக்கிலோ வெள்ளக்கோழிக்கறி, எடுத்துட்டு வந்திருங்க.!”

“பசங்க ஏதோ மொளவாக்கறியாம், அத கேட்டாங்க.! காலைல சாப்பாட்டுக்கு அத செஞ்சுக்கலாம், மதியம் ஆட்டுக்கறி ஒரு கிலோ எடுத்துக்கலாம்.! என்ற மனைவியிடம் மறுவார்த்தை கூறாமல் கறி வாங்க கசாப்பு கடைக்கு புறப்பட்டு சென்றான் ரங்கன்.

தீபாவளியன்று காலை சொன்னபடியே மொளவாக்கறியும் சுடுசோறும் தயாராச்சு.

“போதும் வாங்க சாபிடலாம், மீதி பட்டாசை பொழுதோட வெடிக்கலாம்.!” என்று மகன்களை அழைத்தபடியே..

“மாமா நீயும் வா உனக்கும் சாப்பாடு போடரேன்.! எனக்கு இன்னும் மாவு ஆட்டர வேலை இருக்கு..” என ரங்கனையும் அழைத்தாள் ராமாயி.

“இரும்மா ஒரே ஒரு பட்டாசு வெடிச்சிட்டு வந்தர்ரோம்.” என்று குட்டீஸ் ஒரு டமார் வேட்டை போட்டுட்டு வர..

“டேய் இரெண்டுபேரும் சுத்தமாக கைய கழுவிட்டுவாங்க, அவன் மூஞ்ச்செல்லாம் பார், பட்டாசு மருந்து, போய் சுத்தமா தேய்ச்சு கழுவிட்டு வா.!” என்று அப்பா சின்னவனை எச்சரிக்க..

கையக்கழுவி நால்வரும் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு, அம்மா மாவாட்டவும், மதியம் ஆட்டுக்கறி குழம்புக்கு வெங்காயம் உரிக்கவும் துவங்கினாள். வாண்டுகள் இரண்டும் ஓட்டம் பிடிக்க, அப்பா அடுத்த அறையில் டிவி பார்க்க சென்றார்.

மதியம் ஆட்டுக்கறி குழம்புடன் சாப்பாடு தயாரானது.

“எனக்கு போதும் பசங்களுக்கு போடு.!” ” நீ மொதல்ல சாப்பிடு.!” என்று ரங்கன் பாசம் பொழிய, “நாளைக்கு வேற கந்துக்காரர் வருவார்.!” என்று ராமாயி கூற “ஏம்மா நோம்பில கூட ஒரு வாரம் அவர் விடமாட்டாரா?” என்று பெரியவன் கேட்க “அதெல்லாம் நாளைக்கு பேசிக்கலாம் விடுங்க..” என்று ரங்கன் விவாதத்தை நிறுத்தினான்.

“ஆட்டுக்கறில எலும்பு அதிகமா இருக்கு, இந்த தடவ கறியே சரியில்ல.!” என்ற அம்மாவின் சிறு குறையோடு குடும்பத்தின் நிறைவான மதிய உணவு முடிந்தது.

“இனி என்னை தொந்தரவு பண்ணக்கூடாது.!”
“கொஞ்ச நேரம் படுத்திருந்துட்டுதான் மத்த வேலையெல்லாம்.!” என்று குளித்து தீபாவளிக்கு எடுத்த முன்னூறு ரூபாய் புதுப்புடவையை கட்டிக்கொண்டு “நல்லா இருக்குதா மாமா?” ன்னு ரங்கன் கிட்ட கேட்டுட்டு வெத்தலையை துடைத்து போட்டபடியே கட்டிலில் கண்ணயர்ந்தாள் ராமாயி.

“எங்கப்பா அம்மா.! குளோப்ஜாம் செஞ்சுதரேன்னு சொல்லுச்சு.!” என்று சின்னவன் ஓடிவர “டேய் அவளை எழுப்பீராத, களைச்சு போய் இருக்கிறா.! தூங்கட்டும், பொழுதோட செய்யரதா சொன்னா.!” என்று சின்னவனை தடுத்தான் ரங்கன்.

குடும்பத்திற்காக தன்னையே அற்பணித்த அந்த அழகு தேவதையின் அயர்ந்த தூக்கதில் இருந்த முகத்தை மீண்டுமொருமுறை உற்றுப்பார்த்தபடி கதவை லேசாக சாத்திவிட்டு வெளியே வந்து வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தான் ரங்கன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *