கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 391 
 
 

(1994 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உச்சி வெய்யில் உடலை வெப்பமேற்றி முதுகை நன்னக்கி றது. மேடு, பள்ளம் என்று சைக்கில் மிதித்ததில் கால் விரல்களில் ஊமைவலி கையில் கடிதக்கட்டுடன் வியர்வை நெடியோடு, ஊரை வலம் வருகிறேன் நான். காற்றை யாரோ கடத்திக் கொண்டுபோன பிரமையில், மரங்கள் சோகம் சுமக் கின்றன. எதிர்பார்ப்பில் சிறகு முளைத்த மனித ஈக்கள், என்னை நோக்கி விரைகின்றன. கனவிலும் நினைவிலும் கடிதக்காரனை ஆராதிப்பதில் ஆசுவதம் காணும் புது யுகமிது.

“எங்களுக்கு கடிதம் இருக்கியா?” பல தடவைகள், கேட்டு செவி மரத்துப் போன கேள்விதான் இது! என்றாலும் தினமும் வந்து தொலைக்கிறேன் கடிதங்களோடு. பதிலை கம்பியூட்டர் கெதியில் அறியத்துடிக்கும், அவசரக் குடுக்கை கள், வெளிநாடு போன பர்த்தாவை நினைத்து உருகி, கனவுகள் சுமந்த கண்களால், வினா எழுப்பும் ஒற்றைக் குயில்கள். ஆத்மார்த்த சினேகிதனை வரவேற்கும் உற்சாகத்தோடு, நெருக் கமாய் ஒட்டிக் கொள்வோர். உறவுமுறை விளித்து காரியத்தை கச்சிதமாய் அறிய விழைவோர்.

இப்படி பல ரகத்தினரை, தினமும் பார்க்கிறேன். அத் தனை முகங்களிலும் பளிச்சிடும் பாவங்கள் எனக்குப் பரிச்சய மானவை. இந்த அந்நியமற்ற யதார்த்தத்தில் ஒரு மழலையைப் போல், மனதை பறிகொடுக்கிறேன். நிழல் படுத்துறங்கும் குறுகலான செம்மண் பாதை. வெள்ளைப் புறாக்கள் துள்ளிக் குதிக்கும் கலவன் பாடசாலை. விழுது பரப்பி அடர்ந்து செறிந்த ஆலமரம், துல்லியம் துலங்கும் இறை இல்லமாம் பள்ளிவாசல். குச்சில் வீடுகள், மாடி வீடுகள், தேனீர்க்கடைகள் குப்பைக் கடதாசிகளை மென்று சுவாரஸ்யமின்றி செல்லும் கால் நடைகள் இன்னும் செயற்கை முகம் தரிக்காத கிராமத்து புன்சிரிப்புக்கள்.

அத்தனையும் அழகாய், ஆத்மார்த்தமாய், தரிசனம் காட்டி, அடிநெஞ்சில் பதிவாகின்றன. ‘பாரூக் நானா! எனக்கு கடிதமீக் கியா?’ பெண்சாதியை சவூதிக்கு அனுப்பிவிட்டு, பரம பக்த னாய் மாறி பள்ளியும் கையுமாய், தொப்பியும் தலையுமாய், வேஷம் தரித்த நிஷ்தார், பதறிக்கொண்டு பாதையின் குறுக் கால் பாய்ந்தான்.

‘ஒன்ன… பஜாரில பாத்தன் காணல்ல! ஒனக்கு வெளி நாட்டு கடிதமொன்டு இருக்கி…!’

வார்த்தைகளை அழுத்திச் சொல்லிவிட்டு, அவன் மனைவி சுலைஹாவை ஆர்வத்தோடு தேடிக் கொண்டிருந் தேன். கடிதக்கட்டுக்குள்தான், அதற்குள், அடுக்களையை உருட்டும் – பூனையாய் படபடத்தான் அவன்.

‘ரெஜிஸ்டர் காயிதமா? நல்லாப் பாருங்க!’ வெசாக் காலத்து தோரண பல்புகளாய் ஆந்தை விழி ஒளி உமிழ்ந்தன!

‘ரெஜிஸ்டர்தான், இதில் கையொப்பம் போடு!’

கடைக்கண்ணால் அவனை நோட்டமிட்டவாறு ஒரு கவ லைப் பெருமூச்சு விட்டேன். அது அவனுக்கு வெளிநாட்டுப் பணம் வந்துள்ளதே, என்ற வயிற்றெரிச்சலினால் அல்ல! ஒரு நாடக இயக்குநராக என்னால் வரமுடியாமல் போனதே என்ற ஆதங்கத்தினாலேயே அப்படி ஒரு திறமை, எனக்கு வாய்த்தி ருந்தால், நடக்கிற கதையே வேறு. கேள்வி, பார்வை, இல்லா மல் இவனை இராவணன் ஆக்கி வேடிக்கை பார்த்திருப்பேன்.

அந்த இறுகிய முகத்தில், அப்படியொரு அசாத்திய முரட்டுத்தனம்! மின்னல் வேகத்தில், கையெழுத்தை போட்டு விட்டு, கடிதத்தை மடித்து சட்டைப்பையில், திணித்துக் கொண்டான். கோழிக்குஞ்சை அலகால் கவ்வி, அசகாயமாய் பறக்க முயலும் காகமாய் அவன் நழுவுவதற்கு முன், என் பஞ்சப் பாட்டின் முதலடியை கீழ் ஸ்தாயியில் சுரம் கூட்டினேன்.

‘நிஷ்தாரு! ஒரே தல சுத்தா…யிருக்கப்பா! வெலனலயி ருந்து, ஒன்டும் தின்னவுமில்ல…’ என் சோக ஆலாபனையில் ஒன்றும் அவன் சொக்கிப் போகவில்லை. சனியன் தொலை யுது! ஆளை விட்டால் போதும்! என்ற எச்சரிக்கை உணர்வோடு ஒரு பத்து ரூபாய் நோட்டை, விட்டெறிந்துவிட்டு தப்பினேன், பிழைத்தேன் என்று தாவிப் பறந்தான்.

இதற்கு மேல் இந்த எருமைக் காம்பிலிருந்து மேலதிக மாக, பால் சுரக்கப் போவதில்லை என்ற உண்மை நான் அறிந்ததுதான். என்றாலும் இதிலே என்னத்தை ஆகப்போகுது! கடைக்குப் போய் ஒரு சின்னக்கடி ஒரு குடி, நோட்டு கைமாறிவிடும். பெரிய தருமம் பண்ணியதா நினைப்பு, கருமி பஹீலன். அடிமனம் அழுது தொலைத்தது. பாதையை வெறிக்கிறேன். வண்ணக் கடதாசிகளை, கிழித்து வீதியெங்கும் வீசினால் போல், மொண்டிசூரி பிள்ளைகளின் ஊர்வலம்.

கவனமாகப் போக வேண்டும் இல்லாட்டி…! ஏதாவது ஒன்று, தப்பித்தவறி குறுக்கால பாஞ்சா, முஹப்பத், எல்லாம் பாலாய் ஆகி, வீண் வம்பா போயிடும். எதற்கும் மெல்ல மிதிக்கணும்! கோடை அவஸ்தையில், சவாரி சலிப்போடு தொடர்கிறது. மீண்டும் எதிர்ப்படுவோரின் அபசுரமாய், கடித மீக்கியா? என்ற கேள்வி. சிலருக்கு சைகை, சிலருக்கு வார்த்தை, பதிலாய் ஜனிக்கின்றன. தொண்டையில் சளியிறுகி, உமிழ் நீர் தடைபடுகிறது. அப்பாடா! – பிள்ளைகளின் தொல்லை முடிந்து பாதை வெறுமை தட்டியிருந்தது. ஊன்றி மிதித்தால், ஹாஜியார் கடையை அடைந்துவிடலாம். தடைப் பட்ட உமிழ் நீர் ஹாஜியார் கடை டீயை, நினைத்ததும் நாவை ஈரமாக்கிக் கொண்டு சுரந்தது.

லுஹர் தொழுகை முடிந்த பகல் வேளை. தொப்பி அணிந்தவர்களின் ஆரவாரத்தில் கடைகளை கட்டியிருந்தது. என்னைக் கண்ட சிலர், யானையின் செவியில் அங்குச முனையால் குத்தி அவஸ்தை கொடுப்பது போல், மீண்டும் – மீண்டும், ஒரே பாணியிலான அதே கேள்வி – ‘கடிதமீக்கி யா?’ உச்சி வெய்யிலின் உறைப்பு உடலை தள்ளாட வைத்தது சோர்வு கனக்க.

கிழங்குப் பெட்டிஸை, வாயில் தள்ளிக் கொண்டே வாங்கிச் சரிகிறேன். ‘பியோன் பாரூக் நானாக்கு, சாயம் கட்டியா ஒரு டீ போடு மவன்!’ ஹாஜியாரின் தகரக் குரல் கடையெங்கும் எதிரொலிக்கிறது. அண்மையில் நடைபெற்ற மாகாணசபை தேர்தல் பற்றிய சூடான வாக்குப்போர் ஒன்று திடீரென வெடித்துக் கிளம்பியது. எதிலுமே பிடிப்பற்ற ஒரு மலட்டுச் சோகம், எனக்குள்.

என்னுடைய ஆமை வேக வண்டி நடைபாதையில் இறங்கி அல்லாடுகிறது.

‘பாரூக்… நில்லு மகன்!’

மூச்சிறைக்க தள்ளாடிக் கொண்டே முன்னால் நின்றாள் மைமூன் கிழவி. வறுமைத் தூரிகை வரைந்த கோலங்கள், முதுமை முகத்தில் சோகங்களாய் முட்டித் தெறித்தன.

‘ஏன்ட மகள் பரீனா. சவூதி பெயித்து மூணு மாசமாவுது மகன்! சல்லியுமில்ல, காயிதமுமில்ல. பச்சப் புள்ள மூண்ட, ஏண்ட தலேல, பாரம் சாட்டிட்டு பெயித்திட்டா! இவ்வளவு நாளும் சமது கடையில், அவள் அனுப்பினா தார என்டு, சாமான் கடனுக்கு வேங்கின. இப்ப அவன் தார இல்ல மகன். நேத்து ராவையில இருந்து, எல்லாம் பட்டினி. நான் என்னத்த செய்ய? இந்த கண்கூட தெரியாத கெழவியை அல்லா சோதிக் கியான். போன புள்ளக்கி, என்னத்த நடந்துதோ? அவள்ட்ட ஒரு தாக்கல் அழப்பிக்க பாரு மகன்!”

கிழவிக்கு சுவாசம் தடைப்பட்டு துயரம் நெஞ்சில் முட்டி யது. அவளது ஆற்றாமை என்னையும் அவஸ்தைக்குள்ளாக்கியது.

‘சரீனா போன ஏஜன்ஸி எட்ரஸை, எனக்குத் தாங்க ஆச்சி. நான் விசாரிச்சு பாத்திட்டு செல்லியன்!’

இந்த ஆறுதல் மொழியினால் சிறிது ஆஸ்வாசமுற்ற அவள், நடுங்கும் கைகளினால் புடவை விளிம்பை தலையில் இட்ட வாறு ‘அல்லாஹ் ஒனக்கு தொண செய்வான் மகன்!’ என்றாள். கிழவியின் நிலை மனதைக் குடைந்தது. என்றாலும் ஊர் துன்பங்களை எல்லாம் கட்டி அழ நமக்கு ஏது நேரம்?

பசிக்களைப்பில் வீட்டை நோக்கி விரைகிறேன். அன்றைய பொழுது ஆரவாரமின்றி கரைகிறது. மறுநாள் காலையில் தபால் கந்தோர் எப்போதும் போல் சுறுசுறுப்பாக இயங்குகி றது. அன்று விநியோகம், செய்ய வேண்டிய தபால்களை, தரப்படுத்தும் பணியில் சக ஊழியர் திளைத்தார்கள். பதிவுத் தபால்கள், சாதாரண தபால்கள், என வெவ்வேறாக ஒழுங்கும் டுத்தி பிரதான லிகிதரின் கையெழுத்தும் வாங்கிவிட்டு, பட்டு வாடாவுக்கு புறப்பட்டேன்.

வானம் கறுப்பு பர்தாவில் கவலை வளர்த்தது! கிழக்கின் கிரணங்கள், வீரியமிழந்து சோகம் சொரிந்தன. குளிர் காற்றும், குமைந்த மேகத்திட்டுகளும் மழை வர்ஷிப்புக்கு குறியீடு காட்டின. மழை பெய்தால் ஊருக்குள் அலைந்து திரிவதெப் படி? என்ற கவலை மனதை பெரிதும் வாட்டியது.

‘சரி முடிஞ்ச வரை பார்ப்பம்! கால் பாதங்கள் பெடல்க ளோடு துரித கெதியில் சரசம் புரிந்தன! பிரதான முற்சந்தியைத் தாண்டி கிராமத்திற்குள் ஊடுருவுவதற்குள்…? பொன் மீனைக் கவ்விய நாரையாய், பொல்லாத மழை இப்பிரதேசத்தை காயப்படுத்துகிறது. மழையைக் கண்டபடி தூற்றிக் கொண்டே, ஒருவாறு வீட்டை அடைகிறேன்.

‘பாத்தும்மா அந்த டவலைக் கொண்டாங்க! தலையை தொடைக்க! குரல் வீடு முழுவதும் எதிரொலித்தும் பதிலில் லாத பயங்கர வெறுமை. சில கணங்களுக்குப் பின் இளைய மகள் சுவாரஸ்யமின்றி டவலை கொண்டு வந்து தந்தாள். மெல்ல குசினிப் பக்கம் வந்த எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. பாத்தும்மா நிலைப்படியில் உட்கார்ந்து கொண்டு, மழையை வெறிக்கிறாளா? அல்லது மனதின் துயர மூட்டத்தை கருமை தட்டிய முகத்தால் சுரக்கிறாளா? நினைவுக்கீற்று பளிச்சிடுகி றது, மின்னலாக.

காலையில் இருவருக்கும் நடந்தேறிய வாக்குவாதத்தின் பிரதிபலிப்புத்தான் இந்த இராஜரீக உறவின் முறிவு என்று நிர்ணயம் செய்து கொள்ள அவ்வளவு நேரம் எடுக்கவில்லை. நான் ஓசையின்றி மெதுவாக முன்வாசலில் அமர்ந்து கொள்கி றேன். இல்லத்தில் அடிக்கடி இப்படி முகமுறிவுகள் ஏற்படுவதுண்டு. எல்லாம் பொருளாதாரத் துண்டு விழலால் ஏற்படும் நிர்ப்பந்தங்கள்! கொஞ்சம் உரக்கப் பேசிவிட்டால், இல்லா ளின் வீட்டோ எதிர்ப்பும், கறுப்புக் கொடி தூக்கலும் ஒரு நான்கு நாள்களுக்காவது வெற்றிகரமாக நிலைக்கும்.

வீட்டுக்கு வீடு வாசல்படிதான்! பெண்ணின் மன இயல்பு கள் பாதிக்கு மேல் குழந்தைத் தனமானது! இப்படி சொன்ன அந்த உளவியல் மேதையின் கைகளை குலுக்கி பாராட்டு தெரிவிக்க வேண்டும் போலிருக்கிறது எனக்கு. பெண்ணுக்கும் சிறு குழந்தைகளுக்கும் பிடிவாதம் பிடிப்பதில் ஒரு இறுக்கமான உடன்பாடு உண்டுதான்.

ஆனால், காலையில் நடந்தேறிய போரில் பாத்தும்மா மீது பிழையேயில்லை என்பது எனது இப்போதைய முடிவு. பிரச்சி னைகளை முரட்டுத்தனமாக, அணுகி எவன்தான் தீர்வை அடைந்திருக்கிறான்? கம்பளையில் நடக்கும் மாமா மகளின் கலியாண வீட்டுக்கு அவள் கட்டாயம் போகவேண்டும் என்று சொன்னதில் என்ன தவறிருக்கிறது?

கலியாண வூட்டுக்கு போறதென்றா ஆயிரம் ரூபாவுக்கு மேல வேணும். இப்ப வசதியில்லை ! கடன் கேட்க யாரு மில்ல. பொறகு பார்க்கலாம் என்று அவளது கோரிக்கையை காட்டமாக நிராகரித்ததின் விளைவே இந்த இடைவெளி! குற்ற உணர்வினாலும் இயலாமையினாலும் மனம் இப்போது துயர இழை பின்னுகிறது.

இன்னும் மூன்றே நாள்கள் கலியாண வீட்டுக்கு! யாராவது வந்து கை கொடுக்கமாட்டார்களா? சமாதானம் கொடியை தூக்கிப் பிடிப்பதற்கு.

சே! இதென்ன பேய்மழை! விடாது போலிருக்கே, இப்ப டியே பெய்தா இந்தக் கடிதங்களை உரியவரிடம் சேர்ப்பது எப்படி? வீடு எந்தச் சலனமுமின்றி வெறிச்சோடிப் போயிருக் கிறது. சூனிய வெறுமையும் உற்சாகமின்மையும் வாட்டித் துளைக்கின்றன.

ஆணின் உயிர்ப்பு சக்தியே பெண்தானே? அவள் கலகலப் பின்றி முடங்கிப் போனால் எல்லாமே முடக்கம்தான். அறிஞர் அண்ணா சொன்ன வாசகம் ஒன்று எனது ஞாபகத்திற்கு வருகிறது.

அரிசி இல்லை ! கறி இல்லை ! அது இல்லை , இது இல்லை என்று பெண் சதாவும் அலட்டிக் கொள்வதால்தான் நமது முன்னோர்கள் அவளுக்கு இல்லாள் என்று பெயர் வைத்தார்கள். இந்த விடயத்தில் அண்ணாவிலிருந்தும் அந்த முன்னோரிலிருந்தும் கொஞ்சம் வித்தியாசப்படுகிறேன் நான்.

பொருளாதாரத் தாக்கம் – குடும்பச்சுமை – இவற்றால் மனைவி அடிக்கடி இல்லாமல் போகிறாள். தனது சுயத்தை – வாழ்க்கை அவலங்களில் இழக்கிறாள். இதனால்தான், இல்லாள் என்று பெயர் வந்தது. சரி கிடக்கட்டும் பேராசிரியர் கள் செய்ய வேண்டிய மொழி ஆராய்ச்சி விவகாரங்கள், இந்த பஞ்சத்தில் அடிபட்ட போஷ்ட்பியோனுக்கு எதற்கு?

மழை ஓயும் வரையில் கடிதங்களை வரிசைக் கிரமமாக தயார் படுத்துகிறேன். உள்ளூர் மடல்கள் இருபது வெளியூர் எயார் மெயில் பத்து, இதுக்குத்தானே இப்ப முக்கியத்துவம் என்பதால் முதலில் அதை அணுகுகிறேன்.

ஒவ்வொரு பெயரும் அந்த நாமத்திற்குரியவர்களை, மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்துகின்றது. அடுத்த – கடிதம், சேகுலெவ்வை மைமூன் உம்மா ! – பிரம், சரீனா பேகம், தமாம் கே.எஸ்.ஏ. ஆச்சரியத்தால் விழிகள் விரிகின் றன! கூடவே மைமூன் கிழவியின் சுருக்கம் விழுந்த அந்த சோக முகம் வந்து தொலைக்கிறது.

சாதாரணக் கடிதம் அது. சரீனா ஏன் டிராப்ட் அனுப்ப வில்லை? கிழவி இங்கே கிடந்து புலம்பிக் கொண்டிருக்கி றாளே, அவளுக்கு அறிவு எங்கே போயிற்று! குடித்துக் குடித்து ஈரல் கரைந்து மவுத்தாகிப்போன அவளது வாப்பாவுக்கு வராத கரிசனை எனக்கேன் வந்தது? கிழவியின் துயரம் தோய்ந்த முகமும் குழந்தைகளின் பசிக்கொடுமையையும் நினைத்து அலட்டிக் கொண்டதால் வந்தது!

ஒரு இதமான யோசனை இடறிக் கொண்டு வந்தது. இந்த கடிதத்தை பிரித்துப் படித்தால் என்ன? அடுத்தவர் உரிமையில் அனுமதியின்றி தலையிடுவது எவ்வளவு பெரிய அநாகரீகம் – நாகரீகம் செறிந்த மனிதன் எங்காவது – இப்போது வாழுகி றானா? அடுத்த வீட்டு அந்தரங்கங்களைக் கூட உளவு பார்த்து கைகால் சேர்த்து வெளியே போய் பிரச்சாரப் படுத்தும் புத்திசா லிகள் மலிந்த உலகமிது.

படிப்பதினால் குடி மூழ்கிப் போய்விடாது. கடித உறையை பேனா முனையின் உதவியோடு பிரிக்கிறேன்.

இதற்குமுன் செய்தறியாத ஒன்றை செய்வதினாலோ கட மையிலிருந்து சறுக்கி விழும் சலனத்தினாலோ, விரல்கள் நடுங்குகின்றன. அடுத்த கணம் ஆச்சரியத்தால் விழிகள், உயர்ந்தன. கின்னஸில், பதியுமளவிற்கு அப்படி ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை . சின்ன மடலோடு ஒரு நூறு ரூபாய் ரியால் நோட்டு மிக குளிர்ச்சியாய் சிரித்தது.

என்னுள் பாறை ஊற்றாய் பரவசம் பொங்கிச் சுரந்தது!

அன்பு உம்மா! கடிதம் போட சுணங்கியதுக்கு மனவருத் தப்பட வேண்டாம். எனக்கு இங்க சரியான வேல. கடிதம் எழுத நேரமில்ல. இரவைக்கு படுக்கிற ஒரு மணிக்கு, எல்லாம் எங்கட தலைவிதி உம்மா. இந்த நூறு ரியால மாத்தி சிலவுக்கு எடுங்க. இரண்டு மாசப்பணம் வார மாசம் கட்டாயம் அனுப்பு றேன். ஏன்ட புள்ளகளை பசியில் போடாம நல்லாப் பாருங்க. நீங்களும் மருந்து எடுத்து குடியுங்கோ , எப்பதான் எங்களுக்கு அல்லா, நல்ல காலத்தை தருவானோ? பதில் அவசரமா போடுங்க.
மகள்,
சரீனா பேகம்.

ஒரு திருப்தியான முடிவிற்கு வந்தவளாக எழுந்து நிற்கி றேன். இந்த ரியால் நோட்டுக்காக வழக்காடி நிரூபிப்பதற்கு எந்த ஆவணமும் கிடையாது. நோட்டையும் கடிதத்தையும் பெட்டியில் வைத்து இறுக மூடிவிடுகிறேன். கூடவே மனசாட் சியையும்தான். கலியாண வீட்டுக்கு குடும்ப சகிதம் போக லாம் என்ற இறுதி நிர்ணயமும், என்னளவில் செய்தாகிவிட் டது. பிறகென்ன?

இப்போது தூறல்களின் பலம் தணிந்திருந்தது. சைக்கிளை தள்ளிக் கொண்டே பாதையில் நடக்கிறேன். வழியில், வழக்க மான கேள்விகள் என்னை வரவேற்கின்றன. இதென்ன? என்னை எதிர்பார்த்தபடி கிழவி பாதையருகில் வந்து நிற்கிறாளே?

‘ஏண்ட பேரனுங்க, நெருப்பு மாதிரி காயுது! டொக்டர் கிட்ட போவ எண்டாலும் எனக்கிட்ட ஐஞ்சி சதமாலும் இல்ல. யா அல்லாஹ் நான் என்னத்த செய்ய மகன். கல்பு கேட்குது இல்ல. இண்டக்கி எண்டாலும் மகள்ட கடிதம் என்னத்தையும் ஈக்கியா?

அழுகையும் ஆத்திரமும் தொண்டையை அடைக்கிறது அவளுக்கு. பாம்பை மிதித்துவிட்ட பயம் கலக்கம் எனக்கு. ‘கடிதம் இல்ல ஆச்சி நான் வாரேன் நேரம் பெயித்திட்டுது!’

ஒரு மாபெரும் சங்கடத்திலிருந்து மீண்ட உணர்வில் உற்சாகம் வரவழைத்து வேகமாக மிதிக்கிறேன். கிழவியும் பாத்தும்மாவும் மனக்கண்ணில் நிர்தாட்சண்யமாய் நிழலாடி னர். இருவரில் யாருடைய முகத்தில் பூரிப்பின் முத்திரையை பதிப்பது என்பதில் உள்மனம் அவலப்பட்டுக் கொண்டது.

ஆக உணர்வுகளின் ஆர்பரிப்பில் ஆன்மா அழுந்தித் துடித்தது. குற்ற உணர்வும், குறுகுறுக்கும் நெஞ்சோடும், இனி என்னால் ஊர் உலா போக முடியாது. மேலிடத்துக்கு, மழை யைக் காரணம் காட்டி சமாளிக்கலாம் குமைந்து கனக்கும் உள்ளத்தை அசுவாசப்படுத்தியவாறு பயணத்தை பாதியில் முறித்துக் கொண்டு இல்லம் விரைகிறேன்.

இரவு நீண்டு மௌனம் வளர்த்தது. மேசையில் பாணும் பருப்புக் கறியும் தீண்டுவாரற்றுக் கிடந்தது. இமைகள் இறுகிக் கனத்து மூட மறுத்தன. பசியிருந்தும் உணவு வெறுத்தது. உள்ளத்தில் உக்கிரமான புயல்! நெருஞ்சி முள்ளாய் நினைவுகள்!!

“ஏண்ட பேரனுக்கு… நெருப்பு மாதிரி காயுது! டொக்டர் கிட்ட போவ எண்டாலும் எனக்கிட்ட ஐஞ்சி சதமில்ல. யா அல்லாஹ் நான் என்னத்த செய்ய!”

கீறல் விழுந்த இசைத்தட்டின் ஒலியாய் கிழவியின் புலம் பல் செவிப்புலனில் நிறைகிறது. விடியும்வரை, உடலும் உள்ளமும் சுமையேறிக் கனத்தன. விடியல் கருக்கலின் கண் அசைப்பில் – காகங்கள் கரைந்தன. பசிக்களைப்பும் சோர்வும் அவஸ்தை தந்தன. ஒரு தீர்க்கமான முடிவுடன் மைமூன் ஆச்சியின் அமானிதத்தை ஒப்படைக்கும் உந்துதலில் வெளியே செல்லத் தயாரானேன்.

முதுகுப்புறத்தில் நிழலாய் ஓர் அசைவு!

“நில்லுங்க! இந்த கோப்பிய, குடிச்சிட்டுப் போங்க, ராவும், பசியில இருந்திட்டு…! வார்த்தைகளின் கனிவு குழைந் தது. நான்கு நாள்களுக்கு முன் தொலைந்துபோன ஈரம் பாத்தும்மாவின் முகத்தில் முழு நிலவாய் ஒளிர்ந்தது. சிறகொ டிந்த பறவை, பாறை இடுக்குகளில் உறைந்து உயிரை பத்திரப் படுத்துவதைப் போல், கிழவியின் கடிதத்தையும் தீர்க்கமான நெஞ்சையும் கெட்டியாக இறுக்கிக் கொண்டேன். கலியாண வூட்டுக்கு போவ கிடைக்கல்ல! என்ன செய்ய, பொறகு ஒரு நாளைக்கு போவோம்! பாத்தும்மா பரிவோடு வெள்ளைக் கொடி காட்டினாள். சுமைகளின் அழுத்தம் குறைந்து மனவலி லேசாகிறது.

கிழவியின் தரிசனம் வேண்டி சைக்கிள் விரைகிறது. –

– 26.06.1994 வீரகேசரி – மீறல்கள், மல்லிகைப் பந்தல் வெளியீடு, முதற்பதிப்பு: நவம்பர் 1996

பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் - 12 May 2013 மு.பஷீரின் ‘இது நித்தியம்’ என்ற சிறுகதைத் தொகுதி அவரது நாலாவது சிறுகதைத் தொகுதியாக அவரது சொந்த கல்ஒழுவைக் கிராமத்தில் வெளியிடப்படுவது இலக்கிய உலகுக்கும் கல்ஒழுவைக் கிராமத்திற்கும் மறக்க முடியாத வரலாற்று நிகழ்வாகும். ஏற்கனவே மீறல்கள் (1996), தலைமுறை இடைவெளி (2003), நிஜங்களின் வலி (2005) என்று ஒரு சீரான இடைவெளியில் அவரது தொகுப்புக்கள் வெளிவந்து 4வது வெளியீடாக ‘இது நித்தியம்’…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *