கிழவி செத்தது விசேஷமில்லை; சாகு முன்னர் நடந்த சிறு சம்பவம்தான் விசேஷம்.
செத்த வீட்டுக்கு வந்திருப்பவர்கள் எல்லோரும் அந்தச் சம்பவத்தைப் பற்றியே பேசுகிறார்கள்.
சவத்துக்குத் தலைமாட்டில், கால் நீட்டியிருந்து, சிற்றுரலில் வெற்றிலை துவைத்து வாய்க்குள் அடக்கிக் கொண்டு, மாணிக்கம் பாட்டி, அப்பொழுதுதான் வந்த செல்லம்மாவுக்கு, அந்தச் சம்பவத்தைப் பற்றிச் சொல்லுகிறாள்.
கிழவியின் தூரத்துப் பேர்த்தி புஷ்பம். அந்தச் சம்பவத்தை நினைக்க நினைக்க அவளுக்கு மனசு ஆறவில்லை. பந்தலுக்குள் உட்கார்ந்திருக்கும் செல்லம்மாவின் புருஷனும் அந்தக் கதையைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறான்.
“எப்பவும் இப்படித்தான், ஆரு செத்தாலும் சாகு முந்தி விசேஷமான காரியம் ஏதும் நடக்கும்.”
சட்டம்பியார் தத்துவம் பேசுகிறார்,
கரம்பன் செவத்தியார் கோயிலடி வாசிகளுக்கு அந்தோக் கிழவி ஒரு ஸ்தாபனம் – கோயில், சிற்றமார், மடம், கூப்பன் கடை மாதிரி.
ஏரம்பு பரம்பரை, யார் கூட்டம் ? ஞானப்பிரகாசம் வீட்டுக்காரர் எந்தப் பகுதி?
அந்தோக் கிழவியைக் கேட்க வேணும்.
கரம்பனில் எந்த வங்கிசம் உசத்தி? சபை சந்திக்கு அடுக்காத சாதி எது?
அந்தோக் கிழவியைக் கேட்க வேணும்.
கரம்பனில் முதற் குடியேறிய கூட்டம்?
அந்தோக் கிழவியைக் கேட்க வேணும்.
அந்தோக் கிழவி ஒரு ஸ்தாபனம்தான்!
அந்தோக் கிழவி தரும் தகவல்களுக்கு ஆதாரம் கிடையாது; அதேபோல அதுக்கு வயசு என்ன என்பதற்கும் ஆதாரம் இல்லை.
எப்பொழுதோ ஒருகால் ஊர்காவற்றுறையில் பெரும் புயல் அடித்து வெள்ளம் பனையளவுக்கு உயர்ந்ததாம்; அப்போது கிழவிக்கு ஒரு வயசாம்!
ஆனாலும் நேற்று வரை கரம்பனில் பழுத்த பழமாக இருந்த ஒரேயொரு ஆத்மா அந்தோக் கிழவிதான்.
ஆறு குழந்தைகளுக்குத் தாயாகும் பேறு கிடைத்தாலும் கடைசிக் காலத்தில் அதைக் கவனிக்க ஒருவரும் இல்லை. பிறந்த குழந்தைகளில் ஐந்தையும் எமன் தடுக்கோடு தூக்கிப் போய்விட்டான். ஆறாவது ஒரு பையன். சின்ன வயசிலேயே வீட்டை விட்டு ஓடி விட்டான்!
மூன்று நாலு வருஷங்களுக்கு முந்தி அவன் திடீரென்று வீடு தேடி வந்தான். “ஆச்சி எப்படிச் சுகம்?” என்று விசர்ரித்தான். இரண்டு நாள் கிழவியோடு தங்கினான். “அது செய்வேன், இது செய்வேன்” என்று புழுகினான். மூன்றாம் நாள் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டான்!
“புட்டு அவிச்சாச்சடா மோனே! போய் மூஞ்சியைக் கழுவிற்று வா!!”
“எனக்குப் பழங்கறிச் சட்டிக்குள்ள போட்டு வைச்சிற்று நீ சாப்பிடு. நான் ஒரு ஆளைப் பாத்திற்று வரவேணும்.”
கிழவிக்கும் மகனுக்கும் கடந்த கடைசிச் சம்பாஷணை இதுதான்.
வந்தான்-போனன் ; மின்னிவிட்ட மாதிரி.
கறிச்சட்டியும் பிட்டும் இரண்டு நாளாகக் கிடந்து நாறின. மூன்றாம் நாள் தபாற்காரச் சங்கரப்பிள்ளை சொல்லித்தான் கிழவிக்கு விஷயம் தெரியும்.
“அவசரமாகத் தந்தி வந்து போறதாக உன்ர மகன் உன்னட்டச் சொல்லச் சொன்னார் ஆச்சி. போய்க் காயிதம் போடுவாராம்.”
“காயிதமா போடுவாராம். அவன்ர ஆள்ப்பேருக்குப் போடச் சொல்லு, புழுக்கைப் பயலுக்கு வந்து சொல்லிற்றுப் போக நேரமில்லை. அது சரி, அவன்ர அப்பனும் இப்படித்தானே ஒடிப்போனவன்.”
ஏமாற்றம், ஆத்திரம், விரக்தி, தனிமை உணர்வு அத்தனையும் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதிக் கண்டத்தைப் பிணிக்க, கிழவி வேப்பமரத்து நிழலில் இருந்து தன்னுள் முனகுகிறது.
ஆனாலும், மறுநாள் முதல் தினமும் அந்த வேப்பமரத்தின் கீழ் தபாற்காரனைக் காத்திருக்கும்.
“காயிதம் போடுறன் என்று சங்கரப்பிள்ளையட்டச் சொல்லீற்றுப் போனானாமே.”
வேப்பமர நிழல் கிழவியின் பேச்சுக்குத் தலையசைக்கும்.
“எனக்குக் காயிதம் இருக்கா தம்பி?”
“இல்லையாச்சி.”
ஒரு நாள்!
“காயிதம் இல்லையா தம்பி?”
“இல்லையாச்சி.”
ஒரு வாரம்!
“காயிதம் இல்லையா தம்பி?”
“இல்லையாச்சி.”
ஒரு மாதம்!
“ஒண்ணுமில்லையாடா மோனே?”
கொஞ்சம் சொந்தம் கொண்டாடி, பணிவாகக் கேட்டால் சங்கரப்பிள்ளை கொடுத்து விடுவான் என்ற நப்பாசை.
“இல்லையாச்சி.”
மேலும் சில மாதங்கள்!
“இல்லையா மோனே?”
“இருந்தா தராமல் விடுவமா? சும்மா அலட்டுறியே.”
காலம் போகிறது.
“ஆரு? சங்கரப்பிள்ளையா? காயிதம் இல்லையா மோனே?”
கிழவிக்குப் பார்வை மங்கிவிட்டது. சைக்கிளில் போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லோரிடமும் “காயிதம் இல்லையாடா மோனே?”
சங்கரப்பிள்ளைக்கும் அலுத்துவிட்டது. கிழவியின் கேள்விக்கு அவன் பதில் சொல்வதில்லை.
வேப்பமர நிழல்தான் கிழவிக்குத் தஞ்சம்.
ஒரு நாள் மர நிழலிற் கிழவியைக் காணோம். அன்றாடம் தரிசித்த கோயில் காணாமல் போய்விட்ட மாதிரி இருந்தது சங்கரப்பிள்ளைக்கு. பழக்கத்துக்கு மனிதன் எப்படி அடிமைப்பட்டு விடுகிறான்!
ஒரு நாள் – இரண்டு நாள் – மூன்றாம் நாள்.
சங்கரப் பிள்ளைக்கு என்னவோ போலிருந்தது. சந்திக் கடைச் சூசைப்பிள்ளையிடம் விசாரித்தான்.
“சுகமில்லையாம்” என்று பதில் கிடைத்தது.
கிழவியின் கொட்டில், கடைக்குப் பின்புறம். படலையைத் திறந்து, உள்ளே சென்று சைக்கிள் மணியை ஒலித்தான். பதில் இல்லை.
தொப்பியைக் கழற்றிச் சைக்கிள் கைப்பிடியில் மாட்டிவிட்டுக் குனிந்து நுழைந்தான்.
வெறுந்தரையில் விரித்த சேலைத் தலைப்பில் கிழவி கிடக்கிறது. பக்கத்தில் மண்டிக்காப்பியுடன் சிரட்டையொன்று. மோப்பம் பிடித்து வந்த எறும்புப் பட்டாளம், முதலில் சிரட்டையைச் சுற்றி முகாம் அடிக்கத் தொடங்குகிறது.
“ஆச்சி” என்று பலமாகக் கூப்பிட்டான் சங்கரப்பிள்ளை. பதில் இல்லை.
தொட்டு அசைத்தான்.
“ஆரது” என்ற முனகல்.
“நான்தான். சங்கரப்பிள்ளை.”
கண்விளக்கு, எப்படித் திடீரெனப் பிரகாசித்ததோ!
“காயிதமா?” என்றாள் கிழவி, எழுந்து உட்கார முயன்றபடி.
சங்கரப்பிள்ளை, குரல்வளைக்குள் ஏதோ ஒன்று அடைத்துக் கொண்டது போன்ற உணர்வுடன் கிழவியை எழும்பவிடாமல் படுக்கவைத்துவிட்டுப் பேசாமல் அவ்விடத்தை விட்டு அகன்றான். கடைக்காரச் சூசைப்பிள்ளையிடம், கிழவியை யார் பராமரிக்கிறார்கள் என்று விசாரித்தான்.
அடிக்கடி கிழவியைப் போய்ப் பார்த்தான்.
“எடி புள்ள, காயிதக்காரன் போவான் பாரடி” என்று கிழவி அடிக்கடி பிதற்றிக் கொண்டிருந்தது.
இரண்டு மூன்று நாட்களாகக் கிழவியின் பிதற்றல் அதிகரித்து விட்டது. குலைப்பலும் உதறலும் ; சன்னியாம்!
சூசைப்பிள்ளையின் மனைவி செவத்தியார் கோயில் உபதேசியாரிடம் போய்ச் சொன்னாள். சுவாமி வந்து `அவஸ்தை’ கொடுத்தார்.
“காயிதக்காரன் பாரடி” சங்கரப்பிள்ளை தினமும் வெறுங்கையாக வந்து போகிறன்.
“காயிதக்காரன் போவான் பாரடி.”
அயல் வீட்டுக்காரர்கள் எல்லோரும் கிழவியைச் சுற்றியிருந்தனர்.
“கிழவி இரண்டு நாளாய் இழுத்துக் கொண்டு கிடக்குது. சீவன் போக இவ்வளவு நேரம் பிடிச்சிதை நான் எங்கேயும் காணேல்ல.”
“என்ன பேச்சடி செல்லம்மா ? போற நேரம் வரமுந்தி உயிர்போக முடியுமா? மகன்ர காயிதம் கண்டுதான் கிழவிக்குச் சீவன் போகும்போல இருக்கு.”
சங்கரப் பிள்ளை, பெண்டுகள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டுப் போகிறான்.
மறுநாள் விடிந்து விட்டது.
“காயிதம் வரும் பாரடி” என்று பாதாளத்தில் இருந்து அடிக்கடி கேட்கிறது.
சங்கரப்பிள்ளை, காயிதம் விநியோகிக்கும் நேரம், பரபரப்போடு கிழவியின் குடிசைக்கு வருகிறான். தன் காயிதக்கட்டிலிருந்து கடிதம் ஒன்றை எடுத்துக் கிழவியின் கைக்குள் வைக்கிறான்!
“மகன்ர காயிதம் ஆச்சி”
கைகால்கள் பதற, கண்கள் நீரைச் சொரிய, முகம் ஆனந்தத்தால் பிரகாசிக்க, கிழவி, நீரில் மூழ்கித் தத்தளிப்பவன் தும்பைப் பிடிப்பது போலக் கடிதத்தைப் பற்றினாள். கண்ணில் ஒன்றிக் கொண்டாள்.
ஒரு சில நிமிஷங்கள், சகிக்க முடியாத அமைதி.
கடிதம் கிழவியின் கையில் இருந்து நழுவிக் கீழே விழுகிறது.
மாணிக்கம் பாட்டி கிழவியின் கண்களையும் வாயையும் பொத்துகிறாள்.
மற்றப் பெண்கள் ஒருவர் தோள் மேல் ஒருவர் கை மாட்டி, சக்கர வியூகம் போட்டுக் குந்துகிறார்கள்.
“என்னைப் பெத்த பாக்கியமே!”
முதலில் ஒரு தனிக்குரல்.
“கண்டியில காத்தடிக்க…
என்ர ராசாத்தி இஞ்சை….
கைவிளக்கு நூந்ததணை” பிலாக்கணம் தொடங்கிவிட்டது.
சூசைப்பிள்ளையின் மனைவி மெல்ல எழுந்து புருஷனின் கடையிலிருந்து வெற்றிலை பாக்குக் கொண்டுவரப் போகிறாள்.
கோயில் மணிக்குச் சொல்ல செல்லம்மாவின் புருஷன் விரைகிறான்!
சூசைப்பிள்ளை கிழவியின் மகனுக்குத் தந்தியடிக்கப் போகிறார்.
“ஆர் செத்தது?”
“உந்த அந்தோக் கிழவி”
மகன் வரவைப் பார்த்து, சவம் எடுப்பது தாமதமாகிறது.
சூசைப்பிள்ளை அடித்த தந்திக்குப் பதிலுமில்லை மகனையும் காணோம்.
“சன்னியாய்க் கிடந்த கிழவி, சுறுக்கு எடுக்க வேணும்.”
வந்திருப்பவர்கள் அலுத்து விட்டார்கள். அவர்களின் பொறுமை சோதனைக்குள்ளாகிறது.
பந்தலின் ஒரு மூலையில் சாய்ந்திருக்கும் சங்கரப்பிள்ளையை நோக்கிச் சூசைப்பிள்ளை வருகிறார், ஒதுக்குப் புறமாக அழைத்துப் போகிறார்.
“கிழவியட மகன்ர விலாசமென்ன? அந்தக் காயிதத்தைக் காணயில்ல. நான் சும்மா தந்தியடிச்சன் எண்டு சொல்லீற்றன்.”
“எனக்குத் தெரியாது குசைப்பிள்ளை. மகன் காயிதம் அனுப்பயில்ல. அது என்ர வேலை.”
சூசைப்பிள்ளை ஒரு கணம் திகைப்படைந்து நிற்கிறார். பிறகு சமாளித்துக் கொள்கிறார்.
“ஆமோ?”
சூசைப்பிள்ளை உள்ளே போகிறார். “அவன் இனி எங்கே வரப் போறான். சவத்தை எடுப்பம்.” என்று உரத்துச் சொல்கிறார்.
பறை முழங்குகிறது.
சவம் புறப்படுகிறது.
– 1958