தேடிய சொர்க்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 13, 2024
பார்வையிட்டோர்: 201 
 
 

(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த தன் கணவருக்குச் சுடச்சுடக் காப்பியைக் கொடுக்க வரவேற்பறைக்குள் நுழைந்தாள் பாக்கியம். மனைவி வந்த காலடி ஓசை கேட்டுத் தலை நிமிர்ந்தார் சாம்பசிவம். ‘ம் இப்போ அவன் என்ன தான் சொல்றான்?” எனக் கேள்விக் கணையோடு பேச்சை ஆரம்பித்தார். “அவன்” என அவர் குறிப்பிட்டது தன் மகன் அரவிந்தனைத்தான். அவர் “அவனைப் பற்றித் தான் கேட்பார் என்பதை நன்கு அறிந்திருந்த பாக்கியமும் “கீறல் விழுந்த ரெக்காடு போல அவன் அதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கான்” எனக் கொட்டித் தீர்த்தாள். “அவன் முடிவை மாத்திக்க மாட்டானா?” என்றபடி ஏதோ ஓர் எதிர்பார்ப்புடன் மனைவியின் முகத்தைப் பார்த்தார்.

“நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன்ங்க. ஆனால்… ஆனால்….” மேலும் பேச முடியாதவளாய்ப் பாதியிலேயே பேச்சை

நிறுத்தினாள். பின் மெல்லிய குரலில் “அவன் சொல்றதுலேயும் நியாயம் இருக்கிறதா தோணுது” என்று கூறினாள். அதற்குள் சாம்பசிவம் “அப்படி என்ன உலகத்திலேயே இல்லாத நியாயத்தைக் கண்டுட்டே” என இடைமறித்தார். ‘உங்களுக்குத் தெரியாததையா நான் சொல்லப் போறேன்? அவன் எதிர்காலம் நல்லா அமையனும்கிறதுக்காக அவனை வெளியூருல படிக்க வைச்சீங்க. இப்போ அந்தப் படிப்புக்கு ஏற்ற வேலை அங்கே கிடைச்சிருக்கு….” அவள் பேசுவதைத் தடுத்து” ஏன் உள்ளூருல இந்தத் துரைக்கு வேலை கிடைக்காதா என்ன?” என்று மடக்கினார்.

“அதுக்கில்லை. நல்ல உத்தியோகமாம். கை நிறைய சம்பளமாம். தங்குறதுக்கு வீடு அது இதுனு ஏதேதோ வசதிகள் செய்து தராங்களாம். அதோட நிரந்தரவாசியாகவும் மாறிடலாமாம். அதனால் நாமும் அவனோட குடியேறிடலாம்னு சொல்றான்” என மகன் கூறியதை அப்படியே கணவனிடம் ஒப்புவித்தாள் பாக்கியம். “நீ சொல்றதைப் பார்த்தா நீயும் அங்கே குடியேற ஆசைப்படுற மாதிரி….” அவர் முடிக்கவில்லை. அதற்குள் பாக்கியம் “அந்த எண்ணம் அப்போ இருந்தது உண்மைதான். ஆனால் இப்போ நிச்சயமா இல்லை” என உறுதியுடன் கூறினாள்.

உண்மை தான். போன வாரம் வரை அந்த எண்ணத்துடன் தான் இருந்தாள் பாக்கியம். ஆனால் தன் மூத்த மகள் செல்வி “மாசமாக” இருக்கிறாள் என்ற தித்திக்கும் கேட்ட செய்தியைக் மாத்திரத்திலேயே வெளியூரில் குடியேற வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டாள். மகளுக்கு “ஒத்தாசையாக” இருக்க வேண்டும் என்ற தாய்மையுணர்வே அவளுக்குள் மேலோங்கி இருந்தது. இது சாம்பசிவத்திற்கும் தெரியும். ஆனால் அதை வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்தார். “இனியும் அதைப் பற்றிப் பேசுவதில் அர்த்தம் இல்லை” என்பதை உணர்ந்து பாக்கியமும் அங்கிருந்து நகர்ந்தாள். அவள் மனத்தில் “பையன்னா எப்படித் தலையில வைச்சி ஆடுவாரு. ம் இப்போ எல்லாமே மாறிப் போயிட்டு” என்றபடி பெருமூச்சு ஒன்றை விட்டாள்.

சாம்பசிவம் பாக்கியம் தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவள் செல்வி. அடுத்தவன் அரவிந்தன். கடைக்குட்டி மாலதி. தன் மூன்று பிள்ளைகளையும் மேற்படிப்புக்கு வெளிநாடு அனுப்பி வைக்க வேண்டும் என மனக்கோட்டை கட்டினார் சாம்பசிவம். அரவிந்தனைத் தவிர மற்ற இருவரும் தந்தையின் ஆசையை நிறைவேற்றத் தவறிவிட்டனர்.

செல்வி ஜி.சி.இ.ஒ நிலைத் தேர்வோடு தன் படிப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள். வங்கி ஒன்றில் சாதாரண குமாஸ்தாவாக சேர்ந்தவள் படிப்படியாக முன்னேறி உயர் பதவியை அடைந்தாள். கடுமையாக உழைத்து முன்னேறியதில் தந்தைக்குப் பரம திருப்தி. ஆனால் பாக்கியமோ “மணமாகி மூன்று ஆண்டுகளாகியும் மகள் வயிற்றில் புழுபூச்சி ஒன்று உருவாகவில்லை என்ற ஏக்கம். அந்த ஏக்கமும் போன வாரத்திலிருந்து நீங்கியது. ஆம்! செல்வி தான் ‘உண்டாகி’ இருக்கும் நற்செய்தியைத் தாயாரிடம் தெரிவித்தபோது பாக்கியத்தின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

சின்னவள் மாலதியின் போக்கே ஒரு தனி ரகம். மெதுவோட்டம், உடற்பயிற்சி, கூடைப்பந்து என விளையாட்டுத் துறையில் அதிக ஆர்வம் காட்டுபவள். அவளுக்கு ஏற்ற வேலையாக உயர்நிலைப் பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியையாகப் பணி புரிகிறாள். அவள் உலகம் கவலையில்லாத தனி உலகம்.

பெண்கள் இருவரும் மேல் படிப்பு, படிக்காதது சாம்பசிவத்திற்கும் பெருங்குறையாகவே பட்டது. தந்தையின் மனக்குறையை உணர்ந்த அரவிந்தன் வஞ்சகமில்லாது படித்தான். உள்ளூரில் டிப்ளோமா பட்டம் பெற்ற அவன் கணினித் துறையில் முதுகலைப் பட்டம் பெற அமெரிக்கா சென்றான். முதல் தரமாகத் தேர்ச்சி பெற்று, போன மாதம் தான் நாடு திரும்பினான். இந்த ஒரு மாதத்தில் பல இடங்களில் வேலைக்காக மனு போட்டான். ஆனால் யாதொரு பதிலும் வரவில்லை. அதன் பிறகு ஒரு நாள் அவன் படித்த பல்கலைக் கழகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. அமெரிக்காவிலுள்ள பிரபலமான நிறுவனத்தில் வேலை செய்ய விருப்பமா எனக் கேட்டு அக்கடிதம் வந்தது. தன் படிப்புக்கு ஏற்ற வேலையை அந்தப் பல்கலைக் கழகமே ஏற்பாடு செய்துள்ளதை எண்ணிக் களித்த அவன் அங்கு செல்லவும் முடிவு செய்தான். தன் முடிவைத் தந்தையிடம் தெரிவித்தபோது அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்தார்.

“அரவிந்த் உனக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் நீ அங்கே வேலைக்குப் போக வேணாம். உன்னை இவ்வளவு நாளா பிரிந்த அந்த வேதனையே போதும். இனியும் வேண்டாம்” சாம்பசிவத்தின் குரல் தழுதழுத்தது. வயதான தந்தையின் ஏக்கம் அவர் பேச்சில் ஒலித்தது. “நோ டேட் இந்தச் சந்தர்ப்பத்தை நான் விட்டுட்டா மறுபடியும் இப்படியொரு சந்தர்ப்பம் கிடைக்குமாங்கிற சந்தேகம். மம்மி பிளீஸ் டெல் டேட். ஐ மஸ் கோ’ எனத் தாய்ப்பசுவை நாடிச் செல்லும் கன்று போல் பாக்கியத்தின் உதவியை நாடினான்.

“லுக் மை சன். மை டிசிஷன் இஸ் ஃபைனல்” எனக் கூறி அத்துடன் அந்தப் பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளிள வைத்தார். அரவிந்தனின் மனம் சுக்கு நூறாக உடைந்தது. அவன் அங்குப் படித்த காலத்திலேயே அங்கேயே ‘நிரந்தரமாகத்’ தங்க வேண்டும் என்ற வேட்கையோடு தான் படித்தான். நினைப்பவை யாவை கைகூடுவதில்லையே. அவன் பல “முயற்சிகள்” செய்த போதிலும் அங்கேயே நிரந்தரமாகத் தங்கக்கூடிய வாய்ப்பு கிட்டவில்லை. “எட்டாத கனி” என்று எண்ணி நாடு திரும்பியவனுக்கு “கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை” என்ற நிலை ஏற்பட்டால் பாவம் அவன் என்ன செய்வான்? அந்தச் சம்பவத்திற்குப் பிறகு தந்தை மகன் இருவருக்கிடையே பேச்சுவார்த்தை இல்லை. தந்தையின் மனத்தை, மாற்றத் தாயைப் பகடைக் காயாகப் பயன்படுத்தினான். அதுவும் செல்வியின் மகட்பேறு காரணமாகத் தோல்வியடைந்தது.

“டிரீங்… டிரீங்…. தொலைபேசி மணி ஒலித்தது. அரவிந்தன் தான் போனை எடுத்தான். “ஹலோ…” என்ன அப்படியா? இதோ வந்துட்டேன்,” எனப் பதறியபடி போனை வைத்துவிட்டு அவசர அவசரமாகக் கிளம்பினான். போவதற்கு முன் “அம்மா நான் சங்கர் வீடு வரைக்கும் போயிட்டு வரேன்” எனக் கூறி வெளியேறினான்.

சங்கர் அரவிந்தன் இருவரும் தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை ஒன்றாகப் படித்தவர்கள். மேற்படிப்பைத் தொடர அரவிந்தன் வெளிநாடு சென்றான். அதன் பிறகு இருவருக்கிடையே கடிதத் தொடர்பு மட்டும் இருந்து வந்தது. இருவரும் தங்கள் அந்தரங்க விஷயங்களைப் பரிமாறிக் கொள்ளும் அளவிற்கு நெருக்கமானவர்கள். சங்கர். பக்கத்து புளோக்கில் தான் குடியிருக்கிறான். அவனைக் காணச் சென்ற அரவிந்தனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

சங்கரின் வீடு மயான அமைதியாக இருந்தது. அந்த அமைதி ஏதோ ஒரு விபரீதம் நடந்திருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லியது. வீட்டு வாசலில் ஒரு சிலர் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தனர். உறவினர்கள் வீட்டிற்கு வந்திருப்பது போல் தெரிந்தது. மெல்ல வரவேற்பறையை எட்டிப் பார்த்தான் அரவிந்தன். அங்கே சோகமே வடிவாய் அமர்ந்திருந்தான் சங்கர். சங்கரின் தாயாரது விம்மல் ஒலி கேட்டது. அவருக்கு யாரோ ஆறுதல் கூறுவது போல் இருந்தது.

அரவிந்தனைப் பார்த்ததும் சங்கர் வாசல் பக்கம் வந்தான். “அரவிந்த் நாம கீழே போகலாம்” என்றபடி மின்தூக்கியை நோக்கி நடந்தான். அரவிந்தனும் அவனைப் பின் தொடர்ந்தான்.

அடுக்குமாடி வீட்டின் கீழ்த்தளத்தில் இருந்த இருக்கையில் இருவரும் அமர்ந்தனர். சங்கர் எதுவும் பேசவில்லை. அரவிந்தன் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். சங்கரின் விழியோரங்களில் கண்ணீர் முட்டிக் கொண்டிருந்தது. ‘என்ன விஷயம் சங்கர்?’ எனக் கனைத்தபடி கேட்டான் அரவிந்தன். ”அரவிந்த்… அரவிந்த்…” அதற்கு மேல் சங்கரால் பேச முடியவில்லை. கண்ணீர் ஆறாகப் பெருகியது.

சங்கர் அழுது அரவிந்தன் பார்த்ததே இல்லை. இது என்ன புதுக் குழப்பம்? எனக் குழப்பத்துடன் சங்கரைப் பார்த்தான். தன்னைச் சுதாரித்துக் கொண்டு சங்கரே பேச்சைத் தொடங்கினான். “அரவிந்த் என் அப்பா இறந்துட்டாருடா” “எப்படி?” எனப் புரியாமால் விழித்தான் அரவிந்தன். “எங்களுக்கு இப்ப தான் செய்தி கிடைச்சிருக்கு. நேற்று காலையில அவர் இறந்துட்டாரு” அதற்கு மேல் சங்கரால் தொடர்ந்து பேச முடியவில்லை. அவனாகப் பேசட்டும் என்று எண்ணி அரவிந்தனும் சங்கரின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரங்கழித்து, சங்கரே தொடர்ந்தான். “அரவிந்த் உனக்குத்தான் என் அப்பாவைப் பற்றித் தெரியுமே? அவர் பிசினஸ் பிசினஸ்னு சொல்லிப் பாதி காலத்தை வெளியூருல தங்கிடுவாரு. இந்த முறை இந்தியாவுக்குப் போனாரு. அங்கே அவரோட சொந்தக்காரங்க வீட்டுல தங்கினாரு. போன வாரம் காய்ச்சலுனு படுத்தவருதான். பின்னே எழவே இல்லை. நேற்று காலையில உயிர் போயிட்டு இப்பதான் எங்களுக்குச் செய்தி கிடைச்சது. கடைசி காலத்துல அவரு பக்கத்தில் யாருமே இல்லை. பிள்ளைங்கனு சொல்லிக்க நாலு பேரு இருக்கோம். கட்டின மனைவி இருக்காங்க. இருந்தும் யாருமே இல்லாத அனாதையா அவரு போயிட்டாரு” கண்ணீருடன் சங்கர் சொல்லி முடித்தான். அவனுக்கு எப்படி ஆறுதல் கூறுவதென்று அரவிந்தனுக்குத் தெரியவில்லை. மனம் விட்டு அழுதால் அவன் பாரம் குறையும் என்று எண்ணி வாளாதிருந்தான்.

சங்கர் பழைய கதைகளையெல்லாம் கூறினான். அவன் தந்தை அவர்களுக்காகப் பட்ட பாட்டைப் பற்றி விளக்கினான். பணம் சம்பாதிப்பது மட்டுமே தனது நோக்கமாகக் கொண்டு மனைவி மக்களைப் பிரிந்து கடல் கடந்து வியாபாரம் செய்ததைப் பற்றிக் கூறினான். இறுதிக் காலத்தில் பெற்ற பிள்ளைகள், கட்டிய மனைவி இவர்களின் முகத்தைக்கூடப் பார்க்காமல் இறந்துவிட்டாரே கொண்டான். எனக் குறைப்பட்டுக் எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தான் அரவிந்தன்.

கடைசியாகச் சங்கர் சொன்ன வார்த்தை அரவிந்தனின் உள்ளத்தை வெகுவாகப் பாதித்தது. அது முள்ளாக அவன் இதயத்தைத் தைத்தது. “நாம இந்த உலகத்தில் வாழப்போறதோ கொஞ்ச நாள் தான். இந்தக் கொஞ்ச நாளுல மனைவி, மக்கள், சகோதர சகோதரிகளோட ஒன்னா சந்தோசமா வாழ்றதை விட்டுட்டு பணம் சம்பாதிக்கிறேனு சொல்லிக் குடும்ப சுகத்தை அனுபவிக்காமலேயே இறந்துட்டாரு. வாழ்க்கைக்குப் பணம் முக்கியம்தான். ஆனால் பணமே வாழ்க்கை ஆயிடாது” என்றான் சங்கர்.

சங்கர் சொன்னதையெல்லாம் அரவிந்தன் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான். ஆனால் அவன் மனம் மட்டும் எதையோ ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தது. சங்கர் வீட்டில் அன்றைய பெரும்பாலான பொழுதைக் கழித்தான் அரவிந்தன். தான் வர வெகு நேரமாகிவிடும் என்பதை மட்டும் தன் அன்னை பாக்கியத்திற்குப் போன் மூலம் தெரிவித்தான்.

இரவு மணி பத்தாகியது. சங்கர் வீட்டிற்குத் துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் நண்பர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது. பிரேதத்தை எவ்வாறு கொண்டு வருவது என்பதைப் பற்றி உறவினர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அங்கு அழுகுரல் மேலோங்கி இருந்தது. இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு அங்கிருக்க அரவிந்தனால் முடியவில்லை. வீட்டிற்குப் புறப்படத் தயாரானான்.

துக்க வீட்டில் சொல்லி விட்டுப் போகக்கூடாது என்பது மரபு. அதனால் சங்கரிடம் மட்டும் தலையை அசைத்துவிட்டுக் கிளம்பினான் அரவிந்தன். வீட்டை அடைந்தபோது மணி பத்தரை இருக்கும். எங்கும் ஒரே நிசப்தம். அப்பாவின் அறையில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மற்ற அறைகளின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன. அதனால் சத்தம் செய்யாமல் பூனை போல் தன் அறையை நோக்கி நடந்தான். அப்போது தன் அறைக்குப் பக்கத்திலிருந்த அப்பாவின் அறையிலிருந்து பேச்சுக்குரல் கேட்டது.

“என்னங்க அவன் தான் ஆசைப்படுறான்ல. நீங்க கொஞ்சம் விட்டுக் கொடுக்கக் கூடாதா?” என்றாள் பாக்கியம். “வயசான காலத்துல நம்ம பிள்ளைங்க நமக்கு ஒத்தாசையாக இருப்பாங்கன்னு தான் நாம கஷ்டப்பட்டு அவங்களை வளர்த்து ஆளாக்குறோம். ஆனா அவங்களோ நம்மைப் பாரமா நினைச்சி பிரியவே ஆசைப்படுறாங்க” என்று கம்மிய குரலில் பேசினார் சாம்பசிவம். ”ம் என்ன செய்றது? நாம வாழ்ந்து முடிச்சவங்க. அவன் வாழ வேண்டியவன்” என மகனுக்காகப் பரிந்து பேசினாள் பாக்கியம். “அது எனக்கும் தெரியும் பாக்கியம். அவன் நல்லா வாழனும்னு தான் நானும் விரும்புறேன். ஆனா பாக்கியம் படிச்ச இளைஞர்கள் எல்லாரும் நம்ம தாய்நாட்டை விட்டு வெளிநாட்டுல குடியேறிட்டாங்கன்னா நம்ம நாட்டோட நிலை என்னவாகிறது?” எனப் பரிதாபத்தோடு கேட்டார். “விளக்கொளியோட பிரகாசத்திற்கு மயங்கி விட்டில் பூச்சி அதை நோக்கி போய் தன் வாழ்க்கையையே அழிச்சிக்கிதுங்க. அந்த மாதிரி தான் மேலை நாட்டு மோகத்துல பலரும் அங்கே தங்கி எப்படி எப்படியோ வாழ்றாங்க. பட்டாத் தான் தெரியும். பட்டுட்டு வரட்டும். தானே புத்தி வரும்” மகனின் எதிர்காலத்தில் அக்கறை இருந்தாலும் அவனைத் தட்டிக் கேட்க முடியாத நிலையில் இருந்தாள் பாக்கியம். “ம் விட்டுப் பிடிங்க. அவனா மாறுவான்” என்ற நம்பிக்கையில் மேலும் தொடர்ந்தாள்.

“வாழ்க்கைக்குப் பணம் அவசியம் தான். ஆனா அந்தப் பணமே வாழ்க்கையாயிடாது. அன்பான குடும்பம், அரவணைப்புள்ள சொந்தம், இவை தான் வலுவான குடும்பத்திற்கு அஸ்திவாரம். இதைப் பணத்தால் வாங்கிட முடியாது” எனச் சங்கர் சொன்னது அவன் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. இனியும் விட்டில் பூச்சியாக வாழ விரும்பாத அரவிந்தன் தன் தீர்க்கமான முடிவைத் தெரிவிக்கப் பெற்றோரின் அறையை நோகி நடந்தான். அந்த நடையில் இதுவரை அவன் “தேடிய சொர்க்கம்” கிடைத்துவிட்ட பூரிப்பு பிரதிபலித்தது.

– தேடிய சொர்க்கம், முதற்பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *