தொட்டு தொடரும் பட்டு பாரம்பரியம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 20, 2017
பார்வையிட்டோர்: 9,667 
 
 

கடிகாரம் காலை 11 மணி என்று ஞாபகபடுத்தியது. ஷோபாவில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்த மரகதத்துக்கு சுய நினவு திரும்பியது போல, உடம்பு ஒரு ஆட்டம் ஆடியது.

“அய்யோ, மதிய சாப்பாட்டுக்கு ஒரு வேலையும் செய்யவில்லை. என்ன இப்படி மெய் மறந்து டிவி பார்த்துட்டேன்” என்று தன்னை தானே நொந்து கொண்டு டிவியை ஆப் பண்ண டிவி ரிமோட்டை தேடினாள்.

டிஸ்கவரி சேனலில், சர்க்கஸ் பற்றி டாக்குமெண்டரி காண்பித்து கொண்டிருந்தார்கள். சர்க்கஸ் பார்க்க யாருக்குதான் பிடிக்காது. பார்த்ததில் நேரம் போனதே தெரியவில்லை. நமக்கு உட்கார்ந்தா எழுந்திரிக்க முடியல, எழுந்தரிச்சா உட்கார முடியல. ஆனா சர்க்கஸில எப்படி பறந்து பறந்து சாகசம் பண்ணுறாங்களோ என்று வியப்புடன் இருந்த மரகதத்துக்கு தீடிரென மனதில் ஒரு அனுதாப உணர்வு.

“சே பொழைப்புக்காக, இவ்வளவு ரிஸ்க் எடுத்து கஷ்டபடுறாங்களே. பணம் சம்பாதிக்க எவ்வளவு கஷ்டபட வேண்டி இருக்கு” என்று வருத்தமாக இருந்தது. ரிமோட்டை தேடி டிவி அணைத்தாள்.

பக்கத்து வீட்டு ரேடியோவில்,

‘இன்னார்க்கு இன்னார் என எழுதி வைத்தானே தேவன் அன்று” என அவள் ஒரு தொடர்கதை பட பாடலை எஸ்.பி.பீ பாடி கொண்டிருந்தார்.

மரகதத்துக்கு உடனே

‘இன்னார்க்கு இன்ன வேலை என்று எழுதி வைத்தானே தேவன் அன்று” என மாற்றி பாட தோன்றியது. இந்த ஜென்மத்தில் நாம் என்ன விதமாக வேலை செய்து சம்பாதிக்க வேண்டும் என்பது கடவுள் எழுதி வைத்த விஷயம் என்று அவளுக்கு தோன்றியது. அனுதாபத்தில் இருந்து அவள் மனதில் கழிவிரக்கம் குடி கொண்ட்து.

‘கடவுள் விதித்தபடி தான் நடக்கும். இல்லாட்டி நல்லா படிச்சிட்டு, உபயோகமில்லாம இப்படி சமைச்சு கொட்டுற வேலையை செஞ்சுகிட்டு இருப்பேனா. வீட்டுக்காரருக்கு செஞ்சேன், இப்ப பிள்ளைக்கு செஞ்சுட்டு இருக்கேன். எனக்கு விதிச்ச வேலை இதுதான்’.

என்று நொந்தபடி சமையலறைக்கு செல்ல தொடங்கினாள். ‘அம்மா போஸ்ட்’ என்ற சத்தத்துடன் ஒரு போஸ்ட் கார்டு உள்ளே வந்து விழுந்தது. மரகதத்திற்க்கு பயங்கர ஆச்சர்யம். போஸ்ட் வந்து எவ்வளவு நாளாச்சு என்று ஆர்வத்துடன் போஸ்ட் கார்ட்டை எடுத்தாள்.

“அட நம்ம பட்டுச்சேலைக்காரர் மாரியப்பன் கார்டு. தீபாவளி வருதுல்ல, மறக்காம மனுஷன் கார்டு போடுறான்” என்று கார்டை படிக்க ஆரம்பித்தாள்.

அன்புடையீர்,

வணக்கம். குடும்பத்தார் அனைவரின் பரிபூரண நலம் வேண்டி என்றும் இறைவனை பிரார்தித்து கொண்டிருக்கும் உங்கள் நலம் விரும்பி மாரியப்பன் எழுதி கொள்வது. இந்த வருடம் தீபாவளிக்கு பல புதிய வகையான பட்டு புடவைகள் வந்துள்ளன. வரும் வியாழகிழமை உங்க வீட்டிற்க்கு வர உங்கள் அனுமதி கேட்டு எழுதியுள்ளேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

இப்படிக்கு

மாரியப்பன், பட்டு புடவை வியாபாரி.

திருப்போணம்.

மரகதத்துக்கு பழைய நினைவுகள் திரும்பின. எத்தனை வருடமாக இந்த மாரியப்பன் அவளுக்கு புடவை வியாபாரம் செய்து கொண்டிருக்கிறான். அவள் சிறுபிள்ளையாய் இருக்கும் போது, அவனோட அப்பா வருவார். அதற்கு பின் மாரியப்பன். அவனுக்கு இவள் வயதுதான் இருக்கும். சின்னவனாய் இருக்கும் போது அவன் அப்பா அவனை அழைத்து வருவார். அவர் பக்கத்தில் அமர்ந்து எல்லாரையும் பார்த்து கொண்டே இருப்பான். எதுவும் பேசமாட்டான். பேரை கேட்டால் பேர் சொல்லுவான். ஸ்கூலுக்கு போகலையான்னு கேட்டா பதில் சொல்ல மாட்டான். மரியாதையான உறவு. வயது ஏறினாலும், அவனது நடவடிக்கை மிகவும் ஒழுக்கமாக இருக்கும். அவனது அப்பா வணிகம் அவனுக்கு சுலபமாக வந்தது. என் கல்யாணப் பட்டு புடவை எல்லாம் அவர்களதுதான். அவனது கல்யாணத்திற்க்கு நான் என் வீட்டுகாரரோடு போய் விட்டு வந்தேன். புடவையை கொடுத்து விட்டு போய் விடுவான். பணம் நாங்கள் தவணை தவணையாக முன்பு மணியார்டர் செய்வோம். இப்போழுது அவனது பேங்க் அக்கவும்ட்டில் போட்டு விட்டு போன் செய்து விடுவோம்.

போன் என்றவுடன் தான் அவளுக்கு ஞாபகம் வந்த்து. இவன் ஏன் இன்னும் கார்டு போடுறான். போன்ல பேசிட்டு வரலாம்ல. இந்த தடவை அவன் வரட்டும் கேட்கலாம் என்று நினைத்தபடி சமையலறைக்குள் நுழைந்தாள்.

கடிகாரம் இரவு ஏழு மணி என்று ஞாபகப்படுத்தியது. டிவி முன்பு அமர்ந்திருந்த மரகதத்திற்க்கு சுய நினவு வந்தது. “ஏழு மணியாச்சா. இனி பிள்ளையும் வீட்டுகாரரும் ஒவ்வொருத்தரா வருவார்கள். எல்லாத்தையும் தயார் பண்ணனும் என்ற பெருமூச்சுடன் டிவியை அணத்தாள். மரகதத்திற்க்கு டிவி என்பது ஒரு துணை. அதன் ஒலி அவளுடன் யாரோ பேசி கொண்டிருப்பது போல் ஓர் உணர்வை ஏற்படுத்தி கொண்டே இருக்கும். டிவி பார்ப்பது போல் இருக்குமே ஒழிய, மரகத்தின் நினவுகள் டிவியில் இருக்காது. பலநேரம் அப்படியே உறங்கி விடுவாள். மரகதத்திற்க்கு ஒரே ஒரு பெண் பிள்ளை. பெயர் விமலா. மிக செல்லமாக வளர்த்து வருகிறாள்.

கடிகாரம் மணி ஒன்பதை ஞாபகப்படுத்தியது. டைனிங் ரூமில், பெண்ணுக்கும் வீட்டுகாரருக்கும் உணவு பரிமாறிக் கொண்டே,

“என்னங்க மாரியப்பன் கார்டு அனுப்பி இருக்கான். வர்ற வியாழகிழமை வர்றானாம்”

“ரொட்டினா, தீபாவளிக்கு நடக்குறதுதானே. உனக்கு எவ்வளவு வேணுமோ அதை நல்லா காஸ்ட்லியா வாங்கிக்கோ”

“என்ன புடவை கொண்டு வர்றான்னு தெரியலை. இந்த தடவை விமலாவுக்கும் ஒரு நல்ல புடவை வாங்கனும்”

“மம்மி, என்னைய இந்த ஆட்டத்துக்கு சேர்க்காத. நீ வாங்குறது எல்லாம் ஓல்ட் பேஷன். எங்களுக்கு எல்லாம் ஆன் லைன் ஷாப்பிங்க் வந்திருச்சு. புது டிரண்ட் புடவை எல்லாம் ஆன் லைன்லேயே ஆர்டர் பண்ணலாம். நான் அதுல பார்த்து வாங்கிடுவேன். நீ உன்னோட பர்சேசை மட்டும் பார்த்துக்க” என்றாள்.

“போடி, அவள் புடவை மாதிரி வருமா. இப்ப நான் கட்டி இருக்கேனே, இது எப்ப வாங்குனது தெரியுமா? இன்னும் புதுசு மாதிரி இருக்கு”

“அது சரிதான். ஆனா எல்லாம் கர்னாடகமா இருக்கு”

“அப்படி இல்லடி. அவனும் புதுசா கொண்டு வர்றான். நாந்தான் வாங்குறதில்ல. இந்த தடவை அவன் வரும் போது கூட இரு”.

“கம்பெல் பண்ணாதம்மா. நான் ஆல் ரெடி புக் பண்ணிட்டேன்” என்று புலம்ப ஆரம்பித்தாள்.

என் வீட்டுக்காரர் எனக்கு ஆதரவாக, “விமலா, வீ டோண்ட் கம்பெல் யூ. ஒரு தடவை நீயும் அவன் என்னதான் கொண்டு வர்றான்னு பாரேன். ஹீ இஸ் அவர் குட் பிரண்ட் ஆல்சோ”.

“ஓகே அப்பா, வியாழகிழமை ஈவினிங் தானே சீக்கிரம் வந்துர்றேன். ஸ்வீட் மம்மி” என்று கொஞ்சியபடி ஒடி விட்டாள்.

சொன்னபடி, வியாழன் மதியமே வந்து விட்டாள். அவள் வீட்டில் இருந்தால், வீடே சத்தமாக இருக்கும். ஓரே பாட்டும் ஆட்டமும்தான். அண்ணன், தங்கை என உறவுகளுடன் வளர்ந்தவ நான். பாவம் இவ ஒத்தையாக வளருதே. அம்மா, அப்பா பாசம் என்பது வேறு. சகோதர பாசம் வேறு. அதை உணர வழி வகை இல்லாமல் செய்த பாவம் எங்களை சும்மா விடாது என்று கவலையோடு அவளை பார்த்து கொண்டிருந்தேன்.

“வாட் மம்மி. ஸ்டேரிங் மீ. என்னை முறைச்சு பார்த்துகிட்டே இருக்க. உன் பிரண்ட் வர்றான்னு சந்தோஷமா?”

“சே, சே,. ஏண்டி, நீ உன் கூட அண்ணன், தம்பி, அக்கா, தங்கை இல்லைன்னு கவலை படுவியா?”

“சம் டைம். பட் நாங்கள் எல்லாம் பிராடிக்கல். எதுக்கு கவலைபடனும். கவலை பட வேண்டிய ஆள் நீங்கதான். ஏன் இப்ப தீடிர்ன்னு கேக்குற, எதுவும் பெத்துக்க போறீயா?”

“போடி லூசு. உங்கிட்ட போய் கேட்டேன் பாருன்னு திட்டி கொண்டே இருக்கும் போது, வாசலில் காலிங் பெல் ஓசை.

“மம்மி, உன் பிரண்ட் ஆகையா” என்றபடி வாசலை திறந்து “வாங்க அங்கிள்” என்றாள்.

தலையில் வேஷ்டியால் கட்டப்பட்ட துணி மூட்டையுடன் உள்ளே நுழைந்தான். கூட இரண்டு பையுடன் இன்னொரு பையன்.

டீப்பாயில் தலைப்பாரத்தை இறக்கி வைத்து விட்டு “வணக்கம்மா, ஐயா நல்லா இருக்காரம்மா? பாப்பா சௌக்கியமா?” என்றான்.

“நல்ல சௌக்கியம். உட்கார் மாரியப்பா. யார் இது. உன் பையனா? இப்பதான் முத முத கூட்டிட்டு வர்ற. என்னப்பா பண்ற? பேர் என்ன?”

“குமார் ஆண்ட்டி. இஞ்சீனியரிங் முடிச்சிட்டு, அப்பா கூட பிஸினஸ்ல இருக்கேன்”.

“வாட் இஞ்சினியரிங் முடிச்சிட்டு பிஸினஸ்ஸா?, வாட் அங்கிள் வேலைக்கு அனுப்பலையா? படிப்பை ஏன் வேஸ்ட் பண்ணுறீங்க?” என்று பொரிய ஆரம்பித்தாள் விமலா.

“என்னை கோபிச்சுக்காத பாப்பா. நான் பல தடவை சொல்லிட்டேன். அவன் கேட்க மாட்டேங்கிறான். நீ வேணா சொல்லு” என்று கூறி விட்டு,

“அம்மா, இந்த தடவை உங்களை காட்டிலும் பொண்ணுக்கு பிடிச்ச மாதிரிதான் புடவை கொண்டு வந்திருக்கேன்” என்று மூட்டையை அவிழ்க்க ஆரம்பித்தான்.

“அங்கிள், எனக்கு நீயூ டிரண்ட்தான் வேணும். அப்பா, அம்மா சொல்றாங்களேன்னுதன் இந்த தடவை பார்க்கிறேன்னு” சொல்லி கொண்டே இருக்கும் போது மீண்டும் வாசலில் காலிங் பெல்.

“ஒரு பார்சல் வந்திருக்கு” என்று ஒரு ஆள் கொடுத்து விட்டு சென்றான்.

“என்னடி ஆர்டர் பண்ணி இருக்க. இந்த கனம் கனக்குது”.

“இரண்டு நாளைக்கு முன்னாடி, ஆன் லைன்னுல ஒரு பொட்டிக்குல புடவை ஆர்டர் பண்ணேன். இந்த நேரம் பார்த்து வந்திருக்கு” என்றபடி பார்சலை வாங்கி கொண்டு உள்ளே போய் விட்டாள்.

மரகதத்திற்க்கு மாரியப்பன் முகத்தை பார்க்க சங்கடம்.

“இந்த காலத்து பிள்ளைகள் டேஸ்ட்டே வேற மாரியப்பா. நீ புடவையை காட்டு” என்றாள்.

“பரவாயில்லமா. இந்த புடவை பாப்பாவுக்கு கண்டிப்பா நல்லா இருக்கும்” என்று ஒரு புடவையை காட்டினான். மிக அழகாக இருந்த்து.

“அம்மா, அங்கிள் ஹவ் இஸ் மை செலக்சன்” என்றபடி விமலா புடவையை உடம்பு மேலே போர்த்திய படி வந்தாள்.

மரகதம் தன் கையில் இருந்த புடவையையும், அவள் புடவையையும் பார்த்தாள். இரண்டும் ஒரே மாதிரி இருந்தது.

“ஏண்டி, இதே புடவையைதானே மாரியப்பனும் கொண்டு வந்திருக்கான். என்னவோ புதுசா எதையோ வாங்கின மாதிரி பந்தா பண்ணுற”

அதுவரை அமைதியாக இருந்த குமார், விமலாவை பார்த்து, “சிஸ்டர், அந்த புடவை வந்த பார்சல் கவரை காட்டுங்க” என்றாள்.

அதை பார்த்து விட்டு, சிஸ்டர், இந்த புடவையும் எங்களதுதான். என் படிப்பு வேஸ்ட் ஆகுதுன்னு சொன்னீங்க. வேஸ்ட் ஆகல சிஸ்டர். இப்ப இருக்கிற ட்ரண்டுக்கு ஏத்த மாதிரி ஆன் லைன் பிஸினஸ் பண்ணிட்டு இருக்கேன். அப்பா பாவம், ஓல்டு ஸ்டைல்ல எவ்வளவு நாள் பிஸினஸ் பண்ணுவாரு. அதனாலதான், என் மூளையை யூஸ் பண்ணி மார்டன் டிரண்ட்டுக்கு ஏத்த மாதிரி பிஸினஸ் பண்ணுறேன். அப்பாவோட கஸ்டமர்கிட்ட எல்லாம் என் ஆன் லைன் பிஸினஸ பத்தி சொல்லி சப்போர்ட் பண்ணுங்கன்னு ரிக்வெஸ்ட் பண்ணதான் அவர் கூட வந்தேன். எப்படி இருக்கு புடவை. டூ யூ லைக் இட்? உங்க பிரண்ட்ஸ்கிட்ட எல்லாம் ரெக்கமெண்ட் பண்ணுங்க” என்றான்.

“சூப்பர் குமார், கிரெட்” என்றாள் விமலா.

அடுத்த தலைமுறை வணிக உறவு மலர ஆரம்பித்து விட்டது என்ற திருப்தி மரகதம் மற்றும் மாரியப்பன் முகத்தில் தெரிந்தது.

Print Friendly, PDF & Email

1 thought on “தொட்டு தொடரும் பட்டு பாரம்பரியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *