தோற்றுப் போகக்‍ கற்றுக்‍ கொள்வோம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 30, 2015
பார்வையிட்டோர்: 12,232 
 
 

வாரத்திற்கு 10 நாட்கள் சண்டையிட்டு நிம்மதியை கெடுக்‍க வேண்டும் என்பதுதான் அவளின் எண்ணம், லட்சியம், கொள்கை, கோட்பாடு, நியாயம், தர்மம், நீதிநெறி, நம்பிக்‍கை, எல்லாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வாரத்திற்கு 7 நாட்கள் மட்டுமே நிர்ணயிக்‍கப்பட்டு விட்டது.

சண்டை என்று வந்துவிட்டால் “சிவகங்கைச் சீமையிலே படத்தில் வரும் எஸ்.எஸ்.ஆரைப் போல் பொங்கி குமுறுகிறாள். சுமார் 40 பக்‍க வசனங்களை மனப்பாடம் செய்யாமல் முன் தயாரிப்பின்றி, தங்குதடையின்றி சரளமாக மடைதிறந்த வெள்ளம்போல் கொட்டித் தீர்க்‍கின்றாள். அவள் ஆவேசமாக சண்டையிடுகையில் அவளது கால்கள் தரையில் நிற்பதேயில்லை. கால்களிலிருந்து அத்தனை சக்‍தியையும் குரல்வளைக்‍கு கொண்டு வந்து ஒட்டுமொத்த சக்‍தியையும் திரட்டி 5 பாய்ண்ட் சரெளண்ட் சிஷ்டத்தில் 4 திசைகளிலிருந்தும் காதுகளை கிழித்தெரியும் ஒலி அளவீட்டுடன் அவள் போடும் சண்டை, அவளது கெண்டைக்‍க கால்களை தரையில் பதிக்‍க விடுவதேயில்லை.

இப்பொழுது நினைத்துப் பார்க்‍கிறேன். திருமணத்திற்கு முன் அவள் ஒரு சாதனை அளவாக சுமார் 2 மணி நேரம் “காதில் இன்பத் தேன் வந்து பாயுதே” என்கிற ரீதியில் அன்பொழுக பேசியிருக்‍கிறாள். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன புண்ணியம்.இது எனது தண்டனைக்‍ காலம், முழுவதாக அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.

எங்கோ, எதிலோ படித்த நியாபகம். “தேடாதே உருவாக்‍கு, தேடுபவர்கள் தோற்றுப் போகலாம், உருவாக்‍குபவர்கள் தோற்பதில்லை” என்று. நெப்போலியன் ஹில்லா…. காஃப்மேயரா….அல்லது நம்ம ஊர் மீசைக்‍கார மெர்வினா என்று தெரியவில்லை. ஆனால் இவர்கள் அனைவரும் திருமணம் ஆனவர்கள் என்பதால் எனக்‍கு சற்று சந்தேகம் ஏற்படுகிறது. உண்மையில் அந்த வார்த்தைக்‍கான அர்த்தம் அதுதானா….

அவளைப் பொறுத்தவரை, அவள் சண்டைக்‍கான காரணத்தைத் தேடுவதே இல்லை. காரணத்தை உருவாக்‍குவாள் ஒரு விஞ்ஞானியைப் போல. பல சமயங்களில் சண்டை முடிவடைந்தபிறகு சண்டைக்‍குள்ளிருந்து காரணத்தைத் தேடிக்‍ கண்டுபிடிக்‍க வேண்டும். காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்று யாராவது சொன்னால் அதை நம்ப வேண்டாம். அவரை அனுபவமில்லாதவர் என்று நினைத்து மன்னித்து விடலாம். அவர்களுக்‍குத் தெரியாது, காரணமேயில்லாமல் சண்டையிடும் மனைவிகளைப் பற்றி, அவர்கள் ‘தாங்கள் சொல்வது இன்னதென்று புரியாமல் கூறிவிடுபவர்கள்’ கடவுளே அவர்களை மன்னித்து விடுங்கள்.

தினமும் 2 மணி நேரம் (குறைந்தபட்சம்) உடற்பயிற்சி செய்வது போல், சண்டை போட்டு முழுமையாக பயிற்சி எடுக்‍கின்றாள். புயல் ஓய்ந்த பின் அமைதி தோன்றுமே. அப்பொழுது தோன்றும் இவ்வளவு பெரிய கோரத்தாண்டவம் எதற்கு என்று. நோக்‍கமற்ற அந்த முயற்சி வீணாக அல்லவா போய்விட்டது என்று. புயல் ஏதேனும் ஒரு வகையில் நன்மையைக்‍ கொடுக்‍குமா என்று யோசித்தால் நிச்சயமாக ஒன்றுமில்லை. புயல் அழிவை மட்டுமே தரும். அது புயலுக்‍கு மட்டும் புரிவதேயில்லை. அதுதன் சக்‍தியை நிலைநிறுத்த முயற்சி செய்கிறது அவ்வளவுதான். உண்மையில் அவளது செயலுக்‍கு எந்தவித நோக்‍கமும் இல்லை. நோக்‍கமில்லா செயல், முக்‍தியை அளிக்‍கும் என்று சொல்வார்கள். அந்த ஞானிகள் எதை நினைத்து அவ்வாறு கூறினார்களோ தெரியாது. முக்‍தி யாருக்‍கு என்பதுதான் இப்பொழுது பிரச்சனைக்‍குரிய கேள்வி.

ஒரு எம்.ஜி.ஆர். சிலம்புச் சண்டையையோ, அல்லது ஹாலிவுட் திரைப்படங்களின் பிரம்மாண்ட கிராபிக்‍ஸ் சண்டைக்‍காட்சிகளையோ பார்த்து உற்சாகமடைவதை விட்டுவிட்டு அவள் ஏன்? என்னிடம் சண்டையிடுவதில் இவ்வளவு உற்சாகமடைகிறாள் என்றுதான் புரியவில்லை. ஏதோ என்னுடன் சண்டையிட்டு வெற்றி பெற்று விட்டால் முதல்பரிசு கிடைத்துவிட்டதைப் போல் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. உலகில் ஒவ்வொரு மனைவிக்‍கும் தோற்பதற்கு ஒரு ஆண் தேவைப்படுகிறான். அது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆனாலும் சரி, ராஜஸ்தான் மாநிலத்து விவசாயி ஆனாலும் சரி. அனைவரும் தோற்றுப்போய் வாலை சுருட்டிக்‍ கொண்டு கிடக்‍க வேண்டும்? மீறி ஏதேனும் பேசினால், பெண்களை அடிமைப்படுத்த நினைக்‍கும் கொடுமைக்‍காரன், ஆணாதிக்‍க வெறிப்பிடித்த கயவன், பாரதி என்ன சொன்னான் தெரியுமா?… பெரியார் என்ன சொன்னார் தெரியுமா? … ராஜாராம்மோகன்ராய் என்ன சொன்னார் தெரியுமா? … என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

அன்று ஒருநாள் அவளிடம் இவ்வாறு புத்திகெட்டுப் போய் கூறினேன்…”பாரதியார் பெண் விடுதலையைப் பற்றி இவ்வளவு ஸ்லாகித்து உணர்வுப்பூர்வமாக கவிதை பாடியிருக்‍கிறார் என்றால், அத்தனை கிரெடிட்டும் செல்லம்மாளுக்‍குத்தான். செல்லம்மாள் பாரதியை துணி துவைக்‍க சொல்லவில்லை. சமைக்‍க சொல்லவில்லை. எங்காவது பாரதி வீடு கூட்டுவது போன்ற புகைப்படத்தை பார்த்திருக்‍கிறாயா? செல்லம்மாள் மிக நல்ல பெண்மணி, களைத்துப்போய் வீட்டுக்‍கு வரும் பாரதி குடிக்‍க சிறிது மோர் கேட்டால் அப்பெண்மணி ஓடிச் சென்று எடுத்து வருவார். ஆனால் என்னால் அதை நினைத்துக்‍ கூட பார்க்‍க முடியாது. சென்ற வாரம் களைத்துப் போய் வீட்டுக்‍கு வந்த நான் சிறிது மோர் தர முடியுமா என்று கேட்டேன். அதன்பிறகுதான் நிதானமடைந்த எனக்‍குப் புரிந்தது அய்யோ எவ்வளவுபெரிய தவறு செய்து விட்டோம் என்று. என் தலையில் நானே மண்ணை வாரி போட்டுக்‍கொண்டேனே என்று நினைத்துக்‍ கொண்டிருக்‍கையிலேயே அந்த அதிசயமும் நிகழ்ந்தது. ஆம் நான் வியந்து போனேன், நீ எனக்‍கு ஒரு குடுவையில் மோர் கொண்டு வந்து கொடுத்தாய்.

நான் கனவு கண்டு கொண்டிருக்‍கும் போதே ஒருவேளை இது கனவோ என்று கிள்ளிப் பார்த்திருக்‍கிறேன் என்றாலும். அப்பொழுதும் முட்டாள்த்தனமாக ஒருவேளை இது கனவோ என்று நினைத்து கிள்ளிப் பார்த்தேன். என்ன செய்வது அவ்வாறு தானே நாமெல்லாம் கற்பிக்‍கப்பட்டிருக்‍கிறோம். அப்பொழுதுதான் எனக்‍கு இன்னொரு விஷயமும் புரிந்தது. அதுதான் நான் குடிக்‍கும் கடைசி மோர் என்று…

நானாவது உனக்‍கு 5 முறை டீ போட்டுக்‍ கொடுத்திருக்‍கிறேன். அந்த டீயை குடித்துவிட:டு ” மாடு குடிக்‍குமா இந்த டீயை” என்று காரி உமிழ்கிறாய்.

பாரதி இதையெல்லாம் சந்தித்திருக்‍க மாட்டார். அவர் ஒரு உலகம் புரியாத அப்பாவி கவிஞர். என் அளவுக்‍கு அனுபவம் இல்லாதவர். மேலும் பாரதி சிறுவயதில் வாரணாசியில் படிக்‍கச் சென்ற போது கெட்ட சாமியார்களின் சகவாசத்தால் தேவ மூலிகைகளை எல்லாம் சாப்பிட்டிருக்‍கிறார். தேவ மூலிகையைப் பற்றி உனக்‍கு அவ்வளவாகத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் நான் கேள்விப்பட்டிருக்‍கின்றேன். இந்த உலகை மறந்து கற்பனையில் சஞ்சரிக்‍க வைக்‍கக்‍ கூடியது அந்த தேவ​மூலிகை. அப்படிப்பட்ட ஒரு கற்பனை உலகில் அவர் உளறியதை எல்லாம் பெண் விடுதலைக்‍ கவிதை என்று நினைத்து ஒரு பொருட்டாக எடுத்துக்‍ கொள்ளக்‍ கூடாது.

மேலும், பெரியாரைப் பற்றி உனக்‍கு அவ்வளவாகத் தெரியாது. அவர் இளவட்ட வயதில் தாசி வீட்டில் இருந்து கொண்டு தன் மனைவியை நடு இரவில் சாப்பாடு கட்டிக்‍ கொண்டு எடுத்து வரும்படி ஆணையிட்டவர். நான் உன்னிடம் அவ்வாறு கூற முடியுமா சொல்? அப்படி நான் எனக்‍கும், என் அருகில் இருக்‍கும் அந்த தாசிப்பெண்ணுக்‍கும் உணவு கொண்டு வரும்படி உனக்‍கு ஆணையிட்டால் என்ன நிகழ்ந்திருக்‍கும்….நீ என்ன செய்திருப்பாய்….அதுதான் எங்களுக்‍கு லாஸ்ட் சப்பராக இருந்திருக்‍கும். நீ உன் நகையை விற்று அதில் கிடைக்‍கும் பணத்தைக்‍ கொண்டு ஆறு குண்டுகள் அடங்கிய கள்ளத்துப்பாக்‍கியை வாங்கி என்னை நோக்‍கி 7 முறை சுட்டிருப்பாய். பின்னர் நான் இறந்து (சொர்க்‍கத்திற்கு) சென்ற பின்னர் அந்ததாசிப் பெண்ணை உருத்தெரியாமல் அழித்திருப்பாய். நல்ல வேளை அதைப் பார்க்‍க நான் கண்டிப்பாக உயிரோடு இருந்திருக்‍க மாட்டேன்.

ஆகவே தயவு செய்து நான் சொல்வதை புரிந்துகொள். பாரதியும், பெரியாரும் உதாரணம் கூறுவதற்கு வேண்டும் என்றால் அழகாகத் தெரிவார்கள். மற்றபடி அவர்களும் மனிதர்களுக்‍கே உரிய கோப தாபங்களுடன் வாழ்ந்தவர்கள்தான். நம் வாழ்க்‍கையை நமக்‍கே உரிய குணநலன்களுடன் நாம்தான் புரிந்து நடந்த கொள்ள வேண்டும். மற்றவர்களுடைய வார்த்தைகளோ, வாழ்க்‍கை முறைகளோ நமக்‍கு எப்பொழுதுமே துணைக்‍கு வரப்போவதில்லை.

இதையும் புரிந்து கொள்ளாமல் நீ பாரதியையும், பெரியாரையும், குறை சொல்கிறாயா என்கிற ரீதியில் மகளிர் அமைப்புகளுடன் இணைந்து எனக்‍கெதிராக போராட்டத்தை தொடுக்‍க வேண்டும் என்று நினைப்பாயானால், நேஷனல் ஹைவே சாலையின் நடுவில்அமர்ந்து தியானம் செய்வதைத் தவிர எனக்‍கு வேறு வழியில்லை.

கட்டிய மனைவிக்‍கு ஒரு சேலைவாங்கிக்‍ கொடுக்‍க துப்பில்லை – கட்டிய மனைவிக்‍கு ஒரு முழம் பூ வாங்கிக்‍ கொடுக்‍க துப்பில்லை – கட்டிய மனைவியை ஒரு சினிமாவுக்‍கு கூட்டிப்போக துப்பில்லை – என நாக்‍கை பிடுங்கிக்‍ கொள்கிற மாதிரி அசிங்கமாக கேட்டுவிட்டு மற்றொரு சமயத்தில் நான் என்ன உங்களை மற்ற பெண்களைப்போல் சினிமா, பார்க்‍, என ஊர் சுற்ற கூப்பிட்டேனா, இல்லை டெய்லி பூவும் ஸ்வீட்டும் வாங்கி வரச் சொன்னோனா? இல்லை, காஞ்சிபுரம் பட்டு, பனாரஸ் பட்டு என விதவிதமாக புடவைகளை வாங்கி வரச் சொன்னேனா? என்று வேறு கேட்கிறாய். இவ்வாறு மாற்றி மாற்றி பேசி காலம் காலமாய் என்னை குழப்பிக்‍ கொண்டிருக்‍கிறாய்.

சின்னாளப்பட்டியில் என் நண்பன் ஒருவன் சிறியதாக ஒரு துணிக்‍கடை வைத்திருக்‍கிறான். அவனது கடையில் புடவைகள் மட்டும் சுமார் 250 இருக்‍கும், அவனது கடைக்‍கும் நமது வீட்டுக்‍கும் உள்ள ஒரே ஒரு சின்ன வித்தியாசம், நமது வீட்டில் வெறும் 220 புடவைகள் மட்டுமே உள்ளன. சுமாராக 30 புடவைகள் குறைகின்றன. ஆனால் நீயோ ” உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்ற குறளுக்‍கு ஏற்ப நமது வீட்டை போத்தீஸ் கடையுடன் ஒப்பிட்டுப் பார்க்‍க ஆசைப்படுகிறாய். இது அநியாயம்…. அக்‍கிரமம்….

அடிக்‍கடி ஆணாதிக்‍கத் திமிர், ஆணாதிக்‍கத் திமிர் என்கிறாய்…

நீ விஜய் டி.வி.யில் கல்யாணம் முதல் காதல்வரை சீரியல் பார்க்‍கும் பொழுது, நான் ஸ்டார் மூவிஸ் சேனலில் “அமெரிக்‍கா கேப்டர் பார்ட்டு 2” பார்க்‍க ஆசைப்பட்டால் ஆணாதிக்‍கத் திமிர் என்கிறாய். நான் அவசரமாக அலுவலகம் கிளம்பும் பொழுது, நீ வெங்காயம் நறுக்‍கி கொடுக்‍க விடுத்த கோரிக்‍கையை ஏற்க மறுத்தால் ஆணாதிக்‍கத் திமிர் என்கிறாய். இரு சக்‍கர வாகனத்தில் பின்னே அமர்ந்து கொண்டு நீ போடும் கட்டளைகளை (ஹாரன் அடிங்க…..இன்டிகேட்டர் போடுங்க….. சடன் பிரேக்‍ போடுங்க…. ) என்பதை நான் ஏற்க மறுத்தால் உடனே எல்லாம் ஆணாதிக்‍கத் திமிர் என்கிறாய். அது போதாதென்று ட்ராஃபிக்‍ கான்ஸ்டபிள் அருகே வண்டியை நிறுத்தச் சொல்லி, அவரிடம் 500 ரூபாய்க்‍கு சில்லறை இருக்‍கா? என கேட்கிறாய். ஒரு ட்ராஃபிக்‍ கான்ஸ்டபிளிடம் செல்லும் 500 ரூபாய், திருப்பதி உண்டியலில் போடப்பட்டதற்கு சமம் என்று சற்று அதட்டிக்‍ கூறினால் அதற்கும் ஆணாதிக்‍கத் திமிர் என்கிறாய். எனக்‍கு ஆணாதிக்‍கத் திமிர் என்கிற வார்த்தைக்‍கு அர்த்தமே புரியவில்லை. ஆனால், பெண்ணாதிக்‍கத் திமிர் என்றால் என்ன என்பதற்கு நன்றாக அர்த்தம் விளங்குகிறது. இதையெல்லாம் நான் எவனிடம் சொல்லி நியாயம் கேட்பது. நானே புலம்பிக்‍ கொள்ள வேண்டியதுதான்.

நான் வீட்டில் குளிர்சாதனப் பெட்டியில் கொகோ கோலா 2 லிட்டர் பாட்டில் வாங்கி வைத்து அவ்வப்பொழுது குடித்து மகிழ்ந்தால் என்னை திட்டுகிறாய். அது உடலுக்‍கு எவ்வளவு கெடுதல் தெரியுமா? என்கிறாய். ஆனால் ஒரு காலத்தில் ஓல்டு மங்க்‍ குடித்த உன் அப்பாவுக்‍கு டபுள் ஆம்லேட் வித் பெப்பருடன், மீன் வறுவல் செய்து கொடுத்திருக்‍கிறாய் என்கிற தகவல் என் காதுகளுக்‍கு எட்டாமல் இல்லை. ஓல்டு மங்கை விட கோகோ கோலா உடலுக்‍கு கெடுதலா? என்றால் வாய் கூசாமல் ஆமாம் என்கிறாய். போசாமல் நானும் குடிகாரனாக மாறிவிடுகிறேன் என்று குறிப்பிட்டால் இந்த ஆணாதிக்‍கத் திமிர் எல்லாம் என்னிடம் செல்லுபடியாகாது என்கிறாய்.

அடிக்‍கடி தனியார் டி.வி.யில் நீயா நானா என்ற நிகழ்ச்சியை பார்த்து விட்டு அதைப் போலவே விட்டுக்‍ கொடுக்‍காமல் பேச வேண்டும் என்று நினைக்‍கிறாய். பயங்கரமான ஒரு பேய் படத்தை விட படுபயங்கரமான அந்த நிகழ்ச்சியை இடைவிடாமல் பார்ப்பதாலேயே மற்றவர்களை விட 2 சதவீதம் கூடுதலாக உனக்‍கு அறிவு முதிர்ச்சி ஏற்பட்டு விட்டதாக கற்பனை செய்து கொண்டிருக்‍கிறாய். நான் நன்றாக கவனித்திருக்‍கிறேன். அந்த நிகழ்ச்சியில் வரும் மனிதர்களைப் போலவே முகத்தை வைத்துக்‍ கொண்டு பாவனை செய்தபடி பேசுகிறாய். நான் இப்பொழுது அந்த பயங்கரமான நிகழ்ச்சியைப் போலவே உன்னையும் பார்த்து பயப்பட வேண்டியிருக்‍கிறது. நீ ஏற்கெனவே சம்பந்தம் இல்லாமல் உரையாடுவதில் கில்லாடி. இதில் உனக்‍கு தொலைக்‍காட்சி வழியாக உற்சாகமும், உத்வேகமும், தங்கு தடையின்றி கிடைத்தால் என் நிலைமை என்னாவது. இதுபோன்ற டேஞ்சர் டயபாலிக்‍ நிகழ்ச்சிகளால் தான் சாதாரண காப்பித்தூள் பிரச்சனையை காத்மாண்டு பூகம்பத்தைப் போல பெரிதாக்‍கி விடுகிறாய். எல்லாவற்றுக்‍கும் விவாதிக்‍க வேண்டும் என்று நினைப்பது ஒரு வித நோய், விவாதத்தை கடந்த சொல்வது கூட ஒரு வித முதிர்ச்சிதான் தெரியுமா?

அப்படியானால் நீ முதலில் விவாதத்தை கடந்து போ என்றுதான் குறிப்பிடுகிறாய். பேசாமல் சொல்லாமலே லிவிங்ஸ்டனைப் போல நாக்‍கை அறுத்துக்‍ கொள்ளலாம் என எத்தனை முறை நினைத்திருக்‍கிறேன் தெரியுமா? அதைவிட காதுகளை அடைத்துக்‍ கொள்வது அல்லது செவிடாக்‍கிக்‍ ​கொள்வது நல்ல பலன் தரும் என்ற என் நண்பனின் அறிவுரையை பரிசீலித்து கொண்டிருக்‍கிறேன். இப்பொழுது தான் புரிகிறது அவனுக்‍கு ஏன் சரியாக காது கேட்பதில்லை என்று.

அதிலும் இந்த சீரியல்களைப் பார்த்தால் எனக்‍கு அடிவயிற்றில் புளியைக்‍ கரைக்‍கிறது. ஒருநாளைக்‍கு 18 சீரியல்கள் போடுகிறார்கள். ஒவ்வொரு சீரியலிலும் வரும் வில்லிகள் உன் மனநிலையை கெடுத்து விடக்‍கூடாது என நான் வேண்டாத தெய்வம் இல்லை. குடும்பத்தை பிரிப்பது, குழந்தையை கடத்துவது, பிறர் கணவனை கவர்வது, பிறர் மனைவியை நோட்டம் விடுவது. பொருந்தாக்‍ காதல், திருடுவது, கொள்ளையடிப்பது, ஆசிட் வீசுவது, கொலை செய்வது என அத்தனை கிரிமினல் தனங்களையும், விலையில்லா பயிற்சி கொடுத்து, வீட்டுப் பெண்களை தயார்படுத்தும் செயலைச் செய்ய சீரியல்களுக்‍கு நிகர் வேறு இல்லை.

அன்று ஒரு நாள் நீ கேட்கிறாய், நீங்கள் அந்த ஆனந்தைப் போல் நடந்து கொள்ள மாட்டீர்களே என்று… அந்த ஆனந்த அப்படி என்ன செய்து விட்டான் என்று கேட்டால் இன்று வரை சொல்ல மாட்டேன் என்கிறாய். அந்த ஆனந்த அப்படி என்னதான் செய்து தொலைத்தான் தயவு செய்து சொல்லிவிடு. இல்லை யென்றால் என் மண்டையே வெடித்துவிடும் போல் இருக்‍கிறது. எனக்‍குத் தெரிந்து அத்தனை நண்பர்களிடமும் கேட்டு விட்டேன் அந்த ஆனந்த் எந்த சீரியலில் வருகிறான் என்று கண்டுபிடிக்‍கவே முடியவில்லை. அந்த ஆனந்த் நல்லவனா? கெட்டவனா? அவனைப் போல் நான் அப்படி என்ன செய்து விடுவேன் என்று பயப்படுகிறாய். எதையும் சொல்லித்தொலையாமல் என்னை அலைபாய விடுவதில் உனக்‍கு அப்படி என்ன சந்தோசம்.

இப்படி மனக்‍குழப்பங்களை ஏற்படுத்துவதிலும், சின்ன சின்ன சண்டைகளையெல்லாம் பெரிய பிரச்னைகளாக்‍கியும், என்னை தினமும் சோர்வடைய வைத்து விடுகிறாய். நானும் சோர்வடைந்து, நீயும் சண்டையிட்டு சோர்வடைந்து போனால், வாழ்க்‍கைப் போராட்டத்திற்கு வேறு எங்கிருந்து சக்‍தியைப் பெறுவது.

மேலும் என்னுடைய பல்வேறு அறிவுரைகளுக்‍கு விதவிதமாக கற்பனை உள்ளர்த்தங்களை கற்பிக்‍கின்றாய். உதாரணமாக அருகில் இருக்‍கும் காய்கறி மார்க்‍கெட்டுக்‍கு செல்வதற்கு ஆட்டோ பிடித்து செல்ல வேண்டுமா? சிக்‍கனமாகஇருக்‍கலாமே என்று கூறியதற்காக என்னவெல்லாம் உள் அர்த்தம் கற்பிக்‍கின்றாய்.

“ஏன்? எனக்‍கு ஆட்டோவில் செல்ல தகுதி இல்லையா? அல்லதுநான் ஆட்டோவில் செல்லக்‍கூடாதா, மதுரையில் சொகுசாக வாழும் உங்கள் தங்கச்சிக்‍கும் மட்டும்தான் ஆட்டோவில் செல்லத் தகுதி உண்டோ?” என்று கேட்கிறாய். இதில் ஏன் என் தங்கச்சியை இழுக்‍கிறாய் என்று புரியவில்லை.

“ஆட்டோவில் போவதனால் செலவு அதிகமாகிறது என்றால் நான் சாப்பிடுவதனால் கூட செலவு அதிகமாகத்தான் ஆகும். அதனால் இனிமேல்நான் ஒரு வேளை உணவு மட்டும் தான் சாப்பிடுவேன். அதற்காகும் செலவை நோட்புக்‍கில் எழுதி வைத்துக்‍ கொள்ளுங்கள்.” என்கிறாய். இதையெல்லாம் யாரேனும் கேட்க நேர்ந்தால் நான் உன்னை கொடுமைப்படுத்துவதாக அல்லவா நினைப்பார்கள்.

இனிமேல் நான் வெறும் தரையில்தான் தூங்குவேன் என்கிறாய். தலையணை வைத்துக்‍ கொள்ளமாட்டேன் என்கிறாய்.

என்ன சாப்பாட்டில் உப்பே இல்லை என்று கேட்டால், எதற்கு தேவையில்லாத செலவு என்று தான் உப்பு போடவில்லை என்று சொல்கிறாய். என் இரு சக்‍கர வாகனத்தின் சாவியை ஒளித்து வைத்து விட்டு, நடந்து சென்றால் பெட்ரோல் செலவு மிச்சம் தானே என்கிறாய்.

ஒரு சட்டையை துவைக்‍காமல் 2 நாட்களுக்‍கு போடச்சொல்கிறாய். இதனால் வாஷிங்மெஷினுக்‍கு ஆகும் மின்சாரச் செலவு மிச்சம்தானே என்கிறாய்.

சரி இவையெல்லாம் “சிக்‍கனமாக நடந்த கொள்” என நான் கூறியதால் வந்த வினைதானே என்று ஞானம் பெற்று என் நிலைப்பாட்டை மாற்றிக்‍ கொண்டு

“என்னை மன்னித்துவிடு, நான் அறியாமல் புத்திகெட்டு போய் சிறுபிள்ளைத்தனமாகக்‍ கூறிவிட்டேன், இனிமேல் நீ எங்கு சென்றாலும் ஆட்டோவில்தான் செல்ல வேண்டும். இது என் கட்டளை” என்று அன்புடன் குறிப்பிட்டால் ……

அதற்கு நீ கேட்கிறாய்

“நீங்க என்ன லூசா” என்று…

ஆம் எனக்‍கே சமீபகாலமாக அப்படித்தான் தோன்றுகிறது. ” ஒரு வேளை நான் லூசோ” என்று

கடைசியில் நான் ஒரு முடிவுக்‍கு வந்து விட்டேன். எது சரியோ அதுவெல்லாம் சரியில்லை. யார் சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்தே சரி என்பது அமையும். வாழ்க்‍கையின் மிகப்பெரிய ரகசியம் என்னவெனில்,

“தலையை இட-வலமாக ஆட்டக்‍கூடாது, மேலும் கீழுமாகத்தான் ஆட்ட வேண்டும்”

எப்பொழுதும் “சரி” என்று சொல்லக்‍ கற்றுக்‍ கொள்ள வேண்டும். எதிர்த்துப் பேசுவது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

டென்னிசில் ரோஜர் ​ஃபெடரர் தான் வெற்றி பெறுவார் என்பது தெரிந்த பின்னர் எதற்காக முழு மேட்சையும் பார்க்‍க வேண்டும். செரினா வில்லியம்ஸ் களத்தில் இறங்கிய பின்னர் நாம் வேறு வேலையை பார்க்‍க சென்று விடுவது உத்தமம் இல்லையா?

மனைவி என்பவள் ஒரு ரோஜர் ​ஃபெடரர் போல….. செரினா வில்லியம்ஸ் போல…. வெல்ல முடியாதவள். அவளிடம் எப்பொழுதும் சரி சொல்லக்‍ கற்றுக்‍ கொள்ள வேண்டும். சூரியன் அதிகாலை வேளையில்மேற்கே உதிக்‍கிறது என்று மனைவி கூறினாள் மாலை வேளையில் சூரியன் கிழக்‍கில் ​மறைவதை அகக்‍கண்களால் கற்பனை செய்து பார்க்‍க வேண்டும். இல்லை என்றால் அடுத்த நாள் சூரிய உதயத்தை பார்க்‍க முடியாது. சூரிய உதயத்தை பார்க்‍க விரும்புகிறவர்களுக்‍கு மட்டுமே இந்த விதி பொருந்தும்.

Print Friendly, PDF & Email

1 thought on “தோற்றுப் போகக்‍ கற்றுக்‍ கொள்வோம்

  1. கதையை மிகவும் ரசித்தேன். இப்போதெல்லாம் தொலைகாட்சி சீரியல்களை அதிகம் பார்க்கும் பெண்கள் அதில் வருகிறவர்கள்போலவே கையை ஆட்டி, ஆட்டி எல்லாவற்றிற்கும் தர்க்கம் பண்ணுவதைப் பார்த்து அயர்ந்திருக்கிறேன். விவாதம் பண்ணினால்தான் விவேகம் இருக்கிறதாக அர்த்தமோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *