தேள் நாக்கு சாமியின் கதை!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 18, 2023
பார்வையிட்டோர்: 4,212 
 

“ஏங்க, புதுசா ஒரு திருஷ்டி பொம்மை படத்த வாங்கி மாட்டினா குறைஞ்சா போயிடுவீங்க?”

ஒரே நாளில் இரண்டாவது தடவையாக வித்யா சத்தம் போட்டதும் தேள் நாக்கு சாமியின் தலையெழுத்து முடிவு செய்யப்பட்டுவிட்டது.

திருஷ்டி, திருஷ்டி பரிகாரம் இரண்டிலும் அசைக்க முடியாத மகா நம்பிக்கை உடையவளைக் கல்யாணம் செய்துகொண்டது என் முன்வினை.

அவள் சொன்னதைச் சொன்ன உடன் செய்து முடித்துவிட்டு மறு காரியம் பார்ப்பது என் பழக்கதோஷம்.

ஞாயிற்றுக்கிழமை நடுப்பகலில் வேகாத வெயிலில் வரமாட்டேன் என்று அடம் பிடித்த என் ஸ்கூட்டரைத் தாஜா செய்து கிளப்பி, ஜவஹர் நகரின் இன்னொரு கோடியில் இரண்டு கிலோமீட்டர் தள்ளியிருக்கும் உசேன் பாய் படக்கடையில் இரண்டு கொம்பும், கோரைப்பற்களும், நெற்றியில் விபூதிப்பட்டையும், பிளந்த வாயும், நீண்ட (தேளின் உருவம் வரையாத) நாக்கும், மிரட்டும் கண்களுமாய்க் காட்சி தந்த புதிய திருஷ்டி பொம்மை படத்தை வாங்கி வந்து, எங்கள் வீட்டின் வெளிவாசலில் ஏற்கெனவே தேள் நாக்கு சாமி தொங்கிக் கொண்டிருந்த அதே ஆணியில் மாட்டிவிட்டேன்.

“வெரி குட். இப்பதான் பார்க்க அம்சமா இருக்கு. நாப்பதாயிரம் ரூபாய் செலவழிச்சு வீட்டுக்குப் பெயிண்ட் அடிச்சுட்டு, பழைய சாயம் போன திருஷ்டி படத்தையே ஒரு வாரமாய் மாட்டி வெச்சிருந்தீங்களே. சரியான கஞ்சப் பிரபு. அந்தப் பழைய படத்தைக் குப்பையிலே போட்டுவிட்டு சாப்பிட வாங்க.”

“பாராட்டா, திட்டா’ என்று விளங்காதபடி வித்யா கூறியதற்கு பதிலேதும் சொல்லாமல் டைனிங் டேபிளுக்குச் சென்றேன், தேள் நாக்கு சாமியை என் மேசையில் உள்ள புத்தகங்களுக்கு நடுவில் பத்திரப் படுத்திவிட்டு.

பத்து வருஷங்கள் முன்னால் நாங்கள் புதிதாகக் குடியேறிய இந்த சொந்த வீட்டிற்குத் திருஷ்டி பரிகாரமாக வாங்கி மாட்டி வைத்த திருஷ்டி பொம்மைப் படம்தான் தேள் நாக்கு சாமி.

அதற்கு தேள் நாக்கு சாமி என்ற பெயர் எங்கள் செல்ல மகன் விஷ்வாவினால் சூட்டப்பட்டது.

வாங்கிய புதுசில் இந்த தேள் நாக்கு சாமியும் பளபளப்பாக அழகாக இருக்கத்தான் செய்தது.

மனுஷாளுக்கு வயசு ஏற ஏற முக லட்சணங்கள் மாறி தேஜஸ் குறைவது போல்தான் தேள் நாக்கு சாமியும் இந்தப் பத்து வருஷங்களில் பளபளப்புக் குறைந்து போயிருக்கிறது.

தேள் நாக்கு சாமியின் பெயர்க் காரணத்தை உடனடியாக அறிந்து கொள்ளாவிட்டால் உங்கள் மண்டை வெடித்துவிடும் போலிருக்கிறதுதானே? சொல்லிவிட்டால் போச்சு.

இப்போது திருச்சி என் ஐ டி யில் இஞ்சினியரிங் இரண்டாம் வருடம் படிக்கும் எங்கள் ஒரே மகன் விஷ்வா மகா புத்திசாலி. புத்திசாலி இல்லை என்றால் என் ஐ டி யில் சீட் சுலபத்தில் கிடைத்துவிடுமா? என்ன?

சரி. விஷ்வா புத்திசாலி என்பது தெரிந்த போன விஷயம்.

இப்போது தேள் நாக்கு சாமியின் நாமகரணத்துக்கு வருவோம்.

என் பெண்டாட்டி வித்யா ஓரளவு நல்லவள்தான் என்பது வேறு விஷயம். ஆனால் அவள் ஒரு விருச்சிக ராசிக்காரி. விருச்சிகம் என்றால் தேள் என்று தெரியும்தானே?

வித்யாவும் ஒரு தேள்தான். கோபம் வரும் போது. நாக்குதான் அவளது கொடுக்கு.

வித்யாவுக்குக் கோபம் வந்து விட்டால் புருஷன், பையன், மாமியார், நாத்தனார் என்று எந்த வித்தியாசமும் பார்க்க மாட்டாள். கத்தித் தீர்த்து விடுவாள்.

கழுதைப்பால் குடித்து வளர்ந்த கழுதைக் குரல், அவளது கூடுதல் ஆயுதம்.

வைத்த பொருள் வைத்த இடத்தில் இருக்க வேண்டும், படித்த புத்தகமும் நியூஸ் பேப்பரும் மெருகு கலையாமல் மடிக்கப்பட்டு டீப்பாயில் இருக்க வேண்டும், வாசல் கதவைப் பிளந்து போடாமல் எப்போதும் சாத்தி வைக்க வேண்டும், டைனிங் டேபிளில் சாப்பிட்ட சுவடு தெரியாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று இப்படி ஏகப்பட்ட கட்டளைகளுடன் சகலரையும் விரட்டும் ரிங் மாஸ்டர் அவள்.

அவள் டார்ச்சருக்குப் பயந்தே என் அம்மாவும், தங்கையும் பக்கத்திலுள்ள செங்கல்பட்டிலிருந்து எங்கள் வீட்டுக்கு வந்து போவதைக் குறைத்துவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

எனக்கும் விஷ்வாவுக்கும்தான் வேறு போக்கிடம் இல்லை. வசமாக அவ்வப்போது வித்யாவிடம் மாட்டிக் கொள்வோம்.

முன்பே சொன்னதுபோல், பத்து வருஷத்துக்கு முன்பு இந்த ஜவஹர் நகர் வீட்டைக் கட்டிக் குடியேறிய போது வாசலில் மாட்டிய திருஷ்டி பொம்மைப் படம்தான் தேள் நாக்கு சாமி.

என் அலுவலகம் செல்லும் வழியில் இருந்த பள்ளிக்கூடத்தில் அப்போது நாலாவதோ, ஐந்தாவதோ வகுப்பில் படித்துக் கொண்டிருந்த விஷ்வாவை தினசரி ஸ்கூட்டரில் கொண்டு போய் விட்டுவிட்டு அப்படியே என் அலுவலகத்துக்குச் செல்வது வழக்கம்..

ஒரு நாள் எங்களுக்கு லஞ்ச் பாக்ûஸத் தயார் செய்து கொடுத்து விட்டு,

“எனக்கு இன்னும் கொஞ்சம் அடுப்பிலே வேலையிருக்கு. ஒழுங்கு மரியாதையாய் வாசல் கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டுப் போய்ச் சேருங்கள்” என்று அன்புடன் எங்களை வழியனுப்பி வைத்தாள் வித்யா.

ஸ்கூட்டரில் ஏறி உட்கார்ந்த விஷ்வா “பை பை அம்மா” என்று கையசைத்தான்.

“அம்மா வீட்டுக்குள்ளேதானே இருக்கிறாள். நீ இங்க யாருக்கு விஷ்வா டாட்டா காட்டுறே?” என்றேன்.

விஷ்வா எனக்குக் கொடுத்த பதிலில் அப்படியே ஆடிப் போய்விட்டேன்.

“அதோ அந்த படத்துக்குத்தான்ப்பா டாட்டா சொன்னேன்” என்று விஷ்வா கைகாட்டிய திசையில் அந்த (பழைய) திருஷ்டி பொம்மைப் படம்.

“இதுவாடா உன் அம்மா?”

“அம்மா மாதிரி”

“எப்பிடிடா?”

“ஏம்பா, நீங்க ரிஷப ராசி, அம்மா விருச்சிக ராசி அப்பிடின்னு நீங்கதானே நேத்து பேசிக்கிட்டீங்க. நியூஸ் பேப்பர்லே ராசி பலன் கூட அம்மாவுக்குப் படிச்சுக் காட்டினீங்களேப்பா. நானும் அந்தப் பேப்பரைப் பார்த்தேன்ப்பா. அம்மாவோட விருச்சிக ராசிக்குத் தேள் படம் போட்டிருந்துச்சு”

“அதுக்கென்ன இப்போ?”

“இந்த பொம்மையோட நாக்கிலயும் பாருங்கப்பா, தேள் படம்தான் வரைஞ்சிருக்குது. அதுதான் அந்தப் படத்தைப் பார்த்து “பைம்’மான்-னு சொன்னேன்.”

புத்திசாலிப்பையன். உடனடியாக அவனைக் கையில் தூக்கி வைத்துக் கொண்டு ஒரு குத்தாட்டம் போடவேண்டும் போல் தோன்றியது.

அதற்கான தெம்பும் இல்லை (பையன் ஒரு பம்ப்ளிமாஸ்), நேரமும் இல்லை எனக்கு.

“சூப்பர்டா பயலே. ஆனால் அது வெறும் பொம்மையில்லேடா பையா. அது நம்ம வீட்டைக் காப்பாத்துற சாமி, தெரியுமா? நம்ம வீடு அழகாயிருக்குன்னு யாராவது கண்ணு போட்டுட்டால் அந்த திருஷ்டியை விரட்டத்தான் அந்தத் தேளை நாக்கில் வரைஞ்சிருக்கு ” என்று சொல்லி, அவனைத் தட்டிக் கொடுத்து விட்டு
உடனடியாக ஸ்கூட்டரைக் கிளப்பினேன்.

ஓரிரு நாட்களில், நானும் விஷ்வாவுமாகச் சேர்ந்து அந்த திருஷ்டி பொம்மைப் படத்துக்கு தேள் நாக்குச் சாமி என்று பட்டப்பெயர் சூட்டி, அதனை எங்கள் வசதிக்காக “தேநா’ சாமி என்று சுருக்கிவிட்டோம்.

எங்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியப் பட்டப் பெயர்தான் தேள் நாக்கு சாமி. தப்பித் தவறி யாராவது இதை அந்தப் புண்ணியவதி வித்யாவாக நினைத்து நாள்தோறும் டாட்டா காட்டிக் கொண்டிருக்கிறோம் என்று அவள் காதில் போட்டீர்களோ, அவ்வளவுதான், உடனடியாய் ஒரு பிரளயமே வெடித்துவிடும் சாத்தியம் இருக்கிறது.

தேள் நாக்கு சாமியைப் பதவி இறக்கம் செய்த விஷயத்தை அன்றிரவே விஷ்வா ஹாஸ்டலிலிருந்து போன் செய்த போது சொல்லிவிட்டேன்.

“குப்பையிலே தூக்கிப் போட்டுட்டிங்களாப்பா?”

“சேச்சே. என் டேபிள் மேலேயே உங்கம்மாவுக்குத் தெரியாம பத்திரமா வெச்சிருக்கேன்.”

“வெரி நைஸ்ப்பா”

ரிட்டயர் ஆகிவிட்ட ஊழியர்கள், மூலையில் உட்கார்த்தி வைக்கப்பட்ட கிழவிகள் மேலெல்லாம் நமக்கு ஒருவித பரிதாபம் கலந்த பாசம் வருவதில்லையா?

கழற்றி வைக்கப்பட்ட தேள் நாக்கு சாமியின் மீதும் எனக்கும் விஷ்வாவுக்கும் ஒரு தனி அக்கறை பிறக்கத்தான் செய்தது.

திருஷ்டி பரிகாரம் என்பதே என்ன? அழகாகத் தெரிகிற ஒன்றைப் பிறரது பொறாமைப் பார்வையிலிருந்து திசை திருப்புவதுதானே? அப்படி திசை திருப்பும் பரிகாரப் படமும் புதுசாக அழகாகத்தான் இருக்க வேண்டுமென்றால் எப்படி? பழைய பெயிண்ட் போன திருஷ்டி பொம்மைதானே உண்மையில் திருஷ்டி பரிகாரமாக இருக்கும். என்றெல்லாம் என் மனசுக்குள் பட்டிமன்றம் நடந்தது நிஜம். தேள் நாக்கு சாமியின் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததும் நிஜமோ நிஜம்.

ஆனால், தீர்ப்பு விவரத்தை வித்யாவின் காதில் தைரியமாகப் போடுவதற்கு யாருக்கு இந்த வீட்டில் தைரியம் இருக்கிறது.

எனக்கு அந்தத் தைரியம் நிச்சயம் கிடையாது. இதைச் சொல்லிவிட்டு “ஹி… ஹி’ என்று நான் இளிக்கப் போவதில்லை. கிடையாதென்றால் கிடையாதுதான்.

எங்களின் இருபத்தைந்து வருஷ தாம்பத்தியத்தின் விளைவு அது.

“எப்போதாவது, போம்மா, உனக்கு வேறு வேலை கிடையாது” என்று எதிர்ப்பை மட்டும் பதிவு செய்துவிட்டு வெளிநடப்பு செய்யக் கூடிய இன்னொரு ஜீவன் விஷ்வாதான். அவனும் நானூறு கிலோ மீட்டர் தள்ளி திருச்சியில்.

“தேள் நாக்கு சாமி, கொஞ்ச நாளைக்கு இப்படியே இரு” என்று தினந்தோறும் ஒரு முறை (வித்யாவுக்குத் தெரியாமல்தான்) சொல்லிவிட்டுக் கதைப்புத்தகங்களிடையே மறுபடியும் வைத்துவிடுவது வழக்கமாகி விட்டது.

வித்யாவிற்குப் பிடிக்காத ஒன்று இந்த வீட்டில் இருக்க முடியாது.

ஆனால், வித்யாவிற்குப் புத்தகங்கள் படிக்க எப்போதும் பொறுமை இருந்ததில்லை. டி வி பைத்தியம் அவள். என் மேஜை பக்கமே வருவதில்லை அவள்.

“பிழைத்துப்போ மை டியர் தேள் நாக்கு சாமி கொஞ்ச நாளைக்கு வித்யாவின் கண்ணில் படாமல் என் டேபிளிலேயே பத்திரமாக இரு.’

கொஞ்சகாலம் பொறுமையாக இருந்தால் இந்த தேள் நாக்கு சாமி பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும் என்று என் உள்மனசு என்னவோ சொல்லிக்கொண்டே இருந்தது.

விஷ்வாவை நான் என் வண்டியில் கொண்டு போய் விடுகின்ற காலம் மலையேறிவிட்ட பின்னரும், ஆபீஸ் கிளம்புகிற வேளைகளில் தேள் நாக்கு சாமியிடம் மானசீகமாக டாட்டா சொல்லிக்கொண்டு கிளம்பிப் போகிற வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தொற்றி எனக்குள்ளும் அது மிகவும் ஊறிப் போய்விட்டது.

வெளியிலிருந்து வீடு திரும்புகின்ற போது அதைப்பார்த்து ஒரு ஹாய் உதிர்ப்பதும் வழக்கமாகியது.

அதிலும், விஷ்வா திருச்சி காலேஜில் (ஞாபகம் இருக்கிறதா, என் ஐ டி, புத்திசாலிப்பையன்) சேர்ந்த பிறகு இந்த தேள் நாக்கு சாமியை கவனிக்க என்னை விட்டால் யார் இருக்கிறார்கள்? என்ற கவலை வேறு சேர்ந்து விட்டது.

இப்படித்தான் விஷ்வா சின்னக் குழந்தையாய் இருந்த போது அவனுக்காக வாங்கிய விளையாட்டு மரக்குதிரையின் கால் இரண்டு மூன்று வருடங்கள் கழிந்து ஒடிந்துபோனபோது, உடைந்ததை ஒட்ட வைத்து பாண்டேஜ் துணியெல்லாம் கட்டிவைத்துப் பின்பு வித்யா பார்த்துக் காறித் துப்பியதும் குதிரையைத் தூக்கிப் பரணில் போட்டேன். அப்போது கூட அதைக் குப்பையில் போட மனசு வரவில்லை எனக்கு.

வித்தியாசமாக யாரும் நினைக்க வேண்டாம்.

எனக்கென்னவோ மனுஷப்பயல்களைப் போல பொம்மைகள், படங்கள் இதுகளுக்கெல்லாமும் மூச்சும் உயிரும் உண்டு என்று ஒரு தீவிரமான நம்பிக்கை.

விஷ்வாவுக்கும் அப்படியே. நான் கதை சொல்லி அதைக் கேட்டு வளர்ந்த பையனல்லவா?

செல்போன் அடித்தது. பையன்தான்.

“ஏன் விஷ்வா, ஊருக்கு வந்தே நாலு மாசம் ஆகப்போகிறது. வந்து ஒருதரம் நம்ம தேள் நாக்கு சாமியைப் பார்த்துவிட்டுத்தான் போயேன். வீடு மொத்தமும் ஒட்டடை அடிச்சு சுத்தம் செய்யணும்னு உங்கம்மா உத்தரவு போடும் வரைக்கும்தான் என்னால் அதைக் காப்பாற்றி வைக்க முடியும். புரிஞ்சுதா?”

“சாரிப்பா. ஸம்மர் மினி பிராஜக்டுல பிஸியாயிருக்கேன். நெக்ஸ்ட் மன்த் ùஸம் முடிஞ்சதும் கட்டாயம் வந்துடறேன்ப்பா. நான் வேணும்னால் அதை என் ஹாஸ்டலுக்கு எடுத்துட்டு வந்துடறேன்பா”

“அப்புறம் உன் ஃப்ரெண்ட்ஸ் உன்னைக் கலாய்க்கிறதுக்கா. விடு. தேள் நாக்கு சாமி தலையெழுத்து என்னாகிறதுன்னுதான் பார்த்துடுவோம்”

தலையெழுத்து சீக்கிரமே மாறிவிடும் என்றுதான் தோன்றியது, இரண்டே வார இடைவெளியில்.

புதுவீடு கட்டினாலும் சரி, புதுப்பெயிண்ட் அடித்தாலும் சரி நாலு பேரை அழைத்து அதைக்காட்டி அவர்கள் வாயால் நன்றாயிருக்கிறது என்று ஒரு வார்த்தையைக் கேட்டுப் பிடுங்கி வாங்கி லாக்கரில் வைத்து கொண்டால்தானே மனித மனம் சாந்தி அடைகிறது?

வித்யாவும் ஒரு மனிதப்பிறவிதான். அவளிடம் உள்ளதும் ஒரு மனித மனம்தான்.

ஏன் எனக்கு மனிதமனம் இல்லையா? என்று கேட்டுவிடாதீர்கள். நான் பாட்டுக்கு யாராவது என் நட்பு உறவு என்று ஒருவரை அழைத்துக்கொண்டு வீட்டைக் காண்பித்துப் பெருமையடித்துக் கொண்டு அனுப்பிவிடலாம். வந்தவர் சென்ற பிறகு, “ஏன் அந்தக் கொள்ளிக்கண்ணைக் கூட்டிட்டு வந்திங்க?” என்று வித்யா என்னை ஒரு பிடி பிடித்தால் என்னைக் காப்பாற்ற யாரும் வரப்போவதில்லை.

மற்றபடி வித்யா தன் சௌகரியத்திற்கு யாரையாவது கூட்டிக்கொண்டு வந்து வீட்டைக் காண்பித்துத் தம்பட்டம் அடித்துக் கொள்வதை ஆட்சேபம் செய்ய எங்கள் வீட்டு அரசியல் அமைப்புச் சட்டத்தில் எனக்கு இடம் கிடையாது.

சரி. விஷயம் தடம் மாறுகிறது பாருங்கள்.

தேள் நாக்கு சாமியின் தலையெழுத்து மாறுவதற்கான அடையாளம் மெல்லத் தோன்றியது என்று சொன்னேன் அல்லவா?

கடந்த சில நாட்களில், வித்யா தன் உறவுக்கூட்டத்தில் ஓரிரண்டு கிழவிகள் மற்றும் தன்னுடன் பள்ளியில் படித்து (பாதியில் நின்று) இதே ஊரில் வாழ்க்கைப்பட்டிருக்கும் நான்கைந்து தோழிகள் ஆகியோரை வரவழைத்துப் புதுப்பெயிண்ட்டின் மகிமைகளை விலாவரியாக விளக்கிக் கொண்டிருந்தாள்.

அக்ரிலிக், வெதர்கோட்டிங், பிரைமர், டிஸ்டம்பர் என்று பெயிண்டர்களிடமிருந்து தான் கற்றுக் கொண்ட நாலைந்து வார்த்தைகளைப் பேச்சுவாக்கில் அள்ளிவிட்டு அவர்களை ஆச்சரியப்பட வைத்தாள்.

“நம்ம வீட்டைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் பாராட்டிவிட்டுக் காப்பியும் டிபனும் கொட்டிக்கொண்டு போனவங்க எல்லாரது கண்ணும் ஒரேமாதிரி இல்லிங்க” என்றாள் வித்யா என்னிடம் நேற்றிரவு (டயட்) சப்பாத்தி சாப்பிடும்போது.

“எப்பிடி சொல்றே வித்யா?” என்று கண்கள் படபடக்கக் கேட்டேன்.

“என் கிளாஸ்மேட் சுமதி வந்து போன பிறகு பத்து ரூபாய் கற்பூரம் ஏற்றி நம்ம வாசல்ல மாட்டியிருக்கிற திருஷ்டிபொம்மைப் படத்துக்கு மட்டும் சுற்றிப்போட்டேன் பாருங்களேன்” என் மூளைக்குள் பல்பு விட்டு விட்டு எரியத் தொடங்கியது.

“ஏன் என்ன ஆச்சு? சுமதி அப்படி என்ன சொல்லிவிட்டுப் போனாள்?”

“நம் வீட்டுப் புது திருஷ்டிபொம்மை ரொம்ப அழகா இருக்காம். இதுவரை யார் வீட்டிலும் இப்படி ஒன்றைப் பார்த்ததேயில்லையாம். எனக்கும் ஒண்ணு வாங்கிக் கொடு வித்யா. அடுத்த மாசம் நான் புதுவீட்டுக்குக் குடியேறப் போகிறேன்” என்கிறாள். “அப்போதிலேயிருந்து என் மனசே சரியில்லைங்க. போயும் போயும் அந்த கொள்ளிக்கண் சுமதியை அழைச்சுக்கிட்டு வந்து காண்பிச்சேன் பாருங்க.”

“கவலைப்படாதே வித்யா. நான் அதுக்கு ஒரு வழி பண்ணறேன். நீ நிம்மதியாய்த் தூங்கு” என்று சொல்லி அமைதிப்படுத்தினேன்.

விடிகாலை நாலு மணிக்கே செல்போனில் அலாரம் வைத்து எழுந்து பல் துலக்கி தேள் நாக்கு சாமியையும் எழுப்பினேன்.

வாசல் சுவரில் காட்சிகொடுத்த புதிய திருஷ்டிபொம்மைப் படத்தின் அருகிலேயே இன்னொரு ஆணி அடித்து தேள் நாக்கு சாமியை மாட்டினேன்.

“என்னடா இது எனக்கு வந்த புது வாழ்வு?” என்று தேள் நாக்கு சாமி ஆச்சரியப்பட்டதை அதன் கண்களில் உணர முடிந்தது.

பாலை வாங்கிக் காப்பி போட்டு வித்யாவை எழுப்பியவன், “வித்யா, ஒரு நிமிஷம் நம்ம வீட்டு வாசலுக்கு வந்து பாரேன்” என்று அவள் கையைப் பிடித்து (எல்லாம் ஒரு தைரியம்தான்) அழைத்துக்கொண்டு போனேன்.

“பார் வித்யா. அந்தக் கொள்ளிக்கண் சுமதி பார்த்துட்டுப்போன புதுபொம்மைக்குத் திருஷ்டி பரிகாரமாக அதன் பக்கத்தில் இந்தப் பழைய சாயம் போன திருஷ்டிப்படத்தை மாட்டிட்டேன். எப்படி நம்ம ஐடியா? இனிமே எவளாவது நம்ம புது திருஷ்டி பொம்மை மேலே கண் போடட்டும் பார்க்கிறேன்.”

ஒரு கணம் புருவம் உயர்த்திய வித்யா,”அப்போ நீங்க பழைய படத்தை அன்றைக்கே தூக்கிப் போடலியா. போனால் போகுதுங்க. இப்பத்தான் என் மனசு கொஞ்சம் சமாதானமாச்சு. நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கணும். சமையலை நீங்க பார்த்துக்கிறீங்களா?” என்றுசொல்லிவிட்டு நடையைக் கட்டினாள்.

தேள் நாக்கு சாமி என்னைப் பார்த்த பார்வையில் ஒரு புது சினேகம் பிறந்தது போலத் தெரிகிறது.

வழக்கமில்லாத வழக்கமாகக் காலை ஆறு மணிக்கெல்லாம் செல்போனைத் தட்டியவன், “உனக்கொரு விஷயம் தெரியுமா விஷ்வா?” என்று பேச ஆரம்பிக்கிறேன்.

– செப்டம்பர் 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *