பத்மினி, ஹாலில் உட்கார்ந்திருந்தாள். கூடவே மணிகண்டன் கொடுக்கு மாதிரி ஒட்டிக்கொண்டு திமிறிக்கொண்டிருந்தான். பச்சை டவுசரும் சட்டையும் மாட்டி சபரிமலைக்கு மாலை போட்டிருந்தான்.
அந்த ஹால் ரொம்ப அகலமாக பத்மினி வீட்டுக்கு பின்னால் இருந்த கதிரடிக்கும் களம் அளவுக்கு இருந்தது. பளபளக்கிற பீங்கான் மாதிரி தரை. ஓரத்தில் பெரிய தொட்டிக்குள் கலர் கலராக மீனை விட்டு, அதற்குத் தனியாக ஒரு லைட்டைப் போட்டு அது வேற ரொம்ப ஜோடனையாக இருந்தது. ‘இந்த மீனெல்லாம் நேரங்காலமில்லாம, தூங்காமல் நீந்திக்கிட்டே இருக்கும் போல…’ மணிகண்டன் அந்த மீனையெல்லாம் நெருங்கிப் போய் பார்க்கவேண்டும் என்று திமிறிக்கொண்டே இருந்தான். கடிவாளத்தைப் பிடித்து அடக்குவது மாதிரி அடக்கிக் கொண்டிருந்தாள் பத்மினி.
அந்த வீட்டுக்கு வெளியே காம்பவுண்டுச் சுவருக்குள்ளே ஒரு கூண்டு வைத்து ‘லவ் பேர்ட்ஸ்’ குருவிகள் வேறு..! கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் புழுக்கை புழுக்கையாக, பென்சில் துண்டு மாதிரி குருவிகள். அதுகளுக்கும் சின்னச் சின்னதாக வாயும் கண்ணும் அம்சமாக இருந்தன. இவற்றை எல்லாம் பார்க்கப் பார்க்க மணிகண்டனுக்கு ஆசையும் ஆச்சர்யமுமாக இருந்தது. அவன் ஊரில் மீன் என்றால் குழம்பு வைக்கக் கிடைக்கிற அயிரையும், குரவையும்தான்.. இந்த மாதிரி கலர் மீன்களையும் கலர் குருவிகளையும் முதல் முதலாக இப்போதுதான் பார்க்கிறான். அதனால் கன்னுக்குட்டி மாதிரி திமிறிக்கொண்டே இருந்தான்.
இது எதுவுமே பத்மினி மனதில் பதியவே இல்லை. அந்த பணக்கார வீட்டுக்கு ஒட்டாத ஒரு சின்னாளப்பட்டு சேலையைக் கட்டிக்கொண்டு, மனது முழுக்கத் தயக்கமும் கழிவிரக்கமும் தளும்ப பட்டும் படாமலும் உட்கார்ந்திருந்தாள். சொந்தக்காரர் வீட்டில் வந்து காசுக்கு நிற்பது மாதிரி ஒரு அசிங்கம் எதுவும்இல்லைதான். ஆனால், இப்போது வேறு வழியில்லாமல் வந்து நிற்க வேண்டியதாகிப் போனது.
திருப்பதி, அவளுக்கு சற்றே தூரத்து உறவு. மாமா மகன் முறை. இந்த முறை காரணமாக அவளது தயக்கம் மேலும் அதிகமாக இருந்தது. அண்ணன் – தம்பியா இருந்தாலாவது பரவாயில்லை. கொஞ்சம் கூசாமல் கையேந்தி விடலாம். ஆனால், மாமன் உறவு கொண்ட மனுசன்… அதிலேயும் ஒரு காலத்தில் பத்மினியை இந்த திருப்பதி பொண்ணு கேட்டு வந்திருக்கிறார் என்று சொன்னால், இப்போது இருக்கிற பச்சைப்புள்ளகூட நம்பாது. ஆனால், அது நிஜம்தான்.
அப்போது பத்மினியின் வீடு உச்சத்தில் இருந்தது. பத்மினியின் அப்பாவுக்கு மூன்று ரைஸ் மில்கள் இருந்தன. தவிர நிறைய தோட்டம் துரவுகள் என்று செல்வம் பொங்கியது. பத்மினி விதவிதமான பட்டுப்பாவாடை – சட்டைகளுடன் வலம் வந்த காலம். ஊரில் பத்மினி என்கிற பெயரே வித்தியாசம்தான் அப்போது. ராஜாத்தி, மூக்கம்மா, பவுன்தாயி என்றுதான் ஊரில் பெண்பிள்ளைகளுக்குப் பேர் வைத்துக் கொண்டிருந்தார்கள். பத்மினி என்கிற பெயர் அப்பாவுக்கு பிடித்த நடிகையின் பெயர். மஞ்சக்கிழங்கு மாதிரி பெண்குழந்தை பிறந்ததும், பத்மினி என்று பெயர் சூட்டி பெருமிதத்துடன் வளர்த்தார். அழகு, பணம், குணம் எல்லாம் ஒருங்கிணைந்த தேவதையாக பத்மினியின் இளமைக்காலம், இப்போது அவள் படுகிற லோலாட்டத்துக்கு நேர் எதிர்.
அப்படியான ஒரு காலத்தில்தான் திருப்பதிக்கு பத்மினியைக் கேட்டார்கள், திருப்பதி வீடு வெகு சுமாரான வசதி. திருப்பதி ஒரு சின்னக் கடை வைத்திருந்தான். சொந்தக்காரப் பையன், குணமானவன் என்கிற அப்பிராணித்தகுதிகளின் அடிப்படையில் பெண் கேட்டு வந்த திருப்பதியை, தாட்சண்யமின்றி நிராகரித்தார் பத்மினியின் அப்பா. பிறகு எக்கச்சக்கமாக செலவு செய்து தன்னைப்போலவே வசதியான குடும்பமாகப் பார்த்து மூர்த்திக்கு பத்மினியைக் கட்டிக்கொடுத்தார்.
மனிதர்கள் அடைகின்ற உயரங்களை காலம்தான் தீர்மானிக்கிறது. அப்பா வாழும் காலத்திலேயே நொடித்துப் போய் இறந்தார். தனித்திறமைகள் ஏதும் இல்லாத மூர்த்தி, தன் பங்கு குடும்பச் சொத்துக்களை கரைத்து வெகு சீக்கிரமே கீழ் மட்டத்துக்கு வந்து விட்டான். சொத்துக்கள் எல்லாம் போய் கஷ்ட ஜீவனம் என்கிற நிலைக்கு வந்து கடன் கேட்பதும், யார் யாரிடம் அடுத்து போய் கேட்கலாம் என்று யோசிப்பதும் ஒரு முக்கிய மான வாழ்வுமுறையாக ஆகிப்போய் விட்டது.
மூர்த்தி இந்த விஷயத்தில் எந்தக் கூச்சமும் அற்றவனாக இருந்தான். பத்மினிக்கு கடன் கேட்டு பல்லைக் காட்டுவது மரணத்தைவிடக் கொடுமையானதாகத் தோன்றியது. நேற்றும்கூட அவள் எவ்வளவோ தயங்கினாள். மறுத்தாள். சண்டை போட்டாள். ஆனால், மூர்த்தி விடாமல் வற்புறுத்தி திருப்பதி வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறான்.
வீட்டில் எல்லோரும் கோயிலுக்குப் போயிருக்க… வேலைக்காரி வந்து காபி கொடுத்தாள். மணிகண்டன் வாங்கி ‘அவுக் அவுக்’ என்று குடித்தான். தன்னைவிட அந்த வேலைக்காரியின் நிலைமை மேலானது என்று பத்மினிக்குத் தோன்றியது.
கார் வந்து நிற்கிற சத்தம் கேட்டது. இதுவரை பத்மினியின் மனதிலிருந்த கூச்சம் சட்டென்று உச்சத்தை அடைய தன்னையறியாமல் எழுந்து நின்றாள்.
திருப்பதியும், அவர் மனைவியும் அவர்களின் மகளும் உள்ளே நுழைந்தார்கள். அந்தப் பெண்ணுக்கு மணிகண்டனைவிட ஓரிரண்டு வயது அதிகம்இருக்கலாம். பட்டுப்பாவாடையும் சட்டையும் அணிந்து சின்ன வயசில் பத்மினி இருந்த மாதிரியே அம்சமாக பணக்காரக் களையுடன் இருந்தாள்.திருப்பதி பற்றி சொல்லவே வேண்டியதில்லை. சந்தன கலரில் பளீர் என்கிற சட்டையும், கையில் பிரேஸ்லெட்டும், மோதிரங்களும் மின்ன… அவனுடன் நடந்து வந்த கோமதி பட்டுப்புடவையுடன் நேராக விளம்பரத்திலிருந்து வந்த குடும்பம் மாதிரி இருந்தார்கள். திருப்பதி ஒரு விநாடி பத்மினியை வியப்புடன் பார்த்தான். சின்னாளப்பட்டி சேலையில் நகைகளேதும் இன்றி ஒரு பழைய சித்திரம் போல அழகாகவே இருந்தாள். வாடிப்போன ஒரு அழகு.
“அடடே பத்மினி…வா வா… ஆச்சரியமா இருக்கே… வராத ஆளு வந்திருக்கே!” திருப்பதி முகத்தில் ஒரு சந்தோஷம் தெரிந்தது. தன் மனைவியிடம் திரும்பி, “இது யாருனு தெரியுதாம்மா?”
“தெரியாம என்ன? நம்ம கல்யாணத்துக்கு வந்திருந்தாங்கள்ல?”
“கரெக்ட், இவங்க அப்பா மட்டும் ஒப்புக்கிட்டிருந்தார்னா இன்னிக்கு பத்மினிதான் என் வீட்டுல இருந்திருக்கும்” என்று திருப்பதி சிரிக்க, பத்மினிக்கு சங்கடம் கூடியது.
திருப்பதியின் மனைவி கோமதி கணவனின் தோளைத்தட்டினாள். “ஏங்க, அவங்க சங்கடப்பட்டுக்கப் போறாங்க… புள்ளைங்க முன்னால இது என்ன பேச்சு?” பத்மினியிடம் திரும்பினாள்.
“காபி குடிக்கிறீங்களா அக்கா?”
“குடிச்சுட்டோம். வேலைக்காரப் பொண்ணு குடுத்துச்சு.”
அவள் உள்ளே போக, திருப்பதி சோபாவில் அமர்ந் தார். “உக்காரு பத்மினி… இன்னிக்கு பிரதோஷம்னு சொல்லி கோயிலுக்கு இழுத்துட்டுப் போயிட்டா. நாள், கிழமை தவற விடமாட்டேங்கிறா… அநியாயத்துக்கு பக்தி. இருக்கிற சாமி பத்த மாட்டேங்குது என் பொண்டாட்டிக்கு. இன்னும் ஒரு இருபது முப்பது சாமி இருந்தா தேவலைனு நினைக்கிறா!” உரக்கச் சிரித்தபடி மணிகண்டனைப் பார்த்தான்.
“இவன் என்ன மாலை போட்டிருக்கானா?”
“ஆமா மாமா, இவங்கப்பாவுக்கும் பக்தி ஜாஸ்தி.”
“ம்… அப்புறம் என்ன பண்றீங்க? என்ன பண்றாரு இவங்கப்பா?”
“பண்ண தொழில் ஏதும் கைகுடுக்கல. காசெல்லாம் போனதுதான் மிச்சம். அச்சாபீஸில வேலை பாத்தாரு. இவரு மேல் முதலாளிக்கு ஏதோ வருத்தமாம். வேலையை விட்டு நின்னுட்டாரு.”
“அச்சாபீஸ்காரரு எனக்குத் தெரிஞ்சவருதான் பத்மினி. உன் புருஷன் அங்கே கொஞ்சம் காசை எடுத்து செலவு பண்ணிட்டாப்லயாம். ‘என்னப்பா இப்படி?’னு கேட்டதுக்கு முதலாளியையே கோவிச்சுப் பேசினானாம். ‘சரி கிளம்புப்பா’னு சொல்லிட்டாங்க போலிருக்கு.”
பத்மினிக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. அவமானமாக இருந்தது.
“நான் நினைச்சுக் கூடப் பாக்கலை பத்மினி, உம் பொழைப்பு இப்படி ஆகும்னு. ப்ச்… எப்படி வளர்த்தாரு உங்கப்பா! நல்லவேளை, போய்ச்சேர்ந்துட்டாரு. இந்த நிலைமைல எல்லாம் உன்னைப் பாக்கலை.”
அதற்கு மேல் பத்மினிக்கு தாங்க முடியவில்லை. உடைந்து அழ ஆரம்பித்தாள். உள்ளிருந்து கோமதி பதறிப்போய் ஓடி வந்தாள். புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து சமாதானப்படுத்தினார்கள். அதன் பின்னரும் வெகுநேரம் ‘உம்’மென்று அமர்ந்திருந்தாள். கோமதி இவளிடம் பொதுவாக பேசிக்கொண்டிருந்தாள். மதியம் சாப்பிடச் சொன்ன போது ஒரேயடியாக மறுக்க… வற்புறுத்தி சாப்பிட வைத்தார்கள். பத்மினி கிளம்பியபோது, உள்ளே அழைத்து ஒரு சேலையும், ஜாக்கெட் துணியும், குங்குமமும் கொடுத்தாள் கோமதி. தயங்கியபடியே வாங்கிக்கொண்டு, தான் கேட்க வந்ததை கேட்காமலேயே கிளம்பினாள்.
“போயிட்டு வர்றேன் மாமா.”
“ம்… இந்தாம்மா…” – திருப்பதி சட்டைப் பைக்குள் கைவிட்டு பணத்தை எடுத்தார்.
“ஐயோ… அதெல்லாம் வேணாம் மாமா.”
“சேச்சே! நீ ஏன் வித்தியாசமா நினைக்கிறே? இந்தா…”
“பணம் வேணாம் மாமா…”
“சரி உனக்குத் தரலை. டேய், மணிகண்டா… இந்தாடா வச்சுக்க…”
மணிகண்டன், அப்பனின் ரத்தம். மறுபேச்சின்றி பணத்தை வாங்கி டவுசர் பாக்கெட்டில் திணித்துக் கொண்டான். பத்மினிக்கு மறுபடியும் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்தது.
வீட்டுக்கு வந்ததும் மூர்த்தி ஆவலாக “பணம் கிடைச்சுச்சா?” என்று கேட்டான். பத்மினி பதிலேதும் சொல்லவில்லை. மணிகண்டன் தனது டவுசரிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுக்க அதனை எண்ணிப் பார்த்த மூர்த்தியின் முகம் மாறியது.
“என்னடி, வெறும் ஆயிரம் ரூவாதான் இருக்கு. பத்தாயிரம்ல கேக்கச் சொன்னேன்?”
“நான் கேக்கலை…”
“ஏண்டி? இங்க என்ன பொட்டி ரொம்பி வழியுதா? கேக்கறேன்னுதானே போனே?”
“போனேன், சங்கடமா இருந்துச்சு… இந்த ரூவா அவங்க மணிகண்டனுக்கு குடுத்தாங்க.”
மூர்த்தி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“ஏய், அறிவு கெட்ட மூதேவி… போயிட்டு, கேக் காம வந்தா என்னடி அர்த்தம்?”
“என்னால கேக்க முடியாது. வேணா நீங்க போய் கேளுங்க.”
மூர்த்தி முகம் மாறியது.
“நீ போய்க் கேட்டா அவன் மாட்டேன்னு சொல்ல மாட்டான். கண்டிப்பா குடுப்பான்..அதனாலதாண்டி உன்னை அனுப்பினேன்.”
பத்மினி, மூர்த்தியைப் பார்த்தாள். அவனுடைய முகம் வெகு அசிங்கமாகத் தோன்றியது. எதுவும் பேசாமல் எழுந்து அறைக்குள் போய் உட்கார்ந்தாள். அப்பாவின் நினைவு வந்தது. திருப்பதியின் நினைவு வந்தது. அவள் கையில் கோமதி கொடுத்து விட்ட புடவை இருந்தது. அதனை கீழே வைத்து விட்டு, விசும்பி விசும்பி அழத் தொடங்கினாள்.
– அக்டோபர் 2009