தொங்குபாலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 28, 2024
பார்வையிட்டோர்: 2,127 
 
 

மதிய வேளையில் வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு நல்ல தூக்கத்தில் இருந்த எனக்கு செவிப்புலத்தில் கேட்ட ஒலிகள் செவிப்பறைகளைக் கடந்து உள்உயிரை நடுங்கச் செய்தன. பக்கத்து வீட்டிலிருந்து வந்த அலறல் சத்தம் என்னைத் திடுக்கிடச் செய்ததுடன் மயிர்க்கால்களை நடுங்கச் செய்தன. வேகமாக ஓடி அபியின் வீட்டினுள் நுழைந்தேன். உள்ளே குழந்தை ஒரு பக்கம் வீறிட்டு அழுதுகொண்டிருந்தது. பக்கத்து அறையில் அபியின் அம்மா ஒரு பக்கம் கதறிக் கொண்டிருந்தாள். குழந்தையைத் தூக்கிக் கொண்டு அறையில் சென்று எட்டிப்பார்த்தேன். அறையின் மின்விசிறியில் சேலையை மாட்டி தூக்கில் தொங்கிய அபியின் உடல் என்னைத் திடுக்கிடச் செய்தது. கண்களில் நீர் அரும்பியது. அபியின் மரணம் எனக்குள் அதிர்ச்சியையும் வேதனையையும் கிளப்பியது. இவ்வளவு சின்ன வயதில் மரணமா? மிஞ்சிப்போனால் 24,25 வயதுதான் இருக்கும் அபிநயாவுக்கு. திருமணமாகி மூன்றாண்டுகள் ஆகிறது. குழந்தை பிறந்து பத்துமாதம்தான் ஆகிறது. பால்மணம் மாறாத அந்த பச்சிளம் குழந்தையின் அழுகை என் அடிவயிற்றைப் பிசைந்தது. அக்கா, அக்கா என்றழைக்கும் அபியின் குரல் என் காதுகளில் ரீங்காரமிட்டது.

சிறிது நேரம் கழித்து,

“என்னாச்சும்மா” என்ற என்னிடம்,

“எனக்கு என்ன தெரியும். போன் பண்ணி வரச்சொன்னாள். வந்தேன். சண்டாளி பச்சப்புள்ளைய விட்டுட்டு இப்படிப் போய்ட்டாளே. இவளுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ. தெரியலையே” என்றார்.

சிவந்து போன அபியின் முகத்திலிருந்து நாக்கு வெளியில் துருத்திக் கொண்டிருந்தது. சேலை இறுகியதால் நாக்கு வெளியில் தள்ளியிருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பிக்கொண்டிருந்த அவர்களை விடுத்து, வெளியில் வந்து அபியின் கணவனுக்கும் மாமியாருக்கும் தகவல் தெரிவித்தேன். தற்கொலை என்பதால் போலிசுக்குத் தகவல் சொல்லியாக வேண்டும். அபியின் அம்மாவிடமும் கணவனிடமும் கலந்து பேசி, போலிசுக்குத் தகவல் சொன்னேன். அவர்கள் வந்து வழக்கமான விசாரணைகளையும் பாடியைப் போஸ்ட்மார்ட்டம் செய்வதற்கான ஏற்பாடுகளையும் கவனித்தனர். அபியின் கணவன் தன் மீது தவறில்லாத படியால் முறைப்படி எதையும் அணுகவேண்டும் என்று நினைத்தான். போஸ்ட்மார்ட்டம் செய்தால் மகளின் உடலைக்கூறு போடுவார்களே என்று அபியின் அம்மா சிவகாமி கண்கலங்கினாள்.

“என் குழந்தையை நான் இப்படியா பார்க்கணும்” என்று அவள் கதறிய கதறலும் அபியின் தங்கை கவிதாவின் கதறலும் பார்ப்போருக்கு வேதனையைத் தந்தன. இன்னொரு பக்கம் குழந்தை தாயில்லாது போன சோகம் மனதை நெருடியது. குழந்தைய எப்படி வளர்க்கப்போறோம் என்ற சிந்தனை சிவகாமிக்கு மண்டையெங்கும் ஓடியது. எந்த வீட்லதான் பிரச்சினையில்ல? ஏன் இப்படி பண்ணுனா? மாப்பிள்ளையப் பார்த்தா அவர் காரணம்னு தோணல. என்னதான் இவளுக்குப் பிரச்சினை? பெத்த தாய்க்கிட்ட சொல்லமுடியாமா? ஊர்ப்பூரா கதைகதையா பேச வச்சுட்டாளே? அவ மாமனார், மாமியார் என்ன சொல்லப் போறாங்களோ? எப்படிச் சமாளிக்கிறது? அபியின் அம்மாவுக்கு மனது தவித்தது. என்ன பண்ணப் போறோம்?

அபியின் மாமனார், மாமியார் உள்ளே வந்தவுடன் அபியின் உடலைக்கூடப் பார்க்கவில்லை. நேரே அவள் அம்மாவிடம் வந்தவர்கள்,

“உங்க மகளுக்கு நாங்க என்னங்க குறைவச்சோம்? ஊரே காறித்துப்பும் படியா பண்ணிட்டுப் போய்ட்டா?”

என்று அபியின் அப்பா சட்டையைப் பிடிக்காத குறையாய் கேட்க, பதில்சொல்ல முடியாமல் வாயடைத்துப் போய் நின்றார்கள்.

“தனிக்குடித்தனம் வேணும்னு சொன்னா. ஏற்பாடு பண்றதுக்குள்ள எதுக்கு இப்படிப் பண்ணா? என் பிள்ளை என்ன தப்புப் பண்ணான்? பதில் சொல்லுங்க”

என்று கேட்க, அபியின் அப்பாவும் அம்மாவும் திகைத்துப் போய் நின்றனர். மனதிற்குள் அவர்களது கோபமும் நியாயமானதுதான், எங்களுக்கே புரியாத போது என்ன சொல்ல என்று பொறுமையுடன் அமைதி காத்தனர். அவர்கள் வெறுப்புடன் உள்ளே சென்றனர். மாப்பிள்ளை எங்கள் முகத்தைப் பார்க்கக்கூடத் தயாராயில்லை. அபியின் செயல் அவருக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் வெறுப்பையும் தந்திருக்க வேண்டும். உறவினர்கள் ஒரு பக்கம் அபியின் புகுந்த வீட்டையும் அவளையும் பற்றி அவள் சாவுக்கு யார் காரணம் என்று பட்டிமன்றம் நடத்தினர். எதுவும் பேசமுடியாமல் அபியின் அம்மாவும் அப்பாவும் துன்பத்தில் உறைந்துபோயினர்.

போனவாரம் பேசும்போது கூட தனிக்குடித்தனம் வைக்க மாப்பிள்ளை சரியென்று சொன்னதாகத்தானே போனில் சொன்னாள். அதற்குள் ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்தாள்? இதற்கு என்ன காரணம்? என்ன காரணமாய் இருக்கமுடியும். அவர்களுக்குள் மண்டையைப் போட்டுக் குடைந்த கேள்விக்குப் பதில் தெரியாமல் மனது தவித்தது.

அபி இறந்து இன்றோடு ஒரு மாதம் ஆகிவிட்டது. அவளது பத்துமாத ஆண்குழந்தையான மகிழனைப் பார்ப்பது பெரிய வேலையாய் இருந்தது. குழந்தை தாயின் நினைவு வந்தோ என்னவோ அவ்வப்போது வீறிட்டு அழுதான். சமாதானம் செய்வது பெரிய காரியமாய் இருந்தது. பத்து நாள் கழித்து ஏதோ நினைவு வந்தவளாய் அபியின் அம்மா சிவகாமி அபியின் போனை எடுத்துத் துருவிப் பார்த்தாள். அபியின் சாவுக்கு முந்தைய நாள் அவளது வாட்ச்அப்புக்கு ஒரு நம்பரிலிருந்து மட்டும் குறுஞ்செய்தி வந்திருந்தது. எடுத்து வாசித்தவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

“என்னடி ஒரு நாள் என் வீட்டிற்கு ஒரு ராத்திரி மட்டும் வந்து போறியா? என்ன முடிவு செய்த? இல்ல நீயும் நானும் சேர்ந்து எடுத்த போட்டோவ உன் புருசன் நம்பருக்கு அனுப்பவா? இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள பதில் சொல்லலன்னா போட்டோ உன் புருசனுக்குப் போயிரும்“

என்று இருந்தது. படித்தவுடன் உயிரே போனதுபோல் இருந்தது. அதிர்ச்சியும் அழுகையும் ஒன்றுசேர நெஞ்சையடைத்தது. மூச்சுவிட சிரமமாக இருந்தது. பாவிமக இந்த விசயத்த என்னிடம் சொல்லியிருக்கலாமே. காதும் காதும் வச்ச மாதிரி அவனத் தட்டியிருக்கலாமே. பாவிப்பயலுக்குப் பயந்து உசுரையே விட்டுட்டாளே. பச்சப்புள்ளையையும் விட்டுட்டுப் போயிட்டாளே. அவன் யாருன்னு தெரிஞ்சுக்கிட்டு அவனக் கொல்லனும். அப்பத்தான் என் மனசு ஆறும். சிவகாமியின் நெஞ்சுக்குள் அவனைப் பழிவாங்கும் வெறி கொழுந்துவிட்டு எரிந்தது.

இரவு அபியின் அப்பா வீட்டிற்கு வந்தவுடன் அமைதியாக எல்லா வேலையையும் முடித்தவள், படுப்பதற்கு முன் அபியின் போனிற்கு வந்த குறுஞ்செய்தியைக் காட்டி,

“இவனக் கொன்னாத்தான் என் மனசு ஆறும்” என்றாள். அவளைச் சமாதானம் செய்த அபியின் அப்பா,

“வேண்டாம். நம்ம பெண்ணின் பேர் கெட்டுப் போயிரும். அன்னிக்குப் போலிசுக்காரங்கள சமாளிக்கிறதே போதும்போதும்னு ஆயிருச்சு. அவங்க தோண்டித் துருவுனா இதெல்லாம் வெளில வரும். மாப்பிள்ளை வீட்டுக்காரங்களும் அபியத் தப்பாப் பேச வாய்ப்பிருக்கு. அதுக்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது. அபி கல்யாணத்துக்கு முன்னாடி யாரையோ லவ் பண்ணிருக்கலாம். கல்யாணத்துக்கப்புறம் அவ தப்பு செஞ்சுருக்கமாட்டா. இந்த ஊரும் உலகமும் ஈசியா பெண்ணைத் தப்பாப் பேசிரும். அவ போனது போய்ட்டா. என் பெண்ணப்பத்தி யாரும் தப்பாப் பேசிறக்கூடாது. அது அவன் பிள்ளையவும் பாதிக்கும்”

அவர் பேசியது நியாயமாகத் தோன்ற சிவகாமியும் அமைதியானாள். இருந்தாலும் நெருப்புப் போல இதைச் செய்தவன் மேல் அளவுகடந்த கோபம் கொப்பளித்தது. என் பிள்ளையின் சாவுக்குக் காரணமானவன் நல்லாவே இருக்கக்கூடாது அவன் குடிகெட்டுத் தெருவுல திரியணும் என்று மனதிற்குள் இறைவனிடம் வேண்டுதல் வைத்தாள் சிவகாமி. அவன் யாருன்னு தெரிஞ்சுக்கிட்டு ஏதாவது செய்யணும்

தன்னையும் அறியாமல் வஞ்சினம் எழுந்தது. தனது பேரனின் நிலையை எண்ணியபோது அப்பா, அம்மா இல்லாத குழந்தையின் நிலை தொங்குபாலம் போல அந்தரத்தில் நிற்பதுபோல வேதனை மண்டியது.

சிவகாமிக்குச் சமாதானம் சொன்ன அபியின் அப்பா, குறுஞ்செய்தி அனுப்பிய நம்பரை மனைவிக்குத் தெரியாமல் குறித்துக் கொண்டார். தன்னுடைய நண்பன் ஒருவன் மூலமாக இந்த நம்பர் யாருடையது என்பதை விசாரிக்கச் சொன்னார். நம்பருக்கு உரியவன் யார் எனத் தெரிந்தவுடன் அவன் எங்கிருக்கிறான் என்று விசாரித்த பின்புதான் ஒரு வாரத்திற்கு முன் அவன் சாலை விபத்தில் மரணமடைந்தது தெரியவந்தது. இதையறிந்தவுடன் மனது நிம்மதியடைந்தது அபியின் அப்பாவுக்கு. என் பெண்ணை வாழவிடாமல் செய்தவன் எப்படி நல்லாருப்பான். இதைச் சிவகாமியிடம் சொல்லவேண்டும் என நினைத்துக் கொண்டார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *