தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 9,266 
 
 

விடிய விடிய அடைமழை அடித்துக்கொண்டிருந்த ஐப்பசி மாதம் நான்காம் தேதி காலை ஆறு மணி. அழகர்சாமிக்குத் தன் கைபேசி ஒலிக்கும் சப்தம் கேட்டது. அழகருக்குப் பெரும்பாலும் காலை எட்டுமணிக்குப் பின்பே அழைப்புகள் வரத் துவங்கும். ஆறு மணிவாக்கில் அவ்வளவாக அழைப்புகள் வருவதில்லை. அதற்கு முன் அந்த நேரத்தில் அழகருக்கு வந்த அழைப்புகள் அநேகமாக ஏதாவது ஒரு துக்கச் செய்தியைத் தாங்கியே வந்திருக்கின்றன. ஆகையால் ஒருவித நடுக்கதினூடாகவே கைபேசியை எடுத்துப் பார்த்தான். பதிவு செய்து வைத்த எண்ணில்லை. அழைப்பை ஏற்றுப் பேசத் “துவங்கினான்.

“”ஹலோ”

எதிர்முனை, “”யாரு அழகரா?” என்றது.

“”ஆமாங்க”

“”டேய், நான் புதுக்குளத்திலிருந்து காளீஸ்வரன் பேசறேன். நல்லாருக்கியா?”

“”நல்லாருக்கேன்டா மாப்ள, நீ எப்படி இருக்க பாத்து எத்தனை வருஷம் ஆச்சு. வீட்ல அப்பா, குழந்தைக எல்லாம் நல்லாருக்காங்களா?” என்றான் அழகர்.

“”எல்லாம் நல்லாருக்கோம்டா. வேலையெல்லாம் பரவால்லயா? தொழில் கொஞ்சம் மந்தமா இருக்குன்னு கேள்விப்பட்டேன்” என்று நலம் விசாரிக்கத் துவங்கினான் காளீஸ்வரன்.

அழகருடன் எட்டாம் வகுப்புவரை உடன் படித்தவன் காளீஸ்வரன். எட்டாவது பாதியிலிருந்தே அவன் பள்ளிக்கு வரவில்லை. அவனுடைய அப்பா தெற்குச் சீமையிலிருந்து பஞ்சம் பிழைக்க அழகரின் ஊருக்கு வந்தவர். அழகரின் சொந்த ஊர் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பாச்சலூர் மலையின் அடிவாரத்தில் உள்ளது. பரப்பலாறு அணைக்கு மேற்கே, செங்குத்தாக விழும் தலக்குத்து அருவியின் அருகிலுள்ள ஊர் புதுக்குளம். அப்போது, தண்ணீருக்கு சற்றே சிரமமான காலம். நெல்லும் கரும்பும் போட்டுக்கொண்டிருந்த தோட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, காய்கறிகள் பயிரிடத் துவங்கியிருந்த நேரம் அது.

தொடரும் பயம்காளீஸ்வரனின் அப்பா பெயர் சந்தனம். ஊர் பக்கம் சந்தனம் ஆட்டுக்காரர் என்றால் தெரியாத ஆள் கிடையாது. கிழக்குச் சீமையில் இருந்து இங்கே வந்து ஆடு மேய்த்து, பண்ணையத்தில் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து

சொந்தமாக ஆடு வாங்கி பட்டி போட ஆரம்பித்திருந்தார்.

ஒவ்வொரு தோட்டமாகச் சென்று, அறுப்பு முடிந்ததும் பட்டி போடத் துவங்கி விடுவார். அவர்களுக்கென்று சொந்தமாக வீடு ஏதும் இல்லை. பட்டி போடும் தோட்டத்திலேயே தங்கிக் கொள்வார்கள். காளீஸ்வரனும் அவருடனேயே சென்று எந்தத் தோட்டத்தில் பட்டி போடுகிறார்களோ அங்கேயே தங்கி, அங்கிருந்தே பள்ளிக்கு வருவான்.

காளீஸ்வரன் எட்டாவது படிக்கும் போது அவனுடைய அப்பா, இரண்டு குழி நெல் வயலும் ஒரு குழியில் கல்லாமைக் காய் மாமரமும் இருக்கும். ஒரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்திருந்தார். அதை அவர் பார்த்துக் கொள்ள ஆடு மேய்க்கும் வேலை இவனுக்கு வந்தது. இத்துடன் அவனுடைய பள்ளி வாழ்க்கை எட்டாவது பாதியிலேயே முடிவுக்கு வந்தது.

சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் காளீஸ்வரனுடன் சேர்ந்து, அழகரும் ஆடு மேய்க்க கிளம்பி விடுவான். தூக்குப் போணியில் சாப்பாடு எடுத்துக்கொண்டு தெக்கரடை நோக்கி ஆட்டை ஓட்டிக்கொண்டு இருவரும் செல்வார்கள். தெக்கரட்டில் ஆட்டுக்கு மேவு நிறைந்திருக்கும்.

மாலை மேவு முடிந்து பட்டிக்கு வரும்போது ஆடு வயிறு முழுக்க நிறைந்திருக்கும். அங்கே ஒரே ஒரு பிரச்சனை, நரி தொந்தரவுதான். நரியிடமிருந்து ஆட்டைக் காப்பாற்றி விட்டால் போதும். மேய்ச்சலுக்குப் போகும்போது பட்டி நாய் ஒன்று கூடவே வரும். நரி வரும் சமயத்தில் அந்த நாய் குரைத்து எச்சரிக்கை செய்து விடும். எப்படி பார்த்தாலும் வருடத்திற்கு இரண்டு மூன்று ஆட்டையாவது நரி அடித்திருக்கும்.

ஒரு முறை அழகரும் காளீஸ்வரனும் பாறை மேல் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது தூரத்தில் புதர் அசைவதைப் பார்த்தனர். இருவரும் எட்டி நின்று பார்த்தபோது நிச்சயமாக அது நரியில்லை என்று தெரிந்தது. தெக்கரட்டில் அவ்வப்போது சிறுத்தை தென்பட்டதாக விறகு வெட்டப் போன ஆட்கள் கூறக் கேட்டிருந்தனர். இருவருக்கும் பயம் தொற்றிக்கொள்ள, அப்படியே பாறை மறைவில் ஒதுங்கி நின்று மெதுவாகக் கழுத்தை உயர்த்திப் பார்த்தனர். புதருக்குள் சிறுத்தை ஒன்று மறைந்து நிற்பது மங்கலாகத் தெரிந்தது. இருவரும் வெலவெலத்துப் போய் பாறையின் அடியில் படுத்துக் கொண்டனர். கொஞ்ச நேரத்தில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தபோது சிறுத்தையைக் காணவில்லை. அவசர அவசரமாக ஆட்டைத் திருப்பி ஓட்டிக்கொண்டு தோட்டத்திற்கு வந்து சேர்ந்தனர். அழகர் தன் அம்மாவிடம் சிறுத்தையைப் பார்த்தது பற்றி சொன்ன போது, இனிமேல் நீ அவனுடன் தெக்கரட்டுக்குப் போகக்கூடாது என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டார்.

அதன் பிறகு அழகர், காளீஸ்வரனுடன் சேர்ந்து ஆடு மேய்க்கப் போவது முற்றிலும் நின்று போனது. அழகரும் உள்ளூரில் படித்து முடித்துக் கல்லூரி படிப்பில் சேர்ந்து முடித்து வெளியூரில் வேலைக்குச் சென்று அங்கேயே தங்கிவிட்டான்.

அழகர் காளீஸ்வரனைக் கடைசியாகப் பார்த்தது, பதினோரு வருடங்களுக்கு முன் நடந்த தன்னுடைய திருமணத்தில்தான். அழகருடைய அப்பா அவனுக்குப் பத்திரிகை கொடுத்திருந்தார். அழகரின் திருமணத்திற்குப் பரிசாக வந்திருந்த 28 நைட் லேம்புகளில் காளீஸ்வரனுடையதும் ஒன்று. திருமணத்திற்கு வந்தவன் அழகரின் கைபேசி எண்ணை வாங்கிச் சென்றிருந்தான். அதற்குப் பின் இப்போதுதான் அழகரை அழைத்திருக்கிறான்.

“”என்னடா காளீ, இந்த நேரத்துல கூப்புட்டு இருக்கே ஏதாச்சும் விசயமா?” என்றான் அழகர்.

“”இல்லடா, நம்ம ஊருல நேத்து சரியான மழை. கருங்குளம் நெறஞ்சு கடை போயிருச்சு. கணக்கன்பட்டியில ரோடு அரிச்சு பஸ் எதுவுமே பழனிக்குப் போக முடியல.””

“”ஆமாடா, நேத்து தம்பி ஊருல இருந்து போன் பண்ணிச் சொன்னான். எப்பவுமே நெறயாத அய்யரு குட்டை கூட நேத்துப் பேஞ்ச மழையில நெறஞ்சிடுச்சாமே”

“”ஆமாடா, சூளைக்கு மண் எடுத்த வெட்டுவாக்குழி எல்லாம் நிறைஞ்சு கெடக்கு. இன்னொரு மழை பேஞ்சா, கண்டிப்பா கடை போகும். இந்த மழைக்கே ஒரு வருசத்துக்கு கெணத்துல தண்ணி வத்தாது. தென்னம்பிள்ளையெல்லாம் உசுரு புடிச்சுக்கும். இந்த வருஷம் தப்பிச்சாச்சு. அடுத்த வருஷம் வரைக்கும் தாக்குப் பிடிக்கும். ஆமா, உனக்கு காளிபட்டியில மச்சு வீட்டுக்காரர் தெரியுமா?”

“”ஆமா தெரியும்”

“”அவுரு சாலைய சுத்தி தண்ணி பூந்திருச்சு. சூலூருல இருந்து ஹெலிகாப்டர் வந்துதான் ஆளுகள காப்பாத்துனாங்க. டிவீல கூட காட்டுனாங்க, பாக்கலையா?”

“”அப்படியா நான் பாக்கலடா. இன்னைக்கு பேப்பர்ல பாக்குறேன் வந்துருக்கான்னு. அப்பறம், ஏதாச்சும் தகவலா?”

“”இல்லடா, நான் கூப்புட்டது வேற ஒன்னு சொல்லத்தான். சொன்னா தப்பா நெனச்சுக்கக் கூடாது” என்றான் காளீஸ்வரன்.

“”பரவால்ல சொல்லுடா” என்றான் அழகர்.

“”நைட்டு ஒரு கனாக் கண்டன்டா. அது ஒரு கெட்ட கனாடா. அதச் சொல்லத்தான் கூப்பிட்டேன். எந்திருச்சதுல இருந்து ஒரே படபடப்பா இருக்கு. சொல்லலாமா வேண்டாமான்னு ஒரே யோசனையா இருந்துச்சு. சரி உனக்கு எச்சரிக்கை பண்ணுன மாதிரி ஆச்சுன்னு நினைச்சுத்தான் கூப்பிட்டேன்” என்றான் காளீஸ்வரன்.

“”எதா இருந்தாலும் சொல்லுடா தப்பா எடுத்துக்க மாட்டேன்” என்றான் அழகர்.

“”மறுபடியும் சொல்றேன், நீ சங்கடப்படக்

கூடாது. நைட்டு உன்ன, பாம்பு தீண்டுற மாதிரி கனாவுல கண்டேன். கொஞ்சம் எச்சரிக்கையா இருடா” என்றான்.

அழகர் உள்ளுக்குள் லேசாக அதிர்ந்தாலும், “”பரவால்லடா இத்தனை வருஷம் கழிச்சு உன் கனவுல நான் வந்ததுனாலதான இப்பக் கூப்பிட்டு இருக்க, அதுக்கு அந்தப் பாம்புக்குத்தான் நன்றி சொல்லணும்” என்றான்.

“”இல்லடா, கொஞ்சம் பாத்து சூதானமா இரு. அடுத்து ஊருக்கு எப்ப வர்ற?” என்றான் காளீ.

“”தீபாவளிக்கு வரலாம்னு இருக்கேன். வந்தா கண்டிப்பா உன்ன வந்து பாக்கறேன். இது உன்னோட நம்பர் தானே?”

“”ஆமாடா, சேவ் பண்ணி வெச்சுக்க. ஊருக்கு வந்தா தோப்புக்கு வா கல்லாமைக்காய் பிஞ்சு புடிச்சிருக்கு, ஊறுகாய்க்கு நல்லா இருக்கும், புடுங்கித் தாரேன் கொண்டு போ” என்றான்.

“”சரிடா, எல்லாரையும் கேட்டதாகச் சொல்லுடா என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்

அழகர்.

எல்லோரையும் போல அழகருக்கும் பாம்பைக்கண்டால் அத்தனை பயம். ஆனால் அவன் பிறந்து வளர்ந்த ஊரில் பாம்புகளுக்கு சற்றும் குறைவிருக்காது. தினமும் ஒருமுறையாவது யாராவது ஒருவர் பாம்பு பார்த்த கதை சொல்வார்கள். நாகமும் சாரையும் பின்னிப் பிணைந்த காட்சியை தத்ரூபமாக விவரிப்பார்கள். சிறு வயதில் பச்சைப் பாம்பு பச்சை மரத்தில் இருக்கும். அது சரியாக கண்ணைப் பார்த்துக் கொத்தி விடும் என்று யாரோ ஒருவர் சொல்லக் கேட்டு, பச்சையாக இருக்கும் எந்த மரத்திலும் விவரம் தெரியும் வரை அவன் ஏறியதில்லை. ஆனாலும் அவனுக்கும் பாம்புகளுக்கும் இடையே நடந்த கதை நிறைய உண்டு.

அழகருடைய வீடு தோட்டத்தின் நடுவில் இருக்கும் ஓட்டு வீடு. ஓட்டு வீட்டில் உள்ளே வெளிச்சத்திற்காக இரண்டு மூன்று கண்ணாடி ஓடுகளை இடையிடையே பதித்திருப்பார்கள். ஒரு நாள் வீட்டுக்குள் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தான் அழகர். இரவில் சிறுநீர் கழிக்க விழிப்பு வந்தபோது மேலே ஓட்டு வீட்டின் குறுக்குச் சட்டத்தில் ஏதோ நெளிவது போல் இருந்தது. கண்ணாடி ஓட்டின் வழியாக வரும் நிலா வெளிச்சத்தில், ஒரு பாம்பு ஊர்ந்து குறுக்குச் சட்டத்தில் தொங்கிக்கொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.

அழகருக்கு பயத்தில் பேச்சு வரவில்லை. கத்த முடியாமல் கையைக் காலை உதறி போர்வையை தூக்கி எறிந்தான். போர்வை, தொங்கிக்கொண்டிருந்த பாம்பின் மேல் பட்டு பாம்புடன் சேர்ந்து அவன் மேல் விழுந்தது. பதறி அடித்து எழுந்து கத்தினான். வெளியே படுத்திருந்த அவனுடைய அம்மா ஓடி வந்து என்னவென்று பார்ப்பதற்குள் பாம்பு மாயமாய் மறைந்துவிட்டது. விளக்கைப் பொருத்தி, டார்ச் லைட்டைத் தேடி எடுத்து வீடு முழுதும் தேடியும் சிக்கவில்லை. அப்போதுதான் அழகருக்கு இடது கை முட்டிக்கு மேல் கொஞ்சம் ரத்தம் வெளிவந்து கட்டியாகத் தேங்கியிருப்பது தெரிந்தது. பாம்பு அழகரைக் கொத்தி பல் பதிந்தது போல் அந்த இடம் இருந்தது. அழகருடைய அம்மா பயந்து போய் இரண்டு பச்சை மிளகாயை எடுத்து வந்து கடிக்கச் சொன்னார். அழகருக்குப் பயத்தில் காரம் அடிக்கிறதா? இல்லையா? என்று சொல்லத் தெரியவில்லை. மிளகாய் காரமில்லை என்று சொல்லிவிட்டான். அழகர் பயத்தில் பாதி மயக்கத்திலிருந்தான். விஷம் தலைக்கேறிக் கொண்டிருக்கிறது என்று நினைத்து அவனுடைய அம்மா, மூட்டை தைக்க வைத்திருந்த சணலை எடுத்து, அழகரின் கையில் இரத்தம் வரும் இடத்திற்கு மேலே ஒரு கட்டுப்போட்டு விட்டார். தோட்டத்தில் பண்ணயத்தில் இருந்த மாரியை எழுப்பி அழகரைத் தோளில் தூக்கி வரச் சொல்லிவிட்டு, அவர்களுக்கு முன்னதாக இவர் தோட்டத்திலிருந்து ஊருக்குள் ஓடினார்.

ஊருக்குள் இருக்கும் ஒரே ஒரு வாடகை அம்பாசிடர் முகமது அலி பாய் அவர்களுடையது. அவரை எழுப்பிக் கூட்டிக்கொண்டு, தோட்டத்தை நோக்கி ஒற்றையடி வண்டிப்பாதையில் காரில் அவனுடைய அம்மா வந்து கொண்டிருந்தார். அழகரை தூக்கிக் கொண்டு வேகமாக வந்து கொண்டிருந்த மாரியிடமிருந்து அவனை தூக்கிக் காரில் படுக்க வைத்து ஒட்டன்சத்திரம் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தார்.

அங்கே அவனுக்கு விஷமுறிவு மருந்து கொடுக்கப்பட்டது. காலையில் ரத்தத்தில் விஷம் ஏதுமில்லை என்று ரிப்போர்ட் வந்தது. வந்தவுடன் குளுகோஸ் ஏற்றி அதே நாள் மாலை, இனி ஒன்றும் பிரச்னை இல்லை என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். வீட்டுக்கு வந்தவுடன் தான் கையில் முட்டிக்குமேல் இரத்தம் வந்ததற்கான காரணம் தெரிந்தது. அழகர், பாம்பைக் கண்ட பயத்தில் கையை உதறும்போது கட்டிலில் இருந்த பனைமரச் செலாக் குத்தி கையில் கிழித்து ரத்தம் வந்திருந்தது. அது தெரியாமல், பாம்பு தீண்டி விட்டதாக எண்ணி மருத்துவமனை வரை போய் வந்தாகி விட்டது. விஷமேறியிருக்கிறதா என்று பார்க்க, மிளகாயைத் தின்றதால் வாயிலும் வயிற்றிலும் அழகருக்குப் புண் வந்து, அதற்கு ஒரு மாதம் வைத்தியம் பார்த்தது தனிக்கதை.

இது நடந்து இரு நாட்களுக்குள், சல்லிக்குளி தோட்டத்து முத்துராசு அண்ணனை கட்டுவிரியன் தீண்டிவிட்டது. அவரை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லாமல் பாடம் படிக்க வைத்தியர் ஒருவரிடம் கூட்டிச் சென்றிருக்கிறார்கள். வைத்தியர், முத்துராசு அண்ணன் தலையில் மண் சட்டியை வைத்து, உள்ளே ஏதேதோ தழைகளைப் போட்டு தீ வைத்து, விஷத்தை இறக்க முயற்சித்திருக்கிறார். பலனில்லை. அவருடைய தலை சூட்டில் வெந்து, மயக்கம் போட்டு விழுந்தவுடன், மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று சேர்த்தார்கள். அண்ணன், ஒரு மாதம் படுக்கையில் இருந்து பிழைத்து வந்தார். ஊருக்குள் கட்டுவிரியன் கடித்து, உயிர் மீண்டவர்கள் பட்டியலில் முத்துராசு அண்ணனும் சேர்ந்தார். அண்ணன் மீண்டு வந்து இத்தனை வருடமாகியும், பாடம் படித்து வெந்த அவர் உச்சந் தலையில் மட்டும், இன்னும் முடி வளரவேயில்லை.

அதன் பிறகு அழகர் எப்போதும் வீட்டுக்குள் கட்டிலில் படுத்ததேயில்லை. கட்டிலைப் போட்டு, கட்டிலுக்கு அடியில் பாயை விரித்து அதில்தான் படுத்துக்கொள்வான்.

அழகரின் தோட்டத்துக் கிணறு நல்ல அகலமானது. அதைச் சுற்றி நான்கைந்து தென்னை மரங்கள் இருக்கும். சமயத்தில் தேங்காய் முற்றி கிணற்றுக்குள் விழுந்துவிடும். அதை அழகர் கிணற்றுக்குள் இறங்கி நீச்சலடித்துத் தக்காளிக் கூடையில் சேர்த்து எடுத்து வருவான். ஒரு முறை அப்படி இறங்கி எடுக்கும்போது, பாம்பேரியில் இருந்து தவறி உள்ளே விழுந்த நல்ல பாம்பு ஒன்று, நீருக்குள் வாலைச் சுழற்றிச் சுழற்றி நீந்திக்கொண்டிருந்ததைக் கண்டான். அதைக்கண்ட பிறகு அழகர் பின்னெப்போதும் எந்தக் கிணற்றுக்குள்ளும் இறங்குவதேயில்லை.

வயலில் நெல் அறுப்பு நடக்கும்போது, எல்லோரும் சரியாக வரப்பின் ஒரு மூலையிலிருந்தே கதிர் அறுக்கத் துவங்குவார்கள். இவர்கள் இங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னோக்கி அறுத்துச் செல்லசெல்ல, வயலுக்குள் எலியைப் பிடிக்க வந்த பாம்புகள் மெல்ல நகர்ந்து எதிர் வரப்பில் மேலேறிச் செல்லும். வயல் அறுப்பு நடக்கும்போது தப்பித் தவறிக் கூட எதிர் வரப்புக்கு அழகர் சென்றதில்லை. ஒவ்வொரு முறை வயல் அறுப்பின் போதும் நாலைந்து பாம்பைக் கண்டதாக அறுப்புக்காரர்கள் சொல்வார்கள்.

பிறகொருநாள் காலையில், கோழியை பஞ்சாரத்தில் இருந்து வெளியே விடப் பஞ்சாரத்தை தூக்கிய போது, உள்ளே ஒரு சாரை அசையாமல் படுத்திருந்தது. இரண்டு குஞ்சுகளை முழுங்கிவிட்டு அசையமுடியாமல் கிடந்தது. அப்போது அழகர் போட்ட அலறலில் பக்கத்துத் தோட்டத்தில் இருந்தெல்லாம் ஆட்கள் வந்துவிட்டார்கள். அன்றைக்கிருந்து இப்போதுவரை அழகர், கோழி பஞ்சாரத்துப் பக்கமே போவதில்லை.

இதோ, அழகர் இந்த நகரத்து வாழ்க்கைக்கு வந்து பதினேழு வருடமாகிறது. பாம்பைப் பற்றிய செய்திகள் இப்போது அவ்வளவாக இல்லை. எங்காவது நெடுஞ்சாலையில் காரில் செல்லும்போது சாலை நடுவே ஏதாவது ஒரு வாகனம் நசுக்கிவிட்டுப் போயிருந்த பாம்பைப் பார்த்திருக்கிறான். அவ்வப்போது செய்தித் தாள்களில் பாம்பைப் பற்றிய செய்திகள் வரும்போது பார்த்திருக்கிறான். மற்றபடி, பாம்பை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு அவனுக்குக் கிட்டவேயில்லை.

காலையில் காளீஸ்வரன் பேசியதிலிருந்தே அழகருக்குள் இந்த பழைய நினைவுகள் ஒவ்வொன்றாக வரத் துவங்கின. அவனுடைய கனவையும் பாம்பையும் பற்றி யோசித்துக் குழப்பிக் கொண்டிருந்தான். தலை வலித்தது. கொஞ்ச நேரத்தில் அன்றைய அலுவலக வேலைகள் நினைவுக்கு வர அவசரமாகக் குளித்துவிட்டு வந்தான். சாப்பிட்டு முடித்தவுடன் அலுவலக அழைப்புகள் ஒவ்வொன்றாக வரத் துவங்க காலையில் நடந்த விஷயத்தை சுத்தமாக மறந்து போயிருந்தான்.

அழகரின் வீடு அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது மாடி. அன்று அழகர், அலுவலகம் செல்ல கீழிறங்கி வந்து கேட்டைத் திறந்து வைத்துவிட்டு, கார் ஷெட்டில் நிறுத்தியிருந்த காரில் ஏறி காரை ரிவர்ஸ் எடுத்தான். கார் பின்னுக்கு வர வர ஏதோ ஒரு நீளமான பிளாஸ்டிக் கவர் போன்று காருக்கு அடியில் இருந்த ஒன்று, வெளியே தரையோடு ஒட்டியிருப்பது தெரிந்தது. அழகர், காரை கேட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே வந்து அந்தத் தரையைப் பார்த்தான்.

ஓர் ஐந்தடிக்கும் குறைவில்லாமல் இருந்திருக்கும் சாரைப் பாம்பொன்று, தன் சட்டையை அங்கே உரித்துவிட்டுப் போயிருந்ததைக் கண்டான்.

– க.லெனின் (நவம்பர் 2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *