(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தரங்கிணியிடமிருந்து வந்த கடிதத்தைச் சீதா பத்தாவது முறை படித்துவிட்டாள்.
“நீ எத்தனை தடவை படித்தாலும் செய்தி அதேதான், சீதா தரங்கிணியின் கோரிக்கையும் நியாயமானதுதான். மறுக்கலை, யோசனை செய்து முடிவு செய். நீ என்ன முடிவு எடுத்தாலும் எனக்குச் சம்மதம்,’ என்றார் சுப்பிரமணியன்.
கணவரைத் முழுமையாக நிமிர்ந்து பார்த்தாள் சீதா.
“ஐயா, தபால்!”
உள்ளே வந்து விழுந்த தபால் உறையை அழகாகப் பிசிரின்றிக் கிழித்துக் கடிதத்தை வெளியே எடுத்தார் சுப்ரமணியன். எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்கு வேண்டும் அவருக்கு.
“யாருங்க, கடுதாசி போட்டிருக்கிறது”?
“சரண்யாதான். அக்காவும், தங்கச்சியும் தொலைபேசியில் பேசிக்கிட்டிருப்பாங்க போலிருக்கு. அம்மாதான் அக்கா வீட்டிற்குப் போகப் போறாங்களாமே! நீங்க வயசான காலத்தில் தனியாக என்ன செய்யப் போறிங்க? சென்னை போலத் தீய்க்கிற வெயில் இங்கே இல்லை. இங்கே வந்துடுங்க. உங்க பேரன் நிகிலேஷ் உங்களைப் பார்க்கணும்னு துடிச்சுக்கிட்டு இருக்கான்னு சரண்யா எழுதி இருந்தாள்.
“என்ன பண்ணப் போறீங்க?” என்றாள் சீதா.
”அவசரப்படாதே! சரவணன் வரேன்னு தந்தி கொடுத்திருக்கானே! அவன் என்ன கோரிக்கை வைக்கிறானோ தெரியலையே! அவன் என்ன முடிவு சொல்றான்னு பார்க்கலாம்”
“…”
“என்ன பதில் காணோம் ? ஒண்ணு மட்டும் தீர்மானம், சீதா. குடும்பச் சொத்தா மிஞ்சி இருக்கிறது, இந்த ஆஸ்துமாதான். இதை வைச்சுக் கிட்டுச் சரண்யா கூடப் பெங்களுரில் இருக்கிறது எனக்கும் துன்பம். அவளுக்கும் தொல்லை. சரண்யாவும், கஜேந்திரனும் வேலைக்குப் போறவங்க. நிகிலேஷைப் பார்த்துக்கத் தான் என்னைக் கூப்பிடறாங்க என்று புரியுது. ஆஸ்துமா இழுக்க ஆரம்பிச்சா, துன்பப் படறது நான்தான், இல்லேன்னு சொல்லலை. ஆனா, மருத்துவர் கிட்டே கூட்டிப் போ, மருந்து வாங்குன்னு சரண்யாவையோ, கஜேந்திரனையோ தொல்லை பண்றது சரியில்லை, சீதா.”
“என்னங்க, உங்க பொண்ணையும், மாப்பிள்ளையையும் அன்னியப் படுத்திப் பேசறீங்க?”
“அப்படியில்லை. சீதா. வேறு எந்த வியாதின்னாலும் கூடப் பரவாயில்லை. இது மிகத்தொல்லை பிடித்த நோய், யாருக்காவது உடம்பு சரியில்லைன்னா ஒரு நாள் மருத்துவ மனைக்குப் போய் வந்தாலே மனம் ‘சீ’ ன்னு ஆயிடுது. காலம் பூரா என்னை அவங்க வைச்சுக்கணும்னா…”
”அப்படி யார் சொன்னாங்க? நீங்க நிரந்தர நோயாளின்னு ஏன் கற்பனை பண்ணிக்கிறீங்க? பெங்களுரில் இல்லாத மருத்துவரா ? தவிர, ஆஸ்துமா நோயாளிகள் அங்கே வாழறதில்லையா?”
“எல்லாம் சரிதான், சீதா, சரண்யா, கஜேந்திரன் இரண்டு பேருமே நல்லவங்க தான். இல்லெங்கலை, ஆயிரம்தான் ஆனாலும், கிட்டப் போகப் போக, முட்ட முட்டப் பகைம்பாங்க. அலுப்பினாலோ, சலிப்பினாலோ அவங்களோ, நானோ சொல்ற ஒரு வார்த்தை கூட, எனக்கு நேரம் சரியில்லைன்னாத் தப்பாப் படும். வேண்டாம் சீதா, நான் இங்கேயே இருந்துக்கறேன்.”
“அந்த மாதிரி ‘ஒரு வார்த்தை’ தரங்கிணி சொன்னா, நான் பொறுத்துக்கலையா ? சரி, நாம் ஏன் வீணா விவாதிக்கணும் ? நீங்கதான் சரவணன் வரட்டும்னு சொல்லிட்டீங்களே! அந்த மகராசன் என்ன முடிவு சொல்றான்னு பார்க்கலாம்.”
சுப்ரமணியன் தொலைக்காட்சியை இயக்கினார்.
சுப்ரமணியன் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். பழுப்பு நிறக் காகிதங்களும், அழுது வடிந்த விளக்கொளியும், செக்கு மாட்டுத் தனமாக இயங்கிய நடைமுறைகளும் கொடுத்த தேக்க நிலையால் குப்பையாகாது, அவர் சற்றுச் சுறுசுறுப்புடனிருந்ததற்குக் காரணம் யோகாவும், அவரது தமிழ்மொழி ஈடுபாடும்தான். யோகா உடலின் இயக்கத்தைச் சரி செய்தாலும், சற்றுத் தாமதமாக ஆரம்பித்ததாலோ என்னவோ நிரந்தர இருப்பாக உள்ளே புகுந்து வெளியேற மறுக்கின்ற ஆஸ்த்துமாவை அவரால் விரட்ட இயலவில்லை. திருவாசகத்தை உருகி உருகிப் பாடுவார்.
நிறையப் பாடல்கள் தேவாரப் பண்ணில் அவரால் பாடமுடியும். கோபாலகிருஷ்ண பாரதியின் ‘வருகலாமோ ஐயா’வைக் கேட்டவர்களின் கண்கள் கசியும்.
“திருப்புன்கூருக்குப் போய்த் தெருவிலிருந்தே நந்தனாருக்காக நந்தி விலகிச், சிவலிங்கம் கருவறையில் இருக்கின்றதைப் பாரும், கண்ணிலிருந்து அருவி கொட்டாதா?” என்பார்.
தரங்கிணிக்கு வாழ்க்கை பம்பாயில் அமைந்தது. அவள் கணவன் செந்தூரன் ‘லீவர்’ உடன் பிறப்பாளர்களின் நிறுவனத்தில் வேலை செய்கிறான். செம்பூரில் சொந்தக் குடியிருப்பு. குகன் என்று ஒரு குழந்தை. தரங்கிணியும் வேலை பார்க்கிறாள். குழந்தை சற்றுப் பெரியவன் ஆகின்றவரை அம்மா சீதாவின் உதவி தரங்கிணிக்குத் தேவை.” உடனே புறப்பட்டு வா; என்று ஒரு கடிதம்.
சரண்யாவின் கணவருக்கு பி.எச்.ஈ.எல்.லில் வேலை. சரண்யா அங்கு ஒரு பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறாள். நிகிலேஷிற்கு இரண்டு வயதாகிறது. தரங்கிணிக்குத் திருமணமாகிச் சற்றுத் தாமதமாகக் குழந்தை பிறந்தது.
மகனோ, மகளோ பெற்றவரை உடன் வைத்துக் கொள்வது நடைமுறை மட்டுமன்று, அது இயல்புதான். இன்றைய சூழலில் கணவன், மனைவி இருவரும் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளதே! குழந்தையை, ஒரு நிலைவரை வளர்க்கப் பெற்றோரின் உதவி அவசியமாகிறதே! இதில் துயரம் என்னவென்றால், முதுமையில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க வேண்டிய சூழ்நிலையில் பிரிய வேண்டி இருப்பதுதான்.
“வாடா, சரவணா! பயணம் செளகரியமாயிருந்ததா?” என்றார் சுப்பிரமணியன், சரவணனுக்கு மருந்து நிறுவனத்தில் வர்த்தக மேலாளர் வேலை. குடும்பம் கோவையில். சென்னையில் தலைமை அலுவலகத்திற்கு வரும்போது பெற்றோரைச் சந்தித்து விட்டுத், தங்கிச், சாப்பிட்டு விட்டுத் தான் போவான்.
“கொச்சி விமான நிலையத்தில் அலுவலர்கள் வேலை நிறுத்தம் ஒரு மணி நேரம் தாமதம்.” நம்ம மக்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் போதாது, அப்பா, எல்லாத்துக்கும் ஜப்பானைப் பார், சிங்கப்பூரைப் பார் என்பாங்க. அவங்க அளவுக்குத் தாய் நாட்டு மேல் வெறித்தனமான அன்பும், உழைப்பும். இங்கே நமக்கு எங்கே……”
“அப்பாவும், பிள்ளையும் பேச ஆரம்பிச்சுட்டீங்களா? சாப்பாட்டுக்கு வந்தாப் போலத்தான். டேய், சரவணா, உனக்குப் பிடிச்ச சர்க்கரை வள்ளிக் கிழங்கு பொடிமாசும், வற்றல் குழம்பும் ஆறி அவலாயிட்டு இருக்குது.”
இதுதான் தாய்மையின் சிறப்பு. தன் குழந்தையின் வயிறு ஒருகணம் கூட வாடக் கூடாது என்பதில்தான் எத்தனை வயதானாலும் அவளுக்கு அக்கறை!!
சாப்பிட்டு விட்டு, ஒரு கோழித் தூக்கம் தூங்கி, மணக்கும் காபியைக் குடித்தபின் தான் சீதா சரவணணிடம் தரங்கிணி, சரண்யாவின் கடிதங்களைக் காட்டினாள்.
“நீங்க என்ன முடிவு செய்திருக்கீங்க?” என்றான் சரவணன்.
“நீங்க இரண்டு பேரும் இங்கேயே இருங்க. பெங்களூரும் வேண்டாம். பம்பாயும் வேண்டாம்.”
“இப்படிச் சொன்னா எப்படிடா? அங்கே தரங்கிணி, இங்கே சரண்யா இருவரும் துன்பப் படுவார்களேடா!”, என்றாள் சீதா.
“அப்பாவோட உடல் நலத்தைப் பற்றி யோசனை பண்ணினாயாம்மா! அப்பா மேல் உனக்கு இல்லாத அக்கறையை நான் சுட்டிக் காட்டறேன்னு நினைக்காதே! தரங்கிணிக்கும், சரண்யாவுக்கும் உங்களை நல்லா வெச்சுக்கணுங்கிற அக்கறை இருக்கு. ஆனால், அதுக்கும் பின்னால் அவங்க குழந்தையைப் பார்த்துக்க, ஓர் ஆள் வேணுங்கிற, சுயநலம் இருக்குங்கறதை மறந்துட முடியாது”
“என்னடா இப்படிப் பேசறே? அவர்கள் இரண்டு பேரும், உன் சகோதரிங்க.”
“எனக்கு அது நினைவில்லையாம்மா? இப்போ உங்க இரண்டு பேரையும் நான்,ஏன் கோவையிலே கொண்டு போய் வைச்சுக்கலை ? என் மனைவி வேலைக்குப் போகலையே! உங்கள் இரண்டு பேரையும் தாங்கு தாங்குனு தாங்கமாட்டாளா?”
“அப்பா சொல்ற அளவுக்குச் சுயநலமாவா! மன்னியுங்கள்! அப்பா ! இது நாள் வரை உழைச்சுட்டீங்க, இப்போ, சொந்த வீட்டில வாழ்கிற பறவைகள் போல மகிழ்ச்சியாக இருங்க. கல்யாணமான போது இருந்த நெருக்கத்தை விட, இப்போ உனக்கு அப்பாவின் துணை தேவை. அப்பாவுக்கு அம்மாவின் உதவி தேவை. ஆயிரம்தான், நானோ, தரங்கிணியோ, சரண்யாவோ செய்தாலும், அப்பாவின் மனதறிந்து அம்மா செய்வது போல், அம்மாவுக்கு ஏதாவதானாலும் அப்பா துடிச்சுப் போற மாதிரியோ, இருக்க முடியாது. இது இரு பக்கமும் எதிர்பார்ப்புகள் இல்லாத அன்புப் பரிமாறல், தூய்மையான நட்புக்கு இலக்கணம்.
“இதை விட்டுட்டுப், பிள்ளைங்க சுயநலத்துக்காகப், பெத்தவங்களை நீ ஆறு மாசம் அங்கே இரு, நீ இங்கே இருன்னு, பந்தாடறது, விவேகம் இல்லை அம்மா, சரண்யா, தரங்கிணி – இரண்டு பேருடைய குழந்தைகளையும் பார்த்துக்க, நான் ஏற்பாடு பண்றேன். பம்பாயிலும், பெங்களூரிலும் என் சிநேகிதங்களின் மனைவிங்க, வீட்டிலேயே இது மாதிரிக் குழந்தைகளைப் பார்த்துக்கறாங்க, அந்தக் கவலை, இனி உங்களுக்கு வேண்டாம்.”
“அப்பாவோட தமிழ்ப் புத்தகங்கள் ஆராய்ச்சிக்கும், கோவில் சச்சேரிக்கும் சென்னை தான் சரி. பயணம் முடிஞ்சு வந்து போகச் சென்னையில் அம்மா இருப்பது என்னுடைய சுயநலத்துக்கும் சரியாயிருக்கும்னு வைச்சுக்கோயேன், சரியாப்பா, சரியாம்மா?”
“என்னவோப்பா, நீ சொன்னால் சரிதான். பெத்தவ மனசு கிடந்து அல்லாடறது”, என்றாள் சீதா.
அந்த வார்த்தைகள் அவளது வாயிலிருந்து மட்டும் வந்தவைதாம் என்பது அவள் தன் கணவரை நட்புடன் பார்த்ததிலிருந்து புரிந்தது. ஆனால், சரவணனைப்போல் பெற்றவர்களின் முதுமைக் காலத்துக் காதலைப் புரிந்து கொண்ட பிள்ளைகள் எத்தனை பேர் இக்காலத்தில் இருக்கிறார்கள் ? உணர்வுபூர்வமாக எண்ணாமல் தூய கண்ணோட்டத்துடன் பார்த்தால் வாழ்க்கையே சீரான தேரோட்டம்தானே!
– சண்முகப்ரியா, சென்னை-44
– மனங்கவர் மலர்கள், முதற் பதிப்பு: ஜூன் 2005, சிங்கைத் தமிழ்ச் செல்வம், சிங்கப்பூர்