இரவு மணி இரண்டுக்கு மேல் இருக்கலாம், கதவு தட தடவென தட்டப்பட்டது.வெளி அறையில் படுத்துக்கொண்டிருந்த நான் திடுக்கிட்டு விழித்தவன் வேகமாக வந்து கதவை திறந்தேன். அதற்குள் உள் அறையில் தூங்கிக்கொண்டிருந்த மனைவியும் குழந்தைகளும் விழித்து என் பின்னால் நின்று கொண்டிருந்த்தை உணர்ந்தேன்.
கதவை திறக்கவும், வெளியே சண்முக சுந்தரம் நின்று கொண்டிருந்தார். எனக்குதெரிந்தவர், நண்பர், சார்.. அவர்து கண் உள்புறமாக துழாவியது. என்ன சார்? என்ன பிரச்சினை?
மெல்ல அவரை ஆசுவாசப்படுத்தினேன். ஐந்து நிமிடம் பிரமை பிடித்தவர் போல் நின்று கொண்டிருந்தவர் மெதுவாக மீனாவை காணல, சொல்லிவிட்டு விசித்து விசித்து அழ ஆரம்பித்தார். சட்டென அவர் தோளைப்பற்றி உள்ளே அழைத்து வந்தேன். அவரை அங்கிருந்த நாற்காலியில் உட்கார வைத்தவன், மனைவியிடம் கண்ணைக்காட்ட அவள் அவசரமாய் ஓடி சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து தந்தாள்.
அதை வாங்காமல் அப்படியே வெறித்தவரை மனைவி அவர் கையை பிடித்து முதல்ல கொஞ்சம் தண்ணிய குடிங்க, அவள் சொன்னதுக்காக கொஞ்சம் குடித்தவர், பின் வெறி வந்தாற் போல் மடக்..மடக்கென குடித்து சொம்பை மனைவியின் கையில் கொடுத்தார்.
இப்பொழுது சற்று ஆசுவாசமானவர், என்னை பார்க்க நான் அவர் எதிரில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தேன். மனைவியும் குழந்தைகளும் ஓரமாய் நின்றனர்,மனைவி குழந்தைகளை உள்ளே போய் படுங்கள் என்று அறைக்குள் தள்ளி அந்த அறைக்கதவை சாத்தினாள்.
ரொம்ப நம்புனேன் சார்..உங்க பிரண்டுதானே அந்த கதிர்..இப்படி துரோகம் பண்ணுவான்னு எதிர்பார்க்கலே..மீண்டும் அழுகைக்கு போக ஆரம்பித்தார். சார் மனசை திடப்படுத்திக்குங்க..இப்ப அமைதியா இந்த கட்டில்ல படுங்க. காரியம் நம்மை மீறி போகாது..அவருக்கு ஆறுதல் சொல்லி நான் படுத்திருந்த கட்டிலில் படுக்க சொன்னேன். வேண்டாம் சார் அங்க சம்சாரம் தனியா உட்கார்ந்திருப்பா, ஒரே பொண்ணு சார் இப்படி பண்ணுவான்னு நினைக்கவேயில்லை சார்..
அவரை அணைத்துக்கொண்டேன், மனசை திடப்படுத்திக்குங்க, எதுவுமே நிரந்தரமில்லை, அதை மட்டும் மனசுக்குள்ள வச்சுங்குங்க..இப்ப நான் எது சொன்னாலும் உங்க மனசுக்கு ஆறுதலாகாது, கொஞ்சம் நீங்களா மனசை திடப்படுத்த முயற்சி செய்யுங்க.
மனைவியிடம் கதவை சாத்திவிட சொல்லி விட்டு அவரை கொண்டு போய் வீட்டில் விட்டு வந்தேன். அவரது மனைவி இருந்த கோலம் இதை விட மோசமாக இருந்தது. இருவரையும் சமாதானப்படுத்தி இரவு முழுக்க அங்கேயே உட்கார்ந்திருந்தேன்.
அவர் சொன்ன வார்த்தை உங்க பிரண்டுதானே? இது என் மனசாட்சியை குத்தி கிளறியது. அன்று நடந்த உரையாடல் அப்படியே மனசுக்குள் ஓடியது.
நாங்க இரண்டு பேரும் வேற மாதிரி முடிவு எடுத்துட்டோம்
கதிர் அவசரப்படாதே,,நீங்க இரண்டு பேரும் நல்லா படிச்சவங்க, மத்தவங்க வயிறெரிய வார்த்தையை வாழ்க்கையை ஆரம்பிக்கும்போதே வாங்கிக்க வேண்டாம்.
அவங்கப்பா கிட்டே கேட்டு பாத்துட்டா, அவர் ஒரே வார்த்தை சொல்லிட்டாராம், அம்மா நான் உறவுகளோட கெளவரமா இருக்கணும்னு விரும்பறேன்னுட்டாராம்.
அப்ப கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, எந்த பேரண்ட்ஸும் கொஞ்சம் இழுத்து பிடிப்பாங்க, நீங்க பிடிவாதமா இருந்தா அவங்க இறங்கி வரலாம்.
சாரி ஒரு வருசம் வெயிட் பண்ணிட்டோம், கதிரின் வார்த்தையில் வேகம் தெரிந்தது.
டேய் ஒரு வருசமெல்லாம் ஒரு நேரமாடா? என் கேள்வி அவனை உசுப்பேற்றியது, உனக்கு புரியாது ஏண்ணா உனக்கு கல்யாணமாய் குழந்தை குட்டின்னு செட்டிலாயிட்டே. ஆனா சின்ன வயசுல நீ எப்படி இருந்தேன்னு உன் கூட இருந்த எனக்கு தெரியுண்டா
இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் சொல்கிறான். என்னை அறிவுரை சொல்ல தகுதி இல்லை என்கிறானா? நான் சின்ன வயதில் பெண்கள் பின்னால் சுற்றினால், அதற்காக ஒரு பெண் பார்த்து திருமணம் முடித்து வாழ்க்கையில் செட்டில் ஆக கூடாதா? சரி நான்தான் சின்ன வயசுல அப்படி இருந்தவன் தெரியுதுல்ல,அப்புறம் எதுக்கு என்னை பார்க்க வந்தே.
அவனுக்கு என் கோபம் புரிந்திருக்க வேண்டும், இருந்தாலும் விடாமல் ஒரு மாசத்துக்குள்ள முடிவு எடுத்துடுவோம். அப்படி எடுத்தா அவங்க பேரண்ட்ஸ் தப்பா எதுவும் செஞ்சுடாம பாத்துக்க.
நல்லா இருக்குடா நியாயம், அவரு நம்ம இரண்டு பேரையும் எவ்வளவு நம்பிக்கையா வச்சிருக்காருன்னு தெரியுமா? அதை கெடுத்துட்டு, நீ தப்பு பண்ணுவே, நான் அவங்களை போய் சமாதானப்படுத்தனுமா?
அவன் அதை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை, இன்னொன்னு சொல்றேன், அவங்க பேரண்ட்ஸ் கிட்டே போய் இதையெல்லாம் சொல்லக்கூடாது.
என்ன மிரட்டுறயா?
இல்லே அப்ப நாங்க இரண்டு பேரும் வேற மாதிரி முடிவு எடுத்துடுவோம்.
இவன் என்ன மடையனா? இல்லை அந்த பொண்ணு மடச்சியா? இந்த காதல் என்று வந்து விட்டால் எல்லாருமே இப்படி ஆகி விடுகிறார்களா? ஒரு நிமிடம் திகைத்து நின்று கொண்டிருந்தேன், என்ன பேசுவது என்று புரியவில்லை.
இப்பொழுது உண்மையில் நான்தான் இத்தனைக்கும் குற்றவாளி. “தெரிந்தே இந்த தவறுக்கு ஒத்துழைத்திருக்கிறேன்” மனதுக்குள் பாரம் வந்து உட்கார்ந்து கொண்டது.
எது நடந்தாலும் காலம் மட்டும் எதற்கும் நிற்பதில்லையே, அது பாட்டுக்கு ஓடிக்கொண்டே இருந்தது.
கொஞ்ச நாள் வெளியூரில் குடித்தனம் நடத்திய கதிர் அப்புறம் ஒரு பெண் குழந்தை பிறந்து ஓரிரு வருடங்களில் இரண்டு வீட்டாரும் சமாதானமாகி போக வர இருந்தனர்.
பணி புரியும் இடத்தில் அவனோடு பேசுவதோடு சரி, மற்றபடி நம் வாழ்க்கை பிரச்சினைகளையே நம்மால் சரி செய்ய முடியாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
பெண் குழந்தையின் பத்தாவது பிறந்த நாளுக்கு ஒரு ,முறை கூப்பிட்டான் என்று நானும் மனைவியும் சென்று வந்தோம். அங்கு சண்முக சுந்தரமும் இருந்தார். அவர்கள் சகஜமாக இருப்பதாக இருந்தாலும் எனக்கு சண்முக சுந்தரத்தை பார்த்த பொழுது குற்ற உணர்ச்சி ஏற்பட்டதை தவிர்க்க முடியவில்லை.
வருடங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அடுத்த வருடம் ஓய்வு பெறப்போகிறேன். குழந்தைகள் அவரவர் வேறு வேறு இடங்களில் வேலையில் ஒட்டிக்கொண்டார்கள். இங்கு நானும், மனைவியும் மட்டும்.
அன்று இரவு இரண்டு மணிக்கு மேல் இருக்கும், கதவு தட தடவென தட்டப்பட, முன்னரையிலேயே நான் ஒரு பக்கமும், மனைவி ஒரு பக்கமும் படுத்திருந்தோம். சத்தம் கேட்டு விழித்த நான் மெதுவாக நடந்து சென்று கதவை திறந்தேன்.வெளியே கதிர் நின்று கொண்டிருந்தான், கண்களில் கண்ணீர் ஆறாக ஓடிக்கொண்டிருந்தது.
பயந்து போய் அவன் தோளை பற்றி என்னடா? என்ன ஆச்சு?
நான் ரொம்ப நம்புனேண்டா..என் பொண்ணு இப்படி எல்லாம் பண்ணமாட்டான்னு…கதறி அழுத அவனை மெல்ல வீட்டுக்குள் கூட்டி வந்தேன்.