“ஏண்டி சனியனே என் பேனாவை நீ எடுத்தியா? உன்னாலதான் வீட்டில பிரச்சனையே…. எங்கடி போய்த் தொலைஞ்ச….? கத்திக்கொண்டே மகேஷ் அறையை விட்டு வெளியே வருவதற்கும், அதற்குள் அங்கே கைஅக்குள்களில் கட்டையுடன் கண்களில் நீருடன் தங்கை இளவழகி வந்து சேர்ந்தாள்.
“அண்ணே …..நான் எடுக்கலேண்ணே……வேணா தேடித்தரவா?” கெஞ்சினாள்.
*வேண்டாம்……உன்னைப்பார்க்கவே எனக்குப் பிடிக்கல…….மொதல்ல இடத்த காலிபண்ணு.. அமிலம் கொட்டியது வார்த்ததைகளில்.
அண்ணனின் கோபம் அவளுக்குப் புதிதல்ல. அவளுக்கு ஒன்றரை வயதில் இளம்பிள்ளைவாதம் வந்ததால் கால்கள் இரண்டும் செயலிழந்து போயின. அதனால்தானோ என்னவோ அவள் சிறு வயதிலிருந்தே செஸ் விளையாட்டில் நம்பர் ஒன்னாகத் திகழ்கிறாள்.
வீடு கொள்ளாத பரிசுக் கோப்பைகள். மாநில அளவில் நம்பர் ஒன் அவள்தான். ஆனாலும் ஏனோ மகேஷுக்கு அவளை எப்போதுமே பிடிக்காது.
தனக்கு முப்பது வயதாகிறது. நல்ல வேலை நல்ல சம்பளம் என்றிருந்தும் தனக்குப் பெண் கொடுக்க வருபவர்கள் எல்லோருமே முதலில் ஆவலாகத்தான் வருகிறார்கள். ஆனால் தன் தங்கையின் தோற்றத்தைப் பார்த்ததும் ஏதோ ஒரு சாக்குப் போக்குச் சொல்லி நழுவிப் போய் விடுகிறார்கள். அதனால் தங்கையின் மேல் உள்ள எரிச்சலும் கோபமும் பல மடங்கு கூடிவிட்டது அவனுக்கு.
*சே…சே இந்த மத்தியதர வர்க்கமே ஒரு ஊசலாடும் வர்க்கம். மேலே ஏறவும் முடியாது. கீழே இறங்கவும் முடியாது. இதே நான் ஒரு பெரும் பணக்காரனாக இருந்திருந்தால் என்னுடைய பணமும் அந்தஸ்தும் இதையெல்லாம் மறைத்திருக்கும். நானும் வாழ்க்கையில் செட்டில் ஆகி இருப்பேன்.
இப்படி என்னென்னமோ எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு நிம்மதியைத் தொலைத்து விட்டிருந்தான். எனவே கடற்கரைக்குச் சென்று சிறிது நேரம் கடல்காற்றை அனுபவித்து வரலாம் என்ற எண்ணத்தில் சட்டையை மாட்டிக்கொண்டு அம்மாவிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.
மெரினா கடற்கரை வழக்கம்போல படு ஜhலியாக இருந்தது. அந்தி சாய்ந்து விட்டது. புதுமணப்பெண்ணைப் போல அலங்காரம் செய்யப்பட்ட வண்ண நீரு்ற்றுகளும் அழகுற அமைக்கப்பட்ட குட்டி குட்டி பூங்காக்களும் மனதை அள்ளிக்கொண்டு சென்றன.
மகேஷ் முகத்தில் எரிச்சல் மறைந்து லேசான புன்னகை ஒன்று உதித்தது. வானத்தைப் பார்த்தான். அங்கே மேகக்கூட்டம் தேவதை வடிவில் தோன்றி தெரிந்தும் தெரியாத நட்சத்திரங்களின் ஊடே அவனை இருகரம் நீட்டி வரவேற்பது போல் உணர்ந்தான். அதிலிருந்து மீள்வதற்குள் கடலலைகளின் ஆர்ப்பளிப்பு அவன் காதுகளில் சங்கீதமாக ஒலித்தது. சூடான சுண்டல் வாசனையும் எண்ணெயில் நீந்தும் மிளகாய் பஜ்ஜியும் பாப்கார்ன் மணமும் நாசியைத் துளைத்தது.
அந்த நேரம் பார்த்து ஒரு இன்னோவாவைச் சுற்றிக் கூட்டம். சில நிமிடங்களில் அவன் புரிந்து கொண்டான். அது வேறுயாருமல்ல. சென்னையின் நம்பர்ஒன் தொழிலதிபர்களில் ஒருவரான நந்தகுமார். கொஞ்சம் ஆவலோடு அந்தக் கூட்டத்தை நோக்கி நகர்ந்து நடப்பதை வேடிக்கை பார்க்கலானான்.
அவர் காரை விட்டு இறங்கியதும் தன் இளம் மனைவி இறங்குவதற்கு உதவினார் நந்தகுமார். காரணம் அவரது மனைவி போலியோ பாதிப்பிற்கு உள்ளானவராக இருந்தார்.
இதற்குள்ளாகவே அங்கே பத்திரிகை மற்றும் தொலைகாட்சி சார்ந்த நிருபர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு அவரை நோக்கிப் பாய்ந்தனர். அவருடைய மனைவி பற்றி இதுவரையில் வெளிஉலகத்திற்குத் தொpயாததும் ஒரு காரணம்.
ஆளாளுக்கு சார்……சார் ……இரண்டே கேள்விகள் சார்…….என்று அவரைச் சுற்றிக் கொண்டனர்.
அவர் எல்லோரையும் அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு.*உங்கள் எல்லோருக்கும் என் திருமணம் பற்றிய வினாக்களும் அது தொடர்பான ஐயங்களும் அலைமோதுகின்றன. எனவே உங்களுக்குத் தோன்றுவதையெல்லாம் கற்பனைத் தோரணம் கட்டி ஆடவிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அந்த உண்மையை இனிமேல் நான் மறைக்கவும் விரும்பவில்லை.
பொதுவாகவே பணக்காரர்கள் என்றால் நன்கொடை வழங்குவார்கள். ஆசிரமம் கட்டுவார்கள். ஏழைகளுக்குத் திருமணம் செய்து வைப்பார்கள். அது கலப்புத் திருமணமோ ஊனமுற்ற மற்றும் ஏழைப்பெண்களைத் திருமணம் செய்ய வரும் இளைஞர்களையும் ஊக்குவிப்பார்கள்.ஆனால் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை என்று வரும் போது தனக்கு ஏற்றாற் போல் உள்ள இடத்தில் தான் சம்மந்தம் செய்து கொள்வார்கள்.
இந்த விஷயத்தில் நான் சற்று வித்தியாசமானவனாக இருக்க விரும்பினேன். இந்தப் போக்கை மாற்றவும் விரும்பினேன். அதன் காரணமாகவே இந்த சாந்தியை என் வாழ்க்கைத் துணைவியாகத் தேர்ந்தெடுத்தேன்.
இதற்காகவே பல அனாதை இல்லங்களுக்குச் சென்று இம்மாதிரியான பெண்களிடம் என் விருப்பத்தைக் கூறிய பொழுது பெரும்பாலான பெண்கள் என்னை சந்தேகத்துடனேயே பார்த்தார்கள்.
சில பெண்கள் “நான் செய்த பாக்கியம்” என்றார்கள். இன்னும் சில பேர் எனக்கு ஏதோ பெரிய வியாதி இருக்கிறது சீக்கிரமே மரணம் ஏற்பட்டு விடும்.அதனால்தான்.. மற்றும் ஒருத்தி சமஅந்தஸ்துள்ள பெண்ணைத் தேர்வு செய்யும் பொழுது இக்காலப் பெண்களும் மற்றும் அவர்கள் பெற்றேhர்களும் பையனைப் பற்றி துப்பறியும் ஏஜெண்டுகளை வைத்து விசாரிக்குமளவுக்கு எச்சரிக்கையோடும் கவனத்தோடும் செயல்படுகிறார்கள்.
சாதாரண விஷயமாக இருந்தாலும் கூட தனக்குப் பிடிக்கவில்லை என்றால் கல்யாணத்தன்று கூட கல்யாணத்தை நிறுத்தி விடுகிறார்கள். அதனால்தான் இந்த மாதிரிப் பெண்களைத் தேர்வு செய்ய வந்திருக்கிறார்…..இப்படி இன்னும் பலப்பல.
ஆனால் என் சாந்தி சொன்ன பதில்தான் நான் அவளை மனைவியாகத் தேர்ந்தெடுக்கக் காரணமாக இருந்தது.. அதை இப்போது அவர்களே உங்களிடம் கூறுவார்கள்……
*எல்லோருக்கும் வணக்கம். திரு.நந்தகுமார் தனக்கு இப்படி ஒரு எண்ணம் இருப்பதாகக் கூறிய பொழுது நாங்கள் யாருமே அவரை முதலில் நம்பவேயில்லை. ஆனால் என்னைப் பொறுத்த வரை நல்ல எண்ணத்தோடு இவரைப் போன்ற பெரும் பணக்காரர்கள் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி ஊனத்தை ஒரு குறையாகக் கருதாமல் எங்களைப் போன்றவர்களும் வாழத் தகுதிவாய்ந்தவர்களே என்ற அக்கறையோடும் சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டியாகவும் இருக்க முற்படுவது மிகப் பெரிய செயல். தற்போது அரசாங்கம் எங்களுக்குப் பல வகைகளிலும் பலவிதமான உதவிகளைச் செய்து சாதிக்க வழிவகுத்துக் கொடுத்து வருகிறது. எங்களின் உடற்குறை என்ற தடைக்கற்களை ; நாங்கள் உயரச் சென்று சிகரம் தொடும் படிக்கட்டுகளாக ஆக்கி வருகிறேhம். இம்மாதிரியான சூழலில் இவரைப் போல வசதிபடைத்த இளைஞர்கள் என்னை இவர் மனைவியாக்கிக் கொண்டது போல செய்வார்களேயானால் பணக்காரன் ஏழைப் பாகுபாடு. வரதட்சிணைக் கொடுமை.சாதி மதச் சண்டை இதெல்லாம் மிக விரைவில் மறையும். அது மட்டுமா? இக்கால இளைஞர்கள் தனக்கு வரப்போகும் மனைவியின் புறத்தோற்றத்தைப் பற்றி ஒரு பெரிய கற்பனைக் கோட்டைகட்டி வருகிறார்கள்.
இதெல்லாவற்றிற்கும் மேல் சில இளைஞர்கள் தன் வீட்டில் இப்படிப் பட்ட உடன்பிறப்பு இருந்தால் அவர்களை பரம iவாpயாகப் பார்க்கிறார்கள். தான் வாழ்க்கையில் முன்னேறாமல் போனதற்கு அவர்களே காரணம் என்று கரித்துக்கொட்டுகிறார்கள். எனவே இந்நிலை மாற என் கணவர் வழிகாட்டியாக மட்டுமல்லாமல் ஒரு உதாரண புருஷராகவும் அமைந்திருக்கிறார் என்பதில் நான் பெருமையும் மன மகிழ்வும் அடைகிறேன். இனிமேல் என்னைப் போன்ற பெண்களின் வாழ்க்கையில் வசந்தம் வீசப் போகிறது என்ற நம்பிக்கை மலர்ந்து விட்டது. நன்றி வணக்கம்”, என்று இருகரம் கூப்பி அவர்களிடமிருந்து விடைபெற்று காரில் ஏறினாள் நந்துவின் உதவியுடன்.
பௌர்ணமி நிலவின் வெளிச்சம் கடலில் பிரதிபலித்தது. மகேஷின் மனதிலும்தான். இனி அவனும் உதாரணபுருஷன்தான்…….