கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 9,771 
 
 

மங்கை எழுந்திருந்து பிளாஸ்டிக் வாளியை எடுத்துக்கொண்டு வாசலுக்குப் போனாள்.

வராந்தாவில் இருந்த தென்னை விளக்குமாற்றால், வரட்டு வரட்டு எனப் பெருக்கத் தொடங்கினாள். இரண்டு நிமிடத்தில் வாசல் பளிச்என்று ஆனது. வளைவுகளுக்கு ஏற்ற வாறு இயங்கிய கைகளில் இருந்து, அழகான கோலம் உதிர்ந்தது. அதுவும் கண்களில் ஒற்றிக்கொள்வது மாதிரி இருந்தது. பார்வதி ஞாபகம்தான் வந்தது. சங்கரலிங்கத்துக்கு ஒரு முறை நெஞ்சுக்குழி ஏறி இறங்கியது.

மங்கை வந்த இரண்டு மணி நேரத்தில் அவளிடம் தோன்றிய முதல் இயக்கம், வாசல் பெருக்கியது தான். உடன் அழைத்து வந்திருந்த பேரன் பிரசாத் மட்டும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டு இருந்தான்.

மதியம் சாப்பாட்டை முடித்து விட்டு, சற்று நேரம் அயரலாம் என நினைத்தபோதுதான் மங்கையின் ஹாரன் சத்தம் கேட்டது. பிரசாத்தும் உடன் வந்தான். முகம் வாடிப்போய் இருந்தது. பலராமனின் ஓங்கிய கைகளும், விசாலாட்சி அம்மாளின் கடுமையான முகமும் உடனே மனதில் தோன்றி மறைந்ததை அவரால் தவிர்க்க முடியவில்லை. வாழ்வின் சாயல் புரிந்துபோகும்போது வார்த்தைகளால் ஒன்றும் செய்வதற்கு இல்லை என்பதால், அவர் ‘வா’ என்று அழைத்ததோடு மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

மங்கை அவரது வீட்டுக் கூடத்தில் இருந்த சோபாவில் உட்கார்ந்தாள். இருவரிடம் இருந்தும் எவ்வித விசாரிப்பும் இல்லை. பரண் மேல் இருந்த பெட்டி ஒன்றை ஸ்டூல் மேல் ஏறி எடுத்தாள். சில புகைப்படஆல்பங் களை எடுத்துவைத்து, மௌனமாகப் பார்த்துக்கொண்டு இருந்தாள். எல்லாமே அவளது திருமணத்துக்கு முந்தைய புகைப்படங்கள். பார்வதி யைக் கட்டிப் பிடித்தபடி, மங்கை முகம் முழுவதும் பூவாக விரிந்திருக்கும் புகைப்படம்; மாவட்டத்தில் முதல் மாணவியாக வந்ததற்கு கல்வி அதிகாரியிடம் பரிசு பெற்ற புகைப்படம்; அவள் சடங்கானபோது கலாமந்திர் ஸ்டுடியோவில் தாழம்பூ ஜடை போட்டு எடுத்துக்கொண்ட படம். மறைந்துபோன சந்தோஷங்கள் புகைப் படங்களாக மாறிப் போவதைப்போன்ற கொடுமை வேறு இருக்க முடியாது. மங்கை வீட்டில் அவளது திருமணத்துக்கு முந்தைய புகைப்படங்கள் எதுவும் இல்லை. பலராமனும் மங்கையும் எடுத்துக்கொண்ட பிரத்யேக மார்பளவு புகைப்படம் மட்டும்தான். படம் கழுவி லேமினேட் ஆகி வருவதற்குள், பலராமன் வீட்டுத் தோட்டக் கிணற்றில் குதித்துவிட்டாள் மங்கை. பக்குவம் இன்மையா, பழக்கம் இன்மையா, எல்லாமே விட்டுப் போனதா தெரியவில்லை. அவளது இந்த முடிவு பலராமன் வீட்டில் அவளை மேலும் மேலும் சிறுமைப்படுத்த ஒரு காரணமாகி விட்டது.

”நீ இப்ப போடறது அம்மாவோட ஸ்பெஷல் கோலம் இல்லியா மங்கை?” – மங்கை ஒரு நிமிடம் வாசலில் போடப்பட்டு இருந்த கோலத்தில் லயித்திருந்தாள்.

”அவங்க வீட்ல இப்பல்லாம் அஞ்சு புள்ளிக்கு மேல கோலம் போடறதே இல்லை. மாமியாருக்கு அது வேற ஆத்திரம். டி.வி சேனல்காரங்க படம் புடிக்க வர்றாங்க… கோலம் போடு. நீதான் ஆர்ட் வொர்க்கில் டிகிரி வாங்கினவளாச்சேனு புடுங்கித் தள்ளினாங்க. முடியவே முடியாதுன்னுட்டேன். ஏச்சுன்னா ஏச்சு… அப்படி ஒரு ஏச்சு. திருப்பி ஏச எவ்வளவு நேரமாகும்?”

சங்கரலிங்கம் அலமாரியில் அவரது மருந்துப் பெட்டியில் மாத்திரைகள் இருக்கிறதா என உறுதிப்படுத்திக்கொண்டார். இன்று இரவு தூக்க மாத்திரை இல்லாமல் தூங்க முடியாது.

மங்கை அடுப்படியைச் சுத்தம் செய்யத் தொடங்கினாள். தாறுமாறாகக்கிடந்த பாத்திர பண்டங்களைச் சீர்படுத்தினாள். பால் டபரா திறந்துகிடப்பதற்குச் சத்தம் போட்டாள். நான்கு வீடு தள்ளி அய்யர் மாமி வீட்டில் இருந்து அரை லிட்டர் தோசை மாவு வாங்கி வந்தாள். சூயிங்கம் மென்று நிழல்போல் தொடர்ந்து போன பிரசாத், பிளாஸ்டிக் கூடையில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையுடன் வந்தான்.

”இன்னிக்குச் சாயந்திரம் வெங்காய ஊத்தப்பம்” என்றாள் மங்கை.

”அய்ய்” என்றான் பிரசாத்.

மதிய சோற்றில் தயிர் பிணைந்து சாப்பிட்டால் போதும் என்று இருந்த சங்கரலிங்கத்துக்கு, மங்கையின் வரவும் வெங்காய ஊத்தப்பமும் அதிகம். இத்தனைக்கும் சங்கர் நகருக்கும் மரவனேரிக்கும் எவ்வளவு தொலைவு இருக்கப்போகிறது. உள்ளூரில் பெண்ணைக் கட்டிக் கொடுத்ததற்கு பார்வதிதான் மிகவும் சந்தோஷப்பட்டாள். எல்லா சந்தோஷமும் இரண்டே மாதங்களில் முடிந்து போனது. என்னென்னவோ காரணங்கள். ‘அத்தனை பேருக்கும் தலைக்கு மேலே கொம்பு முளைச்சது மாதிரி ஈகோ’ என மங்கை ஒற்றைக் காரணத்தில், எல்லாக் காரணங்களையும் அடக்கினாள். பகுத்தாய்வதால் மட்டும் துன்பங்கள் மாறி விடுமா என்ன?

தேங்காய்ச் சட்னியும் சாம்பாருமாக வெங்காய ஊத்தப்பம் வீடு முழுவதும் மணந்து வழிந்தது. சங்கரலிங்கம் கூடுதலாக இரண்டு ஊத்தப்பம் சாப்பிட்டார்.

”ரொம்ப நாளாச்சும்மா நல்ல டிபனா சாப்பிட்டு. ஓட்டல் வரட்டு ரொட்டியும் சால்னாவும் தின்னுத் தின்னு, நாக்கு செத்துக்கெடக்கு.”

”அண்ணனோட நீயும் அமெரிக்கா போயிடேம்ப்பா…”

”நீ உன் புருஷனை உதறிடேம்மா…”

”அப்பா…”- மங்கை பதறினாள்.

”ரெண்டுமே நடக்கப்போறதில்ல.”

”இன்னும் ஒரு ஊத்தப்பம் போடவா?”

”நைட் தூக்கம் கெட்டுடும்.”

”நான் படுறேன்ல தெனம் தெனம் இம்சை. நீயும் ஒருநாள் படு” என்றாள் விளையாட்டுப் போக்கில்.

”தாத்தா, வேப்ப மரத்தில் ஊஞ்சல் இருக்கா?” என்றான் பேரன்.

பழைய விசுவாசம் காரணமாக, தென்னை மட்டை பறிக்க, சப்போட்டாப் பழம் பறிக்க வடிவேலு வருவான். அவன் ஒரு முறை கட்டிக்கொடுத்த ஊஞ்சல் இன்னமும் தோட்டத்தில் உள்ளது. பிரசாத் கதவைத் திறந்துகொண்டு ஓடினான். ”வேகமாக ஆடாதே… பின்னோட சரிஞ்சிடும்” என்ற தாத்தாவின் அக்கறைக் குரல் காதில் விழும் முன்பே பேரப் பிள்ளை ஓடிவிட்டது.

”பிரசாத்! செவ்வாய்க் கிழமை சந்தை முடிஞ்சா, அப்பா ஏழு மணிக்கு வந்துடுவாரு. சீக்கிரம் விளையாடிட்டு வா.”

”முக்கா கிலோ மீட்டர் தூரத்துலதானேம்மா இருக்கோம்?” என்றான் பிரசாத் பதிலுக்கு.

”வாடா என் சிங்கக் குட்டி! ரெண்டாம் கிளாஸ் இன்னும் பாஸ் பண்ணல. ஒனக்கு எப்படிக் கண்ணு சரியா இவ்வளவு தூரம்னு சொல்லத் தெரியுது?”

”அது வேற ஒண்ணுமில்லப்பா. வண்டில என் முன்னாடிதானே நிக்கறான். ஸ்பீடா மீட்டர்ல ரெண்டு ரெண்டா பாயின்ட் கூடறச்செ அரை கிலோ மீட்டர், முக்கா கிலோ மீட்டர்னு கணக்கு வெச்சுப்பான்.

”அட்றா சக்கை. இந்தக் காலத்துப் பசங்க ளுக்குத்தான் எவ்வளவு எக்ஸ்போஷர்.”

”ஆமா! அப்பா, அம்மா மேல் இரும்பு நாற்காலியை விட்டெறிஞ்சா, அதைப் பார்க்கிற அளவு எக்ஸ்போஷர்.”

நான்கு மணி நேரம் கழித்து மங்கையர்க்கரசி வாய் திறக்கிறாள். சங்கரலிங்கம் நிராதரவாகப் பெண்ணைப் பார்த்துவிட்டு, ”என்ன மங்கை நடந்துச்சு?” என்றார்.

பலராமனின் சகோதரி திருமணம், கொழுந்தனின் அடாவடித்தனம் என நூறு காரணங்களுக்கும் மங்கைதான் நோகடிக்கப்படுகிறாள். மனிதர்களை மனிதர்கள் நேசிப்பதுதான் கடினமான விஷயம்போல.

”இவனுக்கு அரைப் பரீட்சை நடக்குதுப்பா. பொழுதன்னிக்கும் விளையாட்டு, டி.வி-ன்னு கவனம் சிதறும். ரெண்டுங்கெட்டான். காலையில பத்து மணிலேர்ந்து ராத்திரி ஒன்பது மணி வரைக்கும் என்னெல்லாம் சீரியல் ஓடுதோ, ஒரு சேனல்விடாம மாமியார் பார்ப்பாங்க. சாடை மாடையா சொல்லியாச்சு. டி.விகூடப் பார்க்கவிடாம என் மருமவ செஞ்சுட்டானு இஸ்திரி போடறவன்லேர்ந்து, கக்கூஸ் கழுவ வர்றவ வரைக்கும் பட்டியல் போடுவாங்க. ஒன்பது மணிக்கும் மேல தூங்கி வழியிற பையனைத் தடுத்து, பாடம் சொல்லிக் கொடுத்துட்டு இருக்கேன். லீ பஜார் கடையை மூடிட்டு வந்தவர், பெரிசா டி.வி-யை ஆன் பண்ணினார். அதுவாவது பரவால்லப்பா. இவனைக் கூப்பிட்டு, ‘ஸ்டார் ப்ளஸ்ல ஹோம் அலோன் படம் ஓடுதுடா’ன்னார். அவன் படிக்கிறதை விட்டுட்டு, ஹாலுக்கு ஓடிட்டான். நான் பேய் பிடிச்சவ மாதிரி அலறினேன். அவங்களுக்குத் தெரியும். எப்படி ஆக்ட் பண்ணினா, நான் எப்படி ரியாக்ட் ஆவேன்னு தெரிஞ்சு வெச்சிருக்காங்க. இதுவும் ஒருவித டீசிங்தானேப்பா. சண்டை, வாக்குவாதம். அண்ணன் கல்யாணத்தையும் நாத்தனார் கல்யாணத்தையும் கம்பேர் பண்ணி னாங்க. கல்யாணமாகி பன்னிரண்டு வருஷமாச்சு. இன்னும் மொத ஆடிக்கு நீங்க சீர் சரியா செய்யலேன்னு சொல்றாங்க. நானும் பதிலுக்கு அலறினேன். மாமியார் அவருக்கு ஸ்க்ரூ கொடுக்கக் கொடுக்க… இவருக்கும் வேதாளம் மண்டைக்கு ஏறிடுச்சு. முடிவு, இரும்பு நாற்காலியை என் மேல் விட்டு எறிஞ்சார். கையால தடுத்தேன். ஊமைக் காயத்தோடு போயிடுச்சு”- மங்கை இடது முழங்கையைக் காட்டினாள். லேசாக வீங்கிக் கன்னிப்போய் இருந்தது. சங்கரலிங்கம் ஒடிந்துதான் போனார்.

”நான் வேணா வந்து பேசட்டுமா?”- சுரத்தே இல்லாமல் கேட்டார்.

”உனக்கு என்ன மரியாதை கிடைக்கும் தெரியும்ல? என் மாமியார்க்காரி உன்னை நிக்கவெச்சே பேசி அனுப்பிடுவா.”

மங்கையர்க்கரசி கம்ப்யூட்டர் மானிட்டரை ஆன் பண்ணினாள். இன்டர்நெட்டில் தெரிந்த வெப்சைட்களில் போய்ப் பார்த்தாள். சங்கரலிங்கத்தின் இ-மெயிலுக்குள் போய்ப் பார்த்தாள். அண்ணன் ராஜேஷ் அனுப்பி இருந்த இ-மெயில் பாதி சுயபுராணமும், பாதி அவன் மகன் புராணமுமாக இருந்தது. அப்பாவை வருந்தி அழைத்திருந்தான்.

”நீ வேணா ராஜேஷ்கிட்ட போயிடேம்ப்பா. நான் இது மாதிரி உன்னைத் தொந்தரவுபடுத்த மாட்டேன். நேரில் பார்க்கிறதுக்கும், என் புருஷன், மாமியார் கொடுமைப்படுத்தறாங்கன்னு இ-மெயிலில் பார்க்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கும்ல?”

மணி ஏழு அடித்தது.

”பிரசாத்! நல்லா இருட்டிடுச்சு. வா போகலாம். அப்பா வந்திருப்பார்” என டெலிவிஷன் முன்னால் அமர்ந்திருந்த மகனை அழைத்தாள்.

பிரசாத் முதலில் முரண்டுபிடித்தான். ஸ்கூபி டூ கார்ட்டூன் பார்த்துவிட்டு வருவ தாகச் சொன்னான். மங்கையர்க்கரசி அவனை இழுத்துச் செல்லாத குறையாக வாசலுக்குக் கூட்டிக்கொண்டு போனாள்.

செருப்பு மாட்டிக்கொள்ளும்போது சிறுவன் கேட்டான், ”எட்டு பாயின்ட்டுன்னா எவ்வளவும்மா?”

”இவன் ஒருத்தன்… எண்ணூறு மீட்டர்.”

”இவ்வளவு சின்ன தூரம். ஏன் நாம அடிக்கடி தாத்தா வீட்டுக்கு வர்றதில்ல?” என்றான்.

மங்கையர்க்கரசி அப்பாவைப் பார்த்துச் சிரித்தாள். சங்கரலிங்கத்துக்கு அவர்கள் கிளம்பும்போது, கையசைக்க மட்டும்தான் முடிந்தது. அவளுடைய இரு சக்கர வாகனம் தெருவில் திரும்பி மறையும் வரை பார்த்துக்கொண்டே இருந்தார்.

– மார்ச் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *