இரவு முழுவதும், பல மணிநேரம் பேருந்தில் பயணம் செய்ததால், வியர்வை நசநசப்புடன், உடம்பெல்லாம் அசதியாக இருந்தது. கொஞ்ச நேரமாவது உறங்க சொல்லியது கண்கள். ஆனாலும், அசோகனின் மனசெல்லாம், கோதையம்மா கோழிக் குஞ்சின் மீதே இருந்தது. கைக்கடிகாரத்தை பார்த்தான், காலை, 6:30 மணி.
மிகுந்த மன உளைச்சல் காரணமாக, மூன்று நாட்கள் அலுவலகத்தில் விடுமுறை எடுத்து, பல்வேறு இடங்களுக்கும் போய், ஒரு பரதேசியப் போல அலைந்து, திரிந்து, தான் தங்கியுள்ள அறைக்கு வந்ததுமே, அந்த கோழிக்குஞ்சைப் பார்ப்பதற்காக இதயம் தவித்தது.
‘இந்த மூணு நாள்ல, அந்த ராக்காச்சி கோழி, கோதையம்மாவ எத்தனை முறை கொத்தி, தொரத்தி கொடுமைப் படுத்தியதோ… தன்னோட மத்த குஞ்சுககிட்ட எல்லாம் பாசத்தோட இருக்கிற அந்த ராக்காச்சி கோழி, கோதையம்மாவ மட்டும் வெறுக்குதே… மனுஷரப் போலவே அதுங்ககிட்டேயும், பெத்த பிள்ளயா இருந்தாலும் அரவணைக்கிறதும், வெறுக்குறதுமா ரெண்டு வகைக் குணங்கள் இருக்குமோ…’ என்று தனக்குள் ஆதங்கப்பட்டுக் கொண்டான். துணிமணிகள் நிறைந்த சூட்கேசை அறைக்குள் வைத்து கதவை பூட்டியவன், அதே வேகத்தில் வராண்டாவிற்கு வந்து, ஓரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி ஸ்டார்ட் செய்தபடி, ஊரின் கடைக்கோடியில் உள்ள மீனா அக்காளின் வீட்டை நோக்கி பறந்தான்.
அசோகனைப் பொறுத்தவரை, இந்த உலகில் தனக்கு வேண்டப்பட்டவர்களாக, இறந்து போன கோதையம்மாள் ஆயா, மீனா அக்கா, அந்தக் கோழி குஞ்சை மட்டுமே நினைத்திருந்தான்.
தன் பிறந்த ஊரோ, பெற்றோர் பற்றியோ, அவனுக்குத் எதுவும் தெரியாது. தாய்ப்பாலின் வாசனையே அறிந்திராமல், புட்டிப்பால் மட்டுமே குடித்து வளர்ந்தது மட்டும் நன்றாக நினைவிருக்கிறது. ஏழெட்டு வயசு இருக்கும்போது,
ஒரு நாள், இவன் உள்ளிட்ட அந்த ஆசிரமத்தில், ஏராளமான ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரித்து வந்த கோதையம்மாளிடம், ‘எங்க அம்மா யாரு பாட்டி… அது எங்க இருக்குது?’ என்று கேட்க, ‘உங்க அம்மா யாருன்னு, உன்னப் போலவே எனக்கும் தெரியாது கண்ணு; உன்னப் பெத்த அந்தப் பாதகத்தி, நீ பொறந்த கொஞ்ச நேரத்திலேயே உன்னை இந்த ஆசிரமத்து வாசல்ல போட்டுட்டுப் போய்ட்டா… நாந்தே உன்னோட அழுகச் சத்தங் கேட்டு, தூக்கிட்டு வந்து, குளிப்பாட்டி புட்டிபால் குடுத்துக் காப்பாத்தினேன். இந்தாப் பாருய்யா… உனக்கு மட்டுமில்ல, இந்த ஆசிரமத்துல இருக்கிற எந்தப் பிள்ளைக்குமே தாயி, தகப்பன் கெடையாது…’ என்று சொல்லித் தேற்றியிருந்தாள்.ஆயா கோதையம்மாள் என்றால் அசோகனுக்கு உயிர்;
இவன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, ஒரு நாள் நோய்வாய்பட்டு, படுத்த படுக்கையாகிப் போன கோதையம்மாள், அடுத்த சில தினங்களில் இறந்து போனாள்.
அரும்பின் மீது விழுந்த இடியாக ஆனது அந்த நிகழ்வு. மனசும், தேகமும் ஏகத்துக்கும் துவண்டுபோன அசோகன், வாரக் கணக்கில் கோதையம்மாளின் நினைவிலேயே மருகிக் கிடந்தான்.
இறந்து போன கோதையம்மாளுக்குப் பதிலாக, புது ஆயாவாக, மீனா அக்காள் வேலைக்குச் சேர்ந்திருந்தாள். கோதையம்மாளுக்கு ஆதரவு யாரும் இல்லை என்பதால், இரவு, பகல் என எல்லா நேரமும் ஆசிரமத்திலேயே இருப்பாள். ஆனால், மீனா அக்காளுக்கு கணவன், குழந்தைகள் என ஒரு குடும்பம் இருந்ததால், பகலில் மட்டுமே வேலைக்கு வருவாள்.கோதையம்மாளை போலவே எல்லாப் பிள்ளைகளையும் பாசத்துடன் கவனித்துக் கொண்டாள் மீனா அக்கா.
பிளஸ் 2 வரையில், அந்த ஆசிரமத்துக்கு சொந்தமான பள்ளியிலேயே படித்ததால், எந்தப் பிரச்னையும் இன்றி நாட்கள் நகர்ந்தன. கல்லூரி மாணவனாக வாழ்க்கையைத் துவங்கியபோது தான், தன்னுடன் படித்த சக மாணவர்கள், ‘அப்பன், ஆத்தாள் யாருன்னே தெரியாதாம்டா… அப்போ இன்ஷியல் என்ன போடுவான்…’ என்றும், ‘எதாச்சும் பொய்யான இன்ஷியல போட்டுக்கிட்டிருப்பான்; உண்மையான இன்ஷியலப் போடுறதாயிருந்தா, ஏ.பி.சி.டி., யில இருபத்தி நாலு எழுத்தும் போதாதே…’ என்று அவன் காதுபடவே கிண்டலடித்தனர். அந்தச் சமயத்தில், அசோகனுக்கு உயிரே ஆடிப்போகும். இதனால், யாருடனும் பேசாமல் தனித்தே இருப்பவன், கல்லூரி முடிந்து ஆசிரமத்திற்கு வந்ததும், ‘நான் தப்பான வழியில பொறந்ததா ஜாடையில பேசி, கிண்டலடிக்கிறாங்க அக்கா… எனக்கு செத்துப் போயிறலாம் போல இருக்குது…’ என்று, மீனா அக்காவிடம் சொல்லி ஆதங்கப்படுவான்.
‘யாரு என்ன வேணும்ன்னாலும் சொல்லட்டும். நீயும், இந்த ஆசிரமத்துல இருக்கிற மத்த பிள்ளைங்களும், அனாதைங்களோ, தப்பான வழியில பொறந்தவங்களோ கிடையாது; நீங்க எல்லாருமே தேவதையோட பிள்ளைங்க…’ என்று சொல்லி தேற்றுவாள் மீனா அக்கா.
பட்டப்படிப்பை முடித்த பின், பெரிய நிறுவனம் ஒன்றில், இளநிலை உதவியாளராக வேலைக்கு சேர்ந்து, மாதம், 2,000 ரூபாய் வாடகையில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கினான். அலுவலகத்திலும், ‘இவரு அனாதை ஆசிரமத்தில வளர்ந்தவராமே… பெத்தவங்க யாருன்னே தெரியாதாம். கள்ளக்காதல்ல பொறந்திருப்பாரு போல. நல்ல காதலுக்குப் பொறந்தவங்களையே பெத்தவங்க நட்டாத்துல விட்டுட்டுப்போற இந்த உலகத்துல, இவர மாதிரி ஆளுங்களோட நெலம பரிதாபந்தான்…’ என்று ஜாடை பேசினர். சிலர் இன்னும் மட்டமாக பேசுவதுண்டு.
இதையெல்லாம், கேட்டும் கேட்காதது போல இருந்தாலும், அலுவலகத்திலிருந்து, தான் தங்கியிருக்கும் அறைக்கு வந்ததும், ‘கடவுளே… அப்பன், ஆத்தாள் யாருன்னு தெரியாத இப்படி ஒரு பொறப்ப எதுக்குக் கொடுத்த? ஒவ்வொரு வாயும் ஒவ்வொரு விதமாப் பேசுதே…’ என்று கேவிக்கேவி அழுவான். ‘மனுஷனாப் பொறந்தா தாய், தகப்பன், சொந்தம் பந்தம்ன்னு ஒரு குழுவா வாழ்ந்து, குதூகலமா பொழுதக் கழிக்கணும்; அதெல்லாம் இல்லாம இதென்ன அனாதை வாழ்க்கை… இதுக்கு பொறக்காமலேயே இருந்திருக்கலாம்…’ என்ற வேதனை, அவனை வதைத்தெடுத்து, பலசமயம் தற்கொலை எண்ணத்தையும் ஏற்படுத்தியது.
அவ்வப்போது, மீனா அக்காவின் வீட்டுக்குப் போய், அவளுடனும், அவளது குடும்பத்தாருடனும் பேசிவிட்டு வருவதில் ஓரளவு ஆறுதல்பட்டுக் கொள்வான். இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு நாள், அவளது வீட்டுக்கு போயிருந்த போதுதான், அந்த கோழிக் குஞ்சை, முதன் முறையாகப் பார்த்தான். தரையில் கோலி குண்டை உருட்டி விட்டது போல ஓடுவதும், நிற்பதுமாக பார்ப்பதற்கு கொள்ளை அழகாக இருந்தது. கண் இமைக்காமல் அதையே கவனித்து கொண்டிருந்தவனுக்கு, மனம் லேசாவது போல் இருந்தது.
ஆனாலும், அந்தச் சந்தோஷம் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. பத்துப் பன்னிரண்டு குஞ்சுகளுடன் உலவிக் கொண்டிருந்த தாய்க்கோழிக்கு அருகில், அந்த குஞ்சு ஓடிப்போய் நிற்க, தாய்கோழி, ‘க்கெக்கேக்…கெக்கே…’ என்று பெரும் சினத்துடன் கத்தி கொண்டே, இறக்கைகள் இரண்டையும் படபடத்து, கோபத்தில் சிலிர்த்தவாறு, அந்த குஞ்சை துரத்தித் துரத்தி கொத்தியது.
அக்காட்சி, அசோகனுக்கு பதற்றத்தையும், பீதியையும், மனதில் ஒரு தவிப்பையும் ஏற்படுத்த, ‘ஏய்…தாய்க்கோழி… அந்த குஞ்ச மட்டும் எதுக்கு இப்படிக் கொத்துற? விட்டுரு வலிக்கும்…’ என்று சொல்லி, அதை விரட்ட கையை உயர்த்தினான். கொத்துவதை நிறுத்தி, அங்கிருந்து ஓடியது தாய்க்கோழி.
கீழே விழுந்து, எழுந்திரிக்க முடியாமல், ‘க்கிய்ய் யா… க்கிய்ய்..யா..’ எனச் சிணுங்கிக் கொண்டிருந்த அந்த குஞ்சை தூக்கிய அசோகன், ‘என்னடா வலிக்குதா?’ எனக் கேட்டு, வாஞ்சையுடன் அதன் முதுகில் வருடினான். சட்டென இறக்கைகளை விரித்து, அவனது கையிலிருந்து விடுபட்டு பறந்து போய், தரையில் நின்று, உடலை, ‘படபட’வென உதறியபடி ஓடியது.
அப்போதிருந்தே, அந்தக் கோழிக்குஞ்சின் மேல் அவனுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது. அடுத்த நாளே, பொரிகடலை வாங்கிப்போய், அதை சிறு துகள்களாக்கி, கோழிக் குஞ்சுக்கு முன் தூவி விட்டான். அது, தன் குட்டி இறக்கைகளை, ‘படபட’த்தபடி ஓடிவந்து, செல்லமாய் சிணுங்கிக் கெண்டே கொத்தி தின்றது. அதன்பின், ஒரு நாள் விட்டு ஒரு நாள் என, முறை வைத்து பொறிகடலை, அரிசி என ஏதாவது வாங்கி போய், அந்தக் கோழிக்குஞ்சுக்குப் போடுவதும், தாய் கோழிக் கொத்தித் துரத்தும் சமயங்களில், ஓடிப் போய், அதை தூக்கி, உள்ளங்கையில் வைத்து தடவிக் கொடுத்தபடி, ‘உங்க அம்மா கோழி தான் உன்னை மட்டும் பக்கத்துல அண்ட விடாம தொரத்தி விடுதே… அப்புறமும், எதுக்கு அது பக்கத்துல போற? தனியாவே போயி இரைதேடி ரோஷமாப் பொழைச்சிக் காட்டுடீ ஏஞ் செல்லம்…’ எனச் சொல்லி, அனுதாபம் மேலோங்க கொஞ்சுவான்.
ஆசிரமத்தில் தன்னை வளர்த்து, ஆளாக்கி, இறந்து போன ஆயா கோதையம்மாளின் நினைவாக, அவளது பெயரையே கோழிக்குஞ்சுவுக்கு சூட்டி மகிழ்ந்ததோடு, தாய்கோழிக்கு, ‘ராக்காச்சிகோழி’ என்றும் பட்டப் பெயரிட்டான். அப்போது முதல், தினமும் நான்கைந்து முறையாவது, மீனா அக்காவுக்குப் போன் செய்து, ‘அக்கா… ஏங் கோதையம்மா செல்லம் நல்லா தானே இருக்குது; அதப் பத்திரமாப் பாத்துக்கோங்க…’ என்ற விசாரிப்பில் துவங்கி, ‘அந்த ராக்காச்சிக் கோழியக் கண்டிச்சு வையுங்க; என்னோட கோதையம்மாக் குஞ்ச கொத்துச்சுன்னா, தாய்க் கோழின்னுகூட பாக்காம அதோடக் கழுத்த திருவி, சுக்கா வறுவல் போட்டுவேன்…’ என்று செல்லமாய் கோபித்துக் கொள்ள, ‘நல்ல பிள்ளைப்பா நீ… கோழிகளுக்கு கோதைன்னும், ராக்காச்சின்னும் பேரு வெச்சுக்கிட்டு…’ எனக் கூறிச் சிரிப்பாள் மீனா அக்கா.
இப்போதெல்லாம், அசோகன், மீனா அக்காவின் வீட்டுக்குள் நுழைகிற அரவம் தெரிந்தாலே, இறக்கைகளை படபடத்தவாறு ஓடி வந்து, அவனுக்கு அருகில் நின்று, இரையை தேடி அவனது கைகளின் மீதே பார்வையை அலைய விடும் கோதையம்மா கோழிக் குஞ்சு. உடனே அவன், தன் கையிலிருக்கும் இரையை, அதன் முன்பாகத் தூவி விட, அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டு, அந்தக் குஞ்சு நகர்ந்து விடுவதும், வழக்கமான ஒரு நிகழ்வாகவே மாறி விட்டிருந்தது.
‘பாவம் கோதையம்மாவப் பாத்து மூணு நாளாச்சு; அதுக்கு இரை கிடைச்சதோ இல்லயோ… தன்னோட பிள்ளைங்கிற பாசம் கொஞ்சங்கூட இல்லாத அந்த ராக்காச்சி கோழிகிட்ட, அத எப்படியாவது போகவிடாம செய்துறணும்…’ என்றெண்ணியபடி, மீனா அக்காவின் வீட்டை நோக்கி, மோட்டார் சைக்களில் வேகமாய் சென்றான் அசோகன். வீட்டை அடைந்த போது, வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் மீனா அக்காள்.
மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி, அதை ஓரமாய் நிறுத்தி விட்டு, ” என்னக்கா… என்னோட கோதையம்மா செல்லம் என்ன செய்துகிட்டிருக்குது?” என்றுக் கேட்டுக் கொண்டே, திண்ணையில் உட்கார்ந்தான், அந்தக் கோழிக்குஞ்சை தேடி கண்களை அங்கிட்டும், இங்கிட்டுமாக அலைய விட்டான்.
ஆனாலும், அவனது சல்லடைப் பார்வைக்குள் அகப்படவில்லை அந்தக் கோழிக்குஞ்சு. ராக்காச்சி கோழி மட்டும் குஞ்சுகள் புடைசூழ, ஒரு ஓரமாய் அலைந்து கொண்டிருந்தது.
ஒரு நிமிடத்தில் நெஞ்சுக்குள் திகிலறைந்து, தேகம் வெடவெடத்தது அவனுக்கு. வாசலில் கோலம் போட்டு முடித்து நிமிர்ந்த மீனா அக்காவிடம், “என்னக்கா… என்னோடக் கோதையம்மாவக் காணோமே… எங்க போயிருச்சு?” என்றான்.
மீனா அக்கா ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவள், பின், “யப்பா அசோக், உன்னோட கோதையம்மாவுக்கு திடீர்ன்னு ரோஷம் பொத்துக்கிட்டு வந்திருச்சு. அந்த தாய்க் கோழிக்கு பக்கத்துல ரெண்டு, மூணு நாளாவே போறதில்ல. விடிஞ்சதுமே தானே வீதிக்கு கிளம்பிப்போயி, இரைதேடித் தின்னுது. இப்பகூட வாசல்ல ஒரு ஓரமா மேய்ஞ்சிக்கிட்டிருந்துச்சே… நீ பாக்கலையா?” என்று நிறுத்தியவள், “மனுஷங்களே, தான் பெறாத பிள்ளைகளுக்கு குடிக்க தண்ணிகூடத் தரத் தயங்குற இந்தக் காலத்துல, வெறும் நாலறிவு மட்டும் படைச்ச அந்தக் கோழி மட்டும் எப்படி தான் பெறாத உன்னோட கோதையம்மா குஞ்சுக்கு இரை தேடிக் குடுக்கும்?” எனச் சொல்ல, மீனா அக்காவின் அந்த வார்த்தைகள், அவனை கலவரப்படுத்தின. கொஞ்சமும் எதிர்பாராத அந்த சொற்களால் நெஞ்சே, ‘கிடுகிடு’த்துப் போனது.
“என்னக்கா சொல்ற… கோதையம்மா அந்த ராக்காச்சி கோழியோட குஞ்சு இல்லையா?” உடைந்த குரலில் கேட்டான்.
“பின்ன… நானென்ன பொய்யா சொல்றேன்? அது, அந்த கோழி பொறிச்ச குஞ்சு இல்ல… ‘மிஷின்’ல- செயற்கை முறையில பொறிச்ச குஞ்சு. உன்னபோலவே அந்த குஞ்சுவுக்கும் அப்பன், ஆத்தாள் கிடையாது. ஒரு குஞ்சு அஞ்சு ரூபாய்ன்னு, சந்தையில வித்துக்கிட்டிருந்தாங்க. ஏற்கனவே குஞ்சுத்தாய்க்கோழி வீட்ல இருக்கிறதால, இந்தக் குஞ்சையும் அது கவனிச்சிக்கிரும்ன்னு நம்பி, ஆசைப்பட்டு, ஒரு குஞ்ச வாங்கிட்டு வந்தேன். ஆனா, நான் நெனச்சது நடக்கலை; அந்தக் குஞ்சோட நெறத்தப் பாத்தாலே அது, அந்தக் கோழியோட குஞ்சா இருக்காதுன்னு தெரியலயா உனக்கு?” என்றாள்.
தனிமை, விரக்தியால் துரும்பாய் நீர்த்துப் போயிருந்த அவனுடைய நம்பிக்கை, இப்போது, கரும்பாய் அவதரித்து, சுவைக்க வைத்தது போல ஆனந்தம். ‘மிஷின்ல பொறிச்ச கோழிக் குஞ்சே, ஆதரிக்க எந்த நாதியும்மில்லாத நிலமையில், ரோஷத்தோட தனக்குத் தானே இரை தேடி நம்பிக்கையோட வாழ துணிஞ்சுட்டப்ப, மனுஷப் பொறப்பான நாம, மத்தவங்களோட இழிவான வார்த்தைகளுக்காக, கோழைத்தனமான முடிவெடுக்க துணிஞ்சிட்டோமே…’ என்று தனக்குள் வெட்கியபடி, சட்டென்று வீதிக்கு வந்த அசோகன், எட்டிவிடும் தொலைவில் எதையோ கொத்தித் தின்று கொண்டிருந்த அந்தக் கோழிக் குஞ்சை பார்த்து, “கோதையம்மா… எஞ்செல்லமே… நீ அனாதை கிடையாது; நீயும், என்னைப் போலவே தேவதையோட பிள்ளை…” என்று பரவசத்துடன் சொல்லிக் கொண்டே அதன் அருகில் வேகமாய் ஓடினான்.
– டிசம்பர் 2014