தெளிவு…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 21, 2019
பார்வையிட்டோர்: 6,763 
 

” ஜோசியம். .. ஜோசியம். ..! ” தெருவில் குரல் கேட்டதும் வீட்டினுள் அமர்ந்திருந்த ரெங்கநாயகிக்கு ஒரு வினாடிகூட சும்மா இருக்க முடியவில்லை. உடலும் உள்ளமும் சேர்ந்து துடித்தது.

உடனே வீட்டை விட்டு வெளியே வந்தாள்.

கையில் மந்திரக்கோல் மாதிரி ஒன்றை வைத்துக்கொண்டிருந்த ஜோசியக்காரி வாசலில் தெரிந்தாள்.

” ஏ. .. ஜோசியம். .! ” அழைத்தாள்.

” என்னம்மா. .? ” அவள் திரும்பி குரல் கொடுத்தாள்.

” ஜோசியம் பார்க்கணும். இங்கே வா. ..” அழைத்து திண்ணையில் அமர்ந்தாள்.

ஜோசியக்காரியும் அவள் அழைப்பை ஏற்று வந்து அவள் எதிரில் அமர்ந்தாள்.

” யாருக்கம்மா பார்க்கனும் ? ” கேட்டாள்.

” பேர் பவதாரிணி. .! ”

” நட்சத்திரம். .? ”

” மூலம். .! ”

” ‘ஜாதகம். .? ”

” இல்லே. பேர் , நட்சத்திரத்துக்குப் பாரு. .”

ஜோசியக்காரி தன் கையில் உள்ள மந்திரக்கோல் மாதிரி உள்ள குச்சியை நீட்டி. .

” கையைக் காட்டும்மா. .” சொன்னாள்.

ரெங்கநாயகி…மெல்ல திரும்பி உள்ளே ஜாடையாக எட்டிப்பார்த்துவிட்டு. .

” எனக்கு இல்லே. இந்த வீட்டு பொண்ணுக்கு. .” என்று ரகசியமாக சொன்னாள்.

ஜோசியக்காரிக்கு. ..

‘ இந்த அம்மாள் சம்பந்தப்பட்ட ஆளுக்குத் தெரியாமல் பார்க்கிறாள். ! ‘புரிந்துவிட்டது.

அதற்குள். ..

” உன் ஜோசியம் சரியா இருக்குமில்லே. .” அதே குசுகுசுப்பில் ரெங்கநாயகி கேட்டாள்.

ஜோசியக்காரிக்குத் திக்கென்றது.

” நான் சொல்றது எல்லாம் சரியாய் இருக்கும். நான் சொன்ன ஜோசியத்தை எந்த ஜோசியக்காரியிடமும் சொல்லி.. கேட்டு பாரு. நூத்துக்கு நூறு சரியா இருக்கும்ன்னு சொல்வாள். .! ” என்று அடித்துச் சொன்னாள்.

ரெங்கநாயகி முகத்தில் திருப்தி வந்தது.

ஜோசியக்காரி தன் கோலால் திண்ணையில் அப்படியும் இப்படியும் கோடுகள் போட்டாள். குறுக்கே கட்டங்கள் வரைந்தாள். பின், சில நிமிடங்கள் மனசுக்குள் வேண்டி முணுமுணுத்துக்கொண்டே அந்த கட்டங்களை உற்றுப்பார்த்தாள். இன்னும் சில நிமிடங்கள் கண்களை மூடி. . தான் சொல்ல வேண்டியவைகளையெல்லாம் மனசுக்குள் கொண்டுவந்து திரட்டினான்.

விழித்தாள்.

” என்ன. .? ” ரெங்கநாயகி பார்த்தாள்.

” வந்து. .. வந்து. …” ஏதோ சொல்ல வந்து இழுத்தாள்.

ரங்கநாயகிக்குப் புரிந்து விட்டது.

” எதையும் மறைக்காம தைரியமா சொல்லு. .” சொன்னாள்.

ஜோசியக்காரிக்குள் மெல்ல துணிவு வந்தது.

” இ. .. இந்த பொண்ணுக்கு ஆயுசு கம்மி ! ” சொல்லி அவளுக்குள் இடியை இறக்கினாள்.

கேட்ட ரெங்கநாயகிக்கு மூச்சே நின்றுவிடும்போலிருந்தது.

” நிசம்தாம்மா சொல்றேன். இந்தப் பொண்ணுக்குச் சத்தியமா ஆயுள் கம்மி. ” அடித்துச் சொன்னாள்.

அதற்கு மேல் ரெங்கநாயகியால் தாங்க முடியவில்லை.

” என்னங்க. .? ” பதறிக்கொண்டு வீட்டினுள் சென்றாள்.

அங்கு தினசரி படித்துக்கொண்டிருந்த கணவனை நெருங்கி. ..

” அந்த ஜோசியக்காரி சொன்னதைக் கேட்டீங்களா. .? ” என்றாள்.

” என்ன சொன்னாள். .? ”

” பவதாரிணிக்கு ஆயுசு கம்மியாம். ! ” சொல்லும்போதே ரெங்கநாயகிக்கு தொண்டை அடைத்தது.

” அப்படியா சொன்னாள். ..? ” கேட்ட அவருக்குள்ளும் லேசான நடுக்கம்.

” ஆமாங்க. ..” ரெங்கநாயகி மெல்ல விசும்பினாள்.

” அழாதே. நான் கேட்கிறேன். கண்ணைத் துடைச்சுக்கோ. ” தணிகாசலம் வாசலுக்கு வந்தார்.

ரெங்கநாயகி முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டு கணவன் பின் வந்தாள்.

” என்னம்மா சொன்னே. .? ” வந்ததுமே அவர் ஜோசியக்காரியிடம் கேட்டார்.

” அம்மா பவதாரிணி என்கிற பொண்ணுக்கு ஜோசியம் பார்க்கச் சொன்னாங்க. அம்மா சொன்ன பேர், நட்சத்திரத்தை வச்சுப் பார்க்கும்போது பொண்ணுக்கு ஆயுசு கம்மின்னு ஜக்கம்மா சொல்றாள் ! ” சொன்னாள்.

” நிஜமா. .?! ” கலவரத்துடன் கேட்டார்.

” ஆமாய்யா. .! ”

அவருக்கு முகம் விழுந்தது. யோசனையின் விளைவு நெற்றியில் சுருக்கங்கள் விழுந்தன.

” ப. .. பரிகாரம் செய்தால் நிவர்த்தி ஆகுமா. .. ? ” தடுமாறி கேட்டார்.

” பரிகாரம் உண்டு. காலை, மாலை பக்கத்து ஊர்ல உள்ள ஆத்தா கோயிலுக்கு விளக்கு ஏத்தினால் போதும். இந்த பொண்ணே போகணும்ன்னு அவசியமில்லே. அவ மேல அக்கறை உள்ளவங்க போய் விளக்கை ஏத்தி… இந்தப் பொண்ணைக் காப்பாத்துன்னு மனசுல அழுத்தமா வேண்டினா போதும். மூணு மாசம் தொடர்ந்து இப்படி செய்தால் போதும். ஜாதக்காரிக்கு ஆயுசு கெட்டியாகும். நூறு வயசு வரைக்கும் வாழ்வாள் !” முடித்தாள்.

தணிகாசலத்திற்கும், ரெங்கநாயகிக்கும் இப்போதுதான் நிம்மதி மூச்சு வந்தது. முகமும் மலர்ந்தது.

” உன் கூலி எவ்வளுவும்மா. .? ” கேட்டுக்கொண்டு ரெங்கநாயகி தன் முந்தானை முடிச்சை அவிழ்த்தாள்.

” அம்பது ! ”

” இந்தா. . ”

நீட்டினாள்.

வாங்கிக்கொண்ட ஜோஸ்யக்காரி …

” மறக்காம நான் சொன்னதை செய்யுங்கம்மா. .வர்றேன். ” எழுந்தாள்.

” இதைவிட வேற வேலை எங்களுக்கு முக்கியமில்லே. நாங்களே போய் விளக்கேத்தி, பொண்ணுக்கு ஆயுசைக் கொடுன்னு மனமுருகி வேண்டிக்கிறோம் ! ” ரெங்கநாயகி சொன்னாள்.

” ஆமாம். ” தணிகாசலமும் மனைவிக்கு இசைவாய்த்த தலையாட்டினார்.

ஜோசியக்காரி நடந்தாள்.

எல்லாவற்றையும் உள்ளே இருந்து ஒட்டுக்கேட்ட பவதாரிணி கொல்லைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடினாள்.

” ஜோசியம். .! ” தனக்கு முன்னால் பத்தடி நடந்து சென்றவளை அழைத்தாள்.

அவள் நின்றாள்.

ஜோசியக்காரிக்கு அருகில் சென்ற பவதாரிணி. ..

” நான் சொல்லிக் கொடுத்தது போல சொன்னதுக்கு நன்றி ! ” சொல்லி அவள் கையைப் பிடித்தாள்.!!

” ஜோசியம் ! ஜோசியம் !” அடுத்த தெருவில் குரல் கேட்டதுமே பவதாரிணி உஷாராகிவிட்டாள்.

அடுத்து நம் வீட்டிற்கும் வருவாள். கொல்லையைக் கடந்துதான் தெருவிற்குச் செல்ல வேண்டும் ! எதிர்பார்த்து நின்றாள்.

அவள் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.

பவதாரிணி கொல்லைக்கு வந்து அவளை வழியிலேயே மடக்கினாள்.

” இந்த வீட்டு வாசலை உன்னைக் கூப்பிட்டு. .. பவதாரணி, மூல நட்சத்திரம்ன்னு ஜோசியம் பார்க்கச் சொன்னால்… இந்தப் பொண்ணு ஆயுசு கம்மி, பரிகாரம் விளக்கேத்தனும், வேண்டுதல் செய்யனும்னு சொல்லி என்னைக் காப்பாத்து. இந்தா பணம். விபரம் பின்னால சொல்றேன் . நாம பேசினது தெரியக்கூடாது. பார்த்துட்டா வம்பு. அவுங்க அழைக்கலைன்னா எனக்குப் பணத்தைத் திருப்பி கொடுக்கணும்ன்னு நிக்காதே. அன்பளிப்பா வச்சுக்கோ. ” சொல்லி கையில் நூறு ரூபாய் நோட்டை அழுத்திவிட்டு உடன் கொல்லைக்கு வந்து வீட்டிற்குள் புகுந்து மறைந்தாள்.

ஒரு வினாடி. .. திகைத்து நின்ற ஜோசியக்காரிக்கு ‘ இவளுக்கு எதோ சிக்கல் ! புரிந்தது.

சென்றாள். பார்த்தாள்.

இப்போது. …

” நன்றியை விடு. பின்னால சொல்றேன்னு சொன்னீயே சொல்லு. .? ” கேட்டாள்.

” சொல்றேன். நான் இந்த வீட்டு மாட்டுப் பெண். இவங்களுக்குப் பையன்னா உசுரு. எங்க காதலை ஏத்துக்கலை. ஏத்துக்கிட்டாலும் எனக்கும் அவருக்கும் ஜாதகம் பார்த்து, பொருத்தம் சரியா இருந்தால்தான் திருமணம் முடிப்போம்ன்னு ஒத்தக்கால்ல நின்னாங்க. ஜாதகம் சதி பண்ணி, எங்க காதலை முறிச்சா என்ன பண்றதுன்னு…என் கணவர் சம்மதிக்காம ,நான் வாழ்ந்தாலும் செத்தாலும் இவள்தான் என் மனைவின்னு பிடிவாதம் பிடிச்சி கலியாணத்தை முடிச்சார்.

” மகன் மேல உள்ள பாசம் என்னை வெறுக்கவும் முடியல,ஒதுக்கவும் முடியல. என்கிட்டே அன்பு, பாசம், ஆசையாய் இருந்தாலும் ஜாதகம் பார்க்காம முடிச்ச கலியாணம் நல்லா போகுமா, நரகமா போகுமான்னு கவலை. என் வீட்டுக்காரர் இல்லாத சமயம் பார்த்து என்கிட்டே தன் மனக்குறையைச் சொல்லி ‘ ஜாதகம் பார்க்கனும்மா. ஜாதகம் கொடும்மான்னு கெஞ்சினாங்க. எனக்கு, நடக்கிறது நடக்கும்னு ஜாதகத்து மேல நம்பிக்கை கிடையாது. ஜாதகமும் கிடையாது. காரணம். . நான் அம்மா அப்பா இல்லாத அநாதை. அநாதை ஆசிரமத்துல வளர்ந்து படிச்சவள். இல்லேன்னு சொன்னேன் நம்பலை. நட்சத்திரத்தைக் கேட்டாங்க. நான் வாயில வந்ததை மூலம்ன்னு உளறினேன். ”

” மூலநட்சத்திரம் கெட்ட நட்சத்திரம் குடும்பத்துல யாருக்காவது வேட்டு வைக்கும் என்கிற முட்டாள்தனம் நம்பிக்கை எனக்குத் தெரியாது. புள்ள வாழ்க்கைக்காகக் கவலைப்பட்ட பெத்தவங்க இப்போ தன் உசுருக்கு கவலைப்பட ஆரம்பிச்சாங்க. எந்த ஜோசியக்காரனையாவது புடிச்சி யாருக்கு மரணம் தெரிஞ்சிக்க ஆசைப்பட்டாங்க. இதென்ன பிள்ளையார் பிடிக்க குரங்கா ஆகிப்போச்சேன்னு எனக்கு கவலை. எப்படி அவுங்க உசுருக்கு உத்திரவாதம் கொடுக்கிறது வருத்தத்தைப் போக்குறதுன்னு யோசிச்சேன். ஐடியா வந்துச்சு. என் உசுருக்கு அல்ப ஆயுசுன்னு சொன்னா. .. மொதல்ல தங்கள் உசுரு போகாதுன்னு நிம்மதி வரும்னு தோணுச்சு. பொண்டாட்டி போனா புள்ள வருத்தப் படுவான். நமக்குத் தாங்காது. வருத்தப்படுவாங்களேன்னு அதுல ஓட்டை இருந்தது.”

” எல்லாத்துக்கும் பரிகாரம் இருக்கே. கேட்டா ஏதாவது சொல்லி அந்த வருத்தத்தையும் போக்கலாம்ன்னு சமாதானப்பட்டேன். வீட்டுப்பக்கம் ஜோசியக்காரன் வந்தா மொதல்ல அவுங்க கால்ல விழுந்து கவுக்கணும்ன்னு கண்கொத்தி பாம்பா காத்திருந்தேன். நீ வந்தே ”

” ஜோசியம், ஜாதகம் எல்லாம் நமக்குச் சாதகமா இருந்தால்தான் நிம்மதி, பாதகமா இருந்தா அவதின்னு ரொம்ப பேர் புரிஞ்சுக்க மாட்டேன் என்கிறாங்க. நமக்கு நடக்கிறது நடக்கும். நடக்கிறதை யாரும் தடுக்க முடியாதுன்னு துணிஞ்சு நடந்தா தூக்கமே இல்லே என்கிறதை எல்லோரும் புரிஞ்சி நடந்தா நல்லது. ” முடித்தாள்.

” சரிதான். ஆனா. . எங்க பொழைப்பு போயிடுமேம்மா. .” என்றபடி ஜோசியக்காரி நடந்தாள்.!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *