கதையாசிரியர்:
தின/வார இதழ்: தென்றல்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 6, 2014
பார்வையிட்டோர்: 21,135 
 

ஜெர்மானிய அகராதியை வைத்துக்கொண்டு உம்லாவ்ட் இருக்கிற எழுத்துக்களை சொல்லிப்பழகிக் கொண்டிருந்த போதுதான் மனைவி, “உடைச்சிண்டு வாங்க. அரைச்சு விட்ட சாம்பார் பண்ணணும்” என்று கையில் தேங்காயோடு வந்து நின்றாள். நான் சலிப்புடனும் கவலையோடும் அவளைப் பார்த்தேன். உடை உடுத்துக்கொள்ள வேண்டுமென்பதால் சலிப்பு. உடைக்கும்போது சப்தம் வரும். அதனால் கவலை.

தேங்காய் உடைக்க எதற்கு ட்ரஸ் மாத்தணும்? சப்தம்பற்றி என்ன கவலை என்று பனி படர்ந்த இந்த இமாலயப் பிரச்சனையை அசட்டையாய் அணுகுபவர்களுக்குச் சின்ன விரிவுரை.

உடைக்கப்பட வேண்டிய அந்தத் தேங்காய் இருந்தது, என் அலுவல் காரணமாய் நான் இரண்டு வருட டெபுடேஷனில் வந்திருந்த, ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவின் புறநகர்ப் பகுதியில் வீற்றிருந்த ஒரு வீட்டு வளாகத்தில். அந்தப் பிரதேசத்தை சட்டென்று ரெண்டே வார்த்தையில் விவரிக்க வேண்டுமானால், ஒன்று குளிர் இன்னொன்று நிசப்தம். இரண்டு வார்த்தைகளுக்கு முன்னாலும் ‘மகா’ என்கிற வார்த்தை சேர்ப்பது இன்னும் சாலப்பொருந்தும். சுட்டெரிக்கிற சென்னை வெய்யிலில் காதடைக்கிற இரைச்சலுக்கு மத்தியில் வாழ்ந்து பழகிய ஒரு மாம்பலம் வாசிக்கு சம்பந்தமே இல்லாத விஷயங்கள் இரண்டும்.

அந்த ஊரின் சாதாரண சீதோஷ்ணம் மைனஸ் 5, மைனஸ் 10 என்று எலும்புவரை எட்டும் குளிர். திரைமறைவாய் சூரியன். வெறும் வெளிச்சம்தான். சாயந்தரம் நாலு மணிக்கு இருட்டிவிடும். வருஷத்துக்கு பதினைந்து நாள் அபூர்வமாய் ஆகஸ்டில் சூரிய வெளிச்சம் கிடைக்கும். அதுதான் ஒரே வாய்ப்பு என்பதால் ஜனங்கள் வீட்டைத் துறந்து நதிக்கரை, ஏரி, பூங்கா என்று எல்லா திறந்த வெளியிலும் ஆடைகளைக் களைந்துவிட்டு லஜ்ஜையில்லாமல் அம்மணமாய் படுத்திருந்து உடம்புக்குத் தேவையான சூரிய வெளிச்சத்தை உடம்பில் ஏற்றிக்கொள்வார்கள். மஞ்சள் பையும் கையுமாய் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பொடி நடையாய் ரங்கநாதன் தெருவில் இறங்கி காய்கறி வாங்க நடக்கிறமாதிரி நான் இங்கே வீட்டைவிட்டு இறங்கினால் சத்தியமாய் ஜன்னி வந்து செத்துப்போவேன். கம்பளி உள்ளாடை, முழுக்கைச் சட்டை, பேண்ட், அதன்மேல் கம்பளி கோட், ஷூ, கைக்கு உறை, தலைக்கு குல்லாய், காதில் பஞ்சு என்று அடக்கம் செய்யவிருக்கிற ஒரு ஐரோப்பியத் தலைவரின் சடலம் மாதிரிதான் நான் வெளியே காலடி எடுத்துவைக்க வேண்டும்.

பனி பொழியும் குளிர் தெரியாமல் இதமான இருபத்தைந்து டிகிரிக்கு வெப்பம் ஏற்றப்பட்ட வீட்டிலிருந்து ஒரு அல்ப தேங்காயை உடைக்க, சண்டைக்குப் போகிற சிப்பாய் மாதிரி மேற்படி வஸ்திராபரணங்கள் எல்லாம் அணிந்து கொண்டு போகவேண்டுமென்றால் சலிப்பாய் இருக்காதா சொல்லுங்கள்?

இரண்டாவது பிரச்சனைக்கு வருவோம். குளிர் காற்று ஆட்களை அடித்து வீட்டுக்கு விரட்டிவிடுவதால் வீதியில் ஆள் மற்றும் வாகன நடமாட்டமே கிடையாது. மரங்கள் கூட குளிருக்கு உறைந்தது போல ஆடாமல் அசையாமல் இருக்கும். எல்லோரும் உஷ்ணப்படுத்திய வீட்டிற்குள் ஒண்டிக்கொண்டு சதாசர்வகாலமும் ஒரு மயான அமைதி ஊருக்குள் நிலவும்.

இந்த நிசப்தக் கோட்டையில், இந்தியர்களுக்கு அவ்வளவாய் பரிச்சயப்படாத ஜனங்களின் மத்தியில், வெளிநாடுகளை போஸ்ட் கார்டில் மட்டுமே பார்த்த அனுபவம் கொண்ட, புதிதாய்க் கல்யாணமான தம்பதி சமேதரராய் நாங்கள் இருவரும் என்ன செய்தாலும் சப்தம் வருகிறது. நான் அலுவலகம் போன முதல் நாளே ஆரம்பித்துவிட்டது ரகளை. தனியாய் இருக்கும் சுமை தெரியாமல் இருக்க, ஹாலில் டேப் ரிகார்டரில் மதுரை சோமுவைப் பாட வைத்துவிட்டு மனைவி பாட்டுக்கு சமையல் செய்துகொண்டிருக்க. தான் ஆஸ்திரியாவில் பாடுகிற ஸ்மரணை இல்லாமல் அவர் பாட்டுக்கு தோடியில் கோடி டெசிபல்களில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, ஏதோ ஒரு அன்னிய பாஷையில் மரண ஓலத்தில் யாரோ கதறுகிற சப்தத்தால் நிலை தடுமாறிப்போன பக்கத்து வீட்டுக்கார கிழவர் அந்த அவசரத்திலும் கம்பளிக்கோட்டும் தொப்பியுமாய் வந்து கதவைத் தட்டி இரைச்சலில் தன் நெஞ்சு அடைப்பதாய் அபிநயம் செய்து ஜெர்மன் பாஷையில் புலம்ப, ஜெர்மன் புரியாத மனைவி மாரடைப்பு வந்து அவர் துடிப்பதாய் நினைத்து அரக்கப்பரக்க எனக்கு போன் செய்ய, அவருடன் நான் பேசித் தெரிந்துகொண்டு சொன்னதும்தான் சோமுவின் வாயை அடைத்து அவர் மாரடைப்பைத் தடுத்தாள். அன்றிலிருந்து சோமு உட்பட, எஸ்.பி.பி., சித்ரா எல்லோரும் அடக்கித்தான் வாசித்தார்கள்.

இந்த நிசப்த ராஜ்யத்தில் சாப்பிட்டுவிட்டுப் பெரிதாய் ஏப்பம் விட்டால் கூட எட்டாவது மாடிக்காரனுக்குக் கேட்கிறது. மாம்பலத்தின் இரைச்சலுக்குப் பழகிய எங்கள் குரல் வளத்தை வைத்துகொண்டு நாங்கள் ரகசியம் பேசினாலும் எட்டூருக்கு கேட்கிறதை ரொம்ப சிரமப்பட்டு பக்கத்துத் தெருவுக்கு மட்டும் கேட்கும்படி நாங்கள் பக்குவப்பட்டு விட்டோம். கைதட்டியபடி வீரப்பா மாதிரி கடகடவென்று சிரிக்கும் கெட்ட வழக்கம் இருந்த என் மனைவிகூட வால்யூமைக் குறைத்துச் சிரிக்கப் பழகிவிட்டாள். பாத்ரூமில் பாடும் கெட்ட வழக்கத்தை நானும் விட்டொழித்து விட்டேன். இருந்தாலும் எங்களைப் பற்றி வளாகத்தில் புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. எங்களைப் பார்த்தாலே அந்த வளாகத்திலிருந்த பெரும்பான்மையினர் பயந்து ஒதுங்க ஆரம்பித்தார்கள்.

அதற்குக் காரணம் கிட்டத்தட்ட இதே சைசில் இருந்த இதற்கு முந்தைய தேங்காய்தான். ஆட்டுக்கல்லோ, அம்மிக்கல்லோ இல்லாத அந்த ஊர் சமையலறையில் எப்படி தேங்காய் உடைப்பது? ஒரு மூலையில் தரையில் அடித்து உடைக்க, அது கீ.வீ. கிழவர் தலையில் இடிமாதிரி இறங்கி அவரும் எங்கள் வீட்டுக் கதவையும் வீட்டு வளாக மேலாளர் கதவையும் தட்டி முறையிட்டு ஏகக் களேபரம் ஆகிவிட்டது. அன்றிலிருந்து வீட்டுக்குள் தேங்காய் உடைக்க வழியில்லாமல் போனது. அதன் பிறகு தேங்காய் உடைப்பதை அந்த வளாகத்தின் தோட்டத்தில் வைத்துச் செய்ய ஆரம்பித்தேன்.

இந்தப் பின்னணியில்தான் இன்னொரு தேங்காய் உடைக்கவேண்டிய நிர்ப்பந்தம் என் முன்னே உருவாகி நிற்கிறது. இதற்காக நான் மைனஸ் 10 குளிரில் உடை உடுத்தி இறங்கி எங்கள் வளாகத்தின் முன்னால் இருக்கும் தோட்டத்தில் ஒரு நல்ல ஸ்தலமாய் பார்த்து தேங்காய் உடைத்துக்கொண்டு வரவேண்டும். ஒரு கையில் தேங்காயும் இன்னொரு கையில் எவர்சில்வர் டபராவுமாய் படியிறங்கிப் போனேன்.

சின்ன வயதிலிருந்து எங்கள் வீட்டில் தேங்காய் உடைக்கிற பொறுப்பு என்னுடையதுதான். அப்பாவிடமிருந்து நான் ஆர்வத்தில் கேட்டு வாங்கிக்கொண்ட ஒரே வீட்டுப் பொறுப்பு. எனக்குப் பிறகு இரண்டு தங்கைகள் என்பதால் மூத்தவனாய் லட்சணமாய் இந்த வேலையை நான்தான் செய்வேன். தங்கைகள் என் பின்னால் நின்றுகொண்டு வேடிக்கை பார்ப்பார்கள்.

“பிள்ளையாருக்கு வேண்டிண்டு உடைக்கணும். கரெக்டா சரி பாதியானா வேண்டிண்டது நடக்கும்” அம்மா, தேங்காவை துருவுவதற்குத் தோதாய் இருக்கப் பிள்ளையாரை காரணம் காட்டி உடான்சு விடுவாள்.

அந்தப் பதினாலு வயதில் எனக்கு எதிர்த்த வீட்டு கீதாவின் கடைக்கண் பார்வை என்மேல் விழவேண்டும் என்கிற ஒரே வேண்டுதல் மட்டும் இருக்க, தேங்காய் உடைப்பதை கர்ம சிரத்தையாய் செய்வேன்.

“என்னண்ணா வேண்டிண்டு இருக்க?”

“பரீட்சைல பாசாணும்னு ”

அம்மிக்கல்லின் கீழே டபராவை வைத்துவிட்டு, தேங்காயை ரொம்ப நோகாமல் அடித்து நடுவில் பூமத்திய ரேகை போல ஒரு பிளவு உண்டாக்கி இரண்டு கைகளால் இரு முனைகளையும் பிடித்து இழுத்து விரிசலைப் பெரிதாக்கி உள்ளேயிருக்கும் தண்ணீரை டபராவில் பிடிக்க வேண்டும். அதில்தான் இருக்கிறது சூட்சமம். தேங்காய் உடைக்கிற பணியை ஏற்றுக்கொள்வதே அதற்குத்தான். தங்கைகள் பின்னால் நிற்பதும் அதுக்குத்தான். டபராவில் தண்ணீர் பிடித்த பிறகு இரண்டு பேரும் வாயைத் திறந்து கொண்டு நிற்க இருவருக்கும் ஒரு மிடறு வாயில் விட்டுவிட்டு மிச்சத்தை நான் கவிழ்த்துக்கொள்வேன். நைவேத்தியம் செய்வதற்கு முன்னால் சாப்பிடக்கூடாது என்கிற விதிமுறைக்கு தேங்காய்த் தண்ணீர் மட்டும் விதிவிலக்கு என்று தலைமுறை தலைமுறையாய் எல்லோரும் தீர்மானம் போட்டு ஒப்புக்கொண்டிருந்தது நல்லதாய் போயிற்று. எங்கள் வீட்டுப் பிள்ளையார் ரொம்ப அனுசரணையானவர். சட்னிக்காக உடைக்கப்படும் தேங்காயைக் கூட அவர் முன்னால் அவசர கதியில் வைத்து வாசனை காட்டிவிட்டாலும் நைவேத்யம் செய்ததாய் ஒப்புக்கொண்டு உடனே சட்னி செய்ய அனுமதித்து ஆசீர்வதித்துவிடுவார்.

சில சமயம் தேங்காய் எக்குத்தப்பாய் பட்டு மேல் பாகம் காலே அரைக்கால் அடிப்பாகம் மீதி என்று ஆபாசமாய் உடையும். “போச்சு. இந்த அரைப்பரீட்சைல பெயில் ஆகப்போற” என்பாள் முதல் தங்கை, என் பரீட்சையின் முக்கியத்துவம் புரியாமல்.

ஆரம்பக் கோணல் எல்லாம் சரியாகி நான் தேங்காயை லாகவமாய் இரண்டு சரியான அரை வட்டங்களாய் உடைக்கத் தேர்ச்சி பெற்ற ஆறு மாதங்களில் கீதா வேறு எவனோடயோ ஊர் சுற்றத் துவங்கியிருந்தாள். அம்மா சொன்ன பொய் எனக்கு அப்போதுதான் உரைத்தது. இருந்தாலும் தேங்காய்த் தண்ணீர் ஆசையில் என் தேங்காய் உடைக்கும் பணி தொடர்ந்தது.

“துருவித் துருவி கையெல்லாம் வலிக்கறதுடா. அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணுடா கண்ணா,” என்று கொஞ்சி மெல்ல தேங்காய் துருவும் வேலையை அம்மா என் தலையில் கட்டினாள். அதையும் செய்வேன். துருவி முடித்ததும் பூத்தூவலாய் இருக்கும் அதில் ஒரு விள்ளல் எடுத்து அதில் சர்க்கரை தூவிச் சாப்பிடும், கீதாவையே மறக்கவைக்கிற அலாதியான ருசிக்காக.

வழக்கம்போல சட்டென்று போய் யாராவது பார்ப்பதற்குள் உடைத்துகொண்டு வந்துவிடலாம் என்று அசட்டு தைரியத்தில் நான் இறங்கி வந்ததும்தான் கவனித்தேன். அந்த முகப்புத் தோட்டம் முழுக்க இரவு பெய்த அடைபனியில் சுத்தமாய் நிறைந்து போய் ஆர்க்டிக் கடல் மாதிரி இருந்தது. நான் சுத்துமுத்தும் பார்த்தபடி அங்கேயே நின்றிருந்தேன். இப்படிப் பனி பெய்கிற நாட்களில் நடக்கத் தோதாய் வீடுகளின் வாசலில் இருந்து கேட் வரை பொருத்தப்பட்டிருக்கும் செவ்வகக் கற்கள் மட்டும்தான் தென்பட்டன. அதன் மேல் விழுந்த பனியை வாரியெடுத்து கொட்டியிருந்தார்கள். கூரான முனை இருக்கும் நல்ல படிக்கல்லாய் தேர்ந்தெடுத்து முனையில் டபராவை வைத்துவிட்டு தேங்காயை உடைக்கக் கையை ஓங்கினதும் என் கண் ஃப்ரேமுக்குள் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் ஹீரோவின் கால் மாதிரி பூட்ஸ் கால் ஒன்று வந்து நின்றது. பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது. அந்த வீட்டு வளாகத்தின் நிர்வாகி ஃப்ராவ் ஈவா யூஸ்ட். ஆஜானுபாஹி. அதன் மேல் கோட்டு, தொப்பி எல்லாம் போட்டு எட்டடி உயரத்திலிருந்து என்னப் பார்த்து வினவினாள்.

“குருஸ்காட்… என்ன செய்கிறீர்கள்?” ஆஸ்திரியர்கள் மரியாதை தெரிந்தவர்கள். யாரையாவது அடித்துப் போட வேண்டுமென்றாலும் முதலில் வணக்கம் சொல்லிவிடுவார்கள்.

எப்படி சொல்லி வைத்தாற் போல வந்து நிற்கிறாள்? மற்ற வீட்டுக்காரர்கள் யாராவது போட்டுக் கொடுத்திருக்க வேண்டும். முகப்பில் இருந்த அந்தத் தோட்டம் எந்த வீட்டின் முகப்பு அறை ஜன்னல் வழியாய்ப் பார்த்தாலும் தெரியும்படி அமைக்கப்பட்டிருந்தது. அங்கே கையில் என்னத்தையோ கொண்டுவந்து நான் அடிக்கடி அடித்து உடைப்பதைப் பார்த்தவர்களுக்கு சந்தேகம் வந்திருக்கும்.

“குருஸ்காட். ஃப்ராவ் யூஸ்ட்….” என்று நிமிர்ந்தேன். கொட்டுகிற பனியில் தேங்காய், டபரா சகிதம் நிற்கும் என்னை ஒரு ஜந்துவைப்போல கேவலமாய்ப் பார்த்தாள். வெடி குண்டு வைக்க வந்து மாட்டிக்கொண்டவன் போல முழிக்க, கையில் இருந்த தேங்காயை வாங்கி முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்த தினுசில் இவள் ஆயுசில் தேங்காயே பார்த்ததில்லை என்று தெரிந்தது. பன்றியும், மாடும் வெட்டி வெறுமனே உப்பு போட்டுச் சாப்பிடும் இவர்களுக்குத் தேங்காயும் அரைத்துவிட்ட சாம்பாரும் எப்படிப் புரியும்?

“திஸ் இஸ் ஃபார் குக்கிங்” என்றேன் க்ஷீணமாய். “இதை உடைத்தால் உள்ளே வெள்ளையாக இருக்கும். இதை சுரண்டி எடுத்து காய்கறிகளுடன் கலந்து சாப்பிடுவோம். பாருங்கள்” என்று சமயோசிதமாய் மடாரென்று அடித்து உடைத்து அதே வேகத்தில் டபராவிலும் தண்ணீர் சேர்த்துக்கொண்டேன். அடித்த கல்லில் ஏதாவது விரிசல் கண்டிருக்கிறதா என்று குனிந்து வருடினாள். இன்னும் நாலைந்து பேர் வந்து நின்று பெரிது பெரிதாய் வாயைத் திறந்து ‘அபெர்’ ‘அபெர்’ என்று ஜெர்மன் பாஷையில் என்னவோ பேசினார்கள். அது சாப்பிடுகிற பதார்த்தம்தான் என்று நிரூபிக்க கையை குவித்து வைத்துக்கொள்ளச் சொல்லி கோயில் குருக்கள் மாதிரி எல்லார் கையிலேயும் கொஞ்சம் வார்த்தேன். அதை உறிஞ்சிப் பார்த்துவிட்டு ஆமோதித்தாலும் அவர்களுக்குச் சமாதானமாகவில்லை.

தீர்த்தம் வாங்க மறுத்த, அசப்பில் எங்கள் மங்கேஷ் தெரு வம்பு வத்ஸலா மாமி மாதிரி இருந்த, ஒரு வயதான கிழவி என்னமோ பிரசங்கிக்க, அவரின் வாய்ஸ் மாடுலேஷனையும் உடம்பு மொழியையும் வைத்து “இந்தக் கடங்காரன் போக்கே சரியில்லை. யார் இவனுக்கு இங்கே வீடு குடுத்தது? வந்ததிலிருந்து ஒண்ணு மாத்தி ஒண்ணு வில்லங்கம். ஒருநாள் வெடிகுண்டு ஒண்ணு வச்சிட்டு எங்க ஊர் பண்டிகை நாங்க இப்படித்தான் கொண்டாடுவோனு ஏதாவது வியாக்கியானம் சொல்லுவான். முதல்ல இவனை இங்கிருந்து காலி பண்ண வக்கணும்” என்பதுபோல அதை மொழிபெயர்த்துக் கொண்டேன்.

கடைசியாக ஃப்ராவ் யூஸ்ட் “எல்லோரும் ஆட்சேபிக்கிறார்கள். இனிமேல் இந்த வஸ்துவை நீங்கள் இங்கே வந்து உடைக்கவேண்டாம்” என்று உறுதியாகச் சொல்லிவிட்டு போய்விட்டாள். எனக்கு அந்த தேசத்தில் தேங்காய் உடைக்க இருந்த ஒரே ஸ்தலமும் அன்று பறிபோனது.

வெறும் பொடி போட்ட சாம்பாரும் தேங்காய் போடாத பொறியலுமாய் நாங்கள் அவஸ்த்தைப்பட்ட ஒரு மாதத்தின் இறுதியில் அந்தப் பிரச்சனையைத் தீர்த்தது ஒரு பாகிஸ்தான்காரன்தான். ஃப்ளேஷ் மார்க்கெட்டில் ஆசிய பலசரக்குக் கடை வைத்திருந்த, மற்றவர்களுக்கு ஒரு விலையும் இந்தியர்களுக்கு ஒரு விலையுமாய் வியாபாரம் செய்கிற, அஸ்லாம்தான் தேங்காய் பிரச்ச்சனைக்கு தீர்வு கண்டது. அவனிடம் பேரம் பேசி வாங்கும்போது “அஸ்லாம்… சின்ன உபகாரம் செய்யேன். அந்தத் தேங்காயை உடைத்துத் தந்துவிடேன். வீட்டில் உடைக்கத் தோதுப்படவில்லை” என்று கேட்டதும் சரியென்று பிள்ளையாருக்கு வேண்டிக்கொண்டவன் மாதிரி சூரத்தேங்காய் அடித்து சுக்கு நூறாக உடைத்துத் தந்துவிட்டான். தேங்காயை இரு சரியான பாகமாய் உடைக்க வேண்டிய அவசியத்தையும் அதன் பின்னே வேண்டுதல் ஒன்று இருப்பதன் தாத்பர்யத்தையும் நாசூக்காய் சொல்லிக் கொடுத்து வேலை வாங்குவதற்கு நான்கைந்து தேங்காய்களைக் காவு கொடுக்க வேண்டியிருந்தது.

என்ன வேண்டிக்கொள்கிறான் தெரியாது ஆனால் அஸ்லாம் ஒரே ஒரு அடியில் தேங்காயைச் சரியான அளவில் இரண்டு பாதிகளாய் உடைக்க நாளைடைவில் மிகுந்த தேர்ச்சி பெற்றுவிட்டான். எங்கள் வீட்டுப் பிள்ளையாரும் அஸ்லாம் உடைத்த தேங்காயை நைவேத்தியமாய் ஏற்றுக்கொண்டு அந்தக் குளிர் காட்டில் அரைத்துவிட்ட சாம்பார் செய்து சௌக்கியமாய் இருக்க எங்களைத் தொடர்ந்து ஆசிர்வதித்தபடி இருந்தார். வீட்டு வளாகத்திலும், மேற்கொண்டு தேங்காய் உடைக்க முயலாத, என்னை முனகல் இல்லாமல் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். ஒரே ஒரு மனத்தாங்கல்தான். என்ன சொல்லிக் கொடுத்தாலும் உடைத்து டபராவில் தேங்காய் தண்ணீர் எடுத்துத் தரும் லாகவம் மட்டும் அவசரக்கார அஸ்லாமுக்கு கைகூடவே இல்லை.

இதெல்லாம் இருபது வருஷத்துக்கு முந்திய கதை. காலப்போக்கில் தேங்காய்களுக்கும் உபத்திரவம் கொடுக்கும் இந்தியர்களுக்கும் உலகம் அனுசரித்துப் போனது போல இந்தியர்களும் மாறிவிட்டார்கள். நாங்களும் குளிரான ஒரு அன்னிய நாட்டிலேயே தங்கி வேலை பார்த்து, குழந்தைகள் பெற்றுக்கொண்டு டிசம்பர் மாத சீசனுக்கு மட்டும் இந்தியா வரும் என்ஆர்ஐகளாகிவிட்டோம். வெளிநாட்டில் வளரும் என் பிள்ளைகள் இப்போதும் இந்தியத் தெருவில் யாராவது தேங்காய் உடைப்பதைப் பார்த்து “காட்.. வாட் அ டர்ட்டி ஹேபிட்!” என்று அங்கலாய்க்கும்போது எனக்கு வியன்னாவைவும், ஃப்ராவ் யூஸ்டையும், அஸ்லாமையும் நினைக்காமல் இருக்க முடிவதில்லை.

– மே 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *